"

12

சொகுசான கார்களுக்கு மத்தியில் சுருங்கும் டிராக்டர்கள் – பி.சாய்நாத்

பென்ஸ் கார்களின் வரவால் “ஊரக மறு மீட்சி ” என ஊடகங்கள் கொண்டாடும் நேரத்தில் ” மறு மீட்சி ” ஆண்டில் விவசாயிகள் 17,368 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது

 

மெர்சிடீஸ் பென்ஸ் என்ற சொகுசு கார்களின் வரவால் மராத்வாடா மாநிலத்தில் ஊரக மறுமீட்சி  என ஊடகங்கள் கொண்டாடும் அதே நேரத்தில்  மறுமீட்சி  ஆண்டில் விவசாயிகள்17,368 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என  ஆய்வறிக்கை தெரிவிக்கிறது

2010 S400 HYBRID
2010 S400 HYBRID

பிற்படுத்தப்பட்ட மராத்வாடா மண்டலத்திலுள்ள அவுரங்காபாத்தில் அக்டோபர்  மாதத்தில் மட்டும் 150 மெர்சிடீஸ் பென்ஸ் சொகுசு கார்கள் ரூ 65 கோடி அளவிற்கு வாங்கப்பட்டதால் ஊடகங்களின் மொத்த கவனத்தையும் ஈர்த்தது.  பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி சுமார் 40 கோடி அளவிற்கு கார் வாங்குவதற்கு கடனுதவி செய்துள்ளது.  அவுரங்காபாத்  மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்க தலைவர் திரு டேவிதாஸ் துல்சாபுர்கர் இதை தெரிவித்ததோடு வட்டி விகிதம் 7 சதவீதம் என்றார்.

பாரத ஸ்டேட் வங்கியின் உயர் அலுவலர் ஒருவர் கூறுகையில் “இந்த வியாபாரத்தில் பங்கு வகித்ததில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இனிவரும் நாட்களிலும் இதுபோன்றவற்றிற்கு சேவை செய்ய காத்திருக்கிறோம் “என்றார்.

விவசாயிகள் தற்கொலை செய்யும் நாட்டில், பென்சு காருக்கு கடன் வழங்க போட்டி!

இந்த மெர்சிடீஸ் சொகுசு கார் பரிவர்த்தனை என்பது ஏறக்குறைய மராத்வாடா மாவட்டத்திலுள்ள பத்தாயிரக்கணக்கிலான வீடுகளின் வருட வருவாய்க்கு ஈடானது.  எண்ணிலடங்காத பல விவசாயிகள் தங்கள் விவசாயத் தொழிலுக்கு கடன் பெற இயலாமல் போராடி வருகின்றனர். இந்திய விவசாயிகள் 7 சதவீத வட்டியில் கடன் பெறுவதற்கு ஏறக்குறைய 12 ஆண்டுகள் ஆகியுள்ளது என்பதுடன், பத்தாயிரக் கணக்கில் தற்கொலைகளும் நிகழ்ந்துள்ளது.  பெரும்பாலும் விவசாயிகளுக்கு கடன் என்பது எழுத்தில் மட்டுமே உள்ளது.

2005க்கு முன்பாக யார் வங்கிக் கடன் பெற்றாலும் வட்டி விகிதம் என்பது 9 முதல் 12 சதவீதமாக இருந்தது.  பெரும்பாலானவர்கள் விவசாயம் சாராத கடனாக கூடுதல் வட்டியில் பெற நிர்பந்திக்கப்பட்டனர்.  ஒரு சொகுசுக் காரை வாங்க 7 சதவீத வட்டியும், விவசாயத்திற்கு பயன்படும் டிராக்டரை வாங்கு 12 சதவீத வட்டியும் என்பது அங்கே யதாரத்தமாக இருந்தது.  இதனால் புற்றீசல் போல் தோன்றிய சிறு சிறு நிதி நிறுவனங்கள் 24 முதல் 36 சதவீத வட்டி மற்றும் அதற்கும் கூடுதலாக வட்டி பெற்றுக் கொண்டு கடன்கள் வழங்கின.

கடன் தொல்லையினால் பட்டினிக்கு ஆளான விவசாயிகள் வட்டிக்கு கடன் கொடுப்பவர்களை நோக்கி திரும்ப ஆரம்பித்தனர்.  1991இலிருந்து 10 ஆண்டு காலத்தில் இந்திய விவசாயிகள் தங்கள் நிலங்களை, பண்ணைகளை அடகு வைப்பது என்பது 26 சதவீதத்திலிருந்து இரட்டிப்பாகி 48.6 சதவீதமாகியது.  இது கூட குறைத்து மதிப்பிடப்பட்ட அலுவல் ரீதியான எண்ணிக்கைதான்.  அதே நேரத்தில் அரசின் கொள்கை சார்ந்த பயங்கர தாக்குதல்களையும் விவசாயிகள் சந்திக்க நேர்ந்தது.

ஒரு புறம் விவசாய விளைபொருளுக்கான உற்பத்தி செலவு என்பது சந்தை சார்ந்த விலை என அதிகமாகவும், மறுபுறம் விளைந்தவற்றை விற்க செல்லும் போது வணிக ரீதியாக விலைகுறைந்தும், வலிமைமிக்க தரகு முதலாளிகளால் குறைக்கப்பட்டும் விலைபோயின.  எனவே விவசாயத்தில் முதலீடு என்பது முற்றிலும் சரிந்தது.  வங்கிகள் விவசாயிகளுக்கு கடன் தருவதிலிருந்து மாறி நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்க்கை முறையை உயர்த்திக் கொள்வதற்கு கடன் வழங்க துவங்கியதால், விவசாயிகள் கடன் தொல்லையால் பிழிந்தெடுக்கப்பட்டனர்.  கடந்த 13 ஆண்டுகளில் இரண்டு லட்சத்திற்கும் மேலான விவசாயிகள் தங்கள் வாழ்வை முடித்துக் கொண்டதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பினும் கடன் தொல்லையினால் இறந்தவர்களே மிக அதிகம் (அத்தகைய நசுக்கும் நடவடிக்கையில் சிறு சிறு நிதி நிறுவனங்களே பெரும் பங்கு வகிக்கின்றன)

விவசாயக் கடன்கள் பல கடத்தப்பட்டுவிட்டன.  ஆகஸ்ட்டு 13 இந்து நாளிதழில் வெளியான விபரம் அந்த அதிர்ச்சி தரும் தகவலை நமக்கு காண்பிக்கிறது.  மகாராஷ்டிரா மாநிலத்தில் 2008இல் வழங்கப்பட்ட விவசாயக் கடனில் பாதி ஊரக வங்கியினால் வழங்கப்படாமல் நகர மற்றும் மாநகரக் கிளைகளினால் வழங்கப்பட்டுள்ளது.  சுமார் 42 சதவீதக் கடன் மும்பையில் வழங்கப்பட்டுள்ளது.  அதுவும் சிறு விவசாயிகளுக்கு கிடைக்காமல், வலிமையின் அடிப்படையில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப் பட்டுள்ளன.

தேசிய குற்றப் பதிவு குழுமத்தின் பதிவுகள் பல ஊடகங்களுக்கு வந்த போதிலும் சொகுசுக் கார் விற்பனையை மிகவும் பெரியதாகவும் ஊரக மறு மீட்சி போலவும் ஊடகங்களினால் கொண்டாடப்பட்டது. ஊரக மறுமீட்சி என்று சொல்லப்பட்ட 2009இல் அதீதமாக அதிகரித்து ஏறக்குறைய 17,368 விவசாயிகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டதாக பதிவுகள் தெரிவிக்கின்றன.  அவை 2008ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7 சதவீதம் அதிகம் என்பதுடன், 2004இலிருந்து பார்க்கையில் மிகவும் மோசமானதாகவும், உள்ளது.  இவற்றோடு சேர்த்தால் 1997 முதல் 2009 வரை விவசாய தற்கொலை சாவுகள் 2,16,500 ஆகிறது.  இந்த தற்கொலைகளுக்கு பல்வேறு காரணங்கள் உள்ள போதிலும், விளை பொருளுக்கு விலைகிடைக்காமல் கடனில் வாழ்வை முடித்துக் கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை எச்சரிக்கத்தக்க வகையில் மிக அதிகமாக உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒரு அங்கமான தேசிய குற்றப் பதிவு குழுமம் விவசாயிகள் தற்கொலை சம்பந்தமான பதிவுகளை 1995 முதல் சேகரித்துள்ளது.  ஆனால் ஆராய்ச்சியாளர்கள் 1997 முதல் உள்ள பதிவுகளையே கவனத்தில் கொள்கின்றனர்.  ஏனெனில் 1995 மற்றும் 1996ஆம் ஆண்டு பதிவுகள் முற்றுப் பெறாமல் அரைகுறையாக இருக்கின்றனவாம். 1995இல் இந்த கணக்கெடுப்பு எடுக்கும் முறை புதியது என்பதால் இரண்டு பெரிய மாநிலங்களில் அதாவது தமிழ்நாடும், ராஜஸ்தானும் அந்த வருடத்தில் தங்கள் மாநிலத்தில் தற்கொலையே இல்லை என தெரிவித்திருந்தன.  ஆனால் 2009ல் பார்க்கும் போது அந்த இரண்டு மாநிலங்களில் மட்டும் 1900 விவசாய தற்கொலைகள் பதிவாகியுள்ளது.  1997 லிருந்து எல்லா மாநிலங்களும் பதிவுகளை முழுமையாக கொடுத்துள்ளன.

தேசிய குற்றவியல் பதிவு குழுமத்தின் 2009ஆம் ஆண்டு பதிவுகள் தற்போது முற்றுப் பெற்றுள்ளது.  ஆனால் 2010ல் 16,000 விவசாயிகள் தற்கொலை இருக்கலாம் என நாம் அனுமானிக்க முடிகிறது. கடந்த 6 ஆண்டு சராசரியைப் பார்க்கிற போது ஆண்டிற்கு 17,104 உயிரிழப்புக்கள் நேரிடுகிறது.  இந்த 16,000 ஐயும் 2,16,500 உடன் சேர்த்துக் கொண்டு, 1995/96ஆம் ஆண்டுகளுக்கு நிறைவடையாத பதிவுகளாக உள்ள 24,449 தற்கொலைகளையும் சேர்த்தால் 1995 முதல் 2010ற்குள் 2,56,949 உயிரிழப்புக்கள் வருகின்றது.  ஒரு கணம் இந்த எண்ணிக்கையை நினைத்துப் பார்ப்போம்.

அதாவது 1995இலிருந்து கால் கோடிக்கும் அதிகமான விவசாயிகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.  அதாவது இந்த நாட்டில் கடந்த 16 ஆண்டு கால மனிதகுல வரலாற்றில் மிக அதிகமான தற்கொலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.  அதாவது இந்த தற்கொலைகளினால் ஏறக்குறைய ஒன்றரை கோடி குடும்ப உறுப்பினர்கள் மன வேதனைக்கு ஆளாக்கப் பட்டுள்ளனர்.  கோடிக்கும் அதிகமானோர் தற்கொலையை நோக்கி துரத்தப் பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ஆயிரக்கணக்கான கிராமத்தினர் தங்கள் அருகிலேயே இத்தகைய சோகமான முடிவுக்கு தள்ளப்படுவதை அன்றாடம் கண்ணுறுகின்றனர்.  அரசின் கொள்கைகள் மாறாததால் இத்தகைய முடிவைத் தேடிக் கொள்வது வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது.  முதன்மையானதாக கருதப்படும் இந்தியர்களில் எங்களை தனித்து விடுவித்து விடுங்கள் என்ற இந்த இதயமற்ற போக்கினை கற்பனை செய்து பார்க்க இயலாததாக உள்ளது.

சொல்லப்போனால் இந்த பதிவுகளும் குறைத்து மதிப்பிடப்பட்டவைகளின் துவக்கம்தான்.  பல பெரிய விவசாய குழுக்களெல்லாம் இந்த உள்ளூர் எண்ணிக்கையில் சேர்க்கப்படுவதில்லை.  குறிப்பாக சமூகத்தில் ஒரு பெண் விவசாயி தற்கொலை செய்து கொண்டால் அது சாதாரண தற்கொலையாகத்தான் கணக்கில் கொள்ளப்படுகிறது.  ஏனெனில் நிலங்கள் பெண்கள் பெயரில் இருப்பது மிகக் குறைவே.

இந்த வஞ்சனையான, பொய்யான கணக்கை பல அரசுகள் மேற்கொள்கின்றது.  மகாராஷ்டிரா அதற்கு குறிப்பிடத்த்க உதாரணம்.  ஒரே வாரத்திற்குள் மூன்று முறை வெவ்வேறான பொய்யான எண்ணிக்கையை சொல்லியுள்ளது.  இந்த ஆண்டு மே மாதத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட விதர்பா மாவட்டத்தில் விவசாயத் தற்கொலை 5500 சதவீதம் மாறுபட்டது.  நான்கு மாதத்தில் மிகக் குறைவான 6 என சொல்லப்பட்டது.  (பார்க்க தற்கொலக்கு தகுதியாவது எப்படி? தி இந்து 13 மே 2010 நாளிதழ்)

தேசிய குற்றவியல் பதிவு குழுமம் பதிவுகளின்படி மகாராஷ்டிராவில் 2009இல் 2872 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.  நடைபெற்றுக் கொண்டிருக்கும் பத்தாண்டுகளில் இதுதான் விவசாய தற்கொலையின் மிக மோசமான எண்ணிக்கை.  அது தற்போது 930இற்கு குறைந்துள்ளது உண்மையானால் மகிழ்ச்சிக்குரியதே.  ஆனால் உண்மை நிலையை பொய்யாக்க எந்த மாநிலமும் கடுமையாக முயற்சித்ததாக தெரியவில்லை.

ஆனால் 13 வருடங்களில் மகாராஷ்டிர மாநிலம் நம்பமுடியாத தற்கொலை எண்ணிக்கை உயர்வையே கண்டிருக்கிறது.  திடீரென 2008இல் 430ம்- 2009இல் 930ம் குறைந்ததாக பதிவு செய்துள்ளது எவ்வாறு?  கடந்த 4 ஆண்டுகளில் சிரமம் அதிகமுள்ள விதர்பா மாவட்டத்தில் செயல்பட்ட அரசு அதிகாரி குழுக்கள் பல தற்கொலைகளை விவசாயம் சார்ந்த காரணமல்ல என தள்ளுபடி செயவதிலேயே கவனம் செலுத்தின. மகாராஷ்டிர அரசு இறப்பு எண்ணிக்கையை கணக்கெடுப்பதை விட பிரச்சனைகளை கணக்கெடுப்பதில் கவனம் செலுத்தியது.

இன்னும் பிரச்சனைகள்தான் அதிகரித்துள்ளது.  மகாராஷ்டிராவின் மக்கள் தொகையோடு ஒப்பிட்டால் மேற்கு வங்கத்தை ஒப்பிடலாம்.  சில கோடி மக்கள் குறைவாக இருப்பினும் அங்கு விவசாயிகள் எண்ணிக்கை அதிகம். இரண்டு மாநிலங்களும் 1995இலிருந்து 15 ஆண்டுகளுக்கான பதிவுகள் வைத்துள்ளன.  அந்த மாநிலத்தின் விவசாய தற்கொலைகள் 3 ஐந்தாண்டுகளாக பிரித்துப் பார்த்தால் வர,வர கணிசமாக குறைந்துள்ளது.

மகாராஷ்டிராவில் 1999 உடன் முடிவடைந்த ஐந்தாண்டில் 1963 என்ற எண்ணிக்கை அடுத்த 5 ஆண்டில் (2004) 3647 எனவும், பின்னர் 2009இல் 3858 எனவும் உயர்ந்துள்ளது.  மேற்கு வங்கத்தின் ஆண்டு தற்கொலை இறப்பு சதவீதத்தில் கணிசமான குறைவு உள்ளது.  1999இல் 1454, 2004இல் 1200 எனவும், 2009இல் 1014 எனவும் குறைந்துள்ளது.  அங்கு விவசாயிகள் அதிகம் பேர் இருந்த போதிலும் மகாராஷ்டிரா மாநில இறப்பு எண்ணிக்கையில் 3இல் ஒரு பங்குதான் இங்கு நிகழ்ந்துள்ளது.  பிந்தைய மாநிலத்தின் எண்ணிக்கை 1999 லிருந்து தற்போது இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.

தற்கொலை நிகழும் 5 முக்கிய மாநிலங்களான மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா- மத்திய பிரதேசம் மற்றும் சதீஸ்கரில் 3இல் 2 பங்கு தற்கொலைகள் விவசாயி தற்கொலையாகவே உள்ளது.  28 மாநிலங்களில் ஏறக்குறைய 18இல் 2009ல் விவசாய தற்கொலை அதிகரித்துள்ளது.  சிலவற்றில் எண்ணிக்கை உயர்வு புறந்தள்ளும் வகையிலும், மற்றவற்றில் அவ்வாறில்லாமலும் உள்ளது.  மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் 2008இல் 512 ஆக இருந்தது, 2009ல் 1060 என மிக அதிகமாக உயா்ந்துள்ளது.  மேலும் எண்ணிக்கை உயர்வில் 3ஆவதுபெரிய மாநிலமாக ஆந்திரா 309 அதிகரித்து 2009ல் பதிவு செய்துள்ளது.

கர்நாடகா, கேரளா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் இத்தகைய உயிரிழப்பு எண்ணிக்கை சராசரி கடந்த 6 ஆண்டுகளில் கணிசமாக குறைந்துள்ளது.  2004 முதல் 2009 வரை பார்க்கையில் கடந்த 7 ஆண்டுகளை விட சராசரியாக 350 குறைந்துள்ளது.

தற்போதுள்ள விவசாயக் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வரப்படவில்லையெனில் நிலைமை இன்னும் மோசமாகும்.  சொல்லப் போனால் கடந்த 13 ஆண்டுகளில் தற்கொலை எண்ணிக்கையை குறைத்த மாநிலங்கள் கடுமையான பாதிப்பிற்குள்ளாகி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.  உதாரணத்திற்கு கேரளாவை எடுத்துக் கொண்டால் ஆண்டு சராசரி விவசாய தற்கொலை 1371 இறப்புகள் என 1997 முதல் 2003 வரை இருந்தது.  2004 முதல் 2009 ல் சராசரி 1016 என 355 குறையத் துவங்கியது.  இருப்பினும் கேரளா வரும் ஆண்டுகளில் கடுமையாக பாதிக்கப்பட உள்ளது.   உலகமயமாக்கலினால்  அனைத்து மாநிலத்திற்குமானபொருளாதார பாதிப்பு இது. இங்கு பெரும்பாலான பயிர்கள் பணப்பயிர்கள் ஆகும்.

காப்பி, ஏலம், தேயிலை, வெனிலா, மிளகு, அல்லது ரப்பர் போன்றவற்றின் உலக அளவிலான விலை மாற்றங்கள் இந்த மாநிலத்தையும் பாதிக்கும்.  சில பெருமுதலாளி கார்ப்பரேட் நிறுவனங்களால் உலக அளவில் இவற்றின் விலைகள் கையாளப்படுகின்றது.  தெற்கு ஆசிய சுலப வணிக உடன்பாட்டினால் ஏற்கனவே கடுமையான தாக்குதலுக்குள்ளான கேரளா தற்போது நாம் பாதிக்கப்பட்டுள்ள ஏசியன் என்பதாலும் பாதிக்கப்படப் போகிறது.  ஐரோப்பிய நாடுகளுடனான சுலப வணிக ஒப்பந்தமொன்றும் காத்திருக்கிறது.  கேரளா அதற்கான விலை கொடுக்கப் போகிறது.  2004க்கு முன்பாக இலங்கை மிளகை வாங்கிக் குவித்ததினால்(பெரும்பாலும் பல நாடுகளிலிருந்து மிளகு இலங்கை வழியாகவே வந்தது) கேரள மாநிலம் கடுமையான பாதிப்பிற்குள்ளாகியது.

தற்போது அத்தகைய குவிப்பிற்கு வரையரைகளை நாம் வகுத்துள்ளோம்.  இந்தியாவில் விவசாய தற்கொலைகள் என்ற ஆய்வுக் கட்டுரையின் எழுத்தாளரான பொருளாதார பேராசிரியர் திரு கே.நாகராஜ் இவ்வாறு கூறுகிறார்.  “சமீபத்திய விவரங்களிலிருந்து விவசாய இன்னல் என்பது குறைந்தபாடில்லை, முடிவுக்கும் வரவில்லை, மாறாக அரசின் கொள்கைகள் அவற்றை துரத்துவதும் குறையவில்லை, முடிவிற்கும் வரவில்லை என்கிறார்.  மேலும் அவரது ஆய்வில் ஒருபுறம் விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகையில் அவர்களின் தற்கொலை இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதிலிருந்து விவசாயம் சார் இன்னல் இன்னும் எரிந்து கொண்டுதான் உள்ளது” என்கிறார்.

________________________________________________________________________

திரு பி.சாய்நாத், நன்றி தி இந்து 28/12/2010

தமிழில் சித்ரகுப்தன்

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

தொழிலாளர் இல்லாத வளர்ச்சியா? Copyright © 2016 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.