சாலையோரம்
பிரபாகரன்
அந்தி மஞ்சள் மாலையை
கொஞ்சம் கொஞ்சமாய்
விழுங்கிக் கொண்டிருந்தன
நிர்மலமான நீல மேகங்கள்
கண் மூடித் திறப்பதற்குள்
கடந்து சென்ற வாகனங்களை
எண்ணத் தோன்றவில்லை
அவசரங்களின் சந்தோஷங்களிலேயே
பழகியவர்களை
எதுவும் செய்துவிட முடியாது
தொலைந்து விட்டதைத்
தேட வந்தது போல
சுற்றிக்கொண்டிருந்தது
ஒரு வெள்ளை நாய்
சற்று நேரம் கழித்து
நீ பார்த்தாயா? என்று
கேட்பதைப் போல
என்னைப் பார்த்தது
யாருக்கு தெரியும் –
இவ்வளவு வேகத்தில் பயணிக்கும்
இவர்களுக்கு மத்தியில்
மெல்ல நடக்க ஆசைப்படும்
என் சின்னப் பிரியத்தைப் போல
அதற்கும் ஏதேனும்
ஒரு பிரியம் தொலைந்திருக்கலாம்
எழுதிக் கொண்டிருக்கும் என்னை
வேடிக்கை பார்த்துக்
கடந்து செல்பவர்களை
அவர்களைப் போலவே
என்னால் வித்தியாசமாய்ப்
பார்க்க முடியவில்லை
சொல்லப்போனால் எனக்கு
அவர்கள் ஒவ்வொருவரையும்
பிடித்திருந்தது
இரண்டு யுவதிகளுடன்
நடந்து செல்லும் ஒருவன்
ஏதோ சொல்ல,
திரும்பி பார்க்கும் இருவரும்
தங்களுக்குள் ஏதோ சொல்லி
சிரித்துக்கொண்டே சென்றார்கள்
பக்கவாட்டில் கடந்து சென்ற
கருப்புச் சட்டை போட்ட இளைஞி
எதிரே திரும்புகையில் வந்த
ஒரு இருசக்கர வண்டிக்காரன்
சற்று நிலைதடுமாறி
பின் சுதாரித்து
கோபத்தில் கேட்ட கேள்விகள்
காற்றில் மட்டும்
அனல் வீசிக்கொண்டு இருந்தன.
அவள் காதுகளில்
காதல் வழிய
யாருடனோ பேசிப்
போய்க்கொண்டிருந்தாள்.
மூன்று மாடுகள்
கண்ணுக்குத் தெரிந்த புற்களை
காங்கிரீட் மத்தியில் தென்படும்
பச்சை நிறத்தினை சாப்பிட
பிரயத்தனம் கொண்டிருக்கையில்
கீழே கிடந்த
பிளாஸ்டிக் கப்களின்
காய்ந்த பானிபூரி
எச்சிலின் காரத்தினை
சுவைக்கத் தொடங்கி இருந்தது
செம்மி நாய் ஒன்று
பூ கட்டி விற்கும் பாட்டி
அன்றைய இரவிற்கான
வாசனையின் நறுமணங்களை
முழம் போட்டு
விற்கத் தொடங்கினாள்
முகமுதிர்க்கும் புன்னகை
உதிரிப் பூக்களோடு
ஏதும் பேசாமல்
வெகுநேரம் மௌனமாய்
விழிபேசிய காதலின்
பொறுமை தாங்காமல்
இருவரையும் பார்த்து
என்னங்க வேணும்? என்பதை
ஹிந்தியில் கேட்டுக்கொண்டிருந்த
பானிபூரிக் கடைக்காரரை
பார்த்து எனக்குள்
சிரித்துக் கொண்டே எழுந்தேன்
வாழ்க்கையின்
அழகான ஞாபகங்களைத் தொலைத்து
நினைவுகளை மட்டும்
சுமந்து கொண்டிருக்கும்
மனதினை இறக்கி வைக்க மனமின்றி
நடந்து போய்க்கொண்டிருக்கிறேன்
என் அறை நோக்கி.
***