9
என்னைச்சுற்றி எப்போதும் கூட்டம்தான்
நான் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியில் சேர்ந்த சமயம். ஒரு துணை வட்டாட்சியர் வந்து பணியில் சேர்ந்தார். மிகவும் நல்ல மனிதர். யாரிடமும் கோபப்படமாட்டார். ரொம்ப நல்லவன்னு பேரெடுக்க விரும்புபவர். அப்படிப்பட்டவர்தானே நமக்குத் தேவை. நாங்கள் எல்லாரும் கேலிபேசுவதற்கு வசதியாக இருந்தார். ரசனையோடு கலந்துகொள்ளுவார். இருந்தாலும் அவரை நாங்களும் புண்படுத்தியதில்லை. அவரும் எங்களைப் புண்படுத்தியதில்லை.
அவர் காலையில் அலுவலகம் வந்தார் என்றால் அவர் முன்பாக எப்போதும் கூட்டம் சுற்றி நின்றுகொண்டிருக்கும். முதலில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. நான்கூட அவர் ஏதோ இந்த ஊரில் உள்ளவர்களுக்கு நன்கு அறிமுகமானவர்போலும். அதனால்தான் நிறையபேர் அவரை நாடி வந்துவிடுகிறார்கள் என்று எண்ணிக்கொண்டேன்.
கொஞ்சநாள் கழிந்துதான் தெரியவந்தது நிலவரம். நண்பர் காலையில் வந்து சீட்டில் உட்கார்ந்தவுடன் எப்படா அதிகாரி வருவார் மனுகொடுக்கவேண்டும் என்று காத்துக்கொண்டிருக்கும் யாரேனும் ஒருவர் வந்து மனு கொடுப்பார். நம்மவர் அவரிடம் மிகவும் பரிவுடன் கோரிக்கை என்ன என்று விசாரிப்பார். மனுவை வாங்கிக்கொண்டு பேசாமல் அடுத்த வேலையைப் பார்ப்பவர்களையே பார்த்து சலித்துப்போன திருவாளார் பொதுஜனம் பரிவுடன் என்ன ஏது என்று கேட்பவரைக் கண்டால் விடுவரா. “ஆதெள கீர்த்தனாரம்பத்திலே” என்றபாணியில் பிரச்சினை முளைவிட்ட நாள் முதல் கதை சொல்ல ஆரம்பித்துவிடுவார். நம்மவரும் பொருமையாக தலையை ஆட்டிக்கொண்டு கேட்பார். ஒரு நிமிடம் ஆகியிருக்காது. அடுத்து மனு கொடுக்க வந்தவருக்கு அவரது கோரிக்கைதானே முக்கியம். அவர் தம் மனுவை முகத்துக்கு நேரே நீட்டுவார். உடனே முன்னவரை விட்டுவிட்டு அடுத்த மனுவை வாங்கிக்கொண்டு என்ன என்பதுபோல் அவர் முகத்தைப் பார்ப்பார். ஆக அடுத்த கதை துவங்கிவிடும்.
முதல் மனுதாரர் நின்றுகொண்டே இருப்பார். அடுத்த மனுதாரர் பேசிக் கொண்டிருக்கும்போதே அடுத்து ஒருவர், பின்னர் அடுத்தது இன்னொருவர், என்று நான்கைந்துபேர் மனுவை நீட்ட எல்லாருக்கும் ஒரே நிலைதான். அவரவர்களும் தங்கள் கதை முடியவில்லை என்று நின்றுகொண்டே இருப்பர். அவர்களுக்கு அப்போதே தங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு கைமேல் பலன் கிடைத்துவிடும் என்று நினைப்பு. இதற்கிடையில் போன் குறுக்கீடு வேறு. இப்படியாக நின்று கொண்டிருப்பவர்கள் அவர்களுக்குள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு தனி ஆவார்த்தனம் செய்வர். ஆக எப்போதும் மேசையைச் சுற்றிலும் பத்துபேர் இருப்பர். இதற்கிடையில் கிளார்க்குகள் ஏதேனும் கோப்பினைக் கொண்டுபோய் நீட்டினால் அதுவும், மேசையில் உள்ள மனுக்களுடன் சங்கமமாகிவிடும்.
நிற்கிற கும்பல் சும்மா இருக்குமா மேசைமேல் இருக்கும் கோப்பினை லேசாகத் துக்கி என்ன இருக்கு என்று ஆராயும். பக்கத்து மேசையில் உள்ள குமாஸ்த்தாக்களின் கோப்புகளை ஆராய்வர். இப்படியாக தெந்தரவுதான் மிஞ்சும். யாருடைய கோரிக்கையும் பைசல் ஆகியிருக்காது.
நண்பர் தனியாக இருக்கும்போது “ஏன் சார் வருபவர்களிடமெல்லாம் நீங்கள் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே இருந்தால் எப்படி? டக் டக்கென்று அனுப்பிவைத்தால் என்ன?” என்றால் அவர் சொல்வார். “ஏன்சார் அவனவன் ஏதோ நம்ம கோரிக்கைக்காக மட்டும்தான் இந்த ஆபீஸ் திறந்துவைத்துக் காத்திருக்கிறது என்று நினைத்துக்கொண்டு செலவுசெய்து கொண்டுவந்து மனுகொடுக்கிறான். நாம் செய்துகொடுக்க இயலவில்லையென்றாலும். ஆறுதலாகவாவது பதில் சொல்ல வேண்டாமா. அப்பதானே நம்மீது அவனுக்கு நம்பிக்கை வரும்” என்பார்.
கோரிக்கை நிறைவேற வேண்டாமாம். ஆறுதல் கிடைத்தால் போதுமாம். இது எப்படி இருக்கு.
இடையிடையே எங்களுக்குக் கதையெல்லாம் சொல்வார் பாருங்க. ஒன்றிரண்டைப் பார்க்கலாம்.
வேலைக்கு புதிதாக வரும் குமாஸ்த்தாக்கள்பாடு எப்பவுமே கொஞ்சம் கஷ்டம்தான். அப்போதெல்லாம் உயர் அதிகாரி கூப்பிட்டாலே போதும். நாம் என்ன தப்பு செய்தோம். இந்த கோப்பு வைக்கவில்லையே அதற்குத்தானா? அந்தக்கோப்பில் அப்படி எழுதினோமே அதற்குத்தானா! என்றெல்லாம் ஒரு பயம் வந்துவிடும். அதிலும் வட்டாட்சியர் என்பவர் வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள்தான், சற்று நேரம்தான் அலுவலகத்திற்கு வருவார். வந்துவிட்டால் அலுவலகம் மிலிட்டரி கோர்ட்டு நிலைமையில் இருக்கும். துணை வட்டாட்சியர் முதல் பியூன் வரை எல்லாருக்கும் எதாவது காரணத்திற்கு டோஸ் விழும். ஏதோ ஒரு சில சீனியர் கிளார்க்குகள் மட்டும்தான் வட்டாட்சியரிடம் தாமாகவே சென்று பேசுவர். பாதரட்சைகளை கழற்றிவிட்டு தரிசிக்கச் செல்லும் கிளார்க்குகள் எல்லாம் சர்வசாதாரணம். அவ்வளவு பயம். அப்புறம் புதுசா வந்து வேலை கற்றுக்கொள்ளும் நிலையில் உள்ள குமாஸ்த்தாக்கள் எம்மாத்திரம்.
இப்படியாகத்தானே தாசில்தாராகப்பட்டவர் திக்குவிஜயத்தை முடித்துக் கொண்டு அலுவலகத்திற்குள் பிரவேசம் செய்தவுடன் மணி அடிக்கப்படும். டபேதாராகப்பட்டவர் போய்க் கேட்டுவிட்டு குற்றேவலுடன் வெளியே வந்து அந்த “பி9-ஐ” அய்யா கூப்பிடறார் என்று சற்று ஏளனமும், கொஞ்சம் சிவபெருமான் தலையில் உள்ள பாம்பின் கர்வத்துடன் கலந்த அதிகாரத்துடனும் அறிவிப்பார். அந்தளவிலே “பி9” ஆகப்பட்டவர் ஒரு சில மாதங்கள் முன்பு வேலைக்கு சேர்ந்தவர். அவரோ ‘இடியோசைகேட்ட நாகம்போல்’ நடுநடுங்கி நேற்று வைத்த பைல் சம்பந்தமாகவா, காலையில் ஒரு பார்ட்டி வந்து கேட்டானே அவன் ஏதாவது வத்தி வைத்துவிட்டானா, என்று மனம் பதறும்போதே, ஆகா நேற்று நாம் பி.ஆர் தணிக்கைக்கு வைக்க மறந்துவிட்டோமே அதுவாக இருக்குமா, இதுவாக இருக்குமா என்றெல்லாம் மனம் குமைந்துகொண்டே எழுந்திருந்து சட்டை பித்தான்களை சரிசெய்து போட்டுக்கொண்டு தலைமுடியை சற்று மேல் துக்கி சரி செய்துகொண்டு சிங்கத்தின் கூண்டுக்குள் தயங்கித் தயங்கி செல்லும் முயலாக சென்று ஒரு சலாம் செய்வார்.
அவ்வளவுதான். தாசில்தாராகப்பட்ட சிங்கத்துக்கு அவர் ஏதோ கலைப் பிராண்டிவிட்ட ஒரு சுண்டெலி மாதிரி தெரிவார். “வாங்க சார் மாப்பிளை மாதிரி எங்கப்பனும் கச்சரிக்கு போறான்னு தினம் வந்து சேரை தேச்சிட்டு போனா சரிவராது. டீ.ஓ. வந்தா நாற்பத்தெட்டு மணி நேரத்தில் பதில் போகணும்ணு சாருக்கு தெரியாதா, என்னசார் டிரெயினிங் எடுத்தீங்க” என்று ஆரம்பித்து லேசாக ஒரு கடிகடித்து அனுப்பிவைப்பார். அப்போதுதான் தாம் நேர்முகக் கடிதங்களுக்கு பதில் வைக்காமல் குழப்பத்தில் கட்டி வைத்திருப்பது ஞாபகம் வரும். அப்போதும் ஒரு சந்தேகம் நாம் செய்துள்ள இத்தியாதி தப்புகள் எல்லாம் நல்ல வேளையாக அய்யாவுக்கு ஞாபகம் இல்லை போலும் அந்தமட்டும் தப்பித்தோம் என்று நினைத்தாலும். இத்தனைபேர் மத்தியில் வைத்து நம்மை இந்த ஆள் திட்டிவிட்டானே என்று ஒருபக்கம் மனம் கழிவிறக்கப்பட்டுக்கொண்டே ஒரு நொண்டி சமாதானத்தையும் சொல்லிவிட்டு வெளியே வருவார்.
பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது பெயிலான சப்ஜெட்டுக்காக தலைமை ஆசிரியரிடம் அடிவாங்கிக்கொண்டு வெளியே வரும் மாணவனை எல்லாரும் பார்ப்பதுபோல் ஒரு உணர்ச்சி. சிலர் குறும்பாக சிரித்துவேறு வைப்பர்.
இப்படிப்பட்ட மனம் நொந்த நிலையில் வருபவரை சீனியர் குமாஸ்த்தா ஒருவர், அப்படியே நம்ம பி9-கிளார்க்கை வார்த்தையினாலேயே வாரி அணைத்து உச்சி முகந்து பக்கத்தில் உட்காரவைத்துக்கொள்வார்.
“என்ன தாசில் திட்டிட்டானா. என்னா பண்ணினே” – இது சீனியர்.
“டீ.ஓ.க்கு பதில் வைக்கலை அதான்” – இது பி9
“அது தப்புதானே நீ அன்றன்றைக்கு பதில் எழுதிக்கடாசிட்டு போயிட்டா அப்புறம் ஏன் கேட்கப்போறாங்க டி.ஓக்கு பதில் வரலைன்னா கலெக்டர் ஆபீசில் அவரைத்தானே கேட்பான்” – சீனியர்
“சார் அது ஒண்ணுமில்லைங்க என்ன எழுதுறதுண்ணு புரியலை. அதான். இல்லாட்டி வேணுமிண்ணா கட்டி வைக்கப்போறேன்.” – பி9
“சரி தெரியலைன்னா என்னை மாதிரி சீனியர்களிடம் கேட்க வேண்டியதுதானே போ போய் என்னென்ன பதில் வைக்கணுமோ எல்லாத்தையும் எடுத்துட்டு மதியம் மூணு மணிக்கு வந்திடு. சர்வீசுக்கு வந்தவுடனே இப்படில்லாம் பாட்டுவாங்கினா அப்புறம் பிளாக் மார்க்காகிடும். போ. தைரியமா போ.” – சீனியர்
நம்ம பி9-க்கு பல்வேறு தெய்வங்களும் தன் முன்பு வந்து வரம் தந்துவிட்ட திருப்தி. இதுவரை பதில் தெரியாமல் கட்டி வைத்துள்ள தபால்கள் எல்லாத்தையும் எடுத்து வைத்துக்கொண்டு கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டிருப்பார்.
ஆச்சு மணி மூணு. நம்ப பி9, சீனியர் முன்பு ஆஜர். சீனியரோ தன் வேலையெல்லாம் முடித்துவிட்டு ஓய்வாக சிந்தனையில் உட்கார்ந்திருப்பதுபோல் இருப்பார். நம்மவர் வந்து பணிவான வணக்கத்தை காணிக்கை செலுத்திவிட்டு நின்றுகொண்டே இருப்பார். சற்றே சிந்தனை கலைந்து “வாடாப்பா எல்லா பைலையும் எடுத்து வந்திட்டையா பெட்டியில் உட்கார். ஒவ்வொண்ணா எடு” என்பார்.
டீ.ஓ.க்களுக்கு பதில் எழுதுவது தெடார்பான வகுப்பு ஆரம்பமாகும். “ஒரு டீ சாப்பிட்டுட்டு வந்துடறேனே நாமபாட்டுக்கு வேலைபார்க்கலாம்.” – இதுசீனியர்.
இவ்வளவு தூரம் நமக்கு உதவி செய்பவருக்கு நாம் இந்த காணிக்கையாவது செலுத்த வேண்டாமா என்ற எண்ணத்தில் “சார் நான் வாங்கித் தருகிறேன்” என்பார் பி9.
சீனியரோ சற்றே பிகு செய்துகொள்வார். நான் லைட்டா டிபன் சாப்பிடலாம் என்று பார்த்தேன் என்பார். கெளரவத்தை விடுவாரா பி9. அதற்கென்ன சார் நான் சொல்கிறேன் என்று குருவுக்கு டிபன் ஆர்டர் கொடுத்து காசையும் தந்துவிடுவார். அடுத்து ஆரம்பிக்கும் வகுப்பு.
“சரி முதல் கடிதத்தை எடு – ஒரு பேப்பரை எடுத்து நான் சொல்கிறபடி எழுது. கடிதாசி யாரிடமிருந்து வந்துள்ளதோ அவருக்கு எழுதவேண்டும். நே.மு.க. என்று போட்டு உன் கோப்பு எண் போடு. – கீழே மதிப்பிற்குரிய அய்யா என்று போடவேண்டும். – அடுத்து சப்ஜெக்ட். கடிதத்தில் என்ன எழுதியிருக்கோ அதையே எழுதவேண்டும். நான் சொல்கிறேன். அதை அப்படியே எழுதிக்கோ. – சரி அடுத்து பார்வை. – வந்த கடித எண்ணையும் தேதியையும் போடு. இப்போ டைட்டில் முடிந்து போச்சு – அடுத்து அந்த கடிதத்தில் என்ன கேட்டிருக்கோ அதற்கு பதிலை எழுதிக்கோ. கடையில் தங்கள் உண்மையுள்ள என்று எழுதி வட்டாட்சியர் என்று போட்டு ஒப்புதலுக்கு வைக்க வேண்டியதுதான்.
அடுத்த கடிதத்தினை எடு என்பார். அதற்கும் இதே ரீதியில் சொல்லிக்கொடுப்பார். அந்த ‘பி9’க்கு தெரியாததே பதில் எழுதுவதற்குத்தானே. அதைவிட்டு முகவரி எழுத ஒரு வகுப்பு எடுக்க வேண்டுமா என்ன. பி9க்கு எல்லாம் புரிந்ததுபோல் இருக்கும். ஆனால் ஒன்றும் புரியாமலும் இருக்கும். ஆக அன்றைய சீனியரின் டிபன் செலவு பி9 உபயமாகும்.
அடுத்த நாள் செலவுககு ஒரு ‘சி9’ கிடைக்காமலா போய்விடுவார். இப்படியாக சீனியர்கள் புது வரவுகளை ராக்கிங் செய்வதுண்டு. நான் தாலுக்கா அலுவலகத்தில் வேலையில் சேர்ந்த புதிதில் சீனியர்களுக்கு வணக்கம் சொன்னால் வந்தது வினை. இங்கே வா என்று கூப்பிட்டு ஒரு கட்டு தபால்களை கையில் கொடுத்து போய் கம்பேர் செய்துவா என்பார். அரைமணிநேரம் மெனக்கெட்டு முடித்துக்கொண்டு வந்தால் D.T. கையெழுத்து வாங்கிவா என்பார். அவரிடம் போய் நின்று வாங்கிவந்தால் அப்படியே டெஸ்பாட்சில் கொடுத்துவிடு என்பார். இருந்த இடத்திலிருந்தே எங்களை எடுபிடிகளாக்கி வேலை வாங்கிவிடுவார். நாங்கள் கிட்டத்தட்ட பத்துபேர் இருந்தோம். கொஞ்சம் கொஞ்சமாக அந்த டிரெண்டை மாற்றிவிட்டோம். முதலில் கொஞ்சம் வீக்கான சீனியரை முறைத்தோம். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக எல்லாரையும் மேய்க்க கற்றுக்கொண்டோம். நீயும் சர்வீஸ் கமிஷண் நானும் சர்வீஸ் கமிஷன் என்றெல்லாம் சண்டை வளர்க்க தைரியம் வந்துவிட்டது. நாளாவட்டத்தில் இந்த கொடுமையெல்லாம் மறைந்துவிட்டது. ஏன்னா நாங்கள்தான் சீனியர் ஆகிவிட்டோமே.
இப்போதெல்லாம் பலர் வேலைக்கு வரும்போதே விபரமாக வருகிறார்கள். எந்த சீட்டில் பசை இருக்கு எதில் பிரச்சினை இருக்கு என்று தெரிந்துகொண்டு காக்கா பிடித்தோ காசை அடித்தோ சீட்டை விலைக்கு வாங்கிவிடுகிறார்கள்
அரசாங்கம் வேலைக்கு எடுத்ததற்காக ‘சம்பளம்’ கொடுக்கிறார்கள். ஆனால் வேலை செய்வதற்கு பொதுமக்கள் ‘கிம்பளம்’ கொடுக்கவேண்டும் என்ற பாலிசிதான் பெரும்பாலான குமாஸ்த்தாக்களுக்கு. இது தெரியாமல் ஒன்றிரண்டுபேர் நேர்மை என்ற மகுடத்துடன் உள்ளே நுழைந்து மாடு மாதிரி வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். டிரிக் (trick) தெரிந்தவர்கள் மைனர் மாதிரி போய் வந்துகொண்டிருக்கிறார்கள்.
(அந்த காலத்தில் நாங்கள் மாடு என்று புரிந்திருக்குமே.)
இப்போதுள்ள மேலதிகாரிகள் கேட்கமாட்டார்களா என்கிறீர்களா. அவர்களுக்கே வேலை தெரிந்தால்தானே. அவர்கள்தான் ஒரு தாரக மந்திரத்துடன் வருகிறார்களே. “அதென்னங்க கஷ்டம். நீங்கதானே சம்பந்தப்பட்டவர். நீங்கதான் செய்யணும். நான் வந்து செய்யணும்னா அதுக்கு நீங்க எதுக்குங்க” என்று கேட்டே காலம் கடந்துவிடுகிறது. அவர்களுக்கு மேற்கொண்டு புரமோஷண் கிடைத்து போய்க்கொண்டே இருக்கிறார்கள்.
“வேலை செய்றவனுக்கு வேலையைக்கொடு வேலை செய்யாதவனுக்கு புரமோஷண் கொடு என்பதுதானே” எங்கள் துறையின் பாலிசி. அப்படியில்லை யென்றால் வேலை செய்ய ஆள் கிடைக்கமாட்டார்கள் அல்லவா.