"

8

பெரிய அதிகாரியின் தான தருமம்


 நான் வருவாய் ஆய்வாளராகப் பணிபுரிந்த சமயம். தமிழக அரசின் தலைமைச் செயலர் அந்தஸ்த்தில் இருந்த எங்கள் துறை பெரிய அதிகாரி ஒருவர் வந்தார். அவர் வந்தது என்னவோ நடராசர் ஆலயத்தில் சாமிகும்பிட.

எங்கள் அதிகாரிகள் பெரும்பாலோருக்கு ஒரு முக்கியமான  தற்காப்புக்கலை தெரியும். யாராவது பெரிய அதிகாரி வந்தால் ஏதாவது கேள்வி கேட்டாலோ அல்லது தணிக்கை செய்தாலோ நாம் தனியே மாட்டிக்கொள்ளக்கூடாது என்பதில் குறியாக இருப்பர்.  “புலிக்குப் பயந்தவர்கள் எல்லாம் என்மீது வந்து படுத்துக்கொள்ளுங்கள்” என்றானாம் ஒரு வஸ்தாது.  அதுபோல் தமக்குக் கீழே உள்ளவர்கள் எல்லாரையும் வரவழைத்து விடுவர். வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிருவாக அலுவலர்களின் சங்கத் தலைவர்கள் என்று பலரையும் ஏதாவது ஒரு வேலையைக் குறிப்பிட்டு வரவழைத்து கட்டிப்போட்டு வைத்துக்கொள்வதில் வல்லவர்கள்.

அம்மாதிரி மேற்படி பெரிய அதிகாரி வருகையின் தொடர்பாக எங்களை எல்லாம் சிதம்பரம் வரவழைத்து உட்கார வைத்துவிட்டார்கள். முக்கிய உறவினரை  ஆப்பரேஷனுக்கு அனுப்பிவிட்டு வெளியில் பயத்துடன் காத்திருக்கும் சொந்தத்தைப்போல் நாங்களும் வழியில்லாமல் காத்துக் கிடந்ததுதான் மிச்சம்.  அவர் என்னவோ சாமி கும்பிட்டுவிட்டுக் கிளம்பிப் போய்விட்டார். அவரை வழியனுப்பிவைத்துவிட்டு வட்டாட்சியர் பரிவாரங்கள் வந்து சேர்ந்ததும்தான் எங்களுக்கு நிம்மதி.

அடுத்து, வழக்கமாக இப்படி எந்த அதிகாரி வந்து சென்றாலும் உடனிருந்த அலுவலர்களிடம் மற்றவர்கள் என்ன நடந்தது என்று கேட்டு தெரிந்துகொள்வது வழக்கம். ஏடாகூடமாக ஏதாவது நடந்திருந்தால் “நல்லவேளை நாம் மாட்டாமல் அவன்மட்டும் மாட்டினானே” என்று மனதிற்குள் ஒரு குரூர சந்தோஷம்.

அப்படித்தான் வந்தவர்களிடம் விசாரித்தோம். தலையிலடித்துக் கொண்டோம். சிரித்துச் சிரித்து வயிறு வலித்ததுதான் மிச்சம்.

அப்படி ஒன்றும் பெரிதாக நடந்துவிடவில்லை.  வந்த அதிகாரி முன் தினம் இரவு ஒரு முக்கியமான பொருப்பை வட்டாட்சியர் தலையில் கட்டிவிட்டார். அது இதுதான். அவர் நடராசர் ஆலயத்தில் சாமிகும்பிட்டுவிட்டு ஒரு பழுத்த சிவனடியாருக்கு வேட்டி வகையறாக்கள் தானம் செய்யவேண்டும். தகுதியானவராக ஏற்பாடு செய்யுங்கள் என்று உத்திரவாகிவிட்டது.

தானதருமத்திற்கு தங்கத்தில் பசு செய்து தரவேண்டும் என்றாலும்கூட செய்துவிடலாம். அட யானையேகூட செய்துவிடலாம். ஆனால் தகுதியான பழுத்த சிவனடியாரை எங்கு போய் தேடுவது. அப்படி யார் இருக்கிறார்கள் என்று தீட்சிதர்களுக்குக்கூட சொல்லத் தெரியவில்லை. அந்த ராத்திரியில் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் எல்லாரும் தேடிச் சலித்துப்போய் ஒரு திட்டம் வகுத்தார்கள். தினமும் நடராசர் ஆலயத்தில் வந்து உட்கார்ந்திருக்கும்  ஒரு சடாமுடி ஆளைப் பிடித்தார்கள்.  அவரிடம் இன்னமாதிரி பெரிய அதிகாரி தானதருமம் செய்ய ஒரு சிவனடியார் தேவைப்படுகிறார். நீங்கள் வந்து வாங்கிக் கொள்ளுகிறீர்களா என்றதும் ரொம்ப சந்தோஷமாக சரியென்று சொல்லிவிட்டார். ஆனாலும் அவர் மனதில் ஏதோ பொறி தட்டிவிட்டதுபோலும்.  பெரிய அதிகாரி என்கிறீர்கள். என்னை சிவனடியாராக நடிக்கச் சொல்கிறீர்கள் இதிலே ஏதோ சந்தேகமாக இருக்கிறது ஆளை விடுங்க என்று கழட்டிக்கொண்டுவிட்டார்.

நம்மவர்களுக்கு இதேதடா சங்கடம் என்று தடுமாறி அப்புறம் நைச்சியமாக பேசி எப்படியோ சம்மதிக்க வைத்துவிட்டார்கள். அவரை விட்டால் தலையெல்லாம் சடை பிடித்த ஆறடிக் கூந்தல் உள்ள ஒருவரை எங்கே போய் தேடுவது.

ஆக மறுநாள் காலை, அதிகாரி கோயிலுக்கு வந்தார். சாமி கும்பிட்டார். நம்ம சடாமுடி சாமியாரை  குளிக்கப்படுத்தி விபூதி உத்திராட்சம் வகையாறா வேஷம் கட்டி தயாராக கொடிமரத்திற்கு அருகில் உட்கார வைத்திருந்தார்கள்.  அதிகாரி சாமிகும்பிட்ட சுவடு குறையாமல் நேராக சாமியாரைத் தேடிவந்தார்.  சாமியார் முன்பாக வந்ததும், அவரது காலில் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டார். வட்டாட்சியர் மூலம் ஏற்பாடாகியிருந்த தான தருமங்களை அவரிடம் கொடுத்தார்.

அவ்வளவுதான் பக்கத்தில் இருந்த மாவட்ட வருவாய் அலுவலர், அடுத்து விழுந்து ஆசி வாங்கிக்கொண்டார். விடுவாரா அடுத்த அதிகாரி கோட்டாட்சியரும் அவர் காலில் விழுந்து ஆசி வாங்கிக்கொண்டார்.  இதைப் பார்த்ததும். வட்டாட்சியரும் அவர் காலில் விழப்போனார். பக்கத்திலிருந்த வருவாய் ஆய்வாளர் ரகசியமாக “என்னசார் நீங்க. அவங்கள்ளாம் விபரம் தெரியாமல் காலில் விழுந்தாங்க.  எல்லா விஷயமும் தெரிந்த நீங்களும் விழப்போறீங்களே” என்று தடுத்துப் பார்த்தார்.  வட்டாட்சியரா கொக்கா. “அடப் போப்பா அவ்வளவு பெரிய அதிகாரி காலில் விழறார்ன்னா அதில் ஏதோ இருக்கு. மேலும் பெரிய அதிகாரியெல்லாம் விழும்போது நாம் ஆசி வாங்கலைன்னா நல்லா இருக்குமா” என்று சொல்லிவிட்டு வட்டாட்சியரும் ஆசிவாங்கிவிட்டார்.  முன் ஏர் போகும் வழியில்தான் பின் ஏர் போகும் என்று உழவர் பெருமக்கள் சொல்லும் முதுமொழிக்கேற்ப முதல்நாள் சாமியாரை ஏற்பாடுசெய்த வருவாய் ஆய்வாளரும். கிராம நிர்வாக அலுவலரும்கூட சாமியார் காலில் விழுந்து ஆசிவாங்கிக்கொண்டனர். இது எப்படி இருக்கு.

நல்ல வேளை சிவனடியாரிடம் சில தேவாரம் திருவாசகம் பாடி பொருள்  சொல்லி என் மனதைக் குளிர்விக்கவேண்டும் என்று அதிகாரி ஆசைப்பட்டு எதுவும் கேட்காமல் போனது பெரிய புண்ணியம்.

சடாமுடியுடன் கூடிய பழுத்த சாமியாருக்கு தானம் செய்ததில் அதிகாரிக்கு பரம திருப்தி. ஏதோ கைலாசத்திற்கே போய் சிவபெருமானையும், அவரைச் சுற்றியிருக்கும் சிவகணங்களையும் தரிசித்துவிட்ட சந்தோஷத்தில் மாவட்டத்தின் வருவாய் நிருவாகமே மிகச்சிறப்பாக நடைபெறுவதாக சான்று கொடுத்துவிட்டு கிளம்பிப்போய்விட்டார்.

மீட்டிங் பணிஆய்வு எல்லாம் என்னாச்சு என்கிறீர்களா. அடப்போங்கசார் நீங்கவேறு.  சப்ளை அண்டு சார்வீசில்தான் எல்லாமே முடங்கிக் கிடக்கிறது என்பது தொரியாதா உங்களுக்கு.

நாங்களும் நரி இடம்போனால் என்ன வலம்போனால்தானென்ன மேலே விழுந்து பிடுங்காமல் போனதே என்ற சந்தோஷத்திலும். நடந்ததை லைவ் டெலிகாஸ்ட் பார்த்த திருப்தியிலும் கதையை அசைபோட்டுக்கொண்டு அவரவர் இருப்பிடம் சென்றோம்.

ஏதோ தெய்வசங்கல்ப்பமாக இப்படி நடந்துவிட்டது என்று நினைக்காதீர்கள் இப்படிப்பட்ட விநோத அதிகாரிகள் நிறையபேர் இருக்கிறார்கள். அவர்கள் கேட்பது தலைசுற்றவைக்கும்.

சாமிகும்பிட வந்தேன் பேர்வழி என்று வருவார்.  பங்களாவில் தங்குவார். நடப்பன, பறப்பன, என்று ஒரு பிடி பிடிப்பார் சற்று ஓய்வு எடுத்துக்கொண்டு கோயிலுக்கு செல்வார். சிலர் இருக்கிறார்களே அவர்கள் முன்னதாக சாப்பிடமாட்டார்கள். கோயிலில் விழுந்துவிழுந்து சாமி கும்பிட்டுவிட்டு நேராக பங்களா வந்து ஒரு பிடி பிடித்துவிடுவர்.

ஒரு சில சமயம் குறும்பான எங்கள் ஆட்கள் சற்று துணிச்சலுடன் அய்யா கோயிலுக்கு போவதால் அசைவம் சாப்பிடலாமா என்று முன்னதாக கேட்பர். வேறென்ன அவர் சைவம் என்றால் செலவு கொஞ்சம் குறையுமே என்ற நப்பாசைதான். ஆனால் அந்த விடாக்கண்டனோ அதெல்லாம் பரவாயில்லை என்று சமயத்தில் மெனுவே கொடுத்துவிடுவார்.

வருவாய்த்துறையில் இதெல்லாம் ரொம்ப சாதாரணமப்பா.

இன்னொரு வி.வி.ஐ.பி. தோர்தல் ஆணையத்தின் மிகப்பெரிய அதிகாரி. குடும்பத்துடன் சாமிகும்பிட  வந்துவிட்டார்.  அப்போது பணிபுரிந்த வட்டாட்சியரோ சப்ளை அண்டு சர்விசில் கைதேர்ந்தவர்.  உதாரணமாக, அதிகாரி சிகரெட் பிடிப்பார் என்று தெரியும். ஆனால் எந்த பிராண்டு என்று தெரியாது என்று வைத்துக்கொள்ளுங்கள் (அதெல்லாம் முன்னதாகவே துப்பறிந்துவிடுவார் என்பது வேறு விஷயம்).  இவர் உள்நாடு வெளிநாடு என்று எல்லா வகை சிகரட்டுகளையும் வாங்கி தயாராக வைத்துவிடுவார். ஏன் பீடிகட்டுகூட வாங்கிவைத்துவிடுவார். அப்படிப்பட்ட கில்லாடி காக்காபிடி ஆசாமி. அவரா கைவிட்டு காசு செலவழிக்கப்போகிறார்.  கீழே இருப்பவன் தலையில்தானே விடியப்போகிறது.

நமது வி.வி.ஐ.பி சாமிகும்பிட்டுவிட்டு சாப்பிட்டுவிட்டு கிளம்புவதாக திட்டம். வட்டாட்சியர் கல்கண்டு சார்க்கரை பொங்கல். கொஸ்த்து, சம்பா சாதம் உள்ளிட்ட பெரிய மெனுபோட்டு தயார் செய்துவிட்டார். அதிகாரி குடும்பத்துடன் வருகிறார் அல்லவா. ஆபீசில் வேலை பார்த்த இரண்டு பெண் உதவியாளர்களை பாரிமாறுவதற்கு அழைத்துச் சென்றுவிட்டார்.  தாமே முன்னின்று இலைகளில் குறைவு ஏற்பட்ட வகையறாக்களை மீண்டும் மீண்டும் இலையில் வைத்து அந்த குடும்பத்தையே திக்கித் திணர அடித்துவிட்டார்.

அடுத்து அவருடன் பாதுகாப்புக்கு வந்த முப்பது கமாண்டோக்களுக்கும் அசைவ சாப்பாடு தனி பந்தி. அவர்கள் போய் தங்கள் ஊரில் சொல்லிக்கொள்வார்களே “சிதம்பரம் தாசில்தார் பகுத் படா ஆத்மி ஹை. படா கானா சப்ளை ஹோதா” என்று. நமது புகழ் டெல்லிவரையிலும் சென்றுவிடும் அல்லவா.

இப்படியாக அந்த பெரிய அதிகாரி கிளம்பிப்போனார் அடுத்த கேட் வழியாக பக்கத்து மாநில கவர்னர் வந்துசேர்ந்தார். அவருக்கு என்று தனியாக ஒரு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அவரது பயணம் எதற்கு என்றெல்லாம் சொல்லப்படவில்லை. வழக்கம்போல் அவர் கோயிலுக்குதானே வரக்கூடும் என்று எண்ணி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.  வந்தவர் தாம் ஒரு பிரபல நாடி சோதிடரிடம் நாடி சோதிடம் பார்க்க வேண்டும் என்றும். அதற்கு ஏற்பாடு செய்யச்சொன்னார். அப்படியானால் அவர் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு அல்லவா. சென்றிருக்கவேண்டும்.

எங்கள் கில்லாடி உடனே தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர், மயிலாடுதுறை வட்டாட்சியர் எல்லாருக்கும் போன் போட்டு சொல்லிவிட்டு கழட்டிக்கொண்டு விடுவோம் என்ற எண்ணத்தில் இருந்தார். கவர்னரோ தாம் சோதிடம் பார்த்துவிட்டுத்தான் சாப்பிடப்போவதாக தெரிவித்துவிட்டார். அப்போதே நேரமாகிவிட்டது. இனி எப்போது வந்து சாப்பிடுவது என்று காரிசனமாக கேட்கப்போக சாப்பாட்டை என்னுடனே எடுத்துவந்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டார்  அவர்.

அப்புறம் என்ன சிதம்பரம் பட்டாளம் வாகனத்தில் எல்லா ஐட்டங்களையும் ஏற்றிக்கொண்டு வைத்திஸ்வரன் கோயில் சென்று சேர்ந்தது. நம்ம வட்டாட்சியருக்கோ ஏதோ அங்கே இப்படி தேவுடுகாத்துக்கொண்டு எல்லா அதிகாரிகளும் இருப்பர் என்று நினைப்பு. ஆனால் அங்கே ஒரு வருவாய் ஆய்வாளர்கூட வரவில்லை. இவர்கள் போய் இறங்கிய பின்னர் நிதானமாக அந்த ஊர் கிராம நிர்வாக அலுவலர் வந்து நின்றிருக்கிறார்.

கெஸ்ட் ஹவுஸ் இத்தியாதிகள் எல்லாம் ஏற்பாடாகிவிட்டதா என்றால் அதெல்லாம் தெரியாது என்று கைவிரித்துவிட்டார். அவர் என்ன சிதம்பரம் வட்டாட்சியாரிடமா வேலை பார்க்கிறார்?  பயந்துகொண்டு பதில்சொல்ல!

சோதிடம் பார்த்தார்… பார்த்தார்… சோதிடக்காரரோ இதற்கு அந்த சுவடி பார்க்கவேண்டும் அதற்கு இந்த சுவடி பார்க்கவேண்டும் என்று தமது தொழில் தர்மப்படி அடித்துவிட்டுக்கொண்டே போனார்.

கடைசியில் சாப்பட்டு நேரமும் கடந்தது. இடைப்பட்ட நேரத்தில் சாப்பிட்டுவிடுவோம் என்று சாப்பிடுவதற்கு ஒரு அறை ஒதுக்கித் தரும்படி கேட்டால் இடம் ஏதுமில்லை என்று மாடிப்படிக்கு அடியில் ஒரு டேபிளைப் போட்டு பேருதவி செய்தார் சோதிடக்காரார்.  சாமியார்களிடமும் சோதிடர்களிடமும் மாட்டிக்கொள்ளும் பல ஆசாமிகள் மற்ற எந்த கவுரவத்தையும் அடகு வைத்துவிடுவர்.  அந்த இடத்தில் நம்ம கவர்னருக்கும் அதே நிலைமைதான்.  மாடிப்படிக்கடியிலேயே உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு தொடர்ந்து சோதிடம் பார்த்துக்கொண்டு கிளம்பிச்சென்றார் புண்ணியவான் என்றால் நம்பவா போகிறீர்கள்.