கங்கைகொண்ட சோழீஸ்வரம். .
கங்கைகொண்ட சோழபுரம் கி.பி.11ம் நூற்றாண்டில் மாமன்னன் இராஜேந்திரசோழனால் தோற்றுவிக்கப்பட்டது. தமிழகத்திலேயே மிகப்பெரிய சிவலிங்கத்தைக்கொண்டுஉள்ள சிவாலயம் கங்கைகொண்ட சோழபுரமேயாகும்.இங்குள்ள கங்கைகொண்டசோழீஸ்வரரின் உயரம் 13.5 அடியாகும்.
இக்கோயிலில் தஞ்சை பெரிய கோயிலை போன்று பெரிய நந்தி மட்டுமல்லாமல் நாட்டியமாடும் விநாயகர் உட்பட பற்பல எழில்மிகு சிற்பங்கள் நிறைந்துள்ளன. சிங்கத் தலை கொண்ட கிணறு மற்றும் மாமன்னன் இராஜேந்திரனுக்கு பார்வதி பரமேஸ்வரரே முடிசூட்டும் அரிய வகை சிற்பங்கள்(சிவபாதசேகரன்) இந்தக் கோயிலில் தான் உள்ளன.
இக்கோவில் திருச்சுற்று மாளிகை 567அடி நீளமும்,318அடி அகலமும் கொண்டுள்ளது.இத்திருச்சுற்று மாளிகையின் நடுவில் தான் பிரதான ஆலயம் அமைந்துள்ளது…..?
இக்கோவிலின் பிரதான ஆலயம் கருவறை, அர்த்தமண்டபம் ,மகா மண்டபம் ஆகிய மூன்று பிரிவுகளைக்கொண்டுள்ளது.இவ்வாலயத்திற்கு அழகான பெண்வடிவத்தை கொடுத்திருப்பது கருவறையின் மீது 9 தளங்களாக (அடுக்காக) அமைக்கப்பட்டுள்ள திருவிமானம் ஆகும்.இத்திருவிமானத்தின் உயரம் 182 அடியாகும்.(*அதாவது 55 மீட்டர்) விமானத்தின் கழுத்துப்பகுதியின் நாற்புறமும் நான்கு தேவக்கோட்டங்களும் ,நான்கு நந்திகளும் உள்ளன.திருவிமான கழுத்துப்பகுதியின் மேல் சிகரம் அமைக்கப்பட்டு அதன் மேல் பொன்முலாம் பூசப்பட்ட ஸ்தூபியும் அமைந்துள்ளது.