"

எஸ். என் அக்ராகமி

தமிழில்: அன்பரசு சண்முகம்

‘’

நாங்கள் வேலை செய்து கொண்டிருந்த நவதானிய மாவு தயாரிக்கும் தொழிற்சாலை அருகே மூன்று வயதான பெண் குழந்தை ஒன்று தாய், தந்தை என யாருமில்லாமல் நின்றுகொண்டிருந்தாள். அவளை குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்துவிட்டு வருகிறோம். அங்கு அவள் பாதுகாப்பாக வளருவாள் ’’ கூறும் பிரேம நளினி ஷாகு ஒடிசாவிலுள்ள பன்ச்கான் கீழுள்ள டைஜிரியா கட்டக் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

ஷாகு தொழிற்சாலைக்கு வந்த பிறகு சக தொழிலாள பெண்கள் அவரோடு ஒன்றிணைந்து சூழ்ந்து நின்று பணிபுரிகிறார்கள். நிலக்கடலை, துவரை, பாசிப்பயறு, என பல்வேறு தானியங்களை தூசுகளை சலித்து எடுத்துவிட்டு, அதனை மாவாக அரைக்க கிரைண்டர் பகுதிக்கு எடுத்துச்செல்கிறார்கள். அப்போது, இருபது வயது மதிக்கும்படியான பெண் ஒருவள் கதவின் அருகில் எழுந்து நிற்க, ஷாகு அவரை சைகை காட்டி அறையின் உள்ளே அழைத்து குடும்ப விவகாரங்களை கேட்டறிகிறார். தன் கணவனின் பொறுப்பில்லாத அலட்சியத்தன்மை குறித்து அப்பெண் ஷாகுவிடம் முறையிட, அதற்கான தீர்வுகளைக் கூறி, கணவன் மனைவி என இருவரும் சமாதானமாக வாழும்படி அறிவுரை கூறி அனுப்பிவைக்கிறார்.

நாற்பத்தெட்டு வயதாகும் ஷாகுவுக்கு இது வழக்கமான நிகழ்வுகளே. காலையில் அதிகாலையில் எழுந்து, பின்னிரவில் தூங்கப்போகும் ஷாகு நான்கு உற்பத்திப்பொருட்களுக்கான குழுக்களை நிர்வகித்துவருகிறார். நவதானிய சத்துமாவு தயாரிக்கும் குழு, பெண்களுக்கான நாப்கின் தயாரிக்கும் குழு, அகர்பத்தி தயாரிக்கும் இரு குழுக்கள் என்பதோடு தங்கள் கிராமத்தில் நிலவும் கேடுகளைக் களையும் முயற்சிகளையும் பெண்களின் ஆதரவோடு செய்துவருகிறார்.

ஒற்றைப்பெண்மணியாக முயன்று சுய உதவிக்குழுக்களை உருவாக்கி இன்று அதில் ஆறாயிரம் பெண்களை உறுப்பினராக சேர்த்து அவர்களின் வாழ்வை வளமாக்கியிருக்கிறார். ஷாகு திருமணத்தம்பதிகளிடையே நிகழும் பூசல்கள், குடும்பத்தில் நிகழும் கருத்துவேறுபாடுகள், சண்டைகள், வாக்குவாதங்கள் என இருநூறுக்கும் மேலான பிரச்சனைகளை தீர்வுகளை கண்டறிந்து உதவியிருக்கிறார்.

மதுபானம் மற்றும் சட்டவிரோதமான கள்ளச்சாராயம் ஆகிய சமூகக் கேடுகளுக்கான சமரசமற்ற போராட்டத்திற்கு ஷாகுவிற்கு தன் கிராமத்து மக்களிடமிருந்து பெரும் ஆதரவு கிடைத்திருக்கிறது. கிராமத்திற்கான சுத்தம், சுகாதாரம், ஆரோக்கிய வாழ்வு ஆகியவற்றை ஷாகுவின் தலைமையிலான பெண்கள் குழுவினர் பொறுப்பேற்று பராமரித்து வருகிறார்கள்.

சமுதாயப்பணிகளுக்கான தொடக்கம் ஷாகு 2000 ஆம் ஆண்டு தன் குடும்பத்தின் பாதுகாப்பு வளையத்தை தாண்டி வந்த பிறகு தொடங்குகிறது.

மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் அவர்களினால் தொடங்கப்பட்ட சக்தி எனும் திட்டத்தில் ஷாகு தன்னோடு பத்து பெண்களை சேர்த்து சுய உதவிக்குழு ஒன்றினைத்தொடங்கி நிலக்கடலையின் மேலோடு நீக்கும் பணியை தொழிலாக செய்து, தோல்வியடைகிறார். ஆனால் ஷாகுவின் தலைமைப்பண்பும், குழுவினரின் திறமையும் தொடர்ந்து முன்னோக்கி செல்ல உதவுகிறது. பெண்களை ஒருங்கிணைந்த குழுவாக மாற்றும்போது, அவர்களின் குடும்பத்திலுள்ள பிரச்சனைகளையும் தீர்க்க முயற்சிக்கிறார்
.
2005 ஆம் ஆண்டு ஜெமேதிபூர் கிராம் பஞ்சாயத் மகிளா சமிதி எனும் அமைப்பினை ஐநூறு உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கினார். இவர்கள் அனைவரும் கிராமத்தின் சுற்றுச்சூழல், சுகாதாரம் பற்றி மட்டுமல்லாமல் மதுபானங்கள், கள்ளச்சாராயம் உள்ளிட்டவற்றுக்கும் எதிராக தொடர்ந்து இயங்கிவருகிறார்கள்.
‘’ மதுபானக்கடைகள் மற்றும் கள்ளச்சாராய தொழிற்சாலைகளை அழிப்பதும், மதுவருந்தும் மக்களுக்கு (அவர்கள் தனது அப்பா, கணவன், அண்ணன், தம்பி, என யாராக இருந்தாலும்) எதிராக திரண்டெழுந்து தண்டிப்பதால் மதுவிற்பனை குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது ‘’ என்று பெருமையுடனும் உறுதியுடனும் பேசுகிறார் ஷாகு.

ஷாகு ஒடிஷாவில் முதல் உற்பத்திப்பொருள் குழுவாக இருக்கும் ஜோதி மகிளா சங்கத்தினை தொடங்கி அதில் ஐந்து சுய உதவிக்குழுவினைச் சேர்ந்த பெண்கள் ஐம்பத்து நான்கு பேரை ஈடுபடுத்தி செயல்படுகிறார். இந்த குழுவானது உடனடி உணவாக தயாரிக்கப்படும் நவதானிய சத்துமாவினை பெண்கள் பள்ளி, அங்கன்வாடி என அரசின் திட்டங்களின் கீழ் விநியோகம் செய்கின்றனர்.
நானூறுக்கும் மேற்பட்ட பெண்கள் ஷாகுவின் தலைமையில் நேரடியாக இணைந்து அகர்பத்தி உற்பத்தி செய்கின்றனர். மற்ற குழுவினருக்கும் செய்யும் பணி குறித்த தெளிவான குறிப்புகளைக்கூறி வழிகாட்டுகிறார் ஷாகு. சுய உதவிக்குழுவிலுள்ள இப்பெண்கள் மாதம் மூவாயிரம் ரூபாய் சம்பளம் பெறுகிறார்கள்.

எங்கள் பகுதியிலுள்ள அனைத்து பெண்களுக்கும் தற்சார்பான பொருளாதாரத்தை உருவாக்கி சமூகத்தில் அதிகாரத்தை பெறும்படி ஒன்றிணைக்க, கட்டமைக்க ஒன்றிணைந்து முயற்சிக்கிறோம்’’ என்று தன்னடக்கமாக பேசி புன்னகைக்கிறார் தன்னம்பிக்கைத் தலைவி ஷாகு.

நன்றி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

தெருவிளக்கு Copyright © 2014 by jayend16 and வின்சென்ட் காபோ, ஜோ ஃபாக்ஸ் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book