ஆண்டாளின் தோழிகள்
சங்கர் கிருஷ்ணன்
நாலாயிர திவ்ய ப்ரபந்தம் தமிழுக்கு வைணவர்கள் அளித்த மிகப்பெரும் கொடை. கிபி 6ம் நூற்றாண்டிலிருந்து 8ம் நூற்றாண்டுவரை பக்தி இலக்கியங்களைப் படைப்பதில் சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் இருந்த சண்டையால் பெரும் பலனடைந்தவர்கள் நால்வர். சிவன், விட்ணு, தமிழன்னை மற்றும் நாம். சுமார் 1200 ஆண்டுகளுக்குப் பின், நான் நம் எல்லோரின் சார்பாக அச்சண்டைக்கு நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கிபி 8ம் நூற்றாண்டு வரையில், ஆழ்வார்களின் பாடல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறிக்கிடந்ததை, நாதமுனிகள் எனும் வைணவப்பெரியார் தேடியெடுத்துத் தொகுத்தார். தொகுக்கும் போது பாசுரங்களை இசைப்பா, இயற்பா எனும் வகையில் தனியாகப் பிரித்துத் தொகுத்திருக்கிறார். அட்டவணை இங்கே:
பாடியோர் |
நூற்பெயர் |
பாசுரங்களின் |
|
முதல் ஆயிரம் (10 பிரபந்தங்கள்) |
|||
1) |
பெரியாழ்வார் |
திருப்பல்லாண்டு |
12 |
பெரியாழ்வார் திருமொழி |
461 |
||
2) |
ஆண்டாள் |
திருப்பாவை |
30 |
நாச்சியார் திருமொழி |
143 |
||
3) |
குலசேகராழ்வார் |
பெருமாள் திருமொழி |
105 |
4) |
திருமழிசையாழ்வார் |
திருச்சந்த விருத்தம் |
120 |
5) |
தொண்டரடிப் |
திருமாலை |
45 |
திருப்பள்ளியெழுச்சி |
10 |
||
6) |
திருப்பாணாழ்வார் |
அமலனாதிபிரான் |
10 |
7) |
மதுரகவியாழ்வார் |
கண்ணிநுண் சிறுதாம்பு |
11 |
ஆக, பிரபந்தங்கள் 10க்கு: |
947 |
||
இரண்டாம் ஆயிரம் – பெரியதிருமொழி (3 பிரபந்தங்கள்) |
|||
1) |
திருமங்கையாழ்வார் |
பெரியதிருமொழி |
1084 |
திருக்குறுந்தாண்டகம் |
20 |
||
திருநெடுந்தாண்டகம் |
30 |
||
ஆக, பிரபந்தங்கள் 3க்கு: |
1134 |
||
மூன்றாம் ஆயிரம் (10 பிரபந்தங்கள்) |
|||
1) |
பொய்கையாழ்வார் |
முதல்திருவந்தாதி |
100 |
2) |
பூதத்தாழ்வார் |
இரண்டாம் திருவந்தாதி |
100 |
3) |
பேயாழ்வார் |
மூன்றாம் திருவந்தாதி |
100 |
4) |
திருமழிசையாழ்வார் |
நான்முகன் திருவந்தாதி |
96 |
5) |
நம்மாழ்வார் |
திருவிருத்தம் |
100 |
திருவாசிரியம் |
7 |
||
பெரிய திருவந்தாதி |
87 |
||
6) |
திருமங்கையாழ்வார் |
திருவெழு கூற்றிருக்கை |
1 |
சிறிய திருமடல் |
1 |
||
பெரிய திருமடல் |
1 |
||
ஆக, பிரபந்தங்கள் 10க்கு: |
593 |
||
நான்காம் ஆயிரம் (ஒரே பிரபந்தம்) |
|||
1) |
நம்மாழ்வார் |
திருவாய்மொழி |
1102 |
ஆக, பிரபந்தம் 1க்கு: |
1102 |
||
24 பிரபந்தங்களுக்கும் மொத்தப் பாசுரங்கள்: |
3776 |
மொத்தம் 3776 தான் வருகிறது? பல்வேறு வைணவப்பெரியோர்கள் ஆழ்வார்களின் பாடல்களுக்குத் எழுதிய தனியன்கள் (அறிமுகப்பாடல்கள்) மற்றும் திருவரங்கத்தமுதனார் இயற்றிய இராமானுச நூற்றந்தாதி (108 பாசுரங்கள்) அப்போது இணைக்கப்பட்டிருக்கவில்லை. மேலும் மூவாயிரத்து எழுநூற்றி எழுபத்து ஆறு ப்ரபந்தம் என நீட்டி முழக்கிச் சொல்வது கடினமென்பதால், முழுமையாக்கி “நாலாயிரம்” எனக் கொண்டிருக்கலாம்.
நாதமுனிகள், ஆழ்வார்கள் வாழ்ந்த காலத்தின் முறைப்படி பாக்களைத் தொகுக்கவில்லை. அப்படியிருந்திருந்தால் பேயாழ்வார், பொய்கையாழ்வார் மற்றும் பூதத்தாழ்வாரின் பாடல்களே முதலிடம் பெற்றிருக்கும். பெரியாழ்வாரின் பாடல்களை முதலாயிரத்தின் முதலாகவும், அவர் சீராட்டி, தமிழ் புகட்டி வளர்த்த ஆண்டாளின் பாடல்களை இரண்டாவதாகவும் வைத்தார். அதற்குப் பொருளிருக்கிறது. ப்ரபந்தத்தில் எளிமையும், அழகுணர்ச்சியும், படிப்பவர் மனதைக் கொள்ளையடித்துக் கட்டிப்போடும் பாடல்களையும் படைத்தவர்கள் அப்புதல்வியும் தகப்பனுமே.
இரு சிறப்பான தமிழிலக்கிய வகைகளை ஆழ்வார்கள் நமக்கு ப்ரபந்தத்தின் மூலம் அறிமுகம் செய்திருக்கிறார்கள். ஒன்று பாவையிலக்கியம் (ஆண்டாள்), பிள்ளைத்தமிழ் இலக்கியம் (பெரியாழ்வார்). பன்னிரு ஆழ்வார்களில் ஒரேயொரு பெண்ணான ஆண்டாளின் பாசுரங்கள் பற்றியது இக்கட்டுரை (அப்போது 8.33% இடஒதுக்கீடு போல!)
*
பாவையிலக்கியம் என்றொன்று ஆண்டாளுக்குப் பிறகே தொடங்கியிருக்கவேண்டும். பாவை நோன்பு என்பது மார்கழி மாதத்தில் திருமணமாகாத கன்னிப்பெண்கள், மன்மதனை நோக்கித் தவமியற்றி, தங்கள் மனதுக்குப் பிடித்த ஆண்களை தம்முடன் இணைத்து வைத்திட வேண்டும் என வேண்டி நோற்பதேயாம்.
2ஓவியம் – நன்றி : தினமலர்.காம்
.
ஆண்டாள் தன் தோழியருடன் கூடி, நோற்று அடைய விரும்புவது None other than (சாட்சாத்) திருவரங்கத்தம்மானை. பெரிய இடம். பெரிய கை. பெரிய செங்கண். பெரிய பெருமாள். பெரியாழ்வார் தன் மகளைக் கொடுக்க என்ன பாடுபட்டிருப்பாரோ? அவர் நம்பெருமானுக்குச் சீராயளித்தது பெரிய தொகை. 646 கழஞ்சு பொன்னளித்திருக்கிறார், தம் மகளோடு சேர்த்து. ஆதாரம் பட்டியலில். மொத்தமுள்ள முப்பது பாடல்களைக் கீழ்கண்டவாறு பிரிக்கலாம்:
1 – 5 |
பாவை நோன்பு நோற்கும் முறை, அதன் பலன்கள் |
6 – 15 |
கோதை தன் தோழியரை ஒவ்வொருவரின் இல்லம் நின்று விழித்தெழ விளிப்பது |
16 – 20 |
கிருஷ்ணனின் தாய், தந்தை, சகோதரன், அவன் மனைவி நப்பின்னை துயிலெழப் பாடுவது |
21 – 23 |
கண்ணனைத் துயிலெழுப்புவது |
24 – 30 |
கண்ணனின் பெருமைகளையும், நோன்பின் நன்மைகளையும் பாடுவது |
நாம் பார்க்கப்போவது 6 – 15 பாசுரங்களில் வரும் ஆண்டாளின் தோழிகளை. ஒரு பணியிடத்தில் 67 ஆண்களும் 33 பெண்களும் அடங்கிய குழு ஒன்றிருப்பதாய் வைத்திகொள்வோமானால், அதில் 5 லிருந்து 6 ஆண் நண்பர் குழுக்களும், 99 லிருந்து ∞ (INFINITY) பெண்கள் குழுக்களும் உண்டு என்பது பணிபுரியும் நண்பர்கள் அறிவீர்கள். ஆண்டாளின் காலத்திலும் இதுபோன்றே என்று திருப்பாவையைப் படிக்கும் போது எனக்குத் தோன்றுவதுண்டு.
பாசுரம் – 06
புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்தங் கரிஎன்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.
முதல் தோழி. விடியற்காலை தன் முதல் தோழியை சற்று பொறுமையாகவே விளிக்கிறாள் கோதை. அவளும் ஆண்டாளை விடச் சிறுவயதினள் போலும். எனவே, “பிள்ளாய்” என்று வாஞ்சையோடழைக்கிறாள். பறவைகளின் ஒலி சிலம்பொலிப்பது போல் உள்ளது. கண்ணனின் கோயிலில் சங்கும் ஊதிவிட்டார்கள். சாமியார்கள் ஓதும் அரிஅரியென்னும் பேரோசை வானில் எழுகிறது. “நீ வாராய்” என்று பாடுகிறாள் கோதை நாச்சியார்.
பாசுரம் – 07
கீசுகீசு என்றுஎங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறும்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய் நாரா யணன்மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ
தேச முடையாய் திறவேலோர் எம்பாவாய்.
அடுத்து அவள் எழுப்புவது தலைமைப்பண்புகள் நிறைந்த பேய்த் தோழியை. இரண்டாவது வரியிலேயே “பேய்ப் பெண்ணே” என்று உரிமை கொண்டு திட்டுகிறாள். “இக்கடுங்குளிரில் நாங்கள் குளித்து முடித்து, கண்ணனின் நாமத்தைப் பாடிக்கொண்டு வருகிறோம். ஆனால் நீயோ, நாங்கள் பாடுவதையெல்லாம் படுக்கையிலேயே படுத்துக் கேட்டுக்கொண்டு நிம்மதியாக தூங்குகிறாயா?” என்கிறாள். அதிலும் உள்குத்து வேறு. “நாயகப்பெண் பிள்ளாய்” என அவளைத் தலைமைப்பண்பு மிக்கவளே என்று பாடிக் குத்திக்காட்டுகிறாள். ஆண்டாள் காலத்தில் கூட, தலைவர்கள், கேளாக் காதினோடு வாளாவிருப்பார்கள் போலும். இப்பாடலில் பறவைகளின் ஒலியோடு ஆய்ச்சியர் தயிர்கடையும் ஒசையும், அவர்கள் அவ்விதம் கடையும் போது அவர்களின் கைகளிலும், மார்புகளிலும் அணிந்துள்ள ஆபரணங்கள் (காசும் பிறப்பும்) உராயும் கலகலக்கும் ஓசையும் சேர்ந்து ஒலிக்கிறதாம். தங்கம் தவிர்த்து வேறு உலோகங்களும் நகை செய்யப் பயன்பட்டிருப்பது தெரிகிறது. (தங்கம் ஒலியெழுப்பாது until otherwise it belongs to திருஞானசம்பந்தர்).
பாசுரம் – 08
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான்போ கின்றாரைப் போகாமல்காத்துஉன்னைக்
கூவுவான் வந்துநின்றோம் கோதுகலம் உடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.
அடுத்த தோழி மிகவும் குதூகல மனமுடையவள். ஆண்டாளுக்கு மிகவும் பிடித்தவள். எனவேதான் இவளுக்காக மற்ற தோழிகளையும் போகவிடாமல் பிடித்து வைத்திருக்கிறாள் (போவான் போகின்றாரைப் போகாமல் காத்து). இவளை மிகவும் அன்புடன் துயிலெழுப்புகிறாள் கோதை. ஆண்டாள் பெருமானை நினைத்து வருந்துங்காலை, அவளுக்கு ஆறுதல் கூறி, தேற்றி, மகிழ்வூட்டும் வழக்கத்தை இத்தோழி செய்திருக்கக்கூடும். இப்பாடலில் ஒரு வரி உண்டு. கண்ணன் “ஆவாவென் றாராய்ந்து அருளுவான்” என்று (வாட்ஸாப்பை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் வடிவேலின் நகைச்சுவை விளியான (expression) “ஆஹாஆஆன்”னின் மூலம் இவ்வார்த்தையாய் இருக்குமோ!).
பாசுரம் – 09
தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்
தூமம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே மணிக்கதவம் தாழ்திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள்தான்
ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமன் பலவும் நவின்றேலோர் என்பாவாய்.
அடுத்து செல்வச் சிறப்புமிக்க, செல்லமாய் வளர்க்கப்படும் தோழியை எழுப்புகிறாள். இத்தோழி வேறு ஆண்டாளின் சொந்தக்காரப்பெண் (மாமான் மகளே). இப்பாடலில் அவள் தோழியைக் கடிந்துகொள்வதை விட, அவள் தாயைக் கடிந்து கொள்ளுகிறாள் (மாமீர். அவளை எழுப்பீரோ). “மாமி, நீ உன் பெண்ணைச் செல்லம் கொடுத்துக் கெடுத்து வைக்கிறாய். அவள் என்ன ஊமையோ, செவிடோ, பைத்தியமோ (அனந்தலோ) விடாது தூங்கும்படி மந்திரக்கட்டு போடப்பட்டவளோ” என்று காட்டமாக கேட்கிறாள். அக்காலத்தில் தன் சொந்தப்பிள்ளையை இன்னொரு பெண் பிள்ளைத் திட்டுவதை (என்னதான் சொந்தக்கார பெண்ணென்றாலும்) ஒரு தாயால் பொறுத்துக்கொள்ளவியலுகிறது என்பதே ஆச்சரியம் தானே. குடும்ப சீரியல்களின் சீரிய பணி இன்னும் என்னென்ன பண்ணுமோ? நாராயணா.
பாசுரம் – 10
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால்
பண்டுஒருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த
கும்ப கருணனும் தோற்றும் உனக்கே
பெருந்துயில்தான் தந்தானோ ஆற்ற
அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.
இத்தோழி ஆண்டாளுக்கு சீனியர் போல. ஏற்கனவே நோன்பு நோற்று, நல்ல ஒரு திருமண வாழ்க்கையை அடுத்த தை மாதத்தில் எதிர் நோக்கிக் காத்திருப்பவள். (நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்). எனவே, ஆண்டாளின் நோன்பில் ஈடுபாடு கொள்ளாமல் இருக்கிறாள் போலும். எனவே ஆண்டாள் இவ்வாறு இடித்துரைக்கிறாள். “வாசல் தான் திறக்கவில்லை. Atleast, வரேன், வரலன்னு மறுமொழி (reply) கூடவா சொல்லமாட்ட?” என்று குறைபட்டுக் கொள்கிறாள் (மாற்றமும் தாராரோ. வாசல் திறவாதார்). மேலும் கடுப்பாகி, “பெருமானிடம் வீழ்ந்து மடிந்தானே கும்பகர்ணன், அவன் இறக்கும் தருவாயில், தூக்கத்தை உன்னிடம் தந்துவிட்டானோ?” என்று பகடி செய்கிறாள்.
பாசுரம் – 11
கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றம்ஒன் றில்லாத கோவலர்த்தம்
பொற்கொடியே புற்றுஅரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வபெண் டாட்டிநீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.
இப்போது ஆண்டாள் தன் தோழிகளிடம் சற்றே சலித்துக்கொள்ளும் பாவனையை மேற்கொள்கிறாள். “மிகச்சிறந்த வீரனின் புதல்வியே.. பாம்பின் படம் போன்ற இடை மற்றும் அல்குல் கொண்டவளே. இத்தனை பேர் வந்து உன் வீட்டின் முன் வந்து கண்ணன் பெயரைப் பாடிக்கொண்டிருக்கிறோம். இவ்வளவு கேட்டும் ஏன் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறாய்?”. இரு உள்ளீடுகள் இப்பாடலில் இருப்பதாய் இங்கெனக்குத் தோன்றியது. தோழியை விளிக்கும் பத்து பாடல்களில் இப்பாடலில் மட்டுமே, ஆண்டாள் தன் தோழியை அந்தரங்கமாக விளிக்கிறாள். மேலும் “உன் வீட்டினர் அறியாமலும் அந்தரங்கத்தோழியான எனக்குந்தெரியாமலும் நீ யாரோடும் காதற்கொண்டனையோ? அதனால்தான் நோன்பிற்கு வராது உறங்கிக்கொண்டிருக்கினையோ?” என்று ஐயத்தொனி தெறிக்கப் பாடுகிறாள்.
பாசுரம் – 12
கனைத்துஇளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்துஇல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்
சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம்
அனைத்துஇல்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.
இப்பாசுரத்தில் ஆண்டாள் தன் தோழியின் செல்வச்செழிப்பை விவரிக்கும் பாங்கு அற்புதமானது. கரிய எருமைகள், தத்தம் கன்றுகளை நினைத்து, தன் மடியிலிருக்கும் பாலை, தாமாகவே சுரக்கின்றனவாம். அதனால் இத்தோழியின் முற்றம் அனைத்தும் பால் கலந்த மண்சேறு ஆகிவிட்டனவாம். அப்படிப்பட்ட செல்வமிகு தனயனின் தங்கையே, ஏன் இப்படித் தூங்குகிறாய்? பனி எங்கள் தலையை நனைத்துக்கொண்டிருக்க, நாங்கள் உன்னை எழுப்பும் சத்தம் கேட்டு, பக்கத்து, எதிர்வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் கூட எழுந்துவிட்டனர். நீ இன்னும் உறங்குகிறாயே என்று பரிகாசம் செய்கிறாள் கோதை. இத்தோழி மிகவும் கூச்ச சுபாவமும், மற்றவர்கள் தன்னைப் பற்றி தவறாக நினைக்க இடம் கொடாதவளாகவும் இருக்கக்கூடும். அதனால் மற்றவர்கள் எழுந்துவிட்டதைக்காட்டி எழுப்புகிறாள்.
பாசுரம் – 13
புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ நன்நாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.
இப்பாடலில் ஆண்டாள் சிறிது வேகம், கோபம் தணிந்து தன் தோழியை விளிக்கிறாள். மேலும் மிகைத்தகவலாக ஒரு விண்ணியல் நிகழ்வையும் ஒரு வரியில் சொல்லியிருக்கிறாள். இவ்வரியைக் கொண்டு மு.இராகவையங்கார், இச்செய்தியைக் கணித்து மார்கழியின் இப்பதிமூன்றாம் நாள், கிபி.885ம் வருடம் நவம்பர் மாத நிகழ்வென்று குறிப்பிடுகிறார். இன்னும் ஆச்சரியமாக, இணைய தோழர் ஒருவர் (மாதவிப்பந்தல்) இதே நிகழ்வை, கடந்த 2008ம் ஆண்டு, நவம்பர் 21ம் நாள் நிகழ்ந்ததாய் ஆதாரத்துடன் விளக்கியிருக்கிறார். ஒன்பதாம் நூற்றாண்டில் பெண்களுக்குக் கூட விண்ணியல் அசாதரணமாகத் தெரிந்திருக்கிறது என்பதே நாம் உணரவேண்டிய விஷயம்.
இத்தோழி குறும்பும், கபடமும் ஒருங்கே அமைந்தவள். தூங்குவது போல் பாசாங்கு செய்பவள். மேலும், குளிர்நீரில் குளித்து விளையாடத்தயங்குபவள். அனேகமாக நீச்சல் அறியாதவளகவும் இருக்கக்கூடும். எனவே, ஆண்டாள் இவளை “உன் பாச்சா என்னிடம் பலிக்காது” என்கிறாள். மேலும், குறும்புத்தனமிக்க பெண்களுக்கு இயல்பாகவே பெரிய கண்கள் (போதரிக் கண்ணினாய்) அமைந்துவிடுகின்றதோ? என்னவோ! பெண்களின் அவயங்களுக்கு கற்பிதம் கூறும் பழக்கம், ஆண்டாளிடமும் இருக்கிறது, நம்மைப்போன்ற ஆண்களிடமும் இருக்கிறது.
பாசுரம் – 14
உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுனீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கற் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.
இத்தோழியை ஆண்டாள் கொஞ்சம் அதிகமாகவே கலாய்க்கிறாள். இத்தோழி தம் வீட்டின் பின்புறம் மிக அழகான சிறுகுளத்தைக் கொண்டிருக்கிறாள். அதில் சூரிய உதயத்தைக் கண்டு செங்கழுனீர் மொட்டுக்கள் மலர்ந்து, ஆம்பல் (அல்லி) பூக்கள் கூம்பிக்கொள்ள ஆரம்பித்துவிட்டனவாம். காவியுடுத்திய துறவிகள் சங்கை முழக்கிக்கொண்டு தங்கள் கோயிலுக்கு விரைகின்றனராம். “எங்கள் எல்லாருக்கும் முன்னாடி விழித்தெழுந்து நானே வந்து உங்களை எழுப்புவேன்னு சவடால் விட்டியே, நாணமில்லாத பெண்ணே, நாக்கு மட்டும் உள்ளவளே. கிளம்பி வா” என்று கடிகிறாள். கோதை கோபக்காரி போல. வார்த்தைத் தவறிய தோழிக்கு கொஞ்சம் அதிகப்படியான மண்டகப்படி.
பாசுரம் – 15
எல்லே இளம்கிளியே இன்னம் உறங்குதியோ
சில்என்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார்போந்து எண்ணிக்கொள்
வல்ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.
இவள்தான் ஆண்டாள் நோன்புக்கு விளிக்கும் கடைசித் தோழி. இப்பாடல் உரையாடலாய் அமைந்திருக்கிறது.
ஆண்டாள்: ஏலே தோழி. சிறு கிளியே. இன்னுமா உறங்குகிறாய்?
தோழி: “சில்”லென்று கூச்சலிடாதீர். இதோ வருகிறேன்.
ஆண்டாள்: நேற்று நீ பேசுன பேச்சுக்கு, இந்நேரம் கெளம்பியிருக்கணுமே. நீ “வாயிலயே வடை சுடுபவள்”.
தோழி: ஆமாம். உங்களுக்கெல்லாம் பேசவே தெரியதோ. கடைசியில் நான் மட்டுந்தான் உனக்கு இளக்காரம்.
ஆண்டாள்: உனக்கென்ன வேலை இருக்கிறது? சீக்கிரமா வா! (அப்படியென்ன வெட்டிமுறிக்கிற வேலை உனக்கு?)
தோழி: எல்லாரும் வந்துட்டாங்களா?
ஆண்டாள்: வந்தாச்சு. வேணும்னா எண்ணிப்பார்த்துக்கொள்.
இவ்வுரையாடலைக் காணும் போது, இத்தோழியும் ஆண்டாளும் ஒருவரையொருவர் மாற்றி மாற்றி பகடி செய்து கொள்ளும் அளவுக்கு நட்பானவர்கள் என்று தெரிகிறது. (கெளம்பிட்டாருயா கவர்னரு.. சொல்லிட்டாருப்பா கலெக்டரு டைப்). இத்தோழியும், வாய்த்துடுக்கும், சோம்பேறித்தனமும் மிக்கவள் போல. ஆனால் ஆண்டாளிடம் மாறாத அன்புகொண்டவள். அதனால்தான் மற்ற தோழிகளைப்போல் தூங்கிக்கொண்டிருக்காமல் இவள் வெள்ளனே எழுந்து, குளித்து உடைமாற்றிக் கொண்டிருக்கிறாள. கதவின் பின் நின்று, கோதையிடம் இப்படி உரையாடுகிறாள்.
இத்துணை அழகியலும், செறிந்த கருத்துகளும் உடைய திருப்பாவை பெண்களுக்கு திருமணம் கைகூடுவதற்காய் பாடப்படுவதென எண்ண வேண்டியதில்லை. நமக்கும் தமிழுக்கும் ஒருபந்தத்தை உருவாக்குவதாயும் கொள்ளலாம்.
***