அமில மழை
சொரூபா
‘ஸ்ஸப்பா.’
எரிந்தது காவியைக்கு. கொஞ்ச நாளாகத்தான் சிறுநீர் கழிக்கையில் இந்த எரிச்சல்.
‘என்ன கேடு வந்தது எழவுக்கு?’
முணுமுணுத்தபடி வெளியே வந்து கொதித்துக் கொண்டிருந்த பாலில் டீத்தூளும் சர்க்கரையும் போட்டுவிட்டு பிரஷ் செய்தாள். வடிகட்டிக் கொண்டு போய் ஹரியை எழுப்பினாள்.
“வாசல் பெருக்கப் போனியா?”
“முறைவாசல் அடுத்த வாரம்”
“இன்னும் நேரமிருக்கே. கொஞ்ச நேரம் படுத்திருக்கேன்”
“இல்லை வேலையிருக்கு. நீங்களும் எழுந்து வாங்க. டைம் ஆய்டும்”
படுத்திருந்த மகளை ஒரு பார்வை பார்த்தபடி வெளியே வந்தவன் மொபைலைச் சார்ஜில் போட்டான். ஹீட்டர் ஆன் செய்து பாத்ரூமினுள் நுழைந்தான்.
‘சொய்ங்’
தோசையை ஊற்றி வைத்துவிட்டுப் போய் மகளை எழுப்பினாள். குக்கரில் இருந்த குருமாவைக் கிண்ணத்தில் ஊற்றி ஹரி அருகில் வைத்தாள்.
“மார்க்கெட் போகணுமா?” தட்டைப் பார்த்தபடி கேட்டான்.
“காயெல்லாம் இருக்கு. சீக்கிரமா குளிடா ஆர்த்தி குட்டி”
“உடம்பு சுடறாப்ல இருக்கு. டோலோ இருக்கா?”
சட்டென ஒரு கழிவிரக்கம் சூழப் பதற்றமாய் அவன் நெற்றியில் கை வைத்தாள். கண்களில் நீரோடு நினைவுகளும் திரையிட்டன.
பத்தாண்டுகள் வேலை பார்த்த ஃபேப்ரிகேஷன் கம்பெனி மூடப்பட, அதே துறையில் கத்தாரில் வேலை பார்க்கும் நண்பன் ஒருவன் சிபாரிசின் பேரில் சென்னையில் கிளையன்ட் இண்டர்வியூ என்று அழைப்பு வந்தது.
நேர்காணல் முடிந்து மாதம் 6,500 ரியால் சம்பளத்தில் வேலை கிடைத்துவிட்டது என்று அவன் அலைபேசியில் பகிர்ந்தபோது ஜிவ்வென்றிருந்தது. குரலில் கர்வம் வழிய வழிய அதைப் பெற்றோர்க்கும் தங்கைகளுக்கும் சொல்லிச் சிரித்த நாள் அது.
“அம்மா தோசை கருகுது”
பழிப்பு காட்டியபடி ஆர்த்தி சொல்ல சட்டென மீண்டாள் காவியை.
“லஞ்ச்க்கு என்னம்மா?”
“சப்பாத்திடா. நிவேதாக்கு ஒண்ணு, பவானிக்கு ஒண்ணு, என் செல்லத்துக்கு மூணு. சரியா?”
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ஐடி கார்ட், லஞ்ச் பாக்ஸ், ரிப்பன், ஷூ, சாக்ஸ் எல்லாம் அதனதன் இடங்களுக்குப் போய் உட்கார்ந்து கொண்டன.
முதுகில் ஸ்கூல் பேக்கோடு ஓர் எட்டு எட்டி முத்தமிட்டுவிட்டு ஸ்கூல் பஸ்சிற்கு ஓடினாள் ஆர்த்தி.
வாஹினி அம்மா, ப்ரீத்தி அம்மா வீடுகள் கடந்து பால்கனிக்குச் சென்று ஆர்த்திக்கு டாட்டா காட்டி விட்டு வீடு நுழைய நுழைய மொபைல் அடித்து ஓய்ந்தது. ஹரி இரண்டு மிஸ்ட்கால்கள். இவள் டயல் செய்யத்துவங்க, அவனே கூப்பிட்டான்.
“எங்க போய்ட்ட?”
“பால்கனிக்கு”
“இவ்வளவு நேரமா? பக்கத்து வீட்டு ஆம்பளைங்க வீட்ல இருக்கற பொழுதாச்சே?”
“ப்ச்”
“கம்பெனி பஸ் ஏறிட்டேன். பாத்து பத்திரமா இரு”
பாத்திரங்களைக் கழுவிக் கவிழ்த்து வீடு பெருக்கினாள்.
“காவியா”
கீழிருந்து வீட்டுக்காரம்மா குரல் கேட்டது.
“என்னமா” என்றாள் எட்டிப்பார்த்து
“பூ அறுக்கற பொண்ணுங்க இன்னிக்கு வரல. வாடா, ஆளுக்கு ஒரு கை பறிக்கலாம்”
“வரேன்மா”
‘சென்னைக்கு மிக அருகில்’ உள்ள புறநகர். கீழே ஆறு மேலே ஆறு என மும்மூன்று வீடுகள் எதிரெதிர் பார்த்த பன்னிரண்டு குடித்தனங்கள். பின்னால் அரை ஏக்கருக்கு கனகாம்பரத் தோட்டம். ஊடே மா, தென்னை, எலுமிச்சை, முருங்கை மரங்கள். இரு தலைமுறைக்கு முன் கிராமத்திலிருந்து குடி பெயர்ந்தும் மரபணுவில் விவசாய மோகம் மிச்சமிருக்கும் வெள்ளந்தி.
சர சரவென பூக்களைப் பறித்து விரலிடுக்குகளில் கோர்த்துக்கொள்வதும் அவை நிரம்பியதும் கொத்தாக கிண்ணத்தில் போடுவதும் காவியைக்கு பிடித்தமான வேலை. என்ன, அவைகளின் உயரத்துக்கு கொஞ்சமாய்க் குனிந்து பறிப்பதால் இடுப்பு விட்டுப்போகும்.
நீர் அருந்திவிட்டு மொபைலை எடுத்துக் கொண்டு இவள் படியில் கால் வைக்க வாஹினி அம்மாவும் ப்ரீத்தி அம்மாவும் சேர்ந்து கொண்டார்கள். வீட்டுக்கார அப்பாவும் அம்மாவும் தோட்டத்தின் கடைசியில் இருக்க, பேசினால் காதில் விழும் தொலைவில் நின்றுகொண்டு மூன்று பெண்களும் பறிக்கத் துவங்கினார்கள்.
“சாம்பார் வச்சேன். அவரைக்காய் வறுத்தேன். நீங்க?”
“சப்பாத்தி குருமா. மதியம் சாதம் செய்யணும்”
“நான் தயிர்சாதம், உருளைக்கிழங்கு வறுவல்”
“அடுத்தவாரம் கல்யாண நாள் வருதில்ல உங்களுக்கு?”
“ஆமாம். புடவை எடுக்கணும். பிளவுஸ் தெக்கணும். கடைக்கு கூட்டிட்டுப் போகச் சொல்லி கேட்டுக்கிட்டே இருக்கேன். ஹ்ம்ம்”
“நம்ம கஷ்டம் ஆம்பளைங்களுக்குப் புரியாது ப்ரீத்தி அம்மா”
“ஆமாமாம்.”
காவியைக்குக் குபீரென சிரிப்பு வந்தது. அடக்கிக்கொண்டாள்.
“சீனியர் எஞ்சினியர் போஸ்ட். ஒரு வருஷம் விட்டுட்டு இருக்கணும். பர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் ஆர்த்திய அங்கேயே சேர்த்துடலாம் செலக்ட் ஆனவங்களுக்கு நாளைக்கு மெடிக்கல் செக்கப். நைட்டு ட்ரைன் ஏறிடுவேன்”
மூன்று வருடங்களுக்கு முன் திருச்சியில் கொழுந்தன்கள் ஓர்ப்படிகள் மாமியார் எனக் கூட்டுக்குடும்பமாய் வாழ்ந்த காலகட்டம். மூத்த மகனின் முன்னேற்றத்தைக் குடும்பம் ஸ்வீட் செய்து கொண்டாடியது.
மறுநாள் மாலை ஹரி “மெடிக்கல் ரிப்போர்ட் வந்திருக்கு காவியா” என்றான் உடைந்த குரலில்.
“ட்ரைன் எத்தனை மணிக்கு?”
“ஹெச் ஐ வி பாசிடிவ்”
சத்தியமாய் பூமி பிளக்க அருகிலிருந்த கதவைக் கெட்டியாக பிடித்துக்கொண்டாள் காவியை. வீடு மொத்தமாய் டிவி சப்தத்தில் ஆழ்ந்திருந்தது. இது யார்க்கும் தெரியக்கூடாது என அவள் அறிவு சொல்ல, குரலைத் தணித்துக்கொண்டு.
“கிளம்பி வாங்க, பேசிக்கலாம்” என்றுவிட்டு அழுதபடி யோசிக்கத் தொடங்கினாள்.
அடுத்த ஒரு வாரம் அழாமல் நடித்து எல்லாரையும் சமாளித்த அவளின் மனோதிடம் பற்றித்தான் இன்னமும் அவளுக்கு ஆச்சர்யம்.
டிபியின் ஆரம்ப அறிகுறி. சரியாகட்டும் பார்க்கலாம் என்றுவிட்டார்கள் என்ற பொய்க்கே மாமியார் அழுதார். தம்பிகள் இது உண்மையா என்று ஆராயாமல் அண்ணனுக்கு ஈரல் போடு எனக் கண்டிப்பு காட்டினார்கள்.
“She knows?”
ரிப்போர்ட்டை பார்த்தபடி கேட்டார் மருத்துவர்.
“தெரியும் சார். எப்படி இது?”
இரகசியம் தெரிந்த ஒரே மற்றவர் முன் சுதந்திரமானதொரு அழுகை வந்தது காவியைக்கு.
போதைப் பழக்கம் உண்டா என்ற கேள்விக்கும் இரத்தம் ஏற்றும் அவசியம் ஏதும் வந்ததா என்ற கேள்விக்கும் இல்லை என்று தலையாட்டினான் ஹரி.
“வெல். படிச்சவங்க நீங்க. மேற்கொண்டு என்ன செய்யறதுன்னு பேசலாம். CD4 கவுண்ட் செஞ்சுடலாம். மினிமம் 200/mm3 இருக்கணும். எதுக்கும் நீங்களும் ஒரு டெஸ்ட் பாத்துடுங்கமா.”
ஒழுக்கம் குறித்த ஆய்வென்று உலகம் நம்புவதால் லாபில் உயிர் போனது காவியைக்கு. CD4 கவுண்ட் 185/mm3 என்றும் இவளுக்கு ஹெச்ஐவி நெகடிவ் என்றும் முடிவு வந்தது.
200/mm3 மினிமம் என்று மருத்துவர் சொன்னதால் ஒரு சவாலாய் அவனைக் கவனித்தாள் காவியை. பழங்கள், காய்கறிகள், தானியங்கள், அசைவத்தில் அத்தனையும் என ஒரே மாதத்தில் 230/mm3 ஐத் தொட்டது எண்ணிக்கை.
“ஆகாரம் இப்படியே கண்டின்யூ பண்ணுங்க. ஆல்கஹால். சிகரட் நிறுத்துங்க. யூஸ் காண்டம். கெட் பேக் இண்டூ த நார்மல் லைப். ஆல் தி பெஸ்ட்” விடை கொடுத்தார் மருத்துவர்.
இயல்பு திரும்பி சென்னையில் வேறு வேலை கிடைத்து, இந்த வீடு வந்து சேர்ந்து மூன்று ஆண்டுகள் முடிந்து விட்டது. எப்போதேனும் சூழும் இனம்புரியா வெறுமையில் தொலைந்து விடத் தோன்றும் காவியைக்கு.
மதியம் சாதம் வடித்து ரசம் வைத்தாள். சிறிது நேரம் தூங்கி எழுந்து முகம் கழுவப் பின்னால் வந்து சப்தமிடாமல் கட்டிக்கொண்டது குழந்தை.
திரும்பி அணைத்து முத்தமிட்டாள். உடை மாற்றப் பணித்து சாதம் பிசைந்து வைத்தாள். உண்டு கொண்டே ஆர்த்தி டிவியில் மூழ்க இவள் பால்கனியில் பூ தொடுத்துக் கொண்டிருந்த பெண்களோடு போய் அமர்ந்து கொண்டாள்.
மறுவாரம் வரவிருக்கும் கல்யாண நாளுக்கு செய்ய வேண்டிய ஸ்வீட், நாக சதுர்த்தி, பிள்ளைகளின் குறும்புகள், புருஷன்மார்களின் அசட்டுத்தனங்கள், கரண்ட் கட்டில் விட்டுப்போன மெகா சீரியல் என சிரித்துக் கொண்டிருந்த போது ஹரி படியேறி வீடு நுழைவது இங்கிருந்து தெரிந்தது.
“என்ன அண்ணன் சட்டுன்னு வந்துட்டாரு?”
“தெரியலையே. காலைலயே உடம்பு எப்படியோ இருக்குன்னாரு. போய்ப் பாக்கறேன்”
எழுந்து வரும்போது எதிர்பட்ட வாஹினி அப்பா “ஆர்த்தி குட்டி வந்தாச்சாமா?” என்று கேட்டார்.
“வந்தாச்சு அண்ணா” என்று புன்னகைத்து விட்டு உள்ளே வந்தாள்.
“ஏன் சீக்கிரம் வந்துட்டீங்க? உடம்பு என்ன பண்ணுது?”
“காலெல்லாம் வலி. அதான் வந்துட்டேன். பால்கனிக்குத் தினமுமே போவியா?”
“பூ கட்டிகிட்டிருந்தாங்க. அதான் போனேன். குட்டி, ஹோம் வொர்க் எடுத்து வைடா. டீ வைக்கவா?”
“வை. டிரஸ் மாத்தறேன். பூ அறுக்கவும் போனியா?”
“ஆமாம். வெங்காய பஜ்ஜி போடவா?”
“வேண்டாம். ப்ரீத்தி அப்பா கடை திறக்க லேட்டா தானே போவாரு. அவர் கூட தோட்டத்துக்கு வருவாரா?”
“இல்லை. பெய்ன் கில்லர் வேணுமா?”
“குடு. பால்கனியில இருந்து நீ வரும்போது ஜெண்ட்ஸ் வாய்ஸ் கேட்டுச்சே”
“வாஹினி அப்பா. ஆர்த்தி வந்தாச்சான்னு கேட்டாரு. டைரி எடும்மா. என்ன ஹோம்வொர்க்னு பாக்கலாம்”
“சிரிப்பு சத்தம் கேட்டுச்சே, வேற என்ன கேட்டாரு?”
முதுகு காட்டி டீ வைத்தபடி பதிலளித்துக் கொண்டிருந்தவள் திரும்பி அவன் கண்களைப் பார்த்துச் சொன்னாள்.
“ஒரு ஆணும் பெண்ணும் சிரிச்சு பேசிக்கறதாலெல்லாம் ஹெச்ஐவி வராதாம்.”
***