அணிந்துரை
முனைவர் க.மோகன்,
அழகப்பா அரசு கலைக்கல்லூரி,
காரைக்குடி – 3
அலைபேசி: 9442189217
பயத்திற்காக வணங்கப்பட்ட கடவுளர்கள் இன்று பணத்திற்காக வணங்கப்படுகின்றனர். பகுத்தறிவு பாதையில் பக்தியைப் பரப்பும் பண்பாளராக அய்யா திரு. வேலு ஆசிரியர் திகழ்கிறார்.
தன் அனுபவத்தினால் கனிச்சுவையாய் பக்தியை முன்வைக்கிறார். பக்தி பகல் வேடம் போட்டுக் கொண்டிருப்பதைச் சாடுகிறார். அதே வேளை உண்மைத் தத்துவங்களை உலகிற்கு அளிக்கிறார். மனித வாழ்க்கையின் தத்துவங்களை விளக்கவே தெய்வ வாழ்க்கையை முன்னோர்கள் தந்ததைக் குறிப்பிடுகிறார். முருகனுடைய இச்சா சக்தியே (விருப்பம்) வள்ளி என்றும், கிரியா சக்தியே செயல் தெய்வானை என்றும் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்.
தெய்வீகச் சிந்தனைகள் என்ற இந்நூல் பகுத்தறிவுச் சிந்தனையை வெளிக்கொணருகிறது. கடவுளரை எண்ணித்தியானிக்கத் துணையாகச் சில சடங்குகள் அமைந்தன. காலப்போக்கில் சடங்குகளே விஞ்சிவிட்டன. இங்குத் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற விளம்பரப் பலகை மட்டும் கோயில்களில் காணப்படுகிறது. தென்னாடுடைய சிவனுக்குத் தமிழ் புரியவில்லை என்றால் விந்தையிலும், விந்தையாக இருக்கிறது. கோயில்களில் இனித்தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற தமிழக அரசின் செய்தி கேட்டவுடனே ஆனந்தம் அடையும் வேலு ஆசிரியரின் தமிழ்ப்பற்றை என்னவென்று சொல்வது கோயில் என்பது மக்களுடைய தெய்வ பக்தியையும் ஒழுக்கத்தையும் வளர்க்கவே ஏற்படுத்தப்பட்டது என்பதை உறுதிபடகூறுகிறார்.
அபிசேகம் செய்வதென்றால் சாமி தலையில் நீரை ஊற்றிவிடுவது. அதுபோல தயிர், இளநீர், சந்தனம், குங்குமம், பன்னிர், நெய், பஞ்சாமிர்தம் போன்ற பொருள்களை சாமி தலையில் இருந்து அதாவது உச்சி முதல் உள்ளங்கால் வரை மடமடவென்று ஊற்றிவிடுவது நல்ல செயலாக நல்ல பழக்கமாகத் தெரியவில்லை என்று கூறுகிறார். மேலும் ஒருவருக்கு உணவு கொடுத்தால் அவர் பசி நீங்கி மகிழ்ச்சி அடைவார். மாறாக, கூழைக் கரைத்து அவர் தலையில் ஊற்றினால் மகிழ்ச்சி அடைவாரா? என்று கேள்வி எழுப்புகிறார். இந்தப் பிரச்சினையை தான் பெரிதுபடுத்திச் சான்றோர் கவனத்திற்குக் கொண்டு சென்று விவாதம் செய்தால் வெற்றி கிடைக்குமா? கிடைக்காது என்று உலகியல் நடப்பை உணர்த்தியுள்ளது பாராட்டுக்குரியது.
கோயில் பற்றியும், கோயில் வழிபாடு, விழாக்கள் பற்றியும் குறிப்பிடும் ஆசிரியர். இலக்கிய தாகம் அதிகம் கொண்டவராக அறியப்பெறுகிறார். திரு.வேலு ஆசிரியர் வெண்பா இயற்றுவதிலும் கைதேர்ந்தவராக உள்ளார்.
சில நூல்களை கைகழுவிப்படிக்கவேண்டும்; சில நூல்களைப்படித்தவுடன் கைகழுவிவிடவேண்டும். அந்நிலையில் தெய்வீகச்சிந்தனை என்ற இந்நூல் பக்தியின் உண்மை நிலையைப் பேசுகிறது. மனிதனின் விலங்குணர்வை அகற்றி. தெய்வ குணத்துக்கு உயர்த்துவது சமயத்தின் பணி என்ற கொள்கையிலிருந்து சிறிதும் மாறாதவராகவும்; தளர்ந்த வயதிலும் தளராத சிந்தனையுடன் எழுதியிருப்பது என்போன்றோர்க்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்கின்றன. இதுபோல் நல்ல தமிழ் நூல்கள் தமிழ்மொழியில் வர
வேண்டும்.
என்றும் அன்புடன்
முனைவர் க.மோகன்