அந்தரத்தில் இருக்கும் தனியன் நான்!”

நேர்காணல் : யுவன் சந்திரசேகர்

(ஒற்றைக் கையின்) விரல் விட்டு எண்ணுமவு செறிவான‌ சமகாலத் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர் யுவன் சந்திரசேகர். புனைவு, கவிதை, மொழிபெயர்ப்பு எனப் பரந்துபட்ட‌ தளத்தில் அமைந்தது அவரது படைப்புலகம். விமர்சனம், கருத்துரை என இன்று பரபரப்பை இழுத்து வரும் எதிலும் அதிகம் இவர் பங்களித்ததில்லை. அதனாலேயே அதிகம் கவனிக்கப்படாத‌, விவாதிக்கப்படாதவராக‌ இருக்கிறாரோ எனத் தோன்றுகிறது.

தமிழ் இதழுக்காக அவரை ஒரு ஞாயிறுக்கிழமை சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்தேன். மிக இயல்பாக நீண்ட அவருடனான சுமார் ஆறு மணி நேர உரையாடலில் தேர்ந்தெடுக்கப்பட்ட விஷயங்களின் தொகுப்பு இது.

1. இந்நேர்காணலை மின்னஞ்சல்வழி பல சுற்றுக்களில் முழுமையான மின்காணலாகத் திட்டமிட்டேன். முதல் இதழில் வெளியான ஜெயமோகனின் நேர்காணல் அப்படி எடுக்கப்பட்டதுதான். ஏற்கனவே சொன்னது போல் அப்படி எழுதச் செய்வது எழுத்தாளன் மனதில் இருப்பதை உகந்த நெருக்கமான சொற்களில் வெளிப்படுத்த, தேவைப்பப்பட்டால் திருத்தங்கள் சேர்க்க‌ ஏதுவாய் இருக்கும் என்பதால். ஹெமிங்வே தன் நொபேல் ஏற்புரையில் இப்படிச் சொல்கிறார்: A writer should write what he has to say and not speak it. ஆனால் உங்கள் நேரமின்மை பொருட்டு நாம் சந்தித்திருக்கிறோம். இதுதான் என் முதல் நேர்காணல். நேர்காணல் வடிவில் ஒரு நாவலையே (நினைவுதிர் காலம்) எழுதி இருக்கிறீர்கள். அப்படிப்பட்டவரை நேர்காணல் செய்யும் ஓர் கற்றுக்குட்டி எழுத்தாளனுக்கு / இதழாசிரியனுக்குப் பதற்றம் இருக்கவே செய்யும். எனக்கு இருக்கிறது.

கேட்பதும் ஒரே ஆள், பதில் சொல்வதும் ஒரே ஆள் என்றால் நேர்காணலை பிரமாதமாகச் செய்து விடலாம்!

2. எதற்கு எழுதுகிறீர்கள்? சிலர் புகழ் என்பர். சிலருக்கு ஈகோ. சிலருக்கு சுயதேடல். உங்களுக்கு எது?

ரொம்ப நேரடியான பதில். எனக்கு வாசிக்கப் பிடித்திருந்தது, வாசித்துக் கொண்டிருந்தேன். எழுதப் பிடித்திருக்கிறது, எழுதிக் கொண்டிருக்கிறேன். எதெல்லாம் எழுத வேண்டும் எனத் தோன்றுகிறதோ அவற்றை எல்லாம் எழுதுகிறேன். இதில் குறிப்பாக ஒரு விஷயம் சொல்ல வேண்டுமென்றால் பெரும்பாலும் எனக்குள்ளே என்ன தோன்றுகிறதோ அதைத் தணிக்கை செய்யாமல் அப்படியே எழுத வேண்டும் என்ற ஆசை உண்டு. அதைச் செய்து கொண்டிருக்கிறேன்.

3. உங்களின் உங்கள் பூர்வீகம், பெற்றோர், இளமைக் காலம், இலக்கிய ஆர்வம் பற்றிச் சொல்லுங்கள்?

இது ஒரு பெரிய vistas-ஐ என்னிடம் கோருகிறது. அவ்வளவு எல்லாம் குடும்பம் பற்றிப் பேச வேண்டும் என நான் நினைக்கவில்லை. என் அப்பா எனக்குப் பெரிய inspiration. மூன்றாம் வகுப்பு வரைதான் படித்தவர். அவருக்குப் பல மொழிகள் தெரியும். கிராமத்தில் ஒரு சிறிய உணவகம் நடத்திக் கொண்டிருந்தார் – one man hotel. அதில் இருந்துகொண்டே அவருக்குப் பெரிய இலக்கிய ஆர்வம் இருந்தது. கம்பராமாயாத்தில் அவர் ஒரு authority. பின்னாட்களில் கிருபானந்த வாரியார் போன்றவர்களின் உபன்யாசங்களைக் கேட்கும் போது இவர்களை எல்லாம் விட என் அப்பா நன்றாகக் கதை சொல்வார் எனத் தோன்றி இருக்கிறது.

கம்பராமாயணத்தை மனப்பாடமாகச் சொல்வார். அதிலிருக்கும் அத்தனை செய்யுள்களும் அவருக்குப் பாட பேதங்களோடு மனப்பாடம். சில இடங்களில் பாடியும் காட்டுவார். ராமாயணம், மகாபாரதம் போன்ற structured கதைகளுக்கு வெளியே இருக்கக்கூடிய உதிரிக்கதைகள் பலவற்றை எனக்குச்சொல்லி இருக்கிறார். கதை கேட்பதும், கதை சொல்வதைப் பார்ப்பதுமான இரட்டை அனுபவம் அப்பாவுடன் எனக்கு இருந்தது. என்னுடைய பதினொன்றரை வயதில் அவர் தவறிப் போனார். அதன் பிறகு இன்று வரை அவர் எனக்குத் தினமும் கதை சொல்லிக் கொண்டிருப்பதாகத்தான் நினைக்கிறேன். அதனால் அவர் தான் major inspiration.

அவருக்கு உருதுகூட எழுதப்படிக்கத் தெரியும். கிராமத்துச் சூழலில், வீட்டில் சொந்தமாக ரேடியோ கூட வைத்துக்கொள்ள முடியாத பொருளாதார நிலையில், அவருக்கு பிஸ்மில்லா கான் தெரிந்திருந்தது. நிலப்பரப்பு ரீதியாக அந்த கிராமம் வரை பிஸ்மில்லா கான் வருவதற்குரிய எந்த நியாயமும் கிடையாது. எதிர்ப்புறம் இருந்த மிலிட்டரி ஹோட்டலில் போய் அமர்ந்து இரவு ஒன்பதரை மணிக்கு மேல் அகில பாரத சங்கீத சம்மேளனக் கச்சேரி கேட்டு முடித்து விட்டுத்தான் வீட்டுக்குத் திரும்புவார். என் அம்மா, அக்கா எல்லோரும் கேலி செய்வார்கள், “ஷெனாய் கேட்கப் போயிருக்கார்” என.

அவரிடம் இருந்துதான் கதை சொல்லும் ஆசை எனக்கு வந்தது என நான் நினைக்கிறேன். ஆனால் அப்படி ஒரு ஆசை என்னுள்ளே இருக்கிறது என்பதைக் கண்டுகொள்ள அவர் இறந்து பத்து, பன்னிரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருந்தது. புதுமைப்பித்தன், கி.ராஜநாராயணன், கல்கி போன்றவர்களை வாசிக்க ஆரம்பித்த பின் அந்த ஆசை வெளிப்படையாக மலர்ந்தது.

4. ஜெயமோகன், சாரு நிவேதிதா இருவரும் தீவிரமாய் இணையத்தில் இயங்குகிறார்கள். இவர்கள் அளவு இல்லை என்றாலும் எஸ்.ராமகிருஷ்ணனும் சொல்லிக் கொள்ளுமளவு இணையத்தில் எழுதுகிறார். ஒருவகையில் பரவலான, புதிய, ஓரளவு நல்ல‌ வாசகர்களை அடைய இன்று இணையம் தேவையாய் இருக்கிறது என்பதே என் அபிப்பிராயம் (தமிழ் மின்னிதழாய் வருவதன் கிளைக் காரணங்களுள் அதுவும் ஒன்று). நீங்கள் ஏன் இணையத்தில் எழுதுவதே இல்லை? இணையத்தில் எழுதத் தொடங்கினால் உங்கள் எழுத்தில் தெறிக்கும் வாசிப்பின்பத்துக்கு தமிழ்ச் சூழலில் நீங்கள் ஸ்டார் எழுத்தாளர் ஆகி விடக்கூடும்.

புனைகதைகளை, கவிதைகளை நான் எழுதும் முறை பற்றி முதலில் சொல்லவேண்டும். இன்று எழுதியதை நாளை திருத்தி எழுதி, அதை அடுத்தநாள் திருத்தி, அப்புறம் ஆறுமாதம் போல ஆறப்போட்டு, மீண்டும் தோண்டியெடுத்துத் திருத்தி எழுதி என்கிற மாதிரி ஒருவித இடியாப்ப முறை அது. அதன் காரணமாகவே, இன்றுவரை உருப்படியான back-up எதையும் என் எழுத்துக்குப் பேண முடிவதில்லை. ஆக, அவற்றை எழுத எழுதத் தரவேற்றுவது என்பது – என்னளவில் – சாத்தியமான வேலை அல்ல.

அ-புனைவுகளைப் பொறுத்தவரை, இயல்பாகவே எனக்கு ஆர்வம் குறைவு. கருத்துக்கள் இன்று இருக்கும் – இன்றே கூட மாறிவிடும் என்கிற மாதிரி நிரந்தர நிலையாமை கொண்டவை என்று கருதுகிறேன். அவற்றைப் பதிவு செய்வதும், அடுத்த சந்தர்ப்பத்தில் எனது முரண்பாடு விமர்சனத்துக்குள்ளாவதுமான கோமாளித்தனங்களைத் தவிர்த்துவிடலாமே என்றுதான் எப்போதும் தோன்றும்.

தவிர, நான் முழுநேர எழுத்தாளன் அல்ல. கிடைக்கும் அவகாசம் மிகமிகக் குறைவு. இணையத்தில் ஏற்கனவே கொட்டிக்கிடக்கும் அக்கப்போர்களில் எனது பங்காகக் கொஞ்சம் சேர்க்க விருப்பமில்லை.

ஆனால், இவ்வளவும், இன்றைய மனோநிலை. நாளையோ, அடுத்த வருடமோ என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்!

ஸ்டார் எழுத்தாளன் ஆவதற்கான விழைவு ஆரம்ப காலத்திலிருந்தே எனக்குக் கிடையாது. ஆரம்பித்த காலத்தில் எனது கனவுகள் இரண்டேதான். ஒன்று, நான் விரும்பி வாசிக்கும் எழுத்தாளர்களுக்கு என்னுடைய எழுத்து பொருட்படுத்தத் தக்கதாக இருக்க வேண்டும். முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்களும், என் சமகாலப் படைப்பாளிகளும் அவ்வப்போது சொல்லும் அபிப்பிராயங்களைக் கேட்கும்போது, அந்த எல்லையைக் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டேன் என்றே தோன்றுகிறது!

இரண்டாவது, ஒரு சீரிய வாசகன், எனது பெயரைப் பத்திரிகையில் காணும்போது அதைத் தாண்டிப் போகக் கூடாது என்னும் ஆசை. இது நியாயமானது என்றே இப்போதும் படுகிறது. இதை எட்டிவிட்டேனா என்பதை அறிவது அவ்வளவு சுலபமான விஷயம் இல்லை – புத்தக விற்பனை எண்ணிக்கையை வைத்து அளவிடக் கூடியதும் இல்லை. அடுத்த முறை மத்திய அரசாங்கம் மக்கள்தொகையைக் கணக்கெடுக்கும் போது வேண்டுமானால், தமிழ்நாட்டுக்கு மட்டுமாக, இந்த ஒரு கேள்வியையும் ஒரு ஷரத்தாகச் சேர்த்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம்!

5. உங்கள் மகன் கெட்டுப் போய் விடுவான் என இணையம் பயன்படுத்துவதில்லை என நேர்ப்பேச்சில் நீங்கள் குறிப்பிட்டதாக சாரு நிவேதிதா ஓரிடத்தில் எழுதி இருக்கிறார். இப்போதும் உங்கள் நிலைப்பாடு அதே தானா? இணையம் அப்படி புதிய தலைமுறையைக் காவு வாங்குமளவு மோசமானதென எண்ணுகிறீர்களா?

திரு. சாரு நிவேதிதாவுக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். மரியா வர்காஸ் லோஸா, ரொஆல்ட் டால், ஜெர்ஸி கொஸின்ஸ்கி, அலெஜோ கார்ப்பெந்த்தியர் போன்று தமிழ்ச்சூழலில் அவ்வளவாக அறியப்படாத மிகப் பல பெயர்களை எனக்கு அறிமுகப்படுத்தியவர் அவர். என்னுடைய ஆரம்பநாள் கதைகளை நான் எழுத எழுத வாசித்து, எனக்கு அளப்பரிய உற்சாகம் தந்தவர். மரபான சிறுகதை வடிவத்தைக் கலைத்துப் பார்க்கும் தைரியம் எனக்குக் கிடைத்ததற்கு அவருடைய நட்பு ஒரு முக்கியமான காரணம். நண்பர்களுடனான விளையாட்டுப் பேச்சுக்களுக்கு வரையறை உண்டு என்ற ஞானம் சித்தித்ததற்கும்தான்!

உறவில் விரிசல் என்று ஏற்பட்ட பிறகு, சற்றுக் குறைத்தோ திரித்தோ பேசுவது சகஜம்தானே. ஆனால், ஒரு நட்பு முறியும்போது எனக்குள் உருவாகும் வெற்றிடம் நிரந்தரமானது என்றே உணர்ந்து வந்திருக்கிறேன். இன்னொரு புதிய நண்பர் வந்து நிரப்பிவிடக் கூடியதல்ல அது. பழைய நாட்களை அவற்றின் இனிமைக்காக மட்டுமே நினைவுகூர விரும்புகிறேன். இன்றைய எதிர்நிலை போன்றே, முந்தைய பிரியமும் நிஜமானது என்றே நம்ப ஆசை!

தவிர, எனக்கும் எனது குழந்தைகளுக்கும் ஏன், மனைவிக்குமான உறவுநிலை என்பது பொதுவெளியின் விவாதப் பொருள் அல்ல. எனது படைப்புகள் மட்டுமே வாசகத்தரப்பு பொருட்படுத்த வேண்டியவை.

மிக அதிகமான பார்வைக் குறைபாட்டை முன்னிட்டு, தடித்த கண்ணாடி அணிந்திருந்தவன் நான். பின்னர் அறுவை சிகிச்சை மூலம் அதை ஓரளவு சரிசெய்துகொண்டேன். ஆனாலும், அதிகாலையில் கண்விழித்த மாத்திரத்தில் பார்வை துலக்கமாய் இருக்காது. அது மெல்ல இயல்புநிலைக்கு மீளும்வரை, கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம், ஒளிரும் திரையைப் பார்ப்பது தவிர வேறு வழியில்லை. அந்த நேரத்தில் இணையத்தை ஆர்வமாய் மேய்ந்துகொண்டிருப்பேன். அபூர்வமான சாஸ்திரீய இசைத் தொகுப்புகளும், மின் நூல்களும் அகப்படும். அந்த நாளை உற்சாகமானதாக ஆரம்பிக்க வகை செய்யும்.

எனவே, நான் இணையவிரோதி அல்ல!

6. எழுத்தாளர்கள் பொதுவாய் இலக்கியம் தாண்டி அரசியல், சமூகம் குறித்த தங்கள் கருத்துக்களைத் தொடர்ந்து பதிவு செய்வது தமிழ் சிற்றிதழ் வழக்கம். அசோகமித்திரன், சுந்தர ராமசாமி தொடங்கி தற்போது ஜெயமோகன் வரை இது தொடர்கிறது. ஆனால் நீங்கள் உங்கள் புனைவுலகம் தாண்டி வேறு பேசியோ எழுதியோ அறிந்ததில்லை. ஏன் அப்படி ஒரு மௌனம்? அது திட்டமிட்டு மேற்கொண்ட முடிவா?

சிற்றிதழ் வழக்கம் என்று நீங்கள் குறிப்பிட்டதால், இலக்கியம் தவிர வேறு எதுவுமே எழுத்தில் பதிவுசெய்யாத எனது முன்னோடிகளின் பெரும் பட்டியல் நினைவுக்கு வருகிறது! மணிக்கொடி எழுத்தாளர்களில் பெரும்பாலானவர்கள் அன்றைய அதிதீவிர சமூக நெருக்கடியான சுதந்திரப் போராட்டம் பற்றி எதையுமே எழுதவில்லை என்பதுவும்தான்.

எழுத்தாளனின் படைப்புச் செயல்பாட்டுக்கும், இதுபோன்ற நிலைப்பாட்டுக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது என்றே நினைக்கிறேன். அவனுடைய கவனம் குவியும் பிரதேசம் எது என்பதைப் பொறுத்தது அது.

7. சமூகம், அரசியல் போன்ற விஷயங்களை விடுங்கள். இசை, நடனம், சினிமா உள்ளிட்ட நிகழ்த்து கலைகள் தனிநபர் அனுபவம் சார்ந்தவை, அதனால் அவை குறித்து எழுதுவதில்லை என ஒருமுறை குறிப்பிட்டிருக்கிறீர்கள். இலக்கிய உலகம் பற்றிக் கூட நீங்கள் மூச்சு விடுவதில்லையே? சமகாலப் படைப்புகளை வாசிக்கிறீர்களா? அது பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன? உங்களைக் கவர்ந்த இளம் எழுத்தாளர்கள் யார்? இலக்கிய விமர்சனம் எழுதினாலே குழு அரசியல் முத்திரை விழுகிறதா?

கடைசிக் கேள்விக்குத் தான் முதலில் பதில் சொல்ல வேண்டும். ஆமாம் விழுகிறது. அப்புறம் இன்னொரு விஷயம் – இலக்கிய விமர்சனம் எழுதாவிட்டாலும் குழு முத்திரை விழத்தான் செய்கிறது. அது தமிழ்ச் சூழலில் தவிர்க்க முடியாத ஒன்று. அதனால் அப்படி முத்திரை விழுவதைப் பற்றி சீரிய எழுத்தாளன் பொருட்படுத்த மாட்டான். அவனுக்குச் சொல்ல ஒரு விஷயம் இருக்கிறது, சொல்லும் ஒரு விதம் இருக்கிறது. இரண்டிலும் அவன் பிடிவாதமாக இருப்பான் என நினைக்கிறேன்.

வாசிப்பு updation பற்றிக் கேட்டீர்கள். இன்று அப்படி இருப்பது சாத்தியமே இல்லை. நான் எழுத வந்தபோது இரண்டு அல்லது மூன்று பதிப்பகங்களே இருந்தன. க்ரியா, அன்னம் போல். வருடத்துக்கு மூன்று அல்லது நான்கு புத்தகங்கள் போடுவார்கள். பல தடைகளை, பல சல்லடைகளைத் தாண்டித் தான் ஒரு புத்தகம் அச்சுக்கு வரும். அவற்றை உடனடியாகப் படித்து விடுவோம். ’பிறகு’ வந்ததென்றால் அதற்கு அடுத்த மாதம் படித்திருப்பேன். ’ஜேஜே – சில குறிப்புகள்’ வந்ததென்றால் அதற்கு அடுத்த மாதம் படித்திருப்பேன். அசோகமித்திரன் தொகுப்பு வந்ததென்றால் அதற்கு அடுத்த மாதம் படித்திருப்பேன். இந்த மாதிரி உடனடியாக ஒரு updation சாத்திய‌மாய் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் கி.ராஜநாராயணன், அசோகமித்திரன் எழுதிய அத்தனையுமே வாசித்திருக்கிறேன். தி.ஜானகிராமன், ஜி.நாகராஜன் என update செய்து கொள்ள முடியும். இப்படி ஓர் எழுத்தாளைரையோ, அந்த ஆண்டு வெளியான புத்தகங்களையோ update செய்து கொள்ள முடியும்.

இன்று அப்படி இல்லை. நூற்றுக்கணக்கான புத்தகங்கள் வெளியாகின்றன. அதனால் இதில் தேர்வு என்பது பிரச்சனையாக இருக்கிறது. புதிதாக ஒரு பெயர் வந்ததென்றால் முதல் பத்து பக்கங்களில் அது எனக்கு நம்பகமானதாக இருக்க வேண்டும். நான் அப்படி வாங்கி, பத்து பக்கம் படித்து, இருபது பக்கம் படித்து, இருநூறு பக்கம் படித்து, நேரம் விரயம் ஆகிறது, வேண்டாமென‌ கீழே வைத்த புத்தகங்கள் நிறைய உண்டு. பெயர்கள் சொல்லலாம். ஆனால் அதனால் வேண்டாத அசௌகர்யங்கள் கேட்பவர்களுக்கு வரும்.

மற்றபடி, இளம் படைப்பாளிகளைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டுதான் இருக்கிறேன். பல பேர் சம்மந்தமாக அதில் ஏமாற்றங்களைச் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஏமாற்றம் எதனால் வருகிறதெனில் ஒன்று ஒரு புத்தகத்துக்குள் consistency இருக்க வேண்டும் அல்லது அவர‌து படைப்புலகத்துக்குள் consistency இருக்க வேண்டும் – சீர்மை என்ற வார்த்தையை இங்கே உபயோகிக்கலாம். அல்லது அந்த வடிவம் சம்மந்தமாக அவருக்கு முழுப் பிரக்ஞை இருப்பதாக அப்புத்தகத்திலிருந்து தெரிய வர வேண்டும். இந்த மாதிரியான நம்பகத்தன்மை கொண்ட இளம் எழுத்தாளர்கள் மிகக் குறைவாகவே இருக்கிறார்கள்.

இப்போது இரண்டு, மூன்று பெயர் குறிப்பிட முடியும். ஆனால் அடுத்தடுத்த‌ படைப்புகளில் அவர்களே அந்த நம்பிக்கையை முழுக்க உடைத்து விடும் அபாயம் இருக்கிறது.

அடுத்த‌ விஷயம் ஒரிஜினல் குரல் கேட்பது மிக அபூர்வமாக இருக்கிறது. ஜெயமோகன் சாயல் இருக்கிறது, கோணங்கி சாயல் இருக்கிறது. சாரு நிவேதிதா சாயல் இருக்கிறது, எஸ்.ராமகிருஷ்ணன் சாயல் மிக நிறைய இருக்கிறது. இதுபோல நிழ‌ல்கள்தாம் நிறைய நடமாடுகின்றன.

இதில் ஒரிஜினலாக ஒரு குரலைக் கேட்டு விட மாட்டோமா என மிக ஆசையாக இருக்கிற‌து. சில நேரம் எனக்கு ஒரு தயக்கம் வருகிறது. எனக்கு வயதாகிக் கொண்டிருக்கிறதோ? இக்குரல்களில் புதிதாக ஏதும் எனக்குக் கேட்கக் தெரியலையோ எனத் தோன்றுகிறது. ஆனால் வருடத்திற்கு மூன்று, நான்கு ஆங்கில எழுத்தாளர்கள் புதிய குரல்களாக எனக்கு அறிமுகம் ஆகிறார்கள். 3 வருடங்கள் முன்பு தான் இஸ்மாயில் காதர் என்ற பெயரே எனக்கு அறிமுகம். ஆனால் அவர் மீது சொக்கிக் கிடக்கிறேன். அவரை முழுக்கப் படித்து விட வேண்டும் என ஆசைப்படுகிறேன். அப்படி ஒன்று இங்கே கிடைக்க மாட்டேன் என்கிறது.

இத்தனைக்கும் அவர்கள் எல்லோரும் ஆங்கிலம் வழியாகக் கிடைக்கிறார்கள். வெவ்வேறு மொழியில் எழுதுபவர்கள். சிலேவிலிருந்து ஒருவர், பெருவிலிருந்து ஒருவர், அர்ஜென்டினாவிலிருந்து ஒருவர். இவர்கள் எல்லோரிடமும் ஒரிஜினலாக ஏதோ ஒன்று எனக்குக் கேட்கக் கிடைக்கிறது.

இது ஆங்கிலம் மீதான மயக்கம் அல்ல. இன்னும் சொல்லப் போனால் ஒரு மொழிபெயர்ப்பை விட இன்னொரு மொழிபெயர்ப்பு மோசமாக இருப்பதை அடையாளம் காண முடிகிறது. உதாரணமாய் போர்ஹேஸுக்கே ஜியோவானி கலெக்‌ஷன்ஸ்தான் தரமான மொழிபெயர்ப்பு என்ற பிரமை எனக்கு உண்டு. அதனால் ஆங்கிலம் என்று இதைக் குறுக்கிப் பார்த்து விட முடியாது.

அப்படி ஒரு அகலமான, பரந்துபட்ட அசல் குரல்களைத் தமிழில் கேட்பதற்குக் காத்திருக்கிறேன்.

சமீபத்தில் கவிதைகளில் இசையின் குரல் எனக்கு மிகப் பிடித்திருக்கிறது. அக்குரல் மிக வித்தியாசமாய் இருக்கிறது. முதிரா மனத்தின் முதிர்வு ஒன்று அதில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிற‌து. ஆனால் இன்னும் பத்து வருடம் கழித்தும் இசை தொடர்ந்து இப்படியே எழுதிக்கொண்டே இருப்பார் என்றால் அவர் எனக்கு என்ன மாதிரியான திருப்தியைக் கொடுப்பார் என இப்போது சொல்ல முடியவில்லை.

அதுபோலவே எஸ்.செந்தில்குமாரின் கதைகளில் மிக அபூர்வமான தருணங்களும், கதைக்கள வேறுபாடுகளும் காணக் கிடைக்கின்றன. ஆனால் அவர் எஸ்.ராமகிருஷ்ணனின் மொழிக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறார். அவருடைய‌ ஒரிஜினல் வாக்கியம் ஒன்றை எழுதி, படித்துப்பார்க்க வேண்டும் என ஆசையாய் இருக்கிறது.

இலக்கிய விமர்சனம் ஏன் செய்வதில்லை என்பது பற்றி. நான் விமர்சகன் அல்ல. எனக்கு எல்லாவற்றின் மீதும் விமர்சனம் உண்டு. ஆனால் விமர்சகனாய்ச் செயல்பட விமர்சன அறிவு மட்டும் போதாது, அதைப் பதிவு செய்வதற்கான ஒரு மொழி நடையும் ஒரு conviction-ம் வேண்டும். என் கருத்துக்கள் மீது எனக்குத் தீவிரமான பற்று கிடையாது. இப்போது ஒன்று நினைத்து, அடுத்த நிமிடம் அதை மாற்றிக் கொள்ளத் தயாராய் இருக்கும் volatile-ஆன மனம் என்னுடையது. இந்த அளவில் இருந்து விமர்சனம் செய்யக்கூடாது. சில மதிப்புரைகள் எழுதி இருக்கிறேன். நானே அவற்றைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

8. உங்கள் எழுத்து எப்படி நிகழ்கிறது? திட்டமிட்டு ப்ரக்ஞைப்பூர்வமாகவா அல்லது உங்களை மீறிய ஒரு பெருவெடிப்பாகவா? ஜெயமோகன் இரண்டாவது வகையிலேயே எழுதுவதாகச் சொல்கிறார். நினைவுதிர் காலம் நாவலில் ஸ்ரீ ஹரிசங்கர் தீட்சித் ஒரு கட்டத்துக்கு மேல் உங்களை மீறி / விடுத்து தானாகவே பேச ஆரம்பித்தார் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். பொதுவாய் வாசித்ததை வைத்து எனக்கு உங்கள் எழுத்து ரஹ்மானின் இசை போல் ஒரு craft-ஆகப் படுகிறது. வெளிக்கொணர்வதற்கும் வெளிப்படுவதற்கும் இலக்கிய அந்தஸ்தில் ஏதேனும் வித்தியாசம் இருப்பதாக நினைக்கிறீர்களா?

நல்ல கேள்வி. Spontaneity என்ற சொல்லும் craft என்ற சொல்லும் ஒன்றுக்கொன்று எதிரானது என்பது போல் நாம் புரிந்து வைத்திருக்கிறோம். எந்தவொரு spontaneity-க்குப் பின்னாலும் ஒரு craft இருக்கும். எந்தவொரு craft-க்கும் பின்னால் ஒரு spontaneity இருக்கும். அவை இரண்டும் நாணயத்தின் இரு பக்கங்கள் போல. முதுகொட்டி இருக்கும் சயாமீஸ் இரட்டையர் போல. Spontaneity எனக்குள் தன்னிச்சையாக இயல்பாக ஒரு கருத்து உருவாகும் போக்கை அனுமதிக்கும். ஆனால் எங்கே ஆரம்பித்து எங்கே முடிக்கப் போகிறேன் என்பதை நான் தான் பிரக்ஞைப்பூர்வமாக‌ முடிவு செய்கிறேன் – கவிதை, சிறுகதை, நாவல் எதுவாய் இருந்தாலும்.

ஒரு நாவலின் கடைசி வரியை நான் அறிந்தே தீர்மானம் செய்கிறேன். என்னை அறியாமல் என் பேனா தானாகவெல்லாம் நிற்காது.

80களின் முடிவில், 90களின் துவக்கத்தில் automatic writing என்ற விஷயம் ஒரு concept-ஆகத் தமிழுக்கு வந்தது. Automatic writing எனில் சரஸ்வதி நாக்கில் எச்சிற் தம்பலம் துப்பி, அதிலிருந்து கலகலவென எழுத்து கொட்டும் என்பதாக‌ நான் புரிந்து கொள்ளவில்லை. ஒரு thread ஆரம்பிக்கையில் மனத்தின் வேகம் அபரிமிதமாய்ப் பொங்கி, பல வரிகள், பல பக்கங்கள் மனத்தடை இன்றி தொடர்ந்து எழுதிக் கொண்டே போனால் அதை நான் automatic writing என்பேன். நகுலனின் பல படைப்புகள் atomatic writing போல‌த் தோன்றும். அப்படி அல்ல. Automatic writing-ல் உரிய இடத்தில் ஓர் உரிய வார்த்தைப் பிரயோகம் வந்து விழுமென நான் நினைக்கவில்லை. மனம் அதற்கான பத நிலையில் இருக்கிறது, அதற்கான பயிற்சியில் தொடர்ந்து காலங்காலமாக இருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் அது கட்டற்றுத் தன்னைத் திறந்து கொள்கிறது.

இப்போது உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கும் பதில்கள் எதுவும் ஒத்திகை பார்க்கப்பட்டது அல்ல; உங்களிடமிருந்து இந்தக் கேள்விகள் வரும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் கேட்ட மாத்திரத்தில் தடையில்லாமல் பேசிக் கொண்டே போகிறேன் அல்லவா, இது போன்றதுதான் Automatic writing என நினைக்கிறேன்.

அதே போல் Autofiction. இந்த auto என்ற முன்னொட்டு சேரும் எல்லாவற்றிலும் குழப்பம். Autofiction என்றால் டைரி எழுதுவது என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும் எழுத்தாளர்களே உண்டு. அது அப்படி இல்லை. நாட்குறிப்பு போல, சுயகுறிப்பு போலத் தென்படக்கூடிய புனைகதைகள்.

என்னுடைய‌ எழுத்துக்கள் பலவற்றை வாசித்து விட்டு கிருஷ்ணனும் வங்கியில் வேலை செய்கிறான், அப்படியானால் அவனது கதைகள் எல்லாம் உன்னுடைய அனுபவங்களா? எனக் கேட்கிறார்கள். இதுவரை எழுதிய கிருஷ்ணன் கதைகள் அனைத்தையும் நான் வாழ வேண்டும் என்றால் நான் மூன்று ஜென்மங்கள் வாழ்ந்தாக வேண்டும், குறைந்தது பத்து முறை தற்கொலை செய்து கொள்ள வேண்டும். அவ்வளவு எளிமையாகத் தமிழ் வாசக மனம் யோசிக்கிறது என்பது சில சமயங்களில் சலிப்பாக இருக்கிறது.

ஒரு சொற்றொடரைத் தவறாகப் புரிந்துகொண்டு எழுத்தாளன் மேல் போட்டுப் பார்ப்பது பொறுப்பற்ற‌ செயல். அந்த சொற்றொடரைத் தன்னளவில் புரிந்துகொள்ள முயல வேண்டும். அப்படி அல்லாமல் abuse-ஆன வார்த்தைகள் தமிழ் படைப்புச் சூழலில் கொட்டிக் கிடக்கின்றன. உதாரணமாக படிமம், ப்ரக்ஞை, வெளி. இப்படியான‌ சொற்கள் எல்லாம் கவனமின்றி உதிர்க்கப்படும் வார்த்தைகளாக இருக்கின்றன.

ஒரு படைப்பின் கரு உருவாகும் விதம் இன்னமும் மர்மமானதாய்த்தான் இருக்கிறது. ஆனால், அது சற்றுத் தெளிவுறும்விதமாகத் திரண்ட பிறகு, அதற்கு ஓர் உருவம் அளிப்பதில் பிரக்ஞைபூர்வமான செயல்பாட்டின் பங்கு அதிகம். ஆனாலும், ஒரு குறிப்பிட்ட விகிதம் ஆழ்மனச் செயல்பாடும் அதில் கலந்திருக்கிறது. உதாரணமாக, ஒரு தரிசனம் போல வாய்க்கும் கருவுக்குக் கதாபாத்திரங்களையும், கதைச் சூழலையும் கோக்கும் பணியில் மனத்தின் இரண்டு தளங்களுமே ஈடுபடுகின்றன. எதிர்ப்புறத்தில், ஒரு கதாபாத்திரத்தை, அல்லது கதைக்கான சூழல் தன்னிச்சையாக உதித்து, அதன் ஆதாரப் புள்ளியைத் தேடும் வாக்கியங்களின் வழி பயணம் தொடரும்போதும் இதுவேதான் நிகழ்கிறது. முழுவதும் எழுதி முடிக்கப்பட்ட பிறகு, நான் உத்தேசிக்கும் இலக்குக்கு மிக நெருக்கமாக அதை நகர்த்திக்கொண்டு போவதில்தான் படைப்பின் வெற்றி என்று நான் கருதும் அம்சம் உறைந்திருக்கிறது.

ஆக, கருவைத் தரித்த அதே ஆளுமையை வாசகர் சந்திப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவுதான். உருவம் கொடுக்கும்போது செயல்படுகிற தொகுப்பாளனுடன்தான் வாசகனுக்குப் புழங்கக் கிடைக்கிறது. மிகமோசமான எழுத்து நடைகொண்ட நல்ல கருக்களுக்கும், மிக நல்ல நடை கொண்ட சராசரி எழுத்துக்களுக்கும் தமிழில் பஞ்சமே இல்லை. எல்லா எழுத்தாளர்களுக்குமான ஒரு பொது எழுத்து உத்தியைக் கண்டுபிடித்துவிட/ வரையறுத்துவிட முடியும் என்று தோன்றவில்லை!

என்னுடைய எழுத்தைப் பொறுத்தவரை நான் எப்படி எழுதுகிறேன் என்பதைத் தீர்மானமாகச் சொல்ல முடியாது. எம்எஸ் விஸ்வநாதன் போன்ற இசையமைப்பாளர்கள் சொல்கிறார்கள் – சில சமயம் மெட்டுக்குப் பாடல் எழுதுகிறார்கள், சில சமயம் பாடலுக்கு மெட்டு அமைக்கிறேன் என. அது போல் சில சமயம் ஒரு ourline தயார் ஆகிவிடும். அதனுள் colouring மட்டும் செய்து கொண்டே போவேன். இது ஒரு process, சில சமயம் வேறொரு process இருக்கிறது. இஷ்டம் போல் தீட்ட ஆரம்பித்து அது தானாய் ஒரு வடிவத்தை வந்தடைவது. அப்போது அந்த வடிவத்தைச் சிதைக்காதபடி அதன் மேலே ஒரு frame-ஐப் பொருத்திப்பார்ப்பது.

குறுநாவல் அளவிலான 60 – 70 சிறுகதைகள், ஐந்தாறு நாவல்கள் என நான் எழுதியிருக்கும் அனைத்துக்குமே ஒரே மாதிரியான படைப்பூக்கம், படைப்புப் பாணி இருக்கும் என எதிர்பார்ப்பதே சரியில்லை. ஒவ்வொன்றுமே ஒவ்வொன்றை demand செய்யும். அந்தக் கதை அல்லது நாவல் என்ன கோருகிறதோ அதைக் கொடுக்கத் தயாராகவே இருக்கிறேன். ஒருவேளை தயார் நிலையில் இல்லை எனில் தயார்படுத்திக் கொள்வேன்.

உதாரணமாக என் கதையில் வரும் ஒரு பேராசிரியர் பாத்திரம் புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டினால் நன்றாய் இருக்கும், பழந்தன்மை சேரும் என நினைத்தால் அதற்குத் தேவையான அளவு மட்டும் புறநானூற்றை வாசிப்பேன். சமீபத்தில் ஒரு கதையில் திரிகடுகத்திலிருந்து ஒரு பாடலை மேற்கோள் காட்டி இருந்தேன். இதற்காகத் தேடி திரிகடுகத்தைப் படித்ததுதான் – என் அப்பா திரிகடுகம் சொல்லிக் கொடுத்து, அது என் ஞாபக‌த்தில் இருந்து கதையில் நுழைந்தது என்பதல்ல. ஆனால் அது போல் தொனிக்க வைப்பதுதான் எனக்கான சவால். வாசிப்பவருக்கு அப்படித் தோன்றினால் அதில் நான் ஜெயித்ததாக அர்த்தம்.

9. ஒரு நல்ல எழுத்தாளனால் காமத்தை எழுதாமல் இருக்க முடியாது என்பது என் அபிப்பிராயம். காமம் தாண்டி சமூக விதி மீறிய உறவுகள் தொடர்ந்து உங்கள் புனைவுகளில் பேசப்படுகிறது. சமூகத்தை ஊடுருவிப் பார்க்கும்போது நம்மைச் சுற்றி இதெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது என்பது புலப்படும். அவ்வளவு ஏன், தினத்தந்தியை ஒரு வாரம் வாசித்தாலே போதும். நாமே கள்ளக்காதலில் இருப்பதான பிரமை தட்டும். உங்கள் எழுத்தின் முக்கியக்கூறாக இந்த விதி மீறல் குறித்த விஷயங்களைப் பார்க்கிறேன்.

சுவாரஸ்யமான கேள்வி. என் எந்தப் படைப்பையும் வாசிக்காமல், இந்த நேர்காணலின் மற்ற கேள்விகளையும் வாசிக்காமல் இதை மட்டும் படிக்கும் ஒரு வாசகருக்கு நான் முழுக்க முழுக்க கொக்கோகம் எழுதும் ஒருவன் என்பதாய்த் தோன்றும். உண்மையில் நான் அவ்வளவு எழுதி இருப்பதாகத் தோன்றவில்லை. நான் எழுத வேண்டும் என ஆசைப்படுள‌மவு கூட இன்னும் எழுத‌வில்லை.

இன்னும் நிறைய எழுதுவேன். ஒருவேளை வயது கூடக்கூடக் காமம் பற்றிய இன்னும் வேறு பார்வைப் புள்ளிககள் கிட்டுமோ என்னவோ. அப்போது அவற்றையும் எழுதிப் பார்ப்பேன்.

எழுத்தாளனால் காமத்தை எழுதாமல் இருக்க முடியாது என ஒப்புக் கொள்கிறேன். அதே போல் எழுத்தாளனால் உறவுகளைக் குறித்தும் எழுதாமல் இருக்க முடியாது.

உறவு என்றால் என்ன? ஒன்று சக ஆணுடனான‌ உறவு அல்லது சக பெண்ணுடனான உறவு. இதில் நான் முதலாவதைத்தான் நிறைய எழுதி இருக்கிறேன். பாலுறவு சார்ந்த உறவைச் சொல்லவில்லை. ஆணுக்கு ஆணோடு இருக்கும் நட்பையும், நட்பு சிதைதலையும் திரும்பத் திரும்ப எழுதி இருக்கிறேன். அதேபோல ஆணுக்குப் பெண்ணோடு இருக்கும் நட்பையும், நட்பு சிதைதலையும் எழுதி இருக்கிறேன். ஒரே வித்தியாசம் பெண்ணுடனான நட்பு இயல்பாகவே அடுத்த நிலைக்கு நகர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

நான் காமத்தைப் பாலுணர்வுச் சித்திரமாக மட்டும் என் கதைகளில் பதிவு செய்யவில்லை. எந்த அளவில் காமம் எழுதப்பட வேண்டியதாக இருக்கிற‌தோ, அந்த அளவுக்கு மட்டும்தான் எழுதி இருக்கிறேன். அதைத் தாண்டி, கிளுகிளுப்பு ஊட்டுவது போல் ஓரிடத்தில் கூட போக‌வில்லை என உறுதியாகச் சொல்ல முடியும்.

காமம் தொடர்பான விசாரணையை உருவாக்கும் விதமாகவே நான் சில பாத்திரங்களை, சந்தர்ப்பங்களை கதைகளில் உருவாக்கி இருக்கிறேன். உதாரணமாக காளை மாட்டுக்குப் பசுவின் மீது உண்டாகக்கூடிய காதல் என்பது அதன் மடுவைப் பார்த்து அல்ல என ஓரிடத்தில் எழுதி இருக்கிறேன். பாலுணர்வு என்பது மற்ற உயிரினங்களுக்கு எல்லாம் உடல் சார்ந்ததாக மட்டும் இருக்கும்போது. மனிதனுக்கு மட்டும் மனம் சார்ந்ததாகவும் மாறுவது தொடர்பான ஆச்சர்யம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது.

பருவம் தவறி ஒரு நான்கு கால் பிராணி இன்னொரு நான்கு பிராணியை இணையாகத் தேடி ஓடாது. ஆனால் மனிதனுக்கு வருடத்தின் எல்லா நாளுமே காமத்துக்கு இசைந்த நாளாக இருக்கிறது. இது ஓர் ஆச்சரியம். இது எப்படி நடந்தது? ஏன் நடந்தது? அப்படியானால் அது உடலின் தேவையால் மட்டுமல்ல, மனதில் பதிந்திருக்கும் பிம்பங்களின் காரணமாகவும்தான். காமம் தொடர்பான ஒரு மாறாத பிம்பம் நம் மனதில் இருக்கிறது, அப்பசியைத் தீர்ப்பதற்கான இடத்தை நோக்கி போய்க்கொண்டே இருக்கிறது மனித குலம்.

இதைப் பற்றித்தான் பேச நினைக்கிறேன்.

10. சென்ற‌ கேள்வியின் தொடர்ச்சியாக ஒரு விஷயம். காமத்தை, விதிமீறல்களைப் பற்றியதாக இருந்தாலும் ஜி. நாகராஜன் போல விளிம்புநிலை மனிதர்களைப் பற்றியதாக அல்லாமல் நாம் தினசரி சந்திக்கக்கூடிய மனிதர்கள் குறித்ததாக உங்கள் புனைவுகள் அமைகின்றன. ஓர் ஆரம்ப நிலை வாசகனுக்கு உங்கள் எழுத்து தரும் அதிர்ச்சியே அதுதான். ஒருவகையில் அதுவே அவனுக்கான வசீகரமும் கூட. மிக மிக மேலோட்டமாக ஒப்பிட்டால் கே.பாலச்சந்தர் சினிமாவில் இதைத்தான் செய்தார். இதைக் கனமான கூறாக் கருதுகிறீர்களா?

இதில் இரண்டு பெயர்கள் பயன்பட்டிருக்கிறது. ஒன்று ஜி. நாகராஜன், இன்னொன்று கே. பாலசந்தர். இவர்கள் இருவரும் ஒரே கேள்வியில் இடம்பெறும் சந்தர்ப்பம் பத்து வருடங்கள் முன் சிற்றிதழ்ச் சூழலில் இருந்திருக்குமா எனக் கேள்வி எழுகிறது எனக்குள்!

ஜி.நாகராஜன் எழுத்திலிருக்கும் சரளத்தன்மை, so-called பிறழ்வுகள், கே.பாலச்சந்தர் படங்களிலிருக்கும் சரளத்தன்மை, பிறழ்வுகளைக் காட்டும் தைரியம் – இந்த இரண்டு தவிர இவ‌ர்களுக்குள்ளேயே எந்த ஒற்றுமையும் இல்லை. என்னிடம் இக்கேள்வி வருவதையும் அப்படியேதான் பார்க்கிறேன். என் எழுத்தில் இருக்கும் சரளத்தன்மையும் பிறழ்வுகளை நான் காட்டிய தொனியும் காரணமாக இருக்கலாமோ என்று தோன்றுகிறது.

இரண்டு பகுதியாக பதில் சொல்லலாம் என நினைக்கிறேன். ஜிநாகராஜன் எனக்கு மிக அபிமானமான எழுத்தாளர். மதுரையைப் பற்றி மிக அழகாகச் சித்தரித்த எழுத்தாளர்களுள் ஒருவர். மதுரை வட்டாரத்தைக் களமாக வைத்து எழுதும் தைரியத்தை எனக்கு அளித்தவரும் அவர்தான்.

ஜி.நாகராஜன் விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றி எழுதி இருந்தாலும் அவரிடம் ஒரு wishful thinking இருந்தது – இதெல்லாம் இப்படி இல்லாம‌ல் இருந்திருந்தால் நன்றாக‌ இருந்திருக்குமே! என்கிற மாதிரி.

குறத்தி முடுக்கில் தங்கம் சொல்வாள் – “நடந்ததெல்லாம் நடக்காம இருந்திருக்கணுங்க”. இதுதான் நாகராஜனின் மொத்த‌க் கதையுலகத்தின் அடியோட்டம். அதன் மேல் அவருக்குப் புகார் இல்லை. ஆனால் அனுதாபம் உண்டு. அந்த அனுதாபம் எங்கிருந்து வருகிறதென்றால், அது அல்லாத மாற்று உலகத்தில் எல்லாமே சுபிட்சமாகவும், நேர்மையாவும், நேர்மறையாவும், நன்றாகவும் இருக்கும்போது இது மட்டும் இப்படிக் கழிசடையாக இருக்கிறதே, ஐயோ பாவம் என்ற பச்சாதாபம்தான் நாகராஜனின் அடியோட்டம்.

கே.பாலசந்தரிடம் இதெல்லாம் காட்டி இன்னும் கொஞ்சம் கிளுகிளுப்பு ஏற்றலாம் என்ற நம்பிக்கைதான் இருக்கிறது. அதைத் தாண்டி அது தொடர்பான அக்கறையும், சரி செய்ய வேண்டும் என்ற ஆசையும், குறைந்தபட்சம் பச்சாதாபமும் இருப்பதாய் நான் நினைக்கவில்லை.

என்னுடைய படைப்புலகத்தை இவர்கள் இருவரையும் ஒப்பிட்டுக்கேட்கும்போது நான் எங்கே வித்தியாசப் படுகிறேன் என்றால், என்னுடைய உலகம் amoral ஆனது. நான் அறத்தையும் பேசவில்லை, அறப்பிறழ்வையும் பேசவில்லை. அறத்தையும் முன்வைக்கவில்லை, அதற்கு எதிராக நடந்து கொண்டிருக்கிற‌தே என்ற ஆதங்கத்தையும் முன்வைக்கவில்லை. இப்படி இரண்டாகப் பார்க்க வேண்டியதே இல்லை என்ற ஒரு தளம் உண்டு, ஒரு neutrality உன்டு. நான் அங்கிருந்துதான் பேச முயல்கிறேன்.

அங்கிருந்து பேசுகையில் நான் அறத்தின் ஆளாகவும் இல்லாமல் அறமின்மையின் ஆளாகவும் இல்லாமல் இருப்பதுதான் நீங்கள் சொல்லும் அந்தப் புது வாசகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிற‌து. இவன் என்னதான் சொல்லவருகிறான் என்ற குழப்பத்தைத் தருகிறது. இந்த amorality புதிய வாசகனுக்கு வசீகரமாய்ப் படுகிறது என்றால் சந்தோஷமே. ஏனெனில் அறத்தின் சார்பாகப் பேச ஆரம்பித்தால் அதற்குத் தகுந்தாற் போல் சம்பவங்களை, அவற்றினுள் ஓடும் உணர்வோட்டங்களைத் திருக ஆரம்பிப்பேன். இந்த நிகழ்வுக்கு எதிரான ஒரு மனப்போக்கை நிறுவும் ஆளாக இருப்பேன்.

ஒருவேளை அறமின்மை – அதுதான் பின்நவீனத்துவம் என நம்புகிறேன் எனில் இதை ஒரு பெரிய celebration-ஆக “பார்த்தியா! அவன் தப்பு பண்ணிட்டான், இவன் தப்பு பண்ணிட்டான், வா நாமும் தப்பு பண்ணுவோம், தப்புதானே, யார் செய்தால் என்ன?” என்பது மாதிரியான கிளுகிளுப்பை, பரபரப்பை உருவாக்கும் ஆளாக இருந்திருப்பேன். நான் இரண்டையுமே செய்யவில்லை.

இந்த amoralityயில் பார்ப்பவன் கண்களிலிருந்து ஒரு நிறம் நிகழ்வின் மீது பீய்ச்சி அடிக்கப்பட்டு அந்த நிறம் தனக்குத் தெரிவது போன்றதான ஒரு பாவனை இருக்கிறது. அதை நோக்கித்தான் பேசுகிறேன்.

உண்மையில், புற உலகின், உறவுகளின் சகல அலகுகளுமே நிறமற்றுத்தான் இருக்கின்றன – பார்க்கும் கண்கள் வழங்கும் வண்ணத்தையும் பெறுமானத்தையும் ஏற்கும் விதமாக. மட்ஸுவோ பாஷோவின் கவிதை ஒன்று, எனக்கு மிகவும் பிடித்தது: நேற்றிரவும் அல்ல / இன்று காலையும் அல்ல – / பூசணிப் பூக்கள் மலர்ந்தது.

11. உங்கள் எழுத்தில் பிடித்ததற்கு பிறகு வருகிறேன். முதலில் பிடிக்காதது. உங்கள் முதல் நாவலான குள்ளச்சித்தன் சரித்திரம். மாற்றுமெய்மை அதன் மையச்சரடு என்பது ஒரு நாத்திகனான எனக்கு அத்தனை உவப்பானதல்ல என்பதை ஒரு காரணமாகக் கொண்டாலும், அதையும் தாண்டி கலாப்பூர்வமாகவும் அதன் மீது விமர்சனங்கள் உண்டு. ஜெயமோகன் சொல்வது போல் மாய யதார்த்தப் படைப்பாக அதை என்னால் பாவிக்க இயலவில்லை. அதன் சில யுவன் சந்திரசேகர் பாணிச் சம்பவங்கள் மற்றும் நடை தவிர அது ஒரு மாய மந்திரப் புனைவாகவே எனக்குத் தோன்றுகிறது. உங்களுக்கு அது திருப்தியளித்த படைப்பா? முதல் நாவலாக எழுத ஏன் அதைத் தேர்ந்தெடுத்தீர்கள்? இன்று அதன் இடம் என்ன என நினைக்கிறீர்கள்?

ஒரு கேள்விக்குள் பன்னிரண்டு கேள்வி இருக்கிறது!

நாத்திகம் என்பது பற்றி முதலில் பேசுவோமா? நீங்கள் உங்களை நாத்திகர் எனப் பிரகடப்படுத்திக் கொள்கிறீர்கள். வைதீகப் பழமாகத் துலங்கும் இன்னொருவர் தன்னை ஆத்திகர் எனச் சொல்லிக் கொள்கிறார். இரண்டு எல்லைகளுமே பாக்கியவான்களுக்கு உரியவை. இரண்டு பேரையும் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. எல்லாவற்றிலுமே இரண்டுங்கெட்டான்களாக இருக்கும் தீனர்களின் பெருந்தொகுப்பில் இருக்கும் கடைசி ஆள் என்றே என்னைக் கருதிக்கொள்கிறேன்.

இப்படி ஒரு determination, ஒரு தீர்மானத்திற்கு வந்து விட்டோம் எனில் காரியங்களை அதற்குத் தக்கவாறு நடத்திக் கொண்டே போகலாம். இரண்டின் மேலேயும் அவநம்பிக்கை இருக்கக்கூடிய ஆளை எங்கே பொருத்துவது? சார்ந்திருக்க எதுவுமே இல்லாதிருக்கும் ஒரு தனியன் – அவனை எங்கே பொருத்துவது?

அறிவியல், ஆன்மீகம் – எதன் மீதும் சாய்ந்து நிற்காத ஓர் ஆள்தான் என் எழுத்தில் பதிவாகிக்கொண்டே இருக்கிறான். இப்படி ஒரு மனநிலைதான் அந்தக் கதாபாத்திரங்களையும், அவர்களுடைய கிலேசங்களையும், பீதிகளையும், சந்தோஷ‌ங்களையும், நிறைவுகளையும் உற்பத்தி செய்கிறது.

அதைக் கேள்விக்குட்படுத்த முடியாது என்றுதான் தோன்றுகிறது. இந்தியாவின் பிரதம மந்திரி ஒருவர் தன்னை agnostic என்று சொல்லிக் கொண்டார். ஆனால் ஓர் சாதாரண எழுத்தாளனுக்கு அந்தச் சலுகை இல்லை என்பது பயமாக இருக்கிறது. நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?

ஒரு விஷயத்தை அழுத்திச் சொல்லவேண்டும். நான் எதையும் சாராதவன். நடைமுறைத் தேவைகள், நிர்ப்பந்தங்களின் பொருட்டு வேறு வேறு அமைப்புகளுக்குள் சிக்கியிருக்கிறேன். மற்றபடி, அந்தரத்தில் இருக்கும் தனியன் என்ற உணர்வே எனக்குள் எந்நேரமும் மேலோங்கியிருப்பது.

அடுத்து, குள்ளச்சித்தன் சரித்திரம் பற்றிச் சொல்கையில் அதில் யுவன் சந்திரசேகர் பாணிச் சம்பவங்கள் என்ற phrase-ஐப் பயன்படுத்தினீர்கள். அப்படி ஒரு பாணிச் சம்பவங்களை தமிழ் எழுத்துலகத்தில் நான் புழங்க விட்டிருக்கிறேன் எனக் கேட்கவே உற்சாகமாக இருக்கிறது, ஆச்சரியமாகவும் இருக்கிறது.

நல்லவேளை, நீங்கள் அப்படிச் சொன்னீர்கள். சிலர் அதை சேஷாத்ரி சுவாமிகள் பாணி சம்பவங்கள், ஜே.கிருஷ்ணமூர்த்தி பாணி சம்பவங்கள் என்றெல்லாம் சொல்கிறார்கள். அவை நடைமுறை அறிவியல் மனோபாபாவத்திற்கு மாற்றாய் இருக்கும் சம்பவங்கள் என்பதே என் கருத்து.

இது போல் மாற்றாய் இருக்கும் சம்பவங்களைப் பற்றிப் பேச இரண்டு துறைகளுக்குத்தான் அருகதை உண்டு. ஒன்று அறிவியல். அது தான் கட்டமைத்த நம்பிக்கைப் புலத்தைத் தானே மீறிப் பார்க்கும் தைரியமும், ஆர்வமும் கொண்டது. அதன் விசாரணை முறையின் தன்மையே அதுதான். அடுத்தது ஆன்மீகம்.

அறிவியல் ஒரு கால, வெளிச் சட்டகத்தை எனக்கு நிறுவிக் கொடுத்திருக்கிறது. அதை நான் நம்புகிறேன். உதாரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை. இதற்குப் பிறகு திங்கட்கிழமைதான் வரும். ஒருபோதும் செவ்வாய்க்கிழமையோ சனிக்கிழமையோ வராது என்பது இந்த அறிவியல் மனோபாவம் வடிவமைத்துக் கொடுத்த தர்க்கப்பூர்வமான கிரம சட்டக முறை. இதை மீற ஓர் அறிவியலாளன் முயற்சி செய்யலாம். Time travel. எதிர்காலத்திற்கோ பழங்காலத்துக்கோ போவதற்காக ஓர் எந்திரத்தை வடிவமைப்பது. அங்கே போகும் போது இருக்கும் மனோநிலை, அச்சங்கள், கிளர்ச்சிகள் பற்றி அவன் பேச முயற்சிக்கலாம்.

ஆன்மீகமும் இதை முயற்சி செய்யலாம். ஆன்மீகம், தத்துவம் போன்றவைதாம் மனத்தின் இண்டு இடுக்குகள் பற்றிப் பேசுகின்றன. உளவியல் என்ற சட்டகத்தின் வழி அறிவியல் மனம் பற்றி பேச ஆரம்பிக்கும் போது கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற முப்பட்டை அமைப்பு; அங்கே x இங்கே என்ற வெளித் தொலைவு – இவை இரண்டையும் மாறாமல் வைத்துக்கொண்டு அதை ஆராய முனைகிறது. இதெல்லாமே இல்லை என்று சொல்ல ஆன்மீகத்துக்கும் தத்துவத்திற்கும் தைரியம் உண்டு. ஏனெனில் அவை தர்க்கப்பூர்வமாய் எதையும் நிறுவிக்காட்டும், அல்லது செய்துகாட்டும் நிர்ப்பந்தத்துக்குள் சிக்கிக் கொள்ளவில்லை.

புனைவுப் பீறல்களை நிஜம் போலவே சொல்லிக் காட்டலாம். அப்படி நடந்தால் உள்ளே நிலைப்பட்டிருக்கும் கால அமைப்பு, இட அமைப்பு என்னவாகத் தென்படும்? ரிச்சர்ட் பாக்கின் Illussions நாவல் படித்த போது எனக்குக் கிடைத்த ஓர் அனுபவம்: ஒரு கதாபாத்திரம் சுவரை அப்ப‌டியே துளைத்துச் செல்லும். பௌதீக அறிவுப்படி சுவர் என்பது திடப்பொருள். அப்படியான அஃறிணைப் பொருளை ஓர் உயிர்ப்பொருள் ஊடுருவிச் செல்ல முடியாது. பாறையை இளக்கி செடி நீள்கிறதுதான் – ஆனால் அதற்கு எடுக்கும் காலம் எவ்வளவு! Illuusions ஸிலோ, ஒருவன் சுவரை ஊடுருவிப் போய்விட்டான். எழுத்தாளன் சொல்லி விட்டான் என்றால் நம்பித்தான் ஆக வேண்டும். அந்நம்பிக்கையின் பேரில் எனக்குள் ஸ்திரப்பட்டிருக்கும் என்னுடைய இட, கால அமைப்பு என்னவாகிறது என்கிற கேள்வி மிக முக்கியமானது. இந்தக் கேள்வியை முன் வைக்க மாயாதீத சம்பவங்களின் வழியே பயணப்பட வேண்டி இருக்கிறது.

மாயமந்திரப் புனைவுகளின் ஒரு குறிப்பான, சிறப்பான அம்சம் – பொதுவான, நிறுவப்பட்ட கால – வெளிக் கட்டமைப்பை அவை அசைத்துப் பார்க்கின்றன என்பது. தமிழ்ச் சூழலைப் பொறுத்தவரை ஒரு விசித்திரமான வயிற்றெரிச்சல் என்னவெனில் ஆன்மீகம் என்ற சொல் விழுந்தவுடனே அது ஒரு மதத்துடன் போய் ஒட்டிக் கொள்கிறது. உலகில் வேறு எங்குமே அப்படிப் பார்ப்பதாகத் தெரியவில்லை.

கார்லோஸ் காஸ்டநெடா, கென் வில்பர், ரிச்சர்ட் பாக் போல் ஆட்கள் ஆன்மீக விவாதங்களில் இறங்கும் போது அவர்கள் மீது கிறிஸ்துவத்தைப் போட்டுப் பார்ப்பதில்லை. ஒரு சூஃபி ஞானியின் சொற்கள் காதில் விழுகையில் அதன்மீது இஸ்லாமியத்தைப் போட்டுப் பார்ப்பதில்லை. ஜென், தாவோ தொடர்பாகப் பேசும் போது அதை பௌத்தத்துடன் நேரடியாக இணைத்துப் பார்ப்பதே இல்லை. ஜென்னில் உள்ள‌ புதிர்த்தன்மையை மட்டும் தமிழ் மனம் ஆசையாய்ப் பேசுகிறது. ஆனால் ஆன்மீகம் என்ற சொல்லுக்கு தமிழில் இப்படியொரு connotation வந்திருக்கிறது. இதன் காரணமாக‌ இதற்குள் மட்டும்தான் நீ பேச வேண்டும், இந்தச் சட்டகத்துக்கு மட்டும்தான் நீ விசுவாசமாகப் பேச வேண்டும் என ஓர் எழுத்தாளனை நிர்ப்பந்திப்பது தான் நடக்கிறது.

’பிரம்மாண்டமான சிறகுகள் கொண்ட கிழவன்’ என மார்க்கேஸ் கதை எழுதி விட முடிகிறது. பிரேதத்தின் உடலில் ரோமம் வளரும் கால அலகு பற்றிப் பேச முடிகிறது. அவற்றை கிறித்தவ நம்பிக்கைகளோடு யாரும் உழப்பிக் கொள்வதில்லை. கிறித்துவத்தில் இருக்கும் தேவதைகள் போல இந்தக் கிழவன் என்ற interpretation இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

ஆனால் தமிழ்ச்சூழலில் மட்டும் இதெல்லாம் நடக்கும். இதை எல்லாம் பொருட்படுத்தினால் காலம் தொடர்பாகவும், இடம் தொடர்பாகவும் நமக்கு இருக்கக்கூடிய குழப்பங்கள், நடைமுறை விசாரணைகள் இவற்றை எப்படித்தான் எழுத்தில் செய்து பார்ப்பது? இதைப் பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்ற முடிவுக்கு பத்தாண்டுகள் முன்பே நான் வந்தாயிற்று, இன்று வரை செய்து கொண்டிருக்கிறேன்.

குள்ளச்சித்தன் சரித்திரம் பற்றி நீங்கள் கேட்கிறீர்கள். ’சித்தர் மரபு இப்படி எல்லாம் செய்யாதே, இது சித்தர் மரபு சார்ந்த புத்தகம் அல்ல’ என ஒரு நண்பர் கோபமாக என்னிடம் வாதிட்டார். சித்தர் மரபு சார்ந்த புத்தகம் என எந்த இடத்திலாவது சொல்லப்பட்டிருக்கிரதா? சில சித்தர்கள் வந்து போனார்கள் என்பதால் அது சித்தர் மரபு சார்ந்த புத்தகம் ஆகாது. அப்படிப் பார்த்தால் நகரத்தார்தான் இதன் பிரதானமான கதைமாந்தர். அதற்காக இது நகரத்தார் பற்றிய நாவல் என ஒருவர் எடுத்துப் பேச முடியுமா என்ன? அபத்தமாக இருக்கிறது. நாவல் என்பது ஒரு totality. அந்த முழுமைக்குள் உங்களுக்கு வாகான ஒரு பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு இப்படி இல்லையே, அப்படி இருக்கிறதே என்று பேசுவது எனக்கு நியாயமாகப் படவில்லை. அது ஒரு விமர்சனம் என்றும் தோன்றவில்லை.

கடைசியாக, நீங்கள் கேட்டது. இதை ஏன் முதல் நாவலாகத் தேர்ந்தெடுத்தீர்கள். நான் ஆரம்பத்திலிலேயே சொன்னேனே, தோன்றுவதை, தோன்றும்போது, தோன்றும் விதமாக எழுதுவது என்னுடைய சுதந்திரம் என்று நம்புகிறேன். அதற்காகத்தான் பாப்புலர் மீடியாவின் பக்கம் போகாமல் இருக்கிறேன். அங்கே போனால் இந்த சுதந்திரம் குன்றும் என்று தோன்றுகிறது. அதற்கான அவசியம் இல்லை. அதற்கான புறத்தேவையோ அகத்தேவையோ இல்லை என்பதால் இவ்விதமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிரேன். குள்ளச் சித்தன் சரித்திரம் முதல் நாவலாக வந்தது எதேச்சையான விஷயம். அதைத்தான் முதல் நாவலாக எழுத வேண்டும் என்று திட்டமிட்டெல்லாம் நடக்கவில்லை.

12. இந்தக் கேள்வி கேட்டதன் காரணம் நான் என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பு எதுவெனத் தீர்மானிக்க வேண்டி வந்த போது என் முன் மூன்று முழுமையான‌ வெவ்வேறு தொகுப்புகள் இருந்தன. முதல் கவிதைத் தொகுப்பு என்பது என் அடையாளத்தைத் தீர்மானிப்பதாக அமையும். நான் பரத்தை கூற்றை அதன் சமூக ப்ரக்ஞைக்காகவும், அதிர்ச்சி மதிப்புக்காகவும் தேர்ந்தெடுத்தேன். அதை வைத்துக் கேட்கிறேன்.

அதிர்ச்சி மதிப்பீடு, அல்லது ஒன்றின் மூலமாக அறியப்படுவது இவை குறித்து ஒன்று சொல்ல நினைக்கிறேன்.

என்னுடைய மிக நல்ல கவிதை என நான் நினைக்கும் ஒன்று ஒரு சின்னப் பத்திரிகையில் பிரசுரம் கண்டது. புதுக்கோட்டையிலிருந்து ’ஒரு’ என்ற பத்திரிகை. அப்போது நான் மதிக்கும் ஒரு தமிழ்க்கவிஞர் ’என்னய்யா “இந்தக் கவிதையைப் போய் அந்தப் பத்திரிக்கைக்குக் குடுத்துட்டே, காலச்சுவடுக்குக் கொடுத்திருக்கலாமே?” எனக் கேட்டார் (அப்போது சுந்தர ராமசாமியின் ஆசிரியத்துவத்தில் காலச்சுவடு வெளிவந்து கொண்டிருந்தது.).

எனக்கு அப்படித் தோன்றவே இல்லை. என் கையில் ஒரு கவிதை இருக்கிறது. யாரோ ஒரு நண்பர் கேட்கிறார், கையிலிருப்பதை அனுப்புகிறேன், அவ்வளவுதான். பிறகு சுந்தர ராமசாமி கேட்கும்போது, அல்லது அவருக்கு அனுப்பத் தோன்றும்போது, அந்தச் சமயம் கையிலிருக்கும் ஒன்றை அனுப்புவேன். இதை இங்கே அனுப்பினால் க்ளிக் ஆகும் என்பது போன்ற கணக்குவழக்குகள் இன்று வரை என்னிடம் இல்லை. கடைசிவரை இருக்காது என்றே நம்புகிறேன்.

என்னுடைய முதல் தொகுப்பை with a bang கொண்டு வர வேண்டும் என ஆசைப்பட்டிருந்தால் அந்தத் தொகுப்பைக் கொண்டு வந்திருக்கவே மாட்டேன். அது வரவில்லை என்றால் அடுத்த தொகுப்பும் வந்திருக்காது. முதல் கவிதைத் தொகுதி வந்த போது கையெழுத்துப் பிரதியில் 200 கவிதைகள் வரை எழுதி வைத்திருந்தேன். அப்போது கவிதை மட்டுமே எழுதிக் கொண்டிருந்தேன். அபரிமிதமான எண்ணிக்கையில். 200ல் 60 கவிதைகள் வரை பிரசுரமாகி இருந்தன‌. அவற்றில் 30 – 35 கவிதைகள் தேர்ந்தெடுத்துத் தொகுப்பாகக் கொண்டு வந்தேன். காணாமல் போன 25 – 30 கவிதைகள் பிரசுரமானவை தான் ஆனாலும் தொகுப்பில் சேர்த்துக் கொள்ளவில்லை. ஏன் என இப்போது சொல்லத் தெரியவில்லை. ஆனால் ஏதோவொரு தெளிவு அல்லது தீர்மானம் (அல்லது குழப்பம்!) காரணமாக அவற்றைச் சேர்க்கவில்லை.

அதுபோலவே, இன்னும் தொகுப்பாக வெளிவராத ஆனால் பிரசுரமான சுமார் பத்து சிறுகதைகள் இருக்கிறது. அப்படி ஒரு கதை எழுதினோம் அல்லவா என்ற அளவில் ஞாபகம் இருப்பவை. யுவன் சந்திரசேகர் என்கிற ஆளுடைய எழுத்துப் பரப்பின்வெளி ஓரத்தில் ஒட்டி இருக்கக்கூடிய அல்லது இந்த எழுத்துப்பரப்புக்கு தூண்டுகோலாக இருக்கும் ஒரு spring board எனும் அளவில்தான் அவற்றுக்கு முக்கியத்துவம்.

அவற்றைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை.

13. சில சிறுகதைகளிலும் (உதா: நான்காவது கனவு) குள்ளச்சித்தன் சரித்திரம், வெளியேற்றம் போன்ற நாவல்களிலும் தொடர்ந்து மாற்று மெய்மை பற்றி எழுதி இருக்கிறீர்கள். ஜெய‌மோகன் நிழல்வெளிக் கதைகள் எழுதி இருக்கிறார் என்றாலும் அவர் அவற்றில் நம்பிக்கை கொண்டதான பிம்பம் வரவில்லை. தொடர்ந்து அவரது ஆன்மீக நிலைப்பாடுகள் பற்றி அவர் எழுதி வருவது காரணமாக இருக்கலாம். நீங்கள் அவற்றைத் தெளிவுபடுத்தலாம். வெளியேற்றம் நாவலின் பின்னுரையில் மாற்று மெய்மை போன்ற விஷயங்களை நம்புவதாகக் குறிப்பிட்டிருந்தீர்கள். அதைப் பற்றிய உங்கள் அனுபவங்களைச் சொல்லுங்கள்.

என் படைப்புகள் பற்றி விரிவாகப் பேசுவதில் எனக்கு அவ்வளவாக ஆர்வம் கிடையாது. ஆனால் வாகாக இருக்கும் என்பதால் ஓரிண்டு கதைகளை மேற்கோள் காட்டுவதில் தவறில்லை என நினைக்கிறேன். குறிப்பேடு என்ற கதையில் வெள்ளைக்கார துரையின் அறைக்கு ஒரு பெண் ஆவி ரூபத்தில் வந்து போவாள், மறுநாள் கொலுசு மட்டும் அங்கே கிடக்கும். இதுபோல் நடக்க சாத்தியம் உண்டா எனக் கேட்டால், ’இதற்கு அப்பனானதெல்லாம் எனக்கே நடந்திருக்கிறது’ என்று உங்கள் பக்கத்து வீட்டுக்காரரே சாட்சியம் சொல்வார். இந்திய மண்ணில் ஊறியிருக்கும் நம்பிக்கைகள் மற்றும் குறளிகளின் தன்மையும் வீச்சும் அத்தகையது. கால – வெளி நிர்ணயம் தொடர்பாக எழும் ஐயங்களைப் பேசுவதற்கு வாகாக இருக்கக்கூடியவை.

இப்போதைய எழுத்துமுறையில், முதன்முதலாக நான் எழுதிப் பிரசுரமான புனைகதை 23 காதல் கதைகள். அதில் இது போன்ற மாற்று மெய்மை சமாசாரம் ஏதும் இருந்த நினைவில்லை. ஆனால் அதற்கு நிகரான, ஃபேண்ட்டஸி போலவே தென்படுகிற அம்சம் கொண்ட கதை ஒன்று உண்டு. அதன் கடைசிக்கதை. கிருஷ்ணன் ஒரு பெண்ணிடம் நாம் திருமணம் செய்து கொள்ளலாமா’ என்று கேட்டிருப்பான். அவள் ’வேண்டாம், நண்பர்களாகவே இருப்போம்’ என அந்தக்கால ரொமான்டிக் நாயகியின் பாணியில் சொல்லி விடுவாள். இவனுக்குத் திருமணம் எல்லாம் ஆன பிறகு அவளை ஒரு பொருட்காட்சியில் சந்திக்கும் போது அவள் சொல்வாள்: “அன்று திருமணத்துக்கு ஒப்புதல் சொல்லக் கிளம்பி வந்தேன், ஆனால் இந்திரா காந்தியை சுட்டுக் கொன்று விட்டதால் கலவரம், கடையடைப்பு, திரும்பிப் போய்விட்டேன்”.

இதில் உள்ள ஃபேண்ட்டஸித்தனமான அம்சம் என்னவென்றால், கதைசொல்லியான கிருஷ்ணன் இருக்கிறான், அதே ஊரில் நான்கு பேருந்து நிறுத்தம் தள்ளி அவளும் இருக்கிறாள். தன் வாழ்க்கையின் மிக முக்கியமான முடிவைச் சொல்ல வந்து கொண்டிருக்கிறாள். எங்கோ டெல்லியில் பிரதம மந்திரி கொல்லப்பட்டதினால் இந்தியா முழுக்க ஒரு restlessness உருவாகிறது. அதன் ஒரு சொட்டு, ஒரு தனி மனிதனின் வாழ்க்கையில் வீழ்ந்து இப்படி ஒரு நிரந்தர மாறுபாட்டை உருவாக்கி விடுகிறது. மொத்தமாக மடை மாற்றி விட்டுவிடுகிறது. இதற்குப் பின்னால் இருக்கக்கூடிய வலைப்பின்னலை சாதாரணமாக ஒருவர் யூகிக்க முடியாது. ஆனால் இது நிஜமாகவே நடந்தபின் “அடேயப்பா!” என்று பிரமிக்கலாம்!

இன்னொரு விஷயமும் சொல்லலாம். இங்கிருந்து கோவில்பட்டிக்கு தேவதச்சனைச் சந்திக்கப் போகிறேன் என்றால் ‌ என்னென்ன அம்சங்களை எல்லாம் கணக்கில் எடுப்பேன்? அலுவலகத்தில் எத்தனை நாள் விடுமுறை எடுக்க முடியும்? என்ன விதமான சௌகர்யங்களுடன் நான் பயணித்தால் அடுத்த நாள் அவருடன் நிம்மதியாய் அமர்ந்து பேச முடியும்? என் பையில் எவ்வளவு பணம் இருக்கிறது? என் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது? அப்போதைய தட்பவெப்பம், இப்படி எத்தனையோ விஷயங்களை யோசித்து கணக்கில் கொண்டு ஒரு முடிவெடுத்து பயணச்சீட்டு எடுத்து வண்டி ஏறி விடுகிறேன். ஆனால் திருச்சி பக்கம் என் ரயில் தடம் புரண்டு விடுகிறது. மறுநாள் மதியம்தான் கோவில்பட்டி போய்ச் சேருகிறேன்.

இதன் பின்னாலேயும் ஒரு statistics செயல்பட்டிருக்கிறது, இந்தியாவில் இத்தனை ஆயிரம் ரயில்களுக்கு ஒரு ரயில் தடம் புரள்கிறது என்று துல்லியமான புள்ளி விவரம் இருக்கிற‌து. எடுத்துப் பார்த்தால் அதற்கான due date அது. அந்த ரயிலில்தான் நான் போயிருக்கிறேன். ஆனால் அது எனக்குத் தெரியாது.

இது போல் அறிவியல்பூர்வமான, புள்ளிவிவரப்பூர்வமான ஒரு தற்செயல் நிகழ்வு நடக்கும் போது அதற்குப் பின்னாலிருக்கும் வலைப்பின்னல் தெரிய ஆரம்பிக்கிற‌து. அது பற்றிய யோசனை ஆரம்பிக்கிறது. அதன் மூலம் அந்த வலைப்பின்னலை நான் சார்ந்திருப்பவன், முழுக்க நம்புபவன் என அர்த்தம் ஆகி விடுகிற‌து.

நடைமுறையான சம்பவங்களுக்குக் கூட குறி கேட்கப்போகும் நண்பர்கள் இருக்கிரார்கள். நான் அது போல் ஏதும் செய்வதில்லை. அப்படிச் செய்வதுதான் இதற்கான நிரூபணம் என்றால் நான் அதைச் சார்ந்தவன் இல்லை என்றாகி விடுகிறது. ஆனால் அவற்றைக் கதையாக எழுதுகிறேனே, நம்பாமல் அதை எழுதுவேனா எனக் கேட்டால் முழுக்க அதில் நம்பிக்கை உள்ளவன் ஆகி விடுகிறேன்.

நான் இதில் நம்பிக்கை இருப்பவனாகவோ இல்லாதவனாகவோ இருப்பது வாசகனுக்கு ஒரு பொருட்டே கிடையாது என்றுதான் நினைக்கிறேன். மிஞ்சிப் போனால், இன்னும் 20 – 30 வருடம் இருப்பேனா? ஆனால் என் புத்தகம் அதற்குப் பின்னும் இருக்க வாய்ப்பிருக்கிறது என்றே நினைக்கிறேன். அந்தத் தலைமுறை வாசகன் அன்று நிலவும் ஆன்மீக அறிவியல் நம்பிக்கைகள் சார்ந்து அப்புத்தகத்தை அணுகும்போது சில திறப்புகள் அவனுக்குக் கிடைக்குமா அல்லது அதை நிராகரிக்கக்கூடிய நிலை வருமா என்பதுதான் கேள்வி.

இது முழுக்க முழுக்க வேறொரு விசாரணையின் பயணம். தமிழகத்தின் ஓர் ஓரத்தில் இருந்து எழுதிக் கொண்டிருப்பதால் நான் மட்டும் தனியாக இதைச் செய்து கொண்டிருப்பதாக நினைக்க வேண்டாம். உலகம் பூராவும் இது மாதிரியான சிந்தனைகள் இருக்கிறது. போர்ஹேஸிடம் இருக்கிறது. மார்க்கேஸிடம் இருக்கிறது.

போர்ஹேஸின் ஒரு கதையில் ஒரு நாடக ஆசிரியனை கலகக்காரன் எனக் குற்றம்சாட்டிக் கொல்வார்கள். அப்போது துப்பாக்கியின் குதிரை அமுக்கப்பட்டு, தோட்டா விடுபட்டு, அவன் நெற்றியை அடையும் அந்த fraction of a second-ல் அவன் ஒரு முழு நாடகத்தை எழுதி, ஒத்திகை பார்த்து, அரங்கேற்றி இறந்தான் என எழுதுகிறார். அதை நம்பினாரா அவர்? அந்த நாடகத்தைப் பார்த்தாரா? மின்னலின் தசம பாகத்திலான வேகத்தில், அந்த அவகாசத்தில் இது நடந்தது என போர்ஹேஸ் எங்கே இருந்து conceive செய்தார்?

ஃபேண்டஸி பற்றி இன்னும் ஒன்று சொல்லலாம் எனத் தோன்றுகிறது. ஆலிவர் சாக்ஸ் என்று ஒரு சமகால உளவியல் மருத்துவர். நிறைய புத்தகங்கள் எழுதி இருக்கிறார். The man who mistook his wife for a hat என்ற அவரது புத்தகத்தில் ஒருவருக்கு குறிப்பிட்ட நிகழ்வுடன் உள்ளுக்குள் காலம் நின்று போகிறது. இந்த இடத்தில் அவர் இருக்கிறார். எல்லாமே அதற்கு முன்பு உள்ளதுதான். இதை எப்படி உள்வாங்கிக் கொள்வது எனத் தெரியவில்லை. இன்னொருவருக்கு விழித்திரையில் ஏற்பட்ட பிரச்சனையால் செம்பாதி உலகம் தான் தெரியும். அதன் கீழே உள்ளது தெரியாது. கீழே பார்த்தால் மேல் பாதி காணாமல் போய்விடும்.

பரம்ஹம்ஸ யோகாநந்தாவின் Autobiography of a yogi-யில் ஒரு குருநாதர் தன் சீடனை நெஞ்சில் தட்டுகிறார் – ஒலிகளே கேட்பது சடாரென்று நின்றுவிடுகிறது. இதை ஒரு neurotic effect என உளவியல் சொல்லலாம்.. அது ஏற்கனவே ஒரு சட்டகம் தயார் செய்து வைத்திருக்கிறது. எல்லாவற்றையும் அதில் போட்டுப் போட்டு, அந்த‌ pigeon hole-ஐ நிரப்பினால் நிம்மதி ஆகிவிடும். ஆன்மீகம் இதைச் செய்யாது. இந்நிகழ்வை இதன் அற்புதத்தோடு தக்க வைத்துக்கொள்ள முயற்சி செய்யும். அதை விசாரணைக்குரியதாக, ஆராய்ச்சிக்குரியதாக‌ ஆக்காது. இப்படி ஒன்று இருக்கிறது பார் என்று சொல்லி விட்டு விடும். ஒருபோதும் காரண காரியங்கள் கற்பிக்காது.

காரண காரியங்கள் கற்பிப்பதோ அதை நிவர்த்திப்பதற்கான சடங்குகளை முன்வைப்பதோ மதம். ஆன்மீகம் அல்ல. இந்தப் பிரிக்கும் கோட்டை நாம் தெளிவாகத் தெரிந்துகொள்வது நல்லது என நினைக்கிறேன்.

இந்த ஃபேண்டஸி எல்லாவற்றுக்கும் பின்னால் வேறு ஏதோ இருக்கிற‌து. அது காலத்தை, இட அமைப்பை விசாரிக்கும் ஒன்றாக இருக்கிற‌து. காலம், இடம் என்றதும் ஏதோ பெரிய விஷயங்கள் பேசுவதான பிரமை வந்து விடுகிறது. அது பெரிய ஆட்கள் பேசுவது நாம் எல்லாம் பேசலாமா என. அப்படி எல்லாம் இல்லை.

நான் உங்களிடம் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன். சம மட்டத்தில் பேசிக் கொண்டிருக்கிறேன். மாடியில் இருந்தேன் எனில் நீங்கள் எனக்கு ஆழத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் மாடிக்குப் போனால் எனக்கு உயரத்தில் இருக்கிறீர்கள். எனக்கு இடப்பக்கம் உள்ளது, நான் 180 கிடிரி திரும்பின உடனே வலப்பக்கம் இருப்பதாக மாறி விடுகிறது. அவ்வளவு தன்னியல்பாக, சுலபமாக, சரளமாக நடக்கும் ஒன்றுதான் இது.

அதன்பேரில் நமக்கிருக்கும் மனத்தடையின் காரணமாக அது வேறு என ஒத்திப் போடுகிறோம். நான் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போது என் அப்பாவைப் பற்றி refer செய்தேன். அப்போது நான் என் மனக்கண்ணில் என் அப்பாவைப் பார்த்துக் கொண்டுதானே இருந்தேன். அவரது தாட்டியமான உருவம், அவரது நிறம், ஒரு வார முட்தாடி – இவை எல்லாமே எனக்குத் தெரியத்தான் செய்தது. நான் பார்த்த அந்தக் காட்சியை நீங்கள் ஒருபோதும் பார்க்கவில்லை. அப்படி என்றால் நம் இருவருக்கான இடைவெளி என்பது கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு. இந்த அறைக்குள் ஓர் அரை நூற்றாண்டு இடைவெளி இப்போதே இருந்தது – ஒரு ஆள் பார்த்தார், இன்னொருவர் பார்க்கவில்லை என்ற பேதத்தின் வழியாக‌. அது ஒரு தனிநபர் அனுபவமாக இருந்ததே, அதை நான் எப்படிப் பகிர்ந்து கொள்ள முடியும்? என்ற நியாயமான‌ ‌ ‌ கேள்வி எழத்தான் செய்யும். ஆனால், அதை நான் சொல்ல ஆரம்பித்ததுமே அது பொது அனுபவம் ஆகி விடுகிறது.

நான் என் அப்பாவைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கும் போது உங்களுக்குள் ஓர் மனித உருவம் வந்திருக்கும். இந்த உருவத்திற்கிருந்த இதே குணாம்சங்கள் அந்த உருவத்திற்கு இருந்திருக்க வாய்ப்பில்லை. நான் மரம் என்று சொனால் நீங்கள் பாறையை நினைத்துக் கொள்வதில்லை. நான் குதிரை என்று சொன்னால் நீங்கள் பூனைக்குட்டியை நினைத்துக் கொள்வதில்லை. இது எங்கிருந்து வந்தது? மொழி சார்ந்து நமக்குள் ஒரு பொது ஒப்பந்தம் உருவாகி இருக்கிறது. நான் குதிரை என்றதும் உங்கள் மனதில் ஒரு குதிரை பிம்பம் வந்து விடும். அந்த பிம்பத்துக்கு விசுவாசமாக‌ தொடர்ந்து கேட்க ஆரம்பிப்பீர்கள். நானோ நான் பார்த்த குதிரைக்கு விசுவாசமாகப் பேச ஆரம்பிப்பேன். நாம் இருவரும் பேசுவது ஒரே குதிரையைப் பற்றி அல்ல; ஆனால் குதிரையைப் பற்றி. இந்தத் தெளிவு மொழி மட்டத்தில் நமக்கு உண்டு.

அதே போல் ஆன்மீக சமாச்சாரங்களுக்கு, தரவுகளுக்கு ஒப்பந்தம் இருக்குமானால் ஒரு குழப்பமும் கிடையாதே. ஒரு ஜோதிடர் பன்னிரண்டு கட்டங்களைப் பார்த்து என்னென்னமோ சொல்கிறார். அவரிடம் உட்கார்ந்து அதைக் கேட்பவருக்கு அதில் ஒரு குழப்பமும் இல்லை. ஒரு அவநம்பிக்கையும் இல்லை. ஏனென்றால் அவர்களுக்குள் பொது ஒப்பந்தம் இருக்கிற‌து. கட்டங்களுக்குள் ஏகப்பட்ட சூத்திரங்கள் ஒளிந்திருக்கிறது – அதைப் பார்க்கத் தெரிந்த ஒருவர் சொல்லிக் கொண்டிருக்கிறார், கேட்க ஆசைப்படும் ஒருவர் கேட்டுக்கொண்டிருக்கிறார். இந்த ஒப்பந்தத்தின் பேரில் அது சுமுகமாக நடந்து முடிகிறது.

இந்த நிலையை எட்டுவதுதான் விஷயம். இந்தப் பொது ஒப்பந்தம் செயல்படாத ஏகப்பட்ட மாற்று மெய்மைகள் இருக்கின்றன. அவற்றில் ஒரு பிராந்தியத்தை நாம் புழங்கிப் பார்க்கிறோம்.

அடுத்தது இதையெல்லாம் நீ நம்புகிறாயா என்ற கேள்வி. நம்பிக்கை முக்கியமே இல்லை. ஏனெனில் நம்பிக்கை நிரந்தரமானது கிடையாது. நிரந்தரமானதாக‌ ஒரு நம்பிக்கை இருக்குமானால் நாம் அந்த அளவுக்கு மூளைச்சலவை செய்யப்பட்டிருப்பதாக அர்த்தம். நாம் ஏன் ஒவ்வொரு கணத்துக்கும் நம் மனதை, நம் கருத்துப் புலத்தைத் திறந்து வைக்கக்கூடாது? அதீத சுதந்திரத்துடன் ஏன் எல்லாவற்றையும் சந்திக்கக்கூடாது? காலங்காலமாக சொல்லப்பட்டதின், நம்பப்பட்டதின் வழியாக மட்டுமே இந்நிமிடத்தின் வாழ்க்கையை நடத்த வேண்டுமா என்ற கேள்வி இருந்துகொண்டே இருக்கிற‌து.

மணற்கேணி தொகுப்பில் ஒரு கதை இருக்கிறது. கிருஷ்ணன் எக்மோர் மின் ரயிலில் ஒரு நண்பனைப் பார்ப்பான். ரயில் புறப்படும் நேரத்தில் கையசைப்பான். அக்கதையில் எல்லாமே பூடகமாக இருக்கும். அவன் கிருஷ்ணனைப் பார்த்துத்தான் கையாட்டினானா என்பது குழப்பமாக இருக்கும். அவன் கையாட்டிய திசையில் கிருஷ்ணன் நின்றான் என்பது மட்டுமே உண்மை. அந்த முகம் அவனுக்குத் தெரிந்த முகமாக இருக்கிறது என்பதும் உண்மை. ஆனால் அதே முகம்தானா அது என்பதற்கு எந்த நிரூபணமும் இல்லை. வீடு திரும்பியதும், அதே நண்பன் மதுரையில் இறந்து விட்டதாகத் தொலைபேசித் தகவல் வரும்.

இது சாத்தியமா என்ற கேள்வி பொருத்தமற்றது. நான் ஏற்கனவே சொன்னது போல், எல்லாமே நடைமுறை சாத்தியமாக நடந்துகொண்டிருக்கும் விஷயங்கள்தாம். இதற்குப் பின் ஏதோ இருக்கிறதோ, நடந்து கொண்டிருப்பது ஒரு திரையின் மீதான ஒளிப்படம்தானோ என்ற சந்தேகம் இருக்கிறது. அதை உருவாக்குவது மட்டும்தான் என் நோக்கம். அதற்கு இந்த உபகரணங்கள் வசதியாக இருக்கின்றன.

என் குடும்பப் பின்புலம், வாசிப்புப் பின்புலம், இந்தியப் பின்புலம் சார்ந்து இதெல்லாம் வாகாக இருக்கிறது. இருக்கக்கூடிய கருவிகளை நான் பயன்படுத்துகிறேன். அவ்வளவுதான். ஒரு பட்டறையில் போய் உளி, சுத்தியல் எல்லாம் நானே தயார் செய்து தச்சுவேலை செய்வதற்குப் பதிலாக ஏற்கனவே இருக்கும் உளியையும் சுத்தியலையும் கொண்டு என் கைக்குக் கிடைத்த மரத்தில் வனைய ஆரம்பிக்கிறேன்.

14. சுமார் ஐந்நூறு பக்கங்கள் நீளும் வெளியேற்றம் நீங்கள் எழுதியதிலேயே பெரிய நாவலாக இருக்கும் என நினைக்கிறேன். இதிலும் மாற்று மெய்மை கணிசமாய் இடம் பெற்றாலும் என் வாசிப்பில் பிரதானமாய் வீட்டை விட்டு வெளியேறுபவர்கள் குறித்த கதை தான் இது. அதனாலேயே குள்ளச்சித்தன் சரித்திரம் போல் அல்லாமல் இது எனக்குப் பிடித்தமான நாவலாகவே இருக்கிறது. வெளியேற்றத்தில் மட்டும் அல்லாது பொதுவாகவே உங்கள் பாத்திரங்கள் தொடர்ந்து வெளியேறிக் கொண்டே இருக்கிறார்கள். வாழ்க்கையை விட்டு, வீட்டை விட்டு, பொறுப்புகளை விட்டு, உறவுகளை விட்டு. இயல்பு மீறிய அதன் அடர்த்தியை உங்கள் படைப்புகளில் காணும் போது அப்படி வெளியேறுதல் தொடர்பான ஒரு charm உங்களுக்கு இருப்பதாகப் படுகிறது. பிரச்சனைகளுக்கான தீர்வு என்ற கட்டம் தாண்டி வெளியேறுதலை ஒரு சாகஸமாகப் பார்ப்பது போல் தோன்றுகிறது. அது குறித்துச் சொல்லுங்கள். உங்களுக்கோ அல்லது நெருக்கமானவர்களுக்கோ நிகழ்ந்த அனுபவங்களின் வெளிப்பாடுதான் இந்த ‌வெளியேற்றங்களா? வெளியேற விரும்புகிறீர்களா?

தேசாந்திரம் போவது என்பது சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது. அதற்கான‌ வேட்கை என்பது தப்பித்து ஓடும் வேட்கையாகச் சிலருக்கும், தப்பித்தலாக‌ அல்லாமல் – எனக்கு இதன்மேல் ஏதும் புகார் இல்லை, ஆனாலும் வெளியே போக வேண்டும் போல் இருக்கிறதே என்பதாக – வெளியே போகும் விழைவாக சிலருக்கும் என இரண்டும் தரப்பு இருக்கிறது. வெளியேற்றம் நாவலில் இரண்டுமே வருகிற‌து.

ஒருவர‌து கையை வெட்டி விட்டு தப்பித்து ஓடும் ஒருவன், ஒருவரது மரணத்துக்குப் பிறகு அவ்வீட்டில் இருக்க முடியாமல் வெளியேறும் ஒருவன், அதே மரணத்தின் காரணமாக தன் தாய் வேறெங்கோ இருப்பதாக நம்பித் தேடிப் போகும் ஒருவன் – இப்படி வேறு வேறு மனிதர்கள்.

குள்ளச்சித்தன் சரித்திரம் படித்து விட்டு அது போன்ற விஷயங்களில் நம்பிக்கை இருக்கிறதா எனக் கேட்டீர்கள் அல்லவா, மிக வலுவான நம்பிக்கை தொனிக்கக்கூடிய ஒரு நாவலாக வெளியேற்றத்தைப் பார்க்கிறேன். மிக உறுதியாக நம்பிக்கை தொனிக்கிறது என நான் நம்பும் புத்தகம் உங்களுக்குப் பிடித்ததாகவும், அப்படி எல்லாம் இல்லை, பாரதூரமாகத்தான் இருக்கிறது என நான் நினைக்கும் புத்தகத்தை இது எனக்கு வேண்டாம் என்றும் நீங்கள் சொல்வதும் எனக்கு சுவாரஸ்யமாக இருக்கிறது.

அடுத்தது இதில் தேசாந்திரம் போனவர்கள் அனைவரும் தொலைத்தொடர்பு சௌகர்யங்கள் இவ்வளவு இல்லாத காலத்தில் போனவர்கள். இன்று ஒருவன் இமயமலைக்குப் போய் உட்கார்ந்து கொண்டால் எங்கே போனாலும் நான் வந்து பிடித்து விடுவேன் தம்பி, எங்கே போய்விடப் போகிறாய் என்ற குரல் கேட்கும்.

ஐந்நூறு பக்கங்கள் விரியும் ஒரு நாவலைத் தொகுத்து ஒரு synopsis எழுதிக் கொள்ள ஒரு வாசகருக்கு முடியும். இன்னொரு வாசகர் அதற்கு இன்னொரு synopsis எழுத முடியும். இதே நாவலை ஆன்மீகப் பிரயாணங்கள் சம்பந்தமானது என்று ஒரு நண்பர் சொன்னார். . எல்லா அத்தியாயங்களிலும் மரணத்தைப் பற்றிப் பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறது என்பதால் மரணம் பற்றிய நாவல் என்றார் இன்னொருவர். இது போலான இந்தியத்தன்மை உள்ள multiplicity (பன்முகத்தன்மை) என்னுடைய படைப்புகளில் உண்டாக வேண்டும் என்பது என் ஆசை. நடந்திருக்கிறதா எனச் சொல்லத் தெரியவில்லை. மற்றபடி ஓரிடத்தில் ஆணியடித்து அதை மட்டுமே சுற்றி வருவதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

பொதுவாக தமிழ் இலக்கியப்பரப்பில் புதுமைப்பித்தன், லா.ச.ராமாமிருதம், கு.ப.ராஜகோபாலன் எனப் பெரிய பட்டியலை எடுத்துப் பார்த்தால் இவர்கள் குடும்பக்கதைதான் எழுதி இருக்கிறார்கள். லா.ச.ரா. குடும்பத்தை விட்டு வெளியிலேயே போகவில்லை. தி.ஜானகிராமனாவது திண்ணை வரை வந்து தெருவையும் சேர்த்து தன் கதைகளைக் கட்டமைத்தார். லா.ச.ரா. அய்யர் வீட்டு அடுக்களையை விட்டு வெளியே வரவில்லை. இதை நான் ஒரு புகாராகச் சொல்ல மாட்டேன். அவர் தாம் நன்கு அறிந்த, தமக்குள் சதா உறுத்தலாக இருந்த ஒரு களத்தை முன்வைத்துத் தன் பிரயாணத்தை நிகழ்த்தினார்.

ஜி. நாகராஜன் கதைகளில் யாராவது குடும்பத்தில் சம்பந்தப்பட்டவர்கள் இருக்கிறார்களா? ஆனால் குடும்ப உறவுகளோடு ஒப்பிட்டுக் கொண்டேதான் அவர் கதைகள் நடக்கின்றன. ஒரு குலஸ்த்ரீக்கு இது நடக்குமா ஆதங்கம் அவர் உருவாக்கியுள்ள ஒவ்வொரு தாசிக்குப் பின்னாலும் திரையாகத் தொங்குகிறது. ஆனால் யாருமே அதிலிருந்து வெளியேறவில்லை. தொழில் செய்து கொண்டிருந்து அதிலிருந்து வெளியேறுவதாக நமக்குக் கிடைக்கும் ஒரே ஆள் தங்கம்தான். அவளும் தான் எந்த இடத்திலிருந்து வந்தாளோ அங்கே மீண்டும் போய்ச் சேர்கிறவளாக இருக்கிறாள். இது மாதிரியான குடும்பக்கதைகள் தான் திரும்பத் திரும்ப நாம் படித்துக் கொன்டிருக்கிறோம். அல்லது குடும்பத்தின் பகுதியாக இருந்தவாறே தெருவுக்குப் போனவர்களைப் பற்றி.

முழுக்க முழுக்க வெளியே போக வேண்டும் என்றெண்ணும் கதாபாத்திரங்கள் தொகுக்கப்படும்போது அது எனக்கான charm-ஆகத் தெரிகிற‌து. இது எல்லோருக்கும் இருக்கும் charm தானே. இருக்கும் இடம் புளிப்பதென்பது எல்லோருக்கும் நடக்கும் விஷயம்தான். வெளியேறலாம் எனச் சிலர் முடிவெடுக்கிறார்கள்.

நீங்கள் பெங்களூரிலிருந்து என்னைப் பேட்டி எடுக்க வந்திருக்கிறீர்கள். இது வெளியேறுதல் இல்லையா? உங்களுக்கென ஓர் இடம் இருக்கிறது, விடுமுறை நாள் இருக்கிறது, வீட்டில் ஆனந்தமாகப் படுத்துக் கொண்டு world cup finals பார்த்திருக்கலாமே. You chose to come here to meet me. இதற்குப் பின்னாலிருப்பது என்ன?

எழுத்தாளன், எழுத்து என வந்துவிட்டாலே நீர்மட்டத்துக்கு மேல் தலையை மட்டுமாவது மேலே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற தவிப்பு. இதன்பேரில் தான் இத்தனை வேலையும் நடக்கிறது. இவற்றைக் காத்திரமாக ஓரிடத்தில் பதிவு செய்கையில், அதன் மீது கவனம் குவிகையில் இதுபோல் கேள்விகள் வரும்.

மற்றபடி வெளியே போக வேண்டும் என்பது எனக்கு ஆசைதான். தொடர்ந்து போய்க் கொண்டும் இருக்கிறேன். ஆனால் இங்கே இருந்துகொண்டே வெளியே போய்க் கொண்டிருக்கிறேன் எனலாம். இதன் மேல் புகார் இருந்தால் இதையும் விட்டுவிட்டுப் போகலாம். எனக்கு இது புகார் தருவது மாதிரி இல்லை. ஏனெனில் பல நூற்றாண்டு காலமாக பரிசோதிக்கப்பட்டு, போதுமான அளவுக்கு வெற்றி கண்ட ஓர் அமைப்பு இது. இந்த அமைப்பு நன்றாக இருக்கிறதென்றே நினைக்கிறேன். இந்த அமைப்பில் இருக்கும் சில குறைகளை நிவர்த்திக்க முயற்சி செய்யலாம். அது அந்தந்தத் தனி மனிதன் அவனவன் அளவில் செய்ய வேண்டிய விஷயம். இதை ஒரு சமூக இயக்கமாக எல்லாம் ஆரம்பித்துச் செய்ய முடியாது.

15. உங்கள் நாவல்களுள் எனக்குப் மிகப் பிடித்தது பகடையாட்டம். குறிப்பாய் போதையூட்டும் மொழிநடையில் அமைந்த அதன் பூர்வ கிரந்தப் பகுதிகள். நாவல்களில் கவித்துவத்தின் சாயை சேர்ந்தால் சரிப்படாது என்பது என் அபிப்பிராயம். ஆனால் அதையும் மீறி பகடையாட்டம் சிறப்பான நாவல். உங்கள் நாவலில் நான் முதலில் வாசித்ததும் அதுவே என நினைவு. கல்லூரி காலத்தில் ஐந்நூறு ரூபாய் வைத்துக் கொண்டு புத்தகக்காட்சிக்கு வரும் புதிதாய் வாசிக்கத் தொடங்கும் நண்பர்களுக்கு தலா ரூ.100 விலையில் ஐந்து நூல்கள் சிபாரிசு செய்வது வழக்கம். அதில் பகடையாட்டமும் ஒன்று. தொடர்ந்து நீங்கள் வெவ்வேறு பின்புலங்களில் அடுத்தடுத்த நாவல்களை சிறப்பாக எழுதி விட்டாலும் இதுவரை பகடையாட்டத்தை முறியடிக்கும் வகையில் இன்னொரு நாவல் எழுதவில்லை என்பதே என் அபிப்பிராயம். உங்கள் மற்ற நாவல்கள் அனைத்திலிருந்தும் இது முழுமையாக வேறுபட்ட வகைமை – Fantasy. அதன் சுவாரஸ்யமான திருப்பங்களைக் கொண்டு பார்க்கையில் ஒரு பிரம்மாண்ட சினிமாவாய் எடுக்கலாம் அதை. அது பற்றிச் சொல்லுங்கள்.

பொதுவாக‌ என் எழுத்து தொடர்பாக விமர்சனப்பூர்வமாக, எதிர்மறையாக சொல்லப்படும் கருத்துக்கள் என்னை ஒருபோதும் உணர்ச்சிவசப்படுத்தாது. ஆனால் பாராட்டைத் தாங்கிக் கொள்வது கஷ்டமாக இருக்கிற‌து. அந்நேரத்தில் அப்படித் தோன்றியது, அப்படி எழுதினேன் என்று சொல்லலாம்.

பகடையாட்டத்தை முதலில் ஒரு சிறுகதையாகத்தான் எழுதினேன். என்னுடைய ஸ்டைலில் 10 – 12 பக்கங்கள். என் நண்பன் தண்டபாணி அதைப் படித்து விட்டு “ஏன் அவசரப்பட்டுட்டே? இதை ஒரு நாவலாக எழுதலாமே, ஒரு நாவலுக்கான potential இருக்கே!” என்றான். இப்போது நீங்கள் சொல்கிறீர்களே இதில் சினிமாவுக்கான potential இருக்கு என. அதேபோல். இருக்கலாம்.

அவன் இன்னொன்றும் சொன்னான். “ஜெயகாந்தன் அக்கினிப்பிரவேசம் என்ற சிறுகதை எழுதினார். பிறகு அதையே சில நேரங்களில் சில மனிதர்கள் என நாவலாக விரித்து எழுதினார். நீ அப்படி எல்லாம் செய்ய மாட்டாய். ரிபீட் செய்யக்கூடாது என்ற பிடிவாதம் இருக்கும். அதனால் சிறுகதையாகப் பிரசுரம் செய்யாதே” என்றான். நான் எழுதி முடித்து பிரசுரம் செய்யாத ஒரு முழுச் சிறுகதை அது.

தெற்கில் ஒரு பயணம் சென்றிருந்தபோது மதுரையில் ஒரு நாள் அவனுடன் தங்கியிருக்கையில் மேற்படி உரையாடல் நடந்தது. பயணத்தின் தொடர்ச்சியாக திருநெல்வேலி சென்றேன். பழைய புத்தகக்கடை ஒன்றில் Auschwitz பற்றி, அதன் பொறுப்பாளராக இருந்த ஒருவர் (ரொம்ப வருடம் ஆயிற்று, பெயர் மறந்து விட்டது) எழுதிய புத்தகம் கிடைத்தது. அதே சமயத்தில் ஹெய்ன்றிக் ஹாரர் எழுதிய 7 years in Tibet புத்தகம் படிக்கக் கிடைத்தது. பின்னால் பிராட் பிட் நடித்து நல்ல திரைப்படமாக வெளிவந்தது அது.

தண்டபானி சொன்ன யோசனை தொடர்ந்து உள்ளே உருண்டுகொண்டே இருந்தது. பிறகு நாவலாக விரித்து எழுதினேன். ஏற்கனவே எழுதிய சிறுகதை ஓர் அவுட்லைனாக இருந்ததால் எழுதுவதற்குப் பெரிய பிரயாசை எல்லாம் இல்லை.

குள்ளச்சித்தன் சரித்திரம் உங்களுக்கு அப்பீல் ஆகவில்லை என்றும் அதற்கு அடுத்து எழுதிய பகடையாட்டம் பிடித்திருக்கிறது என்றும் சொல்வது திரும்பவும் எனக்கு ஓர் ஆச்சரியம் தருகிறது. அதிலும் குறிப்பாக அந்த பூர்வ கிரந்தப் பகுதி பிடித்திருப்பதாகச் சொல்கிறீர்கள்.

அந்த பூர்வ கிரந்தத்தில் நான் எதெல்லாம் பேசி இருக்கிறேனோ அதையேதான் குள்ளச்சித்தன் சரித்திரத்திலும் பேசி இருக்கிறேன். பூர்வ கிரந்தத்தில் திரும்பத்திரும்ப காலம், வெளி பற்றிய வர்ணனையும், விசாரணையும் போய்க்கொண்டே இருக்கும். இது அப்படி எனில் அது இப்படி; அது இப்படி எனில் இது அப்படி என்று சூத்திரங்கள் உருவாகிக்கொண்டே இருக்கும். அவை யாவும் ஒருவித சுலோகச் சாயல் கொண்ட‌ மொழியில் உள்ளவை. அதையே நடைமுறையாய் எழுதப்பட்ட குள்ளச்சித்தன் சரித்திரத்தின் மீது உங்களுக்கு resistance வருகிறது.

காரணம் என்னவென்று எனக்குப் படுகிறதென்றால், சூத்திரமாய் இருக்கும்வரை அதைக் காலம், வெளி பற்றிய வாதமாக உங்களால் பார்க்க முடிகிறது. கதாபாத்திரங்கள் மீது ஏற்றிப் பார்க்கும்போது அவற்றை வாழ்வில் நடந்த சம்பவங்களாகப் பார்க்கத் தோன்றுகிறது. அப்போது ஒரு மனத்தடை வந்து விடுகிறது.

என்னுடைய நாவல்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு களத்தில், வெவ்வேறு மாதிரி இருக்க வேண்டும் என்றுதான் நான் ஆசைப்பட்டிருக்கிறேன். பகடையாட்டத்திற்குப் பிறகு கானல் நதி எழுதினேன். அது முழுக்க வேறொரு களம், வேறுபட்ட‌ புலம். பயண‌க்கதை சொல்லலாம், மணற்கேணி சொல்லலாம்.

நீண்ட படைப்பு ஒன்று உருவாகும்போது ஆரம்பத்தில் ஒரு உத்தேசம் இருக்கிறது, பிறகு அது கூட்டிப் போகும் விதத்தில் மனம் செல்கிறது. இன்று என்னைக் கேட்டால் பகடையாட்டம் போன்ற ஒரு நாவலை நான் இப்போது எழுத மாட்டேனோ என்றுதான் தோன்றுகிறது. ஏனெனில் அந்த நாவலில் ஒரு ஐரோப்பியத்தன்மை இருக்கிற‌து. இன்று நான் வேறுவிதமாக எழுதிப் பார்க்கலாம், ஒருவேளை. அந்த வயதில் இருந்த ஒரு சாகஸ வேட்கை (எழுத்துக்குள்) அதுவும் சேர்ந்து தான் அந்த நாவல் உருவானதென நினைக்கிறேன்.

என்னுடைய நாவலில் முக்கியமானதென நான் பகடையாட்டத்தை நினைக்கவில்லை. அது மோசமானது எனச் சொல்ல வரவில்லை. அது தன்னளவில் முக்கியத்துவமும் செறிவும் கொண்ட நாவல்தான். ஆனால் அதில் இருக்கும் thriller அம்சத்தை இன்று எழுதி இருந்தால் mysterious-ஆக‌ மாற்றி இருப்பேன். அதன் மர்மம் அல்ல விஷயம்; அதன் மாயத்தன்மைதான் விஷயம் என அழுத்தத்தை வேறொரு பக்கம் கொடுப்பேன்.

அப்புறம் இன்னொரு விஷயம். பொதுவாக‌‌‌ப் பல பேட்டிகள் கொடுத்திருக்கிறேன். ஆனால் நீங்கள் எல்லாவற்றையும் படித்துவிட்டு வந்திருக்கிறீர்கள் என்பது சந்தோஷமாக இருக்கிறது.

16. ஜெயமோகன் உங்களை சிறிய விஷயங்களின் எழுத்தாளர் எனக் குறிப்பிடுகிறார். அதற்கான சிறப்பான உதாரணம் மணற்கேணி. ஒவ்வொருவரும் கடந்து போயிருக்கக்கூடிய‌ பல்வேறு சுவாரஸ்ய கணங்களைக் கோர்த்திருக்கிறீர்கள். இவை இக்குறுங்கதைத் தொகுப்புக்கென‌ எழுதப்பட்ட கதைகளா அல்லது சிறுகதையாய் நீள‌வியலாமல் மனதிலோ காகிதத்திலோ தேங்கி நின்றவற்றைத் தொகுத்து விட்டீர்களா?

என்னுடைய சிறுகதைகள் யாவும் குறுங்கதைகளின் தொகுப்புதான் என்றொரு பார்வை உண்டு. அதனாலேயே அவை சிறுகதை கிடையாது என்றும் சொல்கிறார்கள். கதைக் கொத்து என்பது நான் கண்டுபிடித்த விஷயம் அல்ல; இந்தியக் கதை மரபில் ஏற்கனவே இருக்கும் விஷயம்தான். மகாபாரதம், ம‌தனகாமராஜன் கதைகள், விக்ரமாதித்தன் கதைகள் இவை யாவும் குறுங்கதைகளின் தொகுப்பாக இருக்கும் பெருங்கதைகள். இது இந்தியாவில் மட்டும்தான் இருக்கிறது என்றில்லை. பொதுவாக கீழை மனத்தின் விஷயம் என்று சொல்லலாம். உதாரணம் ஆயிரத்தோரு இரவுகள்.

இந்த உத்தியில் கதை சொல்லும்போது கதைசொல்லி ஒரு நிலைப்பாட்டினை எடுத்துக் கொள்ளும் நிர்ப்பந்தம் இல்லை. ஒற்றைச்சரடில் ஒரு கதையை எழுதும்போது சார்புத்தன்மை தொனிக்கத்தான் செய்யும். அதை முறிக்க அதற்கு நேர் எதிரான சம்பவத்தை juxtapose செய்கையில் இவ்விரண்டும் சேர்ந்து வேறொரு மனநிலையை, அறிதலை உருவாக்க வாய்ப்புண்டு. என் கதை எல்லாவற்றிலும் இது நடக்கிறது என சொல்லவில்லை. ஆனால் இதற்கான வாய்ப்பு உண்டு.

எனக்கும் அப்படிச் சொல்லத்தான் பிடித்திருக்கிறது. அதற்குக் காரணம் எனக்கு ஆரம்பத்தில் வாசிக்கக் கிடைத்த எழுத்தாளர்கள் நடைமுறைக் கணத்தின் மீது கவனத்தைச் செலுத்து என திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். முந்தைய கணம் என்னாகிறது? நடைமுறைக் கணத்தின் வழியாக அதற்கு ஒரு மதிப்பீடு, பெறுமானம் கிடைக்கிறது. நடைமுறைக்கணம் அடுத்த கணத்தைத் தீர்மானிக்கிறது. முன்பின் இருக்கும் கணங்களை அறுத்து விட்டால் நடுவில் இருக்கக்கூடிய நிகழ்கணம் என்னவாக இருக்கும்? நிகழ்கணம், அடுத்த நிகழ்கணம், அதற்கடுத்த நிகழ்கணம். ஆக வந்து கொண்டிருப்பது எல்லாமே நிகழ்கணங்களாக மட்டுமே இருக்கும். அறுபட்ட இந்தத் துண்டுநிலை அமைப்பைக் கதைக்குள் செய்து பார்த்தால் என்ன?

கவிதைகளில் இதை முதலில் செய்து பார்த்திருக்கிறேன். ஒன்றுக்கும் மேற்பட்ட படிமங்கள். தமிழ்க் கவிதை ஒரு படிமத்தை அல்லது ஒரு உருவகத்தை எடுத்துக் கொண்டு, அதைப் பெரியதாக இழுத்து elasticize செய்து வந்திருக்கிறது – சமயங்களில் அது அறுந்து விடும்! ஒன்றுக்கும் மேற்பட்ட, ஒன்றுக்கொன்று சம்பந்தமற்ற படிமங்களை அருகருகே வைப்பதன் மூலமாக என்ன விதமான கிளர்ச்சி, என்ன விதமான வாசிப்பு முறை உருவாகிறது என்று செய்து பார்த்திருக்கிறேன். அதே மாதிரியான முயற்சியை பிற்பாடு சிறுகதைகளில் செய்து பார்த்தேன் என்று சொல்லலாம்.

ஜெயமோகன் சிறிய விஷயங்களின் கதைசொல்லி என்று என் எழுத்தைப் பற்றிச் சொல்லியதைப் பற்றிக் குறிப்பிட்டீர்கள். தமிழில் என் படைப்புகளைப் பொருட்படுத்தி மிக அதிகமாகப் பேசிய ஒருவர் ஜெயமோகன். நண்பன் என்பதற்காக அவன் அதைச் செய்ததாக நான் நினைக்கவில்லை. அவனுக்கு நிஜமாகவே பிடித்திருக்க வேண்டும். பொருட்படுத்த வேண்டியதாக எண்ணியிருக்க வேண்டும்.

ஜெயமோகன் இந்த மாதிரி சொன்னதால் புண்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள். ஒருவர் மதிப்புரை எழுதி இருந்தார். ஆமாம், யுவன் சந்திரசேகர் சிறிய விஷயங்களைப் பேசக்கூடியவர்தான். காலம், பிர‌பஞ்சம் போன்ற சிறிய விஷயங்கள் என்று தன் கட்டுரையை முடித்திருந்தார். நான் அப்படி நினைக்கவில்லை. சிறிய விஷயங்கள் எனில் இதெல்லாம் மதிப்புக் குறைவானது என்ற அர்த்தத்தில் ஜெயமோகன் சொல்லவில்லை. வண்ணதாசனின் எழுத்தில் நீங்கள் பார்க்கலாம். ஒரு நுட்பமான விவரிப்பு இருந்து கொண்டே இருக்கும். சாதாரண பொதுப் பார்வைக்குத் தவறக்கூடிய விஷயங்கள் எல்லாமே முக்கியத்துவத்துடன் இருக்கும். அது எப்படி எனில் pixel அதிகமான கேமெராவில் புகைப்படம் எடுத்தால் அந்தப் புள்ளிகள் எல்லாம் இன்னும் திருத்தமாகத் தெரிவது மாதிரியான விஷயம். அப்படித்தான் ஜெயமோகன் சொல்ல வருகிறான் என நான் எடுத்துக் கொள்கிறேன்.

அடுத்து அனுபவத்தின் அடிப்படையில் சின்ன விஷயம், பெரிய விஷயம் என்றெல்லாம் ஏதும் இல்லை. அனுபவத்தைத் தொகுத்துக் கொள்ளும்போது ’அடடா, நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே’ என்று சொல்லும் போது மனம் துக்கமாகி விடுகிறது. இதுவே நேற்று இருக்கும்போது அது ரொம்பப் பெரிய விஷயம் செத்திருப்போம் என்று ஒரு பயம் உள்ளே இருக்கிறது அந்தப் புயல் அடிக்கும்போது. இன்று ஞாபகப் பொருளாக அது மீண்டெழும்போது, வீரியத்தின் மாற்று குறைகிறது – அதற்காக, நேற்றைய அனுபவத்தை சிறியது என்று சொல்வோமா என்ன!

மணற்கேணியையும் பகடையாட்டத்தையும் பக்கத்தில் பக்கத்தில் வைத்துப் பார்த்தாலே ஜெயமோகன் என்ன சொல்ல வருகிறான் என்பது புரிந்து விடும்.

17. கிருஷ்ணனுக்கும் உங்களுக்குமான இடைவெளி குறைந்த படைப்பும் மணற்கேணி. பிடித்திருப்பது தாண்டி ஒப்பீட்டளவில் உங்கள் நாவல்களில் நேரடித்தன்மை வாய்ந்த எளிமையான புனைவாகவும் மணற்கேணியையே பார்க்கிறேன். எல்லோருக்கும் இது பிடிக்கக்கூடியது. அறிந்தே செய்தீர்களா?

ஏற்கனவே சொன்னது போல் அறிந்து செய்தாயா அறியாமல் செய்தாயா என்ற கேள்வியையே எழுதியவனிடம் கேட்கக்கூடாது என நினைக்கிறேன். ஏனெனில் சந்தர்ப்பத்திற்கேற்றாற் போல் அவன் பொய் சொல்லவும் வாய்ப்புண்டு. ரொம்ப நல்லா இருக்கு என்றால் மிகத் திட்டமிட்டுச் செய்தேன் என்றும் சரியா வரலயே என்றால் நான் நினைத்தேனா இப்படி வரும்னு என்றும் சொல்லி விடக் கூடும்! அதனால் அப்படிக் கேட்பது சரியில்லை.

அந்த விஷயம் தான் அதை முடிவு செய்யும். உதாரணமாகப் பகடையாட்டத்தின் பூர்வ கிரந்தப் பகுதிகளை நடைமுறை மொழியில் எழுத முடியாதல்லவா? மொழி மிக முக்கியமான விஷயம். ஒரு செய்தித்தாள் மொழியில், ஒரு விமர்சகன் வாசிக்கும் கட்டுரை மொழியில் எழுதலாம். நான் அது போல் எல்லாம் செய்து பார்த்திருக்கிறேன். சோம்பேறியின் நாட்குறிப்பு என்பது சீனாவிலிருந்து ஒரு தத்துவ ஞானி பற்றிய வர்ணிப்பு உள்ள கதை. அது முழுக்க முழுக்க ஒரு யுனிவர்சிட்டி பேப்பர் போல் இருக்கும்.

மோசமான மொழியில் சொல்லப்பட்ட நல்ல கதை, நல்ல மொழியில் சொல்லப்பட்ட கேவலமான‌ கதை என சிறுகதைகளில் இருக்க முடியும். கவிதைகளில் சாத்தியமில்லை. கவிதையைப் பொறுத்தவரை மொழியும் அதன் இறைச்சிப் பொருளும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாமல் பிணைந்திருக்கிறது.

சிறுகதையில் அப்படி இல்லை. ஆகவே, சிறுகதையில் மொழி சம்பந்தமான கவனம் அதிகம் கொள்ள வேண்டி இருக்கிறது. கவிதை தன் மொழியைத் தானே முடிவு செய்துகொள்ளும். சிறுகதை மிக சுதந்திரம் அளிப்பதாகத் தோன்றும், அதனாலேயே அதில் கவனமாக இருக்க வேண்டி இருக்கிறது; மொழி தொடர்பாக மேலதிக ப்ரக்ஞை சிறுகதைக்குத் தேவைப்படுகிறது.

18. பயணக்கதையும் எனக்கு உவப்பான நாவலே. ஆனால் மூன்று பேர் சொல்லும் வெவ்வேறு கதைகளை (ஒரு மாதிரி குறுநாவல்கள் எனச் சொல்வேன்) வலுக்கட்டாயமாய்ச் சேர்த்து நாவலாக்கி இருப்பதாய்த்தான் என்னால் எடுத்துக் கொள்ள முடிகிறது. ஒரு கதைக்கும் மற்றொன்றுக்கும் ஆங்காங்கே மெல்லிய ஒற்றுமைகளை / வேறுபாடுகளைச் சுட்டும் அடிக்குறிப்புகளைச் சேர்த்திருந்தாலும் அடிப்படையில் அதை நாவலாக ஏற்கவில்லை. மாறாக நீங்களே வெளிப்படையாக மறுத்து விட்ட மணற்கேணியை குறுங்கதைத் தொகுப்பாக அல்லாமல் நாவலாகவே பார்க்கிறேன். படைப்பாளியிடம் படைப்புக்கு விளக்கம் கேட்பதை விட அசந்தர்ப்பம் வேறில்லை. ஆனாலும் கேட்கிறேன். நாவல் எனில் இது பேசும் மைய விஷயம் என்ன?

ஏற்கனவே சொன்னது போல் என்னுடைய படைப்புகளுக்கு நானே வியாக்கியான‌ம் சொல்வதற்குக் கூச்சமாகவும், தயக்கமாகவும் இருக்கிறது. சில சமயம் இந்த வியாக்கியான‌த்தை விடவும் அதிகமாய் ஒருவருக்குப் பிடித்திருக்கலாம், அதை நாமாகப் போய் ஏன் கலைக்க வேண்டும்!

ஆனால் நீங்கள் இரண்டு நூல்களை அருகருகில் வைத்துக் கேட்பதால் பதில் சொல்லத் தோன்றுகிறது. நூறு கண்டங்களாக நூறு துணுக்குகளாக சிதறி இருக்கும் ஒரு புத்தகத்தை உங்களால் ஒரு நாவலாகக் கோத்துப் பார்த்துக்கொள்ள முடிகிறது. ஆனால் மூன்றே மூன்று துண்டுகளாக இருக்க்கூடிய புத்தகத்தை நாவலாகப் பார்க்க முடியவில்லையே, ஏன்? என்று நான்தான் உங்களிடம் கேட்க வேண்டும்!

19. ஒரு காரணம் கிருஷ்ணன் என்ற கதைசொல்லி மணற்கேணி முழுக்க வருகிறான். கிருஷ்ணன் என்கிற characterization இதில் வலுவாக உருவாகிறது. அவன் மட்டுமின்றி அவன் அப்பா உள்ளிட்ட சில பாத்திரங்களும் தொடர்ந்து இதில் வருகிறார்கள். அதனால் அதைக் கிருஷ்ணனின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பு என்பதாக ஒற்றைப்படையாக எடுக்க‌ முடிகிறது. மாறாக பயணக்கதையில் அப்படி ஏதும் இல்லை. கிருஷ்ணன், இஸ்மாயில், சுகவனம் என்ற மூன்று வெவ்வேறு கதாபாத்திரங்கள் சொல்லும் மூன்று வெவ்வேறு கதைகள்தான் அந்நாவல். அந்தக் கதைகளுக்கு இடையே காலம், இடம், கதாபாத்திரங்கள் என எவ்வகையிலும் எந்த சம்பந்தமும் இல்லை. முற்றிலும் வேறுபட்ட கதைகள். அந்த மூன்று கதைகளுக்கான இணைப்புக்கண்ணி பிடிபடவில்லை. அவற்றைச் சுற்றி பயணக்கதை ஒரு wrapper போல் தென்படுகிறது.

அது போக, தர்க்கப்பூர்வமாகப் பிரித்து நிறுவாமல் படைப்பை படித்து முடிக்கையில் ஏற்படும் உணர்வு. மணற்கேணி படித்து முடித்த போது ஒரு நாவல் நிறைந்த திருப்தி. மாறாக பயணக்கதை படித்து முடித்த போது மூன்று வெவ்வேறு கதைகளை படித்த உணர்வு மட்டும்தான் ஏற்பட்டது. அதன் அடிப்படையிலும் எழுந்த ஒப்பீடுதான் இது. Infact, மணற்கேணி பின்னுரையில் அதை வாசித்தவர்கள் அதை நாவல் என்று சொல்வதகாவும் ஆனால் நீங்கள் நாவலுக்குரிய விஸ்தாரப் பார்வை அதில் இல்லை என்றும் மறுத்ததாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அதைப் படித்த பின்புமே கூட‌ மணற்கேணி நாவலாகவே படுகிறது. அவ்வளவு கறார் அளவுகோல் கொண்ட‌ நீங்கள் பயணக்கதையை நாவல் என claim செய்கிறீர்கள். அதனால்தான் இக்கேள்வி.

ஏற்கனவே சொன்னது போல் எழுத்தாளனிடமே போய் அவன் எழுத்துக்கு கோனார் நோட்ஸ் கேட்பது சங்கடம் தான். இதை நான் சக வாசகர் ஒருவரிடம்தான் விவாதித்துத் தெளிய வேண்டும். ஆனால் யுவன் சந்திரசேகரே யுவன் சந்திரசேகரின் ஒரு வாசகராக இருப்பார் என்பதால் அந்த வாசகர் பயணக் கதையை எப்படி நாவலாகப் பாவிக்கிறார் என்ற அடிப்படையில் கூட‌ இக்கேள்வியை அணுகலாம்.

ஆமாம். சந்தேகமே இல்லை. ரொம்ப அக்கறையான வாசகர்!

முதலில் மணற்கேணி உங்களுக்கு ஏன் நாவலாகத் தோன்றுகிறது எனப் பார்க்கலாம். அதில் ஒரு தொடர்ச்சி இருக்கிறது. முதல் கதையில் வந்த அதே கதாபாத்திரம் நூறாவது கதையிலும் இருக்கிறது. அப்படி இல்லாமல் முதல் கதையில் யுவன் சந்திரசேகர், மூன்றாவது கதையில் சந்தானராஜ், எட்டாவது கதையில் ஹென்றி டேனியல், அறுபத்தெட்டாவது கதையில் அப்பாஸ் இப்ராஹிம் இப்படி வந்திருந்தால் அது உங்களுக்கு நாவலாகத் தெரிந்திருக்குமா? இதே சம்பவங்கள்தாம். இதே சூழல்தான். அப்போது அவை குறுங்கதைகளாக மட்டுமே உங்களுக்குத் தோன்றி இருக்கலாம் அல்லவா?

கிருஷ்ணனுக்கு ஒரு அப்பா இருந்தார். ஹென்றி டேனியலுக்கு அப்பாவாக ஒரு ஜோசஃப் செல்வராஜ் இருந்திருக்கலாம். ஆக, தன்மை ஒருமையில் சொல்லப்பட்டதினாலேயே இது ஒரு நாவல் என்ற தோற்றம் கிடைத்துவிடுகிறது. ஆனால் அக்குறுங்கதைகள் வழியாக‌ ஒட்டுமொத்தமான வாழ்க்கைப்பார்வை, விசாரணை ஏதும் முன்வைக்கப்படவில்லை. அவை ஒரு நடுத்தர வாழ்க்கையின் சிறுசிறு சித்திரங்கள். கதாசிரியனின் சாயல் கொண்ட ஒரே பாத்திரத்தின்வழி சொல்லப்படுவதால் நாவல் என்ற பிம்பம் ஏற்படுகிறது.

வாழ்க்கை என்பது ஒரு நீண்ட கோடு அல்ல; ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட நூறு புள்ளிகளின் சரடு என்று பார்த்தால் அதற்கு ஒரு நாவலுக்கான தோரணை கிடைக்கும். ஆனால் கிருஷ்ணன் அதில் எதையாவது தேடிப் போகிறானா? எதையாவது அடைகிறானா? அப்படி எதுவுமே இல்லை. அப்படி ஒரு கண்டடைதலை நோக்கி ஒரு நாவல் பயணப்‍பட வேண்டும் என நினைக்கிறேன். அப்படி அதில் நடக்கவில்லை என்பதால் அதைக் குறுங்கதைத் தொகுப்பு என்று சொல்கிறேன்.

நீங்கள் சொல்லி விட்டதால் ஒரு வாசக சுதந்திரம் எடுத்துக்கொண்டு பயணக்கதை பற்றியும் பேசலாம்.

பயணக்கதையை நான் வாசித்தால், அந்த மூன்று குறுநாவல் அல்ல பயணக்கதை எனும் நாவல்; அதற்கு ஒரு முன்னுரை இருக்கிறது, மூன்று நண்பர்களையும் அறிமுகப்படுத்துவதில் தொடங்கி அடிக்குறிப்புகள் வழியாகப் போவதுதான் நாவல் என்றே புரிந்துகொள்வேன். . ஆக நாவல் மொத்தமே இருபது பக்கங்கள் தான். 98 அடிக்குறிப்புகள் இருக்கின்றன என ஒரு நண்பர் படித்து விட்டுச் சொன்னார். அந்த 98 அடிக்குறிப்புகளும் முன்னுரையும்தான் நாவல். அந்த நாவலுக்கு substantiate செய்யும் உபகதைகள்தாம் மேலே இருக்கும் மூன்று குறுநாவல்களும். இந்த போதத்தோடு படித்தால் அது வேறு ஒன்றாகத் தெரிய வாய்ப்பிருக்கிறது.

அடுத்து பயணக்கதை என்ற பெயரில் நாம் பொதுவாகப் பார்ப்பவை. ஓரிடத்திற்குப் போனார்கள், அந்த இடத்தைப் பற்றிய‌ reportage என்பதாகத் தான் பயணக்கதை என்ற சொற்றொடர் தமிழில் இதுவரை இருந்திருக்கிற‌து. ஆனால் இந்தப் பயணக்கதையில் ஏதேனும் reportage இருக்கிறதா? எங்கேயோ போய்ச் சேர்ந்தார்கள் அல்லவா, அந்தப் பயணத்தில்தானே எல்லாவற்றையும் பேசுகிறார்கள். சேரும் இடத்தைப் பற்றி ஏதேனும் சொல்லப்படுகிறதா? இல்லை. எனில் இதில் சொல்லப்படும் பயணம் எது?

வெளியேற்றத்தில் எல்லோரும் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள் என்பது சுலபமாகப் பார்க்கக் கிடைக்கிறது அல்லவா? அதே போல் பயணக்கதையில் எல்லோருமே பயணத்தில் இருக்கிறார்கள் என்பது பார்க்கக் கிடைத்து விடுமானால் அதை என் வெற்றி எனச் சொல்லலாம். அப்படிக் கிடைக்கவில்லை எனில் அதை என் தோல்வியாகக் கொள்ள வேண்டும். நான் சரியாகக் காட்டவில்லை என்று அர்த்தம்.

அது தான் அதன் பின்புலம். எல்லோருமே அதில் பயணத்தில் இருப்பார்கள். ஒருவன் பத்திரிக்கையாளனாக இருப்பான், தொடர்ந்து பயணத்தில் இருப்பான். அவன் பெங்களூரிலிருந்து திருவன‌ந்தபுரத்துக்கு ரயிலில் போகையில் ஒரு சம்பவம் நடக்கும். இப்படி தொடர்ந்து பெரும்பாலான‌ சம்பவங்கள் நிஜப் பயணங்களும், virtual பயணங்களும், அகரீதியான பயணங்களுமாக‌ இருந்து கொண்டே இருக்கும்.

கடைசிக்கதையில் ஒரு தாசி வருவாள். மூன்றாம் தலைமுறையிலிருந்து அவள் பயணம் தொடங்குகிறது. ஒரு குரு இருப்பார், அவருடைய குருவின் குருவிலிருந்து அவரது பயணம் தொடங்குகிறது. திவானுக்கு ஏதோ ஒரு பயணம் இருக்கிறது. வண்டியோட்டிக்கு ஒரு பயணம் இருக்கிறது. அவனது தந்தைக்கு ஒரு பயணம் இருக்கிறது. இப்படி எல்லாரும் இடம் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். எல்லாவற்றிலும் ஒரு பயணம் இருக்கிறது. Big Bang-ல் ஆரம்பித்து பிரபஞ்சம் ஒரு பெரும் பயணத்தில் இருக்கிறதல்லவா அது மாதிரியான ஒரு grandeur-க்கு நகர்த்த முடிந்தால் இதை வெற்றி பெற்றதாகக் கொள்ளலாம்.

எவ்வளவோ சிறுகதைகள் சிதறலாக எழுதி இருக்கிறேன். அவற்றைத் தொகுத்து உள்வாங்கி நன்றாக இருக்கிறதெனச் சொல்லிய நண்பர்கள் இருக்கிறார்கள். இதில் இன்னும் அதிகமாக சிதறி இருக்கிறேன் போலிருக்கிறது. கோத்துப் பார்க்க இன்னும் அதிகப் பிரயாசை தேவைப்படுகிறதென‌ நினைக்கிறேன். அல்லது எனக்கு இன்னும் முறையாகக் கோத்துத் தரத் தெரியவில்லையோ என்னவோ!

20. தமிழில் இசையைக் கொண்டு புனைவெழுதியவர்கள் நானறிந்த வரை லா..ரா.வும், தி.ஜா.வும் மட்டும் தான். பிறகு நீங்கள். கானல் நதி, நினைவுதிர் காலம் என்ற இரு நாவல்கள். அவர்கள் கூட இசையை மையமாய் வைத்துப் படைப்புகள் எழுதியதில்லை. அவர்களின் கதாபாத்திரம் இசை அறிந்தவர்களாக இருப்பார்கள். அல்லது சம்பவத்திற்கு மேலும் வலுவேற்ற அவர்கள் அறிந்த இசையைப் பயன்படுத்தி இருப்பார்கள். அப்படி அல்லாது இசைக் கலைஞர்களை, அவர்களின் இசை வாழ்க்கையை நெருக்கமாக அணுகிப் புனைவு எழுதியது என்றால் நீங்கள் மட்டும்தான் மிஞ்சுகிறீர்கள். (இவ்வகையிலும் நீங்கள் கே. பாலச்சந்தரை நினைவு படுத்துகிறீர்கள்!) அந்நாவல்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள். இசைக் கலைஞர்கள் பற்றி எழுத மேலும் விஷயம் உள்ளது என நினைக்கிறீர்களா? இன்னொரு நாவல் வருமா?

கே.பாலச்சந்தர் ரொம்பத் தொந்தரவு செய்கிறார்! அவர் நாவல் எழுதவில்லை. நான் திரைப்படம் இயக்கவில்லை – பின் எதற்காக இந்த ஒப்பீடு. ஆரம்பத்தில் நான் எழுதிய கவிதை ஒன்று பற்றி நண்பர் ஒருவர் தெரிவித்த அபிப்பிராயம் நினைவு வருகிறது: ‘இந்தக் கவிதை ஸ்ரீனிவாசன் எழுதிய கவிதையேதான்.’ லேசான படபடப்போடு, ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் என்று கேட்டேன். இரண்டு கவிதைகளிலுமே ஒரு பன்றி சாகிறதாம்!

இசையை அடிப்படையாகக் கொள்ளாத சொல்லத்தான் நினைக்கிறேன் படத்திற்கும் இசையை அடிப்படையாகக் கொண்ட அபூர்வ ராகங்கள் படத்துக்கும் ஏதேனும் வித்தியாசம் இருக்கிறதா என்ன‌? இசையை மட்டுமே அடிப்படையாக வைத்து எடுத்த அபூர்வ ராகங்கள் படத்திற்கும் சிந்து பைரவி படத்துக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா என்ன? அப்படங்களில் களம் – setting – ஆக‌ இசைக் கலைஞர்கள் இருக்கிறார்கள்., அவ்வளவுதான். இசை வாழ்க்கை சம்பந்தமான விவாதங்கள் அல்ல அல்ல அந்தப் படங்கள். அதனால் நமக்கு உடனடியாகத் தெரியக்கூடிய உதாரணங்களை மறுபரீசிலனை செய்வது நமது கடமை என நினைக்கிறேன்.

மேலோட்டமான ஒப்பீடுகள் வழி நாம் இலக்கியத் தரவுக்கு வந்து சேர்கிறோம் என்பது ஓர் அவசரம்தான். அல்லது அந்தரங்கமாக ஏதோ ஒரு புரியாமை இருக்கிறது.

ஓர் இசைக்கலைஞன், அவனது நிம்மதியின்மை, கடைசிவரை அதற்கு எந்தக் காரண‌முமே கண்டுபிடிக்க முடியாமல் போவதுதான் கானல் நதியின் அடியோட்டம். இசையினால் தோல்வி அடையவில்லை, காதலினால் தோல்வி அடையவில்லை. எதனால் தோல்வி அடைந்தான் எனக் கடைசி வரை தெரியாததே அந்நாவலின் mystery.

இதனால்தான் தோல்வி அடைந்தான் என்றால் அவன் இப்படிச் செய்து பார்த்திருக்கலாமே என்று ஆலோசனை சொல்ல ஆரம்பிப்போம். அப்படி இல்லை. அவனை எது துரத்தியதென்றே தெரியாது. மனுஷ்யபுத்திரன்தான் அந்த நாவலைப் பதிப்பித்தார். ஒருமுறை அவர் சொன்னார் – “அவனை எது துரத்துச்சுன்னே தெரியல சந்திரசேகர், அதுதான் சந்தோஷமா இருந்துச்சு படிக்கறதுக்கு.”

காரணம் தெரிந்து விட்டால் solution என்னிடம் இருக்கிறது. இல்லை. காரணமே இல்லை. அவனுடைய மன அமைப்பு அப்படி இருந்திருக்கிறது. அது ஏன் அப்படி இருந்தது? அதற்கு ஏதேனும் genetic காரணங்கள் இருந்திருக்குமா என்பதெல்லாம் நாவலின் வெளியே இருக்கும் விஷயங்கள்.

நினைவுதிர்காலத்தைப் பொறுத்தவரை ஒதுக்கப்பட்ட, நிராகரிக்கப்பட்ட ஓர் ஆளுக்குள் இயல்பாக இருக்கும் இசை வேட்கை. அது வெற்றியாகப் பரிணமிப்பது. ஆனால் கானல் நதி தான் உணர்ச்சிப்பூர்வமான நாவல். நினைவுதிர்காலம் இசை உலகம் பற்றிய ஒரு சித்திரத்தை உருவாக்க முயன்றது. அவரது தனி அனுபவம் தனிப் பிரயத்தனங்கள் பற்றி அதிகமாகச் சொல்லப்படவில்லை. இசை உலகம், அதில் இருக்கும் மனித மனங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்கையில் என்ன நிகழ்கிறது, அதிலிருக்கும் alchemy, openness, குழப்பங்கள், உள அரசியல் பற்றி.

என் நண்பர் ஓர் இசைக்கலைஞர். இந்நாவலைப் படித்து விட்டு மிக‌ப் பிடித்திருக்கிறது, நிறைய‌ இடங்களில் தன்னை ஞாபகப்படுத்துகிற‌து என்று சொன்னார். அதை ஒரு compliment-ஆக‌ எடுத்துக் கொள்கிறேன்.

கானல் நதியைப் பொறுத்தவரை எனக்கு மிகத் திருப்தியான விமர்சனம் ஒன்றை ஒரு நண்பர் சொன்னார். அவர் பெரிய வாசகரும் அல்ல; பெரிய இசை ரசிகரும் இல்லை. ஆனால் வாசிப்பவர், வாசிப்பைப் பற்றி உருப்படியான அபிப்பிராயங்கள் சொல்பவர். ஏனெனில் அவருக்கு பிம்பம் உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை. மனத்தில் பட்டதைச் சொல்லலாம். அபிப்பிராயம் சொல்வதை செஸ் விளையாடுவது போல் செய்ய மாட்டார். இசையும் தோய்ந்து கேட்பார். தனக்கு என்ன தோன்றுகிற‌தோ சொல்வார். துருபத் சங்கீதம் கேட்டு அவர் சொன்னது நினைவு வருகிறது “என்னங்க, இந்த அரை எல்லாம் அரைச்சா தாங்க முடியாதுங்க”.

கானல் நதி வாசிப்பது ஹிந்துஸ்தானியில் ஒரு பந்திஷ் (கீர்த்தனை) கேட்பது போல் இருக்கிற‌து என்றார். அது அப்படித்தான் மெதுவாகத் துவங்கும். அந்த நாவலில் பார்த்தால் துவக்கத்தில் ஒரு ஊருக்குப் போய்ச் சேருவது எப்படி என்ற வர்ணனை நீளமாக வரும். மிக மெதுவாக ஓர் ஆலாப் ஆரம்பித்து, மத்திய காலத்துக்கு வந்து பின் ரொம்பத் துரிதமாக நகரும். இதைத்தான் அந்த நண்பர் குறிப்பிட்டார். அதுதான் அந்த நாவலுக்குக் கிடைத்த best compliment எனக் கருதுகிறேன்.

இசை பற்றி மேலும் எழுதுவீர்களா எனக் கேட்டீர்கள். இன்னும் பத்து நாவல் எழுதலாம் இசையைப் பற்றி. அப்படி எழுதுகையில் தொடர்ந்து இசை கேட்பேன். அது இன்னும் என்னென்னவோ கொடுத்து விடும்.

இசையின் மூலமாக‌ எனக்குக் கிடைப்பது வெறும் துய்ப்பு இன்பம் மட்டும் அல்ல என்று நினைக்கிறேன். அது வேறு என்ன என்னவோ உள்ளே கொடுக்கிறது. அதிகாலையில் ஹிந்துஸ்தானி குரல் சங்கீதத்தைக் கேட்டால் மிகப்பெரிய வெளியில் இறக்கை விரித்துக் கிளம்புவது போல் ஓர் உணர்வு கிடைக்கிறது. அந்த உணர்வில்தான் என்னுடைய பல படைப்புகளை எழுதி இருக்கிறேன். எந்நேரமும் அதனோடுதான் இருந்து கொண்டிருக்கிறேன். இப்போது நீங்கள் வரும்வரைக்கும்கூட புல்லாங்குழல் கேட்டுக்கொண்டிருந்தேன். அது என் பின்புலமாக இருந்து கொண்டே இருக்கிறது. அப்படி ஒரு ரீங்காரம் வேண்டி இருக்கிறது. ஒருவேளை அந்த அளவு நிம்மதியற்ற மனமோ என்னவோ தெரியவில்லை. அதனால் அதைச் சமனப்படுத்தும் ஓர் அம்சம் பின்னால் தேவையாய் இருந்துகொண்டே இருக்கிறதோ என்னவோ.

21. இரு நாவல்களுமே ஹிந்துஸ்தானி சங்கீதக்காரர்களைப் பற்றியது. அதற்கான காரணத்தை நாவல்களின் பின்னுரைகளில் மேலோட்டமாய்ச் சொல்லி இருந்தீர்கள். அதில் முக்கியமான ஒரு விஷயம் க‌ர்நாடக இசையை விட ஹிந்துஸ்தானி இசை இலக்கணத்தை உடைத்து மேலே செல்ல இடம் அளிக்கிறது என்பது. அது இசை வகைமையின் குறைபாடா அல்லது இசைக்காரர்கள் அதைச் செய்வதில்லையா? அது பற்றிப் பேச‌ முடியுமா? சஞ்சய் சுப்ரமணியன் உள்ளிட்ட உங்கள் கர்நாடக இசை நண்பர்களிடம் அதைச் சொல்லியதுண்டா?

இசை வகைமையின் தன்மை அது எனச் சொல்லலாம். குறைபாடு எனச் சொல்ல நமக்கு என்ன அருகதை இருக்கிறது? இது ஒரு வகைமை, அது இன்னொன்று. இங்கேயே கூட துக்கடா பாட்டுப் பாடுகையில் எழுந்து போகக்கூடிய அதிதீவிரமான இசை ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ராகம், தானம், பல்லவி மட்டும்தான் பாட வேண்டும் என்பார்கள். ஹிந்துஸ்தானி சங்கீதத்திலுமே கயால் சங்கீதம் என்ற சாதாரணமாய், சரளமாய்ப் பாடும் முறை குறைவானது, துருபத் இசைதான் ஹிந்துஸ்தானி சங்கீதத்தின் நோக்கத்துக்கு மிக அருகில் இருக்கிறது என்பார்கள் சில ரசிகர்கள்.

நமக்குத்தான் ஒரு தடையும் கிடையாதே, பிடித்ததெல்லாம் கேட்கலாம். இதைத்தான் கேட்க வேண்டும் என வரையறுத்துக் கொள்ளவில்லை. ஹிந்துஸ்தானியில் சஞ்சாரம் அதிகம் இருக்கிறது என்று தோன்றுகிறது. இலக்கணத்தின் பிடிமானம் உடையும் இடங்கள் நிறைய இருக்கிறது என நினைக்கிறேன். எனக்கு அது பிடித்திருக்கிறது. பாடகர்களைப் பொறுத்தவரை அவர்களின் voice culture-ஐ வைத்துப் பார்க்கும் போது கர்நாடக சங்கீதம் அதன் பக்கத்திலேயே போக முடியாது என நினைக்கிறேன்.

சஞ்சய் சுப்ரமணியன் போன்ற நண்பர்களிடத்தில் இதுபற்றி மட்டுமல்ல எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். நிறையப்பேசி இருக்கிறேன். அவர் கிண்டலாகச் சொல்வார் “வருடாவருடம் பூனே போய் விடுவார் கச்சேரி கேட்க, இவர் ஹிந்துஸ்தானிதான் கேட்பார்” என்றேல்லாம். ஏதோ ஒரு பேட்டியில் கானல் நதி அவருக்குப் பிடித்திருந்ததாகச் சொல்லி இருந்தார். அப்போதுதான் எனக்கு அது தெரியும். அப்போது நான் நினைத்துக் கொண்டேன். இசை சம்பந்தமான அனுபவங்களை எழுத்தாக்கப் போகும்போது அதிகம் உளறவில்லை போலிருக்கிறது. அவர் பொறுத்துக்கொள்ளுமளவு உளறி இருக்கிறேன்!

எழுத்தாளனிடம் போய் அவனுடைய எழுத்தைப் பற்றிக் கேட்கத் தயக்கமாக இருக்கிற‌து எனச் சொன்னீர்கள். அதேபோல்தான் சஞ்சயிடம் அவருடைய இசையைப் பற்றி நான் அதிகமாகப் பேச மாட்டேன். பார்க்கப்போனால், இசை பற்றியே அதிகம் பேச மாட்டேன். எனக்கு அவ்வளவு தெரியாது. தெரியாத விஷயத்தை அவரிடம் ஓர் இமேஜ் create பண்ணுவதற்காகப் பேசுவது சரியில்லை. “இல்லை சஞ்சய், இது எனக்கு ஏனோ அப்பீல் ஆகலயே!” என்பதுபோல மேலோட்டமாகத்தான் அபிப்பிராயம் சொல்வேன்.

அவர் எனக்கு இசைக்கலைஞராக‌ அறிமுகம் ஆனார். இன்றுவரை என் அபிமான இசைக்கலைஞர் அவர். ஆனால் அவரிடம் நேரில் பழகும்போது நான் ஒரு நண்பராகத்தான் உணர்கிறேன். அவர் அந்த மாதிரியான மனோபாவம் கொன்டவர்.

22. பொதுவாய் இரண்டு நாவல்களிலுமே கண்ட க்ளீஷேவான ஒரு விஷயம் எந்த ஓர் அபாரமான சங்கீத வாசிப்புக்கும் பின்பும் அதைக் கேட்கும் சங்கீதம் அறிந்த பாத்திரங்கள் கண்கள் கசிகின்றன“. அதைக் கொண்டே அவ்விசையை உயர்த்திச் சொல்ல முற்படுகிறீர்கள். நல்ல இசைக்கு கண்கள் கசிவதுதான் அளவுகோலா? அல்லது உங்களை அறியாமல் மறுபடி மறுபடி நிகழ்ந்து விட்ட ஒன்றா!

கண் கசிவது என்ற அம்சத்தை உங்கள் சுயம் தன் பிடிமானத்தை விட்டு நெகிழ்கிறது என்றுதான் பார்க்கிறேன். துக்கம் பொங்குகிறது, ஆனந்தக் கண்ணீர் வருகிறது என்ற பொருளில் சொல்லவில்லை.

அரியக்குடியோ அது போல் யாரோவோ சொன்னதாக சஞ்சய் தன் பேட்டியில் சொல்கிறார்: “கேட்கறவன் அழணும்டா, பாடறவன் அழப்படாது”. கேட்பவன் அழ வேண்டும் என்பது ஒரு scale போலிருக்கிறது. கதாபாத்திரங்களுக்கு மட்டுமல்ல, நிஜமான இசை ரசிகர்களுக்கும் இது இருக்கிறது. தி.ஜா.வும், லா.ச.ரா.வும் கூட இந்தக் கண் கசிவதைப் பேசி இருக்கிறார்கள். அது ஒரு state.

பார்க்கப்போனால் ஓரிடத்தில் இசை கேட்க நூறு பேர், ஆயிரம் பேர், பத்தாயிரம் பேர் கூடும்போது என்ன ஆகிறது என்று நினைக்கிறீர்கள்? கச்சேரி ஆரம்பிப்பதற்கு முன் ஒவ்வொருவருக்கும் இருந்த தனி அடையாளங்கள் எல்லாவற்றையும் மொத்தமாக ஓர் அண்டாவுக்குள் போட்டு கரைத்தாயிற்று. பிறகு உருவாகும் ஒற்றை அடையாளம்தான் உடம்பு முழுக்க காதாக ஆகி சங்கீதம் கேட்கிறது.

அப்புறம் எல்லா ராகமும் கசிய வைக்கும் என நான் நம்பவில்லை. சில ராகங்களுக்கு கசிய வைக்கும் தன்மை இருக்கிறது. உதாரணமாக தேஷ், சிந்து பைரவி, ரஞ்சனி. இந்த ராகங்களை எல்லாம் ரொம்ப சுமாரான ஒரு பாடகர் பாடினாலும் ஆதார மையமான ஓர் இடத்தை அவர் பிடித்து விட்டாரெனில் ‘மளுக்’ என உள்ளே ஏதோ ஒன்று முறியத்தான் செய்யும்.

23. நீங்கள் இசை ரசிகர் மட்டும்தானா? அல்லது இசைக் கருவி அல்லது வாய்ப்பாட்டில் அறிமுகம் உண்டா? இசை குறித்த ஏதேனும் நிறைவேறாத கனவு உண்டா உங்களுக்கு? அப்படித் தோன்றுகிறது.

நான் இரு நாவல்களை இசையைக் கருப்பொருளாக வைத்து எழுதி இருக்கிறேன் என்பதைத் தவிர இசை தொடர்பான கேள்விகள் எதற்குமே பதில் சொல்ல மாட்டேன் என மிகப் பிடிவாதமாக இருக்கிறேன்.

யாராவது முக்கியமான இசைக்கலைஞர்கள் இறந்தால்‌ என்னிடம் அஞ்சலிக் கட்டுரைகள் கேட்பதுண்டு. நான் மறுத்து விடுவேன். பீம்ஸென் ஜோஷி இறந்த போதுகூட நான் அவர் குறித்து ஏதும் எழுதவில்லை.

அவ்வளவுதான். இந்த அளவுக்கு ஓர் உணர்வுப்பூர்வமான ரசிகன் என்ற இடத்திலிருந்து இசையைப் பற்றிப் பேசினால் போதும் என நினைக்கிறேன். எனக்குக் கருவிகள் ஏதும் வாசிக்கத் தெரியாது. பாத்ரூம் சிங்கர் தான். உல்லாசமான மனநிலையில் இருக்கும்போது பாடுவேன். இப்போது அதையும் குறைத்துக் கொண்டாயிற்று. நல்ல சங்கீதம் நிறையக் கேட்கக் கேட்க பாட வேண்டாம் என்று தோன்றிவிட்டது.

24. எழுத்தும் கூட அப்படித்தானே!

இல்லை, அப்படி இல்லை. அட, இதென்ன நாம் தொட முடியாத எல்லையா? தொட்டுப் பார்த்து விடலாமே எனத் தோன்றிவிடும். இசபெல் அலெண்டே ஒரு பேட்டியில் சொல்கிறார்: மார்க்கேஸின் One hundred years of solitude – படித்தவுடன், ‘இவர் இதைச் செய்ய முடியுமென்றால் நானும் ஏன் செய்ய முடியாது’ என்று அவருக்குத் தோன்றியதாம்.

என் துறை இது என்ற தீர்மானம், வரையறை இருந்ததென்றால் அதை ஒரு சவாலாக எடுத்துச் செய்து பார்க்கலாம். இசை என் துறை கிடையாது. அங்கே நான் ரசிகன் மட்டும்தான். உதாரணமாக தினசரி ரயிலில் போகிறேன். ஒருநாளாவது ரயில் ஓட்டிப் பார்க்க வேண்டும் என நினைப்பேனா!

ஆனால், என் பால்யக் கனவுகளில் நான் ஒரு பெரிய பாடகனாக வேண்டும் என நினைத்திருக்கிறேன். எழுத்தாளனாக வேண்டும் என எண்ணியதே இல்லை. இப்படித்தான் நினைப்பது நடக்காது; நினைக்காதது நடக்கும்!

25. இசை பற்றி இத்தனை எழுதியதால் கேட்கிறேன். சாஸ்திரிய சங்கீதம் தாண்டி சினிமாப் பாடல்கள் கேட்பதுண்டா? இளையராஜாவின் தீவிர ரசிகன் நான். அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதுவதாக ஒரு பதிப்பகத்திடம் ஒப்புக்கொண்டு பல்வேறு காரணங்களால் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. கானல் நதி வாசித்த போது இளையராஜாவின் வாழ்க்கையை அப்படி எழுதிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்தது. நினைவுதிர்காலம் வாசித்தபோது இளையராஜாவை அப்படி ஒரு நேர்காணல் செய்ய வேண்டும் என ஆசை ஏற்பட்டிருக்கிறது. இப்படி தனிப்பட்ட முறையில் எனக்கு அளவுக்கு மீறிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டீர்கள்.

சினிமாப் பாடல்களில் நிறைய ஆசை உண்டு, நிறையக் கேட்டிருக்கிறேன். In fact. நான் சாஸ்திரிய சங்கீதம் கேட்க ஆரம்பித்தது வாலிபனான பிறகுதான். 26, 27 வயதில் தொடங்கினேன். அதற்கு முன் அப்பா அகில பாரத சங்கீத சம்மேளனம் கேட்க வைப்பார். சில பெயர்கள் மனத்தில் பதிந்ததே ஒழிய இசை ஏதும் பெரிதாக மனதில் பதியவில்லை. ஆனால் சினிமாப்பாடல் குழந்தையாக இருந்ததிலிருந்தே கேட்கிறேன். பழைய சினிமாப்பாடல்களின் அபூர்வமான தொகுப்பு என்னிடம் இருக்கிறது. ஆசையாகக் கேட்பேன்.

நான் இளையராஜாவின் பரமரசிகன். தமிழ் சினிமா சங்கீதத்தில் மிக முக்கியமான பல வேலைகள் பார்த்திருக்கிறார். குறிப்பாக எழுபதுகளின் தொடக்கம் முதல் இறுதிப்பகுதிவரை காணாமல் போயிருந்த melody-யை திரும்ப retintroduce செய்தது இளையராஜாதான் என்பதில் சந்தேகமே இல்லை. எனக்கு மிக அபிமானமான ஓர் இசையமைப்பாளர். அவரைப் பற்றி அப்படி ஒரு புத்தகம் எழுதலாம்தான். எழுதப்பட முழுத் தகுதி உள்ளவர். அவர் மேல் எனக்கு மிகப் பெரிய மரியாதையும் அபிமானமும் பிரியமும் இருக்கிறது.

நான் ரசிக்கக்கூடிய அவரது மிக நல்ல பாடல்கள் பலவும் பொதுத்தளத்தில் காணாமல் போய்விட்டது, அதிகம் பேர் கேட்காமல் ஹிட் ஆகாமல் போய் விட்டது என்ற வருத்தம் உண்டு. சமீபத்தில்கூட நண்பர்கள் பழைய பாடல்கள் பற்றிப் பேசிக் கொண்டிருக்கையில் கரும்பு வில் படத்தில் இளையராஜா மெட்டமைத்து மலேசியா வாசுதேவன் ஜானகி பாடிய ’மலர்களிலே ஆராதனை’ பாடல் பற்றி பேச்சு வந்தது. அப்போது உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னேன்: “முக்கியமான பாட்டு அது, கர்ணன் பாடல்களுக்குப் பக்கத்தில் வைக்க வேண்டிய பாடல்” என்றேன். அது மாதிரியான classical heights எல்லாம் அவர் சினிமாப் பாடல்களில் கொடுத்திருக்கிறார். ரொம்ப melodious பாடல்கள் தந்திருக்கிறார். நிழல்கள் படத்தில் ’தூரத்தில் நான் கண்ட உன் முகம்’ என்ற பாடல் (படத்தில் இல்லை). அந்தப் பாடல் இப்போதுவரை கேட்கும்போதெல்லாம் ஒரு க்ளாஸிக்கல் ஹிந்துஸ்தானி கொடுக்கக்கூடிய அதே நிறைவைத் தரும். அதில் அந்தத் தந்திவாத்தியம் எப்படி இறைஞ்சும்!

26. உங்கள் பிரதான பலம், படைப்பு வாகனம் சிறுகதை என்பதாக அவதானிக்கிறேன். மணற்கேணி, வெளியேற்றம் போன்றவை கூட ஒருவகையில் சிறுகதைகளால் ஆன நாவல்களே. நேரடியாகவும், மறைமுகமாகவும் தமிழில் இத்தனை வளமாய் சிறுகதை எழுதித் தள்ளிய இன்னொருவரைத் தேட வேண்டும். ஏன் சிறுகதை? மற்ற வடிவங்களை விட அது உங்களுக்கு நெருக்கமானதாக ஆனதேன்?

நீங்கள் இவ்வளவு தூரம் நாவல்கள் பற்றிப் பேசியதை வைத்து நாவல்கள்தான் எனது பிரதான பலமோ என்பதான ஒரு பிரமை எனக்கே ஏற்பட்டிருந்தது! இப்போது இப்படிக் கேட்கிறீர்கள்.

சிறுகதை வடிவத்தை என்னுடைய பலம் என்று நீங்கள் கருதுவதே மிகவும் மகிழ்ச்சி தருகிறது.

சமீபத்தில்தான் எனது மிக நெருங்கிய நண்பர், ஒரு செய்தி சொன்னார்: “அவனைப் பத்தி என்னய்யா விசேஷமாச் சொல்றீங்க? அவனுக்கு சிறுகதை வடிவமே பிடிபடல. ஒரு கதையையும் ஒழுங்கா ஆரமிக்கத் தெரியலெ. முடிக்கவும் தெரியலெ. வளவளன்னு எழுதுறான்.” இப்படிச் சொன்னவர், நான் மிகவும் மதிக்கும், மூத்த தலைமுறை எழுத்தாளர். எனது கதைகள் பற்றி இப்படி ஒரு கருத்தும் நிலவுகிறது என்பதை நீங்கள் அறியவேண்டும் என்பதற்காகக் குறிப்பிட்டேன்!

என்னைப் பொறுத்தவரை, வடிவ விசுவாசம் முக்கியம் அல்ல. அந்த அக்கறையையும், கறார்த்தனத்தையும் கவிதையிடம் வைத்துக்கொள்வேன். எனது கதைகளை, சிறுகதைகள் என்று நான் குறிப்பிடுவதில்லை. அவை கதைகள். நவீனத்துவத்தின் எழுச்சி காரணமாக உலகமொழிகளில் எழுதப்பட்டிருக்கும் சிறுகதைகள் அனைத்துக்கும் ஓர் சமத்தன்மை இருக்கிறது. தற்போதைய தலைமுறை அதைக் குலைத்துப் பார்க்க முயல்கிறது. நேர்கோட்டை இஷ்டம்போல ஒடித்து, புதிய சொல்லல் வடிவங்களை உருவாக்குவது இந்திய மரபின் கதைசொல்லலுக்கு அந்நியமானதல்ல. எனக்கு இந்த பாணியில் கதைசொல்லப் பிடித்திருக்கிறது!

கல்லூரியில் எனது பேராசிரியராக இருந்தவர் சொல்வார் – ’சிறுகதை என்பது மூன்றே அம்சங்களினால் ஆனது, எடுப்பு, தொடுப்பு, முடிப்பு.’ அப்படியான ஓர் அறிதல்தான் பரவலாக இருக்கிறது.

’உங்கள் கதைகள் எல்லாமே கதைக்கொத்துகளாகவே இருக்கின்றனவே?’ என்று ஆதங்கப்பட்ட நண்பரிடம் சொன்னேன்: ’மரபான சிறுகதை வடிவத்தில் பல்லாயிரக்கணக்கான கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன – அந்த எழுத்தாளர்களிடம் ஏன் ஒரே மாதிரி எழுதுகிறீர்கள் என்று யாரும் கேட்பதில்லை! ஏதோ ஒரு மாற்று முறையில் ஆசைவைத்து முயற்சிக்கிறவனைப் போய் இப்படிக் கேட்கிறீர்களே!’

ஆனால், முழுக்க முழுக்க, சிறுகதையின் சொல்லப்பட்ட இலக்கணத்துக்கு ஒத்த கதைகளும் ஒரு சில எழுதியிருக்கிறேன் – உடனடியாக நினைவு வரும் இரண்டு கதைகள், தபஸ்வினி, விருந்தாளி.

மற்றபடி, அவ்வப்போதைய மனநிலையின் பிரகாரம், தோன்றும் உந்துதலின் பிரகாரம், ஏதோவொரு வடிவத்தைத் தேர்கிறேன் – அல்லது பேச எடுத்துக்கொள்ளும் சமாசாரம், தனது வெளிப்பாட்டு வடிவத்தை முடிவுசெய்துகொள்கிறது. எனது பிற படைப்புகளைவிடவும் சிறுகதைகள் உங்களை வெகுவாகக் கவர்ந்திருக்கின்றன என்று புரிந்துகொள்கிறேன்.

27. ஒளி விலகல், ஏற்கனவே இரண்டும் மிகச் செறிவான சிறுகதைத் தொகுதிகள். வடிவ பரிசோதனை முயற்சிகளில் ஆகட்டும், உள்ளடக்கத்தின் புதுமையிலாகட்டும் அவை மிக முக்கியமான ஆக்கங்கள். அதிலும் ஆச்சரியகரமாய் அவைதாம் உங்கள் முதல் புனைவு முயற்சிகள். சுந்தர ராமசாமியே தன் ஆரம்ப காலக்கதைகள் சிலவற்றைப் பலவீனமானவை எனக் கருதி தன் முழுத் தொகுதியிலிருந்து நீக்கி இருக்கிறார். அப்படி அல்லாமல் உங்கள் ஆரம்பக் கதைகளே எப்படி தனித்துவம் கொண்டன?

நீங்கள் அப்படி நினைப்பது சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. இந்த இரு தொகுப்புகளுக்குப் பிறகு வந்த கடல் கொண்ட நிலம், நீர்ப்பறவைகளின் தியானம் தொகுப்புகளிலும் அதே மாதிரியான கதைகள் இடம் பெற்றிருப்பதாக நினைக்கிறேன். அதிலும், கடல் கொண்ட நிலம் எனது அபிமானத் தொகுப்பு. என்னுடைய ஆரம்பகாலக் கதைகள் சிலவற்றைத் தொகுப்புகளில் சேர்க்கவில்லை, இத்தனைக்கும் அவை பிரசுரமானவைதாம். சுந்தர ராமசாமி கதைகள் சம்பந்தமாகச் செய்ததை நான் என் கவிதைகளில் செய்தேன் என ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். நீங்கள் குறிப்பிடும் தொகுப்புகள் குறித்து பெரிய அதிப்ருதி ஏதும் எனக்கு இதுவரை வரவில்லை.

28. இருபத்து மூன்று காதல் கதைகளைப் பற்றிச் சொல்லாமல் விடுத்தால் இந்நேர்காணல் நிறையாது. ஒரு விஷயம் சொல்கிறேன். அப்போது 20 வயது இருக்கும். அந்தக் கதையின் பக்கங்களை மட்டும் ஒளிநகல் செய்து அப்போது காதலியாக இருந்த என் மனைவிக்கு வாசிக்கக் கொடுத்திருக்கிறேன். அந்தக் குறுநாவல் பற்றி ஏதேனும் சொல்ல விஷயமிருக்கிறதா? அப்போதே அது அளவில் அங்கீகாரம் பெற்ற கதை தானே?

அது பற்றிச் சொல்ல சுவாரஸ்ய‌மான சில சம்பவங்கள் இருக்கின்றன.

சாரு நிவேதிதாவும் நானும் தினசரி சந்தித்துக் கொண்டிருந்த காலம். கரட்டுப்பட்டியில் நான் சிறுவனாக இருந்த சமயம் நடந்த ஏதோ ஒரு சம்பவம் பற்றி அவரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். அப்போது ஏதோ ஒன்றை நான் அவருக்கு வார்த்தைகளில் சொல்லி விளங்க வைக்க முடியவில்லை என தரையில் காலால் கோடு போட்டு, இந்த இடத்தில் அவர் நின்றிருந்தார் அந்த இடத்தில் நான் நின்றிருந்தேன் என்பது போலச் சொல்லி முடித்தவுடன் சாரு சொன்னார்: “நீங்க ஃபிக்‌ஷன் எழுதலாமே, ஏன் எழுதாம இருக்கீங்க?”.

அதற்கு அடுத்த நாள் வசந்தகுமார், பஷீர், நான் மூவரும் நின்று பேசிக் கொண்டிருந்தோம். ஏதோ ஒன்றை விலாவாரியாகச் சொல்லிக் கொண்டிருந்தேன் வசந்தகுமாரிடம். அப்போது வசந்தகுமார் கேட்டார், “ஏன் சேகர், நீங்க கதை எழுத மாட்டேங்கறீங்க?”. ஓ! நாம் கதை எழுதலாம் போலிருக்கிறது எனத் தோன்றியது.

அதற்கு முன்னால் பத்து, பன்னிரண்டு சிறுகதைகள் எழுதி பிரசுரமும் கண்டிருந்தன. ஆனால் நான் மதிக்கும் இரண்டு பேர் என்னிடம் ’கதை எழுதலாமே’ என்று முதலில் சொன்ன சந்தர்ப்பம் அது.

அந்த சமயத்தில் நண்பன் தண்டபாணி வந்திருந்தான். என் எழுத்துக்கள் எல்லாவற்றுக்கும் பின்னால் இருப்பவன். அவனை வழியனுப்பப் போனபோது, கையில் சில காதல் கதைகள் எழுதலாம் எனத் தோன்றுகிறது எனச் சொன்னேன். “அப்படியா! கதை எல்லாம் எழுதப் போறியா நீ?” என ஆச்சரியமாகக் கேட்டான். “ஆம், tentative-ஆக ஒரு தலைப்பு கூடத் தோன்றி இருக்கிறது” என்றேன். இருபத்தி மூன்று காதல் கதைகள். ஏன் 23 என்று அவனும் கேட்கவில்லை. நானும் சொல்லவில்லை. இப்போதுவரை எனக்கும் தெரியாது!

இப்படித்தான் அதை எழுத ஆரம்பித்தேன். முதல் இரு கதைகள் எழுதி முடித்ததும் சாரு நிவேதிதாவிடம் படிக்கக் கொடுத்தேன். “இதுதான் post-morden. தொடர்ந்து எழுதுங்க” என்றார். அப்புறம் இருபத்தி மூன்று காதல் கதைகள் எழுதி முடித்தவுடன் அவர் மிகவும் மதிக்கும் ஒரு போஸ்ட் மார்டனிஸ விமர்சகரிடம் கொடுக்கச் சொல்லி சிபாரிசு செய்தார். நான் கொடுத்தேன். அவர் வாசித்து விட்டு அது மொத்தமும் குப்பை என்று சொன்னார். அதைக் கேட்டு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகிவிட்டது. உடனடியாக. அதைப் பிரசுரம் செய்தேன்!

ஆரண்யம் இதழில் அது பிரசுரமானது. ஸ்ரீபதியும் சுதேசமித்திரனும் அதன் ஆசிரியர்கள். சாரு நிவேதிதா மூலமாக அவர்கள் அறிமுகம். அவர்கள் அதைப் பெரும் கொண்டாட்டத்துடன் பிரசுரம் செய்தார்கள். அதற்கு அடுத்த இதழில் அக்கதை பற்றிய லதா ராமகிருஷ்ணனின் 3 பக்கக் கட்டுரை ஒன்று வந்தது.

அக்கதையைப் பிரசுரம் செய்ததில் ஒரு விபத்து நேர்ந்து விட்டது. நண்பருக்கான ஒரு கடிதம் என்பதோடு அக்கதை முடியும். “நண்பரே, இருபத்தி மூன்று காதல் கதைகளை இத்துடன் இணைத்திருக்கிறேன், உங்கள் அபிப்பிராயத்துக்குப் பின்புதான் இதைப் பிரசுரம் செய்வேன்” என்று சொல்லும் கடிதம். அதாவது பிரசுரம் ஆன கதையில் இனிமேல்தான் இதைப் பிரசுரம் செய்யப் போகிறேன் என்று. அப்போதிருந்த ஒரு கேளிக்கை, வேடிக்கை, சாகச‌ மனநிலையில் செய்தது. அந்தக் கடிதம் “இப்படிக்கு கிருஷ்ணன்” என்று முடியும். அவர்கள் கதைக்கு ஓர் ஓவியம் போட்டிருந்தார்கள். ஓவியத்தின் கோடு கிருஷ்ணன் மீது அழுத்தமாய்ப் படிந்து, பார்த்தால் “இப்படிக்கு” என்பதோடு நின்றுவிட்டது போல் தோற்றம் உண்டாக்கி விட்டது. அதை “இப்படிக்கு யுவன் சந்திரசேகர்” என்று எடுத்துக் கொண்டார் போல லதா ராமகிருஷ்ணன். அதாவது, ஆரண்யம் இதழ் ஆசிரியருக்கு யுவன் சந்திரசேகர் எழுதிய கடிதம் என்று.

அக்கட்டுரையில் என்னை வசவான வசவு. ’இது உங்களின் Literary Catharsis-ஸா யுவன்?’ என்று முடிந்திருந்தது. அக்கட்டுரைக்குப் பக்கத்திலேயே அதே கதை பற்றி‌ முருகேச பாண்டியனின் ஒன்றரைப் பக்கக் கட்டுரை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்கள். அவர் இதைக் கொண்டாடித் தள்ளி இருந்தார். எனக்கு இரண்டுமே புரியவில்லை. இவை ஒரே இதழில் அடுத்தடுத்து இருந்தது ஆச்சரியமாக இருந்தது. யதேச்சையாக, ஒரு கடிதத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, மற்றதில் பதில் இருந்ததும் சுவாரசியமாக இருந்தது.

அதில் ஒரு குறிப்பிட்ட கதையை அம்பை படித்துவிட்டு ஓர் அதிகாலையில் தொலைபேசியில் அழைத்தார், “ரொம்பப் பிரமாதமான கதை. நான் எழுதி இருக்க வேண்டிய கதை அது” என்றார். அம்பைக்கும் எனக்குமான நட்பு மிக அபூர்வமானது. பல வருடங்கள் கழித்து சந்தித்துக்கொள்வோம். விட்ட இடத்திலிருந்து பேச ஆரம்பிப்போம். ஒரு நெருக்கமான, அபூர்வமான சினேகிதியாகத்தான் அம்பையை நினைக்கிறேன்.

அச்சமயம் தமிழினி மாநாடுக்கு அம்பை வந்திருந்தார். இடையில் லதா ராமகிருஷ்ணனின் கட்டுரை பிரசுரமாகியிருந்தது. அம்பையிடம் கேட்டேன், “நீங்கள் பெண்ணியவாதி, உங்களுக்கு இந்தக் கதை பிடித்திருக்கிறது. லதா ராமகிருஷ்ணனும் பெண்ணியவாதி அவர் திட்டுகிறாரே!” “நீ சின்னப் பையன். பெண்ணியத்தில் நிறைய வெரைட்டி இருக்கு, உனக்குப் புரியாது” என்று சொல்லிச் சிரித்தார் அவர்!

அப்புறம் அது என் டைரிக்குறிப்பு, அதில் 23 பெண்களுடன் நான் பழகி அவர்களை ஏமாற்றி விட்டேன் என்பது மாதிரியான ஓர் அறிதல் முறை அப்போது தமிழில் இருந்தது. அதில் ஒரு பாட்டி இருப்பார். பார்க்கின்ஸன்ஸ் வியாதியால் பீடிக்கப்பட்டவர். அவருக்குப் புடவை கட்ட முடியாது. அவர் கணவர் கட்டி விடுவார். ’அதுவும் கூட நான்தான் என நினைக்கிறார்கள் போலிருக்கிறது. அந்தக் கிழவியையும் நான்தான் கைவிட்டுவிட்டேனோ!’ என்று நண்பர்களிடம் கேட்டுச் சிரித்தது நினைவு வருகிறது.

எனக்கு மிகப் பிடித்த ஒரு குறுநாவல் அது. நான் எழுதிய முதல் குறுநாவல். ஆனால் அதைக் குறுநாவல் என இன்றுவரை நான் மட்டும்தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்! அநேகம் பேர் அவற்றை உதிரிக்கதைகள் என்றே கருதுகிற மாதிரி இருக்கிறது. நாம் குறுநாவல், சிறுகதை பற்றியும் திரும்ப விவாதிக்கத்தான் வேண்டும்.

29. எந்த ஓர் எழுத்தாளரையும் போல் கவிதைகளில்தான் நீங்களும் துவங்கி இருக்கிறீர்கள். ஒரு படைப்பாளியாக‌ கவிதைக்கும் புனைவுக்குமான வேற்றுமை என்ன‌? கவிதையிலிருந்து புனைவுக்கு நகர்ந்த‌ பயணம் எப்படி இருந்தது? கவிஞன் எழுத்தாளன் எந்த அடையாளத்தை விரும்புகிறீர்கள்?

ஒன்றுக்கும் மேற்பட்ட வடிவங்களில் புழங்கியவர்கள் என தமிழில் குறைந்தது பத்து, பதினைந்து பேர் இருந்திருக்கிறார்கள். அவர்களில் நானும் ஒருவன். நான் இத்தனை சிறுகதைகளும் நாவல்களும் எழுதிய பிறகும் இன்றுவரை பிடிவாதமாக என்னைக் கவிஞர் யுவன் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் இருக்கிறார்கள். ’அடுத்து, கவிஞர் யுவன் பேசுவார்’ என்பார்கள். நானும் எழுந்துபோய்ப் பேசிவிட்டு வருவேன்!

குறிப்பாக இந்த அடையாளம்தான் வேண்டும் என நான் நினைக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை இந்த இரு வடிவங்களுக்கு இடையில் நான் எதாவது காத்திரமான, பொருட்படுத்தத்தக்க வித்தியாசத்தை உருவாக்கிக் காட்டி இருக்கிறேனா என்பதுதான் கேள்வி. என்னுடைய கவிதைகள் எதுவுமே ஒரு நாவலில் ஒரு சிறுகதையில் – அதாவது உரைநடைப் புனைவில் இடம் பெறக்கூடியது என்று ‌ நான் கருதவில்லை. அந்த விதமாக மட்டுமே எழுதப்பட முடிந்த விஷயங்களை மட்டுமே நான் கவிதையாக எழுதி இருக்கிறேன்.

சிறுகதையில் அல்லது நாவலில் கவிதைக்கூறுகள் உள்ள இடங்கள் இருந்திருக்கலாம். கைப்பழக்கத்தில் வந்ததாக இருக்கும் அது. ஆனால் அதெல்லாம் கவிதை என நானே claim செய்ய மாட்டேன். கவிதைகளில் புனைகதை அளவுக்கு நான் சுத‌ந்திரமாக உணரவில்லை. என் சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் அதைச் சொல்லி இருந்த ஞாபகம். புனைகதை கொடுக்கக்கூடிய சௌகர்யம், இட விஸ்தாரம் வேறு.

ஒருவேளை கவிதை என்பதை மிகத் தீவிரமான விஷயமாக நான்தான் பார்த்துக்கொண்டிருக்கிறேனோ என்னவோ! கவிதை தொடர்பாக எனக்குள் இருக்கும் கோட்பாடு அத்தகைய தீவிரத்தன்மையைக் கோரக்கூடியதாக இருக்கிறதோ என்னவோ! இப்படி அது என் பிரச்சனையாகவும் இருக்கலாம்.

ஏனெனில் மிக சரளமான, நெகிழ்வான மிகப்பல கவிதைகள் இருக்கின்றன. உதாரணமாக‌ கல்பற்றா நாராயணன் எழுதும் கவிதைகள். தமிழில் ஞானக்கூத்தன் எழுதும் மிகப்பல கவிதைகள் எனக்கு அத்தகைய கிளர்ச்சியைக் கொடுத்திருக்கின்றன. கவிதாம்சமும் ஓங்கியிருக்கும். பகடியும் நிறைந்திருக்கும். ஆனால் எனக்கு அப்படி எழுதத் தெரியவில்லை. நான் அப்படி எழுத யோசிக்கவும் இல்லை.

மற்றபடி, இரண்டும் இரு வெவ்வேறு வடிவ ஒழுங்கு கொண்டவை என்பதில் சந்தேகம் இல்லை. கவிதை இன்னமும் நுட்பமானது என நினைக்கிறேன்.

30. நீங்கள் கடைசியாய்க் கவிதை எழுதி ஆறேழு ஆண்டுகள் இருக்கக்கூடும் அல்லவா! பிற்பாடு ஏன் கவிஞராகத் தொடரவில்லை? அல்லது முன்போலத் தீவிரமாக இயங்கவில்லை? அது ஏதும் மனநிலை தொடர்புடைய விஷயமா? புனைவே உங்கள் இயல்பான வெளிப்பாட்டு முறை என நினைக்கிறீர்களா? இன்றைய இலக்கிய உலகம் புனைவுக்கிணையாய் கவிதைக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லையா?

இந்தக் கடைசிக் கேள்வியை நான் நிராகரிக்கிறேன். இன்று உலகில் எது saleable-ஆக‌ இருக்கிற‌து என்று பார்த்து எழுத்தாளன் செயல்பட மாட்டான். நான் அப்படிச் செயல்படவில்லை.

நான் இப்போது கவிதை எழுதவில்லை என நீங்கள் நினைத்துக் கொள்கிறீர்கள். ஒரு தொகுப்பு போடுமளவு கவிதைகள் என்னிடம் இருக்கிறது. நான் பிரசுரம் செய்யவில்லை. இருநூற்றைம்பது வரிகள் கொண்ட ஒரு நீள்கவிதை கூட எழுதி வைத்திருக்கிறேன். அதை எழுதி மூன்று, நான்கு வருடங்களாகிறது.

கவிதைகளில் வேறொரு விதமான எழுத்துமுறைக்கு, உருவ முறைக்கு மாற வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறேனோ என்றுகூடத் தோன்றி இருக்கிறது. புகைச்சுவருக்கு அப்பால் தொகுதியையும் தோற்றப்பிழை என்ற தொகுதியையும் ஒப்பிட்டாலே இந்த வித்தியாசம் புலப்படும். இன்னும் நெகிழ்வான, இன்னும் சரளமான ஒரு சொல்முறையை நோக்கி நகரும் விழைவு உள்ளே இருந்து கொண்டே இருக்கிறது. அது முழுக்க திருப்திப்பட்ட பிறகு அக்கவிதைகளை நான் பிரசுரம் செய்வேன்.

புனைகதை எழுதுவதற்கும் கவிதை எழுதுவதற்கும் என்னளவில் ஒரு வித்தியாசம் உண்டு. நான் கவிதை எழுதும் முறையில் எனக்கு ஒரு கவிதை முழுமையாய் உள்ளே தோன்றி விடும். அதைக் காகிதத்துக்கு நகர்த்தி விட்டு, அதன் வடிவச் செறிவு சம்பந்தமாகச் சில வேலைகள் செய்வேன். அப்படித்தான் நான் எழுதும் முறை இருக்கிறது.

எப்போதும் கவிதையை கனவுக்கு ஒப்பிட்டு நண்பர்களிடம் பேசுவது வழக்கம். கனவு முழுமையாகவே வரும். இன்று கொஞ்சம் வந்து, நாளை மீதி தொடராது. சிறுகதை அப்படி இல்லை. இன்று கொஞ்சம் தோன்றும். நாளை கொஞ்சம் வளர்க்கலாம், சில விஷயங்கள் சேர்க்கலாம், நீக்கலாம். இதுபோல் ஓர் எடிட்டிங்கிற்கு சாத்தியம் கொண்ட விஷயம் புனைகதை. ஆனால் கவிதை முழுமையாகி விட்டது என மனத்தில் தோன்றாத வரை அதைக் காகிதத்துக்கு நகர்த்துவதில்லை எனத் தீர்மானமாக இருக்கிறேன்.

கவிதை மேல் பெரும் ஆசை உண்டு. எப்போதுமே இவ்வளவுதான் எழுதி வந்திருக்கிறேன். வருடத்துக்குப் பத்து கவிதை. மூன்று அல்லது நான்கு வருஷத்துக்கு ஒரு தொகுப்பு. அதே விகிதத்தில் இன்னமும் எழுதிக் கொண்டிருக்கிரேன். இப்போது உபரியாக கவிதை பற்றிய கட்டுரைத்தொடர் ஒன்று காலச்சுவடில் எழுதிக் கொண்டிருக்கிறேன். இதைச் செய்வேன் என நான்கு வருடங்களுக்கு முன் தெரியாது. இப்போது தோன்றி இருக்கிற‌து. செய்கிறேன்.

31. தமிழில் ஜென் கவிதைகள் குறித்து யார் தொடக்கப் புள்ளி கேட்டாலும் பெயரற்ற யாத்ரீகன் நூலையே முதன்மையாகக் குறிப்பிடுவது என் வழக்கம். அந்த முயற்சி பற்றிச் சொல்லுங்கள்.

உயிர்மை பதிப்பகம் ஆரம்பித்திருந்த நேரம். அதற்குக் கொஞ்சம் நாட்கள் முன்னால் காலச்சுவடில் 10 – 12 ஜப்பானியக் கவிதைகள் – அதில் ஜென் கவிதைகளும் அடக்கம் – என் மொழிபெயர்ப்பில் வெளியாகின. மனுஷ்யபுத்திரன் உயிர்மைக்கு ஏதாவது புத்தகம் கொடுங்கள் எனக் கேட்டார். ’ஏற்கனவே’ தொகுப்பின் அத்தனை கதைகளும் அப்போது தயாராக இருந்தன. அதைக் கொடுத்தேன்.

அவர் எனக்கு நண்பர். அதனால் ஒரு புத்தகத்தோடு நிறுத்தக்கூடாது எனத் தோன்றி, “ஜென் கவிதைகள் ஒரு தொகுப்பு போடலாமா ஹமீது?” என்று கேட்டேன். நாங்கள் இருவரும் சேர்ந்து அதற்கான வேலைகளைத் தொடங்கினோம். அவர் இணையத்தில் இருந்தும், புத்தகங்களில் இருந்தும் வண்டி வண்டியாக ஜென் கவிதைகள் எனக்கு எடுத்துத் தருவார் (இப்போதுகூட அது என்னிடம் சிடியாக இருக்கிறது). கிட்டத்தட்ட இர‌ண்டாயிரம் கவிதைகள் அப்படி சேகரித்தோம். அதில் 250 கவிதைகளை shortlist செய்து மொழிபெயர்த்தேன். அதில் 175 மட்டும்தான் அப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது.

ஒவ்வொரு பக்கத்திலும் இணையத்திலிருந்து படங்கள் தேடிப் போடுவதில் தொடங்கி, அந்தப் புத்தகத்தின் ஆக்கத்தில் ஹமீது எல்லாவற்றையும் ரொம்ப ஆசையாகச் செய்தார். அழகான புத்தகமாக அது வெளியானது. அந்தப் புத்தகத்துக்கு மட்டும்தான் அவர் பதிப்பாளர் குறிப்பு என ஒன்று எழுதி இருக்கிறார். அப்போது சொன்னார், “இப்புத்தகத்தில் நானும் இருக்கணும்னு ஆசைப்படறேன் சந்திரசேகர், அதனால்தான்”.

மனுஷ்யபுத்திரனுடனான என் உறவு கடந்த சில வருடங்களாக அவ்வளவு சீராக இல்லை. அதனால் அப்புத்தகம் மறுபதிப்பு காண்பதற்கான வாய்ப்பும் இல்லை. நான் என்னுடைய ஒரிஜினல் படைப்புகளை விடவும் அதிக காலம் உயிருடன் இருக்கும் என்று நான் நினைத்த புத்தகம். ஆனால் அதற்கு இப்படி ஒரு அற்ப ஆயுள் வாய்த்தது என்பது சற்று வலிக்கத்தான் செய்கிற‌து. மனுஷ்யபுத்திரனுடனான் நட்பில் தேக்கம் உண்டானதும் வருத்தமான விஷயம்தான்.

ஆனால் இப்போது யோசிக்கும்போது இலக்கிய வாழ்க்கையில் இதுபோல நிறைய நண்பர்கள் வந்து தங்கி, என் காரணமாகவோ அவர்கள் காரணமாகவோ விலகிப்போய் இருக்கிறார்கள். அப்படிக் காணாமல் போன நண்பர்களில் நான் இன்றுவரை ஒரு வலியாக உணர்வது மனுஷ்யபுத்திரனைத்தான். அந்த அளவு அவரிடம் அபிமானமாக, நெருக்கமாக இருந்தேன். அவரோடு இருந்த நாட்களில் நான் மிக உற்சாகமாகவும் உல்லாசமாகவும் இதமாகவும் உணர்ந்தேன் என்பதையும் சொல்லத்தான் வேண்டும். என் ஞாபகத்தில் இருக்கும் ஹமீதுடன் எனக்கு இருக்கும் நட்பு கெடவே இல்லை. இன்றுவரை அதே நேசத்துடன் இருந்து கொண்டிருக்கிறது.

இன்றிருக்கும் ஹமீது நான் நெருங்க முடியாத தொலைவில் இருக்கிறார் என நினைக்கிறேன்.

ஓர் உறவு காணாமல் போனவுடன் ஒன்றாய் இருந்த அந்த காலகட்டமும் சேர்ந்து காணாமல் போகாது. ஆனந்தின் ஒரு கவிதை உண்டு. சற்றைக்கு முன் / ஜன்னல் சட்டமிட்ட வானில் / பறந்து கொண்டிருந்த / பறவை / எங்கே? / அது / சற்றைக்கு முன் / பறந்து கொண்டிருக்கிறது.

நீங்கள் திரும்ப அந்தப் பறவையைப் பார்க்கப் போனீர்கள் என்றால் அந்தக் கணத்தோடு சேர்ந்துதான் இருக்கும். நான் ஹமீது சம்பந்தமாய் அப்படித்தான் உணர்கிறேன். அந்த நாட்கள் நிஜமாகவே அன்பு மிகுந்தவை.

32. அந்த மொழிபெயர்ப்பு ஒரு முக்கியமான பங்களிப்பு. ஜென் மீதான உங்கள் ஆர்வத்தைப் பற்றிப் பேசுங்கள். அது இலக்கியம் சார்ந்ததா அல்லது ஆன்மீகம் சார்ந்ததா இரண்டுமா?

ஜென் இலக்கியம் சார்ந்ததா எனக் கேட்டால் ஆம். ஒரு முக்கியமான கவிதை உருவம் அது. ஜென் கவிதை என்றதுமே பலரும் ஹைக்கூ என்று புரிந்து கொள்கிறார்கள். ஹைக்கூ மட்டுமில்லை, இன்னும் அநேக ஜென் கவிதை உருவங்கள் இருக்கின்றன‌. நீளக்கவிதைகள், குறுவடிவங்கள், ஹைக்கூவை விடவும் கூட‌ குறுகலாக இருப்பவை எல்லாம் இருக்கின்றன.

ஆன்மீகமானதா எனக் கேட்டால் ஆம். அதுவும்தான். ஜென் என்பது ஒரு பார்வைக் கோணம். விடுகதை போல், புதிர் போல் தோற்றம் தந்து நுட்பமான விஷயங்களைப் பேசும் ஒரு வடிவம் அது.

அதில் எனக்குப் பிடித்தது அதிலிருக்கும் ஓர் உடனடித்தன்மை. வாசகனைத் தயார் செய்து அக்கவிதைகள் அவனிடம் பேசுவதில்லை. ஓர் எரி ந‌ட்சத்திர‌ம் போல அக்கணம் பேசி, அக்கணமே முடிந்து விடும். வாங்கினால் சரி, இல்லை எனில் வாங்கிக் கொள்ள முடியாது. அதற்காக அது எப்போதுமே புரியாமல் இருந்துவிடுமா? இல்லை. பத்து வருடம் கழித்து வேறொரு context-ல் திரும்ப அவ்வரிகள் ஞாபக‌ம் வரும்.

உடனே முடிந்து விடும் என்ற‌ ஒரு instantanity அதில் இருக்கிறது. நிகழ்கணத்தின் அந்தரங்கத்தை அது நிகழும்போதே பிடித்து விடுவது என்பதே ஜென்னின் சாரம். High-end photography மாதிரியான விஷயம் அது.

33. நீங்கள் செய்த இன்னொரு மொழிபெயர்ப்பு ஜிம் கார்பெட்டின் ’எனது இந்தியா’. ஏன் அந்நூல்?

நான் வேட்டை இலக்கியம் தொடர்பாய் இரண்டு நூல்கள் படித்திருந்தேன். ஒன்று ஜிம் கார்பெட்டின் குமாவும் புலிகள். தி.ஜ. ரங்கநாதன் மொழிபெயர்ப்பில். இன்னொன்று கென்னத் ஆன்டர்ஸனின் சீவனப்பள்ளியின் கருஞ்சிறுத்தை. மொழிபெயர்ப்பு எஸ்.சங்கரன். 1996-97ல் படித்தது.

இவ்விரு புத்தகங்களுக்கும் இடையே மிகத் துலக்கமாக இரண்டு வித்தியாசங்கள் தெரிந்தன. ஒன்று; ஒரு நூலை மொழிபெயர்த்தவர் தி.ஜ. ரங்கநாதன் என்ற நவீனப் படைப்பிலக்கியவாதி. இன்னொரு நூலை மொழிபெயர்த்த எஸ்.சங்கரன் படைப்பிலக்கியம் சார்ந்தவரா என்று எனக்குத் தெரியாது. ஆனால், மொழிபெயர்ப்பில் வித்தியாசம் இருந்தது. ஒன்று ஒரு புனைகதை படிப்பதுபோல் இலகுவான, சுவாரஸ்யமான மொழிநடையில் இருந்தது. அடுத்தது விவரணைகள் நேர்த்தியாய் இருந்தாலும் ஒரு புனைகதைக்கான தோரணை இருக்கவில்லை.

இதை மொழிபெயர்ப்பாளர்கள் இடையேயான வித்தியாசம் மட்டும் என நான் நினைக்கவில்லை. எழுதிய ஜிம் கார்பெட்டின் ஆளுமைக்கும் கென்னத் ஆண்டர்சென் என்ற வேட்டைக்காரருக்குமான‌ வித்தியாசம்.

காலச்சுவடு கண்ணன் என்னிடம் ஜிம்கார்பெட்டின் புத்தகம் மொழிபெயர்ப்பு செய்து தருகிறாயா? என்று கேட்டபோது எனக்கு குமாவும் புலிகள் ஞாபகத்தில் இருந்ததால் சந்தோஷமாய் ஒப்புக்கொண்டேன்.

அந்த மொழிபெயர்ப்பை மேற்கொண்டபோது ஜிம் கார்பெட் பற்றி நான் ஏற்கனவே கொண்டிருந்த அறிதல் செறிவடைந்தது. மனித உறவுகள், காட்டு வாழ்க்கை, பூர்வகுடிகள், விலங்குகள் தொடர்பாக ஜிம் கார்பெட்டுக்கு இருக்கும் பார்வை முக்கியமானது. அது பொதுவாய் ராஜாக்களும் ஜமீந்தார்களும் துப்பாக்கியுடன் காட்டுக்குப் போகும் வேட்டைக்கார மனநிலை அல்ல.

அவரது கூடாரத்துக்கு வந்து தங்கிச் சென்ற மலைப்பாம்பு பற்றி அவர் எழுதி இருப்பதெல்லாம் வாசிக்கும் போதே நெகிழ்ச்சி தரும் சம்பவங்கள். அது கூடாரத்தில் தங்கி இருந்தபோது அங்கிருந்த மற்ற உயிரினங்களைத் தொந்தரவே செய்யவில்லை என்று எழுதியிருப்பார்.

அப்புத்தகத்தை மொழிபெயர்த்தது எனக்கு மிகுந்த திருப்தி அளித்தது. அந்த நூலின் வழியாக எனக்கு வேறொரு அவதானமும் கிடைத்தது. 50 வருடம் கழித்து ஜிம் கார்பெட்டின் ஒரு நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகிறது. தி.ஜ. ரங்கநாதன், யுவன் சந்திரசேகர் இருவரும் 50 வருட இடைவெளியில் ஒரே எழுத்தாளரின் நூலைத் தமிழாக்கும்போது தமிழ்ப் புனைவுமொழியில் எவ்வளவு பாரதூரமான வித்தியாசங்கள் உருவாகி இருக்கின்றன என்று ஒருவர் வேறுபடுத்திப் பார்க்க முடியும்.

இப்போது தஞ்சாவூர்க் கவிராயர் என்பவர் The man-eater of Rudraprayag என்ற நூலைத் தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார். இன்னும் படிக்கவில்லை. படித்தால் தி.ஜ. ரங்கநாதன், யுவன் சந்திரசேகர், தஞ்சாவூர்க் கவிராயர் இந்த மூன்று புள்ளிகளில் ஏதும் ஒற்றுமை இருக்கிறதா, எந்த இடத்தில் வேறுபடுகிறார்கள் என்று பார்த்தால் சுவாரஸ்யமாக இருக்கும் எனத் தோன்றுகிறது.

34. பிறமொழியிலிருந்து புனைகதைகள் கூட மொழிபெயர்த்திருக்கிறீர்கள் அல்லவா?

சென்ற வருடம் ’குதிரை வேட்டை’ என்ற நார்வேஜியன் நாவலை மொழிபெயர்ப்பு செய்தேன்.

நனவோடை என்ற உத்தி தமிழில் செயல்படும்போதெல்லாம் சிடுக்கான, குழப்பமான மொழிப் பிரயோகம், வாக்கிய அமைப்புகள், சிந்தனை முறை வழியாகத்தான் நடந்திருக்கிறது. உதாரணமாக ஜி.நாகராஜனையோ, தி.ஜானகிராமனையோ சரளமாகப் படிப்பது போல் நகுலனைப் படித்து விட முடியாது. புதுமைப்பித்தனின் கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் படிப்பதுபோல கயிற்றரவு படிக்க முடியாது. ஒரு கட்டத்தில் நனவோடை என்பதற்கு கயிற்றரவு என்ற பெயரே தமிழ் படைப்புச் சூழலில் புழங்கியது.

’குதிரை வேட்டை’யில் அப்படி அல்லாமல் அசோகமித்திரன் கதை சொல்வதுபோல் நேரடியான பாணியில் நனவோடை எழுதப்பட்டிருக்கிறது என்பது முதல் சுவாரஸ்யம். நான் கதை சொல்லும் முறைக்கும் அந்நாவலின் கதை சொல்லும் முறைக்குமான ஒப்புமை மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. அவரும் என்னைப்போலத்தான். பால்ய காலத்தில் ஒன்றைச் சொல்லி, நடைமுறைக் காலத்துக்கு வந்து, மீண்டும் பால்ய காலத்துக்குப் போய் என்று மாறி மாறி வருகிறது. என் கதைகளில் இருப்பதுபோலவே, தகப்பனாருடனான உறவு திரும்பத் திரும்ப அந்தக் கதையில் சொல்லப்பட்டிருக்கிறது. அதெல்லாம் சேர்ந்து அதை மொழிபெயர்த்தது ஒரு சுவாரஸ்யமான அனுபவமாக இருந்தது.

இந்தியக் கதைகள் படிப்பதற்கும் ஐரோப்பியக் கதைகள் படிப்பதற்கும் வாசகநிலையிலேயே நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. முழுக்க முழுக்க வேறான கலாசாரப் பின்னணி, சீதோஷ்ணப் பின்னணி, அதைச் சார்ந்த உணவு, உடை முறைகள், அங்கிருக்கும் வாழ்முறை, உறவுமுறை, இவை யாவும் கிளர்ச்சி தருவதாகவும், நூதனமானதாகவும், எளிதில் புரிந்துகொள்ள முடியாததாகவும் இருக்கிறது.

குதிரை வேட்டையில் ஒரு நீளப் பத்தி, வாசிக்கும்போதும் மொழிபெயர்க்கும்போதும் மிகவும் சிரமப்பட்டேன். பிறகுதான் புரிந்தது அவர்கள் ஒரு வைக்கோல் போர் கட்டுகிறார்கள் என. நம்மூரில் தாள்களை முடிச்சிட்டு, மூட்டையளவு சேர்ந்த பின் ஒரு கட்டுப் போட்டு, ஒன்றில் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கோல் போர் அமைப்போம் அல்லவா. அவர்கள் அப்படிச் செய்வதில்லை. பலகைகள் அடித்து, வேலி அமைத்து, தொட்டிபோன்ற ஒரு சட்டகத்தை உருவாக்கி, அதற்குள் தாள்களை நிரப்பி, வைக்கோல் போர் அமைக்கிறார்கள். அந்தப் பத்தி வைக்கோல் போர் அமைப்பதைப் பற்றித்தான் பேசுகிற‌து என்பது பிடிபட கிட்டத்தட்ட ஒரு வாரம் பிடித்தது எனக்கு. அந்தக் குறிப்பிட்ட பத்தியை திரும்பத் திரும்பப் படிக்க வேண்டி இருந்தது.

பொதுவாய் மொழிபெயர்ப்பு நூல்களில் ஒரு படைப்பெழுத்தாளனுக்கு என்ன அனுகூலம் கிடைக்கிறது? அவன் ஏன் தன் நேரத்தை அதற்கு ஒதுக்க வேண்டும் என்பது எப்போதுமே கேட்கப்படும் கேள்வி.

தண்டபாணி கூட அடிக்கடி இதைச் சொல்வான். நான் அப்படி நினைக்கவில்லை. பயன்படுத்தப்படாமல் உள்ளுக்குள் சேகரமாகி இருக்கும் நிறையச் சொற்கள் ஆழ்மனக்கிடங்கில் இருக்கின்றன. அதைக் கிளறி விட இந்த மொழிபெயர்ப்பு முயற்சி பயன்படும். தெரியாத‌ வார்த்தைகள் கற்கலாம், புது வாக்கியக் கோவைகள் சாத்தியப்படும். சில சமயம் புதிய வார்த்தைகளை உருவாக்க வேண்டி இருக்கும். காரணம் வேறு கலாசாரப் பின்னணியிலிருந்து வரும் ஏதோ ஒரு பொருளுக்குத் தமிழில் வார்த்தையே இருக்காது.

இப்படி சவால்கள் இருக்கின்றன். அவற்றை எதிர்கொள்வதன்மூலம் எனக்குள் ஸ்திரப்பட்டிருக்கும் மொழிப்பரப்பை முழுக்கக் கிளறி fresh ஆக்கிவிட்ட மாதிரியான உணர்வு கிடைக்கும். இது என் அடுத்த படைப்புக்கு நகர்கையில் என் மொழியைக் கையாள்வதற்கு அனுகூலமாக இருக்கும். என் சொல் முறையில் நுட்பங்களை மாற்றங்களை உருவாக்குவதற்கு உதவியாக இருக்கும். அதனால் மொழிபெயர்ப்பு நான் ஆசையாகத்தான் செய்கிறேன்.

இப்போதுகூட ஸ்பானிய மொழித் தொகுப்பின் உட்பிரிவான கட்டலன் என்ற மொழியில் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ஒரு நாவலைப் பெரும் போராட்டத்திற்குப் பிறகு மொழிபெயர்த்து முடித்திருக்கிறேன். இதில் எனக்கு இருந்த சவால்கள் பலவிதமானவை. ஒன்று அதன் ப்ரெஞ்ச், ஸ்பானிய, ஜெர்மானிய கலாசாரப் பின்னணிகள், அவை ஒன்றோடொன்று ஊடாடும் விதமும் அந்த நாவலில் சரளமாக வெளிப்பட்டிருக்கிறது. அடுத்தது அது ஓர் இறையியல் நாவல். பைபிள் சம்பந்தமான தெளிவு இருக்கும் ஒருவர்தான் அதை வாசித்துப் புரிந்துகொள்ள முடியுமோ என்னுமளவு ஓர் அழுத்தத்தை உள்ளே உண்டு பண்ணக்கூடிய நாவல்.

35. சமீப ஆண்டுகளில் தொடர்ச்சியாய் கிட்டத்தட்ட வருடம் ஒரு நாவல் என்ற கணக்கில் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் (மணற்கேணி, வெளியேற்றம், பயணக்கதை, நினைவுதிர் காலம்). அதற்கு முந்தைய ஆண்டுகளில் ஒப்பீட்டளவில் இத்தனை வேகம் இல்லை. இதைத் தற்போதைய காலகட்டத்தில் படைப்பூக்கத்தின் உச்சநிலையில் நீங்கள் இருப்பதாகக் கொள்ளலாமா அல்லது பதிப்பக ஊடகச் சூழல் தற்போது சாதகமாய் இருப்பதால் கிடைக்கும் தூண்டுதலாக எடுக்கலாமா?

பதிப்பக ஊடகச் சூழல் எல்லோருக்கும்தானே சாதகமாய் இருக்கிறது! எல்லோருமே எழுதிக் குவிக்க வேண்டுமே! அப்படி நடப்பதில்லையே!

36. பதிப்புச் சூழல் சாதகமாகவோ எதிர்மறையாகவோ இருப்பது ஒருவனின் படைப்பூக்கத்தை பாதிக்கும் வாய்ப்புண்டு அல்லவா! எழுதினாலும் வாசகனைப் போய்ச் சேருமா என்ற சந்தேகம் இருக்கும் சூழலில் சரக்கும் முயற்சியும் கொண்டவன் கூட ஒரு கட்டத்தில் ஊக்கமிழக்கக்கூடும்.

நான் அப்படி நினைக்கவில்லை. நான் 90களின் ஆரம்பத்தில் எழுத வந்தபோதே பதிப்பகங்கள் ஓரளவு நிலைபெற்றுத்தான் இருந்தன. சீரியஸ் புத்தகங்கள் வரமுடியும் என்ற சூழல் வந்தாயிற்று. இப்போது இன்னும் பரவலாகியிருக்கிறது.

நான் தினசரி எழுதுகிறேன். இது புனைகதை எழுதும் யாருமே செய்வதுதான். அப்படிச் செய்கையில் ஆறு மாதங்களில் ஒரு நாவல் தயாராகி விடும். ஒரு டிசம்பரில் எழுதி முடிக்கப்பட்ட ஒரு நாவல் அடுத்த டிசம்பரில்தான் வெளிவரும். அதாவது நான் எழுத ஆரம்பித்து இரண்டு வருடங்கள் கழித்துத்தான் ஒரு நாவல் வெளிவரும். இப்போது நீங்கள் பார்க்கும் நாவல் இரண்டு வருடங்களுக்கு முன் நான் எழுதியது.

என்னுடைய 36வது வயதில்தான் என் முதல் கவிதைத்தொகுப்பு வெளியானது. 38ல் அடுத்தது. அப்போது கவிதைகளை வாசகர்கள் அமோகமாக வாங்கிக் குவித்ததாக அர்த்தமா? அப்படி இல்லை. அந்த நேரத்தில் அது தோன்றியது, எழுதினேன். வேகத்துக்கும் சூழலுக்கும் சம்மந்தமில்லை.

படைப்பூக்கத்தின் உச்சமா எனக் கேட்டால், திரும்பிப் பார்த்தால் ’ஒளி விலகல்’ கதைகள் எழுதிய காலத்தில்தான் அப்படி இருந்தேன் என்பேன். அந்தத் தொகுப்பின் மொத்தக் கதைகளும் ஆறே மாதத்தில் எழுதப்பட்டவை. ’வேறொரு காலம்’ கவிதைத்தொகுப்பு என் அபிமான நூல். அதை எழுதிய காலகட்டமும் உச்சமான ஒரு காலகட்டம்.

கவிதை மட்டுமே எழுதிக் கொண்டிருந்த நாட்களில் மிகுந்த சோம்பேறி நான். அவ்வளவு சோம்பல் இருந்தால்தான் அந்த மாதிரியான கவிதைகள் எழுத முடியுமோ என்னவோ! என்னுடைய உலகத்தில் என்னை மறந்து தனிமையில் இருக்கும்போது உருவாகும் வாக்கியங்கள் கவிதைக்கான‌ ஸ்திதிக்கு வேகமாய் நகரும்.

மற்றபடி வெளியில் நிலவுகிற சூழல் அனுகூலமாய் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அது தான் என்னை எழுத வைக்கிறது என்றில்லை. எனக்கு மிக அதிகமாக எழுதப் பிடித்திருக்கும் காலகட்டம் இது எனலாம்.

37. தமிழில் சமகாலத்தில் மிகப் பிரபலமான இலக்கிய / இதழ்களாக மற்றும் பதிப்பகங்களாகத் திகழும் காலச்சுவடு, உயிர்மை இரண்டிலுமே மாற்றி மாற்றி எழுதினீர்கள். பொதுவாய் குழுக்களாய் பிரிந்துநின்று எதிரெதிராய் இயங்கும் தமிழ் சிற்றிதழ்ச்சூழலில் இது அபூர்வம். எப்படி சாத்தியப்பட்டது? பொதுவாய் நீங்கள் சண்டைகளற்ற ஓர் (ஒரே?) எழுத்தாளனாய் இங்கே இருப்பதாய்த் தோன்றுகிறது.

அப்படி ஒரு தோற்றத்தை உண்டாக்கி இருக்கிறேன் என்பது கேட்க நன்றாய்த்தான் இருக்கிறது. ஆனால் இப்போது அதிகம் பத்திரிக்கைகளில் எழுதுவதில்லை அல்லவா! இப்போதிருக்கும் மனநிலையில் கேட்டால் கொடுக்கலாம் என்றுதான் இருக்கிறேன். உயிர்மையில் என்னை அழைத்து கதை கொடு என்று கேட்டால் கொடுப்பேன். உயிர்மையில் மசி கூட உதற மாட்டேன் என்பது போன்ற‌ பிடிவாதமெல்லாம் ஏதுமில்லை!

தமிழில் முக்கியமாக எழுதும் எல்லா எழுத்தாளர்களும் ஒரே பத்திரிக்கையில் எழுதக்கூடாது என்று சொல்ல எந்தக் காரணமும் இல்லை. ஆளுமை உரசல்கள் தவிர அவர்கள் கோட்பாட்டு ரீதியாக ரொம்பவும் பிரிந்து கிடப்பதாக நான் நினைக்கவில்லை. பெரும்பாலான எழுத்தாளர்கள் ஒரே பத்திரிக்கையில் எழுத முடியும், ஒரே மேடையில் பேச முடியும், ஒரே விஷயம் சம்பந்தமாக இப்போது இருக்கும் தகராறுகள் இல்லாமல் விவாதிக்க முடியும், அப்படி எல்லாம் தமிழில் முன்பு இருந்தது.

ஒருவேளை அப்படி எல்லோரும் இணைந்து செயல்பட்டிருந்தால் தமிழில் இருக்கும் வணிகப் பத்திரிக்கைச் சூழலுக்கு எதிராக காத்திரமான ஓர் இயக்கம் இங்கே உருவாகி இருக்கும். அப்படி நடக்காமல் போனதற்குக் காரணம் இந்த விலகல்களும் விரிசல்களும்தான்.

என்னைப் பொறுத்தவரை நபர்களுடனான உறவும், எழுத்துடனான உறவும் ஒன்றோடொன்று பிணைந்து இருப்பதாக நினைக்கவில்லை. இரண்டும் தனித்தனி.

ஒருவேளை, முழுக்க இடதுசாரிச் சார்புள்ள ஒரு இதழில் என்னிடம் படைப்பு கேட்க மாட்டார்கள்.

38. இங்கே தமிழ் இதழ் பற்றி ஒருவிஷயம் குறிப்பிட விரும்புகிறேன். எனக்கு ஒப்புதல் நிலைப்பாடு கொண்ட விஷயங்களை மட்டும் தமிழ் இதழில் எழுதப்பட வேண்டும் என நான் நினைக்கவில்லை. மாற்று அல்லது எதிர்ச் சிந்தனைகளுக்கும் களமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அதன் வழி ஒரு நேர்மையான‌, நேர்மறையான‌ பன்முகத்தன்மையை இவ்விதழ் தக்க வைத்துக் கொள்ளவேண்டும் என விரும்புகிறேன்.

பல்வேறு துறைகளில் பிராமணர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் அல்லது ஒதுக்கப்படுகிறார்கள் என்ற பொருளில் கிழக்கு பதிப்பக அதிபர்‌ பத்ரி சேஷாத்ரி சமீபத்தில் எழுதிய சில கட்டுரைகள் விவாதத்துக்கும் சர்ச்சைக்கும் உள்ளானது. ஓர் எழுத்தாளராக நீங்கள் அப்படி ஒதுக்கப்படுவதாகக் கருதுகிறீர்களா?

நான் பிராமண எழுத்தாளன் என்பதால் புறக்கணிக்கப்படுகிறேன் என ஜெயமோகன் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அதை மேற்கோள் காட்டி சுகுமாரன் ஒரு மேடையில் பேசினார்.

நான் அப்படி நினைக்கவில்லை. தமிழ் வாசக சமூகம் அப்படிச் செய்யும் என நான் கொஞ்சம்கூட நம்ப மாட்டேன். என் மாதிரியான எழுத்து முறைக்கு, என்போன்ற சுபாவம் உள்ள ஒருவனுக்கு, இவ்வளவுதான் அங்கீகாரம் கிடைக்கும். என் முந்தைய தலைமுறையில் அவ்வளவுதான் கிடைத்தது, அதற்கு முந்தைய தலைமுறையிலும் அப்படித்தான்.

வாசகப்பரப்பு மிகப் பெரிதாகி விட்டதான ஒரு நினைப்பு இருக்கிறது. எஸ்.ராமகிருஷ்ணன் ஆனந்த விகடனின் எழுதிய விஷயங்கள் புத்தகமாக வரும் போது நிறைய விற்கலாம். ஆனால் உயிர்மையில் எழுதும் புத்தகங்கள் இதே அளவுதான் விற்கும். ஒருவேளை அதன் மூலம் கிடைத்த பிரபலத்தின் காரணமாக கூட ஐந்நூறு அல்லது ஆயிரம் பிரதிகள் விற்கலாம். விகிதாச்சாரம் அதேதான். இத்தனை கோடிப் பேரில் இத்தனை நூறு சீரிய வாசகர்கள் என்ற அடிப்படையிலான பெருக்கம்தான். இதைப் பெரிய முன்னேற்றம் என்றெல்லாம் நான் நினைக்கவில்லை.

என் வகையான எழுத்துக்கு இவ்வளவுதான் அங்கீகாரம் கிடைக்கும். நான் புறக்கணிக்கப்பட்ட எழுத்தாளனாக ஒருபோதும் உணர்ந்ததில்லை. அப்படி உணர்ந்திருந்தால் நான் இவ்வளவு எழுதி இருக்க முடியாது.

நான் எனக்குப் பிடித்ததை எழுதுகிறேன். வாசகன் அவனுக்குப் பிடித்ததை வாங்கி வாசிக்கிறான்.

39. இருவிஷயங்கள் இருக்கின்றன. ஒன்று புறக்கணிப்படாதிருத்தல், இன்னொன்று புறக்கணிக்கப்பட்டாலும் அதைக் கண்டுகொள்ளாது எழுதுதல். ஒருவேளை அதுவா?

இல்லை. நான் புறக்கணிக்கப்பட்டதாகவே நினைக்கவில்லை.

கிழக்கு பதிப்பகத்தில் என் புத்தகம் ஒன்று சென்ற ஆண்டு 600 பிரதிகள் விற்றிருக்கிறது என்றார்கள். எனக்கு ஒரே ஆச்சரியம். அவ்வளவு பேரா வாங்கிப் படிக்கிறார்கள். எத்தனையோ தலைப்புகளில் எத்தனையோ நூல்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கும் கிழக்கு பதிப்பகத்தில், மறுபதிப்பு காணும் என் முந்தைய நூல்களுக்கு இத்தகைய வரவேற்பு இருப்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

தெருமுனை பரோட்டாக்கடையில் இருக்கும் அதே அளவு கூட்டத்தை நட்சத்திர ஓட்டலில் எதிர்பார்க்க முடியாது அல்லவா! அதற்கான takers வேறு, செலவு வேறு. எல்லாம் சேர்ந்ததுதான்.

40. எனக்குப் பிடித்த உங்களுடைய ஒரே படைப்பை மட்டும் சொல்ல வேண்டுமெனில் உங்கள் முழு சிறுகதைத் தொகுப்பைச் சுட்டுவேன். உங்களுக்குப் பிடித்த உங்களுடைய படைப்பு எது? ஏன்?

நீங்களே மூன்று புத்தகங்களை அல்லவா சொல்லி இருக்கிறீர்கள். ஒளிவிலகல், ஏற்கனவே, கடல் கொண்ட நிலம் ஆகிய மூன்று நூல்களின் தொகுப்புதான் அந்த சிறுகதைத் தொகுப்பு.

எனக்கு எல்லாப் படைப்புகளுமே பிடித்தவைதாம். பிடித்ததை மட்டும்தானே எழுதுகிறேன்!

இப்போது ஒரு விஷயம் எழுதிக் கொண்டிருக்கிறேன் அல்லவா, இது தொடர்பான யோசனைகளும் பதற்றங்களுமே எப்போதும் மீறி இருக்கும். முன்பு வந்த நூல்கள் எல்லாம் எழுதி முடித்தாயிற்று. அது என் பால்ய காலத்தைப் பற்றி விசாரிப்பதைப் போன்றது. ஒரு புத்தகத்தை முடித்து அடுத்ததற்குள் போகும் போது நான் ஒரு பருவம் முடிந்து அடுத்த பிராயத்துக்குள் நுழைவதாய்த்தான் அர்த்தம். ஆக எனக்கு ரொம்பப் பிடித்த புத்தகம் என்றால் இப்போது எழுதிக் கொண்டிருப்பதுதான்!

41. உங்கள் முன்னோடிகள் என யாரைக் கருதுகிறீர்கள்? இரண்டு வகைமைகளில். ஒன்று உங்களை எழுதத் தூண்டியவர் என்ற அடிப்படையில். இன்னொன்று எழுத்து பாணியின் அடிப்படையில்.

ரொம்பப் பெரிய ப‌ட்டியல் அது. என் மீது செல்வாக்கு உள்ள, என்னை எழுதத் தூண்டியவர்கள் நிறையப் பேர். சுப்ரமணிய பாரதியில் தொடங்கி இன்று புதிதாய் வந்திருக்கும் இசை வரையில் நிறையப் பேரிட‌ம் நிறைய விஷயங்கள் நான் வாங்கிக் கொள்கிறேன். ஆனால் நேரடியாக என் எழுத்து வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்தவர்கள் என்றால் நாலைந்து பேரைச் சொல்லலாம்.

ஒன்று சுந்தர ராமசாமி. அவருடைய படைப்புக் களத்துக்கும் என்னுடையதற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் உண்டு. உதாரணமாக குள்ளச்சித்தன் சரித்திரம் மாதிரியான ஒரு நாவலை சுந்தர ராமசாமி எழுதவும் மாட்டார், அதை அங்கீகரிக்கவும் மாட்டார். ஆனால் அவர் எனக்கு அறிமுகமான நாளிலிருந்து அவரது இறுதி நாட்கள் வரை என்னிடம் மிகப் பிரியமாகவும் நெருக்கமாகவும் இருந்தார். என் எழுத்து, உடல்நிலை, மனநிலை பற்றி அக்கறை கொண்டவராக இருந்தார். சக எழுத்தாள நண்பர்களுடன் சுமுகமாக இருப்பது என்ற விஷயத்தை நான் அவரிடமிருந்துதான் கற்றுக் கொண்டேன். அப்படி இல்லை எனில் நான் வீண் சண்டை போடும் ஒருவனாகவே இருந்திருப்பேன் எனத் தோன்றுகிறது.

அடுத்தது தேவதச்சன். கோவில்பட்டியில் தேவதச்சனின் கைகளில் நான் போய்ச் சேர்ந்த பிறகுதான் நான் எழுத்தாளனாக உருவாதற்கான சேர்மானங்கள் காரணிகள் அத்தனையும் எனக்கு வந்தது என்று நினைக்கிறேன். அவருக்கு நான் முழுக்க நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அடுத்தது ஆனந்த். அவரும் தேவதச்சனும் அக்காலகட்டத்தில் எனக்கு மிக உறுதுணையாக இருந்தவர்கள்.

அடுத்தது சாரு நிவேதிதா. அவர் கொடுத்த ஊக்கம் இல்லை எனில் நான் சிறுகதைத் துறையில் இவ்வளவு ஆர்வமாக ஈடுபட்டிருக்க மாட்டேன் என்று தான் நினைக்கிறேன். அவருக்கு நான் மிகவும் கடன்பட்டிருக்கிறேன்.

என் கவிதைகளை கைப்பிரதிகளிலேயே ஆசையாய் வாசித்தும், அபிப்பிராயம் சொல்லியும், தன் பத்திரிகையில் பிரசுரித்தும் ரொம்ப நெருக்கமாக இருந்தவர் மனுஷ்யபுத்திரன்.

ஜெயமோகன் சொல்லவே வேண்டியதில்லை. என் எல்லா எழுத்துக்களையும் படித்து தொடர்ந்து அபிப்பிராயங்கள் சொல்லிக் கொண்டே இருக்கும் ஒரு மிக முக்கியமான ஆளுமை அவன்.

கடந்த சில ஆண்டுகளாக சுகுமாரன். நினைவுதிர்காலம் எழுதிவந்தபோது, மனத்தடைக்கு ஆட்பட்டு அது பாதியில் நின்றிருந்தது. சுகுமாரன் அளித்த ஊக்கம் மட்டும் இல்லாவிட்டால், அந்த நாவல் ஒருவேளை வெளிவந்தே இருக்காது.

இவர்களுக்கெல்லாம் மனப்பூர்வமான நன்றியைச் சொல்ல வேண்டும். இப்போது நீங்கள் பேட்டி எடுக்க வந்திருக்கிறீர்கள். உங்களையும் அந்தக் கணக்கில் வைக்கத்தான் வேண்டும்.

42. மேற்கு இலக்கியத்தில் உங்கள் பரிச்சயம் பற்றிச் சொல்லுங்கள். எழுத்தாளனுக்கு வாசிப்பு அவசியமே. ஆனால் உலக இலக்கியங்களின் அறிமுகம் எந்த அளவு முக்கியம் என நினைக்கிறீர்கள்? உங்கள் எழுத்தில் உங்கள் வாசிப்பின் பாதிப்பு இருக்கிறதா? குறிப்பாய் உலக இலக்கியங்கள்?

உலக இலக்கியம் என்ற சொற்றொடர் போட்டவுடன் நான் மிகப் பெரிய வாசகன் என்பது மாதிரியான ஒரு பிம்பம் உருவாகிறது. அப்படி எல்லாம் நான் claim பண்ண மாட்டேன். ஆனால் நீங்கள் முக்கியம் எனக் கருதும் உலக எழுத்தாளர்களில் பெரும்பான்மையானவர்களின் ஒரு புத்தகமாவது நான் வாசித்திருப்பேன்.

இலக்கியத்துக்கு வெளியேயும் எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள் இருந்திருக்கிறார்கள். உதாரணமாக, பாப்புலர் சயின்ஸ் எழுதும் மிகப்பல எழுத்தாளர்களிடம் நான் சொக்கிக் கிடந்திருக்கிறேன். Richard Feynman, Gary Zukav, Eric Berne, Oliver Sacks, Richard Dawkins போல. ஆனால், இதுபோலப் பெயர்கள் உதிர்ப்பதில் தயக்கம் இருக்கிறது.

இலக்கியத்துக்கு வெளியே என்றால் ஆன்மீகம், அறிவியல் ஆகிய வகைமைகளில் வாசித்திருக்கிறேன். நான் அறிவியல் மாணவன் அல்ல. அதைப் பற்றி எதுவுமே தெரியாது. ஆனாலும் இயற்பியல் பற்றிய சில கடினமாக புத்தகங்களைக் கூட வாசிக்க முயற்சி செய்திருக்கிறேன். அறிவியலை அறிந்து கொள்வதற்காக அல்ல. அந்த சொல்முறையில் ஒரு தர்க்கம் செயல்படுகிறது. அந்த தர்க்கத்தை அவர்கள் வளர்த்துக் கொண்டு போகும் விதம், தங்களின் வாதங்களை அவர்கள் அடுக்கிக்கொண்டு போகும் விதம் எனக்குப் பிடிக்கும். அதனால் தர்க்கப்பூர்வமான புத்தகங்களை வாசிக்க வேண்டுமெனில் அறிவியல் புத்தகங்களை வாசித்துத்தான் ஆக வேண்டும். அப்புறம் அதில் அவர்கள் போகிறபோக்கில் உதிர்த்து விட்டுப் போகும் வாக்கியத் தெறிப்புகள் எனக்கு கவிதைகளுக்கும் சிறுகதைகளுக்கும் மிக உபயோகமாக இருந்திருக்கிறது.

CG.Jung எழுதிய‌ Memories, Dreams, and Reflections புத்தகத்தில் ஒரு வரியைப் படித்தபோதுதான் ’ஏற்கனவே’ என்ற சிறுகதையை எழுதத் தோன்றியது. இத்தனைக்கும் அதில் நான் முன்வைத்திருக்கும் Déjà vu என்ற விஷயத்தை சுஜாதா உட்பட நிறையப்பேர் பேசி இருக்கிறார்கள். அந்த அனுபவம் எல்லோருக்குமான அனுபவம்தான். எனக்கும் பலமுறை நடந்திருக்கிறது. ஆனால் அதை ஒரு சிறுகதைக்குள் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் அந்த ஒரு வாசகத்தால்தான். எந்த வாசகமென இப்போது குறிப்பாய் நினைவிலில்லை.

இதுபோன்ற ஒரு வாசிப்பு எழுத்தாளனுக்கு அவசியம் என்றுதான் நினைக்கிறேன். சிரமப்பட்டாலும் அவர்களைக் கூடுமானவரை ஆங்கிலத்திலேயே வாசித்து விடுவது நல்லது. ஏனெனில், மொழிபெயர்ப்பில் அவர்கள் கிடைக்கும்போது மிகக் கொடூரமாக இருக்கிறார்கள் அநேக சந்தர்ப்பங்களில். அணுக முடியாதவர்களாக இருக்கிறார்கள். உதாரணமாய் மார்க்கேஸ் பற்றித் தமிழில் எழுதப்பட்ட எல்லா வரிகளையும்விட மார்க்கேஸின் ஒரிஜினல் படைப்புகள் நட்பானவை, நெருக்கமானவை. சரளமாக வாசிக்கலாம். ஆனால் அவர் பற்றி எழுதப்பட்டவை யாவும் அவ்வளவு சரளமானவையோ, நட்புரீதியானவையோ, வாசகன் மேல் கரிசனம் கொண்டவையோ அல்ல என்பதே என் அபிப்பிராயம்.

43. சுஜாதாவிடம் அவர் கணேஷா வசந்த்தா எனக் கேட்டதற்கு இரண்டின் தீற்றல்களும் தனக்குள் உண்டு என்றார். கிருஷ்ணன், இஸ்மாயில், சுகவனம் மூவரில் நீங்கள் யார்? என் புரிதல் சமனப்பட்ட கிருஷ்ணன் நீங்கள். உங்கள் ஆல்டர்ஈகோவின் இரு அதீத முனைகள் இஸ்மாயிலும் சுகவனமும். உங்கள் ஆதர்சமாகவும், நீங்கள் வெறுக்கும் ஒருவராகவும். மிடில்க்ளாஸுக்கு பணக்காரனையும் ஏழையையும் போல. இஸ்மாயிலும், சுகவனமும் கிருஷ்ணனை விட வெவ்வேறு கோணங்களில் நேர்த்தி எனச்சொல்லிக் கொண்டே கிருஷ்ணனே நடைமுறைக்கு உகந்தவன் எனத் தொடர்ந்து நிறுவ முயல்வது (உங்களுக்கு நீங்களே?) போல் தோன்றுகிறது.

இந்த மூவர் என்றில்லை, நான் உருவாக்கும் சகல பாத்திரங்களிலுமே, என் அந்தரங்கத்தின் நேரடியான அல்லது தொலைதூர விழைவின் துளி இருக்கத்தான் செய்யும். சிலவேளைகளில் நேர்மறையாக, சிலவேளைகளில் எதிர்மறையாக. கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தை கைவரப் பெறாதவன் எழுத்த்துக்காரனாக இயங்க முடியாது என்றே தோன்றுகிறது.

இல்லை, அது பொம்மலாட்டம் நிகழ்த்துவது போலத்தான் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். இரண்டுவகை எழுத்துக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம் வாசிக்கும்போதே விளங்கக் கூடியது.

குள்ளச்சித்தன் சரித்திரம், வெளியேற்றம் எழுதிய ஆள் பகடையாட்டத்தையும் எழுதப் போகும்போது இந்த மூன்றையும் எழுதும் ஒரே மனோபாவத்தை எப்படிப் புரிந்து கொள்வது? அதுபோல் தான் இது.

அப்புறம் உங்களிடம் ஒரு கேள்வி. தீவிரமான எழுத்தில் ஈடுபட்ட எண்ணற்ற எழுத்தாளர்கள் இருக்கும் போது சுஜாதா வழியாக என்னை அளக்க முற்படுவதுபோல் தோன்றுகிறது. இதன் காரணம் என்ன?

44. நிச்சயம் இது எழுத்தின் வகைமை அல்லது தரம் குறித்த ஒப்புமை அல்ல. கதாபாத்திரத்துக்கும் எழுத்தாளனுக்குமான குண ஒற்றுமை குறித்த ஒப்புமை முயற்சி மட்டுமே. வாசகர் மனதில் இடம் பெற்ற கதாபாத்திரங்கள் என்றால் கணேஷ் வசந்தைத் தான் சட்டெனச் சொல்ல முடியும்.

ஏன், தி.ஜானகிராமனின் பாபு – யமுனா இருக்கிறார்களே!

45. மோகமுள் எனக்கு அத்தனை உவப்பான நாவல் அல்ல. அதனால் அதை விட்டு விடலாம்.

ரொம்ப முக்கியமான நாவல் அது.

46. சுந்தராமசாமியின் ஜேஜேவைச் சொல்லலாம். அதை விடவா பிரபலமான பாத்திரம் இருக்க முடியும்! ஆனால் நான் சொல்வது தொடர்ச்சியாய் வெவ்வேறு கதைகளில் ஒரே கதாபாத்திரம் வருவது. அதை தன் துப்பறியும் புனைவுகளில் கணேஷ் வசந்த் என சுஜாதா செய்திருக்கிறார். விஞ்ஞானப் புனைவுகளில் ஆத்மா நித்யா எனச் செய்திருக்கிறார். கிருஷ்ணன் பத்மினி இஸ்மாயில் சுகவனம் என நீங்கள் செய்கிறீர்கள். அந்த அடிப்படையில்தான் அக்கேள்வி எழுந்ததே ஒழிய சுஜாதாவுக்கும் உங்களுக்குமான ஒப்பீடாய் அல்ல.

அசோகமித்திரன் எழுதும் புனைவுகளில் வரும் ‘நான்’ ஒரே ஆள் எனத் தோன்றியதில்லையா? அதுபோலவே ஜி.நாகராஜன், லா.ச.ராமாமிர்தம், வண்ணதாசன் ஆகியோர் புனைவுகளில் வரும் ‘நான்’ என்பதும்.

ஓர் எழுத்தாளன் தன்மை ஒருமையில் எப்போதெல்லாம் கதைகள் எழுதுகிறானோ அப்போதெல்லாம் அக்கதைகளில் வரும் அந்த ‘நான்’ கிட்டத்தட்ட ஒன்றுதான். அவர்களிடம் எல்லாம் அந்தக் கேள்வியைக் கேட்கத் தோன்றவில்லையே உங்களுக்கு? என் கதைகளில் நான் கிருஷ்ணன் என்ற ஒரே பெயரைப் பயன்படுத்துவதால் அது வெளிப்படையாகத் தெரிகிறது. அவ்வளவுதான்.

47. நாவல்களுக்கு எப்போதும் முன்னுரை எழுதாமல் பின்னுரை எழுதுவதேன்? இதை திட்டமிட்டுச் செய்வதாகத் தெரிகிறது. முன்னுரையில் நாவலின் உள்ளடக்கம் குறித்துப் பேசினால் அதன் வசீகரம் குறையும் என்பதாக நினைத்துக் கொள்வேன். ஆனால் இன்னொருபுறம் நாவலை வாசித்தவனை மட்டுமே நான் சந்திப்பேன் என்ற அர்த்தமுள்ள‌ புலமைச்செருக்காகவும் படுகிறது. அப்படித்தானா?

இரண்டாவது சொன்னது உங்கள் புரிதல். எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அதை விட்டு விடலாம்.

பின்னுரை ஏன் எழுதுகிறேன் என்றால், நாவலை இப்படி எல்லாம் வாசிக்க வேண்டும் என்று ஒரு ப்ளூப்ரிண்ட் போட்டுக் கொடுக்கக்கூடாது என நினைக்கிறேன். வாசகன் தன்னிச்சையாக, சுதந்திரமாக ஒரு படைப்பை படித்த பின் அது குறித்து அந்த ஆசிரியருக்கு ஏதேனும் சொல்ல இருந்தால் கேட்டுக் கொள்ளலாம் அல்லது கேட்காமலும் போகலாம்.

நான் மிக மதிக்கும் ஒரு நண்பர் வெளியேற்றம் பற்றிச் சொன்னார். “அந்தப் பின்னுரையை நீ எழுதாமல் இருந்திருக்கலாம். மிக நன்றாக இருந்திருக்கும் நாவல்”. அது அவர் அபிப்பிராயம். ஆனால் முன்கூட்டியே வாசகனை நாவலுக்குத் தயார்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. மாறாய் என் கவிதைத் தொகுதிகள் அனைத்துக்கும் நான் முன்னுரை எழுதியிருப்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆனால் பின்னுரையைப் படித்து விட்டுத்தான் நாவலையே படிப்பேன் என்பவர்கள் இருக்கிறார்கள். அது அவர்கள் இஷ்டம்.

48. இன்னொன்றும் தோன்றுகிறது. சில சமயம் நாவலையே ஒரு பாத்திரம் எழுதுவதாக இருக்கும் (உதா: கானல் நதி, நினைவுதிர் காலம்). அதனால் அங்கே அந்தப் பாத்திரம் எழுதும் முன்னுரைதான் வரும். அங்கே நிஜமாய் நாவலை எழுதும் யுவன் சந்திரசேகர் முன்னுரை எழுத முடியாது அல்லவா!

அப்படி எல்லாம் ஒரேயடியாய் நீங்கள் நிம்மதியாய் இருந்து விடக் கூடாத‌ல்லவா, அதனால் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் நாவலில் பாத்திரத்தின் பின்னுரை, என்னுடைய பின்னுரை இரண்டும் இருக்கிறது!

49. உங்கள் எழுத்தின் புறவடிவத்தில் காணும் முக்கிய வித்தியாசம் பாத்திரங்களின் வசனங்களை மேற்கோள் குறிகளின்றி பத்திக்கு increased indent விடுவதுபோல் எழுதுகிறீர்கள். அதற்கு ஏதேனும் குறிப்பிட்ட காரணம் / பொருள் உண்டா? அல்லது மேலோட்டமான வித்தியாசத்துக்குச் செய்வதா?

யதேச்சையாக ஆரம்பித்த வழக்கம்தான் அது. ஆரம்பகாலத்தில் நான் பயன்படுத்திய Mylai-plain என்ற எழுத்துருவில் நிறுத்தற்குறிகளின் பயன்பாடு கொஞ்சம் சிரமம் தரக்கூடியது. சில கதைகளை இப்போதிருக்கிற விதமாக எழுதிய பிறகு, அதில் ஒரு தனித்துவம் இருக்கிற மாதிரி, எனது உத்தேசத்துக்கு அருகில் வந்துவிட்டது மாதிரி ஒரு பிரமை ஏற்பட்டது. அதையே தொடர்கிறேன், இன்றுவரை.

சொல்முறையில் ஒரு வித்தியாசம் புலப்பட வைக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால், நீங்கள் கடைசியாய்க் குறிப்பிட்டிருப்பது போல, அது மேலோட்டமானதுதான்.

50. எதிர்கால எழுத்துத்திட்டங்கள் என்ன? ஏதேனும் பிரம்மாண்ட விஷயம் மனதில் இருக்கிறதா? மொழியின் உச்ச வடிவம் காவியம் என்கிறார் ஜெயமோகன். காவிய முயற்சி ஏதேனும் செய்வீர்களா?

நான் ஒரு சாதாரண எழுத்தாளன். காவியகர்த்தா அல்ல. அதனால் அந்த முயற்சி எல்லாம் செய்ய மாட்டேன். அதற்கான வலு, ஞானம், ஆசை, ஆர்வம் எதுவும் இல்லை. இப்போது நீங்கள் பேட்டியை முடித்து விட்டுப் போன பிறகு என்ன செய்யப் போகிறேன் என்பதே எனக்குத் தெரியாது. அதனால் நாளைக்கு, அடுத்த வருடம் என்ன செய்யப் போகிறேன் என்கிற மாதிரி நீண்ட காலத் திட்டம் எல்லாம் வைத்துக்கொண்டு செயல்படுவதில்லை. தோன்றினால் எழுதுவேன்.

என்றாவது ஒருநாள் எழுத வேண்டாம் என்று தோன்றினால் abrupt ஆக நிறுத்திவிட்டு வெளியேறி விடுவேன். அதற்கான சுதந்திரத்தையும் என்னிடம் தக்கவைத்துக் கொண்டிருக்கிறேன்.

51. இந்தக் கேள்வியின் பின்னணி பகடையாட்டம்தான். மேலோட்டமாய் அது ஒரு த்ரில்லர் என்றாலும் ஒரு காவியம் எழுதும் potential கொண்ட ஓர் ஆளின் எழுத்தாகத் தோன்றுகிறது. கிரந்தப் பகுதிகள் காவிய பாவனை தானே! அதனால் வலு இல்லை என்று நீங்கள் சொல்வதை மட்டும் நான் ஏற்கவில்லை.

ஆனால் அப்படி ஏதும் திட்டமில்லை.

52. ஜெயமோகனுடனான உங்கள் நட்பு குறித்து சொல்லுங்கள். அவரது எழுத்துக்கள் பற்றியும்.

ஜெயமோகனுடன் எனக்கு நட்பு ஏற்பட்டது 1989ல். குற்றாலம் இலக்கியப் பட்டறையில் சந்தித்தோம். சந்தித்த மூன்று நிமிடங்களில் நண்பர்களாகி விட்டோம். இன்றுவரை அந்த நட்பு ஆரோக்கியமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எல்லா நட்புகளையும் போல் இதிலும் ஏற்றத்தாழ்வுகள், சமரசங்கள், ஊடல்கள் இருக்கத்தான் செய்யும். அதெல்லாம் இல்லாமல் இரண்டு உருளைக்கிழங்குகள் ஒரு மூட்டைக்குள் இருப்பதுபோல் இரண்டு நண்பர்கள் இருக்க முடியாது. என் எழுத்து பற்றி ஜெயமோகனுக்கு அபிப்பிராய பேதங்களும், அவன் எழுத்து பற்றி எனக்கு அபிப்பிராய பேதங்களும் இருக்கவே செய்யும்.

ஜெயமோகன் தனக்குத் தோன்றும் எல்லாவற்றையும் பதிவு செய்பவன். நான் அப்படிப் பதிவு செய்பவன் இல்லை என்பதால் இந்த அபிப்பிராயங்களையும் பதிவு செய்ய மாட்டேன். அபிப்பிராயம் சொல்வதில் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. எதிர்முகம் அதை எப்படி வாங்கிக்கொள்ளும் என்பது பற்றிய உங்கள் அனுமானம். இதன்பேரில் சிலவற்றைச் சொல்வோம், சிலவற்றைத் தவிர்ப்போம்.

இத்தலைமுறையின் முக்கியமான எழுத்தாளன் ஜெயமோகன். அதில் எனக்கு எந்தச் ச‌ந்தேகமும் இல்லை. அவனது வேகமும் வீச்சும் அப்படிப்பட்டது. ஆனால் இவ்வளவு வேகமும் அவசரமும் இருக்கும்போது கால் இடறுவதற்கான சந்தர்ப்பங்களும் நிறைய இருக்கும்.

உதாரணமாக அறம் சிறுகதைத் தொகுப்பை எல்லோரும் உற்சாகமாகக் கொண்டாடினார்கள். ஆனால் நான் அதில் பல கதைகள் கட்டுரைகளாக எழுதப்பட்டிருக்கின்றன என நினைக்கிறேன். அதில் எல்லாக் கதைகளுக்கும் ஒரே மாதிரியான உணர்ச்சிப் பிரவாகம் மட்டுமே பின்னணியாக இருக்கும். நீங்கள் ஏற்கனவே கேட்டீர்களே அதுபோல் craft அதிகமாகச் செயல்படுகிறது, எழுத்து தன்னிச்சையான ஒரு பாய்ச்சலுக்கு இடம் கொடுக்காமல் போகிறது என்பது என் அபிப்பிராயம்.

இதுபோல் ஜெயமோகனின் ஒவ்வொரு படைப்பு பற்றியும் சில அபிப்பிராய பேதங்களும், ஆதாரவான கருத்துக்களும் இருப்பது சகஜம்தானே.

53. விழாக்கள், இலக்கியச் சந்திப்புகள், சுற்றுப்பயணம் உள்ளிட்ட பல்வேறு விஷ்ணுபுரம் வாசகர் வட்ட நிகழ்வுகளில் உங்களைப் பார்க்க முடிகிறது. வட்டத்தின் செயல்பாடுகளில் உங்கள் பங்களிப்பு என்ன?

சமீபகாலமாக விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தின் கூட்டங்களில் நான் அதிகமாகத் தென்படுகிறேன் என்றால், கூப்பிடுகிறார்கள், போகிறேன். எனக்கு மனதில் படுவதைப் பேசுகிறேன். இதேபோல் காலச்சுவடு கூட்டங்களில் நான் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். உயிர்மையில் எஸ்.ராமகிருஷ்ணன் நூல் வெளியீட்டிற்கு அழைத்தார்கள் போய்ப் பேசினேன். ஒரு காலகட்டத்தில் உயிர்மை நடத்திய அத்தனை கூட்டங்களிலும் நான் பேசி இருக்கிறேன். இது தவிர‌ அமைப்புகளுக்கு வெளியே பேச அழைத்தாலும் போகிறேன். உதாரணமாக அபிலாஷின் கால்கள் நாவல் பற்றிப் பேச அழைத்தார்கள், போனேன்.

நான் விஷ்ணுபுரம் வாசக வட்டத்தின் அங்கத்தினன் கிடையாது. அவர்களின் குழுச் செயல்பாடுகள் எதிலும் எனக்குப் பங்கு கிடையாது. அவர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு டூர் போனால் என்னையும் அழைத்தால் நானும் போவேன். அவர்கள் ஒரு கூட்டம் நடத்தி அதில் என் பங்களிப்பு அவசியப்படும் என நினைத்து அழைத்தால் பேசப் போவேன். என்னை அழைக்காமல் அவர்கள் நடத்திய மிகப்பல விவாத அரங்குகள் இருக்கின்றன. அது பற்றி எனக்குப் புகாரும் இல்லை. கூப்பிட்டால் போவேன். இல்லை என்றால் இல்லை. அந்த அழைப்பும் தன்னியல்பாக இருக்கிறது. என் ஏற்பும் தன்னியல்பாக இருக்கிறது. அமைப்பு நடத்தும் கூட்டங்களுத்தான் இப்படி.

ஜெயமோகன் தனி நபராக இருந்து நடத்திய கூட்டங்கள் அனைத்திலுமே பங்கேற்றிருக்கிறேன் – அவற்றில் நான் பங்கேற்காமலிருந்தாலோ, பங்கேற்றவற்றில் ஊக்கமாகப் பேசாமல் இருந்தாலோ ஜெயமோகன் வருத்தமடைந்த சந்தர்ப்பங்களும் உண்டு.

54. உங்கள் எழுத்து பரவலான‌ வாசகர்களை அடைய ஜெயமோகன் உதவி இருக்கிறார் என நான் நினைக்கிறேன். அது குறித்து?

நிச்சயமாக. என் எழுத்து பரவலாக வாசிக்கப்பட வேண்டும் என்ற அக்கறை கொண்ட மிக முக்கியமான ஆள் ஜெயமோகன். அனேகமாக எனது எல்லா நூல்கள் பற்றியுமே ஜெயமோகன் எழுதி இருக்கிறான். என் படைப்புலகம் பற்றிய பொதுவான கட்டுரைகளும் நிறைய எழுதி இருக்கிறான். ஆனால் அவனுக்கு நிஜமாகவே என் எழுத்துக்கள் பிடித்திருந்து, இதைப்பற்றி எல்லாம் பேச வேண்டும் என நினைத்தால் பேசுவதுதான் நியாயம் அல்லவா! அதனால் நட்பின் அடிப்படையில் நன்றி எல்லாம் சொல்லக்கூடாது.

55. சாரு நிவேதிதா ஆரம்ப காலத்தில் உங்களை எழுதத்தூண்டியவர் எனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அவருடனான உங்கள் நட்பு பற்றி? என் முதல் கவிதைத் தொகுதியை வெளியிட்டவர் அவர்.

பொதுவாக‌வே நான் நண்பர்கள் பிரிந்துபோன பின் அவர்களை ஜென்மவிரோதிகளாகக் கருதுவதில்லை. முன்பு சொன்ன‌ ஆனந்தின் கவிதைதான் மறுபடி நினைவுக்கு வருகிறது.

2000 மற்றும் அதைச் சுற்றிய இரண்டு மூன்று வருடங்கள். நானும் சாரு நிவேதிதாவும் சேத்துப்பட்டு ரயில் நிலையத்திலோ, கோடம்பாக்கம் ரயில் நிலையத்திலோ ஓவர்ப்ரிட்ஜ் படிக்கட்டுகளில் உட்கார்ந்து மணிக்கணக்காகப் பேசி இருக்கிறோம்.

சில சமயம் சிலரை நான் சந்திக்க வேண்டும் என ஆசைப்பட்டு அவர் அழைத்துப் போயிருக்கிறார். சில இடங்களில் சௌகர்யமாகவும், சில இடங்களில் அசௌகர்யமாகவும் இருந்திருக்கிறேன். அவரோடு நான் நெருக்கமாக இருந்தது ஏற்கனவே என்னுடன் நெருக்கமாக இருந்த பல நண்பர்களுக்கு உறுத்தலாக இருந்தது. அதைப் பொருட்படுத்தாமல்தான் அவரோடு நட்புடன் இருந்தேன். அதேபோல, என்னோடு அவர் நெருக்கமாக இருந்தது ஏற்கனவே அவருடன் நெருக்கமாக இருந்த நண்பர்களுக்கு உறுத்தலாக இருந்திருக்கலாம். ஆனால் அவற்றை எல்லாம் மீறி நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்தோம்.

இப்போதும் நேரில் பார்க்கும் சந்தர்ப்பங்களில் நான் முகம் திருப்பிப் போவேன் என நினைக்கவில்லை. அப்படிச் செய்ய மாட்டேன். எப்போதெல்லாம் சிறுகதை தொடர்பாக யாரேனும் என்னைப் பாராட்டி ஒரு வார்த்தை சொல்லக் கேட்கிறேனோ அந்த வார்த்தைக்குப் பக்கத்தில் சாரு நிவேதிதா கட்டாயம் இருப்பார்.

அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். சந்தேகமே கிடையாது.

56. உரையாடல் அமைப்பு நடத்திய‌ சிறுகதைப் பட்டறை போன்ற‌ நிகழ்வுகள் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்குமென நினைக்கிறீர்களா? மறுபடி அதுபோல் ஏதும் செய்யவில்லையே?

அதில் பங்கேற்றது எனக்கு மிக உற்சாகமான அனுபவமாக இருந்தது. நிறைய நண்பர்களை ஒரே இடத்தில் பார்த்த மாதிரியான சந்தோஷம். நானும் மனம் திற‌ந்து அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். என்னவெல்லாம் பேசினேன் என்ப‌து நினைவில் இல்லை. ஆனால் அந்த செஷனில் எல்லோருமே சந்தோஷமாக சிரித்துக் கொண்டிருந்தது நினைவிருக்கிறது.

அது இளம் எழுத்தாளர்களுக்கு உபயோகமாக‌ இருக்குமா எனக் கேட்டால் அதை இளம் எழுத்தாளர்களிடம் தான் கேட்க வேண்டும். அதற்குப் பின் அப்படி ஒரு பட்டறை ஏன் நடத்தவில்லை என்பதையும் நீங்கள் சிவராமனிடமும் ஜ்யோவ்ராமிடமும்தான் கேட்க வேண்டும். அவர்கள் நடத்தினார்கள், என்னை அழைத்தார்கள், நான் போய்ப் பேசினேன். நான் நடத்தவில்லை.

57. அந்நிகழ்வில் நான் கலந்து கொள்ளவில்லை. அதில் எழுத்து, இலக்கணப்பிழைகள் மலிந்து எழுதுவதை ஆவேசமாகக் கண்டித்தீர்கள் எனக் கேள்விப்பட்டேன். இன்று இணையத்தில் எழுதும் பலருக்கும் உள்ளடக்கம் இருந்தும் இவற்றில் கோட்டை விடுகிறார்கள். அவர்களுக்கு உங்கள் செய்தி?

மிக மிக நல்ல கேள்வி.

சந்திப்பிழைகள், எழுத்துப்பிழைகள் பரவலாக இருப்பது குறித்து தமிழ்மேல் நிஜமான ஆசை இருப்பவர்கள் துக்கப்பட வேண்டும். இலக்கண ஒழுங்கு என்பது ஓர் அதிகார‌ச்செயல்பாடு என்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதை மீறுவதாக நினைத்து நம் சௌகர்யம்போல் பேசவும் எழுதவும் செய்கிறோம். அப்படி இல்லை.

மொழி இன்னொரு மொழியுடன் உரசப்போகையில் அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொள்ளுமாயிருக்கும். தன் பாரம்பரியம், வரலாறு சார்ந்து, தன்னைப் பேசக்கூடிய ஜனத்தொகை சார்ந்து ஒரு மொழி அதிகாரப் பரப்பாக ஆகலாம். ஆனால் தன்னளவில் ஒரு மொழி எப்படி ஒரு அதிகாரப்பரப்பாக இருக்க முடியும்?

மொழி தனக்கே உரிய அழகுகளையும் பலவீனங்களையும் கொண்ட ஒரு நிலை. அதில்கூட கவனம் செலுத்த முடியவில்லை என்றால் நாம் மொழியை உதாசீனம் செய்வதாகத்தான் அர்த்தம். உதாரணமாக ‘அவைகள்’, ‘அது எடுத்துச் செல்லப்பட்டன’ என்றெல்லாம் எழுதுகிறோம்.

குழந்தைக்கு அந்தச் சலுகை உண்டு. ‘நாளைக்கு வந்தேன்’ என்று சொல்லும். அது குழந்தைமையின் ஒரு வெளிப்பாடு. வாலிபனான பிறகு காமம், அரசியல், புரட்சி, சாதி, இன்னும் எதை எல்லாமோ பற்றி வீராவேசமான கருத்துக்கள் உதிர்ப்பேன், ஆனால் மோசமான மொழியில் உதிர்ப்பேன் என்பது வெகுளித்தனம் சார்ந்தது அல்ல; மொழி மீதான உதாசீனம்தான்.

இந்த மொழிதான் என் வெளிப்பாட்டு சாதனம், இதன் வழியாகத்தான் நான் சொல்லி ஆக வேண்டும் எனும் போது அதைச் சரியாகப் புழங்க வேண்டும் என்ற ஆசையும் ஒருவருக்கு இருக்க வேண்டும்.

எனது இந்தியா புத்தக வெளியீட்டு விழாவில் ம.இலெ. தங்கப்பா பேசினார். அவர் ஒரு தமிழ்ப் பேராசிரியர். தமிழ்க் கவிஞரும் கூட. மொழிபெயர்ப்பைப் பற்றிப் பேசி விட்டு, “ரொம்ப நாளைக்குப் பிறகு ஒற்றுப் பிழை இல்லாத நூல் வாசிக்கக் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது” என்றார். அவை கை தட்டியது.

கடைசியாய் ஏற்புரை ஆற்ற வருகையில் நான் சொன்னேன்: “ஒற்றுப் பிழை இல்லாத நூல் வாசிக்கக் கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது என்று அவர் சொல்கிறார். நாமெல்லாம் கை தட்டுகிறோம். நாம் இதற்குத் தலைகுனிய வேண்டாமா? ஏனெனில் ஒரு புத்தகம் ஒற்றுப்பிழை இல்லாமல் வந்திருக்கிறது என்றால் அத்தனை புத்தகங்கள் ஒற்றுப்பிழையோடு வந்து கொண்டிருக்கின்றன என்று அர்த்தம். நாம் வெட்கப்பட வேண்டிய விஷயம் இது. இன்னும் கொஞ்சம் காலம் கழித்து இலக்கண ஒழுங்கு கெடாமல் ஒரு புத்தகம் வந்திருக்கிறது, அது மகிழ்ச்சியாக இருக்கிறது என ஒருவர் சொல்வார். அப்போதும் நாம் கைதட்டுவோம். கை மட்டுமே தட்டிக் கொண்டு இருப்போம்.” என்று ஆதங்கமாகச் சொன்னேன்.

தமிழின் சிறப்புகளில் ஒன்று சந்தி. ஒற்றுக்கு அவசியம் இருக்கிறது. ஒற்று இருப்பதால்தான் வர்க்க எழுத்துக்கள் இல்லாமலேயே தமிழ் இத்தனை காலம் உயிர் வாழ்ந்து கொன்டிருக்கிறது. பக்கத்திலிருக்கும் மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளில் வர்க்க எழுத்துக்கள் இருக்கின்றன. ஒரு ‘க’வையும் ஒரு ’ச’வையும் வைத்துக்கொண்டே நாம் இத்தனை நூற்றாண்டுகளை ஓட்டி விட்டோம் என்பது ஒற்று இருப்பதனால்தான். ஒற்று இருப்பதால் ‘க’வின் உச்சரிப்பு தன்னால் வித்தியாசப்படுகிற‌து.

உச்சரித்துப் பார்த்து எழுதினால் போதும். இந்த ஒற்றுப்பிழைகள் எல்லாம் காணாமல் போகும். “என்றுச் சொன்னான்” என எழுதுகிறார்கள். வலிக்கிறது. “என்று சொன்னான்” தானே வரும்? உச்சரித்துப் பார்த்தாலே தெரியுமே! அவ்வளவு கிட்டே இருக்கும் விஷயம். அப்புறம் தமிழின் சிறப்பு ழகரம். அது கிட்டத்தட்டக் காணாமலே போய் விட்டது. ‘ழ’ என உச்ச‌ரிக்கக்கூடியவர்கள் அநேகமாய் இல்லை – பேராசிரியர்கள் உட்பட, மேடைப் பேச்சாளர்கள் உட்பட. நாமும் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

சமஸ்கிருதச் சொற்களை எழுத மாட்டேன் என்று பிடிவாதமாகச் சொல்பவர்கள் கூட தமிழைச் சரியாக எழுதுவேன் என்று சொல்வதில்லை. அது என்னவிதமான மொழிப்பற்று என்று தெரியவில்லை.

58. சமீப காலமாய் தமிழ்நாட்டில் எழுத்தாளர்கள் படைப்புகளுக்காக பிற்போக்கு சக்திகளால் மிரட்டலுக்கு உள்ளாகும் போக்கு அதிகரித்து வருகிறது. அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? எழுத்தாளனுக்கான எல்லைகள் என்ன? சாதி, மதம், இனம், இடம் போன்றவற்றைக் குறிப்பிட்டு எழுதுவதைத் தவிர்த்து விட வேண்டுமா? இதை ஊக்குவித்தால் நாளை பச்சை சட்டை போட்டவன் கொலை செய்தான், மூக்கருகே மச்சம் கொண்டவள் சோரம் போனாள் என்று எழுதினால் கூட எதிர்ப்பு எழும் நிலை உருவாகக்கூடும். கருத்துச் சுதந்திரத்தில் படைப்புச் சுதந்திரமும் அடக்கம் தானே? சமகால தமிழ் எழுத்தாளன் இதை எப்படி எதிர்கொள்வது? இந்தச் சம்பவங்கள் உங்கள் எழுத்தில் ஏதும் மாற்றத்தைப் புகுத்தி இருக்கிறதா?

கு.ப.ராஜகோபலன் சிறுகதைகள் எழுதிக் கொண்டிருந்த போது அவருக்கும் இந்த மாதிரியான எதிர்ப்புகள் இருந்தன. ’என்னைப் பற்றியும் என் மனைவியைப் பற்றியும் நான் எழுதுவதாக நினைத்துக் கொள்கிறார்களா’ என மிக வேதனையாகக் கேட்டதாக எதோ ஒரு கட்டுரையில் படித்திருக்கிறேன். பாரதிக்கும் புதுமைப்பித்தனுக்கும் கூட இந்தப் பிரச்சனை இருந்தது.

இன்று இந்த சக்திகள் வேகமாக எழுந்திருக்கிறதென்றால், நான் எழுத்தாளனுக்குத் தான் ஆலோசனை சொல்வேன். அந்த சக்திகளைப் பார்த்துப் பேசும் திராணியும் வலிமையும் எனக்குக் கிடையாது.

யதார்த்தவாத எழுத்து இம்மாதிரியான இடர்களைக் கொண்டு வருகிறது என்றால் நாம் ஏன் மேஜிகல் ரியலிசம் உள்ளிட்ட வேறு முறைகளை முயற்சித்துப் பார்க்கக்கூடாது?

ஈசாப் நீதிக்கதைகள் எழுதப்பட்ட சூழல், காரணம் ஆகியற்றைத் தெரிந்துகொண்டால் ஒருவேளை உபயோகமாய் இருக்கக்கூடும். ஏன் மனிதர்களின் இயல்புகளை மிருகங்கள் மீதேற்றி அவற்றை வாதம் செய்ய வைத்தார்கள்?

நான் எழுதுபவை நேரடி சமூக விழைவுகள் குறித்து ஆராய்ச்சி செய்பவை அல்ல. இந்த எழுத்துக்களில் வேறொரு புலம் செயல்படுகிறது. அதனால் எனக்கு எழுத மனத்தடை ஏதும் ஏற்படும் எனக் கருதவில்லை.

சுமார் முப்பது ஆண்டுகள் முன்புவரையில் தமிழில் யதார்த்தவாதப் படைப்புகளின் கதாபாத்திரங்களுக்கு இயல்பான அடையாளம் இருந்தது. அவர்களின் சமூகப் பின்னணியும் சேர்த்தே பேசப்படும். அந்தக் கதாபாத்திரங்களுக்கு வழங்கப்பட வேண்டிய சமூக நீதி பற்றிய விவரிப்பும் கோரிக்கையும் இருந்தது.

இப்போது அதைத் தவிர்த்த‌ எழுத்துக்கள் வருமானால் படைப்புகள் ஒரு மொஸைக் தன்மைக்குள் போய் விடும். குறிப்பான அடையாளம் இல்லாத கதாபாத்திரங்கள் வழியாகக் கதை நிகழ்த்துதல் நடக்கும். அது எழுத்திலக்கியம் இன்னும் சீக்கிரமாக மரணமடைவதற்கு வழி வகுக்கும் என்றுதான் நினைக்கிறேன்.

ஆனால் வேறு விதமான உத்திகளில் எழுத்தாளர்கள் எழுதிப் பார்க்கலாம். எழுத்துக்கு சாதிக்குறிப்புகள் ஒரு தடையாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றுதான் நினைக்கிறேன். சமூகத்தின் எல்லா அலகுகளிலும் சாதியையும் அதன் அபத்தங்களையும் வைத்துப் பேணிக்கொண்டு, எழுத்திலக்கியத்தில் மட்டும் கழுவிச் சுத்தமாக்கிவிட்டால், இலக்கிய வாசனை இருக்காது. ஃபினைல் நெடிதான் அடிக்கும்!

59. 20 வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். தமிழ் வாசக‌ உலகம் உங்களின் சரியான இலக்கிய ஸ்தானத்தைக் கண்டறிந்து உரிய மரியாதை கொடுத்து அங்கீகரித்து விட்டதாகக் கருதுகிறீர்களா? இன்னும் உங்களுக்குக் காலமிருக்கிறது என்றாலும் சாகித்ய அகாதமி உள்ளிட்ட எந்த விருதையும் அரசோ அமைப்புகளோ அளிக்கவில்லை என்ற ஆதங்கம் எனக்குண்டு. என்ன நினைக்கிறீர்கள்?

என்னுடைய எழுத்துக்கள் மீது உங்களுக்கு இருக்கும் அபிமானத்திற்கு நான் நன்றி சொல்கிறேன்.

60. தமிழில் சீரியஸ் எழுத்தாளர்கள் சினிமாவில் பரவலாய்ப் பங்களிக்கும் காலம் இது. நீங்கள் ஏன் சினிமாவில் பங்கேற்கவில்லை? உங்கள் கதைகளில் வரும் நிறைய சம்பவங்கள் fresh ஆனவை, potential சினிமா காட்சிகள். உங்கள் எழுத்துக்களைப் படித்த இயக்குநர்கள் நிச்சயம் உங்களை அணுகி இருப்பர் என்றே நினைக்கிறேன். ஒருவேளை சினிமா உலகினுள் நுழைய விரும்பவில்லையா?

நீங்கள் சொல்வதுபோல் என் எழுத்தில் வரக்கூடிய சம்பவங்கள் fresh-ஆகவும் potential-ஆகவும் இருக்கிறது என்று அந்த எழுத்தை வாசித்து, ஆசைப்பட்டு என்னை ஓர் இயக்குநர் கூப்பிடுவார் என்றால் அவரோடு உட்கார்ந்து விவாதம் செய்யலாம். இதற்கு முன் சில அழைப்புகள் வந்திருக்கிறது. நான் மறுத்திருக்கிறேன்.

ஒன்று என்னை அழைத்தவர்கள் என் எழுத்துக்களைப் படித்திருந்தார்களா எனத் தெரியவில்லை. இந்த மாதிரியான ஆள் வேண்டும் என அவர்கள் நினைத்தார்களா எனத் தெரியாது. யார் மூலமாகவோ என் பெயர் சிபாரிசு செய்யப்பட்டு இப்ப‌டி ஒரு ஆள் எழுதிக் கொண்டிருக்கிறான், கூப்பிட்டுப் பார்க்கலாமே என அழைத்தால் அவருடன் போய் வேலை பார்க்க நான் தயாரில்லை.

அடுத்து இப்போதிருக்கும் தமிழ் சினிமாச் சூழலில் நான் போய் புதிதாக ஏதும் செய்து விட முடியும் என எனக்கு நம்பிக்கை இல்லை. ஏற்கனவே இருப்பதில் சிறுசிறு மாற்றங்களை ஏற்படுத்த என்னைப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்றுதான் தோன்றுகிறது. அதற்கு நான் தேவை இல்லை.

ஒருவேளை என் படைப்புலகத்தை முழுக்க வாசித்து ஈடுபாடு கொண்டு என்னோடு இணைந்து வேலை செய்ய வேண்டும் என ஓர் இயக்குநர் – அவர் முதியவராகவோ இளைஞராகவோ புதியவராகவோ பழையவராகவோ இருக்கலாம் – யாராவது கூப்பிட்டால் அவர்களோடு உட்கார்ந்து பேசிப் பார்த்து அவர்களின் தேவைகள் என்ன, என்னிடம் இருக்கும் சரக்கு என்ன, இதை எல்லாவற்றையும் சேர்த்து வைத்து ஒரு முடிவுக்கு வரலாம். அப்படி எல்லாம் நடக்கும் என நினைக்கிறீர்களா என்ன!

61. நிஜமான பத்மினி பற்றிச் சொல்லுங்கள். உஷா என்பது அவரது பெயர் என நினைக்கிறேன். வெவ்வேறு இடங்களில் மனதிற்குகந்த இணை என அவர் குறித்து நீங்கள் எழுதியதை வாசித்த நினைவு. பொதுவாய் எழுத்தாளர்களுக்கு இத்தகைய விஷயம் கொடுப்பினை.

பத்மினியின் பெயர் உஷா என்றால் உஷா என்றே எழுதி இருப்பேனே! எதற்கு பத்மினி எனப் பெயர் வைக்க வேண்டும்!

62. பத்மினி 100% உஷா அல்ல; எப்படி கிருஷ்ணன் 100% யுவன் சந்திரசேகர் இல்லையோ அதே போல். ஒரு வலுவான பாதிப்பை யுவன் சந்திரசேகர் கிருஷ்ணனுக்குக் கொடுத்ததைப் போல் உஷா பத்மினிக்குக் கொடுத்திருக்கலாம் என்ற அடிப்படையில் கேட்கிறேன்.

யுவன் சந்திரசேகர் உஷாவைப் பற்றிப் பேசலாம். என்ன இருந்தாலும் பத்மினி அடுத்தவன் பெண்டாட்டி இல்லையா! (சிரிக்கிறார்) அவரைப் பற்றி அபிப்பிராயம் சொல்வது முறை இல்லை என நினைக்கிறேன்!

எங்களுடையது பெற்றோர்கள் பார்த்துச் செய்து வைத்த திருமணம். ஆனால் இன்றுவரை நாங்கள் மனப்பூர்வமான காதலர்கள். என் மணவாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் மிக ஆனந்தமாகக் கொண்டாடிக் கொண்டுதான் இருக்கிறேன். அவருக்கும் அப்படித்தானா என நீங்கள் அவரை ஒரு ஐம்பது பக்க பேட்டி எடுத்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும்!

63. அவர் உங்களை வாசிக்கிறாரா?

என்னுடைய சில சிறுகதைகளை வாசித்திருக்கிறார். ஆச்சரியகரமாக‌ வெளியேற்றம் நாவலை முழுக்க வாசித்துவிட்டு உணர்ச்சிப் பரபரப்போடு பேசியது ஞாபகம் இருக்கிறது. ஆனால் அவரது அபிமான எழுத்தாளன் நான் இல்லை! அவர் வாசிக்கக்கூடியவர்தான். அவருடையது வேறுவிதமான வாசிப்பு.

64. உங்கள் தற்போதைய வாழ்க்கை, தொழில், குடும்பம் பற்றிச் சொல்லுங்கள். வீட்டில் குறிப்பாக மனைவி, பிள்ளைகளிடம் உங்கள் இலக்கியப் பணி பற்றிய புரிதலும் உதவியும் உண்டா?

இக்கேள்விகளுக்கு பதில் சொல்வதில் இயல்பாகவே தயக்கம் இருக்கிறது.

நான் ஏதாவது சொல்லப் போக, பத்து வருடம் கழித்து ஒருவர் அதை வாசித்துவிட்டு வந்து உங்கள் குடும்பத்தைப் பற்றி இப்படிச் சொன்னீர்களே ஏன் இப்படி ஒரு முரட்டு ஆணாதிக்கவாதியாக, வெறியனாக, முட்டாளாக இருந்திருக்கிறீர்கள் எனக் கேட்டுவிடக்கூடாதே என்று கவலையாக இருக்கிறது.

என் குடும்பம் இணக்கமாக இல்லை என்றால் நான் இவ்வளவு எழுதி இருக்க முடியுமா என்ன? என் மகன் பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். என் மகள் மும்பையில் எம்டெக் படிக்கிறார். அவர்களுக்கும் எனக்குமான உறவு எப்போதுமே எனக்கு வாஞ்சை நிரம்பியதாக, திருப்திகரமாக இருந்திருக்கிறது. அவர்களுக்கு எப்படி என அவர்களிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்.

அவர்கள் பொதுவாய் என் புத்தக வெளியீட்டு விழாக்க‌ளுக்குக் கூட வருவதில்லை. அவர்கள் அவர்களுடைய போக்கில் இருப்பார்கள். நானும் அவர்களின் போக்கில் தலையிடுவதில்லை. அது போன்றதான ஒரு நல்ல பரஸ்பரப் புரிந்துணர்வின் மீதுதான் இந்தக் குடும்ப வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது. நான் ஒரு தேசிய மய வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

பொதுவாகவே எழுத்தாளனின் அந்தரங்க வாழ்க்கை, சொந்த விவகாரங்கள் பற்றி எல்லாம் வாசகர்கள் அதிகமாகத் தெரிந்து கொள்ள வேண்டாம் என்றுதான் நினைக்கிறேன். படைப்புகளின் மூலமாக உருவாகும் ஆளுமைதான் முக்கியம். அதை அறியும்போது எழுத்தாளன் பற்றிக் கிடைக்கும் சித்திரம் போதுமானது.

இது reverse-ஆக‌ நடக்கும் போது இதன் வலி தெரியவரும். பெருமாள் முருகன் என்ற பேராசிரியர் எந்தளவுக்கு மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார், எந்தளவு சமநிலையாக ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார், எந்தளவு தமிழுக்காக உழைத்திருக்கிறார் என்று தெரிந்திருந்தால் ஒரு கும்பல் இப்படி வந்து தகராறு செய்திருக்காது.

எழுத்தாளன் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய சமாச்சாரங்கள் வேறாக‌ இருக்கிறது. அதெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது முக்கியம். அவற்றை அவன் எழுத்துக்கள் மூலமாக தெரிந்து கொள்ள வேண்டும். அதுபற்றி எதுவுமே தெரியாமல் அவனது சொந்த வாழ்க்கை பற்றிய தகவல்கள் வருவது பிம்பத்தை உருவாக்குவதற்கும் பிம்பத்தை நிர்மூலம் செய்வதற்கும்தான் பயன்படும்.

அது வேண்டாம் என்றே நினைக்கிறேன்.

65. வங்கியில் பணிபுரிந்துகொண்டு வங்கிப் பின்புலத்தை வைத்து ஏன் நீங்கள் எழுதவில்லை? அப்படியே வந்தாலும் அந்தப் பாத்திரம் வங்கியில் பணிபுரிவதாக ஒரு செய்தி மட்டும் வரும். அவ்வளவுதான். அது தாண்டி வங்கி என்பதை மையமாக்கி புனைவுகள் அதிகம் எழுதவில்லை. இதழியல் அனுபவம் கொண்ட சுகுமாரன் அதைக் கொண்டு நிறைய நல்ல புனைவு எழுதி இருக்க முடியும் என தனிப்பேச்சில் சொன்னீர்கள். அதே பாதையில் இக்கேள்வியை எடுத்துக் கொள்ளலாம்.

நல்ல கேள்வி.

ஒரு முதிய தலைமுறை எழுத்தாளரிடம் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னேன், “இலக்கியம் மட்டும் படித்து எழுத்தாளனாகிட வேண்டும் என நினைப்பவர்கள்தான் நிறையப் பேர். அது பிரயோஜனமில்லை. ஒரு கிணற்றிலிருக்கும் தண்ணீரைப் பம்ப் செய்து வெளியே எடுத்து, திரும்ப அந்தக் கிணற்றுக்குள்ளேயே விடுவதுபோன்றது. பொதுவாக எழுத்தாளனுக்கு வேறேதோ ஒரு துறை மீது ஆசை இருக்க வேண்டும். வரலாறு, அறிவியல், தத்துவம், உளவியல் என மற்றொரு துறை மீது ஆர்வம் இருந்து, அது தொடர்பாக வாசித்துக் கொண்டிருந்து, யோசித்தும் கொண்டிருந்து, அதில் கிடைக்கும் பெறுபொருட்களை இலக்கியத்துக்குள் பாய்ச்சலாம். அது இலக்கியம், வாசகன் இருவருக்கும் உபயோகமானது.”

அப்போது அவர் கேட்டார், “இப்போது நீங்கள் வங்கியில் இருக்கிறீர்கள், இதை வைத்து எழுதக்கூடாதா?”.

நான் சொன்னேன். அறிவுத்துறை என்பது தொடர் செயல்பாடு. அது சில அடிப்படைக் கேள்விகளைக் கையில் வைத்திருக்கிறது. அவற்றுக்குப் பதில் தேடும் முயற்சியில் தொடர்ந்து போய்க் கொண்டிருக்கிறது. உதாரணமாக பொருள் என்றால் என்ன என்ற அடிப்படைக்கேள்வி இயற்பியலுக்கு இருக்கிறது. அது விதவிதமாகக் கண்டுபிடிக்கிறது. அணு என்கிறது, அணுக்குள் இருக்கும் ப்ரோட்டான், எலக்ட்ரான், ந்யூட்ரான் என்கிறது, அதையும் பிரித்து க்வார்க் என்கிறது. விதவிதமாகப் போய்க் கொண்டே இருக்கிறது. கடைசிவரை அது கண்டுபிடிக்கப் போவதில்லை என்பது இப்போதே தெரிகிறது. ஆனால் ஏதோ ஒன்றைத் தேடிக்கொண்டே இருக்கும். அதன் கேள்வி ஒரிஜினல் என்பதால் அதன் தேடல் ஒருபோதும் நிற்காது.

தத்துவத்தை எடுத்துக் கொண்டால் நான் யார் என்ற கேள்வி. நான் அதில்லை இதில்லை அதில்லை இதில்லை… என்று போய்க்கொண்டே இருக்கிறது. கடைசிவரை நான் என்பது யார் என்று அது சொல்லப் போவதே இல்லை. இப்படி ஒரிஜினல் கேள்வியின் தகிப்பைக் கையில் சுமந்து கொண்டிருப்பது என்பது வேறு. வங்கி போன்ற அமைப்பு (சிஸ்டம்) என்பது வேறு.

அமைப்பு மாறுபடும். உதாரணமாக முன்பு எல்லாவற்றுக்கும் வங்கிக்குப் போக வேண்டியது இருந்தது. இடையில் காசோலைகள் இருந்தன. இப்போது ஓர் அட்டை இருந்தால் போதும். இன்னும் கொஞ்சம் நாள் போனால் பெருவிரல் இருந்தால் போதும் என வரக்கூடும். இப்படி எல்லாமே மாறி விடும்.

பணத்தைக் கையில் தொடாமலேயே வாழ்நாள் முழுக்கக் கழித்து விட முடியும் என்கிற மாதிரி, பண்டமாற்று காலத்தில் இருந்தது மாதிரியான ஓரிடத்தை நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம். இப்படி அந்த சிஸ்டம் மாறிக் கொண்டே இருக்கிறது. அதனால் இதை அறுதியானதாக எடுத்து, இதில் ஒரு தேடல் இருப்பதாகக் கருதி, ஓர் ஆள் இதிலிருந்து செயல்பட முடியாது.

ஆனால் மேற்கிலிருந்து வரும் நூல்களில் பொருளாதாரம், மருத்துவத் துறை, ஏரோனட்டிக்ஸ் இப்படி விதவிதமான பின்புலங்களை வைத்து எழுதுகிறார்கள் என்றால் அவற்றில் பெரும்பான்மை பல்ப் ரைட்டிங்தான்.

துறையைக் களமாக வைத்துக் கொண்டு அவர்கள் ஒரு பல்ப் எழுத்து எழுதுவார்கள். அதில் விசாரணை இருக்காது. மனித குலம் சம்பந்தமான பெரும் கரிசனம், அக்கறை இருக்காது. பார்க்கப் போனால் திரைத்துறையை வைத்து ஆங்கிலத்தில் வந்திருக்கும் மிக நல்ல புத்தகம் என்றால் சார்லி சாப்ளின் சுயசரிதையைத் தான் சொல்ல வேண்டும். அதில் சினிமா இருக்கும், சினிமாவில் இருக்கும் மனிதர்கள் பற்றியும் இருக்கும். அது போன்ற ஓர் உயரத்தில் எழுதப்பட்ட துறைசார் எழுத்துக்கள் ஆங்கிலத்திலேயே குறைவாகத்தான் இருக்கிறது. சார்லிசாப்ளினை முன்மாதிரியாக வைத்து ஸிட்னி ஷெல்டன் எழுதிய A Stranger in the Mirror படித்தால் தெரியும், மகத்தான நாயகன் ஒருவன் வணிக எழுத்தின் கதாநாயகனாக உருவாகும்போது எப்படிச் சக்கையாக மீந்துவிடுகிறான் என்பது.

66. உங்கள் புனைபெயர்களில் யுவன் சந்திரசேகர் / எம். யுவன் இருக்கும் யுவன் பற்றிச் சொல்லுங்கள்? நீங்கள் ஆர். சந்திரசேகரன்தானே? ஆனால் அதென்ன எம். யுவன்?

உங்களுக்கு இந்த இரண்டு பெயர்கள்தான் தெரியும் என்பதால் இக்கேள்வியைக் கேட்டுவிட்டீர்கள். இது போக நான் பல பெயர்களில் எழுதி இருக்கிறேன். அதையெல்லாம் யாருக்கும் ஒருபோதும் தெரியப்படுத்த மாட்டேன். அவை யாவும் சீரியஸ் பத்திரிகைகளில் சீரியஸ் கட்டுரைகளாக, சீரியஸ் மொழிபெயர்ப்புகளாக வந்திருக்கிறது என்பதை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்!

இளைஞனாக இருந்தபோது யுவன் என்ற பெயர் வைத்துக்கொண்டேன். (சிரிக்கிறார்). தொடர்ந்து இளைஞனாகத்தான் இருக்கிறேன்! சி.மணி என்ற கவிஞர் வே.மாலி என்றொரு பெயரில் எழுதி இருக்கிறார். அதுபோல ஆர்.சந்திரசேகரன், எம்.யுவன் என்று வைத்துக்கொண்டேன்.

67. உங்களுக்குப் பிடித்த சங்கீதக்காரர்கள் யார்? கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி இரண்டிலும். மேற்கத்திய இசையைக் கேட்பதுண்டா? அதில் என்ன பிடிக்கும்?

மேற்கத்திய இசை கேட்பதற்கான காதுகள் எனக்கில்லை. இடைவெளி (ஸ்பேஸ்)யும் சேர்ந்ததுதான் அவர்களின் சங்கீத முறை என்று நினைக்கிறேன். அந்த இடங்கள் மௌனமாகவே இருப்பவை. இந்திய சாஸ்திரிய சங்கீதத்தில் இருப்பது போல் ஒரு தொடர் ஓட்டம் அதில் இல்லை. இங்கிருப்பதுபோல் தாள லயம் சார்ந்த சங்கீதம் இல்லை அது. அவர்களுடையது மாத்திரைக்கணக்கு சார்ந்த வேறொரு தாள முறை. அதோடு ஒன்றி ஓட எனக்குத் தெரியவில்லை. உரிய காலத்தில் கற்றுக் கொண்டிருந்திருக்கலாம். அப்படி ஓர் ஆசை இருந்ததில்லை.

ஆனால் ஃப்யூஷன் சங்கீதங்கள் நிறையக் கேட்டிருக்கிறேன். உதாரணமாக அரேபிய, பாரசீக இசையுடன் இந்திய சாஸ்திரிய இசை சேரும்போது என்னால் அதைக் கேட்க முடிகிறது. ஜார்ஜ் ப்ரூக்ஸ் போன்ற ஒருவர் ஜாஹீர் ஹுஸைன் போன்ற ஒருவருடன் சேர்ந்து ஒரு ஃப்யூஷன் கொடுக்கும்போது அதை என்னால் ரசிக்க முடியும். சௌராஸியாவோ சுல்தான் கானோ மேற்கத்திய, அரேபிய, ஆப்பிரிக்க இசைக் கலைஞர்களுடன் சேர்ந்து வாசிக்கும்போது கேட்க முடியும். இவர்களின் வழியாக அவர்களை என்னால் அணுக முடிகிறது.

அப்படி இல்லாமல், என்னுடைய வெளிநாட்டு நண்பர்கள் கொடுத்த தூய மேற்கத்திய சங்கீதத்தை நாளைக்கு நாளைக்கு என ஒத்திப் போட்டுக் கொண்டிருக்கிறேன். என்றாவது ஒருநாள் கேட்டாலும் கேட்டுவிடுவேன்!

ஏற்கனவே சொன்னது போல் இந்திய சாஸ்திரிய சங்கீதத்தில் எனக்கு கர்நாடக சங்கீதத்தை விட ஹிந்துஸ்தானி சங்கீதம் பிடிக்கும். ஹிந்துஸ்தானி சங்கீதம் எனக்குக் கொடுக்கக்கூடிய கிளர்ச்சிக்கு நிகரான பரவசத்தை எனக்குத் தரக்கூடிய மதுரை மணி ஐயர், டிகே பட்டம்மாள், எம்டி ராமநாதன், டிஆர் மஹாலிங்கம், இன்றைய தலைமுறையில் சஞ்சய் சுப்ரமணியன் ஆகியோர் என் மனத்துக்கு நெருக்கமான இசைக்கலைஞர்கள்.

இவர்களை நான் தொடர்ந்து கேட்கிறேன். டிஆர் மஹாலிங்கத்தை நிறையக் கேட்டிருக்கிறேன். அவரது வாசிப்பில் இருக்கும் தறிகெட்ட தன்மை எனக்கு மிக நெருக்கமானது. பொதுவாகவே குரல்களைப் பொறுத்தவரை வழுவழுவென ஒரு மாதிரி round-off ஆகியிருக்கும் குரல்கள் கேட்கப் பிடிக்காது. கொஞ்சம் சொரசொரப்பாக, கரடுமுரடாக இருக்கும் குரல்கள்தான் பிடிக்கும். உதாரணமாக எம்டி ராமநாதனுடைய குரல். அக்குரல் பாட ஆரம்பிக்கும்போது இது எப்படி சங்கதி போடப் போகிறது, எப்படி ஜாலம் செய்யப் போகிறது என மலைப்பாக இருக்கும். ஆனால் போகப்போகத் தான் தெரியும். அப்படி ஒரு குரலிலும் ஜாலங்கள் செய்ய முடியும், கேட்கும் மனத்தில் ஒரு நூதனமான சாந்தத்தை ஏற்படுத்த முடியும் எனத் தெரிய வரும்.

ஹிந்துஸ்தானி சங்கீதத்தைப் பொறுத்தவரை கேள்வியே கிடையாது. பீம்சென் ஜோஷி, பீம்சென் ஜோஷி, பீம்சென் ஜோஷி … என ஒரு நூறு தடவை சொல்லி விட்டு, அதன் பிறகு குமார் கந்தர்வாவை அப்பட்டியலில் சேர்ப்பேன். குமார் கந்தர்வாவின் மகன் முகுல் ஷிவ்புத்ராவும் எனக்கு அபிமானமான பாடகர். அவர் அதிகம் பாடியதில்லை. ஆனால் ரொம்ப முக்கியமான பாடகர். கிஷோரி அமோங்க்கர் பிடிக்கும். மாலினி ரஜுர்க்கரைக் கேட்கும்போதெல்லாம் எனக்கு டிகே பட்டம்மாளைக் கேட்பது போன்ற நிறைவு ஏற்படும். இன்றைய தலைமுறையில் தார்வாட் இசைக்கலைஞர் வெங்கடேஷ் குமாரைப் பிடிக்கும். ரஷீத் கான் பீம்சென் ஜோஷிக்குச் சமமான குரல்வளமும் கற்பனை வளமும் ஆறுதலும் கொண்ட இன்னொரு கலைஞர். ஜோஷிக்கு நிகராக நான் அடிக்கடி கேட்பது ஸி ஆர் வ்யாஸை. இத்தனைக்கும் அவருடைய ஆல்பங்கள் நாலைந்து மட்டுமே என்னிடம் இருக்கின்றன. மனம் தொய்யும் சமயங்களில் வியாஸ் என் தகப்பனார் போலவே தென்படுவார்.

68. சினிமா பார்ப்பதுண்டா? தமிழ் சினிமாவைக் கவனிக்கிறீர்களா? எப்படி இருக்கிறது?

சினிமா அனேகமாகப் பார்ப்பதில்லை என்றுதான் சொல்லவேண்டும். அதற்கான அவகாசம் இருப்பதில்லை. எப்போதாவது அவகாசம் இருக்கையில் ஏகப்பட்ட சிபாரிசுகளோடு வந்து சேரும் ஏதோ ஒரு இரானியப் படத்தையோ ஜெர்மானியப் படத்தையோ துருக்கியப் படத்தையோ பார்க்கப் பிடிக்கும். சமீபத்தில் அப்படித்தான் once up on a time in Anatolia என்ற படம் சமீபத்தில் பார்த்தேன். மிகவும் பிடித்திருந்தது. சினிமா என்பது தனிப்பட்டதோர் மொழி என்பதை இன்னொரு முறை எனக்குத் தெரிய வைத்த படம். அப்படத்தில் வெளிச்சத்தைப் பயன்படுத்தி இருக்கும் முறை மிகப் பிரமாதமாக இருக்கும்.

தமிழில் மிகப் பேசப்பட்ட படங்கள் பார்த்திருக்கிறேன். மொழி எனக்குப் பிடித்த படம். அப்படம் ஏன் பிடித்திருந்தது என்றால், ஊனமுற்றவர்களை கேலிப் பொருளாகவோ பரிதாபத்துக்கு உரியவர்களாகவோ மட்டுமே நாளதுவரை காட்டி வந்திருந்தது தமிழ் சினிமா. மொழி படம் அந்த மரபை உடைத்தது. அந்தப் பெண் மீது எனக்கு மிகப் பெரிய அபிமானம் உண்டாயிற்று. எவ்வளவு தைரியமாக, சுதந்திரமாக இருக்கிறாள். எவ்வளவு தன்னியல்பாக ஒரு காதலை நிராகரிக்கிறாள், பிறகு எவ்வளவு தன்னியல்பாக அதை உணர்ந்து ஏற்றுக்கொள்ளவும் செய்கிறாள்! எனக்கு மிகச் சந்தோஷமாக இருந்தது. அந்தப் படத்திற்காக ஜோதிகாவுக்கு மிகப் பெரிய அளவில் அங்கீகாரமும் விருதுகளும் கிடைக்க வேண்டும் என நான் ஆசைப்பட்டேன். Sterling Performance அது.

அப்புறம் ஆடுகளம் ரொம்ப திருப்தியான ஒரு படமாக இருந்தது. அப்படம் பற்றி நண்பர்களிடம் இப்போது வரை பேசிக்கொண்டே இருக்கிறேன். அந்த இயக்குநரின் இன்னொரு படம் பார்த்தேன். பொல்லாதவன். அந்தப்படம் எடுத்தவரா இதை எடுத்தார் என ஆச்சரியமாக இருந்தது! அந்த அளவு ஆடுகளம் என்னை impress பண்ணியது. . ஜி.நாகராஜன் கதைகளைப் படிக்கும்போது ஏற்படும் திருப்தி அப்படத்தைப் பார்த்த போது இருந்தது. குறிப்பாக, நண்பர்களாக இருந்து விரோதிகளாக மாறும் இருவரும் சேவல்களாக மாறி உயர்ந்து உறைந்து நிற்கும் இடம் நிஜமாகவே அந்த இயக்குநரின் vision-ஐக் காட்டக்கூடியதாக இருந்தது. சேவல்கள்போல உயரும் அந்தக் காட்சி கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. வ.ஐ.ச.ஜெயபாலனின் நடிப்பையும் அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அதன் பிறகு இப்போதுவரை ஒரு தமிழ்ப் படம் கூடப் பார்க்கவில்லை என்பது இப்போது சொல்லும்போதுதான் ஞாபகத்துக்கு வருகிறது!

69. ஒருவேளை மதுரைப் பின்புலம் என்பதால் உங்களுக்கு அப்படம் பிடித்திருக்கிறதா?

அப்படிச் சொல்ல முடியாது. மதுரைப் படங்கள் நிறைய வந்திருக்கின்றன. அளவுக்கு மீறி வந்திருக்கின்றன. திகட்டத் திகட்ட வந்திருக்கின்றன. சுப்ரமணியபுரத்தில் தொடங்கியது என நினைக்கிறேன்.

70. பருத்தி வீரன் என நினைக்கிறேன்.

ஆம். ஆடுகளத்தில் என்னைக் கவர்ந்த இன்னொரு அம்சத்தையும் சொல்ல வேண்டும். யாருமே கெட்டவர்கள் கிடையாது. சூழ்நிலையினால் ஒரு சிறுமனப்பிறழ்வு வருகிறது. உதாரணமாக பேட்டைக்காரனாக வரும் அந்தக் கிழவனாருக்கு வேறு யாரிடமும் விரோதமே கிடையாது. அவர் வில்லன் கிடையாது. இவர்கள் இருவருக்கிடையே ஒரு பிரச்சனை. அதில் அவர் ஒரு முடிவெடுக்கிறார். யாரிடமும் மோசமாகவும் நடந்து கொள்ளவில்லை. இவருக்கு ஆதரவாகப் பேசுவதால் தான் தன் மனைவியையும் துரத்தி விடுகிறார். அவர் மனித விரோதியாக மாறி விடுவதில்லை. இது மிக முக்கியம் என நினைக்கிறேன். சா. கந்தசாமியின் தக்கையின் மீது நான்கு கண்கள் கிட்டத்தட்ட இதே விஷயத்தைப் பேசும் கதை.

71. வழக்கமான விடைபெறல் கேள்வி. இளம் எழுத்தாளர்களுக்கான உங்கள் சொற்கள்?

எனக்கு வயதான பிறகு சொல்கிறேன்!

72. சரி, சக இள‌ம் எழுத்தாளர்களுக்கு ஏதேனும் சொல்லலாமே!

சக எழுத்தாளர்கள் என்னை எப்படி நினைக்கிறார்கள் என்று தெரியாது; நான் அவர்கள் அனைவரையும் எனக்குச் சமமாக‌வே நினைக்கிறேன். அவர்களுக்கு புத்தி சொல்லுமளவு எனக்கு யோக்கியதை கிடையாது!

***

License

Icon for the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License

தமிழ் - மின்னதழ் 2 Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book