அவரன்றி யாரறிவார்?

கர்ணாசக்தி

 

மிகக் கலக்கமான ஒரு மனநிலையில் அந்தப் பாடலை ஒலிக்க விடுகிறேன்.

 

அது உரையாடலில் துவங்குகிறது, அந்த உரையாடல் குழந்தைத்தனமான அல்லது மனப்பிறழ்வு கொண்ட ஒருவனுக்கும், மனநெரிவு கொண்ட ஒருத்திக்கும் இடையே நடக்கிறது. மனம் கொண்டிருக்கும் கலக்கத்தினூடே அப்போதைய சூழலுக்கு ஏதோ ஒரு வகையில் அந்த உரையாடல் மிருதுவாகப் பொருந்தவும் செய்கிறது.

 

“இந்தா இத சாப்பிடு”

 

“இத சாப்பிட்டா அபிராமி வருவாளா?”

 

“முதல்ல தூக்கம் வரும்”

 

“அபிராமி?”

 

“வருவா, நீ படு”

 

“தூக்கம் வரலியே?”

 

“வரும் படு”

 

“தூங்கறதுக்கு இருட்டு வரலியே”

 

“வரும், அதுவும் வரும்”

 

“ம்ம் காத்தே வரலியே”

 

“அதுவும் வரும், படு”

 

“அத போட்டா சத்தம்தான் வரும்”

 

“வராது”

 

“வருமே”

 

“வராது, படு”

 

“அன்னிக்கு வந்ததே, எப்படி தெரியுமா? வரும், வரும், வரும், வரும், வரும்ம்ம் வரும்ம்ம்ம் வர்ம் வர்ம் வர்ம்”

 

இலேசான மின்விசிறியின் இரைச்சலுக்குப் பிறகு அந்த அற்புதம் நிகழ்கிறது, புல்லாங்குழலிருந்து காற்று கசிகிறாற் போல் பெயர் தெரியாத எதோவொரு ராகத்தில் ஜானகியம்மாவின் குரல் ததும்புகிறது. பிறகு மெலிதாக பியானோவும், தபேலாவும் உள்நெஞ்சில் உருள…

 

“உன்னை நானறிவேன், என்னையன்றி யாரறிவார்?

கண்ணில் நீர் வழிந்தால் என்னையன்றி யார் துடைப்பார்?

யாரிவர்கள்? மாயும் மானிடர்கள்.

ஆட்டிவைத்தால் ஆடும் பாத்திரங்கள்.

உன்னை நானறிவேன்.”

 

என நெஞ்சுக்கூட்டிற்குள் தேவகானமொன்று வயலின்களின் தந்தி வழியாக எறும்புகளின் நேர்த்தியான வரிசையோடு இனிமையான இசையை மெலிதாக நிரப்ப நிரப்ப, இன்னுமின்னும் அந்தப் பரவசம் நீளாதா என ஏங்கிக் கொண்டிருக்கும் அரை நொடிகளுக்குள்ளாகவே அந்த மாயாஜால இசை காதுகளை அல்லது உணர்வுகளை காதிதத்தில் செய்த விமானத்தில் ஏற்றியனுப்புவதைப் போல வேறொரு தேசம் நோக்கி அனுப்புகிறது.

 

கேள்வி ஞானம்தான். அவ்வளவு உறுதியாகத் தெரியவில்லை. அது கஜல் தேசமாக இருக்கலாம். தபேலாவின் மீது கைகளைக் கொஞ்சம் அழுந்த உரசியவாறு ஒரு மென்ராகம் மொழிகள் புரியாத புனித சோகம் ஒன்றை இசைக்கிறது. எங்கிருந்தோ நீள்கிற அந்த இரவின் சோகம் இருண்மையை நீட்டித்து மிருதுவாக மனதை அதில் பிடித்து அழுத்துகிறது. எந்த எதிர்ப்பும் காட்டத் தோன்றாமல் அதன் போக்கில் இசைந்து மனம் அதில் மூழ்கத்தொடங்கியிருக்கும் போதே. அடுத்த நகர்வு நிகழ்கிறது.

 

இது முன்பைப் போல தென்றல் தீண்டலாகவெல்லாம் இல்லை. என்னவென சொல்வது அதை? என்ன புனைவை இட்டு நிரப்புவது. திருவிழாத் தொலைவா? கொண்டாட்ட உணர்வா? மதுவின் களிப்பா? மகரந்தச் சேர்க்கையா? எதோ ஒரு துள்ளல். ஒரு இரப்பர் பந்தின் எகிறலைப்போல. வானவில்லில் இடம்கிடைத்த ஒரு வண்ணத்தின் மகிழ்ச்சியைப்போல. நனைந்து குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தவனைப் பிடித்து தரதரவென இழுத்து வந்து தீக்கட்டிகளின் முன் அமர்த்தியதைப் போல. வெண்ணிலவின் ஒளியில் தகிக்கும் ஒரு காயலின் மீது ஊர்ந்து செல்லும் படகில் மீனவர்களின் இசையினூடே நகர்வதைப்போல நங்கைகளின் குரலில் “ஒய்லாலோ அரே ஒய்லாலோ” என சுந்தரத் தெலுங்கில் ஒரு குத்தாட்ட இசை. அந்த ஆரம்பக் கலக்கத்தின் மிகத் தொலைவில் இப்போது மனம் மிதந்து கொண்டிருக்கிறது. அடுத்த சில நொடிகளில் நிகழ்கிறது இறுதி நகர்வு.

 

சாளரம் திறக்க முகத்தில் மோதும் இதமான ஒரு ஈரக்காற்றைப் போல, அன்புடைய ஒரு நெஞ்சம் கம்பளி போர்த்தி விடுவதைப் போல, இளஞ்சூட்டில் ஒரு கரம் மிருதுவாக தலையை வருடி விடுவதைப் போல, காதுகளில் ஓவியம் தீட்டும் தூரிகைப் போல, அன்னை மடிபோல, மார் தட்டி உறங்க வைக்கும் கைகள் போல, மிதமாகத் தொட்டிலை ஆட்டுவிப்பது போல, நினைவிலில்லாத தாலாட்டைப் போல ஒர் அன்னையின் குரலில் வீணைக் கம்பிகளை ஆசுவாசப்படுத்த நேரம் விட்டு மீட்டும் லாவகத்துடன் திரும்பவும் ஒலிக்கிறது.

 

“உன்னை நானறிவேன். என்னையன்றி யாரறிவார்?”

 

ஆம். என்னை, என் போன்ற நம்மை, நம் உள்ளத்தை, நம் உணர்வுகளை, நம் துக்கங்களை, நம் கொண்டாட்டங்களை இசை எனும் அச்சில் மெழுகாக உருக்கி நாமே அறியாத வண்ணம் நமக்குத் தேவையான வடிவத்தில் அமைத்துத் தர இளையராஜாவன்றி யாரறிவார்?

 

***

License

Icon for the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License

தமிழ் - மின்னதழ் 2 Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book