லஜ்ஜா : மதவாதத்தின் வன்முறை
லேகா இராமசுப்ரமணியன்
“இரண்டு மதங்களுக்கு இடையே நிகழ்வதே கலவரம் என்பவர்களோடு எனக்கு உடன்பாடில்லை. என்னளவில் கலவரம் என்பது கண்மூடித்தனமான நம்பிக்கைகளுக்கும், தீவிர சிந்தனைவாததிற்கும் இடையே நிகழ்வது.”
Religion is the opium of masses என்றார் காரல் மார்க்ஸ். அதன் அர்த்தத்தை முழுமையாய் உணர்த்துவதான படைப்பு தஸ்லிமா நஸ்ரினின் லஜ்ஜா நாவல். தஸ்லிமா மத ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், பெண்ணியச் சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளுக்கு ஆதரவாகவும் தொடர்ந்து போராடும் முற்போக்குச் சிந்தனையாளர், எழுத்தாளர்.
லஜ்ஜா நாவலில் மதவாதிகளுக்கு எதிராக முன்வைத்த கருத்துக்களுக்காக வங்கதேசத்தில் இருந்து வெளியேற்றப் பட்டவர். “பெண்களுக்கு எதிராகச் செயல்படும் எந்தவொரு மதமும் ஜனநாயகத்திற்கும், கருத்து சுதந்திரத்திற்கும், மனித உரிமைக்கும் எதிரானதே.” எனக் கூறும் தஸ்லிமா அடிப்படைவாதத்திற்கு எதிரான தன் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறார். 1993ல் வெளிவந்த இந்நாவல் 20 ஆண்டுகள் கழித்தும் அதன் கருத்தாக்கதிற்காய் இன்றும் விவாதிக்கப்படுகிறது. மேலும் இருபதற்கும் மேற்பட்ட உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
1992ம் ஆண்டு இந்தியாவில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்திற்குப் பிறகான வங்கதேச மதக்கலவரங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது தஸ்லிமாவின் லஜ்ஜா. நாவலைக் குறித்து விரிவாகப் பேசுவதற்கு முன் பங்களாதேஷ் பிரிவினை குறித்துக் கொஞ்சம்: 1947ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பு இரண்டாகப் பிரிந்தது. அதில் வங்கதேசம் (கிழக்கு வங்காளம்) பாகிஸ்தானின் அங்கமாய் இருந்தது. 1971ல் நிகழ்ந்த மக்கள் புரட்சிக்குப் பின் சுதந்திர நாடு அந்தஸ்து பெற்று வங்கதேசம் ஆனது. பின்னாளில் மதசார்பற்ற அரசியல் சாசனம் மாற்றி அமைக்கப்பட்டு இஸ்லாமிய தேசமாக அறிவிக்கப்பட்டது. ஆயினும் தலைமுறை தலைமுறையாய் வங்காளத்தில் வாழ்ந்து வரும் இந்துகள் தம் தாய்நாட்டை விட்டு விலகாது அங்கு வசித்து வருகின்றனர்.
“தன் பிறப்பை மறந்தவனால் மட்டுமே தன் பிறப்பிடத்தை மறக்க முடியும்.”
1992ல் இந்தியாவில், பாபர் மசூதி இடிக்கப்பட்டத்திற்கு மறுநாள் வங்கதேசத்தில் ஓர் இந்துக் குடும்பத்தின் கலவர மனநிலையை கண்முன் கொண்டு நிறுத்தும் விவரிப்புகளோடு துவங்குகிறது நாவல். மருத்துவர் சுதாமய் தன் தாய்நாடான வங்காள தேசத்தின் மீது அசைக்க முடியாப் பிரியம் கொண்டவர். மனைவி கிரண்மயி, மகன் சுரஞ்சன், மகள் மாயா என எளிய குடும்பம் அவருடையது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் அந்த தேசத்தில் தொடர்ந்து வாழ்வது குறித்து வெவ்வேறு எண்ணங்கள் உள்ளன. மதத்தின் காரணமாய் அந்த தேசதில் பல்வேறு துன்பங்களை கடந்து வந்தவள் கிரண்மயி. தன் உறவினர்களைப் போல மேற்கு வங்கத்திற்கு குடிபெயர்த்து போய்விடத் துடித்துக் கொண்டிருக்கும் குடும்பத் தலைவி. கணவனைச் சார்ந்து இருப்பதால் அவள் விருப்பம் எப்பொழுதும் கனவே.
மகள் மாயாவிற்கோ கொல்கத்தா நகரின் மீது பெரிய ஆர்வம் இல்லை. இஸ்லாமிய இளைஞன் ஒருவனைக் காதலிக்கிறாள். அவள் அறிந்த வரையில் அந்த தேசத்தில் பயம் கொள்ளும் அளவுக்கு எதுமில்லை. ஆபத்தில் இருந்து அவளை பாதுகாக்க இஸ்லாமிய நண்பர்கள் அவளுக்குண்டு. கதை நாயகனாய் வலம் வரும் சுரஞ்சன், அப்பாவைப் போலவே தாய் நாட்டின் மீது பற்று கொண்டவன். புத்தக ஆர்வத்தில் மதச்சார்பற்ற கொள்கைகளை மேடைகளில் பேசித் திரியும் இளைஞன். பாபர் மசூதி குறித்தோ, அது இடிக்கப்பட்டதற்கான காரணம் குறித்தோ முழுமையாய்த் தெரியாத நிலையில் அவனால் அங்கு நிகழும் வன்முறைகளை நம்ப இயலவில்லை.
கலவர வீதிகளில் தனியொருவனாய்ச் சுற்றி வருகிறான். இஸ்லாமிய நண்பர்களோடு கைகோர்த்து திரிந்த தெருக்கள் இன்று அச்சம் தருவதாக உருமாறியுள்ள உண்மையை அவனால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. கால் போன போக்கில் நண்பர்களைத் தேடி அலைகிறான். கலவரக்காரர்கள் வீடுபுகுந்து அவன் தங்கையைக் கடத்திக் கொண்டு போன பின் அவன் செயல்கள் பைத்தியகாரத்தனத்தின் உச்சத்தை அடைகிறது. தனித்து விடப்பட்ட தேசத்தில் குடும்பத்தைப் பாதுகாக்க இயலாத கையறு நிலை. பிறந்து வளர்ந்த அன்னை பூமியில் இன்று மதத்தின் பெயரால் துண்டிக்கப்பட்டு சீரழிவது அவன் கனவிலும் நினைக்காதது. சுரஞ்சனின் மனவோட்டங்கள் மதத்தின் பெயரால் வாழ்வு சூனியமாகிப் போன எத்தனையோ இளைஞர்களின் குரலாக ஒலிக்கின்றது.
“எல்லா மதங்களுமே அமைதியை எப்படி அடைவதுன்னு தான் போதிக்குது. ஒரு அவலம் என்னன்னா, அதிகபட்ச அமைதிக் குலைவு மதத்தின் பெயரால் தான் நடக்குது.”
1960களின் துவக்கத்திலே இருந்தே அங்கொன்றும் இங்கொன்றுமாய் நிகழ்ந்து கொண்டிருந்த மதக்கலவரமானது பாபர் மசூதி இடிப்பிற்குப் பிறகு பெரும் அளவில் தேசம் முழுவதும் வெடித்ததாகச் சொல்லப்படுகின்றது. அதற்கு ஆதாரமாக இந்துகள் மீதான பல்வேறு தாக்குதல் சம்பவங்களின் அறிக்கைத் தகவல்களைச்சமர்ப்பிக்கிறார் தஸ்லிமா. கற்பழிப்பு, கொலை, கொள்ளை, சொத்து அபகரிப்பு என மதத்தின் பேரால் நிகழ்த்த அத்தனை நிகழ்வுகளையும் தேதி குறிப்பிட்டுச் சுட்டிக் காட்டியுள்ளார். இதன் காரணமாக நாவலில் தொனிக்கும் ஆவணத்தன்மையைத் தவிர்க்க இயிலவில்லை. நீளும் அந்தக் குற்றப்பட்டியல் மதசார்பற்ற சமூகம் மீதான நம் நம்பிக்கையை அசைத்துப் பார்ப்பது.
மதக்கலவரத்தின் கோரவிளைவுகளை ஒரு குடும்பத்தின் கதை கொண்டு விளக்க முயன்று வெல்கிறார் தஸ்லிமா. இந்துப் பெண்கள் பொட்டு வைத்துக் கொள்ளவும், பிடித்த உடையை உடுத்தவும், சங்கீதம் பயிலவும் எதிர்கொண்ட இடறல்களை சிறுபான்மையினத்தின் மீதான வன்முறை என்று வகைப்படுத்துகிறார். போலவே சுதாமய் பதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெறுவதையும், சுரஞ்சன் 30 வயதை கடந்து வேலையில்லாமல் இருப்பதையும்.
1970களில் நிகழ்ந்த வங்கதேச சுதந்திரதிற்கான போராட்டத்தில் தான் பங்கு பெற்ற நினைவுகளை சுதாமய் மீட்டெடுத்துக் கொள்வது சுவாரஸ்யம். கைதிகள் முகாமில் மிகுந்த சித்ரவதைக்குள்ளான சுதாமய், வங்கதேச விடுதலைப் போரில் உயிரைப் பொருட்படுத்தாது போராடியவர். அப்படியானவர் இன்று பூர்வீகச் சொத்துக்களை இழந்து, மனைவி மக்களோடு பரிதாப நிலையில் உழன்று நிரந்தர நோயாளி ஆகிறார், தேசம் அவரை முற்றிலுமாய் கைவிட்டதின் காரணி மதம் மட்டுமே. இத்தனை சம்பவங்களுக்குப் பிறகும் அந்தத் தேசத்தை விட்டு வெளியேறத் தயாராக இல்லாத அவரின் மனநிலை நெகிழச் செய்வது.
மேலோட்டமாகப் பார்த்தால் இந்நாவல் குறிப்பிட்ட மதச்சார்பு கொண்டதாகத் தோன்றலாம். உண்மையில் தஸ்லிமாவின் இப்படைப்பு மொழி, இனம், தேசம் எனப் பாகுபாடுகளற்று, எல்லோருக்குமான நாவல்.
வசீகரிக்கும் இலக்கிய நடையோ, சுவாரஸ்ய கதை சொல்லலோ இல்லாதது நாவலின் மிகப்பெரிய குறை. இருப்பினும் மதக் கலவரங்களுக்கு எதிராகவும் அதைத் தூண்டி விடும் அரசியல் கட்சிகளுக்கு எதிராகவும் ஆதாரப்பூர்வப் படைப்பைச் சமர்ப்பித்துள்ள தஸ்லிமாவின் துணிச்சல் பிரமிக்க வைப்பது.
மதத்தின் பெயரால் நிகழும் வன்முறைகளுக்கு எதிரான கருத்துக்களை மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு உரத்துப் பேசுவதால் இந்நாவல் வாசித்தே தீர வேண்டிய பட்டியலில் சேர்கிறது.
லஜ்ஜா | தஸ்லிமா நஸ்ரின் | தமிழில் – கே.ஜி.ஜவஹர்லால் | பக்கங்கள்: 232 | விலை: ரூ.200 | வெளியீடு: கிழக்கு
***