2
நீங்கள் என்னை வெல்ல வேண்டுமானால், நீங்கள் என் வரலாற்றைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது அவசியம்.
என்னுள் இருக்கும் புகையிலைக்கு இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான ஆண்டு கால வரலாறு இருந்தாலும், நீங்கள் இப்போது பயன்படுத்தும் என் மேம்படுத்தப்பட்ட சிகரெட் வடிவத்தின் வரலாறு என்னை ஒரு வெளி நாட்டுக்காரன் என்கிறது. ஆம்! நான் அமெரிக்காவிலிருந்து வந்தவன். வியாபாரத்திற்காகப் பெரிய அளவில் முதன் முதலாக அமெரிக்கன் டொபேக்கோ கம்பெனி என்ற பெயரில் 1880-களில் என்னை உற்பத்தி செய்ய ஆரம்பித்தார்கள். அதனைத் தொடர்ந்து அங்கும் இங்கும் சிறிய பெரிய அளவுகளில் என்னை அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் உற்பத்தி செய்யத் தொடங்கினார்கள். 1901-ம் ஆண்டு இம்பீரியல் டொபேக்கோ கம்பெனி என்ற பெயரில் பிரிட்டிஷ்-ல் என்னை வியாபாரம் செய்ய, பிறகு 1910-ஆம் ஆண்டு இந்தியாவில் இம்பீரியல் டொபேக்கோ கம்பெனி ஆஃப் இந்தியா என்ற பெயரில் என் இந்திய வரலாறு தொடங்கியது. இம்பீரியல் டொபேக்கோ கம்பெனி ஆஃப் இந்தியா 1970ம் ஆண்டு இந்தியன் டொபேக்கோ கம்பெனி (Indian Tobacco Company) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இப்போது ஐடிசி (ITC) என்று அழைக்கப்படுகிறது.
கோல்ட் ஃபேளேக், நேவி கட், கிங்ஸ், கிளாசிக், 555, சிசர்ஸ், பெர்க்லே, பிர்ஸ்டால் போன்ற பிரபலமான என் வடிவங்களை இந்த ஐடிசி நிறுவனமே உற்பத்தி செய்து விற்கிறது. இந்த ஐடிசியின் கணிசமான பங்குகள் வெளி நாட்டினரிடம் உள்ளது. ஆகவே இப்போதும் கூட என்னை பயன்படுத்தும் உங்களின் பணம் வெளி நாட்டுக்குச் செல்கிறது.
என்னை உற்பத்தி செய்யும் மற்ற முக்கிய கம்பெனிகளும், அவர்களின் பிராண்ட் பெயர்களும் இங்கே:
- காட்ஃப்ரே ஃபிலிப்ஸ் – எஃ எஸ் 1, ஃபோர் ஸ்கொயர், ரெட் அண்ட் வைட், கேவென்டர்ஸ், டிப்பர் மற்றும் நார்த் போல்
- முன்னர் விசிர் சுல்தான் டொபேக்கோ கம்பெனியாக இருந்த விஎஸ்டி (VST)- சா(ர்)ம்ஸ், சா(ர்)மினார், கோல்ட்
- கோல்டன் டொபேக்கோ- பனாமா
- என்டிசி (NTC) – ரிஜென்ட்
மேற்குறிப்பிட்ட கம்பெனிகள் இப்போது பன்னாட்டு கம்பெனிகளாகிக் கொண்டிருக்கின்றன. இந்தக் கம்பெனிகளை நடத்துபவர்களெல்லாம், மக்களை நோயாளி ஆக்கி, கொன்று விட்டு மாபெரும் பணக்காரர்கள் ஆகிக் கொண்டு இருக்கிறார்கள்.
எடுத்துக்காட்டாக, இந்தியாவில் என் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் ஐடிசியை எடுத்துக்கொள்ளுங்கள், புகையிலையின் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு பரவத்தொடங்கியவுடன், உலகின் பெரும்பான்மையான சிகரெட் கம்பெனிகள் தங்களது பெயரிலிருந்து புகையிலையின் ஆங்கில இணையான ‘டொபேக்கோ’ என்ற சொல்லை நீக்கி விட்டன. தாங்கள் ஒரு புகையிலை கம்பெனி என மக்கள் தெரிந்து கொள்ளாமல் இருக்க, இந்தியன் டொபேக்கோ கம்பெனி ஐ.டி.சி. (I.T.C) லிமிடட் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு 2001-ம் ஆண்டு ஐடிசி (ITC) என்று ஆனது. 1975-ம் ஆண்டு வரை என்னையும் புகையிலையையும் மட்டுமே வியாபாரம் செய்து வந்த ஐடிசி, 1975-ம் ஆண்டில் உங்களது சென்னையில் ஒரு பெரிய ஹோட்டலை வாங்கித் தனது ஹோட்டல் வணிகத்தைத் தொடங்கியது. யோசித்துப்பாருங்கள் 1970-களில் ஒரு பெரிய ஹோட்டலை வாங்க வேண்டுமானால் எந்த அளவுக்கு லாபம் அந்தக் கம்பெனிக்கு வந்திருக்க வேண்டும். இன்று பேப்பர், நோட்டு புத்தகம், அழகு பொருட்கள், உணவு பொருட்கள், ஹோட்டல் என்று மிகக்குறைந்த காலத்தில் பல மடங்கு வளர்ந்திருக்கும் ஐடிசி என்னை உற்பத்தி செய்து பல உயிர்களைக் காவு வாங்கி வளர்ந்த கம்பெனி என்று சொன்னால் அது மிகையல்ல. உங்கள் சென்னையில் இருக்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் இந்த ஐடிசி போன்ற புகையிலை கம்பெனிகளின் பொருட்களை வாங்குவதில்லை கோட்பாடாகக் கொண்டுள்ளார்களாம்.
பலருக்கு ஐடிசி என்னை தயாரிக்கும் கம்பெனி என்று தெரியாது, ஏதோ மக்களுக்கு நன்மை தரும் உணவு பொருட்களையும், தரமான நோட்டு புத்தகங்களைத் தயாரிக்கும் கம்பெனியாகத்தான் தெரியும். ஆகவே நீங்கள் இன்னும் ஏமாந்து கொண்டிருக்காமல், என் கம்பெனிகளை பணக்கார கம்பெனிகளாக்காமல் இருக்க, என்னை விட்டொழிப்பது என்ற உங்கள் முடிவில் உறுதியாய் இருங்கள்.