பிரதான ஆலயத்தின் வடக்கிலும் ,தெற்கிலும் வடகையிலாயம் மற்றும் தென் கயிலாயம் என்ற இரண்டு சிற்றாலயங்கள் உள்ளன.இது மட்டுமின்றி சண்டிகேஸ்வரர் ஆலயமும் , மகிஷாசுரமர்த்தினி ஆலயமும் அமைந்துள்ளன.இவ்வாலயத்தின் வடகிழக்குப்பகுதியில் வட்டவடிவிலான கிணறு ஒன்றும் ,இக்கிணற்றுக்கு அருகில் சிங்கமுக வாயிலும் அமைந்துள்ளன.இந்த சிங்கமுக வாயிலின் வழியாகத்தான் வடகிழக்குப்பகுதியிலுள்ள கிணற்றுக்குச்செல்லமுடியும்.இந்த சிங்க முக வாயிலை ‘‘சிம்ம கேணி’’ என்றும் கூறுவார்கள்.இந்த கிணற்றில் தான் இராஜேந்திர சோழன் கி.பி.1023ல் ஊற்றிய கங்கை நீர் இன்றும் காட்சியளிக்கின்றது.

சோழர்களின் பழமையான தமிழ் பண்பாட்டு சாதனைகளில், பிரமாண்டங்களில் கங்கைகொண்ட சோழபுரத்திற்குகென்று தனிப்பெருமை உண்டு.
சிற்ப வேலைபாடுகளில் சிறந்து விளங்கும் கங்கைகொண்ட சோழபுரம் தன் பேரழகில் தஞ்சை இராஜராஜேஸ்வரத்தினைக்காட்டிலும் ஒருபடி மிஞ்சிநிற்கிறது என்றால் அது மிகையாகாது…!
மாமன்னன் இராஜராஜசோழன் தஞ்சைஇராஜராஜேஸ்வரத்தையும்,சோழ நாட்டின் எல்லைக்குட்பட்டபல பகுதிகளிலும் சிவாலயங்களை எழுப்பினான்.ஆனால்,இராஜேந்திரசோழன் ஒருவனே……! தன் தந்தை எழுப்பிய தஞ்சைஇராஜராஜேஸ்வரத்திற்கு நிகரான கங்கைகொண்டசோழபுரத்தையும் இன்னும் பிற குறிப்பிடதக்க 31 சிவாலயங்களையும் சோழ நாட்டின் எல்லைகளுக்குட்பட்ட பல மாநிலங்களிலும் கட்டியுள்ளான்.அதனால் மாமன்னன் இராஜேந்திரன் ‘‘பெருங்கோயில்கள் கட்டுவதிலும்’’ உலகசாதனைப்படைத்தவனாவான்.