அன்று
நவினன்
“உள்ள ஏறி வாங்க, இல்லாட்டி இறங்கிக்கோங்க”
“சார், இந்த பேக கொஞ்சம் வச்சிக்க முடியுமா?”
”இடிக்காம நில்லுப்பா”
“இன்னும் பத்து நிமிசத்துல அங்க இருப்பேன்”
“பல்லாவரம் போகுமா?”
மேற்கண்ட உரையாடல்களைக் கொண்டு இது ஒரு பேருந்துப் பயணம் பற்றிய கதை என ஊகித்திருப்பீர்கள். நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன். அவன் (இல்லை இல்லை, இப்போதைக்கு அவர்) வந்து என் அருகே உட்காரும் வரை. இதுவரை படித்ததிலிருந்து உங்களுக்குத் தெரிந்திருக்கும் நான் அவசியமின்றி எதையும் சொல்ல மாட்டேன் என. அதனால் அவர் எப்படி இருந்தார் என்றெல்லாம் சொல்வேன் என எதிர்பார்க்காதீர்கள்.
சிவராஜ் சித்த வைத்திய பரம்பரையில் எப்படி வரிசையாக ஆண் வாரிசுகளாகவே பிறக்கிறார்கள் எனத் தீவிரமாய் யோசித்துக் கொண்டிருக்கும் போது தான் அவர் குரல் கேட்டது, “எங்கருந்து தம்பி வர்றீங்க”
“கந்தன் சாவடி சார்”
சரி நாமும் கேட்டு வைப்போம், “நீங்க எங்கிருந்து சார் வர்றீங்க?”
“ஜெயில்ல இருந்து தம்பி”
இங்கே நான் அதிர்ச்சி அடைந்திருப்பேன் என நீங்கள் நினைத்திருக்கக்கூடும். இல்லை, எனக்கு இதெல்லாம் பழகி விட்டது, சத்தியமாக இந்த ஏரியாவில் ஜெயில் இல்லை, கண்டிப்பாக இவரும் என்னைப் போல் ஓர் ஐடி நிறுவனத்திலிருந்து தான் வந்திருக்க வேண்டும், அதைத் தான் கிண்டலாகச் சொல்கிறார் போலிருக்கிறது. இன்னும் இதெல்லாம் ஜோக் என நம்பிக் கொண்டிருக்கிறார்கள் என நினைத்துக் கொண்டேன்.
“ஏன் சார் ஜெயிலுக்கு போனிங்க?”
“ஒருத்தன கொல செஞ்சிட்டேன் அதான்”
கொலைகாரனா? ஒருவேளை நிஜமாகத் தான் ஜெயிலுக்கு போய் வந்ததாகச் சொல்கிறாரா? இங்கே இருந்து இனி ‘அவர்’ இல்லை; ‘அவன்’ தான்.
”எதுக்கு?”
”கொடுத்த கடன திருப்பி கேட்டு ஒரே தொல்லை, அதான்”.
“இப்போ யார சார் பாக்க போறீங்க?”
“தெரியலப்பா”
”ஏன் சார் வீட்லலாம் இல்லையா?”
”நான் ஜெயிலுக்கு போம் போது பொண்டாட்டியும், பையனும் இருந்தாங்கப்பா”
இருந்தார்களா! அவர்களையும் இவரே எதாவது செய்து விட்டாரா என யோசிப்பதற்குள் நடத்துனர் டிக்கெட் கேட்க வந்து விட்டார். பத்து ரூபாயை நீட்டி, பெருங்களத்தூர் ஓண்ணு”
“மூணு ரூவா தாப்பா”
“சில்லறை இல்லண்ணா”
”தம்பி டிக்கெட் பதிமூணு ரூபா”.
அவனே பேச ஆரம்பித்தான்.
“ஒரு தரம் என் பையன் பஸ்ல வந்திட்ருந்தான், அவன் பக்கத்துல உட்கார்ந்திருந்தவர் முகம் வேர்த்து போயிருக்க இவன் ஏன் சார்னு கேட்ருக்கான், உன்ன பாத்தா நல்லவனா தெரியுது நான் ஒரு திருடன் தம்பி, கொஞ்சம் காசு திருடி பையில வச்சிருக்கேன், போலீஸ் துரத்துதுன்னு சொல்லிருக்கார், கொஞ்ச நேரம் கழிச்சி தம்பி இந்த பணத்த கொஞ்ச நாள் வச்சிருக்க முடியுமா, நான் வந்து வாங்கிக்கிறேன், கால்வாசி உனக்கு தர்றேன்னிருக்கார், இவனும் சரின்னு வாங்கிக்கிட்டான், மறுநாளே வீட்ல ரத்தம் கக்கி செத்துட்டாம்ப்பா”
தாங்க முடியாமல், பேருந்தின் சன்னல் வழி எட்டி குதித்து விடலாம் எனப் பார்த்தேன். அப்போது பின்னால் ஒருவன் தன் மனைவியுடன் வண்டியில் வருவதைப் பார்த்து விட்டு முடிவை மாற்றிக் கொண்டேன் (இந்த ஆள் சொல்லிக் கொண்டிருக்கும் கதையை நம்பும் நீங்கள் அந்த வண்டியில் அவனுடன் வருவது அவன் மனைவி தான் என்பதையும் நம்புவீர்கள் என எனக்கு தெரியும்).
அப்போது தான் அந்த சுவரொட்டியையும் பார்த்தேன். ரேஷ்மாவின் “ரகசியம்” நேஷனல் திரையரங்கில் போட்டிருக்கிறார்கள், போன முறை ரேஷ்மா நடித்த “இளமைக்கன்னி” போட்ருந்தார்கள், தொடர்ந்து ரேஷ்மா நடித்த படங்காகவே போடுவதன் ரகசியத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.
அந்தம்மாவுக்கு என்ன ஆயிற்று என நான் கேட்கவில்லை எனிலும், இது அவன் மனைவி பற்றிய விஷயம் என்பதால் திரும்பவும் அவனே தான் சொல்ல ஆரம்பித்தான்.
”ஒரு நாள் என் பொண்டாட்டி பஸ்ல வந்திட்ருந்தா தம்பி, அவ பக்கத்துல ஒருத்தன் வந்து உட்கார்ந்தான், மாமண்டூர் ஓட்டல்ல பஸ் நிக்கும்போது அவன் ஒரு பைய என் பொண்டாட்டிக்கிட்ட கொடுத்து பாத்துக்கோங்க டீ சாப்பிட்டு வந்துடுறேன்னு சொன்னான், போனவன் திரும்ப வரவே இல்ல. என் பொண்டாட்டி பைய எடுத்துக்கிட்டு வந்துட்டா. அன்னைக்கு சாயந்தரமே அவ ரத்தம் கக்கி செத்துட்டாப்பா. அவன் யாருன்னு தெரியல ஆனா அந்த பஸ்ல கூட வந்தவனுங்க ரெண்டு பேருக்கும் கழுத்துல சின்னதா ஒரு தழும்பு இருந்தது அத வச்சித்தான் என் பையன், பொண்டாட்டி கூட உக்காந்து வந்தது ஒரே ஆள் தான்னு கண்டுபிடிச்சேன், இதுல ஆச்சர்யம் என்னன்னா நான் ஒருத்தன கொன்னேன்ல அவனுக்கும் அதே மாதிரி கழுத்துல சின்னதா ஒரு தழும்பு இருந்ததுப்பா”
இன்னும் கொஞ்சம் நேரம், இவன் பேசினால் நாம் தான் ரத்தம் கக்கி சாக வேண்டி இருக்கும் என நினைக்கும் போதே ஒரு சந்தேகம் எழுந்தது.
“ஆமா, நீங்க தான் ஜெயில்ல இருந்திங்களே, இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்?”
இதைக் கேட்க வாயெடுக்கையில் அவன் கேட்டான்.
“தம்பி, கீழ நூறு ரூவா நோட்டு விழுந்து கிடக்குதே உங்களுதா பாருங்க”,
இந்தியப் பொருளாதாரத்தைக் காப்பதற்காக ஐம்பது பைசா கீழே கிடந்தாலே அதை எடுத்துப் புழக்கத்தில் விடும் நான் அதைக் குனிந்து எடுத்து விட்டு நிமிர்ந்தேன் அவன் பேருந்தை விட்டு இறங்கிப் போயிருந்தான்.
இப்போது யோசித்தால் அவனுக்கு கழுத்தில் சின்னதாக ஒரு தழும்பு இருந்தது போல் தான் தோன்றுகிறது!
***