7
கடன்கள் பிரிவுக்கு கூடுதல் பாதுகாப்பு
நான் வேலைக்கு வந்த சில நாட்களில் தாலுக்கா ஆபீசுக்கு மாறுதல் செய்யப்பட்டேன். அப்போதெல்லாம் விளையாட்டுப் பையனாகத்தான் இருப்பேன். இப்போது மட்டும் என்ன. எப்போதும்தான். ஆனால் செய்ய வேண்டிய வேலைகள் சரியாக நடைபெற்றுவிடும். சிலரைப்போல் ஒன்றுமில்லாததற்குக்கூட அலட்டிக் கொள்ளமாட்டேன். அலுவலகத்தில் உள்ள பலவகையான வினோத கேரக்டர்களை ரசிப்பதற்கு ஒருபோதும் தவறியதில்லை.
அது ஆணானாலும் சரி பெண்ணானாலும் சரி அல்லது அதிகாரியாகவே- யானாலும் சரி மாட்டினால் கலாய்ப்பதில் ஒரு ஜாலி. இருந்தும் யாரையும் மனம் புண்படும்படி நேரடியாக கலாட்டா செய்தது கிடையாது. இதற்கென்றே ஒரு இளவட்ட செட்டு இருந்தது, அதில் என் ஆத்ம எதிரி (நண்பன் என்றால் கண்பட்டுவிடும்) ரகமத்துல்லா, வேல்சாமி, பத்மனாபன், சீனுவாசன், ராஜன், சுந்தரராமன், சம்பத் ஆகியவர்கள் முக்கியமானவர்கள்.
அந்த அலுவலகத்தில் கடன் பிரிவு என்பது தனி கட்டிடத்தில் இயங்கிவந்தது. அந்த காலத்தில் தாலுக்கா ஆபீசில் பொதுப்பிரிவை விட கடன் பிரிவுதான் வலிமையானது. எல்லா காடா கிளார்க்குகளும். அங்கு வேலை பார்ப்பர். ரொம்பப் பொறுப்பான பிரிவு அது. எல்லா கோப்புகளும் மிகவும் முக்கியமானதும் பணம் சம்பந்தப்பட்டதும் ஆகும். வசூல் விபரம் பாக்கி விபரம் முதலியவை அங்கே தினசரி கணக்கிடப்பட்டுவிடும். இப்போதுதானே கணிணி எல்லாம் வந்துள்ளது. அப்போது அந்த பிரிவில் உள்ள சில குமாஸ்த்தாக்கள் மூன்று மூன்று இலக்கங்களாக சர்வசாதாரணமாக கூட்டுவதைப்பார்த்து பொருட்காட்சியை வேடிக்கை பார்க்கும் சிறுவன் போல் வாயைப் பிளந்துகொண்டு பார்த்ததுண்டு.
அந்த பிரிவுக்கு தலைவர் ஒரு அக்கவுண்டண்ட். அவரும் நண்பராகத்தான் பழகுவார். ஆனால் கொஞ்சம் பயங்கொள்ளி. நிறைய சந்தேகப் பேர்வழி.
தினமும் அலுவலக நேரம் முடிந்தவுடன் அவர்தான் கடைசியாக பிரிவைப் பூட்டுவார். சிவன் கோயில்களில் அர்த்தஜாம பூசை என்ற நிகழ்ச்சி தினமும் நடைபெறும். சுவாமியைக் கருவறையிலிருந்து பூசை புனஸ்காரங்களுடன் கொண்டுவந்து பள்ளியறையில் வைத்து பூட்டுவர். அந்த வைபவத்தை தினமும் சலிக்காமல் சென்று தரிசிக்கும் பக்தர்கள் கூட்டம் ஒன்று ஒவ்வொரு ஊரிலும் உண்டு.
அதுபோல் எங்கள் கடன் பிரிவு பூட்டும் வைபவமும் அதற்கு சற்றும் குறையாத மகிமை பொருந்தியதாக இருக்கும். சிவன்கோயில் பக்தர்கள் போல் நாங்கள் அதனைக் காண அலுவலகத்தின் பின் பகுதியில் கூடிவிடுவோம். ரொம்ப பில்டப் கொடுக்கிறேனோ.
இதோ விஷயத்திற்கு வந்துவிட்டேன். மாலை அலுவலக நேரம் முடியும் நேரத்தில் நாங்கள் வந்து லோன் செக்ஷணையே தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருப்போம். எல்லா உதவியாளர்களும் முன்னதாகவே சென்று விடுவர். அக்கவுண்டண்ட் மட்டும் கடைசியாக எல்லா சுவிட்சுகளையும் அணைப்பார். பிரிவின் எல்லா ஜன்னல்களையும் மூடுவார். பின்னர் இரண்டுபக்கமும் பார்த்துவிட்டு கதவை சாத்துவார். மீண்டும் ஒரு முறை கதவை திறந்து உட்பக்கம் ஒரு லுக் விடுவார். சில சமயம் உள்ளே சென்று மின்விளக்கு சுவிட்சுகளை ஒருமுறை அணைக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்ப்பார். திரும்பவும் கதவை மூடுவார். பூட்டை எடுப்பார் கதவைப் பூட்டுவார் தொட்டுக் கும்பிடுவார் பூட்டைப் பிடித்து ஓரிருமுறை தொங்கிப் பார்ப்பார். நன்றாக பூட்டப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்துகொள்வார்.
அடுத்து மீண்டும் பூட்டை தொட்டு கும்பிட்டுக்கொள்வார். தன் சட்டைப் பாக்கெட்டினைத் தூக்கி முத்தம் கொடுத்துக்கொள்வார். சற்று விரசமாகத் தொரியுதா. உண்மைதாங்க அது என்னண்ணு சொல்றேன்.
திரும்பவும், பூட்டைப் பிடித்து ஒரு தொங்கல். ஆனா பூட்டு ஒருநாளும் புட்டுக்கொள்ளவில்லை.
அடுத்து, வெராண்டாவில் நிற்கும் தன் சைக்கிளை எடுத்து கீழே இறக்கி வைத்து ஸ்டாண்டு போடுவார்.
மீண்டும் படி ஏறிச்சென்று பூட்டை தொட்டுக் கும்பிட்டு, சட்டைக்கு முத்தம் கொடுத்து, தொங்கிப்பார்த்து திருப்தி செய்துகொள்வார். அடுத்ததுதான் ஹைலைட். பூட்டின் சாவியை பத்திரப்படுத்துவார்.
அது எப்படி என்கிறீர்களா. அவசரப்படாதீங்க நாங்க எத்தனை நாள் பொறுமையா பார்த்து ரசித்து, சிரித்து, களித்திருக்கிறோம். கதவுக்குப் பக்கத்தில் உள்ள சன்னலை லேசாகத் திறந்து சாவியை உள்ளே வைப்பார். அதற்கு முன்னதாக யாரேனும் சாவி வைப்பதைப் பார்க்கிறாரா என்று சுற்றிலும் ஒரு பார்வை பார்ப்பார். சாவியை வைத்துவிட்டு ஜன்னல் கதவை ஓசைப்படாமல் சாத்துவார். பின் மீண்டும் ஒரு முறை பூட்டைப் பிடித்துத் தொங்கி சரிபார்ப்பார். கண்காணிக்கும் நாங்கள் இந்த பூட்டு இன்றாவது பிடுங்கிக்கொண்டு விழாதா என்று ஏங்குவோம்.
ஒரு வழியாக அரைகுறை திருப்தியுடன் படியிறங்கி சைக்கிளை பிடித்துக்கொண்டு ஸ்டேண்ட் கிளிப்பைத் தள்ளுவார். மீண்டும் பூட்டையே முறைத்துப் பார்ப்பார். ஒரு சில நாளில் மீண்டும் சென்று பூட்டை சோதனை செய்வார் என்பது கூடுதல் இணைப்பு. சைக்கிளை நகர்த்துவதற்கு முன்னதாக மீண்டும் பாக்கெட்டுக்கு முத்தம் கொடுத்துவிட்டு அக்கம் பக்கம் பார்த்துவிட்டு நகருவார்.
அதெல்லாம் சரி சாவியைப் பக்கத்து சன்னலில் வைக்கும்போது இவ்வளவு பில்டப் எதற்கு? அதைவிட, தோட்டி முதல் தொண்டைமான் வரையிலும் எல்லாருக்கும் சாவி அங்கே வைக்கப்படும் விபரம் தெரியும்! காலை நேரத்தில் கட்டிடத்தை பெருக்கி சுத்தம் செய்ய ஒரு பெண்மணி வருவார். அவர் அந்த சாவியைத்தான் எடுத்து கதவைத் திறப்பார். இந்த லட்சணத்தில் இவ்வளவு முஸ்தீபுகள் எதற்கு? மனிதனுக்கு சந்தேகமோ அன்றி பயமோ வந்துவிட்டால் இப்படித்தான். அதிலும் இரண்டும் ஒருவரிடம் ஒன்றாகக் குடித்தனம் நடத்த வந்துவிட்டால் என்னாவது.
அதென்ன பாக்கெட்டுக்கு முத்தம் கொடுப்பது என்று நீங்கள் யோசிப்பது தெரிகிறது. அது ஒரு தனி கதை. நண்பரை பதிவறை பொறுப்பில் அமர்த்தும் வரையிலும் நன்றாகத்தான் இருந்ததாக ஞாபகம். பதிவறைப் பொறுப்பில் இருக்கும் கிளார்க்குகள் பலருக்கு ஏதாவது காரணத்தைக் காட்டி மெமோ பெரும் பாக்கியம் கிடைக்கும். சப்ளை அண்டு சர்வீஸ் செய்து சிலர் சரி செய்துகொள்வர். சிலர் பனிஷ்மெண்ட் பெறுவர்.
இவ்வாறாகத்தானே நண்பர் அந்த பிரிவில் சேர்ந்தவுடன் சந்தேகம் வர ஆரம்பித்தது. மனிதனுக்கு பயம் வந்துவிட்டாலோ, தப்பு செய்ய ஆரம்பித்துவிட்டாலோ பக்தி என்பது கொஞ்சம் கூடுதலாக வந்துவிடும் போலும். நண்பரும் அப்படித்தான். பக்தி அதிகமாகிவிட்டது. கடவுளை வணங்குவதற்கு ஏதுவாகவோ அல்லது தமது நெஞ்சில் கடவுள் இருக்கிறார் என்று தைரியம் சொல்லிக் கொள்வதற்காகவோ ஒரு சாமி படமும் கந்த சஷ்டி கவசம் சின்னஞ்சிறிய பதிப்பும் தன் பாக்கெட்டில் எப்போதும் வைத்துக் கொள்வார். அடுத்து செண்டிமெண்ட்டும் சேர்ந்துகொண்டது. பலரைப் பார்த்திருக்கலாம். பேனாவை எடுத்து எழுத ஆரம்பித்தவுடன் அது தடங்கல் இன்றி எழுதாவிட்டால் நொந்துபோய்விடுவர். வெளியே புறப்படும்போது லேசாகத் தடுக்கினால் என்ன நினைப்பரோ அதுமாதிரிதான். தடுக்கினால் திரும்பி வந்து ஒரு மடக்கு தண்ணீர் குடித்துவிட்டு சென்றால் எல்லாம் சாரியாகிவிடுமாம். இப்படி ஒரு பாரிகாரம். அதுபோல்தான் சிலர் எழுதத் துவங்கும் முன்பாக ஒரு வெற்றுக் காகிதத்தில் ஒரு கிறுக்கல் செய்துபார்த்துவிட்டு அப்புறம் எழுதத் துவங்குவர்.
இப்படியாக ஒவ்வொரு முறை எழுதத் துவங்கும்போதும் அல்லது கையெழுத்து போடும்போதும் சற்று வித்தியாசமாக, தன் இடது கை விரலில் ஒரு புள்ளி வைத்துப் பார்த்துவிட்டு எழுதும் பழக்கம் நண்பருக்கு வந்துவிட்டது. அடுத்து பயத்தைபோக்கிக் கொள்ள தன் பாக்கெட்டில் உள்ள புத்தகத்தை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டு துவங்கும் பழக்கமும் ஏற்பட்டுவிட்டது. பலரைப் பார்த்திருக்கலாம். முதலில் சாத்திர சுத்தமாக கடவுளை வணங்க ஆரம்பித்து கடைசியில் போகிற போக்கில் கோயிலை நோக்கி ஒரு குலுக்கலும் முத்தமும் கொடுத்து வணங்கிவிட்டு போய்க்கொண்டே இருப்பர். அப்படியாக நண்பரும் கையில் புள்ளியும் பாக்கெட்டுடன் சேர்த்து முத்தமும் கொடுக்கப் பழகிவிட்டார். அவரது இடது கை சுட்டுவிரல் அல்லது நடு விரல் எப்போதும் நீலமாகவே இருக்கும். ரொம்பநாள் வரையிலும் இவர்ஏன் சட்டை பாக்கெட்டை இழுத்து இப்படி முத்தம் கொடுத்துக் கொள்கிறார்என்று புரியாமல் குழம்பியதுண்டு. ஒரு சீனியர்நண்பர்தான் இந்த ரகசியத்தை அறிக்கையாக வெளியிட்டாரோ நாங்கள் தெளிவடைந்தோமோ.
ஆக, நண்பரின் கடன் பிரிவு கதவடைப்பு முதல், முத்தம் வரையிலும் அலுவலகத்தைத் தாண்டி மாவட்டப் பிரசித்தம் ஆகிவிட்டது. இதெல்லாம் சத்தியமாக உண்மைதாங்க. அல்லது உண்மையான உண்மை என்றாலும் அது சத்தியம்தாங்க.
இப்படியாகத்தானே நாட்கள் கழிந்த நிலையில் அவர் பதவி உயர்வு பெற்று வேறு ஒரு வட்டத்தில் தலைமையிடத்துத் துணை வட்டாட்சியராக ஆகிவிட்டார். ஆக விதியாகப்பட்டது வலிதல்லவா நானும் என் நண்பனும் அங்கேயே மாறுதல் செய்யப்பட்டு குமாஸ்தாவாக குப்பை கொட்டப் போய்விட்டோம். ஆனால் ஊர் மாறலாம். பதவி மாறலாம். கூடப் பிறந்த குணம் மாறுமா. அங்கேயும். சந்தேகம், பயம், கையிலே நீலப் புள்ளி, பாக்கெட்டுக்கு முத்தம் எல்லாம் தொடர்ந்தே வந்தது. ஆனா இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் ஏற்பட்டது என்னவோ உண்மை.
அங்கே வேலை பார்க்கும்போது. அலுவலகத்தின் தலைவர் என்ற வகையில் அவர்தான் வருவோர் போவோருக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும். போன் வந்தால் அவர்தான் எடுத்துப்பேசி பதில் சொல்ல வேண்டும். ஆனால் நமது நண்பருக்கு அதெல்லாம் கொஞ்சம் கஷ்டம்தான். யார் தலையிலாவது கட்டுவதிலும் தாம் தப்பிச் செல்லுவதிலும் குறியாக இருப்பார். பிரச்சினையிலிருந்து தப்பிக்கிறாராம்.
அலுவலகமே அமைதியாக இயங்கிக்கொண்டிருக்கும். சுற்றிலும் ஆறு குமாஸ்த்தாக்கள். அதில் என் நண்பர் ஒருவர். போன் மணி அடிக்கும். உடனே தலைவர் மிகவும் மும்முரமாக தலையைக் குனிந்துகொண்டு வேலை பார்ப்பார். யாராவது போன் எடுக்கட்டும் என்று. எங்களுக்குத் தெரியாதா அவர் குனிந்த நிலையில் ஓரக்கண்ணால் யாராவது பார்க்கிறார்களா என்று நோட்டம் விடுவதை. தொலைபேசியோ விடாக்கண்டனாக தொடர்ந்து அடித்துக்கொண்டே இருக்கும்.
நண்பர் மெல்லக் கையை நீட்டி ரிசீவரை எடுத்து மெதுவாக காதுக்குக் கொண்டுசெல்வார். ஏதாவது பேசியதா இல்லையா என்றெல்லாம் தெரியாது. டக்கென்று கையை நேராக நீட்டிவிடுவார். ரிசீவரை வைத்துக்கொண்டே யாரையாவது கூப்பிட்டு உனக்குத்தான் போன் என்று கொடுத்துவிடுவார். பெரும்பாலும், என் நண்பன்தான் மாட்டுவான். போய் ரிசீவரை வாங்கி கேட்டால் மறுமுனையில் சம்பந்தமில்லாத ஏதாவது தகவல் கேட்பர். அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து ஏதாவது விபரம் கேட்பர். அதற்கும் என் நண்பனுக்கும் தொடர்பே இருக்காது. வேலை கெட்டதுதான் மிச்சம். என் நண்பனோ கடுப்பாகி என்னை எங்கே அழைத்தார்கள் என்னிடம் கொடுக்கிறீர்களே என்று சொல்லி சம்பந்தப்பட்டவரிடம் கொடுப்பார். நம்ம ஆள் சாதாரணமானவரா. “உங்களைத்தானே அடிக்கடி கூப்பிடுவர் என்றுதான் கொடுத்தேன்” என்பார். தப்பித் தவறி அவர் தொலைபேசியில் மாட்டிக் கொண்டாரானால். மேலிடத்திலிருந்து எது கேட்டாலும். “எனக்கொண்ணும் ஐடியா இல்லை. வட்டாட்சியரை கேட்டுக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிடுவார். இப்படி சொல்லி பலமுறை வாங்கிக்கட்டிக்கொள்வது தனிக்கதை.
இருந்தாலும் எப்படியும் தினம் ஒரு நாள் யாரிடமாவது வாங்கிக் கட்டிக்கொள்வது வழக்கமாகிவிட்டது. இதனால் பேர்வழிக்கு ஸ்ட்ரெஸ் அதிகமாகி ஒருநாள் என்ன செய்கிறோம் என்று அறியாமல் அடி எடுத்துவைத்து கீழே விழுந்ததுதான் மிச்சம். அப்புறம் என்ன. எல்லாரும் ஆளாளுக்கு ஆலோசனை சொல்லி விடுப்பில் அனுப்பி வைத்துவிட்டனர்.
ஆனால் மனிதர் பொறுப்பினை கழித்துக் கட்ட முயன்றாலும் செய்யும் வேலைகளை ஒழுங்காகச் செய்வார். அவர் விடுப்பு முடிந்து தேர்தல் துணை வட்டாட்சியராக மீண்டும் பொறியில் அகப்பட்டுக்கொண்டார். ஆனால் நாங்கள் எல்லோரும் சேர்ந்து ஊர் கூடி தேர் இழுத்ததால் சிறமமில்லாமல் பணிகளைச் செய்து நல்ல பெயர் எடுத்துவிட்டார். அப்போது மட்டும் மனிதருக்கு தைரியம் வந்துவிட்டது.
சிலர் இருக்கின்றனர். தனியே இருட்டில் போகச் சொன்னால் வீட்டுத் தோட்டத்திற்குக்கூட போகாதவர், கும்பல் இருந்தால் வீரமாக இரவில் சுடுகாட்டுக்குக்கூட போவர். அதுமாதிரிதான் இவரும்.
இன்னொரு நண்பர். அவர் சற்று வித்தியாசமானவர். காது கேட்காதவர்களைப் பார்த்திருக்கிறோம். கொஞ்சமா காது கேட்காதவர்கள் உண்டு. கொஞ்சம்கூட காது கேட்காதவர்களும் உண்டு. ஆனா காது கேட்காததுபோல் நடந்துகொள்பவர்களைப் பார்த்தால் என்ன செய்வது. மற்றவர்கள் வேண்டுமானால் நம்புவர். ஆதிமுதல் பார்ப்பவர்கள் நம்புவரா.
அவர் கொள்ளுப் பைக்குள் தலையை விட்டு நன்கு சாப்பிடுவார். ஒன்றும் செய்யாது. கடிவாளத்தினை மாட்டியதும் மயக்கம் வந்துவிடும். முதல் முறை மயக்கம் வந்து வீட்டுக்குச் செல்வார். அடுத்தநாள் அலுவலகத்திற்கு வருவார். அடுத்த முறை மயக்கம் வந்து ஆஸ்பத்திரிக்குச் செல்வார். அடுத்தநாள் வரமாட்டார். வேறு இடத்திற்கு போய்விடுவார். ஏதோ ஒரு அலுவலகத்தில் இப்படி நடந்தால் பரவாயில்லை. போகும் இடத்தில் எல்லாம். கொஞ்சம் வேலைப் பழு என்றாலும் மயக்கம் வந்தால் என்ன செய்ய. அவருக்குப் பட்டப் பெயராகிவிட்டதுதான் கண்ட பலன். மனிதர் காதில் அதுவாவது விழுந்ததோ இல்லையோ யாமறியோம் பராபரமே.
மனதில் பயமும் நம்பிக்கையின்மையும் குடக்கூலி இல்லாமம் குடியிருந்தால் மற்றவர்கள் யாரும் (எந்த குணமும்) குடிவரமாட்டார்கள். எந்த வேலையும் பார்க்க முடியாது