18
கையில் ஸ்டைல் -ஆக வைத்திருப்பது, பற்ற வைப்பது, உள்ளே இழுப்பது, புகை விடுவது போன்ற என்னை பயன்படுத்தும் செயல்களை இரசித்து செய்கிறேன் என்று நீங்கள் சொன்னால், ஒரு பேனாவையோ அல்லது சிகரெட் போல இருக்கும் கீ செயினையோ வாங்கி எப்போதும் உங்கள் கைகளில் வைத்துக் கொண்டு, என்னை பயன்படுத்தும் போது என்னவெல்லாம் செய்வீர்களோ அவை அனைத்தையும் செய்யுங்கள். உங்கள் மனதை ஏமாற்றுங்கள். கொஞ்ச நாட்களுக்கு பிறகு, அந்த கீச்செயினோ அல்லது பேனாவோ உங்களுக்கு தேவைப்படாமல் போய்விடும்.
ஆனால் உண்மை என்னவெனில் நீங்கள் சிகரெட்டை ஸ்டைல் என நினைப்பது உங்கள் உடல்/ மன நலனையும், சமூக அந்தஸ்தையும் எந்த வகையிலும் கூட்டாது. குறைக்கவே செய்யும். ஆகவே சிகரெட் ஸ்டைல் தருகிறது என்ற எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். சிகரெட் வாங்கும் பணத்தை சேமித்து நல்ல ஸ்டைலான ஆடைகள் எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு கூலிங் கிளாஸ், ஷூ, வாட்ச் போன்றவற்றை கூட வாங்கிக்கொள்ளுங்கள். என்னை வைத்து ஸ்டைல் செய்த சூப்பர் ஸ்டார் அவர்களின் சோகக்கதையை ஞாபகப்படுத்திப் பாருங்கள்.
நிறைய சினிமாக்காரர்கள் விளம்பரத்திற்காக ஸ்டைலாக சிகரெட் பிடிக்கிறார்கள். உங்களை கவருகிறார்கள். அவர்கள் சினிமாவில் செய்வதெல்லாம் உங்கள் வாழ்வில் நடப்பதில்லை. ஆகவே உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழ உங்களுக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டு என்னை விட்டொழிப்பதே உண்மையான ஸ்டைல் என்பதை உணருங்கள்.