சான்டல்வுட்டின் டாரன்டீனோ

அதிஷா

தமிழ்நாட்டில் கன்னடப்படங்கள் பார்க்கிறவர்கள் எண்ணிக்கை என்னோடு சேர்ந்து இருநூற்றி ஒன்றாக இருக்கலாம். எப்போதாவது ரீசசன் காலத்தில் சென்னையில் சில திரையரங்குங்களில் கன்னடப்படங்கள் திரையிடப்படுவதுண்டு. டோலிவுட்டும் மல்லுவுட்டும் இங்கே கோலோச்சுகிற அளவிற்கு சான்டல்வுட்டிற்கு வரவேற்பில்லை. கன்னட ஹீரோயின்களோ அதன் மொழியோ இதற்கு காரணமாக இருக்கலாம். அது எளிதில் காணக்கிடைப்பதில்லை என்பதும் காரணமாயிருக்கலாம்.

கடைசியாக சத்யம் தியேட்டரில் விஷ்ணுவர்தன் படமொன்று வெளியான நினைவு. பார்க்க நினைத்துப் பார்க்க முடியாமல் போன படம். முன்பு சாய்குமார் நடித்த சில கன்னடப்படங்கள் தமிழ் டப்பிங்கில் வெளியாகும். எல்லா படங்களிலும் அவர் போலீஸாக நடித்திருப்பார். கெட்ட வார்த்தைகளை மானாவாரியாக வாரியிரைப்பார். கன்னட பக்திப்படங்கள் கூட அடிக்கடி டப்பிங் ஆவதுண்டு. ஆனால் அவை தெலுங்கா கன்னடமா என்று குழப்பத்தோடுதான் காட்சி தரும் (எஸ்பிபி, நெப்போலியன் நடித்த சாய்பாபா படம் கூட ஒன்று உண்டு).

சில வாரங்களுக்கு முன்பு கூட முரட்டுக்கைதி என்கிற படம் வெளியாகி சக்கைப்போடு போட்டதாக தினத்தந்தியில் போட்டிருந்தார்கள். அதற்கு முன்பு தண்டுபால்யா என்கிற படத்தை கரிமேடு என்கிற பெயரிலும் வெளியிட்டார்கள். அவ்வளவுதான் நமக்கும் சான்டல்வுட்டுக்குமான நெருக்கம்.

இவற்றைத் தவிர்த்து திரைப்பட விழாக்களில் திரையிடப்படும் கிரிஷ் கர்னாட், காசரவள்ளி வகையறா படங்கள் அறிவார்ந்த சமூகத்திற்கு நெருக்கம். உபேந்திரா, நான் ஈ சுதீப், வீரப்பன் கடத்தியதால் ராஜ்குமார், அவர் மகன் சிவராஜ்குமார், விஷ்ணுவர்தன் என நமக்குத் தெரிந்த கன்னட உலகம் ரொம்பவே சின்னது. ஆனால் அங்கும் வெற்றிமாறன்களும், கௌதம் மேனன்களும், நலன் குமாரசாமிகளும் இருக்கவே செய்கிறார்கள்.

லூசியா அதற்கு நல்ல உதாரணம். அது போலவே அங்கு வெவ்வேறுவிதமான மாற்றுமுயற்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன. புதிய இளைஞர்கள், வித்தியாசமான களங்கள், இதுவரை எடுத்துக்கொள்ளாத பின்னணி, படமாக்கலில் உலகத் தரத்தை எட்டுதல் என்று இளைஞர்கள்தான் அங்கே டாப் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். 2014ல் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படங்களில் பாதி பெரிய நடிகர்கள் இல்லாத புதிய இயக்குனர்கள் இயக்கிய புதுமுகங்களின் படங்களே.

‘உளிடவரு கண்டன்டே (Ulidavaru Kantante) சென்ற ஆண்டு துவக்கத்தில் வெளியான கன்னடப்படம். 2014ன் எல்லா டாப் டென் கன்னடப்பட பட்டியல்களிலும் இடம்பிடித்திருந்த ஒரு சூப்பர் ஃப்ளாப் இது! ஆனால் படத்தின் இயக்குனர் ரக்சித் ஷெட்டியை கர்நாடகாவில் கொண்டாடி கொலு வைத்திருக்கிறார்கள். தமிழில் வெளியான ஆரண்ய காண்டம் மாதிரியான வித்தியாசமான கலாபூர்வமான கமர்ஷியல் படம் இது. அதனாலேயே சான்டல்வுட்டில் தோல்வியடைந்தாலும் விமர்சகர்களின் ஏகோபித்த ஓகோபித்த ஆதரவை பெற்றது.

படம் வெளியான சமயத்தில் இப்படத்தினைக் காண பெங்களூருவுக்கு பஸ் ஏறிவிடவும் முடிவெடுத்திருந்தேன். ஆனால் பெங்களூருவில் இப்படம் சப்டைட்டிலோடு திரையிடப்படவில்லை என்பதால் திட்டம் கைவிடப்பட்டது.

படத்தின் திருட்டு விசிடி கிடைக்குமா என சல்லடைபோட்டு தேடினேன். சகல எழுத்தாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் திரைப்பட ஆளுமைகளுக்கும் சிடி விற்கிற பார்சன் மேனர் பஷிரிடமும் இப்படத்தின் குறுந்தகடு கிடைக்கவில்லை. பஷிரிடம் கிடைக்காத குறுந்தகடு தமிழ்நாட்டின் எந்த மூலையிலும் இண்டு இடுக்கிலும் கிடைக்காது. இப்படி எங்குமே அப்படம் காணக்கிடைக்காத நாளில் அப்படத்தை நண்பர் ஒருவர் எங்கோ இணையத்தில் தரவிறக்கி கொண்டு வந்து தந்தார் – சப்டைட்டில் உடன். ஆர்வத்தோடு படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன். எதிர்பார்ப்பை ஒரு துளிகூட படம் ஏமாற்றவில்லை. நிச்சயமாக கன்னட ஆரண்யகாண்டம் தான்! ஒரு கொலை நடக்கிறது. அதைச் செய்தவர் யார் என்கிற விசாரணையில் வெவ்வேறு நபர்களால் சொல்லப்படும் ஐந்து கதைகள், ரஷமோன் பாணியில் கதை வெவ்வேறு பார்வைகளில் சொல்லப்படுகிறது. ‘’உளிடவரு கண்டன்டே’’ என்றால் as seen by the rest என்று அர்த்தம். ஐந்து கதைகளும் வெவ்வேறு விதமான குணங்களில் நிறங்களில் திரைக்கதை அமைப்பில் வித்தியாசப்படுத்தப்பட்டு படைக்கப்பட்டிருக்கின்றன.

மால்பே என்கிற எழில்மிகு கடற்கரை கிராமம்தான் பின்னணி. அங்குள்ள எளிய மனிதர்களையும் அதன் சடங்குகளையும் இசையையும் வாசனை மாறாமல் நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். பாத்திரத்தேர்வும் அவர்களுடைய மிகச்சிறந்த நடிப்பும் படத்திற்கு பலம். எண்ணற்ற உலகப்படங்களினால் உந்தப்பட்டு அதே பாணியில் இப்படத்தை எடுத்திருப்பார் போல இயக்குனர். ஏகப்பட்ட உலகப்பட முன்மாதிரிகளை பார்க்க முடிந்தது. ஒரு பகுதி மொத்தமும் ‘’சின்சிட்டி’’ படத்தின் பாணியில் எடுக்கப்பட்டிருந்தது. படத்தின் வசனங்களும் பல காட்சிகளும் க்வான்டின் டாரன்டினோவின் பாதிப்பில் உருவாக்கப்பட்டிருப்பதை டாரன்டினோ ரசிகர்களால் எளிதில் உணரமுடியும். படத்தின் க்ளைமாக்ஸ் மொத்தமும் ஒரு பாடலில் வைத்திருந்ததும் பிடித்திருந்தது.

இப்படத்தின் திரைக்கதை பெரிய அளவில் பேசப்பட்டது. காரணம் படத்தின் கதை அத்தனை சிக்கலானது. இதற்கு திரைக்கதை பண்ணுவது எளிதான காரியம் இல்லை. நேர்கோட்டில் அமையாத கதை சொல்லல் வேறு! இந்த முறுக்குப் பிழிகிற திரைக்கதையை எவ்வித குழப்பங்களும் இல்லாமல் கொடுத்ததற்காகவே படம் நிறைய விருதுகளையும் வென்றிருக்கிறது. படத்தின் திரைக்கதையை முழுமையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அப்படத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலேயே வெளியிட்டிருக்கிறார்கள்.

இவ்வளவு நல்ல படத்தில் நாயகன் மட்டும் திருஷ்டிபோல இருந்தார். ஓவர் ஆக்டிங். அலட்டிக்கொள்ளாமல் நடிக்க முயற்சி செய்து ரொம்பவே அலட்டியிருக்கிறார். நல்ல படத்திற்கு ஏன் இப்படி ஒருவ‌ரைப் பயன்படுத்தினார்கள் என்று தேடினால் அவர் தான் படத்தின் இயக்குனர்! ரக்சித் ஷெட்டி. இதுதான் அவர் இயக்கிய முதல்படம்.

இதற்குமுன்பு அவர் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். அவர் நடித்த ‘’சிம்பிள் ஆகி ஒந்த் லவ்ஸ்டோரி’’ சூப்பர் டூப்பர் ஹிட். ‘’லூசியா’’ வெளியான அதே சமயத்தில் வெளியாகி சக்கைபோடு போட்ட ரொமான்டிக் திரைப்படம் இது. மிகக்குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம், முழுக்க புதுமுகங்கள் மட்டுமே கொண்டது. பாக்ஸ் ஆபீஸில் பல ரெகார்டுகளை தகர்த்திருக்கிறது. இப்படத்தையும் தேடத்துவங்கினேன். கடைசியில் அந்த ‘’நண்பர் ஒருவர்’’ தான் அதையும் தன்னுடைய ரகசிய இணையதளத்தின் வழி தரவிறக்கிக் கொடுத்தார்.

அழகழகான வசனங்கள்தான் படத்தின் பலமே. மிகச்சில இடங்கள் தவிர்த்து. ஒரு நிமிடம் கூட அலுப்புதட்டாமல் செல்லுகிற மென்மையான காதல்கதை. இப்படியெல்லாம் தமிழில் காதல்கதைகள் எடுக்கப்படுவதேயில்லை. Romcom வகையறா படங்களை தமிழ் சினிமாவில் வழக்கொழிந்துவிட்டன. குட்டிக் குட்டியாக க்யூட்டான விஷயங்களின் கோர்வையாக புன்னகைக்க வைக்கும் காட்சிகள். எல்லாவற்றையுமே கேலியுடன் சித்தரிக்கும் ஒரு சிறுபிள்ளைத்தனம். வசனங்களில் யதார்த்தமாக தொனிக்கும் கவித்துவம். மௌனராகம் ரேவதி – கார்த்திக் மாதிரியான நாயக- நாயகியின் பாத்திரப்படைப்பு! என எல்லாமே ஈர்த்தது. இரண்டே கதாபாத்திரங்களை மட்டுமே வைத்துக்கொண்டு கொஞ்சம் கூட சோர்வடைய வைக்காத இரண்டு மணிநேர சுவாரஸ்யம் இத்திரைப்படம்.

படத்தின் இயக்குனர் சுனி ரீமேக் உரிமையை தமிழில் யாருக்கும் தந்துவிடக்கூடாது என வேண்டிக்கொண்டேன்.

***

License

Icon for the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License

தமிழ் - மின்னதழ் 2 Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book