"

மொழி

செல்வராஜ் ஜெகதீசன்

 

ஆர்டர் செய்திருந்த தோசைகள் வந்து நாங்கள் சாப்பிட ஆரம்பித்த போதுதான் அந்தக் குரல் கேட்டது.

 

“ஒன் மௌத் பேபி. ஒன்லி ஒன் மௌத்”

 

எங்களுக்கு அடுத்த மேஜையில் ஒரு சிறு பெண்ணுக்கு தட்டில் இருந்த இட்லியை அவள் அம்மா ஊட்டிக் கொண்டிருந்தாள். நான் அவர்கள் இருந்த மேஜையை பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.

 

“ஒரு வாய்மா” என்றாள் அந்த சிறுமியின் பக்கத்தில் இருந்த பாட்டி. அந்தச் சிறுமியின் அம்மாவின் அம்மாவாய் இருக்கலாம்.

 

“அம்மா, கொஞ்சம் சும்மா இரும்மா” என்ற சிறுமியின் அம்மா, மறுபடியும் “ஒன் மௌத் பேபி” என்றபடி ஊட்ட ஆரம்பித்தாள்.

சமீபத்தில் அந்தச் சிறுமி படிக்கும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கூட்டத்திற்குப் போய் வந்திருப்பாள் என்று நினைத்து கொண்டே, என் பக்கத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த இளையவனைப் பார்த்தேன். அவனுக்கு அந்தச் சிறுமியை விட ஒரு வயது கூட இருக்கும். அந்தச் சிறுமியையே பார்த்துக் கொண்டிருந்தான். எதிரே என் மனைவிக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெரியவன் சாப்பிடுவதில் மும்முரமாய் இருந்தான். பார்வையைச் சின்னவனை நோக்கித் திருப்பினேன். அவன் பார்வை அந்தச் சிறுபெண் மீதே இருந்தது.

 

நாங்கள் அவனைப் படுத்தி எடுத்த காலங்களை நினைத்துக் கொண்டிருக்கிறானோ? ஒரு வருடம் முன்னால் நடந்தவைகள் ஐந்து ஆறு வயதுச் சிறுவர்களின் நினைவில் தங்கிப் போய் இருக்குமா என்று என்னால் ஊர்ஜிதப் படுத்திக்கொள்ள முடியவில்லை. “தட்டைப் பார்த்துச் சாப்பிடுறா” என்று அவன் கவனத்தைத் திசை திருப்ப முயன்றேன். நான் சொன்னதற்காக ஒருமுறை தலையைத் தாழ்த்தி தட்டைப் பார்த்து ஒரு தோசை விள்ளலை கையில் எடுத்தவன் மறுபடியும் அந்தச் சிறுமி இருந்த திசையில் பார்வையை ஓட விட்டான்.

 

அந்தச் சிறுமியின் பக்கத்தில் அமர்ந்திருந்த பாட்டியின் நிலைமை குறித்து நான் யோசித்துக் கொண்டிருந்தேன். இரண்டு அல்லது மூன்று மாதச் சுற்றுலா விசாவில் வெளிநாட்டில் இருக்கும் மகனையோ மகளையோ பார்க்க வரும் பாட்டிகளுக்கு பெரும்பாலும் என்னவிதமான எதிர்பார்ப்புகள் இருக்கும். பேரனோ அல்லது பேத்தியோ அவர்களோடு கொஞ்சிப் பேசி மகிழ்வதிலா அல்லது ஊர் சுற்றிப் பார்ப்பதிலா?

 

ஆனால், இங்கே நடந்து கொண்டு இருப்பது என்ன? பாசத்துடன் தாய்மொழியில் கொஞ்சிப் பேசி உணவு கூட ஊட்ட முடியாதபடி சிறுமியின் அம்மா பாட்டியைத் தடுக்கிறாள்.

 

அவளையும் குற்றம் சொல்ல முடியாது. அவளுக்கு அந்த மாதிரி பள்ளியில் சொல்லப்பட்டிருக்கும். இளையவனின் பள்ளிக்கு நான் போயிருந்த போது எனக்குச் சொல்லப்பட்டது மாதிரி.

 

“வீட்ல பையன் கிட்ட என்ன லாங்க்வேஜ் பேசறீங்க?” என்ற கேள்வி என் முன்னால் வைக்கப்பட்ட அன்று என்ன பதில் சொல்ல என்று ஒரு கணம் யோசித்தது இப்போதும் நன்றாக நினைவில் இருக்கிறது.

 

பதில் சொல்ல முனைவதற்குள், “எதுவாருந்தாலும் இனிமே ஆங்கிலத்திலேயே பேசுங்க. நான் பேசுறது எதுவுமே புரியாத மாதிரியே இருக்கான். இப்படியே போனா கிளாஸ்ல கோப்அப் பண்றது கஷ்டம்” என்று இன்னமும் விளக்கமாகச் சொன்னாள் இளையவனின் வகுப்பு ஆசிரியை.

“உங்க வீட்ல உங்க குழந்தைக் கிட்ட என்ன லாங்குவேஜ்ல பேசுறீங்க” என்று கேட்க நினைத்தவன் “ஓகே மேடம்” என்று சொல்லிவிட்டு எழுந்து கொண்டேன். எனக்குப் பின்னால் இன்னும் எட்டு ஒன்பது பேர் தன் வாரிசுகளோடு இதே போலவோ கொஞ்சம் வேறு மாதிரியோ உபதேசம் பெற்றுப் போகக் காத்துக் கொண்டிருந்தனர்.

“சூப்பர்வைசரை கொஞ்சம் பார்த்துட்டுப் போயிடுங்க” என்று இளையவனின் பெயரை ஒரு துண்டுச் சீட்டில் எழுதி நீட்டினார் அந்த வகுப்பு ஆசிரியை. சூப்பர்வைசர் ரூம் எங்கே என்று கேட்டுக் கொண்டு அதை நோக்கி நடந்தேன்.

சூப்பர்வைசர் அறையில் உள்ளே ஒருவ‌ர் தன் மகனோடு சூபர்வைசர் சொன்னதை மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார். அவரது தலை அவ்வப்போது மேலும் கீழும் அசைந்து கொண்டிருந்தது.

 

வாசலில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தேன். சின்னவனை கூட்டிக் கொண்டு வராதது நல்லது என்று தோன்றியது. வந்திருந்தால் இதை எல்லாம் கேட்டு விட்டு, அதிலிருந்து அவன் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லி மாளாது.

 

அலைபேசியில் மனைவி அழைத்து “என்னாச்சு, பார்த்து முடிச்சாச்சா?” என்றாள். “இன்னும் இல்லை, முடிச்சதும் கூப்புடறேன்” என்று லைனைக் கட் பண்ணினேன். அலைபேசி மறுபடி ஒலித்தது.

 

“ஸ்கோர் என்னாச்சு” என்றது நண்பன் ராமின் குரல். “ஸ்கூல்ல ஓபன் அவுஸ்ல இருக்கேன்” என்றேன். “ஸ்கூல்லையா. யோவ். இந்தியா பாகிஸ்தான் மேச் போயிட்ருக்கப்ப ஸ்கூல்ல என்னய்யா பண்ற?”

 

“ஆபீஸ் வந்ததும் கூப்புடுறேன்” என்று அந்த லைனை கட் பண்ணவும் “கம் இன்” என்று உள்ளிருந்து அழைப்பு வரவும் சரியாக இருந்தது.

 

அடுத்த நிமிடம் சூபர்வைசரின் எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தவன், கிளாஸ் டீச்சர் கொடுத்த துண்டுச் சீட்டைப் பாக்கெட்டில் இருந்து எடுத்து நீட்டினேன். சூபர்வைசரான அப்பெண்ணின் முகம் நல்ல கடுப்பில் இருந்தது. எனக்கு முன்னால் பேசிப் போனவரின் மகன் விஷயத்தில் என்ன பிரச்சனையோ? எதுவாயிருந்தாலும் அடுத்து வந்து அமர்ந்திருப்பவரிடமும் அதே கடுப்பு தேவைதானா? அதுவும் ஆரம்பிக்கும் முன்னமே?

 

சூபர்வைசர் அவரது இடது புறத்தில் இருந்த சின்ன மேஜையில் இருந்து ஒரு நோட்டை உருவி எடுத்து, பிரித்து என்னெதிரே மேஜையில் போட்டார். வைக்கவில்லை. ஏறக்குறைய போட்டார்.

 

நான் சற்று முன்னே குனிந்து நோட்டைப் பார்த்தேன். ஆங்கில எழுத்துகள், சற்றுக் கோணலாக நெளிவுகளோடு எழுதப்பட்டிருந்தன. பக்கத்தின் இடது ஓரத்தில் “நீட் இம்ப்ரூவ்மெண்ட்” என்று எழுதியிருந்தது.

 

நான் என் முறைக்குத் தயாரானேன். வெகு அழகான ஆங்கிலத்தில் ஆரம்பித்தது சூபர்வைசரின் உரை.

 

“கையெழுத்தைப் பார்த்தீங்களா? எப்படி கிறுக்கி கிறுக்கி எழுதியிருக்கான். வீட்ல நீங்க பேரன்ட்ஸ் என்னதான் பண்றீங்க? கிளாஸ் டீச்சர் எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்குன்னு உங்களுக்கு புரியுதுங்களா? எவ்வளவுதான் திருப்பித் திருப்பி சொல்லிக் கொடுக்கிறது? சொல்லுங்க.”

 

“அதற்குத்தானே ஆசிரியர் ஆகிய நீங்கள் எல்லாம் இருக்கிறீர்கள். தவிரவும் இதுதானே உங்களின் வேலையும்” என்று உள்ளுக்குள் தோன்றிய எதையும் முகத்தில் காட்டாமல் கேட்டுக் கொண்டிருந்தேன்.

 

“ஸீ. இந்த நோட்டைப் பாருங்க. இவனும் உங்க பையன் கிளாஸ் தான். எவ்வளவு நீட்டா இருக்கு.” என்று சொன்னபடி மேஜையில் இருந்த இன்னொரு நோட்டைப் பிரித்துக் காட்டினார். யுகேஜிக்கு கொஞ்சம் அதிகப்படியாகவே முத்து முத்தாக அழகாக இருந்தது. எல்லோரிடமும் இந்த நோட்டு காட்டப்பட்டிருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.

 

“நீங்க என்ன பண்ணுவீங்களோ தெரியாது. இன்னும் ஒரு மாசத்துல, எனக்கு இம்ப்ரூவ்மெண்ட் தெரியனும்.” என்றார், முகத்தில் கடுப்பு இன்னும் கொஞ்சம் கூடுதலாய்.

 

“ஓகே?” என்றவரிடம் “ஸுயூர் மேடம், வி வில் டூ அவர் பெஸ்ட்” என்று சொல்லிவிட்டு எழுந்து வெளியேவந்தேன்.

 

சூபர்வைசர் சொன்ன எல்லாவற்றையும் கிளாஸ் டீச்சரே சொல்லியிருக்கலாமே என்று ஸ்கூல் காம்பௌண்ட் விட்டு வெளியே வந்ததும் தோன்றியது.

 

மகனின் கையெழுத்தைச் சரி செய்ய என்ன செய்யலாம் என்று யோசித்தவனுக்கு இவர்கள் எவ்வளவோ மேல் என்று தோன்றியது. இதற்கு முன்னால் எல்கேஜி படித்த பள்ளியில் சொன்னதற்கு முன்னால் இதுவெல்லாம் ஒன்றுமே இல்லை.

 

“பென்சிலை சரியாகவே விரல்களில் பிடிக்க மாட்டேன் என்கிறான். ஒரு சின்ன ஹீட் தெரபி கொடுத்தால் சரியாகி விடும். அதைப்பற்றி உங்களிடம் பேசவேண்டும், எப்போது உங்களுக்கு வர வசதிப்படும்?” என்று தொலைபேசியில் கேட்ட அந்தப் பெண் குரலை எப்படி அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க முடியும்?

 

“அஞ்சு வயசுப் பையனுக்கு கையில சூடு வைக்கனும்னு சொல்ற உங்களை கண்டிப்பா நானும் பார்க்கணும்” என்று ஆரம்பித்து, நான் அவ்வளவு கத்திப் பேசியதை, அதுவரை யாருமே பார்த்ததில்லை என்று ஒவ்வொருவரும் பின்னால் சொல்லிச் சென்றார்கள்.

 

அதற்குப் பின், ஆரம்பித்துத் தேடி, கொண்டு சேர்த்த இந்தப் பள்ளியில், அப்படி என்ன பெரிதாய் சொல்லி விட்டார்கள். நன்றாக எழுதப் பயிற்சி கொடுக்கச் சொல்கிறார்கள். செய்து விட்டால் போகிறது. நம் குழந்தைக்கு நாம் செய்யாமல் வேறு யார் செய்வார்கள்?

 

“டாடி, பில் வந்திருச்சி.” என்ற பெரியவனின் குரலில் நினைவுகளில் இருந்து திரும்பியவன், பில்லை செட்டில் செய்துவிட்டு வெளியே வந்தோம்.

 

“ஒன் மௌத் பேபி” எங்கள் பின்னால் மெலிதாய் காற்றில் கரைந்து கொண்டிருந்தது.

 

*

 

மறுநாள், நாவல் ஒன்றைப்படித்துக்கொண்டிருந்த என்னருகே வந்த பெரியவன் “டாடி, இது தமிழ் தானே?” என்றான்.

 

“ஆமாம்”

 

“இதெல்லாம் நான் எப்பப் படிக்கறது”

 

“அதுக்கு தமிழ் படிக்க கத்துக்கனும்டா முதல்ல.”

 

“ஏன் ஸ்கூல்ல தமிழ் சொல்லித் தரமாட்றாங்க?’

 

“இந்த ஊர் லாங்க்வேஜ் அரபிக் இல்லையா. அதுதான் அரபிக் சொல்லித் தராங்க.”

“எனக்கு ஒரு ஐடியா. இந்த புக்ஸை எல்லாம் ஸ்கேன் பண்ணி, அப்படியே இங்கிலிஸ்ல மாத்தற மாதிரி ஒரு ஸ்கேனர் இருந்தா நல்லா இருக்கும்ல?”

 

“கொஞ்சம் பொறு. இங்கே ஒரு இடத்தில தமிழ் டியூசன் சொல்லித் தராங்களாம். விசாரிச்சுப் பார்த்துட்டு சேரலாம்”

 

“சரி”

 

அபுதாபியில் இந்தியக் கலாச்சார மையம் என்று ஓர் அமைப்பில் தமிழ் வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதும் அலுவலக நண்பர்களின் பிள்ளைகள் அந்த வகுப்புகளுக்குப் போய் வருவதும் கொஞ்ச நாட்களுக்கு முன்புதான் எனக்குத் தெரிய வந்தது. விசாரித்ததில், குறைந்தபட்சம் மூன்றாவது வகுப்பாவது படித்திருக்க வேண்டும். அப்போதுதான் நாங்கள் சொல்லிக் கொடுப்பதைப் புரிந்து கொள்ள முடியும் என்று சொன்னார்கள்.

 

பெரியவனை மட்டும் சேர்க்கலாம் என்று பதிவு செய்தேன். பள்ளித் தேர்வுகள் முடிந்து, விடுமுறையில் வகுப்புகள் தொடங்கும். தேர்வுக்கு இன்னும் இரண்டு வாரங்களே இருந்தன. அரபி, இந்திக்கு என்று மாறி மாறி டியுசன் வகுப்புகளுக்கு போய் வந்து கொண்டிருந்தான் பெரியவன். டியூஷன் வாத்தியார் வீடுகளுக்கு கொண்டு போய் விடுவதும் வகுப்பு முடிந்ததும் திரும்ப அழைத்துக் கொண்டு வருவதும் அப்பாக்களின் வேலை.

 

அப்படி ஒரு நாள் இந்தி டியூஷன் போய்விட்டு வந்த ஒரு நாள் பெரியவன் சொன்னான்:

 

“டாடி, இந்தி டீச்சர் வீட்ல ஒரு பெரிய டாக் இருக்கு டாடி. உள்ளே போகும்போதே வள்ளுன்னு கிட்ட வரும். ஆனா இந்தி டீச்சர் சுப் கரோனு சொன்னவுடனே கம்முனு போய் ஒரு மூலையில உட்கார்ந்துக்கும் டாடி.”

 

“ஜாலியாய் இருக்கும்னு சொல்லு”

 

“ஜாலியா? முதல்ல பயமா இருந்துச்சு. இப்ப ஓகே.”

 

“சரி”

 

“டாடி. ஒரு டவுட்டு”

 

“சொல்றா”

 

“டாகுக்கு இந்தி தெரியுமா?” டீச்சர் சுப் கரோனு சொன்னவுடனே கம்முனு போயிடுது?”

 

***

License

Icon for the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License

தமிழ் - மின்னதழ் 2 Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book