"

6

தரிசனத்திற்கு சீட்டுப்பிடி


இப்போதெல்லாம் அதிகாரிகள் கொஞ்சம் திருந்திவிட்டார்கள். நான் சொல்லவருவது சுமார் இருபத்தைந்து ஆண்டுக்கு முன்புவரை நடந்தது.

சிதம்பரம் அருள்மிகு நடராசப் பெருமான் ஆலயத்தில் ஆண்டுக்கு இரண்டு முறை ஆனி மாதம் ஒன்றும், மார்கழிமாதம் ஒன்றும் தரிசனம் நடைபெறும். அப்போது மட்டும் நடராசர் பிரதிமையை தேரோட்டம் முடிந்ததும் ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்து அதிகாலை அபிஷேகம் நடைபெறும்.

அதற்காக வெளி மாவட்டங்களில் இருந்தும் சென்னையிலிருந்தும் அதிகாரிகள் வந்துவிடுவர். எல்லாம் அலுவலகப் பணி என்ற போர்வையில்தான். இதுவன்றி மாவட்ட ஆட்சியர், வருவாய் அலுவலர், பக்கத்து கோட்டாட்சியர் என்று ஒரு பட்டாளம் வரும். யாரும் தனியாக வரமாட்டார்கள். மனைவி மக்கள் உறவுக்காரர் வேலைக்காரர் என்று பந்தாவாக வந்துவிடுவர். அவர்கள் வளர்ப்பு நாய் பூனை தவிர. முன்தினம் வட்டாட்சியருக்கு போன்மூலம் கோரிக்கைபோன்று உத்திரவு வரும். அபிஷேகம் பார்க்க இடம் ஏற்பாடு செய்து கொடுக்கும்படி.

இந்த வழக்கம்தான் எங்களுக்கு தெரியுமே. நாங்கள் மட்டும் என்ன ‘வருவாய் துறையினரால் முடியாதது யாராலும் முடியாது’ என்று பெயர் எடுத்தவர்கள் ஆயிற்றே. விடுவோமா. கிராமங்களுக்கு உத்திரவு பறக்கும் எப்படியும் இருபத்தைந்து தலையாரிகளை (தற்போது கிராம உதவியாளர் என்று பெயர்) வரவழைத்துவிடுவோம். அனைவரும் வட்டாட்சியர் அலுவலகம் என்ற பட்டியில் மாலை முதல் அடைக்கப்படுவர்

இரவு வட்டாட்சியர் வருவார். எல்லாருக்கும் ஏதேனும் உணவு வழங்கப் பட்டாலும் படலாம்.  ஆனால் அறிவுரை மட்டும் கண்டிப்பாக வழங்கப்படும். எல்லாருக்கும் ஒவ்வொரு போர்வை / டேபிள் கிளாத் வழங்கப்படும். அவர்கள் அதனை எடுத்துச் சென்று ஆயிரங்கால் மண்டபத்தின் முன்பாக விரித்து அதில் உட்கார்ந்துகொள்ளவேண்டும். இல்லையென்றால் பொதுமக்கள் அங்கு வந்து முன்னதாக இடம் பிடித்துவிடுவர். அப்புறம் அதிகாரி எங்கு உட்காருவார். அவர்கள் என்ன முஸ்லிம்களா? தொழுகைக்கு வரும்போது முதலில் வருபவர் முதல் வரிசையிலும் கடைசியில் வருபவர் கடைசியிலும் நின்று தொழுகை செய்வதற்கு. அதிகாரிகள் பக்திப் பரவசத்தின்பேரிலா வருகிறார்கள்! அதிகாரத்தின் பேரிலல்லவா வருகிறார்கள்.  தாமதமாக வந்தாலும் இடம் கொடுக்க வேண்டியது வட்டாட்சியர் கடமையாயிற்றே.  இல்லையென்றால் ‘என்னையா நீர் தாசில் உத்தியோகம் பார்க்கிற லட்சணம்?’ என்று கேட்டுவிட்டால் என்னாவது.

ஆக முன் இரவிலேயே பக்தர்கள் வரும் முன்னதாகவே தலையாரிகளை அழைத்துக் கொண்டுபோய் பஸ்சில் துண்டுபோட்டு இடம் பிடிப்பது போல் இடம் பிடித்தாயிற்று அவர்கள் அங்கேயே படுத்துக் கிடப்பர்.  அபிஷேகம் ஆரம்பிக்கப்போகும் நேரத்தில் பக்தர்கள் வந்துபார்த்து நமக்கு முன்னதாகவே வந்து இடம்பிடித்துவிட்ட பக்தர்கள் போலும் என்று எண்ணி, நமக்கு இந்தத் தடவை நடராஜாவை அருகில் இருந்து அபிஷேகம் பார்க்கக் கொடுத்துவைக்கவில்லையே என்று தங்களைத் தாங்களே நொந்துகொள்வர்.

இப்படியாகப்பட்ட முன்னேற்பாடுகள் மத்தியில் மாவட்ட ஆட்சியர் அல்லது அவர் குடும்பம் வந்து சேரும். மற்ற எந்த அதிகாரி வந்தாலும். வருவாய் ஆய்வாளர் அல்லது வட்டாட்சியர் வந்து வந்தவர்களுக்கு தக்கபடி உட்கார்ந்திருக்கும் தலையாரியை எழுப்பிவிட்டு உட்காரவைத்துவிடுவார். ஆனால் பாரிதாபம். ஏதேனும் ஒரு அதிகாரி பந்தாவாக வந்தாலும் போதும். அல்லது வேறு யாரேனும் அதிகாரிபோல் வந்து நின்றாலும் போதும். ஒரு தலையாரி எழுந்திருந்து “சா…..மி” என்று சினிமாவில் வரும் ‘அரசர் முன்பாக வீரர்கள் வணங்கும் பாவனையில்’ நன்றாகக் குனிந்து வணக்கம் செலுத்துவார். அவ்வளவுதான் ஆற்றைத்தாண்டுகிற செம்மறியாட்டுக் கூட்டம் போல் எல்லாரும் எழுந்து குனிந்து “சா…..மி” போட்டுக்கொண்டு இடத்தைவிட்டு வெளியேறிவிடுவர்.

அவ்வளவுதான். அங்கே இடமின்மையால் அருகில் பார்க்கவேண்டும் என்று நின்று பார்த்துக்கொண்டிருக்கும் பக்தர்கள் வந்து அந்த இடத்தை ஆக்கிரமித்துவிடுவர். அப்புறம் தாமதமாக வரும் அதிகாரவார்க்கத்திற்கு இடமில்லாமல் போய்விடும். அப்புறம் என்ன! வட்டாட்சியரோ, வருவாய் ஆய்வாளரோ, வந்திருப்பது இன்னார் என்று சொல்லி, கொஞ்சம் நகர்ந்துகொள்ள வைத்து இடம் வாங்கிக் கொடுப்பர்.  இதில் சில சமயம் நமக்கும் நமது குடும்பத்திற்கும் வாழ்த்துக்கள்கூட கிடைக்கும். நமக்கெல்லாம் சகிப்புத் தன்மை ஜாஸ்த்திங்க. அப்படியும் சிலருக்கு இடம் கிடைக்காமல் போய் வட்டாட்சியர் அப்புறம் திட்டப்பட்டதுண்டு.  அதைவிட, மேலேயிருந்து போனில் கேட்பர் “ஆமா என்ன இன்னாருக்கு தரிசனத்துக்கு இடம் கிடைக்கலியாமே. அரேஞ்ச்மெண்ட் ஏதும் செய்யலியா”  இந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் தாசில்தார் யாராவது தாம் இடம் பிடித்து கொடுத்த வீரப் பிரதாபங்களை ஒரு பக்கம் அவிழ்த்து விடுவார்.

இந்த பிழைப்புக்கு வட்டாட்சியர் வேறு வேலைக்கு போயிருக்கலாம் என்று தோன்றும். என்ன செய்ய கழுதைக்கு வாழ்க்கைப்பட்டால்.. .. .. .. ..

அடுத்து ஒரு கூத்து அரங்கேறும். ஒரு மாவட்ட ஆட்சியர் வந்தார். தில்லையில் நடனக் கோலத்தில் அருள்பாலிக்கும் நடராசப் பெருமானுக்கு நாட்டியத்தின்மூலம் அஞ்சலி செலுத்தவேண்டும் என்று அவருக்கு ஆசை பிறந்துவிட்டது. அவ்வளவுதான் ஏற்பாடுகள் துவங்கிவிட்டன. நாட்டியாஞ்சலி விழா என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. பல பகுதிகளிலும் இருந்து நாட்டியக் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டனர். ஆயிரங்கால் மண்டபத்தில் விழா மேடை போடுவதில் துவங்கி வரும் முக்கியப் பிரமுகர்களுக்கு தங்கும் வசதி செய்து தருவது உள்பட வட்டாட்சியர் செய்யவேண்டும்.

இதற்காக வட்டாட்சியர் சொத்துவைத்திருந்தால் விற்று செலவு செய்யலாம். இல்லையென்றால்  பிச்சைதான் – கெளரவப் பிச்சை, ஏற்கனவே நம்மிடம் வந்து போனவர்கள் முக்கியப் பிரமுகர்கள் பெருந்தனக்காரர்கள் என்று நன்கொடை வசூல் செய்து நடத்திக் கொடுப்பர். நன்கொடை என்ற பெயரில் ஒரு தொகையைக் கொடுத்துவிட்டு தனக்கு சாதகமாக காரியம் சாதித்துக் கொண்ட பிரமுகர்களும் உண்டு.  அப்புறம் ஏன் லஞ்சம் ஊழல் எல்லாம் உருவாகாது.

நாட்டியாஞ்சலி விழாவிற்கும் சில சமயம் அதிகாரிகள் வந்துவிடுவர். அப்புறம் என்ன அவர்களுக்கும் சீட்டுப்பிடி விளையாட்டுதான். ஆனால் நல்ல வேளையாக ஒரு சில ஆண்டுகளுக்குப் பின்னர் நாட்டியாஞ்சலிக்கு செலவு செய்யும் வேலை வட்டாட்சியரை விட்டு போய்விட்டதோ வட்டாட்சியர்கள் பிழைத்தனரோ.

ஆனாலும் ஒரு தொந்தரவு தொடர்ந்தது நாட்டியாஞ்சலிக்கு வரும் சில செல்வாக்கு மிக்க கலைஞர்களுக்கு தங்குமிடம் சாப்பாடு ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது. சில சமயம் நமக்கு என்னவென்றே தரியாத ஒரு நாட்டியக் கலை சம்பந்தமான பொருளை ஏற்பாடு செய்யும்படி நம்மைப் படுத்துவதுண்டு. ஏன் வேண்டியதை அவர்கள் எடுத்து வரமாட்டார்களா அல்லது தாங்களே போய் வாங்கிக்கொள்ள மாட்டார்களா.

இதுதான் போகட்டும். சில சமயம் போனில் உத்திரவு வரும். இன்ன அதிகாரி அல்லது அவருக்கு வேண்டியவர் அல்லது குடும்பத்தினர் வருகிறார் அவருக்கு நல்லமுறையில் சாமி தரிசனம் செய்து கொடுக்கவும் என்று. அவ்வளவுதான் வட்டாட்சியரோ அல்லது வருவாய் ஆய்வாளரோ கோயிலுக்கு போய் ஏற்பாடு செய்ய வேண்டும்.

வருபவர் ஒன்றும் பக்தி சிரத்தையுடன் சாமி கும்பிட வரவில்லை. போகிறபோக்கில் ‘நடராஜாவாமே, தங்கக் கூரையாமே நான் பார்த்ததேயில்லையே அந்தவழியேதானே போகிறோம். அப்படியே பார்த்துவிட்டுப் போவோமே. நம்ம இன்னார்தானே அங்கே வேலை பார்க்கிறார். சொன்னால் ஏற்பாடு செய்துவிட்டுப் போகிறார்’ என்று தனக்கு வேண்டியவர் காதில் போட்டுவிடுவார். அவ்வளவுதான் வட்டாட்சியர் ஏற்பாடு செய்துவிட்டு காத்திருப்பார். வருபவரோ கால பூசை நடக்கும் வேளையிலும் கோயில் நடை அடைக்கும் வேளையிலும் வந்து நின்றுகொண்டு ஏதோ நாம் வருந்தி வருந்தி அழைத்ததால்தான் வந்ததுபோலவும் உடனே போகவேண்டும் என்பது போலவும் பறப்பார். வட்டாட்சியர் வீட்டு கோயிலா அது? தம் இஷ்டம்போல் திறந்து காட்ட.

வட்டாட்சியராகப் பணியேற்றவுடன் அவர் செய்ய வேண்டியது நேராக கோயிலில்போய் தம்மை அறிமுகம் செய்துகொண்டு கோயில் செக்கரட்டரி போன்றவர்களை தாஜா செய்துகொள்ள வேண்டியதுதான். ஆனால் ஒன்று. இம்மாதிரி சந்தார்ப்பங்களில் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒரு குமாஸ்த்தா எப்படியும் இருப்பார். அவர்தான் வட்டாட்சியர் அலுவலக கைடு. அவர் நடராஜாகோயில் தீட்சிதர்கள் எல்லாரையும் தெரிந்துவைத்திருப்பார்.  யார் வந்தாலும் அவரை அனுப்பி விடுவார்கள். முன்னதாகச் சென்று தீட்சிதர்களைப் பார்த்து தரிசனத்திற்கு ஏற்பாடு செய்வார்.

இங்கே இன்னொரு வேதனையும் கொசுராக கிடைக்கும். வரும் இப்படிப்பட்ட வி.ஐ.பி.களுக்கு பூசைத்தட்டு மாலை வகையறாக்கள் வாங்கி வைத்திருப்பார் வட்டாட்ச்சியர்.  வருபவரின் வெயிட்டுக்கு ஏற்ப சில சமயம் பொன்னாடைகூட ஏற்பாடு செய்யப்படும். வருகின்ற கிழங்கட்டையிலிருந்து குஞ்சுகுழுவான் வரை எல்லாருக்கும் ஏற்பாடு செய்வதுகூட சர்வசாதாரணம்.  போகட்டும், எடுபிடி வேலையைத்தான் தலையெழுத்தே என்று செய்துவிடலாம்.  அதற்குக் காசு கொடுப்பவர்கள் நூற்றில் ஒருவர். அவரும் ஐநூறு ரூபாய்க்கு பூசைக்கான இத்தியாதிகள் வாங்கி வைத்திருந்தால் ஒரு ஐம்பதோ நூறோ கொடுத்துவிட்டு செல்வார்.  அதனை வாங்காவிடில் “சாமி காரியத்துக்கு நாங்கள்தான் செலவு செய்யவேண்டும்.  இதெல்லாம் நீங்க கொடுத்து எங்களுக்கு சேரவேண்டிய புண்ணித்தை நீங்க கைப்பற்றி விடாதீர்கள்” என்பது போல் சொல்வார்கள் பாருங்க. எங்கே போய் முட்டிக்கொள்ள.

இதிலே ஒரு சுவாரஸ்யம் என்னண்ணா, வந்த வி.ஐ.பி கொஞ்சம் கனமானவர்தான் நல்ல பக்திமான் என்று கண்டுகொண்டால் நமது தீட்சிதர் பெருமக்கள் அப்படி இப்படி என்று பெருமைபேசி, நீங்கள் குறிப்பிடும் நாளில் உங்க பேருக்கு அர்ச்சனை செய்து அனுப்பிவைக்கிறோம். வருடத்துக்கு இவ்வளவுதான் என்று மிக நுணுக்கமாக கவர்செய்து கஸ்டமர் பிடித்துவிடுவர். அதோடு விடுவரா ஆனித் திருமஞ்சனம், ஆருத்திரா தாரிசனம் சமயங்களில் ஒரு பத்திரிக்கை அனுப்பி வைத்து அதற்கும் தனி வசூல் செய்து விடுவர்.  அந்த நெட்வொர்க்கை மிக அழகாக நடத்தி வருடங்கள் பலவற்றிற்கு தொடர்வர்.  ஆக வட்டாட்சியர் மறைமுகமாக தம்மையறியாமலே புரோக்கர் வேலை செய்துவிட்டார்.

சிலசமயம் கலெக்டர் சொந்தக்காரர் அல்லது சென்னையிலிருந்து பெரிய அதிகாரி போன்றோர் வந்தால் வி.ஐ.பி. காரில் வருவர்.  அந்தக் காருக்கு ஒரு டிரைவர் இருந்தார். அவர் வட்டாட்சியாரிடம் வண்டிக்கு டீசல் வேண்டும் என்று கேட்டு காசினைக் கரந்துவிடுவதும் உண்டு. எதற்கு பெரிய இடத்துப் பொல்லாப்பு என்று அதையும் செய்துதொலைக்க வேண்டியதுதான்.

போதாதற்கு அந்த டிரைவருக்கு என்று படி வேறு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அவர் தன் பங்குக்கு வருபவரிடம் வட்டாட்சியரைப் பற்றி அள்ளிப் போட்டுவிடுவார்.

அவருக்கு அது ஒன்றும் பெரிய வேலை இல்லை. வண்டியில் திரும்பும்போது “இந்த தடவை தாசில்தார் நல்லாவே செய்யலைங்க. போனதடவை வந்த வி.ஐ.பி.க்கு அவ்வளவு மரியாதை செய்தார்” என்று கொளுத்தி போட்டு விட்டால் போதும்.  இந்த சள்ளைக்கு பயந்தே டிரைவருக்கு திருப்தியாக படி கொடுத்து அனுப்பி தொலைக்கவேண்டும்.