அபயம்

ஹரன் பிரசன்னா

 

அவை யாருடைய கண்கள் என்பதில் டேனியல் சுடலையப்பனுக்கு பெரிய குழப்பம் இருந்தது. சொல்லமுடியாத ஒரு பதற்றம் உடலெங்கும் பரவி, யாரிடம் இதைப் பற்றிக் கேட்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தான்.

 

எதுவுமே நடக்காத மாதிரி அவனது மூன்று வயது மகள் தேன்மொழி உறங்கிக்கொண்டிருந்தாள். மகள் கருப்பு நிறம் என்றாலும் கண்ணைக் கவரும் களை கொண்டவள் என்று அடிக்கடி நினைத்துக் கொள்வான் அவன். கருப்பு நிறத்தில் ஒரு ரோஜா இருக்குமா? இப்போதும் கூட‌ கண்மணியை எழுப்பி இதைக் கேட்கலாம். கேட்டவுடன் கட்டிக் கொள்வாள். கண்மணி நிறமும் தன் நிறமும் கலந்து ஒரு சிலையெனப் பிறந்தவள் தேன்மொழி என்பது டேனியலுக்குப் பெருமையாகவே இருக்கும். நகை போட்டுப் பார்த்தால் அப்படி ஜொலிப்பாள் என்று சொல்லி கண்மணி தேன்மொழியை நெட்டி முறிப்பாள். ஆனால் அவை யாருடைய கண்கள்?

 

ஐந்து நிமிடங்களுக்கு முன்பு படுக்கையில் தேன்மொழியைக் காணவில்லை. கண்மணி வேறு ஏதோ உலகத்தில் வாய் பிளந்து உலவிக்கொண்டிருந்தாள். மகள் எங்கே போயிருப்பாள் என்று யோசித்துக்கொண்டே ஹாலுக்கு வந்து விளக்கைப் போட்டுவிட்டு தேன்மொழி என அழைத்துக் கொண்டே வந்த டேனியல், பாத்ரூமில் விளக்கெரிவதைப் பார்த்தான். “என்னம்மா பண்ற?” என்று கேட்டுக்கொண்டே உள்ளே சென்று பார்த்தான். தேன்மொழி ஒரு ஸ்டூலைப் போட்டு அதன் மீது ஏறி நின்று நிலைக்கண்ணாடியைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அந்த நடுஇரவில் அவள் ஏன் இப்படிச் செய்கிறாள் என்ற எண்ணமே அவனுக்குப் பயத்தைத் தந்தது.

 

“ஏய், என்ன பண்ற? வா!” என்று அவளை இழுத்தபோது அவள் அவனைப் பார்க்கவே இல்லை. நான்கைந்து முறை சத்தம் போட்டதும் சட்டென்று அவனைத் திரும்பிப் பார்த்தாள். அந்தக் கண்கள் சிரித்துப் பொங்கும் ஒரு குழந்தையின் கண்கள் அல்ல. ஒரு நிமிடம் பின்வாங்கி நின்றான் டேனியல். பின்பு பயத்தை அடக்கிக்கொண்டு, “இது என்ன பழக்கம்? வாம்மா” என்றதும் அவள் “அப்பா” என்று சொல்லிக்கொண்டே அவனுடன் வந்துவிட்டாள். அவன் அருகில் படுத்துக்கொண்டு அவனைக் கட்டிக்கொண்டு ஒரு நிமிடத்தில் உறங்கியும் விட்டாள்.

 

இதுவரை இப்படி இவள் நடந்துகொண்டதில்லை என்று டேனியல் நினைத்துக்கொண்டான். கண்மணியும் இப்படி எதுவும் சொன்னதில்லை. ஒருவேளை தங்களுக்குத் தெரியாமல் இப்படி கண்ணாடியைப் பார்த்துக் கொண்டிருந்திருப்பாளோ என்ற எண்ணம் வந்தது. நாளையே டாக்டரிடம் காண்பிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். வேறேதோ எண்ணங்கள் அவனுக்குள் மின்னி ஓடின. அந்தக் கண்களை அவன் எங்கேயோ பார்த்திருக்கிறான். நிச்சயம் அது தேன்மொழியின் கண்களல்ல. தான் தினமும் மிக அருகில் காணும் கண்மணியின் கண்களும் அல்ல. சட்டென எழுந்து கண்ணாடி முன் நின்று தன் கண்ணைப் பார்த்தான். அவன் கண்களும் அல்ல. பின் யார் கண்கள்? அந்தக் கண்கள் அவன் மனதுக்குள் எங்கோ அடி ஆழத்தில் உள்ளவைதான். யாருடையவை?

 

அன்று இரவு முழுவதும் அதையே யோசித்ததில் பல்வேறு தேவையற்ற நினைவுகள் அவனுக்குள் புரண்டன. கிட்டத்தட்ட அவன் வாழ்க்கையையே அவன் திருப்பிப் பார்த்துவிட்டான். மகளை நினைத்துக் கொஞ்சம் கவலையாகவும் இருந்தது. மெல்ல நெருங்கி காய்ச்சல் அடிக்கிறதா என்று தேன்மொழியைத் தொட்டுப் பார்த்தான். அவள் சிணுங்கிவிட்டு புரண்டு படுத்து தூங்கத் தொடங்கினாள். எந்த மாற்றமும் இல்லை, எப்போதும் போல்தான் இருக்கிறாள். இதை கண்மணியிடம் இப்போதைக்குச் சொல்லவேண்டாம் என்று நினைத்துக் கொண்டான்.

 

மறுநாள் அலுவலகத்திலிருந்து வந்ததும் வராததுமாக, அவசரமாக ஒரு வேலையாக திருச்செந்தூர் வரை போக வேண்டி இருக்கிறது என்று கண்மணியிடம் சொல்லிவிட்டு, ஒரே ஒரு பேண்ட் சட்டையை மட்டும் எடுத்துக் கொண்டு, தேன்மொழிக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு, வேகவேகமாகக் கிளம்பினான். அவனை ஆச்சரியத்துடன் பார்த்தாள் கண்மணி. கல்யாணமான ஐந்து வருடத்தில் இப்படி ஒரு நாளும் ஒரு ஊருக்கும் அவன் ஓடியதில்லை. உண்மையில் அவனுக்கு சென்னையைத் தவிர எந்த ஊரும் பிடித்ததில்லை. சென்னையின் தூசி, வேகம், புகை, கட்டடங்கள் எல்லாமே சொர்க்கம் என்பான். இத்தனைக்கும் குலசேகரபட்டணத்தில் பிறந்து வளர்ந்தவன் அவன்.

 

திருச்செந்தூரில் இறங்கி ஒரு ஆட்டோ பிடித்து குலசேகரபட்டணத்துக்குச் செல்லும்போது நன்றாகவே விடிந்து விட்டிருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில மாடுகள் தார்ச்சாலையில் அலைந்துகொண்டிருந்தன. செல்லும் வழியெங்கும் இரு பக்கமும் பார்த்துக்கொண்டே வந்தான். ஊரில் ஒரு மாற்றமும் இல்லை. கூரை போட்ட டீக்கடை ஒன்று வரவும் ஆட்டோவை நிறுத்திவிட்டு இறங்கிக்கொண்டான்.

 

டீக்கடைக்குள் செல்லவும், “என்னடே அதிசயம் இது?” என்றார் கன்னியப்பன் மாமா. “சும்மாதான் மாமா, என்னவோ தோணுச்சு” என்று சொல்லிவிட்டு, “ஒரு டீ தாங்க” என்றான்.

 

ஃபோனில் கண்மணியை அழைத்து குலசேகரபட்டணம் வந்துவிட்டதாகச் சொன்னான். “இப்பம் எதுக்கு அங்க?” என்றாள். “நானும் வந்திருப்பேம்லா” என்றும் சொன்னாள். “சும்மாதான்” என்று சொல்லிவிட்டு, “தேன்மொழி எப்படி இருக்கா?” என்று கேட்டான். “அவளுக்கென்ன, வீட்டையே கலங்கடிக்கா” என்றாள்.

 

கொஞ்சம் யோசித்துவிட்டு, “பதட்டப்படாம கேட்டுக்கோ” என்று தொடங்கி, அவளிடம் முதல்நாள் இரவு நடந்ததைச் சொன்னான். அவன் சொல்லி முடிக்கவும் “ஒங்களுக்கென்னா கோட்டியா பிடிச்சிருக்கு? இதுக்கா பயந்து ஊருக்கு ஓடினீங்க? அவ எப்பவும் செய்யறதுதான். கண்ணாடி பாக்க பிடிக்கும் பாப்பாவுக்கு, பாத்திருக்கா, இதுக்கென்ன இம்புட்டு பதட்டம்?” என்றாள். இத்தனை எளிதான விஷயமா இது? என்ற சந்தேகம் வந்தது டேனியலுக்கு.

 

இல்லை, அவள் கண்களை கண்மணி பார்க்கவில்லை. இவனும் அதைப் பற்றி ஏதும் சொல்லி இருக்கவில்லை. “சரி விடு, ஒண்ணுமில்லேன்னா நல்லதுதான். என்னமோ தோணுச்சு ஊருக்கு வந்தேன், நாளைக்கு வந்துருவேன்” என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்.

 

வெளியே வந்து பார்த்தான். சில வருடங்களுக்கு முன்பு அந்த இரவில் இதே கடைக்கு முன்பு படபடப்புடன் பைக்கில் வந்து நின்றபோது இப்படி வெறிச்சோடி இருக்கவில்லை. அப்போது கல்யாணம் ஆகியிருக்கவில்லை. தசரா கூட்டத்தில் விதவிதமாக பெண்ளைப் பார்க்கலாம் என்று நண்பர்கள் அனைவரும் அந்த டீக்கடைக்கு வந்து உட்கார்ந்துகொள்வார்கள். சிரித்தபடியே என்ன என்னவோ பேசிக்கொண்டிருந்தாலும் கண்கள் மட்டும் கடந்து செல்லும் பெண்களின் உடல்களைக் காண்பதிலேயே இருக்கும். ஆசையும் பெண்களும் நிறைத்துக் கிடந்த வயது.

 

பைக்கை ஓட்டமுடியாதபடி தசரா கூட்டம் குவிந்திருந்தது. லட்சக்கணக்கான மக்கள் நடந்துகொண்டிருந்தார்கள். ஊருக்கு வெகு தூரம் முன்பாகவே பஸ் வேன்கள் எல்லாம் நிறுத்தப்பட்டிருந்தன. நடந்துதான் ஊருக்குள் செல்லலாம். பைக்கில் ஊர்ந்து ஊர்ந்து செல்லலாம். விதவிதமான வேஷம் போட்டுக்கொண்டு பலர் நடந்துகொண்டிருந்தார்கள். ஊரெங்கும் சாயம் தூவி விடப்பட்டது போன்ற நிறத்தில் தெருக்களெல்லாம் பொங்கி வழிந்தன. காளியைப் போல வேஷம் போட்டவனைச் சுற்றி சிறுவர்கள் சிரித்துக்கொண்டே சென்றார்கள்.

 

ஏதோ வேலையாக திருச்செந்தூர் சென்றவன், இந்தக் கூட்டத்திலிருந்து தப்பிக்க சிலருக்கு மட்டுமே தெரிந்த ஒரு குறுக்குப் பாதை வழியாக ஊருக்குள் வந்தான். அங்கிருந்து தார்ச்சாலையில் ஏறி ஒரு அழுத்து அழுத்தினால் கன்னியப்பன் மாமா டீக்கடைக்கு வந்துவிடலாம். அங்கே நண்பர்கள் காத்திருப்பார்கள். லேசாக இருட்டத் தொடங்கிவிட்டது. திருவிழா களை கட்டும் நேரம் அதுதான். எத்தனை அழகான பெண்களைப் பார்க்காமல் விட்டேனோ என்று நினைத்துக்கொண்டே பைக்கை விரட்டிக்கொண்டிருந்தான். மண்ணும் கல்லும் முள்ளும் கிடந்த அந்தப் பாதையில் பைக்கில் வந்தபோது எங்கிருந்தோ ஒரு பெண்ணின் குரல் அலறலாகக் கேட்டது.

 

சட்டென்று பைக்கை நிறுத்தி குரல் வந்த பக்கம் பார்த்தான். ஒன்றும் தென்படவில்லை. ஆனால் குரலின் வேகம் அதிகரித்த வண்ணம் இருந்தது. காப்பாத்துங்க என்று கத்துவதும் ஆ ஓ என்று அலறுவதும் கேட்டது. உடனே அந்த இடத்தில் இருந்து ஓடிவிடவேண்டும் என்ற எண்ணமே அவனுக்குத் தோன்றியது. ஒரு சில நிமிடங்களுக்கு எந்தச் சத்தமும் இல்லை. முதலில் சத்தம் வந்த இடத்தைக் கூர்ந்து பார்த்தான். புதர் போல சில செடிகள் மண்டியிருந்ததைத் தவிர எதுவும் கண்ணில் படவில்லை.

 

இப்போது “காப்பாத்துங்க” என்ற சத்தம் அவன் பின் பக்கம் இருந்து வந்தது. பயந்து திரும்பிப் பார்த்தான். ஒரு சிறிய பெண் பாவாடையுடன் மேலே உடை எதுவும் இல்லாமல் மார்பு குலுங்க ஓடி வந்துகொண்டிருந்தாள். அவளைப் பார்க்கவும் அவன் எதையுமே யோசிக்காமல் உடனே பைக்கை எடுத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு விரைவாக நீங்கினான். அவன் பின்னே “காப்பாத்துங்க” என்னும் குரல் காற்றில் கரைந்தது.

 

டீக்கடைக்கு வந்ததும்தான் அவனுக்குத் தன்னுணர்வு வந்தது. கன்னியப்பன் மாமா அவனைப் பார்த்து “என்னடே பேயறைஞ்ச மாதிரி இருக்க? என்னத்த பாத்த?” என்றார். அவன் நண்பர்கள் சிரித்தார்கள். அவன் ஒன்றுமே சொல்லாமல் அமைதியாக இருந்தான். அவனுக்குள் பல எண்ணங்கள் அலையடித்தன. நண்பர்களிடம் சொல்லி அவர்களை அழைத்துக்கொண்டு அங்கே சென்று பார்க்கலாமா என யோசித்தான். ஆனால் அப்படிச் செய்யவில்லை. சில நாட்களில் மெல்ல அதை மறந்துபோனான். கடைசிவரை யாரிடமும் அவன் அதைச் சொல்லவில்லை. அந்தப் பெண்ணின் முலைகள் அதிர்ந்தது மட்டுமே அவன் மனத்தில் மறையாத ஒன்றாக நின்று போனது.

 

“என்னடே பலமான யோசனை? டீயைக் குடி” என்றார் கன்னியப்பன் மாமா. “ஒண்ணுமில்ல மாமா” என்று சொல்லிக் கொண்டே டீயைக் குடித்தான். அவன் நண்பர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் கன்னியப்பன் மாமா விசாரித்தார். அவன் அதற்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருந்தாலும் அவன் நினைப்பெல்லாம் வேறெதிலோ இருந்தது. சட்டென அவரை இடைமறித்து, “மாமா, நா ஒண்ணு உங்ககிட்ட சொல்லணும்” என்றான். “சொல்லுடே, சொல்றதுக்கென்ன. யார் இங்க வாரா. பேசதுக்கு கூட ஆளில்லை பாத்துக்கோ. சொல்லுடே” என்றார்.

 

அன்று நடந்ததைச் சொன்னான். கன்னியப்பன் மாமா கொஞ்சம் அதிர்ச்சி அடைந்து அவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்துகொண்டார். “சொல்லிருந்தேன்னா எல்லாரும் போய் பாத்திருக்கலாமேடே” என்றார். அவன் தலை குனிந்து அமர்ந்திருந்தான். “இப்பம் என்ன அது பத்தி யோசனை?” என்று கேட்டார். “இங்க வந்ததும் அது ஞாபகம் வந்தது, வேற ஒண்ணும் இல்லை” என்று சொல்லிவிட்டான். “அந்தப் பொண்ணு யாரு தெரியும்லா’ என்று கேட்டார். அவன் கொஞ்சம் ஆர்வமாகி, “உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டான்.

 

“அது பெரிய கதைல்லா” என்றார். “அவ பேரு சட்டுன்னு மறந்துட்டுடே இப்ப. அப்புறம் யோசிச்சு சொல்லுதேன். சட்டுன்னு எப்பவாச்சும் நெனைப்பு தட்டும். ஒரு வகைல எனக்கு சொந்தக்காரப் பொண்ணுதான். ரொம்ப தூரத்துச் சொந்தம்னு வெய்யி. சின்ன வயசானாலும் நல்லா இருப்பா. வாளிப்பான ஒடம்புல்லா. பதினாறு வயசுன்னு சொல்லவே முடியாது பாத்துக்கோ. அப்படி இருப்பா. சரியான வாய். யாரு என்னான்னு பாக்கமாட்டா, என்ன வேணா பேசிருவா. பாவம், நல்லா வாழவேண்டியவ, என்னமோ இப்படி ஆயிட்டு. யாருங்க, எல்லாம் பக்கத்து ஊர்க்காரப் பயலுவளுதான். மூணு பேர் சேந்து இப்படி பண்ணிட்டானுவளு. அதுவும் அவ்ளோ கூட்டம் இருக்கப்ப, ராத்திரிகூட ஆவலை பாத்துக்கோ. ஒனக்குத்தான் தெரியுங்கியே. அங்கயே அவ செத்துட்டா. அவ செத்தது ஒனக்கு தெரியாதுல்ல” என்றார். அவன் அமைதியாக இருந்தான். “ஓ, தெரியுமா! சரி, அவளை இப்படி ஆக்கினவனுங்க அதே தசரா நாள்ல வருசத்துக்கொருத்தனா செத்தாம்லா, அது தெரியுமா?” என்றார். “அப்படியா?” என்று கேட்டான்.

 

“பின்ன! ஊரு முழுக்க அதுல்லா ஆச்சரியம். முத்தாரம்மனே நின்னு நீதி கேட்டுச்சுன்னுல்லா இப்பவும் பேச்சு.”

 

“கேக்கவே ஆச்சரியமாத்தான் இருக்கு” என்றான். “ஒரு வார்த்தை சொல்லிருந்தா கொஞ்சம் போய் பாத்திருக்கலாமேடே” என்றார் மீண்டும். “என்னவோ பயம் மாமா. அந்த வயசு அப்படி. நடந்து ஒரு பத்து வருஷம் இருக்கும்லா” என்றான். “இருக்கும். நீயும் என்ன பண்ணுவ, சின்னவன் அப்ப. சரி விடு, விதி” என்றார்.

 

“ஒண்ணு சொல்லணும்டே, முத்தாரம்மன் சும்மா இல்லை. கணக்கை எழுதி வாங்கிட்டாள்லா. அவளை நான் பாத்திருக்கேன். ஒரு நாலஞ்சுதடவை பேசிருக்கா. கருப்பா இருந்தாலும் களையா இருப்பா. அவ நடையே கம்பீரமாத்தான் இருக்கும். முத்தாரம்மன் நடக்க மாதிரின்னு வெச்சிக்கோ. அவ கண்ணு இருக்கு பாரு, அப்படியே முத்தாரம்மனுக்க கண்ணுதான் பாத்துக்கோ. அப்படி ஒரு தீர்க்கம்’ என்றார்.

 

அதற்குப் பின் அவர் சொன்னது எதுவுமே அவனுக்குக் காதில் விழவில்லை. தலை சுற்றிக் கீழே விழுந்துவிடாமல் இருக்க, தான் உட்கார்ந்திருந்த மர பெஞ்சைப் பிடித்துக்கொண்டான்.
***

License

Icon for the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License

தமிழ் - மின்னதழ் 2 Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book