கேட்கத் தோன்றியது
தற்கொலை செய்து கொண்ட
இளம் பெண்ணை
மேஜையின் மேல்
கிடத்தி இருந்தார்கள்
உதிர்ந்த வானவில் போலிருந்தாள்
அழுது கொண்டிருந்த
அவள் குழந்தையை
யாரோ கையில் வைத்திருந்தார்கள்
செய்திக்குத் தேவையான
சில புகைப்படங்களை
எடுத்துக் கொண்டு திரும்பிய போது
வேகமாகத் திரும்பிப் போய்
அவள் கையைப் பிடித்துக்கொண்டு
ஏம்மா இப்படி செஞ்சிட்ட?
எனக் கேட்கத் தோன்றியது.
*
குறுங்கவிதைகள்
1
சொற்களை வைத்து
பூச்சாண்டி காட்டுகிறீர்கள்
பயப்படவும் முடியவில்லை
படிக்கவும் முடியவில்லை.
2
ஒரே கடவுள்
வேறு வேறு பெயரில்
இருந்தார்
ஒரே மனிதன்
வேறு வேறு பசியில்
இருந்தான்.
3
அமைதியாகப் போகிறது பேருந்து
இந்த வழித்தடத்தில்தான்
போன இரவு ஒரு பெண்ணை
வன்புணர்ச்சி செய்திருந்தார்கள்.
***