"

27

தமிழ் என்னும் ஆறு, இன்றும் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது. சங்க இலக்கியம் அந்த ஆற்றின் அடியில் உள்ள ஊற்று. சில நேரங்களில், ஆற்றில் நீரில்லை எனினும், ஊற்று சுரக்கும்!

சங்கத் தமிழ் – 2500+ கவிதைகள்; 700+ கவிஞர்கள். மன்னன் x கள்வன், தலைவி x பரத்தை, ஆண் x பெண் அனைவரின் எழுத்தும் அவையேறும்! பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்!

சங்கத் தமிழாற்றில் குளிக்க வேண்டுமெனில் என்ன தேவை? ஒன்றுமே தேவையில்லை, உங்கள் டாம்பீக உடுப்பைக் கழற்றிக் குதிக்க வேண்டும். அவ்வளவு தான்! யாப்பு சோப்பு, Life Jacket ஒன்றும் வேண்டாம். மனசுக்குள் காதல் இருந்தால் போதும் – சில்லென‌ இறங்கிச் சிலுசிலுவெனக் குளிக்கலாம்! காதல் காமம், அன்பு – பகை, குடும்பம் அலுவல், போர் – அமைதி, ஆட்சி வணிகம், இன்னும் பலப்பல.


சங்க இலக்கியம் இது ஒரு வாழ்வு! தொல் தமிழ் வாழ்வு!

*

சங்கத் தமிழ் வாசிக்க இலக்கணம் தேவையா? தேவை இல்லை. இலக்கியம், இலக்கணம், இரண்டும் தொடர்புள்ளவை. இலக்கியத்தில் இருந்து தான் இலக்கணம் கிளைக்கும் (Standards). இலக்கணத்தை ஒட்டி, மற்ற இலக்கியங்கள் நடக்கும் (Life). As life progresses, new standards evolve. இது ஒரு தொடர் ஓட்டம்!


இலக்கியம் = இலக்கு + இயம் = இலக்கை இயம்புவது
இலக்கணம் = இலக்கு + அணம் = இலக்கை அடைய வழி அமைப்பது (அணம் வழி)

நான் ஓர் இலக்கியம் எழுத வேண்டும். என் இலக்கு என்ன? 1) புகழ்சால் பத்தினி உலகம் போற்றும் 2) அரசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றாகும் 3) ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும். இது தான் இலக்கு! அதை இயம்பியாகி விட்டது (இலக்கு + இயம்). இந்த இலக்கை எப்படி அடைவது?


என்ன மாதிரி நாடகம்? என்ன காட்சிகள்? எங்கெல்லாம் இசை, பண் வர வேண்டும்? சீற்றத்தை எப்படி வல்லின ஓசையில் காட்டுவது? காதலை எப்படி மெல்லின ஓசையில் காட்டுவது? எதையெல்லாம் சேர்த்துக் கட்டினால், இலக்கை அடைய அணம் (வழி) கிடைக்கும்? (இலக்கு + அணம்).

*

தமிழில் மிகப் பழமையான இலக்கியங்கள் முதுகுருகு, முதுநாரை. இவை கிடைக்கவில்லை! கைக்குக் கிடைக்கும் மிகத் தொன்மையான நூல் தொல்காப்பியம் (கிமு 700க்கும் முன்னால்). பேரில் காப்பியம் என‌ இருந்தாலும், இது ஓர் இலக்கணக் காப்பியம். தொல்காப்பியமே தமிழுக்கு ஒரு செவ்விய அடித்தளம்!

சங்க இலக்கியம் என நாம் இன்று காண்பது பெரும்பாலும் கடைச்சங்க காலம் (கிமு 300). தொல்காப்பியம் இடைச் சங்கம் (கிமு 700). அதற்கும் முன்பே இருந்தது தலைச்சங்கம் எனும் முதற் சங்கம்.

சங்கம் என்பதே வடசொல்லோ? என்றொரு ஐயம் கூட எழுப்பப்பட்டதுண்டு. வடசொல் ஸங்கமம்வேறு; தமிழில் சங்கம்வேறு. (ஸ்கந்தன் கந்தன் போலத் தான் இதுவும். பின்னாள் புராணத்தால், இரு பெயர்களும் முருகனையே குறிக்கத் துவங்கி விட்டாலும், இரு பெயர்களும் வேறு; பொருளும் வேறு!)

விளக்கின் ஒளியில் பெறுவது விளக்கம். அதே போல், சங்கு ஒலித்து ஒழுங்கு பெறும் அவை சங்கம்.

*

சங்க இலக்கியத்தின் அடிப்படைக் கூறு திணை: 1) அகம் – of the self (internal) 2) புறம் – of the world (external). திணை என்றால் ஒழுக்கம் என்று பொருள் அக ஒழுக்கம், புற ஒழுக்கம்! திணையின் உட்பகுதி துறை.

அகத்திணை: 7 (முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை). புறத்திணை: 10+ (வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை, பாடாண் etc). திணைப் பெயர்களைக் கவனியுங்கள் பலவும் பூக்களின் பெயர்கள். தமிழ் இலக்கியக் கூறுகள் இயற்கையை ஒட்டியே!

பத்துத் தலை அசுரன், பன்னிரெண்டு கை சாமி என்றெல்லாம் இயற்கைக்கு மாறான புராண unbelievables” ஆதித்தமிழில் இல்லை! பின்னாள் சேர்க்கையே.

*


சங்க இலக்கியத்தின் 2 பெரும் பிரிவுகள் மேல்கணக்கு, கீழ்க்கணக்கு. கீழ்க்கணக்கு என்றால் கீழ்மை அல்ல‌ (ஆனானப்பட்ட திருக்குறளே கீழ்க்கணக்கு தான்!). குறைந்த அடியுள்ள பாடல்கள் கீழ்க்கணக்கு. அதிகபட்சம் 4 வரிகள். அதற்கும் மேல் உள்ள அடிகள் மேல்கணக்கு! பதினென் மேல்கணக்கு எட்டுத்தொகை & பத்துப்பாட்டு; பதினென் கீழ்க்கணக்கு குறள் முதலான 18 நூல்கள்.

இப்படி வகைப்படுத்தி வைத்தது பிற்பாடு தான். தமிழ் மன்னர்கள் / பெருங்கவிஞர்களின் ஆர்வத்தால், இப்படித் திரட்டித் திரட்டி வைக்கப்பட்டன! ஓர் ஒழுங்கு முறையை ஒட்டியே, இப்படி வரிசைப்படுத்தப் பட்டன. பாட்டின் எண்ணை வைத்தே குறிஞ்சியா? முல்லையா? என்று கூடச் சொல்லி விடலாம்.

இது கால வரிசை அல்ல! பல்வேறு காலம், பல்வேறு கவிஞர்களின் சிதறல். ஓவியத்தில் வண்ணச் சிதறல் போல! இந்த வண்ணத் திரட்டியே சங்க இலக்கியம்! எட்டுத் தொகை காலத்தால் முந்தி; பத்துப் பாட்டு சற்றுப் பிந்தி; கீழ்க்கணக்கு இன்னும் பிந்தி, சங்கம் மருவிய காலம்.

*

எட்டுத் தொகை: இதில் எத்தனை நூல்கள்?  எட்டுக் கால் பூச்சிக்கு எத்தனை கால்? என்று கேட்பது போல் தான்! 1. நற்றிணை 2. குறுந்தொகை 3. ஐங்குறுநூறு 4. பதிற்றுப்பத்து (மிகப்பழமையானது) 5. பரிபாடல் (கலப்புகள் நடு நடுவே எனினும், அழகிய இசை நூல்) 6. கலித்தொகை 7. அகநானூறு 8. புறநானூறு.

எட்டுத் தொகையின் சிறப்பே அது ஒரு தொகுப்பு (Team Work). ஒருவராலேயே எழுதப்பட்டு விடவில்லை! எனவே ஒருதலைச் சார்பு (bias) இல்லை! சில பாடல்கள் இடைச் சங்கம்; மற்ற பலவும் கடைச் சங்கம். இசையும் உண்டு! பரிபாடல் பரிந்து வருதல் (Melody); கலிதொகை கலிவல்லோசை (Rock); தூக்கு / வண்ணம் போன்ற இசைக் கூறுகளையும் காணலாம். ஒரே பாட்டுக்குப் பல‌ சொந்தக்காரர்கள் உண்டு! பாட்டை எழுதுபவர் கவிஞர்; பாட்டுக்கு இசை அமைப்பவர் பாணர்; பாடுபவர் / ஆடுபவர் விறலி.

*


பத்துப் பாட்டு: இவை கிபிக்குச் சற்று பின். அனைத்தும் தனிப்பட்ட கவிஞர்களே; குழு நூல்கள் அல்ல!

1. திருமுருகாற்றுப்படை (காலத்தால் கடைசி எனினும், இறை என்பதால் முதலில் வைக்கப்பட்டது) 2. பொருநர்ஆற்றுப்படை 3. சிறுபாண் 4. பெரும்பாண் 5. மலைபடுகடாம். இவை ஆற்றுப்படை நூல்கள்; இந்த மன்னனை நோக்கி போனால், இந்தப் பரிசில் பெறலாம்; அங்கு செல்லும் வழி இது எனப் பேசுபவை; ஆறு வழி (எவ்’வாறு’ வந்தாய் எந்த வழியில் வந்தாய்?) 

6. குறிஞ்சிப் பாட்டு 7. முல்லைப் பாட்டு இவை அகத்திணை; இயற்கைப் பாடல்கள். 8. மதுரைக் காஞ்சி (நெடுஞ்செழியன் மீது) 9. பட்டினப் பாலை (கரிகாற் சோழன் மேல்) 10. நெடுநல்வாடை (நெடுஞ்செழியன் மீது) – இவை புறத்திணை; மன்னர்களின் வெற்றியைப் பாடுபவை; ஊர்களின் நாகரிகத் தகவலும் உண்டு.

இயற்கை / அகம் என்றே பெரும்பாலும் இருந்த காலம் எட்டுத் தொகை. ஆனால், கால மாற்றத்தால், மன்னர்கள் / புறம் என‌ மிகுந்து விட்டது பத்துப் பாட்டில்.

*

கீழ்க் கணக்கு பெரும்பாலும் நீதி நூல்கள். முதலில் இயற்கையான சமூகம், பின்னர் பேரரசுச் சமூகம் / புராணக் கலப்புகள், பின்னர் நீதி போதனை துவங்கியது. ஏனெனில் புராணம் வந்த பின் அறம் குறைகிறது. வாழ்வியல் மாற்றங்கள்! இதுவே சங்கம் மருவிய காலம்! இந்த நூல்களும் தனிப்பட்டவர்கள் எழுதியதே!

நீதி நூல்கள்: 1. திருக்குறள் 2. நாலடியார் 3. நான்மணிக்கடிகை 4. இன்னா நாற்பது 5. இனியவை நாற்பது 6. திரிகடுகம் 7. ஆசாரக்கோவை 8. பழமொழி நானூறு 9. சிறுபஞ்சமூலம் 10. ஏலாதி 11. முதுமொழிக்காஞ்சி

அகத்திணை: 12. ஐந்திணை ஐம்பது 13. திணைமொழி ஐம்பது 14. ஐந்திணை எழுபது 15. திணைமாலை நூற்றைம்பது 16. கைந்நிலை (இன்னிலை என்னும் கட்சியும் உண்டு) 17. கார் நாற்பது

புறத்திணை: 18. களவழி நாற்பது

*


சில அழகியல் சங்க இலக்கிய வரிகள்:

  1. Laptop wallpaper-ல் காதலி படம்; screensaver bubbles முகத்தை மறைக்கிற‌து; விலக்க கை துடிக்கிற‌து. பூவிடைப் படினும் ஆண்டு கழிந்தன்ன (பூ கூட எங்களிடையே வரக்கூடா குறுந்தொகை)
  1. நட்பாகவே பழகிப் பழகிக், காதலை வெளிப்படுத்த இருவருக்கும் தயக்கம். ஆனால் இளமை இன்பம் பாழாகிறதே? அதற்கு என்ன செய்ய? – கன்றும் உணாது கலத்திலும் புகாது
  1. இயற்கையே காலம் மாறலாம், ஆனால் என் காதலன் வாக்கு மாறமாட்டான் கானம் கார் எனக் கூறினும், / யானோ தேரேன், அவர் பொய் வழங்கலரே

இப்படிப் பலப்பல பாடல், பற்பல‌ உணர்ச்சிகள், உங்களின் இன்றைய வாழ்வுக்கும் வெகு எளிதாகப் பொருந்தி விடும்! வாழ்வில் சங்க இலக்கிய வரிகள், பலப்பல தாக்கங்களை ஏற்படுத்தும். ஏற்படுத்தட்டும்! சங்கச் சித்திரங்கள் வெறுமனே வாசிப்புக்கு அல்ல; சுவாசிப்புக்கு!

*


மற்ற நொறுக்குத் தீனிகள்:

1. சங்கப் பாடல்களுக்கு கடவுள் வாழ்த்து என்பது பின்னாள் சேர்க்கையே! இலக்கியத்தில் மத அரசியல்; அவை சங்கப் பாடல்கள் ஆகா!  காதல் நற்றிணைக்கும், குறுந்தொகைக்குக்கும் என்ன கடவுள் வாழ்த்து?

2. இன்றைய சமய நிலைமை வேறு! இன்று இன்றாக இருக்கட்டும்; தொன்மம் தொன்மமாக இருக்கட்டும்! இன்றைய நிலையை ஈடு கட்ட, தொன்மத்தில் கை வைக்கக் கூடாது! சமயம் கடந்து, தமிழைத் தமிழாகவே அணுகல் திரு. வி. க போன்ற மனசு, அறிஞர்களுக்கு வரவேண்டும்!


3.
நற்றிணை / குறுந்தொகையில் திருமால் / முருகன் பற்றிய குறிப்புக்கள் வரும்; ஆனால் அவை பக்திப் பாடல் அல்ல; அகப்பாடல்கள் மக்கள் வாழ்வியலைக் காட்சிப் படுத்தும். காதலன் தன் காதலை நிரூபிக்க, நிலத்தின் தொன்மம் திருமால் மேல் சூள் (சத்தியம்) செய்தான் என‌ வரும்! அவ்வளவே!

4. யாகம், உடன்கட்டை ஏறல் புறநானூற்றில் சொற்ப இடங்களில் வரும்; ஹோமம் / உடன்கட்டை தொல் தமிழ்ப்பண்பாடு என முடிவு கட்டக்கூடாது. அவை கடைச்சங்க காலம் / புராணக் கலப்புக்குப் பின், என்றுணர்ந்து படிக்க வேண்டும்! அவை தொல்காப்பியம், முதல் / இடைச் சங்க நூல்களில் வாராது!

5. வடமொழி / வேத நெறி போலவே சமணமும், பெளத்தமும் கூடத் தென்னகம் வந்தன. ஆனால், தமிழ்த் தொன்மத்தை ஊடாடிச் சிதைக்காமல், சமண பெளத்தம், தன் நெறியைப் புது நெறி என்றே சொல்லின! இயற்கை வழிபாட்டு முருகனை 12 கை கொண்ட‌ ஸ்கந்தன் என‌ ஆக்கியது போல், தமிழ்த் திருமாலை / முருகனை தீர்த்தங்கரர் என‌ ஆக்கவில்லை சமண பெளத்தம்!

தமிழ் இலக்கியத்துக்குச் சமணம் ஆற்றிய தொண்டு அதிகம். ஆனால் இதன் பங்கு, சற்று அடக்கியே பேசப்படுகின்றது. இலக்கியத்தில் பெரும்பான்மை மத ஆதிக்கம்தான் காரணம். சிறுபான்மைச் சமூகம், மரபுச் சிறப்பில் அடக்கியே வாசிக்கணும்என்ற ஆழ்மனப் போக்கு.

6. சங்க காலப் பெண் கவிஞர்கள் 30+ பேர். மிக அதிகம் பாடியவர்கள் ஒளவையார், வெள்ளிவீதியார், காக்கைப் பாடினியார். சங்க கால ஒளவை வேறு; ஆத்திசூடி / பிற்கால 4 ஒளவையார்கள் வேறு!

7. மன்னர்கள் சேர, சோழ, பாண்டியர் மட்டுமல்லர்; வள்ளல்கள் 7 பேர் உண்டு; தொண்டை, பரதவர், பூழியர், வேளிர், மழவர் போன்றவர்களும் உண்டு

8. ஐம்பெருங்காப்பியங்கள்: சிலப்பதிகாரம் & மணிமேகலை முந்தியவை (கிபி 300); சீவக சிதாமணி, வளையாபதி, குண்டலகேசி மிக மிகப் பிந்தியவை (கிபி 900). ஆழ்வார்/ நாயன்மாருக்குப் பிந்தியவை தான் சீவக சிந்தாமணி. ஐம்பெரும் காப்பியங்கள் போல், ஐஞ்சிறுங்காப்பியங்களும் உண்டு!


9.
திணைகள்: முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்பதே சரியான வரிசை (தொல்காப்பியம்). இந்த நிலங்கள் இயல்பில் திரிந்து விட்டால் பாலை! முல்லை காடு; குறிஞ்சி மலை; மருதம் வயல்; நெய்தல் – கடல். ஒரே ஊரில் முல்லையும், குறிஞ்சியும் இருக்கலாம்.

10. பொருள் 3 – முதற்பொருள், உரிப்பொருள், கருப்பொருள். முதற் பொருள் நிலம் & பொழுது (நிலம் ஏற்கனவே பார்த்து விட்டோம்) பெரும் பொழுது கார் காலம், குளிர் காலம், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில். சிறுபொழுது மாலை, யாமம், வைகறை, விடியல், முற்பகல், பிற்பகல்

உரிப்பொருள்: முல்லை காத்திருத்தல்; குறிஞ்சி புணர்தல்; மருதம் ஊடல்; நெய்தல் – (துன்பத்தில்) இரங்கல்; பாலை – பிரிதல். கருப்பொருள் அந்தந்த நிலத்துக்குரிய தெய்வம், மக்கள், பறவை, விலங்கு, ஊர், நீர், பூ, யாழ், பறை, பண் போன்றவை.

11.
சங்க இலக்கிய உரைகள்: உரைகளின் காலம் பின்னாளில் (கிபி 10ம் நூற்றாண்டுக்குப் பின்). அன்றைய அரசியல் சமயத் தாக்கங்கள், உரைகளில் ஆங்காங்கே தெறிக்கும்; So, அதையே முடிந்த முடிபாகக் கொள்ளாமல், உரைகளை, அவற்றின் அழகியல் / ஒப்பு நோக்குக்கு மட்டுமே வாசிக்க வேண்டும்.
மற்றபடி, “to the roots” மூலப் பாடலையே அணுகுதல் நன்மை பயக்கும்!

  • தொல்காப்பிய உரை நச்சினார்க்கினியர், இளம்பூரணர், சேனாவரையர்
  • கலித் தொகை, குறுந் தொகை, பத்துப் பாட்டு உரைகள் நச்சினார்க்கினியர்
  • திருக்குறள் நிறையப்பேர். மணக்குடவர், பரிமேலழகர் etc etc
  • சிலப்பதிகாரம் அரும்பத உரையாசிரியர், அடியார்க்கு நல்லார்


12. ‘
உலகம்’ என்பதை முதலில் வைத்துப் பாடுதல் சங்கத் தமிழ் மரபு (உலகம், வையம், நிலம் etc)

  • ஆதி பகவன் முதற்றே உலகு – திருக்குறள்
  • நனந்தலை உலகம் வளைஇ நேமி முல்லைப்பாட்டு
  • உலகம் உவப்ப வலனேர்பு திரிதரும் – திருமுருகாற்றுப்படை
  • வையகம் பனிப்ப, வலனேர்பு வளைஇ – நெடுநல்வாடை
  • மண் திணிந்த நிலனும் புறநானூறு
  • திங்களைப் போற்றுதும்… உலகு அளித்தலான் – சிலப்பதிகாரம்
  • உலகம் திரியா ஓங்குயர் விழுச் சீர் – மணிமேகலை

The cause of the World (உலகம்) is dearer to சங்கத் தமிழ், than the cause of Religion! Our own அகம் & புறம் வாழ்வு, than சொர்க்கம் / நரகம்.

*

இக்கட்டுரை, சங்கத் தமிழுக்கு ஓர் எளிய அறிமுகமே! நுண்ணிய தகவல்கள் அதிகம் தராமல், Just a Quick Map of Sangam Landscape! ஒரு வரைபடமே நிலத்தின் அழகியல் இன்பத்தை ஈந்து விடாது; அதற்குப் பயணம் செய்ய வேண்டும். சங்கத் தமிழ்ப் பயணம் ஒரு வாழ்க்கைப் பயணம். சேரும் இடத்தை விடப், பயணமே சுவை. ஆதலால், பயணம் செய்வீர் இன்பச் சங்கத் தமிழில்!

***

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தமிழ் மின்னிதழ் - இதழ் - 1 Copyright © 2015 by தமிழ் மின்னிதழ் குழு is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.