அப்பா

செந்தில்சிபி

 

அப்பாவோட சொந்த ஊர் பற்றி முதல்ல சொல்லிடறேன். பெருந்துறை ஆர்எஸ் அருகே புத்தூர்க்கும் புங்கம்பாடிக்கும் நடுவே இருக்கும் சாலப்பாளையம். சின்ன ஊர். மொத்தமே 200 குடும்பங்கள் தான் இருக்கும். ஒரே ஒரு மளிகைக்கடை. ஈரோடு அல்லது சென்னிமலை போக காலையில் ஒரு பஸ்; மாலையில் ஒரு பஸ்.

 

சாலப்பாளையத்தில் இருந்து 1 கிமீ தூரத்தில் புங்கம்பாடி வாய்க்கால். அந்த மாதிரி அகலமான வாய்க்காலை நான் பார்த்ததே இல்லை. பொதுவா வாய்க்கால் அகலம் மினிமம் 6 அடி மேக்சிமம் 18 அடி தான் இருக்கும். ஆனா இந்த வாய்க்கால் அகலம் கிட்டத்தட்ட 30 அடிக்கும் மேல் இருக்கும். அரச்சலூர், வெள்ளோடு, சென்னிமலை வாய்க்கால்ல ஓடி வந்து கத்தி அடிச்சா ஜம்ப் ஆகி தண்ணியை டச் பண்ணும் போது பாதி வாய்க்கால் க்ராஸ் ஆகிடும். கத்தி அடிச்ச வேகத்தில் மீதி தூரமும் கிராஸ் ஆகி கரையை உடனே தொட்டுடலாம்.

 

ஆனா சாலப்பாளையம் – புங்கம்பாடி வாய்க்கால்ல கத்தி அடிச்சா அதுக்குப்பின் 2 நிமிசம் நீந்தின பின் தான் அக்கரை சேர முடியும். வாரா வாரம் சன்டே வாய்க்கால்க்கு கூட்டிட்டுப்போவார் அப்பா. ஆரம்பத்தில் சுரப்பரடை கட்டி நீச்சல் பழக்கினார். சுரைக்காயக் காய வெச்சு ரெடி பண்ணின அக்கால நீச்சல் மிதவை சாதனம் அது. அதை இடுப்பில் கட்டிக்கிட்டா தண்ணில குதிச்சதும் ஆளை மேலே இழுத்துட்டு வந்துடும். கொஞ்ச நாள் கழிச்சு இடுப்பில் கயிறு கட்டி அவர் ஒரு முனையில் பிடிச்சு மறுமுனையை என் இடுப்பில் கட்டி நீச்சல் பழக்கினார். 3 வாரத்தில் நீச்சல் பழகியாச்சு. இந்த‌ மாடர்ன் உலகில் ஸ்விம்மிங் பூலில் 6 மாச கோர்ஸ் நடத்தி ஃபீஸ் புடுங்கறாங்க.

 

அப்பாவிடம் நான் கற்ற முதல் நல்ல குணம் அவரவர் துணியை அவரவரே துவைக்கனும் என்பதே. திங்கள் டூ சனி நாம் போட்ட டிரசை சன்டே அன்னைக்கு வாய்க்கால் எடுத்துட்டு வந்து கல்லில் அடிச்சுத்துவைச்சு அலசிக் காய வைக்கனும். வீட்டில் ஒரு பக்கெட்டில் அலசுவதற்கும் வாய்க்காலில் அலசுவதற்கும் பயங்கர வித்தியாசம்.

 

வண்ணான்கள் துவைக்கும்போது ஒரு சவுண்ட் வுடுவாங்க உஸ்உஸ் என. டொம்டொம்னு குதிச்சு நீச்சல் அடிக்கும் போது பொண்ணுங்க சத்தம் போடுவாங்க. அவங்ககிட்டே திட்டு வாங்குவதற்காகவே பசங்க வேணும்னே அவங்க மேல தண்ணி படுவது போல் குதிப்பாங்க. வேட்டியை விரிச்சு மீன் பிடிக்க ஒரு கூட்டம் இருக்கும். பாலத்தின் மேல் நின்று பல்டி அடிப்பது இன்னபிற சாகச வேலைகளை எல்லாம் பசங்க மூலம் கத்துக்கிட்டாச்சு.

 

அப்பாவிடம் அடுத்துப் பழகிய பழக்கம் கட் அடிச்சிட்டு சினிமா பார்த்தல். அப்பாவுக்குத் தொழில் நெசவு, கைத்தறி. துண்டு, ஈரல் துண்டு எனப்படும் ஈரிழைத் துண்டு, பெட்ஷீட் நெய்வார். வாரம் ஒரு முறை அவர் வீட்டுக்குத் தெரியாம சைக்கிள்லயே ஈரோடு போய் சினிமா பார்ப்பாராம். அதுவும் செகண்ட் ஷோ. நைட் 9 மணிக்கு கட்டிலில் 2 தலையணை போட்டு பெட்ஷீட் மூடி ஆள் படுத்திருப்பது போல் செட்டப் பண்ணிட்டு சைக்கிள் எடுத்து மாங்கு மாங்குன்னு 20 கிமீ சைக்கிள்ல மிதிச்சு ஈரோடு போய் படம் பார்த்திருக்கார்.

 

அப்பா தீவிரமான எம்ஜிஆர் ரசிகர். சினிமா படம் ரிலீஸ் ஆகும் முன் அந்தக் காலத்தில் எல்லாம் பாட்டு புக் விப்பாங்க. 10 பைசா அல்லது 15 பைசா. அதில் கதைச்சுருக்கம்னு போட்டு ஒரு பக்கம் கதை பத்தி 4 பாரா இருக்கும். பின் ஒவ்வொரு பாட்டும் பிரிண்ட் ஆகி இருக்கும். இந்தப் பாட்டு புக் கலெக்சன்ஸ் எல்லாம் பைண்டிங் பண்ணி பொக்கிஷமாப் பாதுகாத்து வெச்சிருக்கார். நான் அதை இன்னும் அவர் நினைவா வெச்சிருக்கேன்.

 

அப்பா பார்க்க சினிமா ஹீரோ போல் இருப்பார் சினிமாவில் நடிக்க பெருமுயற்சி எல்லாம் செஞ்சு சென்னை போய் மேக்கப் டெஸ்ட் வரை போய் பின் ஏதோ சில காரணங்களால் திரும்பி வந்துட்டாராம்.

 

அப்பாவிடம் மூன்றாவதாக நான் பழகிய பழக்கம் அவரது எளிமை.

ரொம்பச் சாதாரணமாக இருப்பார். செயின், பிரேஸ்லெட் எதுவும் போட மாட்டார். அதற்கான காரணம் ஏதாவது இருந்திருக்கும். ஆனால் அது பற்றி நான் ஏதும் அவரிடம கேட்டதில்லை. கிராமங்களில் பலரும் பூப்போட்ட ராமராஜன் சட்டை அணிவார்கள். ஜிகுஜிகு பளபளக்கும் சட்டை அணிவார்கள். ஆனால் அப்பா ரொம்ப நீட்டாக வெள்ளை அல்லது கலர் எதுவாகினும் கதர் சட்டை தான் அணிவார். செருப்பு சாதா ரப்பர் செருப்பு தான். 10 ரூபாய்க்கு மேல் போகாது. செருப்புக் கடையில் நான் ஒரு தடவை 200 ரூபாய்க்கு காஸ்ட்லியாக வாங்கிட்டு வந்துட்டேன். அப்போ அவர் அதை பிரமிப்பாகப் பார்த்தது இன்னும் என் கண்ணுக்குள் இருக்கு.

 

நம் அம்மா – அப்பா அனுபவிக்காத அறிவியல் சாதனங்கள், வசதிகள் இவற்றை எல்லாம் அனுபவிக்கும் போது நமக்குள் ஒரு குற்ற உணர்ச்சி வரும்.

 

ஸ்கூலில் என் படிப்பு எப்படி என்பதை எல்லாம் அம்மா தான் கண்டிப்பாக பார்த்துக்கிட்டாங்க. அப்பா அது பத்தி பெருசா அலட்டிக்க மாட்டார். கிராமத்தில் கள்ளு குடிக்காத ஆட்களை விரல் விட்டு எண்ணிடலாம். அதில் அப்பா முக்கியமானவர். எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதவர்.

 

கால் காசு உத்தியோகமா இருந்தாலும் கவர்மெண்ட் காசா இருக்கனும்டா என அடிக்கடி சொல்வார். அவர் உள்மனதில் அரசாங்க உத்யோகத்தின் வசதிகள் ஏக்கமாகப் பதிந்திருக்கக்கூடும்.

 

அப்பா ஒரு கருப்பட்டிப்பிரியர். பனை வெல்லத்தை, பனங்கற்கண்டை, கருப்பட்டியைக் காய்ச்சும் அடுப்புகள் பார்க்க பிரமிப்பா இருக்கும். அங்கே எல்லாம் கூட்டிச்செல்வார். நுங்கு ஏராளமா கிடைக்கும். சீவின நொங்கு, எடுத்த நொங்கு என எல்லாமே சல்லிசாக்கிடைக்கும். பனங்கிழங்கு வேக வெச்சு சாப்பிடுவோம்.

 

அப்பாவிடம் நான் கற்ற அடுத்த நல்ல பழக்கம் விட்டுக்கொடுத்தல்.

 

அப்பாவுடன் கூடப்பிறந்தவங்க அண்ணன் 1 தம்பி 1. இவர் நடுநாயகன். தாத்தா பாட்டி இறந்த பின் சொத்து பிரிக்கும் படலம் நடந்தது. மூவருக்கும் வீடு, நிலம் இவற்றைப் பகிரும் போது அண்ணன் தம்பிக்குள் பிரச்சனை 2 செண்ட் நிலத்திற்காக. பாகப்பிரிவினையை நிறுத்துங்க. சாலப்பாளையம் வீடு நிலம் எல்லாம் இரண்டாகப் பிரித்து நீங்க 2 பேருமே வெச்சுக்குங்க. நான் சென்னிமலை போறேன்னு கிளம்பி சென்னிமலை வந்துட்டார்.

 

அவர் அடிக்கடி சொல்லும் வரி – நாம சம்பாதிப்பது தான் நமக்குச் சொந்தம். பூர்வீகச் சொத்து அடுத்தவங்க சொத்து, இதுக்கெல்லாம் ஆசைப்படக்கூடாது. இது என் மனசில் நல்லாவே பதிந்து விட்டது. அன்றிலிருந்து இன்று வரை நான் சொத்தில் அக்கறை கொள்ளவில்லை.

 

அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மிக நல்ல புரிதலிருந்தது. ஆனால் பூர்வீகச் சொத்தை விட்டுக் கொடுத்து வந்தது மட்டும் அம்மாவுக்குப் பிடிக்கவில்லை. ஆனா அப்பா அடிக்கடி அம்மாவை சமாதானப்படுத்தும் போதும் சொல்லும் வரி – அவங்களுக்கு சொத்து கிடைச்சுது. ஆனா நம்ம பையன் பொண்ணு நல்லா படிக்கறாங்க, சரஸ்வதியும் லட்சுமியும் ஒரே வீட்டில் இருக்க மாட்டாங்க என்பார்.

 

நான் டிகிரி முடித்து தனியாக கார்மெண்ட்ஸ் வைக்கலாம் என முடிவு எடுத்தபோது பேங்க்கில் பிரைம் மினிஸ்டர் ரோஜ்கார் யோஜ்னாவில் லோன் வாங்க முயற்சி செய்தேன். அப்போ செக்யூரிட்டிக்காக வீட்டுப்பத்திரம் வேணும்னு கேட்டாங்க. அம்மாவுக்குத் தெரியாம பத்திரம் எடுத்துக் கொடுத்தார். அதை வெச்சுத்தான் லோன் வாங்கினேன்.

 

அம்மாவுக்குத் தெரியாம ஏன் இதை மறைச்சார்ன்னா முதல் காரணம் நான் பொறுப்பில்லாத பையன், சிறுபிள்ளை வெள்ளாமை வீடு வந்து சேராது என்பதாலும் ஆல்ரெடி பூர்வீகச் சொத்தும் போச்சு, இதுவும் போய்ட்டா என்ன ஆவது என்று நினைச்சிடுவாங்க என்பதால் தான்.

 

ஆனால் இந்த மேட்டர் 3 வருடத்திலேயே அம்மாவுக்குத் தெரிஞ்சிடுச்சு. லோன் ட்யூ தொகையை நான் சரி வரச் செலுத்தாமல் வட்டியோடு ஒரு லட்சம் ரூபா கடன் 1,46,000 ஆகி இருந்தது. பேங்க் ஆஃபீசர்ஸ் ஜீப்பில் வந்து வீட்டு வாசல் முன் நிறுத்தி உங்க பையன் ட்யூ கட்டலைன்னு சொல்லும்போது அக்கம் பக்கம் ஜனங்க வேடிக்கை பார்த்ததில் அம்மா அப்பா கூனிக் குறுகிட்டாங்க. அம்மாவுக்கு 2 வகையில் கோபம். முதல் கோபம் பையனால் கிடைத்த அவமானம், 2வது கோபம் தன் புருசனே தன் கிட்ட சொல்லாம மறைச்சிட்டாரே என்பது.

 

பல வருடங்கள் இந்த ஒரே மேட்டரில் அம்மா அப்பா இடையே பிரச்சனை வந்தது.

 

குமுதத்தில் காவேரி நீர்ப் பிரச்சனையைத் தீர்க்க என்ன வழி? என ஒரு கட்டுரைப் போட்டி வெச்சிருந்தாங்க. அதில் எனக்கு ஒரு லட்சம் பரிசு கிடைச்சுது. அப்பாவுக்கு சொல்லொணா மகிழ்ச்சி, ஊரெல்லாம் சொல்லிட்டு இருந்தார். டேக்ஸ் எல்லாம் போக 65,000 ரூபாய் தான் கிடைச்சுது. இருந்தாலும் அந்த சமயத்தில் லோனை அடைக்க அது பேருதவியா இருந்தது. லோனை அடைச்சு வீட்டுப் பத்திரத்தை மீட்டு அப்பாவிடம் திரும்பக் கொடுத்த கணம் என்னால் மறக்க முடியாத தருணம். யாரிடமும் எதற்காகவும் நாம் கடன் வாங்கக்கூடாது, கடன்பட்டு நிற்கக்கூடாது என்ற குணம் என் ரத்தத்தில் ஊறி விட்டது.

 

கார்மெண்ட்ஸ் தொழிலில் 5 வருடம் சம்பாதிச்சாலும் திருப்பூரில் ஒரு கம்பெனி, கரூரில் ஒரு கம்பெனி ஷிப்மெண்ட் டிலேவால் கேன்சல் ஆன எக்ஸ்போர்ட்ஸ் ஐட்டத்தால் வரவேண்டிய 3 லட்சம் ரூபா ஸ்வாஹா ஆனது. பிஎஸென்எல்லில் ஹிந்தி ட்ரான்ஸ்லேட்டர் ஜாப் கிடைச்சதும் மகனுக்கு கவர்மெண்ட் ஜாப் கிடைச்சதுன்னு மிக மகிழ்ச்சியா இருந்தார். அதுவும் 2 வருசம் தான்.

 

ஊரில் ஒரு லவ் மேட்டரில் விழுந்திருந்தேன். பெரிய இடம். திமுக செயலாளர் ஒருவர் அப்பாவைக் கூப்பிட்டு மிரட்டி இருக்கிறார். அப்பா பையன் உயிர் தப்பினா போதும் என்ற எண்ணத்தில் இருந்தார். ரவுடி கும்பல் சுமார் 500 பேரைத் திரட்டி வீட்டுக்கு வந்து மிரட்டினர். அதில் அப்பாவுக்கு மிகவும் அவமானமாகப் போய் விட்டது.

 

அப்பாவுக்காகக் காதலை இழக்கச் சம்மதித்தேன். அம்மா – அப்பா பார்த்த இடத்தில் திருமணம் நிகழ்ந்தது.

 

இப்போ யோசிச்சுப் பார்த்தா அப்பாவுக்காக நாம எதுவுமே செய்யலையேன்னு அடிக்கடி தோணிட்டே இருக்கும். யமஹா க்ரக்ஸ் பைக் வாங்கினேன். அதில் அப்பாவை உட்கார வைத்து உலாப்போனேன். சின்னப் பையனா இருக்கும் போது அப்பா என்னை சைக்கிளில் உட்கார வெச்சு அழகு பார்ப்பார். எனக்குத் தெரிஞ்சு அப்பாவுக்காக நான் செய்த அதிகபட்ச நல்லது இதுதான்.

 

சென்னிமலையில் சொந்த வீடா இருந்தாலும் ஓட்டு வீடு என்பதாலும் மிசஸ் ஈரோட்டில் ஸ்கூல் டீச்சர் என்பதாலும் நான் ஈரோட்டில் குடி போகும் சூழ்நிலை. மிகவும் தர்மசங்கடமான சூழல். வீட்டில் இருந்த டேப் ரிக்கார்டர் கேசட்ஸ், துணிகள் எல்லாம் எடுத்து வாடகைக் காரில் வைத்து நான் கிளம்பும்போது அப்பா அழாத குறை. அழுகையை மிகவும் அடக்கி இருந்திருப்பார்.

 

7 வருடங்களுக்கு முன் நிகழ்ந்த சம்பவம். நான் ஈரோட்டில் இருக்கேன். அப்பா சென்னிமலையில் இருக்கார். மாலை 6 மணிக்கு உடல்நிலை சரி இல்லை எனச் சொல்லி படுத்திருக்கார். நள்ளிரவு 12 மணி சுமார் இருக்கும். உடம்பெல்லாம் வேர்த்துக் கொட்டுது. டாக்டர்ட்ட கூட்டிட்டுப்போன்னு அம்மாட்ட சொல்லி இருக்கார். அந்த நேரத்தில் அடிச்சுப் பிடிச்சு ஆட்டோ பிடிச்சு அம்மா ஹாஸ்பிடல் போனதும் இது ஹார்ட் அட்டாக் உடனே ஈரோடு கூட்டிட்டுப் போங்கனு சொல்லி இருக்காங்க.

 

காரில் ஈரோடு அழைத்து வரும் போது வெள்ளோடு அருகேயே உயிர் போய் விட்டது. அது அம்மாவுக்குத் தெரியலை. மயக்கம்னு நினைச்சிட்டாங்க. ஈரோடு வந்து ஹாஸ்பிடலில் சேர்க்கும் போது டாக்டர் செக் பண்ணி உயிர் போய் அரை மணி நேரம் ஆகிடுச்சு என்றாராம்.

 

கடைசி நேரத்தில் அப்பாவிடம் எதுவும் மனம் விட்டுப் பேச முடியலை. உயிரோடு இருக்கும் போது அந்த அருமை நமக்குத் தெரியாது. உடல்நிலை சரி இல்லாமல் படுத்திருந்து உயிர் விட்டிருந்தால் நம் மனம் அந்த மரணத்தை ஏற்கத் தயார் ஆகி இருக்கும். ஆனா திடீர் மரணம் மனசு ரொம்பவே வலிக்கும்.

 

அப்பாவுக்காக நான் எதுவுமே செய்யவில்லை. கொள்ளி மட்டும் தான் வெச்சேன்.

 

***

License

Icon for the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License

தமிழ் - மின்னதழ் 2 Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book