அவ்வாறெனில் இது ஏன் இவ்வாறு நிகழ்ந்தது?
(நைஜீரிய நாட்டுச் சிறுகதை)
மூலம் – சினுவா ஆச்சுபி | தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை
“இனிய மாலை வணக்கம்” எனக் கூறியபடி ஓபி கதவைத் திறந்தார்.
“இனிய மாலை வணக்கம். நீங்கள்தான் ஒகொன்கோ ஐயாவா?” எனப் புதியவர் வினவினார்.
ஆமாமென ஓபி சொன்னதும் வீட்டுக்குள் நுழைந்த மனிதர், தன்னை ஓபிக்கு அறிமுகப்படுத்திக் கொண்டார். அக்பாடா என அழைக்கப்படும் காவியுடையை ஒத்ததும், நீண்டதும், விலை உயர்ந்ததுமான நவீன நாகரீகத்துடனான ஆடையொன்றை அவர் அணிந்திருந்தார்.
“உட்காருங்க.”
“நன்றி” எனக் கூறி விட்டு அமர்ந்த அப்புதியவர், தனது ஆடைக்குள்ளிருந்த பைக்குள் கையை விட்டு நீண்ட கைக்குட்டையொன்றையெடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டார்.
“ஐயாவுடைய நேரத்தை வீணாக்க நான் விரும்பல” எனக் கூறிய அவர் ஆடைக்குள்ளால் கையை விட்டு இரு கைகளினதும் அக்குள்களில் படிந்திருந்த வியர்வையையும் கைக்குட்டையால் ஒற்றித் துடைத்துக் கொண்டார்.
“என்னோட மகன், வர்ற செப்டெம்பர்ல இங்கிலாந்து போறதுக்கு இருக்கான். அரசாங்கம் கொடுக்குற புலமைப்பரிசிலொன்றை அவனுக்கு எடுத்துக் கொடுக்கணும்னு நான் விரும்புறேன். ஐயாவால இதைச் செய்ய முடியும்னா, இதோ இருக்கு ஐம்பது பவுண்.”
தனது ஆடையின் முன்புறப் பையிலிருந்து அவர் காசுத்தாள் கட்டொன்றை வெளியே எடுத்தார். எனினும் அவ்வாறான ஒன்றைத் தன்னால் செய்யமுடியாது என ஓபி அவருக்குத் தெளிவுபடுத்தினார்.
“சுருக்கமா சொன்னா, புலமைப்பரிசில் கொடுக்குறது நானில்ல. நான் செய்ற ஒண்ணே ஒண்ணுன்னா, விண்ணப்பப்படிவங்களப் பார்த்து, நாங்க கேட்டிருக்கிற தகைமைகள் உள்ளவங்களை புலமைப்பரிசில் குழுவுக்கு சிபாரிசு செய்றது மாத்திரம்தான்.”
“அதையேதான் ஐயா எனக்கும் செய்யணும்.” புதியவர் சொன்னார்.
“ஆனா நான் சிபாரிசு செஞ்சேன்கிறதுக்காக, குழு அதை ஏற்றுக் கொள்ளுமென நினைக்கேலாது.”
“அதப் பத்தி யோசிக்காதீங்க. ஐயாவோட பங்கை மட்டும் செய்யுங்களேன்.”
ஓபி அமைதியானார். அந்தப் பையனுடைய பெயர் ஓபிக்கு நினைவிலிருக்கிறது. அவனுடைய பெயர் இறுதிப் பட்டியலுக்குத் தெரிவாகியிருந்தது.
“ஏன் காசு செலவழிச்சு அவரை அனுப்பல? உங்கக்கிட்டதான் காசு இருக்கே? இந்தப் புலமைப்பரிசெல்லாம் காசு இல்லாத ஏழைப் பசங்களுக்குத்தான்.”
அதற்கு அப்புதியவர் சிரித்தார்.
“இந்த உலகத்துல எவர்க்கிட்டயும் காசில்ல” எனக் கூறியபடி அவர் எழுந்தார். காசுத்தாள் கட்டை ஓபி முன்னாலிருந்த மேசை மீது வைத்தார்.
“இது ஒரு சின்னப்பரிசு மாத்திரம்தான். எதிர்காலத்துல நாம நல்ல நண்பர்களாயிருப்போம். பையனோட பெயரை மறக்க வேணாம். நான் போயிட்டு வாறேன். க்ளப்புகள் எதற்கும் வர மாட்டீங்கள்ல? நான் ஒருநாளும் கண்டதில்ல.”
“நான் அதுல உறுப்பினரில்ல.”
“உறுப்பினராகியிருக்க வேணாமா?” அவர் தொடர்ந்தார். “போயிட்டு வாறேன்.”
காசுத்தாள் கட்டு அன்றைய நாள் முழுவதும், விடியும் வரையிலும் கூட அங்கேயே கிடந்தது. ஓபி அதனை ஒரு தாளால் மூடினார். கதவை இறுகச் சாத்தினார். ‘இந்த விடயமென்றால் மிகவும் கீழ்த்தரமானது’ அவர் தனக்குள்ளே சொல்லிக் கொண்டார்.
அன்றைய நள்ளிரவில் அவர் திடுக்கிட்டு விழித்தார். அதன் பிறகு நீண்ட நேரமாக அவருக்கு உறக்கமே வரவில்லை.
*
“நீ ரொம்ப அழகா ஆடுறே.”
அவள், அவரது உடலை இன்னுமின்னும் நெருங்கி வருகையில் அவர் சொன்னார். மேல் கீழாக, மிகவும் வேகமாக அவளது சுவாசக் காற்று வெளியேறியது. அதன்பிறகு அவர் அவளது கரங்களையெடுத்து தனது தோள்களைச் சுற்றிப் போட்டுக் கொண்டார். அப்போது அவளது இரு உதடுகளும், அவரது உதடுகளுக்கு ஒரு சென்றிமீற்றர் தூரத்திலிருந்தது. இசைக்கப்பட்டுக் கொண்டிருந்த சங்கீதத்தின் தாளம் குறித்த கவனம் அவர்கள் இருவரிடையேயும் இப்போது இல்லை. சற்று நேரத்திற்குப் பிறகு ஓபி அவளைத் தனது படுக்கையறைக்கு அழைத்து வந்தார். ஆரம்பத்தில் அவள் சற்றுத் தயங்கினாலும் பிறகு அவள் அதற்கு அனுமதியளித்தாள்.
தெளிவாகச் சொன்னால், அவள் தற்போது பள்ளிக்கூட அப்பாவி மாணவியொருத்தியல்ல. தனது கடமையை அவள் மிகவும் அறிந்திருந்தாள். எவ்வாறாயினும், அவள் இறுதிப் பட்டியலில் தெரிவாகியே இருந்தாள். எனினும் இங்கு நடைபெற்றது மிகவும் அநீதமானது. அது அவ்வாறில்லையென தெளிவுபடுத்துவதில் அர்த்தமில்லை. ஒருவர் குறைந்தபட்சம் தனக்கு மாத்திரமாவது நேர்மையாக இருத்தல் வேண்டும். சற்று நேரத்துக்குப் பிறகு அவர், அவளைத் தனது வாகனத்தில் ஏற்றிச் சென்று நகரத்தில் இறக்கி விட்டார்.
திரும்பி வரும் வழியில், இச்சுவையான கதையைப் பகிர்ந்துகொள்வதற்காக அவர், கிறிஸ்தோபரின் வீட்டுக்கும் சென்றார். அது பற்றி அவருடன் கலந்துரையாடி, சிரித்து மகிழ்ந்து, அதன் மூலமாக இறுதியில் அதனை மறந்துவிட அவரால் இயலுமாக இருக்கும். எனினும் அன்று அவர் அக்கதையைச் சொல்லவில்லை.
‘இன்னுமொரு நாள் சொன்னாலென்ன?’ என அவருக்குத் தோன்றியது.
*
“ஒகொன்கோ ஐயா நீங்கள்தானா?” அந்நிய மனிதனொருவர் வினவினார்.
“ஆமா”
ஓபி பதிலளித்தார். அவராலேயே அறிந்துகொள்ள முடியாதளவிற்கு அவரது குரல் மாறிப் போயிருந்தது.
அறை சுழலத் தொடங்கியது. அந்நிய மனிதர் எதையோ வினவிக் கொண்டிருந்தார். எனினும் காய்ச்சலில் விழுந்தவனுக்கு ஏதேதோ குரல்கள் தெளிவற்றுக் கேட்பது போல அது தொலைவிலிருந்து ஒலிக்குமொரு குரலாகக் கேட்டது.
அந்நிய மனிதர், ஓபியின் உடலைப் பரிசோதித்தார். சட்டைப்பையிலிருந்த காசுத்தாள்களைக் கையிலெடுத்தார். அதனைத் தொடர்ந்து அவர் எதனைப் பற்றியோ வினவத் தொடங்கினார். அழகியின் பெயரும் அதில் இழுபட்டது. சரியாகச் சொன்னால் கிராமப்புறங்களில் சட்டத்திற்குக் கட்டுப்படாது உசுப்பேற்றப்பட்ட காட்டுமிராண்டிகளின் முன்னால், மாவட்ட அதிகாரி கலவரக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை வாசிப்பது போன்றது அது. இதற்கிடையில் இன்னுமொரு மனிதர் ஓபியின் கதவருகேயிருந்த தொலைபேசியை நோக்கிச் சென்று பொலிஸாரை அழைத்தார்.
எவரும் தமக்குள்ளே கேட்டுக் கொண்ட கேள்வியொன்றிருந்தது. இது ஏன் இவ்வாறு நிகழ்ந்தது என்பது அது. கற்றறிந்த நீதவான் கூட, எம்மை முதன்முதல் கண்டபோது வினவியது, படித்த மனிதனொருவன் இவ்வாறான ஒன்றை ஏன் செய்தான் என்ற கேள்வியைத்தான்.
***