"

ஆம் ஆத்மி : கொடுங்கனவாகும் கற்பனை

மூலம்: பிரஷாந்த் பூஷண் | தமிழில்: சைபர்சிம்மன்

(ஏப்ரல் 4, 2015 அன்று அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரசாந்த் பூஷண் எழுதிய பகிரங்கக் கடிதத்தின் முழு விவரம்)

அன்புக்குரிய அரவிந்திற்கு,

மார்ச் 28 அன்று நடந்த தேசியக் குழு கூட்டத்தில், நீங்கள் நிகழ்த்திய ஒருங்கிணைப்பாளர் உரையில் கட்சியின் நிலை மற்றும் எதிர்காலம் பற்றி பேசுவதற்குப் பதிலாக யோகேந்திராஜி, என் தந்தை மற்றும் என் மீது தாக்குதல் தொடுத்து, எங்கள் மீது பொய்யான மற்றும் அவதூறான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினீர்கள். உங்கள் பேச்சு பல தில்லி எம்எல்ஏக்களை (தேசியக் குழு உறுப்பிப்பினர்களாக இல்லாத போதும் அவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்) தூண்டிவிட்டு, நாங்கள் வெளியேற்றப்பட வேண்டிய துரோகிகள் எனக் கூச்சலிட வைத்து ரவுடிகள் போல நடந்து கொள்ள வைத்தது. இந்த எம்எல்ஏக்கள் என் தந்தையை நோக்கி கூட்டமாக வந்த போது அவர்கள் காட்டிய ஆவேசம், அங்கிருந்து உயிரோடு வெளியேற முடியாதோ எனும் அச்சத்தை என் தந்தை மனதில் உண்டாக்கியது.

உங்கள் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க எங்களுக்கு நீங்கள் வாய்ப்புக் கூட அளிக்கவில்லை. எம்எல்ஏக்கள் மற்றும் மற்றவர்களின் கூச்சலுக்கு நடுவே மனீஷ் எங்களை நீக்குவதற்கான தீர்மானத்தை வாசித்தார் (நாற்காலி இல்லாமலும், வாசிக்க யாரும் அனுமதி அளிக்காமலும்). பின்னர் எந்த விவாதத்துக்கும் அனுமதி அளிக்காமல் கை உயர்த்தச் சொல்லி இதன் மீது வாக்கெடுப்பு நடத்தினார். இப்படிக் கேலிக்கூத்தாக மாறியதால் நாங்கள் வேறு வழியில்லாமல் வெளியேறினோம்.

இது பலவிதங்களில் கேலிக்கூத்தானது. தேசியக் குழுவுக்குப் பல உறுப்பினர்கள் அழைக்கப்படவில்லை, அல்லது கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. கூட்டத்தில் பங்கேற்றவர்களில் பாதி பேருக்கு மேல் உறுப்பினர்கள் அல்லாதவர்கள். எம்எல்ஏக்கள், நான்கு மாநிலங்களின் மாநில, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், தொண்டர்கள் மற்றும் அடியாட்களும் இதில் அடங்குவர். பல காரணங்களினால் கூட்டம் எந்த விதத்திலும் முறையாக நடக்கவில்லை. அங்கிருந்த பலர் ரவுடித்தனமாக நடந்துகொண்டனர். வீடியோபதிவு அனுமதிக்கப்படவில்லை, கட்சியின் லோக்பால் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. இப்படிப் பல காரணங்களை சொல்லலாம்.

28ம் தேதிக்கு பிறகு நடந்தவை கேலிக்கூத்தின் உச்சத்திற்குச் சென்று கட்சிக்குள் ஸ்டாலினிசப் போக்கு உண்டாகிறதோ என சந்தேகிக்க வைத்தது. மிகுந்த மதிப்பும், சுயேட்சைதன்மையும் கொண்ட மனிதரான கட்சியின் லோக்பால், கூட்டதில் கலந்து கொள்ள வேண்டும் என விருப்பம் தெரிவித்தாலேயே விதிமுறைகளுக்குப் புறம்பாக நீக்கப்பட்டார். அவரது விருப்பம் என்னவோ நியாயமானது தான். தேசியக் குழுவின் மற்ற உறுப்பினர்களும் விதிமுறைகளுக்குப் புறம்பாக இடைநீக்கம் செய்யப்ப்பட்டுள்ளனர். தேசியக் குழுக் கூட்டத்தில் நடந்த ரவுடித்தனங்களுக்கு பிறகு நாங்கள் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் அவர்கள் பங்கேற்றனர் என்பதே காரணம்.

இதன் பிறகு தேசியக் குழுவில் நீங்கள் நிகழ்த்திய உரையின் மிகக் கவனமாக எடிட் செய்த பகுதியை, எங்கள் மீதான குற்றச்சாட்டுகள் கொண்டதை வெளியிட்டீர்கள். நடந்த ரவுடித்தனத்தை வெளிப்படுத்தும் பகுதி அதில் கவனமாக நீக்கப்பட்டிருந்தது. இந்தப் பின்னணியில் உங்களுக்கு இந்தப் பகிரங்க கடிதத்தை எழுதுகிறேன்.

உங்கள் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்கும் வகையில் உங்களுடனான வேறுபாடு எனக்கு எங்கே இருந்து ஆரம்பமானது என்பதை நான் சொல்லியாக வேண்டும். உங்களுக்கு நினைவு இருக்கும் என்றால், மக்களவை தேர்தலுக்குப் பின்னர், உங்கள் ஆளுமை மற்றும் குணாதிசயத்தில் உள்ள இரண்டு முக்கியக் குறைகளை வெளிப்படுத்தும் தொடர்ச்சியான சம்பவங்கள் நடந்ததைத் தொடர்ந்து உங்களுடனான எனது வேறுபாடு துவங்கியது. முதலில் கட்சியின் அரசியல் நடவடிக்கை குழு (பிஏசி) அல்லது தேசிய செயற்குழுவில் பெரும்பாலானோர் மாறுபட்ட கருத்து கொண்டிருந்தாலும் கூட நீங்கள் உங்கள் முடிவுகளை எப்படியாவது கட்சிக்குள் திணிக்கப் பார்த்தீர்கள். இவற்றில் கட்சியின் நலனுக்கு எதிரான மற்றும் பொது நலனுக்கு எதிரான முடிவுகளும் அடங்கும். இரண்டாவதாக உங்கள் முடிவுகளை நிறைவேற்றிக் கொள்ள நீங்கள் அறம் மீறிய மற்றும் கிரிமினல் வழிகளையும் நாடத் தயாராக இருந்தீர்கள்.

மக்களவைத் தேர்தலுக்குப் பின் கட்சி முடிந்துவிட்டது என்றும் தில்லியில் மீண்டும் ஒருமுறை ஆட்சி அமைத்தால் தான அதைச் சீரமைக்க முடியும் என நினைத்தீர்கள். எனவே தேர்தல் முடிந்தவுடன் நீங்கள் தில்லியில் ஆட்சி அமைக்க ஆதரவு கோரி காங்கிரஸ் கட்சியுடன் பேசத்துவங்கினீர்கள். இந்தச் செய்தி வெளிவந்தவுடன் பிரித்வி ரெட்டி, மேயன்க் காந்தி மற்றும் அஞ்சலி தமானியா உள்ளிட்ட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் என்னைத் தொடர்பு கொண்டு இது நடந்தால் கட்சிக்குக் கேடாக விளங்கும் எனத் தெரிவித்தனர். நான் அப்போது சிம்லாவில் இருந்தேன். உங்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கட்சியின் அரசியல் நடவடிக்கை குழு அனுமதி இல்லாமல் இதை நீங்கள் மேற்கொள்ளக்கூடாது எனத் தெரிவித்தேன்.

நான் உடனடியாகத் திரும்பி வந்தேன். உங்கள் வீட்டில் பிஏசி கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் (5:4) காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைக்க எதிர்ப்புத் தெரிவித்தனர். பொதுமக்கள் முன் அறிவித்த நிலையை மாற்றிக்கொள்ள எந்த நியாயமான காரணமும் இல்லத்தால் இது சந்தர்ப்பவாதமாக பார்க்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினேன். காங்கிரஸ் சீக்கிரமே ஆதரவை விலக்கிக் கொள்ளும் என்பதால் இந்த அரசு நீடிக்காது என்றும் கூறினேன். அதன் பிறகு கட்சியைப் புத்துயிர் பெற வைப்பது இன்னும் கடினமாக இருக்கும் எனக் கூறினேன்.

பெரும்பாலானோர் முடிவை ஏற்பதற்கு பதில், இது பெரும்பான்மையான கருத்தாக இருந்தாலும் கூட கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் உங்களுக்கு இருப்பதாகக் கூறி, காங்கிரஸ் ஆதரவைப் பெற முயற்சிப்பேன் என்று தெரிவித்தீர்கள். அப்போது நான் உங்களுடன் வாதிட்டேன். கட்சியை இந்த முறையில் நடத்த முடியாது என்றும், சில ஜனநாயக முறைப்படி தான் செயல்பட வேண்டும் என்றும் கூறினேன். எனவே மேலும் அதிக உறுப்பினர்களைக் கொண்ட தேசியக் குழுவிடம் இந்தப் பிரச்சனையை விட முடிவு செய்யப்பட்டது. இந்தக் குறிப்பு இமெயில் மூலம் தெரிவிக்கப்பட்டது. மறுநாள் காலை எல்லோரும் வாக்களிப்பு மூலம் முடிவைத் தெரிவிக்க இருந்தனர். மறுநாள் தேசியக் குழுவிலும் பெரும்பாலானோர் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தும் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் அரசமைக்கலாமா என்பது குறித்து மக்களின் கருத்தை அறிய இருப்பதால் இன்னும் ஒரு வாரத்திற்கு சட்டமன்றத்தைக் கலைக்கக் கூடாது என தில்லி துணைநிலை ஆளுனருக்கு நீங்கள் ரகசியக் கடிதம் அனுப்பினீர்கள்.

இந்தக் கடிதம் வெளியானவுடன் ஆம் ஆத்மி கட்சியை ஆதரிக்கத் தயாராக இல்லை என்று காங்கிரஸ் வெளிப்படையாக அறிவித்து நமது முகத்தில் கரியைப் பூசியது. இதன் விளைவாக நீங்கள் மறுநாள் சொன்னதைத் திரும்ப பெற்று மன்னிப்புக் கேட்க வேண்டியிருந்தது. ஆனால் இதை மீறி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவுடன் அல்லது காங்கிரசில் இருந்து விலகி வரும் உறுப்பினர்கள் ஆதரவுடன் ஆட்சி அமைப்பதற்கான முயற்சி தொடர்ந்திருக்கிறது. ராஜேஷ் கர்கின் ரகசியப் புலனாய்வு ஒலிநாடாவில் இருந்து இது தெளிவாகிறது.

பாஜகவால் ரூ.4 கோடிக்கு விலைக்கு வாங்கப்பட்டதாக நீங்கள் குற்றம்சாட்டிய எம்எல்ஏக்கள் அதரவுடனே ஆட்சி அமைக்க நீங்கள் தயாராக இருந்த்தை இந்த ஒலிநாடா உணர்த்துகிறது. இது போன்றவர்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முயற்சிக்க எப்படி உங்களால் முடிந்தது? சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கு முன் நவம்பர் வரை இது தொடர்ந்திருக்கிறது. நவம்பரில் நீங்கள் நிகில் டேயை தொடர்பு கொண்டு காங்கிரஸ் ஆதரவு அளிக்க சம்மதிக்க வைக்க ராகுல் காந்தியிடம் பேசுமாறு கூறியிருக்கிறீர்கள். ஆனால் இது தொடர்பாக ராகுலிடம் தன்னால் பேச முடியாது என அவர் கூறியிருக்கிறார்.

இந்த உண்மைகளை உங்களால் மறுக்க முடியுமா? இவை எல்லாம் பெரும்பான்மைக் கருத்துக்கு விரோதமாகச் செல்ல, கட்சியின் ஜனநாயக விதிகளை மீற, உங்களால் ஊழல்வாதிகள் எனக் குற்றம்சாட்டப்பட்ட எம்எல்ஏக்கள் ஆதரவைக்கோரத்தயாராக இருந்ததை உணர்த்துகின்றன. அதிகாரத்திற்காக எதையும் செய்யத்தயாராக இருந்தீர்கள்.

இதன் பிறகு ஆம் ஆத்மி தொண்டர் நடவடிக்கை மன்றம் (ஏவிஏஎம்) மூலம் தொண்டர்கள் சிலர் கட்சிக்குள் தங்கள் குரல் கேட்கப்பட வேண்டும் என விரும்பிய பிரச்சனை தலை தூக்கியது. தாங்கள் அடிமைகள் போல நடத்தப்பட்டதாக உணர்ந்த தொண்டர்கள் மத்தியில் இது கிளர்ச்சியாக உருவெடுக்கும் அபாயம் இருந்ததாலும் இதை அடக்க வேண்டியது அவசியம் என நீங்கள் கருதியதாலும், ஏவிஏஎம்மிடம் இருந்து கட்சிக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்த்தாக காண்பிக்கப்பட்டது. அச்செய்தியில் தொண்டர்கள் பாஜகவில் சேர வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அமைப்பு பாஜகவின் ஏஜெண்டாக இருக்கிறது எனத் தோன்ற வைக்க முற்பட்ட இந்த எஸ்எம்எஸ் செய்தியை அமைப்பின் பேரில் கட்சியே அனுப்பியிருந்தது.

இதை வைத்துக்கொண்டு கூகுள் ஹாங்கவுட் மூலம் இவர்கள் துரோகிகளாகிவிட்டதாக அறிவித்தீர்கள். இதனடிப்படையில் ஏவிஏஎம்மின் தலைவரான கரண் சிங் நீக்கப்பட்டார். அவர் நான் தலைமை வகித்த தேசிய ஒழுங்கு நடவடிக்கைக் குழுவிடம் விண்ணப்பித்து இந்தச் செய்தியை தான் அனுப்பவில்லை என்றும் இது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். எனவே நான் உங்களிடமும் திலிப் பாண்டே உள்ளிட்டோரிடம் இது குறித்து விசாரிக்கக் கோரினாலும் அது மறுக்கப்பட்டது.

இது தொடர்பாக கரண் சிங் எப்ஐஆர் தாக்கல் செய்தார். போலீசார் இது குறித்து விசாரித்து தீபக் சவுத்ரி எனும் கட்சி தொண்டர் ஏவிஏஎம் பெயரில் ஓர் அடையாளத்தை உருவாக்கி எஸ்எம்எஸ் அனுப்பியதும் இவர் ஏவிஏஎம் அமைப்பைச் சேர்ந்தவர் அல்ல என்றும் தெரிய வந்தது. ஓர் அமைப்பின் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் இவ்வாறு போலி செய்வது கிரிமினல் குற்றம் என நீங்கள் அறியவேண்டும் அரவிந்த் அவர்களே. ஆனால் உங்கள் கீழிருக்கும் இளம் தொண்டர்கள் அரசியலில் இதுபோன்ற உத்திகள் சரியானது க் என கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளனர். பெரிய தீமையை ஒழிப்பதற்கான எந்த வழியும் சரியானது எனும் உங்கள் வழிகாட்டுதலே இதற்குக் காரணம்.

இதன் பிறகு அரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத் தேர்தலில் கட்சி போட்டியிட வேண்டுமா எனும் கேள்வி எழுந்தது. இது மீண்டும் இமெயில் மூலம் தேசியக் குழுவிடம் விடப்பட்டு 15:4 எனப் பெரும்பாலானோரால் மாநில அமைப்புகளே சுந்திரமாக இது பற்றி முடிவு எடுக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இந்த முடிவை செயல்படுத்த நீங்கள் அனுமதிக்கவில்லை. அதற்குள் தேர்தல் நெருங்கி விட்டதால் சங்கூரில் நடைபெற்ற தேசியக் குழுவில் இதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும் தேர்தலில் போட்டியிடுவதை மறந்துவிட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

தில்லி தேர்தல் அறிவிக்கப்பட்டு பிரச்சாரம் துவங்கிய போது ‘பிரதமருக்கு மோடி, முதல்வருக்கு கெஜ்ரிவால்’ எனும் பிரச்சாரத்தைத் துவக்கத் தொண்டர்களுக்கு உத்தரவிட்டீர்கள். இது கொள்கை இல்லாதது என நான் கூறினேன். மோடிக்கு முக்கிய எதிர்கட்சியாக முன்னிறுத்திக்கொள்ளும் நிலையில் இது மோடியிடம் மண்டியிடும் செயல் என்று கூறினேன்.

2015 தில்லி சட்டமன்றத்திற்கான தேர்தலுக்கான் வேட்பாளர் தேர்வு துவங்கிய போது அதில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருப்பதைக் கண்டேன். முந்தைய நடைமுறைக்கு மாறாக வேட்பாளர்கள் பெயர் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை. வேட்பாளர்களை அங்கீகரிக்க வேண்டிய பிஏசியிடம் கூட வேட்பாளர்கள் குறித்து முன்கூட்டியே ஆய்வு செய்ய ஏற்ற வகையில் அவர்கள் பெயர் மற்றும் விவரங்கள் அனுப்பி வைக்கப்படவில்லை. வேட்பாளர் தேர்வு பற்றி விவாதிப்பதற்கான பிஏசியின் இரண்டாவது கூட்டத்தில் இதை நான் சுட்டிக்காட்டினேன். அந்த கூட்டத்தின் முன்மொழியப்பட்ட இரண்டு வேட்பாளர்கள் குறித்து என்னிடம் புகார்கள் வந்திருந்ததே இதற்கு காரணம். நீங்கள் ஆவேசமடைந்து “நாங்கள் எப்படி மோசமானவர்களைத் தேர்வு செய்வோம் என நீங்கள் நினைத்தீர்கள்?” என கேட்டீர்கள். நான் அது அல்ல விஷயம் என்றும் வெளிப்படையான தன்மை மற்றும் நல்ல தேர்வு முறை வேண்டும் என்று கூறினேன். இது தொடர்பாக நம்மிடையே வாக்குவாதம் உண்டானது. நான் கூட்டத்தில் இருந்து வெளியேறி நவம்பர் 27 இமெயிலில் வெளிப்படையாக இல்லாத மற்றும் கேள்விக்குறிய வேட்பாளர் தேர்வில் நான் ரப்பர் ஸ்டாம்பாக இருக்க மாட்டேன் எனக் கூறினேன். அந்த இமெயில் இப்போது பொதுவெளியில் இருக்கிறது.

அதன் பிறகு அடுத்த பட்டியலில் உத்தேசிக்கப்பட்ட 10 பேரில் 4 பேர் கேள்விக்குரிய தேர்வாக இருந்தனர். யோகேந்திர யாதவ் மற்றும் நான் டிசம்பர் 10ம் தேதி பிஏசிக்கு இந்த நான்கு பேர் மீதான சந்தேகத்தை விவரித்து எழுதியிருந்தோம். கடந்த முறையில் இருந்து இந்த முறை வேட்பாளர் தேர்வு மிகவும் மாறுபட்டிருப்பதைச் சுட்டிக் காட்டியிருந்தோம். இந்த முறை சந்தர்பவாதம் காரணமாகவே கட்சியில் சேர்ந்திருந்த அரசியல் முனைவோர் பலருக்குக் கட்சி டிக்கெட் வழங்கியிருந்தது. இவர்கள் கடைசி நிமிடத்தில் காங்கிரஸ், பாஜக அல்லது பிஎஸ்பியில் இருந்து தாவியிருந்தனர். பொதுச் சேவைக்காக அறியப்படாமல் இருந்தார்கள். அவர்கள் சொத்துக்கான வருமான ஆதாரமும் தெளிவாக இல்லை.

இவர்களில் சிலர் வாக்காளர்களுக்கு பணம், சாராயம் கொடுப்பதாக அல்லது நமது தொண்டர்களைத் தாக்கியதாக நாமே புகார் செய்தவர்கள். இவர்களில் ஒருவர் (வாசிபூருக்காக முதலில் அறிவிக்கப்பட்டவர்) வேட்பாளாராக அறிவிக்கப்பட்ட 4 மணி நேரத்தில் பாஜகவிற்கு மீண்டும் சென்று விட்டார். மெஹருலி தொகுதிக்கான நீங்கள் முதலில் தேர்வு செய்த காண்டாவை கடைசி நிமிடத்தில் நீக்க வேண்டியிருந்தது. அவர் ஒரு கையில் துப்பாக்கி மற்றும் ஒரு கையில் மது வைத்திருந்த புகைப்படம் வெளியானதே காரணம். இருந்தும் அவரது சகோதரருக்கு டிக்கெட் அளிக்கப்பட்டது. இறுதியில் நமது லோக்பால் அட்மிரல் ராமதாஸ் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை மாற்ற வேண்டியிருந்தது.

இதன் பிறகு ஆம் ஆத்மி கட்சி பிஏசி கூட்டத்தைக் கூட்டுவதை அல்லது அதன் அனுமதி பெற வேட்பாளர்கள் பெயரை அனுப்புவதை நிறுத்திக் கொண்டு தானாகவே வேட்பாளர்கள் பெயரை அறிவிக்க துவங்கியது. இவை நடந்த பிறகு “இதற்கு முற்றுப்புள்ளி வைப்போம். இது நிறுத்தப்படா விட்டால், வேட்பாளர் தேர்வில் நம்பகத்தன்மை இல்லாவிட்டால் நான் கட்சியில் இருந்து விலகுவேன் என்றும் அதற்கான காரணத்தை பகிரங்கமாக அறிவிப்பேன்” என்றும் கூறினேன். இதனால் ஜனவரி 4ம் தேதி எனது வீட்டில் யோகேந்திர யாதவ் மற்றும் பிரித்வி ரெட்டியால் அவசரக் கூட்டம் கூட்டப்பட்டது. நாடு முழுவதிலும் இருந்து 16-17 முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். அந்தக் கட்டத்தில் நான் ராஜினாமா செய்தால் கட்சி பாழாகிவிடும் என்று வலியுறுத்தினர்.

அந்தக் கூட்டத்தில் “பாருங்கள், எல்லா வகையான சமரசமும் மேற்கொள்ளப்படுகின்றன. பல தார்மீக முறைகள் மீறப்படுகின்றன. போதிய ஆய்வு அல்லது வெளிப்படைத்தன்மை இல்லாமல் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இது போன்ற வேட்பாளர்களுடன் போட்டியிட்டால் அவர்கள் வெற்றி பெற்றாலும் கூட நீங்கள் மேற்கொள்ள வேண்டிய சமரசங்கள் கட்சியின் தனித்தன்மையை, தூய்மையான வெளிப்படையான, மாற்று அரசியலுக்கானது கட்சி என்பதை அழித்துவிடும். இது போன்ற வேட்பாளர்களால் வெற்றி பெறுவதற்கு பதில் தூய்மையான நேர்மையான வேட்பாளர்களை நிறுத்தித் தோற்கலாம்” என்றேன். இந்த அறிக்கை நான் கட்சி தோற்க வேண்டும் என விரும்பியதாக திரிக்கப்பட்டது.

இது போன்ற வேட்பாளர்கள் மற்றும் வழிமுறைகளால் வெற்றி பெறுவதை விட நேர்மையான வேட்பாளர்களை நிறுத்தி தோற்கும் அபாயத்தை எதிர்கொண்டாலும் பரவாயில்லை என்றே கூறினேன். ஏனெனில் இது போன்ற வேட்பாளர்களால் வெற்றி பெறுவது என்பது கட்சியின் கொள்கையை அழித்து நீண்ட கால நோக்கில் கட்சியையே அழித்துவிடும்.

கட்சி தேர்தலில் தோற்க வேண்டும் என நான் விரும்பியிருந்தால் நான் அப்போதே ராஜினாமா செய்து எல்லாவற்றையும் வெளிப்படுத்தியிருப்பேன். யோகேந்திர யாதவ் கட்சி தோற்க வேண்டும் என நினைத்திருந்தால் அவர் அந்த கூட்டத்தைக் கூட்டி நான் ராஜினாமா செய்வதைத் தடுத்திருக்க மாட்டார். மாறாக அவர் கட்சிக்காக முழுமனதுடன் பிரச்சாரம் செய்தார். பல முறை டிவி விவாதங்களில் கட்சிக்கு ஆதரவாக வாதாடியிருக்கிறார். இருந்தும் என் மீதும் அவர் மீதும் கட்சியைத் தோற்கடிக்கும் வகையில் செயல்பட்டதாக நீங்கள் குற்றம் சாட்டத் துணிந்துள்ளீர்கள்.

இந்தக் கூட்டத்தின் முடிவில் உங்கள் மேன்மையான ஒப்புதலுடன் ஒரு உடன்பாடு ஏற்பட்டது; அதாவது தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள் மீதான அனைத்து புகார்களையும் உடனடியாக கட்சியின் லோக்பாலிடம் தெரிவிப்போம் மற்றும் அவரது முடிவே இறுதியானது என்பது தான் அது. கட்சியில் வெளிப்படையான தன்மை, பொறுப்பேற்பு, சுதந்திரம், உட்கட்சி ஜனநாயகம் போன்ற அமைப்பு ரீதியிலான பிரச்சனைகள் பற்றி தேர்தல் முடிந்தவுடன் கவனத்தில் எடுத்துக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது. இதன்படி 12 வேட்பாளர்களுக்கு எதிரான புகார்கள் லோக்பாலிடம் தெரிவிக்கப்பட்டன. இதைப் பரிசிலிக்க கிடைத்த 4 நாட்களில் அவர் தெளிவான ஆதாரங்கள் எதிராக இருந்த 2 வேட்பாளர்களை நீக்கவும், சில ஆதாரங்கள் இருந்த ஆறு வேட்பாளர்களை எச்சரிக்கவும், எஞ்சிய நான்கு வேட்பாளர்கள் தொடரவும் உத்தரவிட்டார். இரண்டு பேர் இப்படி நீக்கப்பட்டனர்.

ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியான இரண்டு நாட்களுக்குள் பரிசிலிக்கப்பட ஒப்புக்கொள்ளப்பட்ட அமைப்புரீதியிலான பிரச்சனைகள் விவாதிக்கப்படவில்லை. மாறாக நீங்கள் கலந்து கொள்ள வேண்டாம் எனத் தீர்மானித்த பிப்ரவரி 26 தேசிய செயற்குழுக் கூட்டம், நீங்கள் ராஜினாமா செய்வதாக விஸ்வாஸ் அறிவித்ததுடன் துவங்கி, உங்கள் ஆதரவாளர் குழுவால் என் மீதும் யோகேந்திர யாதவ் மீதும் முழுவீச்சிலான தாக்குதலாக நடைபெற்றது. உங்கள் சார்பாக அவர்கள் தெரிவித்த செய்தி தெளிவாக இருந்தது: நீங்கள் தொடர வேண்டும் என்றால் பிஏசி மற்றும் தேசிய செயற்குழுவில் இருந்து நாங்கள் நீக்கப்பட வேண்டும். நான் பின்னர் பதிலளித்து மேலே சொன்னவற்றை மற்றும் அமைப்பு ரீதியிலான சீர்த்திருத்தங்களைச் சுட்டிக்காட்டினேன். ஆனால் அவை விவாதிக்கப்படவில்லை. நீங்கள் ஒருங்கிணைப்பாளராகத் தொடர வேண்டுமா, இல்லையா என்பது பற்றி மட்டுமே விவாதிக்கப்பட்டது.

நீங்கள் தொடர வேண்டும் என எல்லோரும் ஒப்புக்கொண்டோம். ஆனால் அதன் பிறகு ஒரு சிலர் உங்கள் வீட்டிற்கு வந்து உங்களைச் சந்தித்தனர். அப்போது நீங்கள் அல்லது நாங்கள் யாரேனும் ஒரு தரப்பினர் நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தீனர்கள். அதன்படி நாங்கள் நீக்கப்பட முடிவானது. மார்ச் 4ல் நடந்த அடுத்த கூட்டத்தில் இது தான் நடந்தது.

இந்தத் தேர்தலில் நான் கட்சிக்காக பிரச்சாரம் செய்யவில்லை என்று என் மீது ஒரு குற்றச்சாட்டு கூறப்பட்டது. இந்த வேட்பாளர்களில் பலருக்காக என்னால் பிரச்சாரம் செய்ய முடியாது என ஏற்கனவே கூறியுள்ளேன். இந்த வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்ட விதத்தைப் பார்க்கும் போது, வெற்றி பெற்றால் தூய்மையான அரசியல் கொள்கையை முன்னெடுத்துச் சென்று பொது நலனுக்காகப் பாடுபடுவார்கள் என எனக்கு உறுதியாகத் தெரிந்த வேட்பாளர்களுக்கு ஆதரவாக மட்டுமே நான் பிரச்சாரம் செய்ய தயாராக இருந்தேன். நான் நல்லவர்கள் என நினைத்த 5 வேட்பாளர்கள் பட்டியலையும் சமர்ப்பித்தேன். ஆனால் பொது கூட்டங்களில் பேசக் கட்சி எனக்கு எந்த அட்டவணையையும் அனுப்பவில்லை. அதன் பிறகு என்னைத் தனிப்பட்ட முறையில் அழைத்த பங்கஜ் புஷ்கர் பொதுகூட்டத்தில் கலந்து கொண்டேன்.

என மீதான இன்னொரு குற்றச்சாட்டு மற்றவர்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு நன்கொடை அளிப்பதைத் தடுத்தேன் என்பது. மற்றவர்கள் என்னிடம் நன்கொடை வழங்கலாமா எனக் கேட்ட‌ போது “நீங்கள் நல்லவர் மற்றும் நேர்மையானவர் என்று நம்பும் வேட்பாளர்களுக்கு நன்கொடை அளியுங்கள்” என்று மட்டுமே கூறினேன். நீங்களும் உங்கள் ஆதரவு குழுவும் இதே குற்றச்சாட்டை எனது சகோதரி ஷாலினி குப்தாவிற்கு எதிராகவும் கூறியுள்ளீர்கள். நான் கூறியது போலவே அவரும் தனக்கு நெருக்கமான வட்டாரத்தில் கூறியுள்ளார். உண்மையில் பல தகுதி வாய்ந்த வேட்பாளர்களுக்கு குளோபல் க்ரூப் நன்கொடை வழங்க அவர் ஊக்குவித்தார். அதனால் தான் பல வேட்பாளர்களுக்கு என்ஆர்ஐகளிடம் இருந்து நிதி வந்தது.

உங்கள் ஆதரவாளர்கள் நானும் என் தந்தையும் சகோதரியும் கட்சியைக் கைப்பற்ற முயல்வதாக குற்றம் சாட்டியுள்ளார்கள். அரவிந்த், எங்களுக்கோ, நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கோ கட்சியில் அதிகாரப் பதவியையோ, தேர்தல் டிக்கெட்டோ பெற எங்களில் யாருக்கும் விருப்பம் இல்லை என்று உங்களுக்கு நன்றாக தெரியும். நாட்டில் நம்பகமான மாற்று அரசியலுக்கான வாகனமாக கட்சி வலுவாக வளர ஒவ்வொரு விதத்திலும் உதவ வேண்டும் என்று மட்டுமே நாங்கள் விரும்பினோம். எனது தந்தை கட்சிக்கான ரூ.2 கோடி நிதி அளித்ததுடன் கட்சிக்காக‌க் கணக்கில்லாத நேரம், சட்ட ஆலோசனை போன்றவற்றை வழங்கியுள்ளார். லோக்பால் மசோதா உருவாக்கத்தில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். தனது எண்ணம், செயல், மூச்சு எல்லாவற்றாலும் அவர் கட்சிக்காக உழைத்துள்ளார். ஆம், பல்வேறு காரணங்களில்னால் கட்சியை வழிநடத்த நீங்கள் சரியான நபர் அல்ல என அவர் உணர்ந்த போது அதை வெளிப்படையாகக் கூறியுள்ளார். மேலே சொன்ன தார்மீகக் சமரசங்கள் தவிர கட்சியின் சட்டம் மற்றும் விதிகளை நீங்கள் தொடர்ந்து மீறி வருவதை, கட்சிக்கான எந்த அமைப்பும் உருவாவதை அனுமதிக்காமல் இருந்ததோடு (உங்கள் ஆதரவாளர் குழு தவிர) கட்சிக்கான கொள்கைகளை வகுப்பதில் ஆர்வம் இல்லாமல் இருப்பதையும் அவர் கவனித்திருக்கிறார்.

இரண்டு ஆண்டுகளாக நாம் அமைத்த கொள்கைக் குழுக்கள் சமர்ப்பித்த விரிவான அறிக்கைகள், உங்களுக்கு நேரம் இல்லாத காரணத்தாலோ அல்லது அந்த அறிக்கைகளைப் படித்துப்பார்த்து தீர்மானிக்க மனம் இல்லாததாலோ புழுதி படிந்து கிடக்கின்றன. கிரண் பேடி மற்றும் அஜய் மகேனுக்கு அடுத்தபடியாக முதல்வர் பதவிக்கு மூன்றாவது தேர்வாக உங்களைச் சொன்னதாக என் தந்தை மீது குற்றம் சாட்டுகிறீர்கள். உங்கள் குணாதிசயத்தில் உள்ள குறைகளை எல்லாம் கவனித்த பிறகு அவர் கூறிய நேர்மையான கருத்து அது. இருந்தும் அதை நான் வெளிப்படையாக மறுத்துள்ளேன். ஆனால் அதன் பிறகு நடந்தவற்றைப் பார்க்கும் போது குறிப்பாக தேசியச் செயற்குழுவில் நீங்கள் கட்டவிழ்த்துவிட்ட திட்டமிட்ட கூச்சல் குழப்பங்களைப் பார்க்கும் போது அவர் சரியாகச் சொல்லியிருக்கிறார் என்றே தோன்றுகிறது.

எனது சகோதரி ஷாலினி குப்தா மற்றும் மேலும் பல தகுதி வாய்ந்த நபர்கள் தாங்கள் வெளிநாடுகளில் பார்த்துக் கொண்டிருந்த நல்ல வேலையை விட்டு விட்டு, உலகத்தரம் வாய்ந்த அமைப்பாகத் திகழும் வகையில் முறையான பிரிவுகள் மற்றும் ஆற்றலைக் கொண்டிருக்கக் கூடிய சிறந்த மற்றும் நம்பகமான அமைப்பை உருவாக்க உங்களுக்கு உதவுவதற்காக வந்தனர். பலமுறை நீங்களே நாட்டின் நலனுக்காக ஷாலினியை வேலையை விடச்சொல்லி இருக்கிறீர்கள். அமைப்பு மேம்பாட்டு ஆலோசகராக அவரது பொறுப்பு ஆலோசனை நோக்கிலானது மட்டுமே. அவர் நியமிக்கப்படுவதற்கு முன் பிஏசியில் விவாதிக்கப்பட்டது போல கட்சியில் எந்த அதிகாரமும் உள்ள பதவி அல்ல என்றும் நீங்கள் கூறியுள்ளீர்கள். எனினும் காலப்போக்கில் இது தொடர்பான எந்த தொழில்முறையான ஆலோசனையும் உங்களுக்குத் தேவைப்படவில்லை. மாறாக இது போன்ற எந்தத் தொழில்முறை திறனும் இல்லாத அசுதோஷை நீங்கள் கட்சியின் ஒவ்வொரு பிரிவையும் உங்கள் ஆதரவாளர் குழுவின் நீட்டிப்பாகவும், உங்களுக்கு மட்டுமே கட்டுப்பட்டு இருக்கக்கூடியதாகவும் இருக்கும் வகையிலான மாற்றுத் திட்டத்தை உருவாக்கித்தரக் கேட்டீர்கள்.

உங்களைப்போல நான் கட்சிக்குத் தொண்டாற்றவில்லை என்பது உண்மைதான் அரவிந்த். நான் உண்ணாவிரம் இருக்கவில்லை. சிறைக்குச் செல்லவில்லை. 2ஜி, க்மோல்கேட், சிபிஐ இயக்குனர், 4ஜி, ரிலையன்ஸ் கேஸ் கொள்ளை, ஜிஎம் உணவுக்கு எதிராக, அணு உலைகள், ஆபத்தான நீர்மின் திட்டங்கள், 66ஏ பிரிவு, புகையில் மற்றும் குட்கா உள்ளிட்ட பல்வேறு ஊழல்களுக்கு எதிராக பொதுநலன் நோக்கிலான மனு தாக்கல் செய்வதில் தான் கவனம் செலுத்தியிருக்கிறேன். எனது மற்ற நேரத்தை கட்சிக்குச் சட்டரீதியான மற்றும் பிற ஆலோசனைகள் வழங்குவதிலும், நீதிமன்றங்களில் வழக்குகளைச் சந்திப்பதிலும் செலவிட்டிருக்கிறேன். கட்சியில் எந்த அதிகாரப் பதவியிலும் நான் விருப்பம் கொண்டதில்லை. கட்சி அதன் அடிப்படைக் கொள்கைக்கு உண்மையாக இருப்பதை உறுதி செய்து கொள்வதை மட்டுமே எனது பொறுப்பாகக் கருதியிருக்கிறேன். இதன் காரணமாகவே அது எப்போதெல்லாம் பாதை மாறியிருக்கிறதோ அப்போதெல்லாம் குரல் கொடுத்திருக்கிறேன்.

அரவிந்த், இந்த கட்சி ஆயிரக்கணக்கான மக்களின் லட்சிய நோக்கால் உருவாக்கப்பட்டது. குறிப்பாக மாற்று அரசியலுக்கான வாகனமாகத் திகழக்கூடிய தூய்மையான மற்றும் வெளிப்படையான அரசியலைக் கொண்டு வரக்கூடிய ஒரு கட்சியை உருவாக்க தங்கள் வியர்வையையும் நேரத்தையும் ஆற்றலையும் பணத்தையும் செலவிட்ட இளைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இக்கொள்கைகள் கட்சியை இப்போது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உங்கள் மற்றும் உங்கள் ஆதரவாளர் குழுவால் புறக்கணிக்கப்படுகிறது. இது தலைமை சார்ந்த, மேலிட கட்டளையைக் கேட்டு செயல்படும் கட்சியாக மாறிவிட்டது.

உங்களிடம் உள்ள 5 ஆண்டுகளில் தில்லி அரசைச் சிறப்பாக நடத்துவதன் மூலம் எல்லாவற்றையும் சரி செய்து விடலாம் என நீங்கள் நம்புகிறீர்கள். நீங்கள் நல்ல நிர்வாகத்தைக் கொடுத்தால் கட்சிக்கு என்ன செய்தீர்கள் என்பதை மக்கள் மறந்துவிடுவார்கள் என நினைக்கிறீர்கள். காங்கிரஸ், பாஜக போன்ற வழக்கமான கட்சிகள் கூட நிர்வாகத்தை கொடுத்துள்ளன. ஆனால் நாம் துவங்கிய தூய்மையான, கொள்கை அடிப்படையிலான அரசியல் மற்றும் ஊழல் இல்லாத நிர்வாகம் எனும் கன‌வானது மிகவும் பெரியது. நீங்கள் நடந்து கொண்ட விதம் மற்றும் நீங்கள் வெளிப்படுத்திய குணாதிசயப் பண்புகளை பார்க்கும் போது ஆம் ஆத்மி கட்சி உருவாக்கப்பட்ட தூய்மையான மற்றும் கொள்கை அடிப்படையிலான அரசியல் எனும் இந்தக் கன‌வு கொடுங்கன‌வாக மாறிவிடுமோ என்ற அச்சம் எனக்கு இருக்கிறது. இருந்தாலும் நீங்கள் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்.

விடைபெறுகிறேன். நல்வாழ்த்துக்கள்.

பிரஷாந்த்

***

License

Icon for the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License

தமிழ் - மின்னதழ் 2 Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book