25
என்னை விட்டு விட்ட பிறகும் கூட, ஒவ்வொரு நாளும் என்னால் நீங்கள் அவ்வபோது ஈர்க்கப்படலாம். நான்தான் எங்கும் நிறைந்திருக்கிறேனே! நீங்கள் டீக்கடைக்கு சென்றாலும், மளிகை கடைக்கு சென்றாலும், பெட்டிக்கடைக்கு சென்றாலும், சூப்பர் மார்க்கெட்-க்கு சென்றாலும் அங்கு உங்களைப் பார்த்து பல் இளித்துக் கொண்டு இருப்பேன். உங்களை “வா! வா” என்று வாஞ்சையுடன் கூப்பிடுவேன்.
அப்புறம் என்ன! என்னை நீங்கள் வாங்கி, உங்கள் வாயில் ஒரு முறை வைத்துவிட்டால் போதும்! சுஜாதா சொன்னது போல், மீண்டும் பழைய மாதிரி எனக்கு உங்களை அடிமையாக்கி, பழைய கோட்டாவுக்கு வர வைத்துவிடுவேன். பிறகு எல்லாவற்றையும் முதலிலிருந்து தொடங்கவேண்டியதுதான்!
ஆகவே நிக்கோடின் அனானிமஸ் ஆதரவு குழுக்களில் சொல்வது போல் ஒவ்வொரு நாளும், காலையில் எழுந்ததும், “இன்று ஒரு நாள் மட்டும் சிகரெட்டைத் தொடமாட்டேன்” என்று சங்கல்பம் செய்து கொண்டு அன்றைய நாளை தொடங்குங்கள். இவ்வாறு சொல்வதை உங்கள் மூச்சு நிற்கும் வரை ஒவ்வொரு நாளும் தவறாமல் செய்து வாருங்கள்.
என்னை முழுவதுமாக வாழ்க்கை முழுவதும் பயன்படுத்தாமல் இருக்க,
1. நீங்கள் மட்டும் என்னிடம் இருந்து தப்பித்தால் போதுமா? உங்கள் அனுபவத்தையும், அறிவையும் பயன்படுத்தி என்னை விட்டுவிட முயல்பவர்களுக்கு உதவி செய்யுங்கள்.
யாரையும் என்னை விட்டுவிட வேண்டுமென்று கட்டாயப்படுத்தாதீர்கள். அந்தக் குறிப்பிட்ட நபர் எந்த நடத்தை மாற்ற நிலையில் இருக்கிறார் என்பதை அறிந்து அதற்கேற்றவாறு ஆலோசனைகள் சொல்லுங்கள். எடுத்துக்காட்டாக என்னை விட வேண்டுமென்ற நினைப்பே இல்லாத ஒருவர் சிந்தனைக்கு முந்தைய நிலையில் இருக்கிறார் என்றால், அவரிடம் போய் என்னை விட்டுவிடுவதற்கான வழிமுறைகளைப் பற்றி சொல்லக்கூடாது. அவருக்குத் தேவை, என்னை ஏன் விட்டுவிட வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளே! அவற்றை மட்டும் அளியுங்கள். யாரும் யாரையும் மாற்ற முடியாது. யாராவது மாற வேண்டும் என நினைத்தால் மட்டுமே, தன்னைத் தானே மாற்றம் செய்து கொள்வதற்கு நீங்கள் உதவ முடியும். நீங்கள் என்னை விட்டுவிட வேண்டும் என நினைத்தீர்கள், நான் உங்களுக்கு உதவி செய்தேன். நீங்கள் எனது உதவியை பயன்படுத்திக்கொண்டீர்கள். உதவி கேட்பவர்கள் மட்டுமே உங்களது உதவியின் மகத்துவம் அறிந்து அவற்றை பெற்றுக்கொள்வார்கள். ஆகவே உதவி கேட்காதவர்களிடம் வலியச் சென்று உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்காதீர்கள்.
2. பள்ளி, கல்லூரிகள், வேலையிடங்களுக்குச் சென்று நான் ஒரு கொடிய அரக்கன் என்பதைப் பவர் பாயிண்ட் ஸ்லைட் (Power Point Slide) / அட்டைப் படங்களை காண்பித்து, என்னால் பாதிக்கபட்டவர்களின் சோகக் கதைகளைச் சொல்லி தெரியப்படுத்துங்கள்.
3. ஆதரவுக் குழுக்களில் உங்கள் வெற்றியைப் பதிவு செய்து, என்னை விட்டு விட துடிக்கும் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருங்கள். என்னை விட்டுவிட்ட பிறகும், நீங்கள் ஆதரவுக்குழுக்களுக்கு தொடர்ந்து செல்வது, நீங்கள் என்னை மீண்டும் சீண்டாமல் இருக்க பெரிதும் உதவி புரியும். ஆதரவுக்குழுக்களுக்கு தொடர்ந்து செல்லும் பலரும் என்னை தொட்டுவிடாமல் இருப்பதற்காகவே அங்கு செல்கிறார்கள்.
4. தொடர்ந்து ஜேக்கப்ஸன் ரிலாக்சேஷன் பயிற்சியையும் ஏதோ ஒரு உடற்பயிற்சியை தினசரி செய்து வாருங்கள். உங்கள் தன்மதீப்பிட்டை கூட்டிக்கொள்ளும் வகையில் தொடர்ந்து செயல்படுங்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்விலும், சமூக வாழ்விலும் முன்னேற்றங்கள் தொடர்ந்து நடக்கட்டும். ஒவ்வொரு நாளும் நீங்கள் வாழ்வில் முன்னேறவில்லை எனில் நீங்கள் இறந்து கொண்டிருக்கிறீர்கள் என்ற ஒரு உளவியல் கூற்று உண்டு. வாழ்வில் தாரக மந்திரமே முன்னேற்றம்தான். முன்னேற்றம்தான் உங்கள் வாழ்வை உயிர்ப்பிக்கிறது. ஆகவே தொடர்ந்து முன்னேறுங்கள்.
5. மனப்பிரச்சனைகள் உங்களை அண்டாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அப்படி ஏதாவது மனப்பிரச்சனைகள் ஏற்பட்டால், உடனே உளவியல் ஆலோசகர்களை சந்தியுங்கள். எந்த நிலையிலும் என்னைத் திரும்பவும் தொட்டுவிடாதீர்கள். அப்படி ஏதாவது நடந்து விட்டால், அதனை ஒரு கெட்ட கனவாக நினைத்து மறந்து விட்டு, குற்ற உணர்வு கொள்ளாமல் மீண்டும் என்னை விட்டுவிட தயார் செய்து கொண்டு, நிபுணர்களையோ அல்லது ஆதரவுக்குழு நண்பர்களையோ தொடர்பு கொள்ளுங்கள்.
6. உங்கள் தமிழ் நாடு முழுவதும் ஆதரவு குழுக்களை தொடங்கி. விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தி, என்னிடமிருந்து பலரை மீட்டு எடுத்துக்கொள்ளுங்கள். ஆதரவுக்குழுக்களை தொடங்குவதற்கான உதவி வேண்டுமானால், பிற்சேர்க்கை-4ல் கொடுக்கப்பட்டுள்ள ஆதரவுக்குழுக்களுக்கு சென்று அங்கு இருப்பவர்களை சந்தித்து உதவிபெற்றுக்கொள்ளுங்கள்.
இவ்வாறு நீங்கள் செய்யச் செய்ய, நான் உங்கள் தமிழ் நாட்டை விட்ட மெல்ல அகன்று காணாமல் போய் விடுவேன். தமிழ் நாட்டில் மட்டுமல்லாது, மற்ற இந்திய மொழிகளும், இந்திய ஆங்கிலமும் தெரிந்தவர்கள் எனக்கு உதவி புரிந்தீர்களானால், அந்தந்த மொழிகளிலும் பேசி, இந்தியர்கள் அனைவருக்கும் உதவி செய்து மொத்தமாக இந்தியாவை விட்டே சென்று விடுவேன். பார்க்கலாம் என்ன செய்கிறீர்கள் என்று!
உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி! ஆல் த பெஸ்ட்!