முன்னெப்போதும் இல்லாதளவு ஒருவருடைய அந்தரங்கத்தைக் கிஞ்சித்தும் மதிக்காமல் வேடிக்கைப் பொருளெனப் பகிரங்கப்படுத்தும் ஓர் இரக்கமற்ற விஞ்ஞான யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அது பிரபல நடிகை ராதிகா ஆப்தேயின் செல்ஃபியோ, முகமறியாப் பெண் ராகவியின் செல்பேசி உரையாடலோ, விதிவிலக்கின்றி கணங்களில் உலகச் சுற்றுக்கு விடப்படுகிறது. வாட்ஸாப், ட்விட்டர், ஃபேஸ்புக், யூட்யூப், சவுண்ட்க்ளௌட் என தொழில்நுட்பச் சாத்தியங்கள் அதிகரிக்கையில் தனிமனித வாழ்வுக்குள் எட்டிப்பார்க்கும் வேட்கையும் பெருகியபடியே இருக்கிறது.
உண்மையில் எந்தக் குற்றவுணர்வுமே இன்றி மிக இயல்பாக இந்தப் பகிரல் நடைபெறுகிறது. அனுப்புவர், பெறுபவர் எவருமே அது குறித்து ஆட்சேபனை எழுப்புவதில்லை. மௌனித்திருப்பதும் அதில் பங்கு கொள்வதற்குச் சமானமே.
இவற்றைப் பகிர்தல் அறமா என்கிற தத்துவார்த்தக் கேள்வியைக் கண்டுகொள்ளாமல் விட்டாலும் நம் குடும்பத்துப் பெண் அதில் சம்மந்தப்பட்டிருந்தாலும் இதே ஆர்வத்துடன் பகிர்வோமா என்ற நீதிக்கேள்வியை எப்படி உதாசீனம் செய்ய முடியும்? ஒரே காரணம் நம் குடும்பத்துப் பெண்ணுக்கு இதுபோல் நேராது என்ற குருட்டு நம்பிக்கை தான். தவிர, அடிப்படையிலேயே நமக்கு அடுத்தவர் படுக்கையறையின் சாவித்துவாரத்தில் கண் வைக்கும் வெறி உண்டு.
அச்சு, ஒளி, இணைய ஊடகங்கள் தாம் முன்பு இதைச் செய்து கொண்டிருந்தன. இப்போது நவீன வளர்ச்சியின் பயனாய் தனிமனிதர்களே அதைக் கையிலெடுத்துக் கொண்டு விட்டார்கள். மீடியாக்கள் இப்போது இயல்பாய் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு “goes viral” என செய்திச் சாக்கு வைத்துக் கொண்டு அதற்கு வெளிச்சமிடுகிறார்கள்.
புகைப்படங்கள், உரையாடல்கள், வீடியோக்கள் எல்லாம் ஒருவரது தனிப்பட்ட பாத்தியதை. அவரது முறையான அனுமதியில்லாமல் அதைப் பார்ப்பதற்கோ கேட்பதற்கோ நமக்கு உறுத்த வேண்டும். அதில்லை எனினும், அதைப் பகிர்வது சட்டத்துக்குப் புறம்பான செயல். அனுப்புபவர் மட்டுமின்றி பெறுபவருக்கும் இக்குற்றத்தில் பங்குண்டு.
நடிகை என்பது அவரது அந்தரங்கத்தை ஊடுருவ எந்தச் சலுகையையும் நமக்குக் கொடுத்து விடாது. அவர் தான் நடிக்கும் திரைப்படங்களில், விளம்பரங்களில் உடலை முன்வைப்பவராகவே இருந்தாலும் அவரது அனுமதியின்றி எடுக்கப்படும் / பகிரப்படும் விஷயங்கள் பிழையே. நாம் இளக்காரமாய்க்கருதும் நடிகையிடமே இக்கண்ணியத்துடன் நடக்க வேண்டும் எனும் போது யாரோ ஒரு சாதாரணப் பெண்ணிடம் இன்னும் பொறுப்பு கூடத்தானே வேண்டும்!
ஒரு பெண் கெட்டவளா, நல்லவளா, அவளது பின்புலம் என்ன என்பதெல்லாம் இதில் பொருட்டே இல்லை. அவள் தனிமையில் ஒருவரை நம்பிச் செய்த விஷயம் துரோகத்தாலோ, கவனமின்மையாலோ வெளியே கசிந்து விட்டது. நம் எல்லோரையும் போல் தானே அவர்களும் நடந்து கொள்கிறார்கள். தொந்தரவு செய்யாமல் அதை அப்படியே அமைதியாய்க் கடந்து விடலாமே! அஃதல்லாமல் அதை வைத்துப் பொழுதுபோக்க என்ன இருக்கிறது? கலவியில் ஈடுபடும் நாய்களைக் கல்லால் அடித்துத் துன்புறுத்தி மகிழும் சேடிஸத்துக்கு சற்றும் குறைந்ததில்லை இது.
ஒரு ஸ்கேண்டலில் சம்மந்தப்பட்டவருக்கு நாம் செய்யும் ஆகச்சிறந்த உபகாரம் அதைப் பரப்பாமல் இருப்பதே. போலவே பெண்களும் கணவன் உள்ளிட்ட யாரையும் நம்பி பிரச்சனைக்குரிய எதையும் பகிராதிருப்பதே நலம். இப்போதைக்கு இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண்களே என்றாலும் ஆண்களும் சமமாய் அதிர்ச்சியுறும் காலம் தொலைவில் இல்லை (ஏற்கனவே ஓர் அசிஸ்டெண்ட் கமிஷனரின் டெலிஃபோன் உரையாடல் இருக்கிறது).
இணையத்தைப் பொறுத்தவரை நாம் இன்னும் பழங்குடி வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதிலும் நாகரீகத்தை நோக்கி நகர முயற்சிக்க வேண்டும். ‘நான்’ என்பது ஒழுங்கானால் ‘நாம்’ என்பது தானாய்ச் சரியாகும்.