"

சிந்தித்தால் சிரிப்புவரும்

(அல்லது)

அதிகாரிகளின் அட்டகாசம்

அனைவருக்கும் வணக்கம்.

“சிரிப்பு அதன் சிறப்பை சீர்தூக்கிப்

பார்ப்பதே நம்ம பொறுப்பு”

இந்தத் திருக்குறளைப் படித்த ஞாபகம் வருகிறதா. இல்லையென்றால் மீண்டும் ஒருமுறை ஒவ்வொரு அதிகாரமாக படித்துப் பார்த்துத் தேட  வேண்டியதுதான்.

இது  சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த நமது காலஞ்சென்ற நகைச்சுவை நடிகர் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் அவர்கள் பாடி நடித்த பாடலின் வரிகள் அன்றி வேறில்லை. திருக்குறளில் தேடினால் கிடைக்காது. அப்புறம் ஏன் தேடிப்பார்க்க சொன்னேன்?

அடுத்தவன் கஷ்ட்டத்தில்தானே நமது சந்தோஷம் பிறக்கிறது. இந்த உலகின் இயக்கமே ஒருவரின் கஷ்ட்டம் அடுத்தவருக்கு சந்தோஷம் என்றுதானே ஓடுகிறது.

கலைவாணர் சொன்னதைப்போல் அல்லாமல் அவசர அவசரமாக உணவை விழுங்கிய மாடு ஓர் இடத்தில் படுத்து சாவகாசமாக வாய்க்கு கொண்டுவந்து அசை போடுவது போன்று முப்பத்தெட்டு ஆண்டுகள் அரசுப்பணியை முடித்துவிட்டு ஆற அமர வீட்டில் ஈசி சேரில் உட்கார்ந்து (படுத்துக்) கொண்டு அசைபோட்டதில், சுவைத்ததில் சிலவற்றை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.

கெக்கே பிக்கே என்று சிரித்து வயிற்று வலி வந்தால் தான் சிரிப்பு என்பதல்ல.  நடந்ததை நினைக்கும்போது புன்முறுவல் வரவழைத்தால் போதும் அதுவே சிறந்த நகைச்சுவை என்பர் நகைச்சுவையாளர்.  சாகா வரம் பெற்ற எழுத்தாளர்களின் ஒவ்வொரு ஆக்கத்திலும் அதன் ஒவ்வோர் பகுதியிலும் மெல்லிய நகைச்சுவை இழையோடிச் செல்வதாலேயே அவை என்றும் இனிக்கும் காவியங்களாகத் திகழ்கின்றன.

சரி, இந்த புத்தகத்தின் தலைப்பு பழங்கால கதைப்புத்தகங்கள், திரைப்படங்களின் பெயர்கள் போன்று இரட்டைத் தலைப்பாக இருக்கிறதே என்று எண்ணுகிறீர்களா இதுவும் பழைய நினைவுகளின் அடிப்படையில் எழுந்ததுதானே அதனால்தான் தலைப்பும் பழைமையாக உள்ளது.

மேலும், இங்கே அதிகாரிகள் என்றால் வருவாய்த்துறையில் பணிபுரியும் எல்லா நிலை அலுவலர்களையும் ஒரே தரத்தில் குறிப்பிடத்தான்.

எப்போதும் பிறரது துன்பத்தில்தான் மனிதன் சந்தோஷம் காண்கிறான். பிறரது துன்பத்தைக் காணும்போதுதான் மனிதன் சிரிக்கிறான்.  அதேசமயம் தனது துன்பமும் மற்றோருக்கு சந்தோஷத்தைத் தருகிறது என்பதையும் மனிதன் நன்கு அறிவான்.

இதுதான் மனித வாழ்க்கை.

தனது துன்பத்தைக் கண்டு பிறர் சிரிக்கும்போது நாம் கோபப்படாமல் சேர்ர்ந்து மகிழ்வதில்தான் வாழ்வின் முழுமை இன்பம் கிடைக்கிறது. அப்படிப்பட்ட அந்த ஒரு நொடிப்பொழுதில் நமது துன்பமும் காற்றில் கரைந்து போய்விடுவதை நாம் உணரமுடியும். அதை விடுத்து இம்மாதிரி வேளையில் சிரித்து மகிழ்வதற்கும் கேலி பேசி சிரிப்பதற்கும் எனக்கு மட்டுமே உரிமை உண்டு என்றும், எனக்கு துன்பம் வந்தால் மற்றவர்கள் எனக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் என்று எதிர்ர்பார்ர்த்தால் மனிதனின் அடிப்படை  குணத்திற்கு அது மறானாது அல்லலவா.

மாறாக மற்றவர்ர் துன்பம் எனக்கு இன்பம் தரவேண்டும். ஆனால் எனது துன்பத்தை யாரும் கண்டு விமர்சிக்கக்கூடாது என்பது கடைந்தெடுத்த சுயநலம் என்பதில் சந்தேகம் உண்டோ.

ஆடிய காலும் பேசிய வாயும் சும்மா இருக்குமா? எழுதிய கைகள் சும்மா இருக்காமல் பழக்க தோஷத்தில் எழுத்தாக வடித்துவிட்டதுடன் அற்ப ஆசை புத்தகமாக வடிக்கத் தூண்டுகிறது.

அதுதான் சிலபல பக்கங்களை எழுதித் தள்ளிவிட்டேன்.

குமாஸ்தாவாக இருந்தபோது நான் எழுதியதை எல்லாம் படிக்க வேண்டியது அதிகாரியின் தலை எழுத்து.

நானே அதிகாரியாக ஆனதும் எனக்கு கீழே இருந்தவர்கள் எழுதியதை எல்லாம் படிக்க நேர்ந்தது என் தலை எழுத்து.

இப்போது நான் எழுதியிருப்பதை எல்லாம் படிக்கவேண்டியது உங்க தலை எழுத்து. தலை எழுத்தை மாற்றமுடியாது என்பது இதுதான் போலும்.

யாருடைய மனதையும் நோகடிக்காமல் நடந்ததை மட்டும் நினைத்துப் பார்த்த அளவில் சிரிக்க வைத்ததை பகிர்ந்துகொள்ளுவதில் ஒரு சந்தோஷம். அதனாலேயே நிகழ்வுகளை சொல்லும் வேளையில் அதில் சம்பந்தப்பட்ட நபர் பெயரை சொல்லவில்லை. தேவையான இடங்களில் மட்டும் கற்பனை பெயர் சேர்த்திருக்கிறேன்.  ஆட்சேபனை இல்லாத இடங்களில் என் நண்பர்களின் பெயரைச் சொல்லியுள்ளேன்.

என் எழுத்துக்களை படிப்பவர்கள் வருவாய்த் துறை அலுவலர்களாக இருப்பின் அதிமதுரமாக இனிக்கும். மற்றவர்களுக்கு கரும்பாக இருக்கும்.  மற்றபடி யாருக்கும் இரும்பாக இருக்காது என்று நம்புகிறேன்.

அந்த நம்பிக்கையில், படிக்கப் போகும் உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். இதில் சொல்லப்பட்டவைகள் யாவும் உண்மையில் அப்படியே நடந்தவைதான்.

கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும்போது நடப்பவைகளை அது எப்படி ஏன் என்றெல்லாம் நினைக்க முடியாது. அதுபாட்டுக்கு போய்கொண்டே இருக்கும். அதில் அடித்துக்கொண்டு நாமும் கரை சேரவேண்டும். இல்லையென்றால் கரை ஏற முடியாது.

பின்னர் நினைத்துப் பார்த்து சந்தோஷமோ ஆறுதலோ அடைந்துகொள்ள வேண்டியதுதான்.

நானும் என் நண்பன் ரஹமதுல்லாவும் அவ்வப்போது பேசி, சிரித்துக் கொள்ளுவோம். அதையே எழுத்தாக வடிக்க முனைந்ததும் அதற்கு ஆக்கமும் ஊக்கமும் உதவியும் செய்த அவனுக்கும், துணை நின்ற என் வாழ்க்கைத் துணைவியார் சந்திராவுக்கும் நான் கட்டாயமாக நன்றி சொல்லமாட்டேன். ஏனெனில் அது அவர்களின் பங்களிப்பு.

இப்புத்தகத்தினை, அதன்வழி என் நினைவுகளை, முன்னாள், இந்நாள், வரும்நாள் என் சக வருவாய்த்துறை சகோதர, சகோதரிகளுக்கு சமர்ப்பிக்கிறேன்.

நன்றி, வணக்கம்.