யாத்திரை
சௌம்யா
தாகமெடுக்கிறது தலை வலிக்கிறது
நாசி நுழைந்த ஈ குறுகுறுக்கிறது
ஒப்பாரிச் சத்தம் எரிச்சலூட்டுகிறது
திறக்க விழைந்த விழி துவள்கிறது
தொண்டைக்குள் ஊற்றப்படும்
மண்ணெண்ணெய் குமட்டுகிறது
கால் கட்டை விரல்கள் கட்டியது
வினோத அவஸ்தையளிக்கிறது
ஆளுயர ரோஜா மாலையொன்று
மார்பில் கிடந்து அழுத்துகிறது
தாரை தப்பட்டை கொட்டு முழக்கு
உடன் எழுந்தாட அழைக்கிறது
அழும் மனைவியை அணைத்து
ஆறுதல் கூறக் கை பரபரக்கிறது
மகளின் நில்லாத்தேம்பல் கண்டு
மனம் செய்வதறியாது பதறுகிறது
குத்தாய் இடப்பட்ட வாய்க்கரிசியைத்
துப்பத்தோன்றித் தோற்றுப் போகிறேன்
சடங்குகளையும் ஆயத்தங்களையும்
தடுக்கவியலாது படுத்துக் கிடக்கிறேன்
என்ன இயலாமையிது எப்படி மீள்வது?
ஓவென்ற கேவல் முடியாது ஓய்கிறது
மரணமென்பது இதுதானாவென்று
யோசிக்கையில் சங்கூதுகிறார்கள்
அள்ளித்தூக்க, அசைய இயலவில்லை
மயான வழியை மனம் கணக்கிடுகிறது
பெருங்குரலெடுத்த அழுகைகள் ஓய்ந்து
ஆண் குரல்கள் மட்டும் சப்தித்திருக்க
மின்மேடையின் அதிவேகக் கதவடைப்பில்
மறுத்துக் கதறி அலறவியலா அல்லலில்
எரியும் உடலில் செய்த ஒவ்வொரு பாவமாக
அசைபோட்டபடி அழியத் தொடங்குகிறேன்.
***