"

12

அடிமைப்பழக்க பரிமாணத்தில் உங்கள் மதிப்பெண் 50க்கு மேல் இருந்தால், எனக்கு நீங்கள் அடிமை ஆகி இருக்கிறீர்கள் என்று அர்த்தம். உங்களுக்கு நான் அளிக்கப்போகும் ஆலோசனையோடு, முதலில் மன நல மருந்துகளோ அல்லது 4 மில்லி கிராம் நிக்கோடின் ச்சூயிங் கம்மோ என்னை வெல்லத் தேவைப்படும். என்னை நீங்கள் பயன்படுத்துவது உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை எனவே உங்களை மன நல மருத்துவரிடமும், உளவியல் ஆலோசகரிடமும் ஒப்படைத்து விடுங்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று அவர்கள் கூறக் கூற, அவற்றைத் தொடர்ந்து சின்சியராக செய்து வாருங்கள். நிச்சயம் என்னை வென்று விட முடியும்.

மன நல மருந்துகள் என்றால் கவலை கொள்ள வேண்டாம். இப்போது தரப்படும் மன நல மருந்துகள் பாதுகாப்பானவை. உங்களுக்கு அதிகம் தூக்கம் வரவெல்லாம் செய்யாது. பக்க விளைவுகள் பற்றி பெரிதாகக் கவலை கொள்ளத் தேவையில்லை. இன்று சந்தையில் இருக்கும் எல்லா மன நல மருந்துகளும் முறையாக ஆராய்ச்சி செய்யப்பட்டு, பயனுள்ளவை என நிரூபிக்கப்பட்ட பிறகே பயன்பாட்டுக்கு வருகின்றன.

ஆகவே மனநல மருத்துவரைச் சந்தித்து உங்கள் பிரச்சனையைக் கூறுங்கள். உங்களுக்கு 4 மில்லி கிராம் நிக்கோட்டின் ச்சூயிங் கம் வேண்டுமா அல்லது மன நல மருந்துகள் வேண்டுமா அல்லது இரண்டும் வேண்டுமா என அவர் உங்களின் உடல், மன நிலையை ஆய்வு செய்து முடிவெடுப்பார்.

உங்களுக்கு அருகிலுள்ள மன நல மருத்துவரைச் சந்தியுங்கள், அல்லது பிற சேர்க்கைப் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள சிகிச்சை மையங்களை அணுகுங்கள்.

ஒரு வேளை மருத்துவர் உங்களுக்கு 4 மில்லி கிராம் நிக்கோட்டின் ச்சூயிங் கம்மை பயன்படுத்த பரிந்துரைத்தாரானால், அவரின் பரிந்துரை சீட்டை காண்பித்து மட்டுமே அவற்றை நீங்கள் வாங்க முடியும். நீங்களாக சென்று 4 மில்லி கிராம் நிக்கோட்டின் ச்சூயிங் கம்மை மருந்து கடைகளில் வாங்க கூடாது. ஏனெனில் இந்த ச்சூயிங் கம்மை பயன்படுத்த சில முன் நிபந்தனைகள் உண்டு, எனவே அந்த முன் நிபந்தனைகளை ஆராய்ந்து, உங்கள் உடல் ஒத்துழைக்குமா என பார்த்தே மருத்துவர் இந்த ச்சூயிங் கம்மை வாங்கச் சொல்லி பரிந்துரைப்பார்.

இந்த நிக்கோட்டின் ச்சூயிங் கம் நிக்கோரைட், நிக்கோகம் வெவ்வேறு விதமான பிராண்ட் (Brand) பெயர்களில் கிடைக்கின்றன. சராசரியாக ஒரு ச்சூயிங் கம்மின் விலை ரூ.5 மட்டுமே. கிட்டத்தட்ட நீங்கள் என்னை வாங்க பயன்படுத்தும் அதே விலைதான்! ஒரு பாக்கெட்டில் 4 அல்லது 10 ச்சூயிங் கம் இருக்குமாறு கிடைக்கின்றன. சிகரெட் பயன்படுத்தி அதனை விட நினைப்பவர்களுக்கு, மின்ட் (Mint) சுவையிலும் – அதாங்க சூட மிட்டாய் சுவை, மெல்லும் வகை புகையிலைப் பொருட்களை பயன்படுத்தி விட நினைப்பவர்களுக்கு குட்கா சுவையிலும் கிடைக்கின்றன.

பலர் இந்த நிக்கோட்டின் ச்சூயிங் கம்மை அப்படியே சாதாரண ச்சூயிங் கம் போலக் கடித்து மென்று, வாய் முழுக்கக் காரம் சார்ந்து எரிச்சல் ஏற்பட்டு மீண்டும் என்னிடமே வந்து சரணடைந்து விடுகிறார்கள். ஆகவே நீங்களும் இந்த ச்சூயிங் கம்மை வழக்கம் போல மென்றீர்களானால் உங்களுக்கும் அப்படிதான் வாய்/தொண்டை எரிச்சல் ஏற்படும்.

நிக்கோட்டின் ச்சூயிங் கம் பாக்கெட்டிலேயே ஒரு வழிமுறை கேயேடு கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் அவற்றை யாருமே படிப்பதில்லை. அதில் கொடுக்கப்பட்டிருக்கும் வழிமுறையை சரியாக பின்பற்றினால், நீங்கள் என்னை வெல்லும் வாய்ப்பு 50% உயருகிறது என பலவிதமான அறிவியல் ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆகவே நிக்கோட்டின் ச்சூயிங் கம்மை எப்படி மெல்ல வேண்டும் என்கிற வழிமுறை இதோ!

  1. பல் இடுக்கில் வைத்து, கடித்து, மிக மிக மெதுவாக மெல்ல வேண்டும்.
  2. கொஞ்ச நேரத்திற்கு மின்ட் சுவை வந்து கொண்டிருக்கும். ஒரு குறிப்பிட்ட சமயத்தில், காரமான ஒரு சுவை உங்கள் நாக்கில் தோன்றும், அப்போது மெல்லுவதை உடனடியாக நிறுத்திவிட்டு, வாய்ச்சுவரின் பக்கம் நிறுத்தி வைக்க வேண்டும்.
  3. கொஞ்சம் கொஞ்சமாக நிக்கோடின் உங்கள் வாயின் உட்புறத்திலேயே, உமிழ் நீர் சுரப்பிகளுக்கான துளைகளில் உறிஞ்சப்பட்டு, நேரடியாக இரத்த ஓட்டத்தில் கலந்து, நீங்கள் புகையிலை பொருளைப் பயன்படுத்தும் போது, என்ன மாதிரி இருக்குமோ அதே உணர்வை உருவாக்குகிறது. கொஞ்சம் மெதுவாகதான் இது நடக்கும். அதனால் உடனே போதை வர வேண்டுமென்று எதிர்பார்க்க வேண்டாம்.
  4. போதை குறைந்தவுடன், மீண்டும் மெதுவாக அதனை மெல்லலாம், காரச் சுவை வந்தவுடன் நிறுத்தி விடலாம். இவ்வாறு ஒரு ச்சூயிங் கம்மில் 3 – 4 முறை செய்யலாம்.

அப்புறம் மிக முக்கியமான விஷயம், இந்த ச்சூயிங் கம்மை பயன்படுத்தும் போது, என்னை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அப்படி பயன்படுத்துவது உங்களுக்கு கிடைக்கும் நிக்கோட்டின் அளவினை அதிகப்படுத்தும், என்னை விட்டுவிட வேண்டும் என்ற முயற்சிக்கு பலனில்லாமல் போய்விடலாம்.

அதே போல் இந்த ச்சூயிங் கம்மையும் ஒரே அளவில் பயன்படுத்தி வரக்கூடாது. படிப்படியாகக் குறைத்து, கடைசியாக குறிப்பிட்ட நாளில் நிறுத்தி விட வேண்டும். எப்போது இந்த ச்சூயிங் கம்மை சாப்பிட வேண்டும், எப்படி படிப்படியாக குறைக்க வேண்டும், கடைசியாக எந்த நாளில் முழுவதுமாக நிறுத்தி விட வேண்டும் என்பதையெல்லாம் பற்றி உங்கள் மருத்துவரோடு ஆலோசித்து முடிவெடுத்து சிகிச்சையைத் தொடங்குங்கள்.

ஆகவே இந்தச் சிகிச்சை உங்கள் பழக்கத்தை நிறுத்தும் முயற்சியை எளிதாக்குமே தவிர, மேஜிக் செய்து நிறுத்தச் செய்யாது. இந்தப் ச்சூயிங் கம் சிகிச்சையை Nicotine Replacement Therapy (NRT) என்று கூறுகிறோம். முள்ளை முள்ளால் எடுப்பது போல, இந்தச் சிகிச்சை வேலை பார்க்கிறது. நிக்கோட்டினுக்கு அடிமையான உடலுக்கும், மனதுக்கும் சிகரெட்டில் உள்ள வேறு எந்த ஒரு விஷத்தன்மை உள்ள பொருட்களும் இல்லாது நிக்கோட்டினை மட்டும் தருவது தான் இதற்குப் பின்னால் உள்ள தத்துவம்.

மன நல மருந்துகள் அளிக்கப்பட்டால், அந்தக் குறிப்பிட்ட மருந்துகளைப் பரிந்துரைக்கப்பட்ட கால இடைவெளிகளில் முறையாக சாப்பிட்டு வாருங்கள். நீங்களாக மருந்தைக் குறைப்பது, விட்டு விட்டு சாப்பிடுவது, ஒரேடியாக நிறுத்திவிடுவது போன்றவற்றை, மருத்துவரின் அறிவுறுத்துதல் இல்லாமல் அறவே செய்யக்கூடாது.

மன நல மருந்துகள் சரியாக வேலை செய்கிறதா என்று பார்க்க, கொஞ்ச நாட்கள் தேவை. எனவே மன நல மருத்துவர் குறிப்பிட்ட காலம் கழித்து அவரை வந்து பார்க்கச் சொல்வார். ஒரு வேளை எதிர்பார்த்த அளவுக்கு, மருந்து வேலை செய்யவில்லை எனில், மருந்தின் அளவையோ அல்லது வேறு ஒரு மருந்தையோ உங்கள் வயது, உடல் நலம் போன்றவற்றை மனதில் வைத்துப் பரிந்துரைப்பார். மருந்து சாப்பிட்டுச் சரியாகி வரும் போது, கொஞ்சம் கொஞ்சமாக மருந்தின் அளவை குறைத்து நிறுத்தச் சொல்வார்.

எனக்கு அடிமையாவது என்பது ஓர் உளவியல் பூர்வமான பிரச்சனை. ஆகவே மனநல மருந்துகள்/ 4 மில்லி கிராம் நிக்கோட்டின் ச்சூயிங் கம்-உடன் சேர்த்து உளவியல் ஆலோசனைகளையும் தொடர்ந்து பெற்றுவருவது அவசியம். உளவியல் ஆலோசனைகளுக்காக தனியாக உளவியல் ஆலோசகரையும் நீங்கள் சந்திக்கலாம்.

இதற்கு நான் அடுத்து சொல்லப்போகும் ஆலோசனைகளையும், மூட நம்பிக்கை பழக்கம், கையாளும் பழக்கம், சமாளிப்புத் திறன் பழக்கம், சூழ்நிலைப் பழக்கம் ஆகியவற்றிற்கு நான் தனித்தனியாக அளிக்கப்போகும் ஆலோசனைகளையும் செயல்படுத்தி வாருங்கள். ஏனெனில் அடிமைப்பழக்க பரிமாணம் மட்டும் தனியாக இருக்காது, மற்ற பழக்க பரிமாணங்களுடன் சேர்த்தே அடிமைப்பழக்க பரிமாணம் உருவாகி இருக்கும். ஆகவே உங்கள் பழக்க பரிமாணங்களுக்கு பொருத்தமான ஆலோசனைகளை கடைபிடித்து வந்தீர்களானால், சில தடவைகளில் நான் வெற்றிபெற்றாலும், விடாமுயற்சியுடன் என்னுடன் போராடும் நீங்களே வெற்றி வாகை சூடுவீர்கள்!

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

புகைப் பிடிப்பதை விட்டுவிடுவது சாத்தியமே! Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.