இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்!
இரும்புக் கரம் எப்போதும்
தன் சக்தியைப் பரிசோதித்து
நிறுவிக்கொண்டேயிருக்கிறது
கொட்டும் மழையில்
தோட்டத்துச் செடிகளுக்கு
ஒழுகும் சொம்பில் தண்ணீர் முகந்து
ஊற்றும்படி ஆணையிடுகிறது
ஊற்றுவோர் இலையில்
ஒரு தொடைக்கறி வைக்கிறது
எதிரில் எதிரில் வந்தும்
சலாம் போடாத கைகளுக்கு
விலங்கு பூட்டி உள்ளே தள்ளுகிறது
கண்ணாடிச் சுவர்களின் எல்லைகளுக்குள்
நீந்திக்கொண்டிருக்கும் மீன்கள் பார்க்க
ஒரு மீனை அள்ளி சுடுமணலில் போடுகிறது
உன் வாயில் திணிப்பதற்காக
அதுவே மலத்தையும் அள்ளுகிறது
அடுத்த முகூர்த்தத்தில் தாலி கட்டுவதாகச் சொல்லி
எல்லாவற்றையும் உருவிக்கொண்டு
விபச்சாரிப் பட்டமிட்டு கற்களை எறிகிறது
உறைப்புக்கு உனது தன்மானமும்
உப்புச்சுவைக்கு உனது கண்ணீரையும்
சேர்த்து வதக்கிய இதயங்களை
சப்புக்கொட்டித் தின்கிறது
தான் இழுத்த இழுப்புக்கெல்லாம்
வளையவரும் நீதிதான்
அதன் ஆசைக்குரிய கள்ளக் காதலி
வேறெங்கும் நகரவிடாமல்
உன்னைப் பந்தாக்கி ஓயாமல் விளையாடுகிறது
விசாரணைக் கைதியாக்கி வீண்கஞ்சி ஊத்தி
இறுதித் தீர்ப்பு வரைக் காத்திருக்காமல்
கண்களையும் கைகளையும் கட்டி
மண்டியிட்ட நிர்வாணத்தின்
முதுகில் தோட்டாக்களைச் செருகியது
உனது நெஞ்சுக்கு வந்த தங்க மெடலை
குறுக்கில் புகுந்து தன் நெஞ்சில் வாங்கிக்கொள்கிறது
அதன் ஆட்காட்டி விரலிலிருந்து
சீறிவரும் தோட்டா கண்டு திகைத்து முடிவதற்குள்
குண்டு உன் நெஞ்சில் நுழைந்தது.
*
பலரும்
பலரும் காதலிப்பதைப் பார்த்து
பலரும் காதலிக்கிறார்கள்
கல்யாணத்துக்குப் பிறகும்
பலரும் காதலிப்பதைப் பார்த்து
பலரும் காதலிக்கிறார்கள்
*
கலவி உரையாடல்கள்
1
நட்பு பக்தி பாசம்
இவையெல்லாம் காதலில் சேராது –
காமம் துளியாகிலும் கலக்காமல்
காதல் இல்லவேயில்லை.
2
உன்னைத் தொட்டுக்கொண்டேயிருக்க
அலைந்து தவிக்கிறேன் என்பது உண்மைதான்
தொட்ட சுகம்
தொடவிருக்கும் சுகம்
எல்லாம் கனவில் நிழலை அணைப்பது
தொடும் சுகம்
தொட்டுக்கொண்டிருக்கும்போது மட்டும்தான்.
3
இன்றெல்லாம் உன்னைப்
பார்க்கமுடியாது
குரல் கேட்கமுடியாதென்பது உறுதியாகிவிட்டது
உன்னுடைய புகைப்படத்தையே
ரொம்ப நேரம் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தேன்
உனக்கு இதைச் சொல்லியாகவேண்டும்
புகைப்படத்தில்தான் உன்னை
என் கவனம் சிந்தாமல், சிதறாமல்
பார்க்கவே முடிகிறது.
***