"

4

கோடிகளில் கொழிக்கும் மத்திய அமைச்சரவை ! பி.சாய்நாத்

2009 தேர்தலின் போது நமது மத்திய அமைச்சர்கள் அளித்த சொத்துக் கணக்கு இரண்டே ஆண்டில் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்த பிரம்மாண்ட வளர்ச்சிகுறித்து கேள்வி எழுப்புகிறார் சாய்நாத்

தி இந்து நாளிதழின் ஊரகப் பிரிவு ஆசிரியராக பணியாற்றும் திரு பி சாய்நாத், மக்களின் வாழ்விலுள்ள அவலங்களை தோலுரித்துக் காட்டுவதில் மிகச் சிறந்த படைப்பாளர்.  இன்று (21/09/11) நாடெங்கிலுமுள்ள ஊடகங்களில் இந்திய திட்டக் குழு ஒரு நாளைக்கு ஒரு நபர் ரூ 32 சம்பாதிப்பார் எனில் அவரை வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளவர் என கூற முடியாது என்ற ஒரு அற்புதமான கண்டுபிடிப்பை வெளியிட்டு பார்க்கும் அனைவரையும் அதிர்ச்சியுறச் செய்த அதே வேளையில், இந்திய அரசியல் என்பது எவ்வாறு வளம் கொழிக்கும் தளமாக மாறியிருக்கிறது என்பதை அற்புதமான தனது நக்கலும், நையாண்டியும் கலந்த நடையில் மக்களின் வயிற்றெரிச்சலை வெளிக்கொணரும் விதமாக  இந்து நாளிதழில் வந்த கட்டுரை அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் தமிழாக்கம் செய்து இதன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Chap4A

தில்லி திட்டக் கமிஷன் அலுவலக வளாக வாயிலில் வேலைக்கு காத்திருக்கும் தினக்கூலிகள். படம் www.thehindu.com

ர்இந்தியா நிறுவனம் நாம் விரும்பியது போல் நல்ல விதமாக செயல்படாமல் இருந்திருக்கலாம்.  ஆனால் திட நெஞ்சோடு பயமின்றி அதை அடர்த்தியான கடன் மேகத்திற்குள் பறக்கவிட்டவர்கள் நன்றாக உள்ளனர். பிரபுல் படேல் (குறுகிய காலம் மாநிலங்களுக்கான விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்தவர்) மே2009 முதல் ஆகஸ்ட் 2011 வரையிலான 28 மாதங்களில் சராசரியாக ஒரு நாளைக்கு ரூபாய் அரை கோடி வீதம் தனது சொத்தில் சேர்த்துள்ளார்.  இதுவும் அவரது வார்த்தைப்படியான கணக்கு என்பதால், குறைத்து மதிப்பிடப்பட்ட கணக்காகவே இருக்கலாம்.  இது போன்றவற்றில் அமைச்சர்கள் தற்பெருமை பேசாதவர்களாகவே இருக்க விரும்புகின்றனர்.  ஆனால் அலுவலக ரீதியான புள்ளி விபரங்கள் கொடுக்கும் போது, கணக்கில் தப்பிக்க வழியில்லை.

திரு படேல் 2009-ம் ஆண்டு தனது தேர்தல் பிரமாணப்பத்திரத்தில் சொத்தாக ரூ 79 கோடி காண்பித்துள்ளார்.  மே மாதம் அந்த வருடம் தேர்தல் நடைபெற்றது என்பதால், அந்த கணக்கு ஏப்ரல் 2009 வரை என கணக்கில் கொள்வோம்.  இந்த மாதம் பிரதமர் அலுவலக இணையதளத்தில் அவர் (படேல்) பெயருக்கெதிரே ரூ 122 கோடி (சொத்து மதிப்பு) என குறிப்பிட்டிருப்பதோடு ஒப்பிடுவோம்.  இந்த உயர்வு என்பது 28 மாதங்களில் ஏற்பட்டது என்பதால் எனது கணக்குப்படி ஒரு நாளைக்கு சராசரி ரூ 5 லட்சம் சேர்ந்துள்ளது.  என்னால் கூட்ட முடியும் என்றாலும், நான் திரு பிரபுல் படேல் அளவிற்கு விரைவாக கணக்கு கூட்ட முடியாது என எண்ணுகிறேன்.

இதன் நடுவில் ஏர் இந்தியா நிறுவனம் தனது தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கவே போராடி திணறியிருக்கிறது.  ஏர் இந்தியா நிறுவனத்தின் 40 சதவீத  பணியாளர்களும் ஒவ்வொருவரும் ஒரு நாளில் சம்பாதிப்பதை விட மிகுதியாக, திரு படேல் தினசரி தனது சொத்தில் சேர்த்துள்ளார்.  அதாவது ஏர் இந்தியா விமானங்கள் தரை தட்டிக்கொண்டிருக்கையில், அவர் உயர உயர பறந்திருக்கிறார்.  தொழிற்சாலைகள் மற்றும் நிதிசார் மறுகட்டமைப்பின் முன்னாள் இயக்குனர் குழும தலைவர் என்ற முறையில் 12 ஆண்டுகளுக்கு முன்பாக இவ்வாறு தெரிவித்தார்.  சிரமப்படும் தனியார் நிறுவனங்கள் பற்றி தெரிவிக்கையில், நலிவடைந்தவை என்ற எண்ணிக்கை ஒரு புறம் அதிகரிக்கையில், அதன் சொந்தக்காரர்கள் வளமாகிக் கொண்டிருக்கின்றனர் என்றார்.  இந்திய ஏழைகளும் அவர்கள் சார்ந்திருக்கிற அரசோடு ஒப்பிடுகையில் இது சரியாக பொருந்தி வருகிறது.  ஏழைகள் மிக மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றனர், மத்திய அமைச்சரவை வளமாகிக் கொண்டிருக்கிறது. (கார்ப்பரேட் முதலாளிகளை இந்த சமன்படுத்துதலில் இழுத்துப் பார்த்தால் அது மிக வியக்கத்தக்க வகையில் இருக்கும், ஆனால் அது வேறு கதை)

திரு படேல் அவர் மேற்கொண்ட பணிக்காக உயர்வளிக்கப்பட்டுள்ளார்.  அவர் மத்திய அமைச்சர் அந்தஸ்திற்கு உயர்த்தப்பட்டு கனரக தொழிற்சாலைகள் மற்றும் பொதுத்துறைகள் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.  மத்திய அமைச்சர்களின் சொத்துக்கள் விவரங்களை, எப்போதும் போல் மக்களாட்சி சீரமைப்பிற்கான குழுமம் (ஏடிஆர்) மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு (நியூ) ஆகிய அமைப்புக்கள் விரிவாக மேற்கொண்ட ஆய்வுகளை படிக்கும் போது ருசிகரமாக இருக்கும்.  அது அலுவலக ரீதியானது.  சொட்டு சொட்டுகளாக விழுவதென்பது முடிந்து போன மாதிரி.  பாசனத்தை உயர்த்தும், வெள்ளம் உயரத்தை உடைத்துக் கொண்டு பாயும். ஒரு மத்திய அமைச்சரின் சராசரி சொத்து என்பது 7.3 கோடியிலிருந்து 28 மாதங்களில் 10.6 கோடியாக உயர்ந்துள்ளது.  28 மாதங்களிலும், சராசரி மாதத்திற்கு 10 லட்சங்களுக்கு குறைவில்லாத சேர்க்கை. திரு படேல்தான் மத்திய அமைச்சர்களில் மிக உயர்ந்த பணக்காரர் என்பது பழைய கதை.

ஆனால் திமுக வின் முனைவர் எஸ்.ஜகத்ரட்சகன் அதை தைரியமாக மோதி சிதறடிக்கச் செய்துவிட்டார்.  மாநில அந்தஸ்திலான அந்த தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சரின் சொத்து 1092 சதவீதம் வளர்ந்துள்ளது, ஆனால் படேலின் வளர்ச்சி 53 சதம்தான்.  ஆய்வின்படி அவரின் சொத்து மதிப்பு 2009ம் வருடம் 5.9 கோடி என்றிருந்தது இந்த வருடம் 70 கோடியாக உயர்ந்துள்ளது.  ஆனால் 122 (கோடி) என்ற எண்ணில் நின்று மட்டையடித்துக் கொண்டிருக்கிற படேல் இன்னமும் அமைச்சரவை பிரிமியர் லீகில் இன்னும் உயர்வான நிலையில்தான் உள்ளார். திமுக மனிதரின் செயல்பாடு விரைவான எண்ணிக்கை சேர்க்கைக்கு உதவியிருக்கலாம்.  ஆனாலும் நின்று நிதானமாக சேர்க்கும் படேலின் ஆட்டம் தான் நீண்ட விளையாட்டிற்கு நல்லது.

இதன் நடுவில் சுறுசுறுப்பான இளவயது அமைச்சர்கள் யாரும் மோசமென சொல்லிவிட முடியாது.  இளைஞர் மிலண்ட் தியோரா, மாநிலங்களுக்கான செய்தி மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர 2009 லிருந்து 2011ற்குள் தனது சொத்துக்களை ஏறக்குறைய இரட்டிப்பாக்கியுள்ளார்.  அவரது சொத்து 17 கோடியிலிருந்து 33 கோடிக்கு மேல் சென்றுள்ளது. அவர் 2004ல் தாக்கல் செய்த தேர்தல் பிரமாண பத்திரத்தில் தெரிவித்திருந்தது ரூ 8.8 கோடி என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.  தினசரி சராசரியாக ஒரு லட்சம் ஒரு நாளைக்கு என சேர்த்து 7 வருடங்களில் சொத்தை 3 மடங்காக்கியிருப்பது ஒன்றும் மோசமாக சொல்ல முடியாது.

மேலோட்டமாக பார்க்கின்ற போது தியோரா, விவசாயத்துறை அமைச்சர் சரத் பவாரை பின்னுக்கு தள்ளிவிட்டார்.  நெடிய ஓட்டத்தில் பின்னுக்கு வரும் அவரைவிட, இளையவர் தியோரா இரண்டரை பங்கு கூடுதல் பணக்காரராக உள்ளார்.  அவர் முன்னதாக 2009-லும் பவாரை விட பணக்காரராகத்தான் இருந்திருக்கிறார்.  ஆனால் இந்த 28 மாதத்தில் 90 சதவீதம் அதிகரித்திருக்கிறார்.  பவார் இதே காலத்தில் சொற்பமாக ஒரு நான்கு கோடி கூட சேர்க்கவில்லை.  அதற்கு அர்த்தம் என்னவென்றால், எல்லோரும் சொல்வது போல் அவரது சொத்தை காண்பிக்கும் கடிகார முள் 12.5 கோடியிலேயே நிற்கிறது. அவருடைய சொந்த மாநிலத்திலுள்ள சொத்துக்களை யெல்லாம் கணக்கிட்டு பார்க்கும் போது பவாருக்கு பிரமாணப்பத்திரத்தில் தனது மொத்த சொத்தை தெரிவிக்க் வேண்டுமா?  அல்லது மாத வருமானத்தை தெரிவிக்க வேண்டுமா என்ற குழப்பம் நேரிட்டது போல் தோன்றுகிறது.

அடுத்து தற்பெருமை பேசாத மற்றொரு அமைச்சர யாரென்றால் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்.  அவர் தனது பங்கிற்கு 2009ற்கு பின்னர் ரூ 1.73 கோடி சேர்த்துள்ளார்.  திரு தேஷ்முக் நில அறிவியலுக்கான அமைச்சரும் ஆவார். (மகாராஷ்டிராவில் அவருக்கு குறிப்பிட்டுள்ள தலைப்பை பார்த்தால் ரியல் எஸ்டேட் விற்பன்னர் என்றும் தெரிகிறது).  மற்றபடி முனைவர் மன்மோகன்சிங் தலைமையிலான கிரிக்கெட் வீரர்கள் எல்லோரும் நன்றாகவே செயல்பட்டுள்ளனர்.  பாராளுமன்ற நடவடிக்கைத்துறை அமைச்சர மற்றும் ஐபிஎல் புதிய தலைவர் திரு ராஜிவ் சுக்லா சொல்லப்பட்ட 28 மாதங்களில் ரூ 22 கோடி சொத்துக்கள் சேர்த்துள்ளார்.  அதாவது 2009ல் 7 கோடியாக இருந்த சொத்து தற்போது 30 கோடிக்கும் அதிகம்.

பணியிலுள்ள அமைச்சர்கள் மட்டும் அபரிமிதமான வளர்ச்சியை நோக்கி செல்வதில்லை.  அல்லது மைய அரசை மட்டும் வரம்பாக வைத்துக் கொண்டு மேல்நோக்கி நகருவதில்லை.  எப்போதும் போல் கின்னஸ் சாதனைக்கான பொருள் என்பது எனது இரு மாநிலங்களான  மகாராஷ்டிரா மற்றும் ஆந்திர பிரதேசத்திலிருந்துதான் வருகிறது. (எனக்கு இன்னொரு மாநிலமான தமிழ்நாட்டுடனும் சொந்தம் உண்டு.  அதாவது ஜகத்ரட்சகன் எங்கிருந்து வந்தாரோ அந்த இடத்துடன் – எனவே சொந்த இடம் என பெருமைப்பட்டுக் கொள்ளும் வாய்ப்பு எனக்கு சற்று அதிகம்தான்).

ஆனால் தற்போது நாம் ஆந்திரப்பிரதேசம் பக்கம் திரும்புவோம்.  ஓ.எஸ்.ஜெகன் மோகன்ரெட்டி என்பவர் ஆளும் பொறுப்பில் இல்லை.  ஆனால் அது அவரது தொழில் முனைவை நோக்கிய பயணத்தை எந்த வகையிலும் தடை செய்யவில்லை.  அவரிடம் 2009-ல் இருந்த வெறும் ரூ 72 கோடி என்ற எண்ணிக்கையை 24 மாதங்களில் நடப்பு ஏப்ரல் வரை ரூ 357 கோடி சொத்து மட்டும்தான் சேர்த்துள்ளார்.  அதாவது இந்த குறிப்பிட்ட காலத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக ரூ 50 லட்சம் வீதம் மட்டுமே சேர்த்துள்ளார்.  எல்லாவற்றிலும் அவர் முன்னிலைப்படுத்தப் பட்டிருக்கும் நிலையில், இது ஒன்றும் சிறிய சாதனையல்ல.  சாமியார்கள் அரசியலில் ஆற்றல் என்றும் அடுத்த சந்ததி எனவும் பேசுவது எதைப்பற்றி என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கலாம்.

அந்தோ, சந்திரபாபுநாயுடு மட்டும் ஏழையாக வளர்ந்துள்ளார்.  அன்னா ஹ‌சாரேயால் உருவாகியுள்ள காலச் சூழல் காரணமாக இந்த ஆந்திரப்பிரதேச முன்னாள் முதல்வர் தனது சொத்து மதிப்பை எச்சரிக்கையோடு வெளியிட்டுள்ளார்.  திரு நாயுடுவின் சொத்து ரூ 40 லட்சம் அளவில் கூட இல்லை.  அதன் காரணமாக அவரின் வாழும் சூழலுக்கு உடனடியாக பங்கம் வந்துவிட்டதாக எண்ண வேண்டியதில்லை.  அவரின் மனைவி வசமுள்ள சொத்து ரூ 40 கோடி மட்டுமே.

ஆந்திர அரசியலில் இந்த தொடர்புடைய படங்களை ஒப்பிட்டு பார்த்தால் ஜகன் வளர்ச்சியில் இருப்பதும், நாயுடு சரிவில் இருப்பதும் புலப்படும்.  அவருடைய கணக்காளர்கள் அவரை விட பெருந்தன்மையுடையவர்களாக இருப்பதால் எதிர்காலம் என்பது திரு நாயுடுவிற்கு சாதகமாக இல்லை.  அவரின் ஜூப்ளி மலை சொத்து என்பது 10000 சதுர அடி பரப்பளவுள்ள கட்டிடத்தோடு, 1125 சதுர அடியில் நடைபாதைகளும் கட்டப்பட்டுள்ளதன் மதிப்பு ரூ 23.20 லட்சத்திற்கும் குறைவாகவே காட்டப்பட்டுள்ளது.  இப்போது அந்த இடம்தான் ஆந்திரப்பிரதேசத்திலேயே மிக உயர்வாக மதிப்பிடப் படும் இடமாகும்.  எனவே அந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள 10000 சதுர அடி கட்டிடம் என்பது, அந்த தொகை மதிப்பீட்டில் பார்க்கும் போது, மிக எளிமையான சாதாரண சொத்து என்றே வாதிட தோன்றுகிறது.

ஆனால் 2009 தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் அதன் மதிப்பு ரூ 9 கோடி என காண்பிக்கப் பட்டது போல் மதிப்பில்லாத ஒன்றா?  இதைப்பார்க்கிற போது திரு நாயுடு தற்போதைய சந்தை மதிப்பை குறிப்பிடாமல் அந்த இடத்தை கையகப் படுத்த செலவழித்ததை மட்டும் குறிப்பிட்டிருப்பார் போலும், ஏனெனில் சந்தை மதிப்பு என்பது நேரத்திற்கு நேரம் மாறுபடும் என்பதாலா?

இதிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடம் யாதெனில் எல்லாவற்றிற்கும் பின்புலமாக புத்தி கூர்மையுள்ள கணக்காளர் தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பணம் படைத்த மற்றும் வளமான இந்த மடத்தனமான வளர்ச்சி என்பது அமைச்சர்கள் அளவில் மட்டுமல்ல, பாராளுமன்ற, மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் அளவிலும்தான்.  எல்லா அரசியல் சக்தி சார்ந்த தலைவர்கள்  குறிப்பாக காங்கிரஸ், பாஜக மற்றும் பெரிய மாநிலங்களில் ஆளும் அந்தஸ்திலுள்ள கட்சி தலைவர்களும் இதில் அடக்கம்.

ஒவ்வொரு பாராளுமன்ற, மற்றும் சட்டமன்ற தேர்தல் காலத்திலும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்கிறது.  மகாராஷ்டிராவில் 2004-ல் 108 ஆக இருந்த கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2009ல் 189 ஆக உயர்ந்துள்ளது.  நான்கில் மூன்று பங்கு மத்திய அமைச்சர்கள் கோடீஸ்வரர்கள். பெரும்பாலான அவர்களின் புதிய சொத்துக்கள் பதவியில் உள்ளபோது சம்பாதித்தவை. பொது மக்களின் கோபத்திற்கு நன்றி.  அதன் காரணமாகத்தான் ‘ஏடிஆர்’ மற்றும் ‘நியூ’ போன்ற ஆய்வு முடிவுகள் வெளிப்படையாக பலருக்கும் தெரிய வந்துள்ளது.  இது மிகவும் சிறப்பானது.

ஆனால் இத்தகைய அறிவிக்கப் பட்டவை அனைத்தும் அவர்களின் வரி செலுத்தும் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும்.  அதுதான் பொதுமக்கள் இந்த எண்ணிக்கைகளில் சிறப்பான கூடுதல் கவனம் செலுத்த அனுமதிப்பதாக இருக்கும்.  பொது வாழ்வில் உள்ளவர்கள் செயல்பாடுகள் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டுமென நீங்கள் விரும்பினால், அவர்களின் வரி செலுத்துதல் போன்ற சமர்ப்பித்தல்களும் இணையதளம் மூலம் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.  நமக்கு மிக தேவையாக உள்ள மறுசீரமைப்பிற்கு அதுதான் பெருமளவில் உதவியாக இருக்கும்.  மற்றொன்று ஏமாற்றுதல்களுக்கு விதிக்கப்படும் அபராதங்களாகும். ஆய்வறிக்கை காண்பிப்பதை பார்க்கும் போது அமைச்சர்கள் அவர்களுக்கு சொந்தமான 12 குடியிருப்பு கட்டிடங்கைள காண்பிக்கவில்லை என தெரிகிறது.

நமக்கு கடுமையான தணிக்கை என்பது தேவை.  அதுவும் மத்திய அமைச்சரவை உறுப்பினர்களின் சொத்துக்களிலிருந்து அந்த தணிக்கை துவங்க வேண்டும்.  எப்படி மக்கள் அலுவலில் இருக்கும் போது ஒரு நாளைக்கு அரை கோடி சம்பாதிக்க இயலும்.  நினைவில் கொள்ளுங்கள் அவர்கள் அனைவரும் இந்த மிகப்பெரும் சொத்துக்குவிப்பு என்பதை ‘மக்கள் சேவை’யில்தான் சேர்த்துள்ளனர். நிச்சயமாக நாமும் இதற்கு பதிலளிக்க கடமைப்பட்டுள்ளோம்.  சொத்துக்களை பகிரங்கமாக அறிவிப்பது என்பது மட்டும் போதாது.  அது விசித்திரமாக மிகப் பெரியதாக இருப்பின் எவ்வாறு அது வந்தது என்பதை அறிவதும் நமக்கு அவசியமாகும்.

ஏப்ரல் கடைசியில் இந்தியாவின் திட்டக்குழு உச்சநீதிமன்றம் முன்பாக ஒரு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது.  அதில் ஊரக இந்தியாவில் வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பவர் என்பதை தீர்மானிக்க ஒரு நாளைக்கு ஒருவருக்கு ரூ 20 செலவழிக்கும் நபர் என்பதை எல்லைக்கோடாக வைத்துக் கொண்டால் போதுமானது என்றது.  கிராமப்புற இந்தியாவிற்கு அது வெறும் ரூ 15 மட்டுமே.  மேலும் அவர்கள் சொல்வது என்னவென்றால் இந்த ரூ 20 என்பதை வேண்டுமானால் பெருந்தன்மையுடன் ரூ 25 என உயர்த்திக்கொள்ளலாம் என்பதாகும்.

சிறு தொழில்கள் மற்றும் அமைப்புசாரா பிரிவினருக்கான முனைவர் அர்ஜுன் சென்குப்தா தலைமையிலான தேசிய ஆணையத்தின் அறிக்கையை இங்கு நினைவு கொள்ள வேண்டும்.  அந்த அறிக்கையில் 83.6 கோடி இந்தியர்கள் ரூ 20 மற்றும் அதற்கு கீழான வருமானத்தில் வாழ்கிறார்கள் என பதிவு செய்திருந்தது.  கோடீஸ்வரர்களாக சேர்ந்த குழுக்கள் எவ்வாறு இந்த மக்களை பிரதிநிதித்துவப் படுத்துவதாக அமையும்?  இந்த நிலை தொடருமானால் நங்கூரமிட்டு வைத்துள்ள பிடிமானம் மிக சீக்கிரம் விடுபட்டுவிடும்?  இதை எவ்வாறு தடுக்கப் போகிறோம்.  இதைப்பற்றி சிறிதளவாவது சிந்திக்க வேண்டும்.

எனவே கடந்த 20 ஆண்டுகளில் உள்ளார்ந்த மாற்றங்கள் என்பது எதனையும் சிரமத்திற்குரியதாக ஆக்கவில்லை, ஆனால் மாறாக கோடீஸ்வரர்கள் தேர்தலில் போட்டியிடலாம் என்பதையும், அவர்கள் மட்டுமே வெல்ல முடியும் என்பதையும் குறிப்பாக காட்டுவதாக உள்ளது.

 நன்றி தி இந்து  
தமிழாக்கம்: சித்ரகுப்தன்

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

தொழிலாளர் இல்லாத வளர்ச்சியா? Copyright © 2016 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.