5
அஞ்சல் வாக்குப் பெட்டியை உடை – அதிகாரி கட்டளை.
தேர்தல் என்றாலே அது திருவிழா போன்றதுதான். அது அரசியல் கட்சிக்குமட்டுமா பொருந்தும். தேர்தல் நடத்தும் அலுவலகங்களுக்கும் பொருந்தும்.
தேர்தல் சுமுகமாக நடப்பது என்பது அதில் ஈடுபடும் அலுவலர்களின் புத்திசாலித்தனமான, பொறுப்புமிக்க, அர்ப்பணிப்புடன்கூடிய வேலையில்தான் – வேலையில் மட்டும்தான் இருக்கிறது. அதில் ஒன்று குறைந்தாலும். பலப்பல சிக்கல்கள் வந்து சேரும். தவறு சற்றே பெரிதானாலும், தேர்தல் நடத்தும் அலுவலர் கோர்ட்டில் போய் நிற்க வேண்டியதுதான். வேலைக்கும் பங்கம் ஏற்படும் என்பதை சொல்லத் தேவையில்லை.
நான் காட்டுமன்னார்கோயில் தேர்தல் துணை வட்டாட்சியராக இருந்த நேரம். தேர்தல் பணிகள் துவங்கி நடைபெற்றுவந்த நிலையில் வேலை மந்தமாக நடக்கிறது என்பதை கருத்தில் கொண்டும் நான் ஏற்கனவே பார்த்துவந்த பணியிடம் காலாவதியான நிலையில் எனக்கு பணியிடம் வழங்கவேண்டும் என்ற கட்டாயத்தில் என்னை இங்கே கொண்டுவந்து மாட்டித் தொங்க விட்டுவிட்டார்கள்.
பணியிடத்தில் சேர்ந்தவுடன் சம்பிரதாயப்படி சிதம்பரம் சப்கலைக்டர் ஆபீசில் வந்து எல்லாருக்கும் சலாம் அடித்துவிட்டு கோட்டாட்சியரைப் போய்த் தரிசித்தேன். அவர் ஒரே அறிவுரைதான் சொன்னார். காட்டுமன்னார்கோயிலில் தேர்தல் பிரிவுபற்றி புகார் மயமாக உள்ளது. வேலையும் எதுவும் நடக்கவில்லை. நீங்கள் சற்று பொறுப்பு எடுத்துக்கொண்டு செய்ய வேண்டும் என்றார். நானும் “எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று அசட்டுத் தைரியத்துடன் சொல்லிவிட்டு வந்து விட்டேன்.
அப்புறம்தான் தெரிந்தது ஒரு வேலையும் சரியாக இல்லை என்பது. தேர்தலுக்கு ஒரு மாதம் மட்டும்தான் இருந்தது. கடலூரிலிருந்து வந்த தேர்தல் நடத்தும் அலுவலர் மிக நன்றாகவே குழப்பினார். அதிகாரம் மட்டும் கொடிகட்டிப் பறந்தது. இங்கே எனது முன்னனுபவம் மட்டுமே கைகொடுத்தது. ஐந்து துணை வட்டாட்சியர்கள் அங்கே இருந்தும் யாரும் அதைப்பற்றி கண்டுகொள்ளவும் இல்லை. உதவிக்கு வரவும் இல்லை. தேர்தல் என்றால் ஊர்கூடித்தான் தேர் இழுத்தாக வேண்டும்.
ஆகட்டும் விஷயத்திற்கு வருவோம். இப்படியாகத்தானே நாளொரு குழப்பமும் பொழுதொரு சந்தேகமுமாக நடந்துகொண்டிருந்த நிருவாகத்தில் நான் சற்று தடுமாறித்தான் போனேன். என் நண்பரும் தேர்தல் பிரிவில் பலமுறை பணிசெய்தவருமான துணை வட்டாட்சியர் திரு பத்மனாபன் (நல்லவர்கள் பெயரை எந்த இடமாக இருந்தாலும் கட்டாயம் குறிப்பிடத்தானே வேண்டும். அதுதானே பண்பாடும், நாகரிகமும்) என்பவர் ஒருபக்கம் சிவில் சப்ளை பிரிவில் மண்டையைப் பிய்த்துக் கொண்டிருந்தார். நான் பணியேற்றதும் தன் வேலைப்பழுவையும் பொருட்படுத்தாமல் என்ன செய்யவேண்டுமானாலும் என் உதவி எப்போதும் உங்களுக்கு உண்டு என்று கைகொடுத்தார்.
ஏற்கனவே தேர்தல் பிரிவில் தற்காலிகமாக வேலைசெய்து சம்பளம் தரப்படவில்லை என்று நின்றுவிட்டவர்களை வரவழைத்து அவர்களுக்கு சமாதானம் சொல்லி ஒருங்கிணைத்து வேலையை முடுக்கிவிட்டேன். நான் பொருப்பில் அமர்ந்தவுடன் எல்லாரும் உதவிக்கு வந்துவிட்டனர். இதெல்லாம் என் முகராசியல்ல. என்னுடைய பவரும் அல்ல. நான் ஒருபோதும் யானைமேல் உட்கார்ந்துகொண்டு அதிகாரமாக பீடிக்கு நெருப்பு கேட்பவனல்ல.
எல்லாவற்றுக்குமான கடைசிக் கட்டம் வந்தது. ‘நடுவில் சில பக்கங்கள் காணாமல் போகவில்லை. தேவைப்படாமல் கிழிக்கப்பட்டுவிட்டன.’ அப்புறம் ஹைலைட்டுக்கு இடம் போதாதல்லவா. அதனால்தான்.
வாக்குப் பதிவு முடிந்து வாக்கு எண்ணும் நாள் வந்தது. காலை எட்டுமணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கவேண்டும். ஆறு தொகுதிகள் ஒரே இடத்தில் சிதம்பரத்தில் எண்ணப்பட்டது. ஐந்து தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் வெகுமுன்னதாக வந்து ஏற்பாடுகளை சரிசெய்துகொண்டிருந்தனர்.படைகள் எல்லாம் போருக்குத் தயாராக தோள் தினவெடுத்து நிற்கும்போது தளபதி வராத நிலையின் தவிப்புடன் எங்கள் அதிகாரிஎங்கே எங்கே என்று தவித்த நிலை. பள்ளிக்கூட கேட் மூடும் வேளையில் ஒட்டமாக ஓடிவரும் மாணவனின் நிலையில் பரபரப்புடன் வந்தார்எங்களவர்.
வந்தவுடன் கேட்ட கேள்வி ‘அஞ்சல் வாக்குப்பெட்டி சாவி எங்கே’ என்பதுதான்.
இங்கே ஒரு விஷயத்தை சொன்னால்தான் புரியும். தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அலுவலர்களுக்கு அவர்கள் வாக்களிக்க ஏதுவாக அஞ்சல் வாக்கு வழங்கப்படும். அதனை அவர்கள் வாக்கு எண்ணும் நாள் காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்னதாகக் கொண்டுவந்து அதற்கான பெட்டியில் சேர்த்துவிடுவர். எங்கள் தொகுதிக்கான பெட்டி சீல் வைக்கப்பட்டு கடலூர் அலுவலகத்தில் வைக்கப் பட்டிருந்தது. பெட்டியின் பொறுப்பு தேர்தல்நடத்தும் அலுவலருடையது. முன்னதாக அவர் எங்களிடம் மிகச்சிறந்த பூட்டு இன்ன கம்பெனி இத்தனை லீவர் இவ்வளவு பெரிது என்றெல்லாம் கண்டிப்புடன் பின்பற்றி வாங்கிக்கொண்டுவிட்டார். தேர்தல் முடிந்தப்புறம் நம் வீட்டுக்கு நல்ல பூட்டு தேவைப்படும் அல்லவா. யார் வாங்கிக் கொடுப்பர்.
நடுநாயகமாக தேர்தல் நடத்தும் அலுவலர், அவருக்கான பரிவாரங்கள் வேட்பாளர் ஏஜெண்டுகள் என்று பதினைந்து இருபதுபேர் உட்கார்ந்திருக்க அவருக்கு எதிராக ஒரு காலியிடம் விடப்பட்டு அதனைச்சுற்றிலும் ‘ப’ வடிவில் வாக்கு எண்ணும் பணியாளர்கள், கட்சி ஏஜெண்டுகள் எல்லாம் நூற்றைம்பது பேருக்கு மேல் இருந்தனர்.
இத்தனைபேர் மத்தியில் தாமதமாக வந்ததும் இல்லாமல், வந்தவுடன் ஏதோ சாவியை என்னிடம் கொடுத்து பத்திரப்படுத்தச் சொன்னதுபோலவும் நான் பொறுப்பில்லாமல் இருந்தது போலவும் “எங்கைய்யா பெட்டிசாவி” என்றார் அதிகாரி. எனக்கு அதிர்ச்சியும் கோபமும் கையாலாகாத்தனத்தினால் ஏற்பட்ட வெறுப்பும் என்ன செய்வது என்ற பதட்டமும் ஏற்பட்டுவிட்டது. எங்கள் வட்டாட்சியருக்குப் பயங்கர கோபம் வந்துவிட்டது. அவர் “பசுபதிலிங்கம் பேசாமல் இருங்க நான் பேசிக் கொள்கிறேன்” என்று சமாதானப்படுத்திவிட்டு ஒரு கடி கடித்தார் அதிகாரியைப் பார்த்து.
இப்ப என்ன செய்வது என்று அதிகாரி கேட்க “நீங்கள்தானே பாஸ் நீங்கள்தான் வழிசொல்லவேண்டும்” என்று அடுத்த கடி விழுந்தது வட்டாட்சியரிடமிருந்து. பார்த்தார் அதிகாரி பூட்டை உடைத்து விடுங்கள் என்றார்.
நான்தானே பொறுப்பு அலுவலர். நான்தான் செய்தாகவேண்டும். உடனே அலுவலக உதவியாளரை அழைத்து பெட்டியை உடையுங்கள் என்றேன். ஊகும். அந்த பயில்வானால் முடியவில்லை. பட்டென்று நான் வாங்கி முயற்சித்தேன். பயில்வானால் முடியாதது ஓமக்குச்சிக்கு சாய்ந்துவிடுமா என்ன! எல்லா பாணங்களும் தோற்றுவிட்டன. நாங்கள் என்ன போர்க்களத்திற்கா வந்திருக்கிறோம். அல்லது ஒர்க்க்ஷாப் வைத்திருக்கிறோமா. அப்படியே ஆயுதங்கள் வைத்திருந்தால்தான் உள்ளே விட்டுவிடுவார்களா என்ன. கையில் கிடைத்த பேப்பர் வெய்ட் முதற்கொண்டு பெட்டிகளில் சுற்றப்படும் கம்பியை வெட்டுவதற்கான கட்டிங்பிளேயர் வரை எல்லாவற்றாலும் முயன்றுபார்த்தும். ஒன்றும் அசைந்து கொடுக்கவில்லை. அந்தப் பெட்டி என்ன இந்தக்காலத்தில் டெண்டர் விட்டு கமிஷண் அடிப்படையில் வாங்கியதா என்ன! இம்சை அரசன் இருபத்துமூன்றாம் புலிகேசியின் வாள் கைப்பிடிபோல் சுலபமாகக் கழன்றுகொண்டுவிட!
அது ஐம்பது ஆண்டுக்கு முன்னர் கல்மிஷம் தெரியாத அலுவலர்கள் வாங்கி வைத்திருந்த ஆவணங்கள் வைத்துப் பாதுகாப்பு செய்யும் பெட்டி. அதனிடம் எங்கள் ஜம்பம் ஏதும் செல்லவில்லை. ஆனால் பெரிய பட்டறையில் வேலைநடக்கும் போது ஏற்படும் சத்தம்போன்று எங்கள் இருப்புப்பெட்டி சத்தம் கொடுத்து ஆராய்ச்சி மணி அடிப்பது போன்று எல்லாரையும் ஸ்தலத்திற்கு வரவழைத்துவிட்டது. அந்த ஹாலில் இருந்த நுற்றைம்பது பேர் மட்டுமின்றி காவலர்கள் பக்கத்து ஹாலில் இருந்தவர்கள் சிலர் என்று எல்லாரும் வந்து ‘ஏதோ நான் நிராயுதபாணியாக புலியுடன் மோதுவதைப் பார்ப்பதுபோல்’ சுற்றி நின்று வேடிக்கை பார்க்கின்றனர். பத்திரிக்கைகாரர்கள் போட்டோ எடுக்கின்றனர். இப்படியாக துவந்த யுத்தத்தில் நான் வேர்த்துக் குளித்துவிட்டேன். அடுத்த ஹாலில் வாக்கு எண்ணிக் கொண்டிருந்த சிதம்பரம் கோட்டாட்சியருக்கு தகவல் போய் அவர் என்னைக் கூப்பிட்டனுப்பினார். நான் விட்டால்போதும் என்று ஓடினேன். அவர் என்ன நடந்தது என்று சிரித்துக்கொண்டே கேட்க நான் அவசரத்திலும் விஷயத்தை சொன்னேன். உடனே அவ்வளவுதானே இந்தாருங்கள் என்று ஒரு சுத்தியலை என்னிடம் கொடுத்தார். அதுதான் ஒரு அதிகாரிக்கான அலங்காரம்.
பெட்டி உடைப்பின் இரண்டாம் அத்தியாயம் தொடங்கியது. நம்ம ஹீரோ (பூட்டு) எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. ஆளாளுக்கு ஐடியாமட்டும் சொல்லிக் கொண்டிருந்தனர். இந்த களேபரத்தில் அரைமணி நேரத்திற்கு மேல் கடந்துவிட்டது. மற்ற தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்துவிட்டது. இங்கேயென்றால் சுத்தியல் அடிக்கும் அசையவில்லை, அந்த பூட்டும் கம்பீரமாக அதைத் தாங்கி நின்ற அந்த இரும்பு பெட்டியும்.
அப்போதுதான் வந்தது. கிளைமாக்ஸ் கட்டம். அருகில் நின்றுகொண்டிருந்த எங்கள் அதிகாரி பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டு ஒரு கொத்து சாவியை எடுத்து என்னிடம் நீட்டியபடியே “நேற்று ஒரு சாராயக்கடை சீல் வத்தேன் அந்த சாவி இது. திறக்கிறதா பாருங்கள்” என்றார்.
சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் முருங்கை மரத்தின் மீது மீண்டும் ஏறி பிரேதத்தை வெட்டி எடுத்துக்கொண்டு வந்ததுபோன்று அந்த சாவியை வாங்கி பூட்டில் விட்டேன் அடுத்த நொடியில் இத்தனை அடிவாங்கியும் சற்றும் என்மேல் கோபத்தைக்காட்டாத அந்த ரோஷம்கெட்ட பூட்டு டக்கென்று ஒரு சிறு மூச்சுப் பேச்சுமின்றி திறந்துகொண்டது. இந்த இடத்தில் நீங்களாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள் சொல்லுங்கள்.
தன்னிடமே சாவியை வைத்துக்கொண்டு இத்தனை நேரம் ஆட்டம் காட்டிய அதிகாரி அந்த சாவி அதற்குரியதல்லவென்றும் தாம் முன்தினம் சாராயக்கடை சீல் வைத்த பூட்டின் சாவிதான் என்றும் சாதித்தார். தப்பு செய்யும் அதிகாரியை அடிக்கலாம் என்று சட்டம் அனுமதி அளித்திருந்தால் நான் குறைந்தபட்சம் ஒரு அறையாவது விட்டிருப்பேன். என்ன செய்வது நினைப்பதெல்லாம் நடந்துவிடுமா என்ன.
ஒருவழியாக அஞ்சல் வாக்குப் பதிவு எண்ணப்பட்டது. அடுத்து வாக்குச்சாவடி பெட்டிகள் எண்ணும் பணி துவங்கியது. நான் அடைந்த வெறுப்பிலும் அவமான உணர்விலும் யாரிடமும் சொல்லாமல் பக்கத்து அறையில் போய் படுத்துவிட்டேன்.
சற்று நேரம் கழித்து கடலூரில் மேற்படி அதிகாரியிடம் வேலைபார்க்கும் என் நண்பர் வந்து என்னை சமாதானப்படுத்தி இதற்கு ஒரு முன்கதையை சொன்னார் பாருங்கள் அதுதான் பெரிய கிளைமாக்ஸ். காலையில் அஞ்சல் வாக்குப் பெட்டியை எடுத்துக்கொண்டு ஜீப்பில் புறப்பட்டு பாதி துரம் வந்ததும் அதிகாரி, பெட்டி சாவி எங்கே என்று ஒரு சந்தேகம் கிளப்பியிருக்கிறார்.
“என்னசார் கேட்கிறீங்க எங்களை நம்பாமல் நீங்கள்தானே ஆரம்பம் முதல் வைத்திருக்கிறீர்கள். இப்ப வந்து என்னை கேட்டால் எப்படி” – இது நண்பர்
“அப்ப வண்டியைத் திருப்பு அலுவலகத்தில் போய் பார்த்துவிடலாம்” – இது அதிகாரி
வண்டி திரும்பி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு போனது. அங்கேயும் இல்லை. நேரமாகிறது என்பதால் மீண்டும் பயணம். கடலுர் ஓ.டி வந்ததும் அதிகாரிக்கு ஒரு ஆலோசனை. இப்போதே நேரமாகிவிட்டது. அங்கு போனதும் வாக்கு எண்ணிக்கை துவங்கவேண்டும். எனவே, போகும்போதே பெட்டியின் பூட்டை உடைத்துவிடலாம் என்று சொல்லியிருக்கிறார்.
“சார் அதெல்லாம் வேலைக்காகாது. நாளைக்கு பெட்டி உடைக்கப்பட்டிருந்தது என்று பிரச்சினை வந்தால் நீங்கதான் மாட்டிப்பீங்க. உடைச்சது நான் என்று வந்தால் நான் உள்ளே போகவேண்டியதுதான். வேணும்ணா நீங்களே உடைச்சுக்குங்க. நான் பொறுப்பாக மாட்டேன்” – இது நண்பரின் கண்டிப்பு.
இந்தக் கதையை கேட்டதும் அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. இப்படிப்பட்ட அதிகாரியிடம் ஒரு மாதம் வேலைபார்த்ததே இப்படி நமக்குக் கண்ணை கட்டுதே. நண்பர் பல நாளாக எப்படி வேலைபார்க்கிறார் என்று என்னை நானே தேற்றிக்கொண்டேன்.
சிலநாட்கள் சென்றன. எங்கள் கோட்டாட்சியர் வேறு இடத்திற்கு மாற்றலானார். பிரிவு உபசார விழா நடைபெற்றது. சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் வேலைபார்த்த கிராம நிர்வாக அலுவலர் முதல் வட்டாட்சியர்கள் வரை எல்லாரும் கலந்துகொண்டனர். கோட்டாட்சியர் பேசினார். அப்போது “காட்டுமன்னார்கோயில் துணை வட்டாட்சியராக பசுபதிலிங்கம் பணியில் சேர்ந்தபோது எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னார். உண்மையில் அதன் பின் நான் காட்டுமன்னார்கோயில் தேர்தல் பணிபற்றி சற்றும் கவலைப்படவும் இல்லை. அந்தப்பக்கம் போகவும் இல்லை. என்ன நடக்கிறது என்று விசாரிக்கவும் இல்லை. ஒரு சிறு பிரச்சினைகூட எழாமல் பொறுப்பாக செய்து முடித்தார் இந்த நேரத்தில் அவரை நான் பாராட்ட வேண்டும்” என்றார். ஒரு மூலையில் உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருந்த எனக்கு ஒரு இன்ப சிலிர்ப்பு ஏற்பட்டது உண்மை.
பைபிளில் காணப்படும் ஒரு பொன்னான வரி “நல்ல ஊழியக்காரனால்தான் நல்ல எஜமானனாக இருக்கமுடியும்” என்பது. உண்மையில் அவர் ஒரு நன் மேய்ப்பராகவே இருந்தார் என்பதில் சற்றும் சந்தேகமில்லை. அதனை அவருக்கு வழங்கப்பட்ட வழியனுப்பு விழா நிருபித்தது. அப்படிப்பட்ட நல்ல அதிகாரியின் பெயரைக் குறிப்பிடாமல் இருக்கமுடியவில்லை. அவர்தான் பின்னாளில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிந்த திரு வெங்கடாசலம் அவர்கள். இப்படிப்பட்ட அதிகாரிகளின் கனிவான அணுகுமுறையினால்தான் பணிச்சுமை எப்படி இருந்தாலும் சந்தோஷமாக கீழ்நிலை அலுவலர்கள் வேலைபார்க்கிறார்கள் என்றால் அது பொய்யல்ல.
“வேலை செய்கிறவனுக்கு வேலைகொடு, வேலை செய்யாதவனுக்குப் புரமோஷண் கொடு” என்கிற ஒரு எழுதப்படாத நடைமுறை வருவாய்த் துறையிலே உண்டு. வேலை தெரிந்துகொண்டு ஆர்வமுடன் வேலை செய்பவர்கள் எல்லாரைம் கோர்ட்டு கேஸ், குப்பையாக கிடக்கும் இருக்கை, சிக்கல்கள் நிறைந்த கோப்புகள் பயமுறுத்தும் நிலையில் உள்ள பிரிவு என்று அதில் துக்கிப் போட்டுவிடுவார்கள். அது நான் வேலைக்கு சேர்ந்த காலத்திலிருந்தே நடைமுறையில் உள்ளதுதான்.
இங்கே அதிகாரி தன் ராஜதந்திரத்தை கையாளுவார். திடீரென்று அதிகாரி ஒரு குமாஸ்த்தாவை கூப்பிடுவார். சென்று சலாம் அடித்ததும் உட்காருங்க என்று உபசாரம் செய்வார். சில வினாடிகள் கழித்து மணி அடித்து டபேதாரை அழைத்து “டீ கேட்டேனே இன்னும் வரலியே இரண்டா சொல்லுங்க” என்பார். அதற்குள் சூடான டீக்கு பதிலாக ஐஸ்கட்டி ஒன்று நம் தலையில் வைக்கப்படும்.
தொடருவார் அதிகாரி. “எனக்கு உங்களால் ஒரு உதவி வேண்டும். தினமும் … … இன்ன பிரிவினால் எனக்கு பிரச்சினைதான். அந்த ஆள் என்னதான் வேலை செய்கிறானோ தெரியவில்லை. ஆனா ஒரு பைல்கூட நகரவில்லை. கொஞ்சம் அந்த சீட்டை நீங்கதான் கரையேத்தனும். அந்த சீட்டை பிரித்து உங்ககிட்டே அட்டாச் செய்துவிடுகிறேன். கொஞ்சம் சரி பண்ணுங்க”
நம்மைப்போன்ற அப்பாவிகளுக்கு ஒரு பெருமை தலைக்கு ஏறும். சரி என்று வந்துபார்த்தால் பின்னர்தான் தெரியும். முனிசிபாலிட்டி குப்பை கிடங்கின் நிலையில் பிரிவு இருக்கும். நாம் உள்ளே புகுந்து மண் வேறு, குப்பை வேறு, பிளாஸ்ட்டிக் கழிவு வேறு என்று தரம் பிரித்து மூட்டை கட்டிவைக்கிறமாதிரி வேலை செய்யணும். அப்போது அதிலிருந்து வரும் நாற்றம் அறுவருப்பு எதுவும் நமக்கு தெரியாது ஏனென்றால் நாம்தான் அதிகாரியின் மோதிரக் கையால் குட்டு வாங்கிக்கொண்டு வந்திருக்கிறோமே. அவர் வைத்த ஐசில் நம் மூளையின் சிந்திக்கும் பகுதிதான் ஃப்ரீஸ் ஆகி விட்டதே.