13
என்னை நிறுத்த வேண்டும் என்றால் அது கொஞ்சம் கடினம் என்று நானே சொல்லிவிட்டேன். உங்களுக்கு அது எளிது என்று பட்டால் நான் ஒன்றும் சொல்லமாட்டேன். எது எப்படி இருந்தாலும், என்னை விட்டுவிட நீங்கள் ‘பிளா…ன்” பண்ண வேண்டும்.
என்னை நிறுத்த ஒரு நாளை குறித்துக்கொள்ளுங்கள். சுஜாதா செய்தது போல ஒரு நல்ல நாளுக்காகக் காத்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஒரு மிகப்பெரிய நல்ல காரியத்தைச் செய்யப்போகிறீர்கள்! ஆகவே அந்தக் குறிப்பிட்ட நாள் நல்ல நாளே! இன்றிலிருந்து குறைந்தபட்சம் 10 நாட்கள், அதிகப் பட்சம் 15 நாட்களுக்குள் அந்த நல்ல நாளை குறியுங்கள்.
என்னை விட்டு விட உங்களைத் தயார்படுத்த இந்த 10-15 நாட்கள் மிகவும் உதவியாய் இருக்கும். கிரிக்கெட் வீரர்கள், போட்டி நடக்கப் போகும் இடத்திற்கு 1 வாரம் வரை முன்னரே சென்று வலைப்பயிற்சியில் ஈடுபட்டுத் தங்களை முறையாகத் தயார்படுத்திக் கொள்வார்கள் அல்லவா? அது போலத்தான்! அந்த 10-15 நாட்களில் என்னை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க முயற்சி செய்யலாம்.
அந்தக் குறிப்பிட்ட நாளில் நீங்கள் என்னை விட்டொழிக்கப்போகும் விஷயத்தை உங்களுக்குத் தெரிந்த அனைவருக்கும், என்னை விட்டு விட வேண்டும் என்று முடிவு செய்த அதே நாளில் தெரியப்படுத்துங்கள். ஒருவரையும் விட வேண்டாம். உடன் வேலை பார்ப்பவர், நண்பர்கள், அக்கம் பக்கத்தினர், சொந்தக்காரர்கள், பங்காளிகள், குடும்பத்தினர், மிக முக்கியமாக உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் என நீங்கள் சந்திக்கும் எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள். மேலும் நீங்கள் என்னை வாங்கும் கடைக்காரர்கள். அப்போது தான் நீங்கள் வரும் போது, அவர்களாகவே என்னை எடுத்து உங்கள் முன் வைக்கமாட்டார்கள். ஃபேஸ் புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் அக்கவுண்ட் வைத்திருந்தீர்களானால், ஸ்டேட்டஸ் மெசேஜ்-ஆக இதனை அப்டேட் செய்யுங்கள். வாழ்த்தாக பல ‘கமெண்ட்டுகள்’ வந்து குவிவதை கண் கூடாக பார்ப்பீர்கள். யாராவது உங்களால், அதெல்லாம் முடியாது என்று கமெண்ட் போட்டார்களானால், அவர்களுக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம். நீங்கள் என்னை முழுவதுமாக நிறுத்திய பின்னர் அவர்களே உங்களை புரிந்து கொள்வார்கள்.
ஏன் உங்களைத் தெரிவிக்கச் சொல்கிறேன் என்றால், அதற்குக் காரணங்கள்
1. உங்களை ஊக்குவித்து, உங்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க
2. ஒரு வேளை சொல்லிய நாளில் நீங்கள் என்னை நிறுத்தாமல் போனால், உங்களைப் பொறுப்புணர்வோடு கேள்வி கேட்க, இப்படி ஏதாவது ஒன்றை அவர்கள் செய்ய – நல்லதொரு குடும்பத்தில் இரண்டு நாட்கள் மனைவி, குழந்தைகள், தாத்தா, பாட்டி, நாய்க்குட்டி என எல்லோரும் சாப்பிடாமல் இருந்து அந்தக் குடும்பத் தலைவரை என்னிடமிருந்து மீட்டு சென்றுவிட்டார்கள். வேறு ஒரு குடும்பத்தில், குடும்பத்தலைவரின் செல்லப் பெண் தனது அப்பாவிடம் தொடர்ந்து 10 நாட்கள் பேசாமல் இருந்து, அவரை என்னை விட்டொழிக்க செய்து விட்டாள்.
நீங்கள் என்னை பயன்படுத்தும் நேரங்களை ஒரு அட்டவணையாக எழுதுங்கள். அந்த நேரங்களில் என்னைப் பயன்படுத்தாமல் இருப்பது எப்படி என்பதற்கான உங்களுக்கு பொருந்தும் திட்டங்களையும், பின்வரும் பகுதிகளில் படித்து அந்த அட்டவணையில் எழுதுங்கள். எடுத்துக்காட்டாக ஒருவர் தினமும் சராசரியாக என்னை 10 முறை பயன்படுத்துகிறார் என்றால்,
வரிசை எண் |
நேரம் |
பயன்படுத்தாமல் இருப்பதற்கான திட்டம் 1 |
பயன்படுத்தாமல் இருப்பதற்கான திட்டம் 2 |
1 |
காலை 6 மணி/கழிப்பிடம் போகும் போது | ||
2 |
காலை 9 மணி/அலுவலத்திற்கு செல்லும் வழியில் | ||
3 |
காலை 11 மணி/ இடைவேளையின் போது உடன் வேலைபார்ப்பவர்களுடன் | ||
4 |
மதியம் 1 மணி/ சாப்பாட்டுக்கு பின் | ||
5 |
மதியம் 3.30 மணி/ இடைவேளையின் போது உடன் வேலைபார்ப்பவர்களுடன் | ||
6 |
டென்ஷனாக இருந்தால் | ||
7 |
நண்பனை பார்த்துவிட்டால் | ||
8 |
மாலை 6 மணிக்கு டீயுடன் சேர்த்து | ||
9 |
பஸ் வரவில்லை/’போர்’ அடிக்கிறது என்றால் | ||
10 |
துங்கப் போகும் முன்/11 மணிக்கு |