2
“என்னங்க? டாக்டரைப் பாத்தீங்களா? என்னதான் சொல்றார்?“
“நம்ம பையனுக்கு வந்திருக்கிற நோய் பன்றிக்காய்ச்சலாம். பையனுக்கு பத்து வயசு தான் ஆகிறதாலும், பையன் உடல்நிலை மோசமாக இருக்கறதால இப்போதைக்கு ஏதும் சொல்லமுடியாதுங்கறார். ஆண்டவன் தான் நம்ம மோகனைக் காப்பாத்தணும்“
மருத்துவமனை வார்டில் பெட்டில் படுத்திருந்த பையன் மோகனுக்கு ட்ரிப்ஸ் ஏறுவதைப் பார்த்தபடி மனைவி உட்கார்ந்திருப்பதை வெறித்துப் பார்த்தான்.
யானை பல்தேய்க்கற பிரஷாப்பா இது! இல்லடா! இது கார் கிளீன் பண்ணுற பிரஷ்ஷூடா!
அப்பா! அப்பா! என்னடா? சொம்மா நொய்!நொய்ங்கற!
ஒரே ஒரு கேள்விப்பா?
ஏம்ப்பா உன் மீசை ரெண்ட் இஞ்ச் பிரஷ் மாதிரியும், உன்தாடி 36 ஆம் நம்பர் எமரி பேப்பர் மாதிரியும் இருக்கு!
அன்றைக்கு சிரித்தேனே! பையன் மழலை பேச்சை இரசித்தேனே!
இன்று நொய்!நொய் என்று பேச மாட்டானா என ஏங்குகிறேனே! இது என்ன பாவி மனம்!
தொண்டைக்குள் குற்றஉணர்வு முள்ளாய் மாட்டிக்கொண்டதுபோல இதயம் பலமுறை விட்டுவிட்டு அடித்த்து.
வைத்த சோறுகூட ரெண்டுபேரும் சாப்பிடலை! அவ சாப்பிடலைன்னா தொண்டை ஒட்டிக்கும்பாளே! அவ இல்லன்னா நான் அவ்வளவுதான்.
இரவு முழுவதும் நன்றாக இருந்த மோகன் கால் கை வலிக்குது என்று துவண்டு விழுந்தவன் இன்னும் எழுந்திருக்கவில்லை.
திருமணமாகி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆண்டவன் கொடுத்த அருட் கொடை. மனதுக்குள் என்னை நானே கேட்டுக் கொண்டேன். நான் யாருக்கும் தவறு செய்தேனோ? அதனால் என் பிள்ளை கஷ்டப்படுகிறானோ? அவன் நல்லபடியாக பிழைக்க வேண்டுமே!
ஹூம்! இனி ஒரு முடிவுக்கு வர வேண்டியதுதான்………………
அவனுக்குப் பிடித்த பிள்ளையாரிடம் போய் நின்றான் கண்ணீரில் நீர் வழிய…………………………..மௌனமான வேண்டுதல் பிள்ளையாரின் காதில் ஒலித்ததா!
இரண்டு நாள் கழித்து மோகன் கண் விழித்தான்.
டாக்டர் அவனை வீட்டுக்குச் செல்லலாம் என்று கூறியபோது டாக்டரை இறுக்கிக் கட்டிக்கொள்ளலாம்போல இருந்தது. டாக்டருக்கு நன்றி கூறி விட்டு நகையை சேட்டு கடையில் வைத்து பணத்தை ஆஸ்பத்திரியில் கட்டி விட்டு பிள்ளையாருக்கு நன்றி சொன்னான்.
இன்னமும் கொஞ்சம் பணம் கொறையுது……………இருங்க வளையலை வச்சுத் தரேன்…………….கழற்றிய மனைவியை வெறிக்கப் பார்த்தான் வரதன்.
இவளுக்கு நான் என்ன செய்யப்போகிறேன்………….
பாவி மனம் அலறித் துடித்தது.
அதை வச்சுக்க………….இரு டாக்டரைப் பாத்துட்டு வர்றேன்.
அய்யா! உள்ளே வரலாமா?
என்னப்பா! பில் கொஞ்சம் காசு குறையுது……………
அப்படியா! கிளினிக்கில் இருந்த பெஞ்ச் எல்லாம் பெயின்ட் அடிக்கறியா! இந்தா பணம்! மீதியை ஆஸ்பத்திரி பில்லோடு கணக்கை பாத்துக்கலாம்……….ஐயா! நீங்க தான் எனக்கு டிரீட்மெண்ட் பாத்து குழந்தையை தக்க வச்சுக் கொடுத்தீங்க………இன்னைக்கும் அதேமாதிரி உதவி செய்யுறீங்க………….
அதுக்குத்தாம்பா டாக்டருக்கு படிச்சுட்டு சேவை செய்யுறோம்…என புன்னகைத்தார் ஆகாஷ்.
மறுநாள் டாக்டர் கொடுத்த பணத்துடன் பெயின்ட் கடைக்குச் சென்றேன். மெர்க்குரி முதலாளி என்னைப் பார்த்து, ”வாப்பா, வரதா! என்ன நாலு நாளா ஆளைக் காணோம்?“ என்றார்.
”அய்யா என் பையனுக்கு பன்றிக்காய்ச்சல் வந்து செத்துப் பிழைச்சான்யா. நம்ம ஆகாஷ் டாக்டர் தான் அவனக் காப்பாத்தினார். நாலு நாளா ஆஸ்பத்திரியில தான் இருந்தேன். அவர் கிளினிக் பெஞ்ச் பெயிண்ட் வேலை தான் வந்திருக்கு”
“கவலைப்படாதே வரதா! எல்லாம் சரியாயிடும். உன் பையன் நல்லாயிடுவான். வீட்டில கொசு வராம பாத்துக்கோ. சரி இப்ப என்ன ஆர்டர்? சொல்லு!“
“அய்யா இரண்டு லிட்டர் ஏசியன் எனாமல் ஒயிட் பெயிண்ட், இந்தாங்க சீட்டு இதுல மீதி எல்லாம் இருக்கு எடுத்துக் குடுங்க………………
“என்னப்பா சின்ன ஆர்டரா இருக்கு?“
“ஆமாம் அய்யா? பில் எவ்வளவு?“
“ரூபாய் தொள்ளாயிரத்தி எண்பத்தெட்டு ஆகுதுப்பா!“
“இந்தாங்க அய்யா பணம்!”
“யாருடா அங்க! இந்த பில்லுக்கு சரக்கு எடுத்து வரதனுக்குக் கொடுடா!”
“சரி வரதா! இந்தாப்பா உன் கமிஷன் நூறு ரூபாய்“
“அய்யா! என்னை மன்னிக்கணும் எனக்கு இனிமேல் நீங்க ஒரு பைசா கூட கமிஷனா கொடுக்க வேண்டாம். நான் கமிஷன் வாங்கினதால தான் என் ஒரே மகன் சாகக்கிடந்து பொழச்சிருக்கான்னு நான் நினைக்கிறேன்“
“என்ன வரதா நீ தான் பேசறியா? பக்கத்து கடைல இருபது பெர்சன்ட் கமிஷன் தர்றான், மோதிரம் தரான்னு அங்க போய் கொஞ்ச நாள் ஆர்டர் கொடுத்து என் கடை பக்கமே வராம இருந்த…………இப்ப ரெகுலரா கொடுக்கற கமிஷன கூட வேண்டாங்கற!“ ஆச்சரியமாயிருக்கு…………..நீயா பேசுற…………..கார்பெண்டர் தொழிலுக்கு மாறிடப்போறியா? இன்னமும் கமிஷன் கிடைக்கும்னு………….வீட்டுக்காரங்ககிட்ட பொருளை உடைச்சிட்டு ரெண்டு சேத்து வாங்கிப் போடலாம்னு………………….
விடாமல் பேசிய முதலாளியை வெறிக்கப் பார்த்தான் வரதன்.
நான் செய்யற வேலைக்கு வீட்டுக்காரங்க கேட்கற கூலியைக் கொடுக்கறாங்க. பின்ன எனக்கு எதுக்கு கமிஷன்? அநியாயமா வந்த பணத்தைக் கொண்டு தண்ணி அடிச்சி குடும்பத்தை கவனிக்காம இருந்த என்னை ஆண்டவன் நல்லா தண்டிச்சிட்டான். இனி குடிக்கவும் போறதில்லை. கமிஷனும் வாங்கப் போறதில்லை. நீங்க நியாயமான ரேட் பில் போட்டா போதும். கமிஷனை கழிச்சிப் பில் போடுங்க. அந்த பில்லை டாக்டர் கிளினிக்கில் கொடுத்திடறேன்“
“வரதா! ரொம்ப சந்தோஷம்!
உன்னை மாதிரி ஒவ்வொரு தொழிலாளியும் நினைச்சி உழைச்சான்னா நம்ம நாடு வெகு சீக்கிரம் வல்லரசா மாறிடும்“என்றபடி வந்து நின்றவரைப் பார்த்தார் முதலாளி.
சார்! இந்த டிடிஎல் பாக்கெட்டைப் பாருங்க…..இது என் விசிட்டிங்கார்டு………..
சார் என்ன தொழில் செய்றீங்க?……எம்.எஸ்ஸி.,எம்ஃபில் எல்லாம் போட்டிருக்கே……….நான் இப்ப ஃப்ரீ இல்ல……மதியம் வந்தாத்தான் பேச முடியும். வந்த சரக்கெல்லாம் அப்பிடியே கிடக்கு………
நான் இங்க ஒரு காலேஜ்ல வேலை செய்யுறேன். பார்ட்டைமா இந்த மாதிரி என் ஃபிரெண்டோட சேர்ந்து பாக்கட்ல போட்டு செய்யுறேன். கஸ்டமர்ஸ் கிட்ட நீங்க தான் மூவ் செய்யணும். மதியம் காலேஜூக்கு ஓடணும்……
இதோ பெயிண்டர்….இவங்க சொன்னாத்தான் இங்க எல்லாம்….பெரிய பெரிய கம்பெனியெல்லாம் பெயிண்டர்கிட்டதான் யோசனை கேக்கறான். அனுபவமுல்ல பேசுது……….என்ன இஞ்சினியர் கட்டினாலும் இவர்கள் இல்லாம ஒண்ணும் முடியாது.
முதலாளி பேசியபடி, “டேய் வரதனுக்கு மெமோ பில்லை மாத்திப் போடுடா! கமிஷன் கழிச்சி எவ்வளவு பில்லுன்னு சொல்லு“
“அய்யா ரூபாய் 890 ஆகுது.“
“வரதா, இந்தாப்பா மீதிப் பணம்”
“நன்றி அய்யா! நான் வர்றேன்”
வேகமாகச் சென்றவனை கடை முதலாளி வெகுநேரம் பார்த்துக் கொண்டேயிருந்தார்.
சார் ……என்றழைத்த டிடிஎல் பாக்கெட் வைத்திருந்தவரைப் பார்த்தார்.
என்னய்யா அப்பிடி பாத்துட்டு நிக்கறீங்க?
நாங்களும் இன்றைய இளைஞர்களுக்கு இதைத் தான் சொல்லிக்கிட்டிருக்கோம்.
கடவுள் ஒவ்வொருவருக்கும் கஷ்டத்தைக் கொடுத்தாத் தான் மக்கள் திருந்துவாங்கன்னு நினைக்கறாருல்ல……………என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே மேலே வைத்திருந்த பிள்ளையார் படத்திலிருந்த பூ கல்லாவின் மீது விழுந்தது.