பூமிகாவுக்கு உதவிய பூ
(சிறுவர் இலக்கியம்)
என். சொக்கன், என். நங்கை, என். மங்கை | ஓவியம் பிரதம் புக்ஸ்
ஓர் அழகான கிராமம். அங்கே மிருதுளா என்ற பெண் குடும்பத்துடன் வாழ்ந்துவந்தார்.
அவர் தினமும் தண்ணீர் எடுப்பதற்காக ஆற்றுக்கு நடந்து செல்வார். அப்போது அவர் தலையில் ஒரு குடம், இடுப்பில் ஒரு குடம்!
ஒருநாள், ஆற்றுக்குச் செல்லும் வழியில் மிருதுளா ஒரு சிறுமியைச் சந்தித்தார். அவள் பெயர் பூமிகா.
அவளைப் பார்த்து மிருதுளா கேட்டார், ’பெண்ணே, நீ யார்? ரொம்ப பதற்றமா இருக்கியே, என்னாச்சு?’
பூமிகா சொன்னாள், ‘ஒரு நரி என்னைத் துரத்திகிட்டு வருது!’
மிருதுளா பதறினார், ‘நரியா? எங்கே?! எங்கே?!’
‘இங்கே இல்லை, எங்க ஊர்ல!’ என்றாள் பூமிகா.
‘அப்படியா?’
’ஆமா, அந்த நரி என்னைச் சாப்பிடப் பார்த்துச்சு. நான் வேகமா ஓடி அதுகிட்டேயிருந்து தப்பிச்சுட்டேன்.’
‘அட, நீ தைரியமான பொண்ணுதான்’ என்று பூமிகாவைத் தட்டிக்கொடுத்தார் மிருதுளா.
’ஆனா, இப்போ நான் எப்படி என் வீட்டுக்குத் திரும்பிப் போறது? எனக்கு வழி தெரியலையே!’ என்று கவலையோடு கேட்டாள் பூமிகா.
‘உங்க கிராமம் எங்கே இருக்கு?’ என்று கேட்டார் மிருதுளா.
‘அதுதான் எனக்குத் தெரியலை’ என்றாள் பூமிகா, ‘அங்கே அழகான பண்ணைகள் இருக்கு, ஆடுகள், பசுக்கள், தென்னை மரங்கள், குரங்குகள் எல்லாம் இருக்கு, அப்புறமா, நான் வளர்க்கற ஒரு கோழி, அதோட பேரு க்ளக்கி, அது நல்லா உயரமா தாவிக் குதிக்கும், எங்கப்பாவோட மாமரத்தையே தாண்டிடும்!’
’இதை வெச்சு உன் கிராமத்தை எப்படிக் கண்டுபிடிக்கிறது? கஷ்டமாச்சே!’ கவலையோடு சொன்னார் மிருதுளா.
அப்போது, அருகே புதரில் இருந்த ஒரு மலர் பேசியது, ‘பூமிகா, கவலைப்படாதே, உன் கிராமம் எங்கே இருக்குன்னு எனக்குத் தெரியும்!’
‘அட, உனக்கு எப்படித் தெரியும்?’
‘என் அத்தை பையன் அங்கே இருக்கான், அவன் எனக்கு தேனீமெயில் அனுப்பும்போது, உன்னோட க்ளக்கியைப்பத்தி நிறைய சொல்லியிருக்கான்.’
’தேனீமெயிலா? அப்படீன்னா என்ன?’
‘அது உனக்குத் தெரியாதா? தேனீக்கள் பூவுக்குப் பூ தேன் எடுக்கப் போகும்போது, எங்க உறவுக்காரங்க, சிநேகிதங்ககிட்டேயிருந்து இதுபோல செய்திகளையும் கொண்டுவரும், அதுதான் தேனீமெயில்.’
’உங்க கிராமம் எங்கே இருக்குன்னு தேனீக்கள் எனக்குச் சொல்லியிருக்கு’ என்றது அந்த மலர்.
‘எங்கே? எங்கே? சீக்கிரம் சொல்லு!’
’இதோ, இந்த ஆறு இருக்கே, இந்தத் தண்ணி ஓடற திசையிலேயே கொஞ்ச நேரம் நீந்தினா உங்க ஊர் வந்துடும்!’
சட்டென்று பூமிகாவின் முகம் வாடியது. ’ஆனா, எனக்கு நீந்தத் தெரியாதே!’
‘கவலைப்படாதே பூமிகா’ என்றார் மிருதுளா. ’நான் அதுக்கு ஒரு வழி செய்யறேன்.’
உடனே, அவர் அங்கிருந்த சில குச்சிகளை எடுத்தார். அவற்றை ஒழுங்குபடுத்திக் கட்டினார். பரபரவென்று சில நிமிடங்களில் பூமிகாவுக்கு ஓர் அழகான தெப்பம் தயார்.
பூமிகா அந்தத் தெப்பத்தில் ஏறிக்கொண்டாள். மிருதுளாவுக்கும் பூவுக்கும் நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.
ஆறு மெதுவாக அவளை அழைத்துச் சென்றது. பூமிகாவுக்கு அந்தப் பயணம் மிகவும் பிடித்திருந்தது. தன்னருகே வந்து நீந்திய மீன்களை ஆர்வத்துடன் பார்த்தாள். தன் தந்தை, தாயைக் காண்பதற்கு அவள் ஆவலாக இருந்தாள்.
பூமிகா வருவதை அவள் தந்தை பார்த்துவிட்டார். மகிழ்ச்சியில் துள்ளியபடி வந்து அவளைக் கட்டிக்கொண்டார்.
அவளைப் பார்த்து ஊரில் எல்லாருக்கும் மகிழ்ச்சி, குறிப்பாக, அவளுடைய செல்லம் க்ளக்கிக்கு!
***