: Editor’s Choice
லீனா மணிமேகலை கவிதைகள்
நட்சத்திரத் தூசி
இன்று முன்விழித்தேன்
உறங்கும் அவனைக் கண்கொட்டாமல் பார்க்கிறேன்.
சற்று திறந்திருக்கும் அவன் உதடுகள்
இன்னும் என்னுடன் பேசிக்கொண்டிருக்கின்றன
இடது விழியில் கசிந்திருக்கும் நீர்க்கோட்டில்
ஒரு நிம்மதியற்ற நிம்மதி
இரண்டு நாள் தாடியின் வெள்ளி கூடிய முகத்தில்
நேற்றைய இரவின் நட்சத்திரத் தூசி
அதிராத மூச்சில் ஏறி இறங்கும் கூடு
சிறுகாற்றில் ஆடும் நெஞ்சுமயிர்
என் கழுத்தில் கிடந்த அவன் கைகளில்
மூன்று விரல்கள் என்னை உரசிக்கொண்டும்
இரண்டு விரல்கள் அவனைச் சுட்டிக்கொண்டும்
இருந்தன போன்று தோன்றியது
அவன் பெயரைச் சொல்லி அழைத்தேன்
எனக்கே கேட்கவில்லை
திரைச்சீலை கசித்த சூரியனால்
அவனின் நிச்சலனம்
சித்திரத்தன்மையை அடைந்து கொண்டிருந்தது
எழுந்தவுடன் அவன் கால்விரல் நகங்களைச் சீராக வெட்டிவிட வேண்டும்
நீ எனக்கு யாரடா என்ற கேள்வியை இப்போதைக்கு ஒத்தி வைக்கிறேன்.
*
இடைவெளி
திரையரங்க இருளில் தான்
அவன் முதன்முதலாக முத்தமிட்டான்
சட்டென ஒளி கொத்தி எடுத்தது போல
கண்கள் மூடி மூடித் திறந்தன
உரசிக்கொண்டிருந்த விரல்களை
இறுக்கிக் கொள்ளவும் தோன்றவில்லை
உடலொன்றும் மனமொன்றுமாய்
சிமிக்ஞைகளை சிதறிக்கொண்டிருந்தன
அவன் இன்னும் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தது
என் கண்களின் கடைக்கோடி இமை முடிகளில் அசைந்தது
அவன் உதடுகளின் சுரசுரப்பை அசைபோட்டு முடிக்கும்வரை
திரும்பி முகம் பார்க்க ஏலாது என்று தோன்றியது
முந்தைய காதல் முதல் முத்தத்தோடு முற்றுப் பெற்ற நினைவில்
அச்சங்கள் உயிர் பெற்றன
ஓடிக்கொண்டிருந்த படம்
கூடுதல் இரைச்சலானது
காட்சி கலைந்ததா மக்கள் களைந்தனரா
தெரியவில்லை
ஒரு குறுகிய தெருவில் நடந்துக்கொண்டிருந்தோம்
மித ஒளியில்
மிக அருகருகில்
ஆனால் தொடவில்லை
எப்படியிருந்தது எனக் கேட்டான்
ஒலிக்கத் தொடங்கியிருந்த நடுநிசி பூச்சியின் ரீங்காரம்
முடியும் வரை காத்திருந்து
ஒரே சத்தமாக இருந்தது என்றேன்
எப்படியிருந்தது எனத் திரும்பவும் கேட்டான்
இப்போது பூச்சி காத்திருந்தது
முகத்தை ஏறிட்டுத் திருத்தமாகப் பார்த்தேன்
அவன் பார்வையைத் தாழ்த்தவில்லை
சற்று எக்கி முத்தமிட்டேன்
திறந்திருந்த அவன் கண்களை
மென்மையாக மூடினேன்
நடுக்கம் ஒரு ரேகை போல
உயிரின் குறுக்கே ஓடியது
ஆயுள் ஓர் இரண்டக நிலை.
***