26
சிகரெட் பற்றி பரவலாக உள்ள தவறான கருத்துக்கள்
- மென்த்தால் / ஃபில்டர் இருக்கும் / தரமான–விலையுயர்ந்த சிகரெட் பயன்படுத்தினால், நோய் எதுவும் வராது.
எல்லா வகை சிகரெட்டுகளிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான இரசயானக் கலவைகளே இருக்கின்றன. அறிவியல் பூர்வமாக செய்யப்பட்ட எந்த ஒரு ஆராய்ச்சியிலும் மென்த்தால்/ஃபில்டர் இருக்கும்/தரமான-விலையுயர்ந்த சிகரெட்டை பயன்படுத்துவதால் நோய்கள் ஏற்படுவது குறைகிறது என்றோ அல்லது எந்த தீமையும் ஏற்படாது எனவோ நீருபிக்கபடவில்லை. ஆகவே எந்த வகை சிகரெட்டை பயன்படுத்தினாலும் நோய்கள் ஏற்பட சமமான வாய்ப்பு உண்டு.
- சிகரெட் பழக்கத்தை கைவிட வேறு புகையிலை பொருட்களுக்கு மாறி விடலாம்.
சிகரெட்-ல் இருக்கும் அதே நிக்கோட்டின்தான் மற்ற புகையிலை பொருட்களிலும் உள்ளன. மற்ற புகையிலை பொருட்களிலும் நோய்களை ஏற்படுத்தும் பல விதமான நச்சு பொருட்கள் இருக்கின்றன. ஆகவே சிகரெட்டை விட்டுவிட்டு மற்ற புகையிலை பொருளுக்கு மாறுவது என்பது எந்த வகையிலும் பெரியதொரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
- ஆங்கில மருத்துவத்தில், சிகரெட் பழக்கத்தை உடனடியாய் நிறுத்த மருந்து ஒன்று உள்ளது. அதை எடுத்துக் கொண்டால், உளவியல் ஆலோசனை இல்லாமல் சிகரெட் பழக்கத்தை நிறுத்திவிடலாம்
சிகரெட் பழக்கம் என்பது ஓர் உளவியல் பூர்வமான பிரச்சனை. ஆகவே மனதை சரிபடுத்த உளவியல் ஆலோசனை என்பது மிக அவசியம். சிகரெட்டை விட முயற்சிப்பவர்களுக்கு உதவ சில ஆங்கில மருந்துகள் இருக்கின்றன. அவை உளவியல் ஆலோசனையோடு சேர்த்து தரப்படும் போது மட்டுமே சிறந்த பலனளிக்கின்றன.
- சித்த மருத்துவம் போன்ற பல மாற்று மருத்துவ சிகிச்சைகளில் சிகரெட் பற்றிய நினைப்பே வராமல் இருக்க மருந்துகள் தந்து அவற்றை சிகரெட் பிடிப்பவர்களுக்கு தெரியாமலேயே தந்து அவர்களை குணப்படுத்தலாம்.
இதுவரை அப்படி எந்த ஒரு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவ்வாறு சொல்லித்தரப்படும் மருந்துகளை பயன்படுத்தி உங்கள் அல்லது உங்கள் அன்புக்குரியவரின் உடலை பரிசோதனை சாலையாக்காதீர்கள். பணத்தை இழக்காதீர்கள்.
- சிகரெட் பிடிப்பதை ஒரேடியாக நிறுத்தக்கூடாது. அப்படி நிறுத்தினால் ஹார்ட் அட்டாக் ஏற்படலாம்.
சிகரெட் பிடிப்பதை ஒரேடியாக நிறுத்தலாம். உயிருக்கு பாதகம் ஏற்படும் வகையில் நிச்சயம் எதுவும் நடந்து விடாது. லேசான தலைவலி, எரிச்சல், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். அவையும் சில வாரங்களுக்கு மேல் நீடிக்காது. சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் நோய்கள் வந்து நீங்கள் அவஸ்தை படுவதை விட இந்த பிரச்சனைகள் எவ்வளவோ மேல்! அவசியமானால், ஒரு பொது மருத்துவரை சந்தித்து, அறிகுறிகளுக்கு ஏற்ப சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்.
- கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து நிறுத்துவதே சிகரெட்டை நிறுத்த சிறந்த வழி.
ஒரேடியாய் நிறுத்துவதே சிகரெட்டை நிறுத்த சிறந்த வழியாகும் என்பது பல ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அடிமைப்படுத்தும் சக்தி அதிகம் கொண்டுள்ள பொருட்களுள் ஒன்றான நிக்கோட்டின் என்ற இரசாயனம் சிகரெட்டில் இருப்பதால், கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து நிறுத்துவது பலருக்கு சாத்தியமில்லை. மிக விரைவில் தோல்வி அடைந்து விடவே வாய்ப்புகள் அதிகம்.
- எலக்ட்ரானிக் சிகரெட்–ஐ பயன்படுத்தி சிகரெட் பழக்கத்தை விட்டுவிட முடியும்.
எலக்ட்ரானிக் சிகரெட்-ஐ சிகரெட் பழக்கத்தை விட்டுவிட உதவும் ஒரு கருவியாக இந்திய மருத்துவ கவுன்சில் உட்பட எந்த நாட்டு மருத்துவ கவுன்சில்களும் அங்கீகரிக்கவில்லை.
- எப்போவதாவதோ அல்லது ஒரு நாளைக்கு ஒன்றிரண்டு சிகரெட்டுகள் பயன்படுத்தினாலோ எந்த நோயும் வராது.
சிகரெட்-ன் எண்ணிக்கைக்கும் அல்லது பயன்படுத்தப்படும் கால அளவுக்கும் நோய்களின் தன்மைக்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது. அவரவர் ஜீன்களுக்கு ஏற்ப, சிகரெட்டை பயன்படுத்துபவர்களுக்கு நோய்கள் ஏற்படுகின்றன. எந்த வகை ஜீன்கள் புற்றுநோய்களையும், மற்ற நோய்களையும் உண்டாக்குகின்றன என்று ஓரளவுக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. தங்கள் உடலில் அந்த குறிப்பிட்ட வகை ஜீன்கள் இருக்கின்றவா என்று யாரும் கண்டுபிடித்தபின் சிகரெட் பழக்கத்தை தொடங்குவதில்லை. ஆகவே சிகரெட் பழக்கத்தை தொடங்காமல் இருப்பதே நல்லது. விவரம் தெரியாமல் தொடங்கி விட்டால், உடனடியாக விட்டு விடுவதன் மூலம் நோய்கள் ஏற்படும் வாய்ப்புகளை குறைக்கலாம்.
- பல வருடங்கள் சிகரெட் பயன்படுத்திய பிறகு, வயதான காலத்தில் சிகரெட் பிடிப்பதை நிறுத்துவதால் எந்த பயனும் இல்லை.
இல்லை. எந்த வயதில் சிகரெட் பழக்கத்தை கைவிட்டாலும், நிச்சயமாக பல நன்மைகள் உண்டு. ஆகவே எந்த வயதாய் இருந்தாலும், அதையெல்லாம் மனதில் கொள்ளாது, உடனடியாக, ஒரேடியாக சிகரெட் பழக்கத்தை நிறுத்துங்கள்.
- என் தாத்தா கடுமையாக உழைத்தார். வாழ் நாள் முழுவதும், இறக்கும் வரை புகை பிடித்தார். அவருக்கு எதுவுமே ஆகவில்லை. எந்த நோயும் வரவில்லை
சிகரெட் பயன்படுத்துவதால் ஏற்படும் நோய்கள் ஒரே நாளில் திடீரென ஏற்படுபவை இல்லை. சில பல ஆண்டுகள் படிப்படியாக உடல் பாதிக்கப்பட்டு, பின்னரே நோய்கள் வெளியில் தெரியவருகின்றன. நோய்கள் எதுவும் வெளிப்படவில்லை என்றாலும் கூட, சிகரெட் பிடிப்பவரின் செயல்திறனை, வாழ்க்கைத் தரத்தை சிகரெட் குறைத்து விடுகிறது. ஆகவே உங்கள் தாத்தாவுக்கு நோய்கள் வெளிப்படாமல் இருந்திருக்கலாம், ஆனால் அவர் சிகரெட் பழக்கத்தால் ஏதோ ஒரு வகையில் நிச்சயம் பாதிக்கப்பட்டிருப்பார். அவர் சிகரெட்டுடன் சம்பந்தப்பட்ட கிட்டத்தட்ட 55 நோய்களில் ஏதாவது ஒரு நோயால் பாதிக்கப்பட்டு இறந்திருக்கலாம் அல்லது அவர் இன்னும் கொஞ்ச நாள் உயிரோடு இருப்பதை தடுத்து சிகரெட் அவரின் ஆயுட்காலத்தை குறைத்திருக்க வேண்டும்.
- சிகரெட் பிடிப்பதால் கேன்சர் எனப்படும் புற்றுநோய் மட்டுமே ஏற்படும்.
சிகரெட் பிடிப்பதால் வாய் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், குரல்வளை புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய் போன்ற பல வகையான புற்றுநோய்கள் மட்டுமல்லாது வேறு பல நோய்களும் ஏற்படலாம். மாரடைப்பு/நெஞ்சு வலி, பக்கவாதம், கால் விளிம்புகள் அழுகிப்போதல், சிறுநீரகத்திற்கு செல்லும் இரத்தம் குறைந்து போதல், நுரையீரல் சரியாக வேலை செய்யாமை, ஆண் உறுப்புக்கு இரத்தம் செல்லாது ஏற்படும் ஆண்மைக்குறைவு ஆகியவை சிகரெட் பயன்படுத்துவதால் ஏற்படும் நோய்களுள் சில மட்டுமே! இன்னும் பற்பல நோய்கள் இந்தப் பட்டியலில் இருக்கின்றன.
- சிகரெட் பிடிப்பது டென்ஷனை குறைக்கிறது. எடையை கட்டுக்குள் வைக்கிறது.
சிகரெட்-ல் உள்ள நிக்கோட்டின், தற்காலிகமாக மூளையில் இரசாயன மாற்றங்களை நடக்க வைக்கிறது. நரம்பு மண்டலத்தை தூண்டி, செயற்கையான, மாயையான உலகில் சிகரெட் பிடிப்பவரை வைத்து, நன்றாக ஏமாற்றி, உடல் நலனையும், மன நலனையும் கெடவைத்து டென்ஷனை குறைப்பது போல காட்டுகிறது.
அதே போல் பசி ஏற்படாத ஒரு மந்த நிலையை தற்காலிகமாக ஏற்படுத்தி பசியை உணரச் செய்யும் அறிவை நிக்கோட்டின் செயலிழக்கச் செய்கிறது. அதனால் உடலுக்கு தேவையான உணவை கூட உண்ணாமல் சிகரெட் பிடிப்பவரின் எடை கட்டுக்குள் (?!) இருக்கிறது.
- நான் செய்யும் உடற்பயிற்சிகள், உண்ணும் சத்தான சரிவிகித உணவுகள் என் சிகரெட் பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகளை சரிகட்டிவிடும்.
சிகரெட்டை பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது, உடற்பயிற்சி செய்வதனாலோ, சத்தான சரிவிகித உணவுகளை உண்பதாலோ, சிகரெட் பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகளை சரி கட்டி விட முடியும் என்று எந்த ஒரு அறிவியல் பூர்வமான ஆராய்ச்சியிலும் நிரூபிக்கப்படவில்லை. ஆகவே உடற்பயிற்சி, சத்தான சரிவிகித உணவு ஆகிய நல்ல விஷயங்களை கடைபிடிக்கும் நீங்கள் சிகரெட்டையும் விட்டுவிடலாமே!
- புகையிலைக்கு சிகரெட், பீடி, குட்கா ஆகிய வடிவங்கள் மட்டுமே உண்டு.
புகையிலைக்கு சிகரெட், பீடி, குட்கா ஆகிய வடிவங்கள் மட்டுமல்லாது மூக்குப்பொடி, ஹூக்கா, வெற்றிலை பாக்குடன் சேர்த்து போடும் புகையிலைத்தூள், சுருட்டு, பீடி, மாவா, பேஸ்ட் (paste) என பற்பல வடிவங்கள் உண்டு.
- சிகரெட்டை பயன்படுத்துவதால், பயன்படுத்தும் எனக்கு மட்டுமே தீங்கு ஏற்படும்.
சிகரெட் பயன்படுத்துவதால், passive smoking/second hand smoking என்ற வகையில் அருகில் உள்ளோரும் சிகரெட்டால் பாதிக்கப்படுகிறார்கள். சிகரெட் பிடிப்பவர்களுக்கு என்னென்ன நோய்கள் வருமோ அதே நோய்கள் அருகில் இருந்து சுவாசிப்பவர்களுக்கும் வரலாம் . Third Hand smoking என்ற வகையில் சிகரெட் புகைக்கப்பட்ட இடங்களில் உள்ள பொருட்களில் சிகரெட் புகை படிந்து, அந்த இடத்தை பயன்படுத்துபவர்கள் அனைவரும் அந்த புகை துகள்களை சுவாசிப்பதால், அந்த இடத்தை பயன்படுத்தும் பலருக்கும் உடல் நல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.