1
நான் சிகரெட் பேசுகிறேன். என்னை வெல்ல வேண்டும் என்று நினைக்கும் உங்களுக்கு ஒரு பெரிய சல்யூட்! நன்றாகக் கேட்டுக்கொள்ளுங்கள், என்னை வெல்வது அவ்வளவு சுலபம் அல்ல! அதற்கு நீங்கள் என்னை பற்றியும், என் பலம், பலவீனம் பற்றியும் புரிந்து வைத்திருக்க வேண்டும். இதோ நானே சொல்கிறேன், என்னை பற்றி! தெரிந்து கொண்டு, புரிந்து கொண்டு என்னை வெல்ல நானே உதவுகிறேன்.
யாராவது தன்னை வெல்லத் தன் எதிரிக்குத் தன்னைப்பற்றி தானே சொல்லிக்கொடுப்பார்களா என்ன? ஏன் நீ அவ்வாறு செய்கிறாய் என நீங்கள் என்னிடம் கேட்கலாம். இதோ சொல்கிறேன் அதற்கான பதிலை! 1964-க்கு முன் உலகத்தில் பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது நான் ஓர் உயிர்க்கொல்லி என்று, எனக்கும் தான்! 1964-ம் ஆண்டு அமெரிக்கச் சர்ஜன் ஜெனரல் என் தந்தையான புகையிலையைப் பற்றிய ஆய்வறிக்கையை வெளியிட்ட பின்பு தான் என்னை பற்றி எல்லோருக்கும் பரவலாய் தெரியவந்தது. சமீபத்திய புள்ளி விபரப்படி, நானும் என் சகோதரர்களான மற்ற புகையிலை பொருட்களும் இந்தியாவில் மட்டும், ஒரு வருடத்திற்குக் கிட்டத்தட்ட 10 லட்சம் உயிர்களைக் காவு வாங்குகிறோம். ஒரு நாளைக்குச் சராசரியாக 2500 பேராம். இவ்வளவு பேர் என்னால் கொல்லப்பட்டால் உங்கள் இந்திய நாடு டாக்டர் அப்துல் கலாம் ஆசைப்படி எப்படி வல்லரசாகும்? நடிகர் சந்தானம் சொல்வது போல் டல்லரசாகத்தான் ஆகும்.
சரி, அதை விடுங்கள்! நான் ஏன் உங்களுக்கு என்னை விட்டுவிட உதவி புரிகிறேன் என்று சொல்கிறேன். 1964-ஆம் ஆண்டில் ஓர் உயிர்க்கொல்லி எனத் தெரிய வந்தவுடன், எனக்கே ஒரு குற்ற உணர்வு ஏற்பட்டுவிட்டது. அந்த வருடம் முதல் நானே இந்த உலகத்தை விட்டே போய் விடலாம் என எண்ணிக் கொண்டிருக்கிறேன் ஆனால் இந்த உலக மக்களான நீங்கள்தான் என்னை விட மாட்டேன் என்கிறீர்கள். அதனால் வேறு வழியில்லாமல், என்னை வெல்ல நானே உங்களுக்கு உதவி புரிந்து இந்த உலகத்தை விட்டு முற்றிலுமாக ஒழிந்து போய் விடலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.
என் முடிவின் முதல் பகுதியாக தமிழில் உங்களுடன் பேசி தமிழ்நாட்டை விட்டு ஒழிந்து போக வந்திருக்கிறேன். மற்ற இந்திய மொழிகளும், இந்திய ஆங்கிலமும் தெரிந்தவர்கள் எனக்கு உதவி புரிந்தீர்களானால், அந்தந்த மொழிகளிலும் நான் பேசி, இந்தியர்கள் அனைவருக்கும் உதவி செய்து மொத்தமாக இந்தியாவை விட்டே சென்று விடுவேன். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக மற்ற நாடுகளுக்கும் சென்று என்னைப் பற்றி சொல்லி ஒரேடியாக ஒடிப்போய் விடுவேன்.
ஒரு முக்கியமான விஷயம், இவ்வாறு என்னை பற்றி நானே சொல்வதால், அவற்றை வைத்துக்கொண்டு என்னை எளிதில் வென்று விடலாம் என்று மட்டும் நினைக்காதீர்கள். நான் சாதாரணமாகத் தோற்றுப்போக மாட்டேன். உண்மையிலேயே நீங்கள் வீரராக இருந்து, விடா முயற்சியுடன் என்னுடன் போராடினால், உங்களிடம் நான் பெருமையாகத் தோற்றுப்போவேன். மாறாக நீங்கள் முயற்சியைக் கைவிட்டீர்களானால், என் அடிமையாகத் தொடர்ந்து இருப்பீர்கள். என்ன சரிதானே?
பார்க்கலாமா! நீங்களா நானா என்று!