விளையாடுதலின் குரூரம்
குழந்தையொன்றைக்
கிள்ளி விட்டுப் பின்பு
அள்ளிக் கொள்வதைப்
போலான இவ்விளையாட்டு
பிடித்திருக்கிறது.
துரோகக் கைப்பிடி கொண்ட
கத்தியோ
பிரியத்திற்குரியவரின்
கோர மரணமோ
தீராப்பிணியோ
விருப்பமில்லாப் புணர்ச்சியோ
புறந்தள்ளலின் சோகையோ
தரவல்ல வலியை
உங்களுக்குக் கொடுத்தாலும்
கிள்ளி விடுவதும்
அள்ளிக் கொள்வதுமான
இவ்விளையாட்டு
எனக்குப் பிடித்தேயிருக்கிறது.
இப்படியொரு
விளையாட்டின் கசப்பான போதை
எல்லாத் திருப்பங்களையும்
போலன்றி எந்தத் திருப்பத்திலும்
ஒளிந்திருக்கலாம்
உங்களுக்காக!
அப்போது நாமிருவருமே
இணைந்து விளையாடக் கூடும்.
போலவே பிரிந்தும்.
*
இரட்சித்தலின் பொருட்டு நிகழும் சுவிசேஷம்
இயல்பினும்
இயல்பாக இயங்கும்
இக்கொலைக்களம்
மெல்ல மெல்ல
நிலமிறங்கும் முற்பகல்
வெயிலை ஒத்திருக்கிறது.
எதன் பொருட்டும் இதுவரை
சொற்களைச் சிந்தியிராத
நம் அபிமானக் கடவுள்
இங்குதான் காத்திருக்கிறார்.
அவரின் உச்சக் கிளர்த்தலே
நம் ஒவ்வொருவருக்குமான
மரண சாசனம்.
விடுமுறையும் ஓய்வும்
வழக்கில் இல்லை.
சிறிதும் வலியுணராமல்
உயிர் பிரித்து உய்ய
சிறப்பு வசதிகளுக்கும்
குறைவில்லை.
பதற்றமில்லாமல் காத்திருப்போம்.
*
தனித்தனி சூரியன்
ஒளி கரையும் மாலைகளில்
அவள் தினவைப்
பேசிச் சிரிக்கிறார்கள்
திண்ணைக் கிழவிகள்
இயலாமையின்
இரகசிய விகிதம்
சற்றே தளும்பி நிற்க,
அவளின் உச்சத்திலோ
பாலையின் ஆலங்கட்டியென
நாளது வரை நெருங்கி நின்ற
தொடுவானக் காவல்
தகர்கின்றது.
அவரவர் இரவு
அவரவர்களுக்கு!
*
நீ
எழுதிக் கொண்டிருக்கும்
பேனா முள்
பாம்பின் நாக்கினைப் போலவே
இரட்டைப் பிளவுகள்
கொண்டிருக்கிறது.
உன் நினைவுகளைத்தான்
விஷமாக்கி ஊற்றியிருக்கிறேன்.
தீண்டும் நொடிகள்
நீலமாகிப் பாரிக்கின்றன
காலம் அதை வெறும் மசி
என்றாக்கலாம்.
பின்னொரு நாள்
உதிர்ந்து காய்ந்த
பாம்பின் தோல் சட்டை போல
பிரிந்தும் போகலாம்.
***