4
மாடு தின்ற சப்ஜெயில் ரெக்கார்டு
அந்தநாளில் சப்ஜெயில் நிர்வாகம் வருவாய்த் துறையில் இருந்தது. தலைமை-யிடத்துத் துணை வட்டாட்சியர்தான் சப்ஜெயில் சூப்பிரண்டெண்டெண்ட்-ஆகவும் வேலை பார்ப்பார். அவருக்கு உதவிக்கு என்று ஒரு கிளார்க்கு இணைக்கப்பட்டிருப்பார். இருவரும் பலவகைப் பணிகளுடன் கூடுதலாக இதனையும் கவனிக்கவேண்டும். ஒரு பியூன் (அலுவலக உதவியாளர்) சப்ஜெயிலில் இருந்துகொண்டு பார்த்துக்கொள்வார். அவர்தான் கைதிகள் அடைப்பு விடுப்பு சாப்பாடு போடுவது எல்லாம் பார்த்துக் கொள்வார். துணை வட்டாட்சியரும், சப்ஜெயில் கிளார்க்கும் காலையிலேயே அலுவலகத்திற்கு வந்துவிடுவர்.
ஏனென்றால் சப்ஜெயிலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு சாப்பாடு போட்டதைக் கண்காணிக்கவேண்டும். அடுத்து, குற்றவாளிகளை (தற்போது விசாரணைக் கைதி என்று அழைக்கப்படுகிறார்கள்) கோர்ட்டில் ஆஜார்படுத்தவேண்டி கூட்டிச் செல்லக் காவலர்கள் வந்துவிடுவர். அவர்களுக்குப் பதிவுகள் செய்து அனுப்ப வேண்டும். இரவு கைது செய்யப்பட்டவர்களை அடைப்பதற்கு அழைத்து வந்துவிடுவர். அப்போதெல்லாம் அது 24 மணிநேர பணியிடம் போன்று காட்சி அளிக்கும். துணை வட்டாட்சியரும் காலை ஏழரைக்கெல்லாம் அலுவலகம் வந்துவிடுவார். அவர்கள் இருவரும்தான் பார்த்துக்கொள்ளவேண்டும்.
அப்போதெல்லாம் உண்மையிலேயே வேலைப் பழு அதிகமாக இருக்கும். இப்போதெல்லாம் வேலைப்பழு என்று சங்கம் வைத்துக் கொண்டு புலம்புகிறார்களே அந்த நாளைய வேலையில் பத்தில் ஒரு பங்குகூட இப்போது கிடையாது என்பதுதான் கசப்பான உண்மை. உண்மையான உண்மையும்கூட.
பல கிளார்க்குகள் இரவு வெகு நேரம் வரையிலும் இருந்து வேலை பார்ப்பர். இதைப்பற்றி ஒரு கதைகூட சொல்வர். சொல்லத் தகாததுதான் என்றாலும் சொல்லப்பட்டதைத்தான் சொல்கிறேன். அந்தநாளில் விலைமாதர் வீடுகள் இருந்ததாகவும் இரவு நேரத்தில் வாடிக்கையாளார் வருவார் என்று அவர்கள் தெருவில் காத்திருப்பராம். இரவு நெடுநேரம் ஆகிவிட்டதும். அவர்தம் உடனிருப்பவர்கள் “தாலுகா கச்சேரி கிளார்க்குகூட வீட்டுக்குப் போய்விட்டான் இனி எவனும் வரமாட்டான் உள்ளே வா” என்று சொல்வராம். அப்படியானால் வட்டாட்சியர் அலுவலகங்களில் எவ்வளவு வேலை இருந்திருக்கும் என்று புரிந்துகொள்ளலாம்.
அப்போது நாங்கள் இளவட்டமாக நான்கைந்து பேர் பணியில் சேர்ந்த புதிது என்பதால் புதுத் துடைப்பமாக நன்றாகப் பெருக்கித் தள்ளுவோம். இல்லை வேலை பார்ப்போம். எல்லாரும் திருமணமாகாதவர்கள் என்பதால் வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் முழு இரவும் அலுவலகத்தில் வேலை பார்ப்போம். இல்லையென்றால் வட்டாட்சியருக்குப் பதிவேடுகளை தணிக்கைக்கு மாதம் ஒருமுறை வைக்க நேரும்போது வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டியதுதான்.
இதில் வேடிக்கை என்னவென்றால் இரவு முழுவதும் அலுவலகத்தில் வேலைசெய்துவிட்டு அதிகாலை ஆறு மணியளவில் பக்கத்து காப்பிக்கடையில் முதல் போணி செய்து காப்பி குடித்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிடுவோம். காலைக் கடன்களை முடித்துவிட்டு அலுவலகத்தில் சீனியர்கள் வரும் முன்னதாக வந்து வேலை செய்துகொண்டிருப்போம். இரவு கண் விழித்த அடையாளமே இருக்காது. இளமையின் முறுக்கு அப்படி துள்ளியது.
இப்படியாகப்பட்ட ஒரு நல்ல நாளிலே அதிகாலை ஆறு மணிக்கு நாங்கள் நான்குபேர் வீட்டுக்குச் சென்றுவிட்டோம். அதில் சப்ஜெயில் கிளார்க் நண்பரும் ஒருவர். அவரது தங்கும் விடுதி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிரில்தான் இருந்தது. அதனால் அவர் எல்லா பைல்கள் பதிவேடுகளையும் மேசைமேலேயே அடுக்கி வைத்துவிட்டுச் சென்றுவிட்டார். மிஞ்சிப்போனால் ஒரு மணி நேர இடைவெளியில் காலைக் கடனை முடித்துவிட்டு அலுவலகத்திற்கு வந்துவிடுவார். இடைப்பட்ட நேரத்தில் வார்டன் எனப்படும் பியூன் வந்து பார்த்துக்கொள்வார். மேலும் அலுவலகம் சுத்தம் செய்யும் வேலையாள் வந்துவிடுவார்.
இப்படிப்பட்ட நிலையிலும் அனைவரும் அசந்த சந்தர்ப்பத்தில் தெருசுற்றும் மாடு ஒன்று லேசாக அலுவலகத்தில் தலையை நீட்டியது. கதவோரமாக உள்ள மேசையில் பதிவேடுகளும் பைல்களும் இருந்ததைப் பார்த்ததும். அதற்கு என்ன தோன்றியதோ. தினமும் மிச்சம் மீதியை உண்டு பசியாரும் ஒருவரை அழைத்து அவருக்கு அறுசுவை விருந்து கொடுத்தால் எப்படி மகிழ்வாரோ, அப்படி தினமும் மயில்துத்தம் சேர்த்துக் காய்ச்சிய பசை தடவி ஒட்டப்பட்ட சினிமா போஸ்டர்களை சிரமப்பட்டு நாவால் துளாவி கிழித்து உண்டுவந்த மாட்டுக்கு எதிரில் பரிமாறப்பட்ட அறுசுவை உணவாகத் தென்பட்டது போலும். விருந்துண்பவர்கள் எதிரில் எத்தனை வகை பதார்த்தங்கள் வைத்திருந்தாலும் முன்னதாக ஒரு ஓரத்தில் வைக்கப்பட்ட இனிப்பினை எடுத்து உண்பர். அதுபோன்று நமது மாடும் கிரேன்போல் நீட்டிய தலையிலிருந்து நாவை சற்று முன்னதாக சுழற்றி நீட்டி சப்ஜெயில் பதிவேட்டை பற்றி இழுத்தது. இருந்ததில் சிறந்த விருந்தாக தெரிந்ததுபோலும். அப்படியே நின்று நிதானமாக யாருக்கும் தொந்தரவு தராமல் தானும் எந்த தொந்தரவும் இல்லாமல் சுவைத்துத் தின்னத் துவங்கிவிட்டது.
பானகம் அருந்தியவர்கள் நன்கு அறிவர். (பானகம் என்றால் என்ன என்று தொரியுமா? வெயிலின் கொடுமையிலிருந்து காத்துக்கொள்ள தண்ணீரில் எலுமிச்சை சாறும் வெல்லமும் கலந்து குடிப்பர். அக்காலத்தில் அது ஒரு சிக்கனமான சிறந்த ஆரோக்கியபானம்.) மனம் விரும்பி பானகம் குடிக்கும்போதுதான் அதில் ஒரு துரும்பு வந்து தொண்டையில் சில்மிஷம் செய்து ருசியைக் கெடுக்கும். இன்னும் சற்று தெரிந்த உதாரணம் சொல்லவேண்டுமென்றால் மணிலாப் பயறு தின்னும்போது அதன் சுவையை ரசிக்காதவர்கள் யாரும் இருக்கமுடியாது. அதேவேளையில் இடையில் ஒரு எண்ணைக்கொட்டை வாயில் சிக்கி எல்லா சந்தோஷத்தையும் கெடுத்துவிடுவது அனைவரும் அனுபவித்திருக்கக்கூடியதே. அப்படியாக ஒரு நிலைமை அந்த மாட்டுக்கு ஏற்பட்டது.
நமது நண்பர் ரூமிலிருந்து அலங்கார சகிதமாக அலுவலகத்திற்கு வந்தவர் எதிரில் ஒரு மாடு அலுவலகத்திற்குள் தலையை நீட்டிக்கொண்டிருப்பதை தூரத்திலிருந்தே பார்த்துவிட்டு மாட்டினை சப்ஜெயிலில் அடைப்பதற்காக கொண்டு வந்திருக்கிறார்கள் போலும் என்று நகைச்சுவை உணர்வைக் காட்டிக்கொண்டு வந்து பார்த்தால் அங்கே சப்ஜெயில் பதிவேடு மாட்டின் வாயில் மாட்டிக்கொண்டு ‘விஷ்ணு பரமாத்மாவை நினைத்து ‘ஆதிமூலமே’ என்று கதறிய ஐராவதம்(யானை) நிலையில்’ சத்தமில்லாமல் கதறிக்கொண்டிருந்து.
நமது நண்பர் பதைபதைத்து ஓடி அதன் வாயிலிருந்து பதிவேட்டை பிடுங்குவதற்குள் அங்கே வந்த வாடரும் (வார்டன் என்பதன் மாரியாதைச்சொல்) சேர்ந்து போராடியதில் ஒரு வழியாக பதிவேடு பாகம் பிரித்துக்கொண்டு மாட்டின் வாய்க்குள் பாதியும் நண்பர்கள் கையில் பாதியுமாகக் கிடைத்தது. பதிவேட்டைப் பார்த்தவுடன் இன்றோடு நமது வேலை காலி என்று பதைபதைத்து தலையில் கைவைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டார் நண்பர். வேலைக்கு வந்த புதிது. எந்த ஒன்றின் சாதக பாதகங்களையும் ஆராய்ந்து பார்த்து தைரியம் கொள்ள இயலாத பருவம்.
சற்று நேரத்தில் துணை வட்டாட்சியர் அலுவலகம் வந்து சேர்ந்தார். பயத்தில் உறைந்துபோயிருந்த நண்பர் தயங்கித் தயங்கி விஷயத்தை அவரிடம் சொன்னார். ஆனால் துணை வட்டாட்சியரோ அதைக்கேட்டு சற்றும் அதிர்ச்சிகூட இல்லாமல் “போனால் போகிறது பார்த்துக்கொள்ளலாம் விடு” என்று சொல்லிவிட்டார். நண்பருக்கு சற்று ஆறுதல். ஒன்றும் பெரிய பாதிப்பு இல்லைபோலும் என்று நினைத்துக்கொண்டார். அலுவலக வேலை வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. சற்று நேரத்திற்கு ஒரு முறை “நீ இப்படி பண்ணியிருக்கக்கூடாது” என்று கொஞ்சம் கொஞ்சமாக வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்தார். கரைத்த புளிஎல்லாம் சாம்பார் ரசம் புளிக்குழம்பு என்று வயிற்றில் தயாராகிக் கொண்டிருந்தது போலும்.
மதியம் எல்லாரும் சாப்பிடப் போயிருந்த சமயத்தில் பக்கத்தில் இருந்த நண்பரை விளித்து “ஏம்பா நம்ம ரெண்டுபேரையும் பக்கத்து பக்கத்து செல்லில்தானே அடைப்பார்கள்” என்று அப்பாவிபோல் முகத்தை வைத்துக்கொண்டு ஆசிரியரிடம் சந்தேகம் கேட்கும் மாணவன்போல் கேட்டுள்ளார். அவ்வளவுதான் நண்பருக்கு அழாத குறைதான். அதற்குள் அலுவலகத்தில் எல்லாருக்கும் தெரிந்து துக்கம் விசாரிப்பதுபோல் ஒவ்வொருவராக வந்து கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். உள்ளே மனதிற்குள் “மவனே மாட்டினியா, செத்தே போ” என்று எண்ணியிருப்பர். அதுதானே மனித இயல்பு. இதில் ஆங்காங்கே கூடிக்கூடி ஏதே தீவிரவாதியைப் பற்றிபேசுவதுபோல் ரகசிய கூட்டம் வேறு.
மாலைவரையிலும் இப்படியாக ஒருவழிபண்ணிவிட்டு அப்புறம் தீர்வைப்பற்றி சொன்னார் துணை வட்டாட்சியர். நேராகச் சென்று கோர்ட்டில் சிரஸ்ததாரிடம் நடந்ததைச் சொல்லி விபரம் சேகரித்து வரும்படி சொன்னார். அதேபோன்று காவல் நிலையங்களிலும் விபரம் கேட்டு எல்லா விபரங்களையும் வைத்து பதிவேட்டினை மீண்டும் புதுப்பித்து ஒப்புதல்கள் பெற்று விடிய விடிய தயார்செய்து முடித்துவிட்டார். பின்னர்தான் சற்று நிம்மதி ஏற்பட்டது. இதற்குள் கோட்டாட்சியர் கூப்பிட்டு ‘நடந்தது நடந்துவிட்டது இனி சரிசெய்வதைப் பாருங்கள்’ என்று ஆறுதலும் தைரியமும் சொன்னதால் தப்பித்தார்கள்.
முறைப்படி அந்த மாட்டின் பேரில் வழக்கு போட்டு சப் ஜெயிலில் அடைத்திருக்க வேண்டும். அதற்க்கு வழி இல்லாமல் போய்விட்டது.
அதன்பின்னர் எங்களுக்கு ஒரு படிப்பினை கிடைத்தது. வட்டாட்சியர் கூப்பிட்டால்கூட மேசைமீது இருக்கக்கூடிய முக்கியக் கோப்புகளை எடுத்து அலமாரியில் வைத்து பூட்டிவைத்துவிட்டுதான் செல்வோம்.
இதற்கு நிகரான ஒரு சம்பவம் அடுத்த சில ஆண்டுகளில் நடந்தது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவேண்டி மனுக்கள் ஏராளமாக வந்தது. அதனை கிராம வாரியாகப் பிரித்து ஒவ்வொருவருக்கும் கொடுத்து புலவிசாரணை செய்ய அனுப்பிவைத்தனர். நண்பருக்கு ஒரு கிராமத்திற்கான விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டது. நண்பர் கிராமத்திற்குச் சென்று விண்ணப்பங்களை விசாரிக்கத் துவங்கினார். ஒரு வீட்டில் விசாரித்துக்கொண்டிருக்கையில் இங்கேயும் ஒரு மாடு வில்லனாக வந்துசேர்ந்தது. நண்பர் ரிஷப ராசி போலும்.
விசாரணை மனுக்களைக் கையில் வைத்துக்கொண்டு மற்றவற்றை சைக்கிள் கேரியரில் வைத்திருந்தார். சந்தடிமிக்க அந்த இடத்தில் வில்லனாகவந்த மாடு அரவமின்றி கேரியரில் இருந்த விண்ணப்பங்களில் தன் திருநாவை நீட்டி இழுத்துத் தின்ன ஆரம்பித்துவிட்டது. கூடியிருந்தவர்கள் மாட்டை அடித்துத் துரத்தினர். அதற்குள் சிலபல விண்ணப்பங்கள் மாட்டின் வாயாகிய ஆலைக்குள் அரவைக்குப் போய்விட்டது.
நண்பர் பாவம் அதிர்ந்துவிட்டார். பின் என்ன. சும்மா சும்மா மாடுவந்து வாழ்க்கையில் முட்டினால் (குறுக்கிட்டால்) என்னதான் செய்வது. இங்கே நண்பரின் நேர்மையும், அந்த கிராமத்தின் நற்குடிகளின் குணமும் நண்பருக்கு உதவின. அலுவலகத்தில் உள்ள பதிவேட்டில் உள்ள பட்டியலுடன் ஒப்பிட்டுப் பார்த்து மனுதாரார்களை அழைத்து அவர்களிடம் வேறு விண்ணப்பங்கள் பெற்று சரிசெய்துகொள்ளப்பட்டது. இந்த காலத்தில் இப்படி நடந்தால் கதையே வேறுதான்.
இதேகிராமத்தில் எனக்கும் ஒரு அனுபவம் உண்டு. நான் வருவாய் ஆய்வாராக இருந்தபோது நிலவரி, கடன் வசூல் ஆகியவை ஜப்தி செய்யும் அளவுக்கு கெடுபிடியாக வசூலிக்க உத்திரவிடப்பட்டது. குடிகள் மிகவும் அசட்டையாக இருந்தனர். ஜீப்புகளில் மைக் கட்டிக்கொண்டு பொதுமக்களுக்கு மிரட்டல் விடுவதும், வரிகட்டாதவர் நிலத்தில் அறுவடை செய்வதை மறிப்பது போன்று ‘மிலிட்டாரி ரூல்’ நடந்தது. அப்படிப்பட்ட ஒருநாளில் மேற்படி கிராமத்தில் முகாமிட்டு ஜீப்பில் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு மிரட்டல் வேண்டுகோள் விட்டுக் கொண்டிருந்தோம். பத்து பதினைந்து கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அடியாள் பட்டாளத்துடன் – அடியாள் என்றால் எங்கள் பாஷையில் தலையாரி (தற்போது கிராம உதவியாளர்) என்று அர்த்தம் வசூல் பணி நடந்துகொண்டிருந்தது.
ஒரு பத்து நிமிடம் இப்படிப்பட்ட உதார்களை விட்டுவிட்டு ஜீப்பில் ஏறி மன்னார்குடிக்கு வந்துகொண்டிருந்தோம். பாலத்தைக் கடந்தவுடன் அந்தப் பகுதியில் வசூல் பணிக்காக ஜீப்பினை நிறுத்தினோம். ஒரு நபர் வேகமாக வந்து என் முன்பாக நின்று ஐயா நீங்கள் இந்த பதிவேடுகளை விட்டுவிட்டு வந்துவிட்டீர்கள் இந்தாருங்கள் என்று கொடுத்தார். சுமார் மூன்று கிலோமிட்டர் தூரம் எங்கள் ஜீப்புக்கு ஈடுகொடுத்து சைக்கிள் மிதித்து வந்திருக்கிறார். அந்த கட்டில் எனது வரிவசூல் குறித்த கிராம வாரி விபரங்கள் பதிவேடுகள் இருந்தன. முக்கியமான பதிவேடுகள்தான். இது எப்படி உங்களிடம் கிடைத்தது என்றேன்.
நடந்ததைச் சொன்னார். நான் ஜீப்பின் அருகில் நின்றுகொண்டு புறப்படும் முன்பாக என் கையிலிருந்த கட்டினை ஜீப்பின் பேனட்டின்மேல் வைத்துவிட்டு கத்திய களைப்புக்கு சிரமபரிகாரமாக தேநீர் அறுந்திவிட்டு அடுத்த ஊரில் பந்தா பண்ணும் உத்தேசத்தில் வேகமாக ஜீப்பில் ஏறிப் புறப்பட்டு விட்டிருக்கிறோம். பேனட்மீது வைத்திருந்த கட்டானது ஜீப் சற்று நகர்ந்ததும் கீழே விழுந்திருக்கிறது. அதனைப் பார்த்த நபர் “நம்ம ஆர்.ஐ. வைத்திருந்தது” என்று கண்டுகொண்டு எடுத்துக்கொண்டு வந்துள்ளார். உண்மையில் நான் அவரது இடத்தில் இருந்திருந்தால் அப்படி பொறுப்புடன் நடந்திருப்பேனா என்பது கேள்விக்குறிதான்.
என் நண்பனும் நானும் அடுத்தடுத்து வருவாய் ஆய்வாளராகப் பணிபுரிந்து கிராமத்து மக்களைக் கெடுத்துவிட்டோம். பின் என்ன வருவாய் ஆய்வாளர் என்றால் எல்லாரையும் கசக்கிப் பிழிந்து வசூல் செய்து தம்மை வளர்த்துக்கொள்ள வேண்டாமா. அதைவிடுத்து பரிவும் பாசமும் நட்புணர்வும், அவர்களில் ஒருவன் என்ற வகையிலும் பழகினால் அடுத்து வரும் அலுவலர்களுக்கு யார் லஞ்சம் கொடுப்பர். உடையார்குடி குறுவட்டத்தில் கட்டுப்பட்ட கிராமத்தினர் ஐந்து ஆண்டுகால நடைமுறையில் லஞ்சம் என்றால் என்ன என்பதையே மறந்துவிட்டனர். அதனால் அடுத்தடுத்து வந்தவர்கள் “ரெண்டுபேரும் பிர்க்காவை கெடுத்து வைத்திருக்கிறார்களே” என்று புலம்பும் அளவிற்கு செய்த கொடூரார்கள் அல்லவா நாங்கள்.
ஆனால் ஒன்று. முப்பது ஆண்டுகள் கடந்த நிலையில் இன்றும்கூட அந்தப் பக்கம் சென்றால் கிடைக்கும் பரிவும் அன்பும் என்னென்று சொல்வது. அதைவிட ஒன்று என் மனைவிக்காக சிதம்பரத்தில் ஒரு மருத்துவ மனையில் நின்று கொண்டிருந்தேன். ஒரு முஸ்லிம் பெரியவர் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். நானும் இவர் ஏன் இப்படி உற்று உற்றுபார்க்கிறார் என்று எண்ணிக்கொண்டேன். திடீரென்று என் அருகில் வந்து நீங்கள் மன்னார்குடி தாசில்தாரா இருந்தவர்தானே என்றார். இல்லை என்று சொல்லியும் அவர் என்னை நன்கு தெரியும் என்று சொன்னார். அப்போதுதான் நான் சுதாரித்துக்கொண்டு நீங்கள் எந்த ஊர் என்றதும் லால்பேட்டை என்றார். நான் அங்கு ஆர்.ஐ.யாக முப்பது ஆண்டுக்கு முன் வேலை பார்த்தேன் என்றேன். அப்போதுதான் அவர் நினைவு கொண்டு தமக்கு சிமென்ட் வழங்கிய விபரத்தை குறிப்பிட்டு நலம் விசாரித்தார். அந்த ஊரில் பாதி வீடுகள் நான் கொடுத்த சிமென்ட் மூலம் அந்த நாளில் கட்டிய வீடுகள்தான். சகோதரர் நினைவூட்டி நெகிழ்ந்தது என்றும் மறக்க முடியாதது.
எங்கள் மீது மாட்டுக்கு மட்டும் பாசம் என்றில்லை. அதைவிட மனிதர்களுக்கும் பாசம் அதிகம்.