"

6

கங்கணம் : மணம் எனும் கயிறு

கார்த்திக் குமார்

நம் சமூகத்தில் காமம் என்னும் அடிப்படையைத் தேவையைத் தீர்க்க சுமூகமான வழி திருமணம் தான். பெருமாள்முருகனின் கங்கணம் நாவல் சமூகக் கட்டமைப்பு, சாதியப் பற்று, பொருளதாரத் தேடல், அந்தஸ்து, ஆடம்பரத் தேவைகள் மற்றும் சொந்த உறவுகளால் அலைகழிக்கப்படும் ஒரு முதிர்ந்த ஆண் எவ்வகையில் தன் காம அவஸ்தையைத் தணிக்க கல்யாணத்தை நாடிப் போராடுகிறான், அதில் அவன் வெற்றி பெறுகிறானா என்று எளிய நடையும் கூரிய பார்வையும் கொண்டு எழுதப்பட்டது.

கங்கணம் என்பது வைராக்கியம்! ஒரு காரியத்தை எடுத்து முடிக்கும் வரை அதிலிருந்து சிந்தை மாறாது இருத்தல் என்று பொருள்படும். பொதுவாய் திருமணத்துக்கு முன் மாப்பிள்ளைக்குக் கங்கணம் கட்டுவது கொங்குப் புறத்து வழக்கம். பெண்ணுக்குத் தாலி கட்டி சாந்தி முகூர்த்தம் முடிந்த பின்னரே அவிழ்ப்பர். ஒரு காரியத்தை முடிக்கக் குறியாய் இருப்பவரை கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறான் என்று சொல்வது வழக்கம். திருமணத்துக்காக இதில் நாயகன் போராடுகிறான் என்பதால் இருபொருள் படும்.

இச்சமூகம் முதிர்கன்னிகளுக்கு எத்தனை கவலைப்படுகிறதோ அதில் கொஞ்சம் அக்கறை கூட முதிர் காளைகளுக்கு அளிப்பதில்லை. அப்படியான் ஓர் ஆணின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைக் காட்டுகிறார்.

முதல் சில பக்கங்களிலே குப்பன் எனும் வேலைக்காரன் மூலம் மாரிமுத்து பற்றிய ஒரு பிம்பத்தையும் அவரின் குடும்பத்தைப் பற்றிய பிம்பமும் காட்டபடுகின்றன என்றாலும் அது அச்சமூகத்தைக் காட்டும் விதமாகவே இருக்கிறது. பொருளியல் பற்று தான் முதலாகவும் அதுவே இறுதியாகவும் வரையறுத்துச் செயல்படும் ஒரு சாதிய அடையாளத்தை எடுத்து முன் வைக்கிறார் மறுக்கமுடியாதபடி.

அது ஒன்றாகத் தோற்றம் கொண்டாலும் பலவாகவும் விரிந்து சமகால சமூகத்துப் பழக்க வழக்கங்களில் உள்ளோடி ஒரு பரப்பில் தமிழகம் முழுதும் இணைத்துச் செல்லும் தன்மையுடன் இருப்பது சிறப்பு.

இந்நாவலில் எடுத்தாளப்படும் கிராமம், கிராமம் எனும் பிம்பத்தை மெல்லச் சீட்டுக்கட்டாய்க் கலைக்கிறது. வெள்ளந்தியான மனிதர்கள் இருக்கும் இடம், பச்சையும் இயற்கையும் எழிலாடும் இடம், முன்னேற்றம் இல்லாத இடம் என பொதுவில் நம்பப்படும் ஒன்றை அதன் பின்னணியில் உழைப்புச் சுரண்டலும், ஆதிக்கப்படுத்துதலும் இருக்கின்றன என உண்மையின் அடியாழத்தைத் தோண்டி எடுத்துக் கொடுக்கிறார்.

இப்படியான ஒரு திகைப்பில் அதில் ஒருவனான மாரிமுத்து எவ்வாறெல்லாம் துணை வேண்டும் என்ற‌ ஏக்கத்தில், தன் கல்யாணத்திற்கு அல்லலுறுகிறான் எனத் தடதடத்துச் செல்கிறது நாவல். இச்சமூகத்தில் நிகழும் பல்வேறு எதிர்மறைகளையும் எவ்வித மேல்பூச்சின்றி எடுத்து காட்டுகிறார் பெருமாள்முருகன்.

பொருளதார அந்தஸ்து, புறவயமான தேடல்கள் மட்டும் முக்கியம் எனக் கொள்ளும் அடையாளத்துடன் வாழ விரும்பும் ஒரு சமூகம். அச்சமூகத்தின் அங்கமாகிய ஒருவன் அடையும் மனச்சிக்கல்கள், அதைச் சமாளிக்கத் தன்னை மாற்றியபடி இருக்க வேண்டி இருக்கிறது, இப்படி இருந்தும் இதற்காகவெல்லாமா ஒருவனின் கல்யாணம் நின்று போகும் என்பது மாதிரியான விஷயங்களைச் சுட்டி காட்டுகிறார்.

மாரிமுத்துவின் பாட்டி அவனுடைய இளம்பருவத்தில் அவனுக்குப் பார்க்கும் ஒர் பெண்ணை அவனது அத்தை பெண் தட்டி கழிப்பதில் ஆரம்பம் ஆகிறது கல்யாணத் தேடல். காமம் தீர்க்க கல்யாணமே ஒரே வழி, ஒரே முடிவான வழி என நம்பும் சாதாரண பள்ளிகூடம் தாண்டாத கிராமத்து இளைஞன் மாரிமுத்து அச்சாதியைச் சேர்ந்த பெண்ணை மட்டுமே கட்டுவேன் எனக் கங்கணம் கட்டிக் கொள்கிறான்.

யாரையும் எந்த பெண்ணையும் அவன் நிராகரிப்பதில்லை. ஆனால் இன்றைய வாழ்வியல் முறைகளை அறிந்திராத, அவற்றின் தேவைகளை உணராத ய‌தார்த்த விஷயங்கள் மட்டும் உள்ளது அவனிடம். அதை விரும்பக்கூடிய பெண் யாரும் இல்லை. படித்த, ‘டீசன்ட்டான’ தேவைகளே மேலோங்கி இருக்கும் காலச் சூழலில் இம்மாதிரியான படிக்காத, வயலில் உழலும் ஒருவனை யாரும் ஏற்க மறுக்கிறார்கள்.

இத்தகைய சூழலைச் சரியாய் பயன்படுத்தும் தரகுகள் தனக்குப் பெண் பார்த்து தருவார்கள் என்று நம்பி அவர்கள் கூறும் ஒவ்வொரு புறவயக் காரணங்களுக்காகத் தன்னை மாற்றுகிறான். ஏமாற்றங்களே மிச்சம்.

மாரிமுத்துவின் இளமையில் காட்டுக்குள் கொடுத்த ஒரு முத்தம் மட்டுமே அவன் காமத்திற்கான ‘தீர்வாய்’ இருக்கிறது. தணலாய்த் தகிக்கும் காமத்திற்கு வடிகால் இன்றித் தவிக்கிறான். ஆண் – பெண் உறவில் ஏற்பட வேண்டிய சாதாரண நிகழ்வை பல்வேறு காரணங்கள் கொண்டு சமூகம் தடுத்து வைத்திருக்கிறது. யார் யாரை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்பதைக் கழுத்தில் முடிச்சிட்டு இறுக்கி மூச்சடைக்க வைக்கிறது. இருந்தும் விலக மனமின்றி அதன் பின் செல்லும் பலரைப் போலவே தான் மாரிமுத்துவும்.

காற்றில் கரைந்து போகும் கற்பூரமாய் அவன் இளமை கரைகிறது. மெல்லக் கழிவிரக்கம் கவிழ்கிறது. ஊர் பெரியவரும் அக்காலத்திலே பலருக்குக் கல்யாண ஏற்பாடுகள் செய்த தானாவதி தாத்தா அவனுக்குப் பெண் பார்க்க முயலுகிறார். தாயாதிச் சண்டையில் பிரிந்த நிலம் ‘ஆளாது’ கிடப்பதால் தான் கல்யாணம் தள்ளிப் போகிறது எனக் காரணங்களை கண்டு அதை முடுக்க நினைக்கிறார்கள் தானாவதி தாத்தாவும் மாரிமுத்தும். மண்ணும் மண் மீதான பிடிப்பும் எப்போதும் அச்சமூக மக்களிடையே உள்ளது ஆகும்.

அதை அங்கனமே கொண்டு வந்துள்ளது நாவல். ‘வெட்டி’ப் பிரிந்தவர்கள் இணைவதும் அதில் ஒட்டாமல் இருப்பதும் மக்கள் மனதில் ஏற்படும் இயல்பு. தீட்டம் திட்டுவதும் அதைப் பெருக்குவதும் காட்டுவது அச்சு அசலான கிராமப் பிடிப்புள்ள சிந்தை. இக்கதையின் பிண்ணனியில் மண் தனிச் சரடாய் வருகிறது. அதில் அவன் உழைப்பும் பங்களிப்பும் எப்போதும் போல் பெருமாள்முருகனின் கதைகளில் உள்ளோடும் மண்ணின் மீதான பிடிப்பை இதிலும் காணலாம். மண்ணையும் மனங்களையும் அகழ்ந்து, கூர்ந்து நோக்கி இருக்கிறார்.

முன்பு தண்ணீர் பொங்கி தரை தட்டிய கிணறு இன்று துர்ந்து கிடப்பதாக காட்டுவது ஒர் குறியீடாகும். அதை சீர் செய்யத் தொடங்கவும் சகலமும் சரியாய்ப் பொருந்தி வருகிறது. உறவுச் சிக்கலையும் உரிமைச் சிக்கலையும் அதன் சரியான பக்கங்களில் விவரித்துச் செல்வது சிறப்பானதாய் இருக்கிறது.

முன்பு வேறு சாதியில் பெண் கட்டலாம் என உள்ளாசையை நிறுத்தி கங்கணம் கட்டி அலைந்தும் இன்று சகல காரியங்களும் முடித்து பொருளதார முன்னிலை பெற்றும் யாரும் தன்னைக் கட்ட முன் வராததும் வந்தவளை பல்வேறு காரணங்களை முன் வைத்து சொந்தங்களே தட்டிக் கழிப்பதுமான நிலையை எண்ணிக் கழிவிரக்கம் சூழ்ந்து தன்னை மாய்த்து கொள்ள முயல்கிறான். அதன் பின்னான மாற்றங்களில் அடுத்தடுத்து எடுத்து கொள்ளும் விஷயங்கள் மிக இயல்பாய்ப் பொருந்திப் போகின்றன‌

சுயநலத்துக்காகத் தாழ்த்தப்பட்டவரைப் பயன்படுத்திக் கொள்வதும் காரியமானதும் கழற்றி விடுவதுமான உள்ளியல்புகளைச் சுட்டுவதும் நம்முடைய சமகால நடப்பு இன்னும் மாறுதலுக்கு உள்ளாகாதது இயல்பாய் வெளிப்படுகிறது. பேச்சுவழக்கில் புழங்கும் ‘குறி’ப் பெயர்களை தேவையான இடங்களில் சொல்லுகிறார்கள்.

இத்தனை இருந்தும் மாரிமுத்துவின் காமத்தை, அதன் ஏக்கத்தைக் குறித்த அகவியல் பார்வைகளை, உள்ளார்ந்த வேட்கைகளை இன்னுமே அழுத்தமாய் சொல்லி இருக்கலாம் என்றே தோன்றுகிறது.

சமகாலத் தமிழ் நாவல் புலத்தில் ஆணுக்கும் தேவைகளும் உண்டு என அழுத்தமாய்ச் சுட்டி காட்டும் இந்நாவல் மிக முக்கியமான இடத்தை பிடித்திருக்கிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

| கங்கணம் | நாவல் | பெருமாள்முருகன் | அடையாளம் பதிப்பகம் | 2007 | ரூ.235 |

***

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தமிழ் : சுதந்திரம் - 2015 இதழ் Copyright © 2015 by சி. சரவணகார்த்திகேயன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.