24
இப்போது சொன்னவற்றையெல்லாம் செய்தும், உங்களால் என்னை விட முடியாமல் போனால், இந்த புத்தகத்தை கையோடு எடுத்துக் கொண்டு, பிற்சேர்க்கை-2 ல் கொடுக்கப்பட்டுள்ள சிகிச்சை மையங்களையோ அல்லது உங்களுக்கு அருகில் இருக்கும் மன நல மருத்துவரையோ/ பல் மருத்துவரையோ/ பொது மருத்துவரையோ/ உளவியல் ஆலோசகரையோ உடனே சென்று பாருங்கள்.
அவ்வாறு நீங்கள் செல்லும் போது, நீங்கள் என்னை உங்களிடமிருந்து விரட்டி அடிக்க உங்களுக்கு உதவி செய்ய தயாராய் இருக்கும் ஒரு குடும்ப உறுப்பினரையோ அல்லது நண்பரையோ உடன் அழைத்துச் செல்லுங்கள்.
முந்தைய அத்யாயங்களில் கொடுக்கப்பட்டுள்ள வினா நிரலில் உங்களுக்கு கிடைத்த முடிவுகளை காண்பித்து எந்த வகையான பழக்க பரிமாணங்கள் உங்களுக்கு இருக்கின்றன, எந்த நடத்தை மாற்ற நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள் என்ற விபரங்களை உங்களுக்கு சிகிச்சை அளிப்பவருக்கு எடுத்துக் கூறுங்கள். இவற்றை அவர்களுக்கு கூறுவது உங்களுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்க உதவியாய் அவர்களுக்கு உதவியாய் இருக்கும்.
அடிக்கடி மருத்துவரை/உளவியல் ஆலோசகரை மாற்றாது, ஒரே மருத்துவரிடம்/உளவியல் ஆலோசகரிடம் நம்பிக்கையாக தொடர்ந்து சென்று, அவர் கூறும் ஆலோசனைகளை முறையாக கடைபிடித்து, மருந்துகளை உட்கொண்டு, ஆதரவுக் குழுக்களுக்கு சென்று வந்தீர்களானால் உங்களால் நிச்சயம் என்னை விட்டொழிக்க முடியும். வேண்டுமானால் ஒரு வாரத்திற்கு மருத்துமனையில் அட்மிட் ஆகி படுத்து நன்றாக ரெஸ்ட் எடுத்து என்னை பயன்படுத்தாமல் இருக்க உங்களை நீங்களே கட்டாயப்படுத்தி கொள்ளலாம்.
மருத்துவரிடம்/உளவியல் ஆலோசகரிடம் சென்றவுடனேயே, எல்லாம் சரியாகி விட வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். உங்களைப் பற்றி அவர்கள் புரிந்து கொள்ளவே குறைந்தபட்சம் 2 சந்திப்புகள் தேவைப்படும். அதற்கு பிறகு உங்களுக்கு பொருந்தும் சிகிச்சைகளை/உளவியல் ஆலோசனைகளை கண்டுபிடித்து கொடுத்து, அவை உங்களுக்கு சரியாக வேலை பார்க்கிறதா என பார்க்க இன்னும் 2 சந்திப்புகள் தேவைப்படும். ஆகவே 4-5 சந்திப்புகளுக்கு பின்னரே நீங்கள் உங்கள் நிலையில் ஒரு குறிப்பிட தகுந்த முன்னேற்றத்தை காண முடியும். அப்படி எதுவும் ஏற்படாமல் போனாலும், அவர்கள் மீதும், உங்கள் மீதும் நம்பிக்கை வைத்து தொடந்து சென்று அவர்களை சந்தித்து வாருங்கள்.
ஒரு வேளை உங்கள் மருத்துவரால், உங்களுக்கு தேவையான உளவியல் ஆலோசனைகளை கொடுக்க நேரமில்லாமல் போனால், மருந்துகளை மருத்துவரிடமிருந்தும், உளவியல் ஆலோசனையை ஒரு உளவியலாளரிடமிருந்தும் பெற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் என்னை நீங்கள் பற்றிக்கொண்டிருப்பது என்பது ஓர் உளவியல் பிரச்சனை. அதற்கு உளவியல் ஆலோசனைகள் இல்லாது, மருந்துகள் மட்டுமே உதவி செய்து விடாது. உளவியல் ஆலோசனை என்பது நீங்கள் என்னை விட்டுவிட மட்டுமல்லாது, உங்கள் தன்னம்பிக்கையை உயர்த்தவும், நீங்கள் செய்யும் வேலைகளை சிறப்பாக செய்யவும், உங்களின் மற்ற மனப் பிரச்சனைகளை சரி செய்து கொள்ளவும் மிகவும் உதவிகரமாய் இருக்கும்.
அவர்கள் கூறியவற்றை உங்களால் கடைபிடிக்க முடியாமல் போனாலோ அல்லது நீங்கள் கொடுத்த உறுதியை காப்பாற்ற முடியாமல் போனாலோ, அவர்களை மீண்டும் எப்படி சந்திப்பது என்றெல்லாம் யோசிக்காதீர்கள். குற்ற உணர்வு கொள்ளாதீர்கள். அவர்கள் உங்களுக்கு உதவவே இருக்கிறார்கள். உங்களை தவறாக நினைக்காது, உங்களுக்கு உதவும் மேம்பட்ட உளவியல்/மருத்துவ சிகிச்சைகளை உங்களுக்கு அளிப்பார்கள். நீங்கள் அவர்களை மீண்டும் சந்திக்க செல்லாமல் இருந்தால், நீங்கள் எனக்கு மீண்டும் அடிமையாகி என்னிடம் தோல்வி அடைவீர்கள். நீங்கள் ஒரு வீர்ர் என்பது எனக்குத் தெரியும். ஆகவே மனதைரியத்தை வரவழைத்துக் கொண்டு மீண்டும் அவர்களை சந்தித்து உதவி பெறுங்கள்.
மேலும் ஆதரவுக்குழு ஒன்றிற்கு அவ்வபோது சென்று வருவதும், என்னால் ஏற்படும் பிரச்சனைகளை நீங்கள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும், மற்றவர்கள் என்னை விட்டுவிட பயன்படுத்திய நுட்பங்களையும் தெரிந்துகொளவதும் உங்களுக்கு மிகவும் உதவிகரமாய் இருக்கும். ஆதரவுக்குழு எதுவும் உங்கள் அருகில் செயல்படவில்லை எனில் ஏற்கனவே சொன்னது போல் ஒன்றை நீங்களே தொடங்குங்கள். என்னை முழுவதுமாக விட்டுவிட்ட பிறகுதான் ஆதரவுக்குழு தொடங்க வேண்டும் என்று இல்லை. என்னை வெல்ல போராடிக்கொண்டிருப்பவர்கள் இணைந்துகூட ஆதரவுக்குழுக்களை உருவாக்கலாம்! நீங்களோ அல்லது உங்கள் குழுவில் உள்ள ஒருவரோ ஒரு நாள் இல்லை ஒரு நாள் நிச்சயம் வெற்றி பெற்று சரித்திரம் படைப்பீர்கள். அவ்வாறு வெற்றிபெறுவது உங்களுக்கு மட்டுமல்லாது உங்கள் குழுவில் உள்ள மற்றவர்களுக்கும் மிகப்பெரிய தெம்பினை அளிக்கும்.
நான் இங்கு சொல்லியுள்ள ஆலோசனைகள் மட்டுமே என்னை விட்டுவிடுவதற்கான ஆலோசனைகள் என்று இல்லை. ஆகவே உங்களுக்கு ஏற்ற ஆலோசனைகளைப் பற்றி நீங்களே சிந்திக்க தொடங்குங்கள். மருத்துவ சிகிச்சைக்கு/உளவியல் ஆலோசனைகளுக்கு மேற்பட்டு உங்களிடமிருந்து என்னை பிரிப்பதற்கான வழிமுறைகளை பற்றி சிந்தியுங்கள். நீங்கள், ஒரு ஆதரவுக்குழு நண்பர், ஒரு குடும்ப உறுப்பினர், என்னை விட்டொழிக்க உதவும் ஒரு நிபுணர் என்று நால்வர் ஒரு டீம் (Team) – ஆக இணைந்தால் என்னை விரட்டி அடிப்பதில் எளிதில் உங்களால் வெற்றிபெற முடியும் என பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன,
எத்தனை முறை தோல்வி அடைந்தாலும், சென்ற முயற்சியில் எதில் தவறு செய்தீர்கள் என ஆராய்ந்து அந்த தவறுகளை மீண்டும் செய்யாது முயற்சிகளை தொடருங்கள்! வெற்றி நிச்சயம்! வெற்றி அடையும் வரை உங்கள் முயற்சிகள் தொடரட்டும்! உங்கள் முயற்சிகளை நீங்கள் நிறுத்தாதவரை, தோல்விகள் தற்காலிகமானவையே!