மணிவண்ணன் : சமூகப் புரட்சியின் கலைஞன்

முரளிகண்ணன்

இரண்டாண்டுகளுக்கு முன்னர், உறவினர் ஒருவரின் வீட்டு நிகழ்வில் இருந்தபோது, அந்தத் தகவல் வந்தது. இந்த, காமெடியா நடிப்பாரே மணிவண்ணன் அவரு இறந்துட்டாராம் என்று. பெரிய அதிர்ச்சி எனக்கு. மணிவண்ணன் இறந்ததை விட, 50 படங்கள் இயக்கிய ஓர் இயக்குநரை காமெடி நடிகர் என்ற வட்டத்தில் அடைத்து விட்டார்களே என்று. 90களுக்குப் பின் பிறந்த தலைமுறை வேண்டுமானால் அவரை காமெடி நடிகர் என்றோ அல்லது எங்கள் கிராமப்பகுதிகளில் வழங்கப்படும் “சைடு ஆக்டர்” என்ற பதம் கொண்டோ அழைத்துக் கொள்ளட்டும். ஆனால் 80களைச் சேர்ந்தவர்கள் கூட அவர் ஓர் இயக்குநர் என்பதை மறந்துவிடுகிறார்கள்.

30 வருடங்களுக்கு முன்னால், பொழுதுபோக்கிற்குத் திரைப்படங்களை மற்றுமே நம்பியிருந்த சிற்றூரில் இருந்த எனக்கு இரண்டு வகையான திரைப்படங்கள் மட்டுமே காணக்கிடைத்தன. ஒரு வகையில் பாரதிராஜா, பாலசந்தர் போன்ற இயக்குநர்களின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்கள். கதைக்களன் நன்கு அமைந்திருக்கும் இந்த வகைத் திரைப்படங்களில் நாயகர்களுக்கு பெரிய வேலை இருக்காது. இன்னொரு முனையில் நாயகர்களை உயர்த்திப் பிடிக்கும் மசாலா படங்கள். இந்த இரண்டும் வகையும் எனக்குப் பிடித்தமில்லை. கலைப் படங்களுக்கும் வணிகப் படங்களுக்கும் இடையில் பேரலல் சினிமா என்று ஒன்று இருப்பதுபோல, வணிகப் படங்களிலேயே கதையை அடிப்படையாக கொண்ட படமே அந்த வயதில் எனக்கு தேவைப்பட்டது.

அப்பொழுது பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன். பள்ளிக்குச்செல்லும் வழியில் ஒட்டப்பட்டிருந்த ஒரு திரைப்படச் சுவரொட்டி கவனத்தை ஈர்த்தது. பாக்யராஜும் தாடி வைத்த ஒருவரும் கம்புகளை வைத்து சண்டைப் போட்டுக் கொண்டிருப்பது போலவும், அதை பாரதிராஜா பார்த்துக் கொண்டிருப்பதைப் போலவும் அடியில் சிறந்த சிஷ்யன் யார் என்ற போட்டிக்கே சண்டை என்பதைப் போலவும் ஒரு வாசகம் இடம் பெற்றிருந்தது. அது மணிவண்ணன் இயக்கிய முதல் படமான “கோபுரங்கள் சாய்வதில்லை”க்கான விளம்பரம். எங்கள் ஊருக்கு, வெளியாகி 100 நாட்கள் கழித்தே எந்தப் படமும் வரும். இந்தப் போஸ்டர் 100 நாட்கள் ஓடியபின் அடிக்கப்பட்ட போஸ்டர் என்பதாலும் அப்போது எந்தச் சமூக வலைத்தளமும் இல்லாததாலும் யாரும் அதைக் கிண்டல் செய்யவில்லை. அந்த போஸ்டருக்கான நியாயத்தைச் சிறப்பாகவே செய்தவர் மணிவண்ணன். ஆனாலும் படம் பார்க்கும் ஆவல் வரவில்லை. அதன்பின் அவர் இயக்கி வெள்ளி விழா கண்ட “இளமைக் காலங்கள்” படத்தையும் பார்க்கவில்லை.

சத்யராஜுக்கு அடையாளம் கொடுத்த நூறாவது நாள் திரைப்படம் வந்தபோது, இடைவேளைக்குப் பிந்தைய காட்சிகள் பரபரப்பாகப் பேசப்பட்டன‌. சில தியேட்டர்களில் பெண்கள் மயங்கி விழுந்தார்கள், எனவே இடைவேளை முடிந்து படம் ஆரம்பித்து சிறிது நேரம் கழித்து ஒரு சோடாவை உடைத்து ரெடியாக வைத்துக் கொள்வார்கள் என்றெல்லாம் செய்தி பரவியது. படம் பிடித்திருந்தது. தொடர்ந்து வந்த 24 மணி நேரமும் ஓக்கே ரகம். அதன்பின் மணிவண்ணன் படங்கள் என்றாலே ஒரு ஆவல் பிறந்தது.

பாரதிராஜாவின் படத்தைப் புகழ்ந்து கடிதம் எழுதி, அவரிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தவர் மணிவண்ணன். ஐந்து பெரிய வெற்றிப்படங்களுக்குப் பின் நிழல்கள் படத்தில் தான் தன் முதல் தோல்வியைச் சந்தித்தார் பாரதிராஜா. அது மணிவண்ணனின் கதை. இருந்தும் தன் அடுத்த படத்திற்கு மணிவண்ணன் சொன்ன கதையையே எடுத்தாண்டார். அதுதான் பெரிய வெற்றி அடைந்த அலைகள் ஓய்வதில்லை. காதல் ஓவியம் வரை பாரதிராஜாவிடம் பணியாற்றினார். அதன்பின்னர் கோபுரங்கள் சாய்வதில்லை படத்தை இயக்கினார்.

மணிவண்ணனின் சிறப்பே எல்லா வகையான கதைக் களங்களையும் கையாண்டு எல்லாவற்றிலும் வெற்றியைக் கண்டவர் என்பதுதான். காதல் என்றால் இளமைக் காலங்கள், இங்கேயும் ஒரு கங்கை. குடும்பக் கதைகள் எனில் கோபுரங்கள் சாய்வதில்லை, அம்பிகை நேரில் வந்தாள். திரில்லர் என்றால் நூறாவது நாள், 24 மணி நேரம், விடிஞ்சா கல்யாணம், மூன்றாவது கண். சமூக சீர்திருத்தம் என்றால் முதல் வசந்தம், வாழ்க்கைச் சக்கரம். ஜனரஞ்சகமான படங்கள் எனில் ஜல்லிக்கட்டு, சின்ன தம்பி பெரிய தம்பி, சந்தனக்காற்று. அவர் எக்காலத்திலும் நினைவு கொள்ளப்படும் அரசியல் விமர்சனப் படங்கள் எனில் பாலைவன ரோஜாக்கள், இனி ஒரு சுதந்திரம், அமைதிப்படை. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தியிலும் படங்களை இயக்கியவர் மணிவண்ணன்.

மணிவண்ணன் இயக்கிய படங்களில் தொழில் நுட்பம் ஆச்சர்யமூட்டுவதாக இருக்காது. நடனம், சண்டைக் காட்சிகள் மனதை கவராது. அவருடைய பலமே சுவராசியமான கதை. நல்ல கதாசிரியர்களை அவர் தனது படங்களில் தொடர்ந்து உபயோகித்துக் கொண்டார். கோபுரங்கள் சாய்வதில்லை, முதல் வசந்தம், இங்கேயும் ஒரு கங்கை படங்களில் கலைமணி, சின்ன தம்பி பெரிய தம்பி, உள்ளத்தில் நல்ல உள்ளம் படங்களில் ஷண்முக பிரியன், ஜல்லிக்கட்டு படத்தில் வியட்நாம் வீடு சுந்தரம் எனத் தேர்ந்த கதாசிரியர்களின் துணையோடு இயக்கினார்.

அந்தக் கதைக்கு ஏற்றார் போல அன்றாட வாழ்வில் இருந்து எடுக்கப்படும் கேரக்டர்கள், அந்தக் கேரக்டர்கள் பேசும் சமூகத்தைக் கேள்வி கேட்கும் வசனங்கள் தான் மணிவண்ணனின் சிறப்பு. அந்த கேரக்டர்களும் மணிவண்ணனின் குரலாகவே ஒலிக்கும். மணிவண்ணனின் இன்னொரு பிளஸ் பாயிண்ட் நகைச்சுவை. அவரின் முதல் படமான கோபுரங்கள் சாய்வதில்லை தொடங்கி கடைசிப்படமான நாகராஜ சோழன் எம்ஏ எம்எல்ஏ வரை மீண்டும் மீண்டும் ரசிக்கும்படியான நகைச்சுவை அமைந்திருந்தது (சில த்ரில்லர் படங்களைத் தவிர).

கவுண்டமணியுடன் இணைந்து அவர் பணியாற்றிய வாழ்க்கைச் சக்கரம், புது மனிதன், தெற்கு தெரு மச்சான் ஆகிய படங்களில் சிறப்பான நகைச்சுவை காட்சிகள் அமைந்திருக்கும்.

மணிவண்ணின் இயக்கிய சமூகக் கருத்துள்ள படங்களில் முக்கியமானது முதல் வசந்தம். அதுவரை வந்த படங்களில் பெரும்பாலும் பிராமணர், முதலியார், செட்டியார் போன்ற எளிதில் தெருவில் இறங்கி சண்டைக்கு வந்துவிடாத வகுப்பினரே தங்களை விட ஜாதி அடுக்கில் குறைவானவர்களுடன் ஏற்படும் காதலை எதிர்ப்பதாகக் காட்சிப்படுத்துவார்கள். சில திரைப்படங்களில் தேவர் சமூகத்தினரை காட்சிப்படுத்தி இருப்பர். மிக அரிதாக ”மனிதரில் இத்தனை நிறங்களா” என்ற படத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு உள்ளேயே அடுக்குகளில் இருக்கும் தீண்டாமையைக் காட்டி இருப்பார்கள். கவுண்டர் சமூகத்தினரின் தீண்டாமையை நேரடியாக பெயர்களுடன் பதிவு செய்தது ”முதல் வசந்தம்” படம்தான். வேட்டைக்காரக் கவுண்டர் (மலேசியா வாசுதேவன்), குங்குமப் பொட்டுக் கவுண்டர் (சத்யராஜ்) என நேரடியான பெயர்களுடன் குறிப்பிடப்பட்டிருக்கும். இருவரும் எதிரிகள். இருந்தாலும் வேட்டைக்காரக் கவுண்டர், தன் வேலையாட்கள் குங்குமப் பொட்டுக் கவுண்டரைத் திட்டுவதை பொறுத்துக் கொள்ளாத அளவுக்கு ஜாதிப்பாசம் கொண்டவர். தன் மகள் தாழ்த்தப்பட்ட ஜாதிக்காரனைக் காதலிக்கிறார் என்று தெரிந்ததும் எதிரியான குங்குமப் பொட்டுக் கவுண்டருக்கே மணமுடிக்கத் திட்டமிடுவார்.

வாழ்க்கைச் சக்கரம் படத்தில் வரதட்சணைப் பிரச்சினையை தொட்டு இருப்பார். இப்பொழுது வரதட்சணைப் பிரச்சினை என்பது குறைந்து விட்டது. பெண் கிடைத்தால் போதும் எனப் பலரும் சொல்ல கேட்க நேரிடுகிறது. ஆனால் அந்தக் காலகட்டத்தில் அந்தப் பிரச்சினை வெகுவாக இருந்தது. மற்ற இயக்குநர்கள் எல்லாம் வரதட்சணைப் பிரச்சினையை மார்க்கெட் இழந்த நடிகர்களை வைத்து, நாடகப் பாணியில் எடுப்பார்கள். ஆனால் மணிவண்ணன் ஆக்சன் ஹீரோவாக அப்போது இருந்த சத்யராஜை வைத்து இந்தப் படத்தை எடுத்து, மக்களிடம் கொண்டு சேர்த்தார். வீட்டில் காசு இல்ல, ஆனாலும் கவுரவத்துக்காகக் கடன் வாங்கி பெட்ரோல் போட்டு லயன்ஸ் கிளப் போறேன் என்று வாழ்ந்து கெட்டவர்களைக் காட்சிப்படுத்தி இருப்பார்.

மணிவண்ணன் ஒரு தீவிர வாசிப்பாளர். பொது உடைமை தத்துவங்களிலும், பெரியாரின் கருத்தியலிலும் ஆழ்ந்த பற்றுள்ளவர். இது அவரது அரசியல் படங்களில் வெளிப்படும். பாலைவன ரோஜாக்களில் சத்யராஜ் நேர்மையான, அரசியல் தவறுகளை எதிர்க்கும் பத்திரிக்கை ஆசிரியர், லட்சுமி மாவட்ட ஆட்சியர். வசனம் அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த கருணாநிதி. 80களில் வெளிவந்த அரிதான அரசியல் படங்களில் இந்தப்படமும் ஒன்று. அடுத்த ஆண்டில் ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகியின் அவலத்தைச் சொல்லிய “இனி ஒரு சுதந்திரம்”. இப்படம் கோமல் சுவாமிநாதனின் நாடகம் ஒன்றை தழுவியது. 94ஆம் ஆண்டு மணிவண்ணன் இயக்கிய “அமைதிப்படை”. தமிழ் சினிமாவில் அரசியல் பேசிய மிகச்சிறந்த படங்களில் ஒன்று. படம் வெளியாகி 20 ஆண்டுகள் கழிந்த பின்னும் இக்காலச் சூழ்நிலைக்கு பொருந்தும்படி இருக்கிறது இந்தப்படம். மணிவண்ணன் இயக்கிய தோழர் பாண்டியன், வீரப்பதக்கம் ஆகிய படங்களிலும் பொது உடைமை மற்றும் சுயமரியாதைக் கருத்துகள் இடம்பெற்று இருந்தன.

மணிவண்ணன் இயக்கிய ஜல்லிக்கட்டு (சிவாஜி, சத்யராஜ்), சின்ன தம்பி பெரிய தம்பி (பிரபு, சத்யராஜ்), சந்தனக்காற்று (விஜயகாந்த்) ஆகிய படங்கள் நல்ல வசூலைத் தந்த படங்கள். சத்யராஜை வைத்து அவர் தொடர்ந்து இயக்கிய புது மனிதன், தெற்கு தெரு மச்சான் ஆகியவையும் முதலுக்கு மோசமில்லாத படங்கள். கனம் கோர்ட்டார் அவர்களே என்னும் படம் மட்டும்தான் வர்த்தக ரீதியாக அந்நாட்களில் தோல்வி அடைந்தது. இந்தப் படங்களிலும் மணிவண்ணன் தன்னுடைய அரசியல் கருத்துக்களை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல சொல்லிவந்தார். தெற்கு தெரு மச்சான் படத்தில் காவிரி நீர்ப் பிரச்சினையை லேசாகத் தொட்டுக் காட்டி இருப்பார்.

விஜயகாந்த், மோகன், சத்யராஜ், பிரபு ஆகியோர் மணிவண்ணனின் படங்களில் தொடர்ந்து நடித்தவர்கள். சிவகுமார், சந்திரசேகர் ஆகியோரும் தவறாமல் மணிவண்ணன் படங்களில் இடம் பிடிப்பார்கள். சிவாஜி கணேசனையும் இயக்கிய மணிவண்ணன் ஏனோ கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் கார்த்திக்குடன் இணைந்து பணியாற்றவில்லை. இத்தனைக்கும் ரஜினிகாந்துடன் கொடி பறக்குதுவில் வில்லனாகவும் நடித்து நல்ல அறிமுகமும் கொண்டவர். மணிவண்ணன், ஹீரோக்களை நம்பி படம் எடுத்தவர் அல்ல. அவர் ஸ்கிரிப்டை நம்பி படம் எடுத்தவர். அதனால்தான், தான் எடுக்கப்போகும் கதைக்குத் தோதான நடிகர்களையே உபயோகப்படுத்தினார். அதனால்தான் அவர் உருவாக்கிய அருக்காணி, அமாவாசை, ஆபாயில் ஆறுமுகம், வேட்டைக்காரக் கவுண்டர், குங்குமப் பொட்டுக் கவுண்டர் எல்லாம் அனைவர் நினைவிலும் நிற்கிறார்கள்.

மணிவண்ணனிடம் உதவி இயக்குநர்களாக இருந்தவர்களும் சோடை போனவர்கள் அல்ல. திரைப்படக் கல்லூரியில் படித்துவிட்டு வந்த ஆர்கே செல்வமணி, விக்ரமன், வைகாசி பொறந்தச்சு ராதா பாரதி, சுந்தர் சி, செல்வ பாரதி, சீமான், ஈ ராமதாஸ், மாயாண்டி குடும்பத்தார் ராசுமதுரவன் என குறிப்பிடத்தக்க இயக்குநர்கள் மணிவண்ணனின் பிரதான உதவியாளர்களாக இருந்தவர்கள். மணிவண்ணன் படங்கள் எப்படி வெரைட்டியாக இருக்குமோ அப்படித்தான் அவர் உதவியாளர்களும். பீல்குட் குடும்பப் படங்கள் எனில் விக்ரமன், அரசியல் பின்புலம் எனில் செல்வமணி, சீமான், ஈ ராம்தாஸ், டப்பிங் படங்கள் எனில் செல்வபாரதி, கிராமத்து குடும்பத்துக் கதைகள் எனில் ராசுமதுரவன், சுந்தர் சியைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

மணிவண்ணன் 1994 வரை பிஸியான இயக்குநராகவே இருந்தார். அந்த ஆண்டிலேயே அவருடைய நான்கு படங்கள் வெளிவந்தன. பின் 1995ல் கங்கைக்கரைப் பாட்டு படத்தை இயக்கிய பின்னர், உடல்நிலை பாதிப்பின் காரணமாக தற்காலிகமாகப் படங்களை இயக்குவதை நிறுத்திக் கொண்டார்.

மணிவண்ணன் ஈழ போராட்டத்தின் மீதும், விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதும் ஈடுபாடு கொண்டிருந்தார். அதனால்தான், வைகோ மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்த போது அதில் இணைந்தார். மதிமுக, 1998ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக உடன் கூட்டணி வைத்த உடன் சற்று மனம் தளர்ந்தார். 2007க்குப் பின் தமிழ்நாட்டில் ஈழ போராட்டத்துக்கு ஆதரவாகக் குரல்கள் எழுந்தது. பாரதிராஜா, சீமான், அமீர் ஆகியோர் சில போராட்டங்களை நடத்தினார்கள். இவர்களுக்கு மணிவண்ணன் தார்மீக ஆதரவை அளித்தார்.

பிரசாந்த், ஜெயா ரே, மும்தாஜ் நடித்த சாக்லேட் படம் வெற்றிபெற்ற பின்னர் ஜெயா ரேவுக்கு வாய்ப்பே வரவில்லை. மலை மலை பாட்டுல எல்லா கல்லையும் மும்தாஜே எடுத்துட்டுப் போயிட்டாங்க, எனக்கு கூழாங்கல் கூட கிடைக்கல என்று அவர் நிருபர்களிடம் வருத்தப்பட்டாராம். அதுபோல இந்தப் போராட்டங்களில் புகழ் பெரும்பாலும் சீமானுக்கே சேர்ந்தது. இதில் பாரதிராஜா சற்று மனவருத்தம் கொண்டு விலகிக்கொண்டார். ஆனால் மணிவண்ணன், சீமான் அணியினருடனே இருந்தார். இதன் காரணமாக பாரதிராஜாவுக்கும், மணிவண்ணனுக்கும் இடையே சற்று மனவிலக்கம் ஏற்பட்டது.

பிஸியான இயக்குநராக இருந்து, குணச்சித்திர, நகைச்சுவை நடிகராக மாறிய மணிவண்ணன் அதிலும் தன் முத்திரையைப் பதித்தார். முதலில் கூறியதைப் போல 90களில் பிறந்தவர்களுக்கு அவரை ஓர் இயக்குநராக தெரிவதை விட நடிகராகத்தான் தெரியும். தான் நம்பிய அரசியலுக்கு மாறாக நிஜ வாழ்க்கையிலும் சரி, சினிமாவிலும் சரி நடக்காத மணிவண்ணன் ஒரு சமூகப் போராளிக்கு உரிய மரியாதையோடு வழியனுப்பப்பட்டார்.

***

License

Icon for the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License

தமிழ் - மின்னதழ் 2 Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book