9

(Worldwidestory competition-2015) (இணையத்தளத்தில் முதல் பரிசு பெற்ற சிறுகதை)

 

நாய்க்கெல்லாம் பொங்கல் கொடுக்கலாமா அம்மா! மினி கேட்கறா!

பொங்கல் எல்லாம் மாடுகளுக்குத்தான். உன் மினிக்கு இல்லை. நீ மாட்டுவண்டில உட்கார்ந்து போக ஆசைப்படுவியேன்னு பக்கத்துவீட்டுக்காரர்கிட்ட சொல்லி உனக்கு ஒரு சீட் ஏற்பாடு பண்ணியிருக்கு…….

உனக்குப் பிடிச்ச டோரா கலர் சுடிதார் போட்டுக்க! வண்டில உட்கார வசதியாயிருக்கும்!

எத்தனைநாள்மா இந்த ஊர்ல இருப்போம்?

ஏம்மா! ஆதுரத்துடன் கேட்டாள் வீணா.

சிலிங்!சிலிங்! என்ற சப்தத்துடன் வண்டி வந்த சப்தம் கேட்டவுடன் பிரியாவைக் கையைப் பிடித்து வண்டியின் உள்ளே உட்கார வைத்தாள்.

வந்து பேசிக்கலாம். சரியா! என்றாள் கையைச் செல்லமாகத் தட்டியபடி.

என்னவோ அவ மனசில இந்த ஊர் பிடிச்சுப் போச்சு ஏன் தெரியலை? என்றாள்வீணா.

இது உன் பழைய ஃபோட்டோ ஆல்பம். பார்க்கிறியாம்மா என்றாள் பாட்டி.

கொண்டாங்க! பார்ப்போம். 20 வருடங்களுக்கு முன்னாடி இந்த ஊரை விட்டுப் போய்ட்டேன். இப்ப எல்லாமே தலைகீழா மாறியிருக்கு..!

ஆமாம்மா! ஆனா இந்த ஜீன் மட்டும் மாறலை பார்த்தியா! அதே கண்மாய்ல உன் பொண்ணு உன்னைப் போலவே தண்ணீரைச் சிதறவிட்டு வாய்ல அள்ளிப்போட்டுக்கறா! ஒற்றைக்கால்லயே தைய்யா! தக்கான்னு குதிக்கிறது! எல்லாமே உன்னைப் போலவேதான் இருக்கு…

மஞ்சு பாட்டியின் பேச்சினை அவ்வளவாக இரசிக்காத வீணா ஃபோட்டோவின் முதல் படத்தில் மஞ்சள் கலர் ஃப்ராக்குடன் இருந்த தன்னையும், கூட இருந்த ஜூலிநாயையும் பார்த்தாள்.

பாட்டிம்மா! இந்த ஜூலியைப் புதைச்ச இடத்தை இப்ப நான் பார்க்கமுடியுமா! அன்னைக்கு அப்பா வாடகை வீட்ல இருந்து கஷ்டப்பட்டப்போ இது எங்கூட எவ்வளவு உதவி பண்ணியது தெரியுமா?

கடைசியா அப்பா டிரான்ஸ்ஃபர் ஆகிப் போறப்ப ரோட்ல விட்டுட்டுப்போய்ட்டோம். அந்த சோகத்துல பத்துநாள் படுத்த படுக்கையா இருந்திருக்கேன். அன்னைக்குக்கூட இதே மாட்டுப்பொங்கல்தான். அப்புறம் யாரோ அதைக் கார்ல போறவன் அடிச்சுப்போட்டுட்டு போய்ட்டாங்கன்னும் தோட்டத்துக்காரன் எங்கேயோ புதைச்சு வச்சிருக்கான்னும் அப்பா சொன்னார். அப்பாவும் இறந்துட்டார். அன்னைக்கு நாயை வச்சுக்க என்னால முடியலைன்னுதான் என் பொண்ணுக்குப் பெரிய வீடா வாங்கிக்கொடுத்திருக்கேன்.

பாங்க்ல வேணுங்கற அளவுக்கு நான் சம்பாதிச்சதே கிடக்கு…போதாததிற்கு என் கணவர் வீட்டுச் சொத்தே எக்கசக்கம். மாட்டுப்பொங்கல் வேணும்னா கால வித்யாசத்துனால தடம் மாறியிருக்கலாம். ஆனா என் மனம் அப்படியேதான் இருக்கு.

இந்த ஊரு குளத்துல பூத்துக் குலுங்கற வெள்ளைத் தாமரைப்பூப்போல!

நீ படித்த படிப்பு வேஸ்டாகி விடாதாம்மா………? கல்விங்கறது எல்லாத்துக்கும் சரஸ்வதி கொடுக்கறதில்லம்மா! என்று இழுத்தாள் மஞ்சுப்பாட்டி.

எல்லா வேலை பார்க்கிற இடத்துலேயும், கடைசி காலம் வரைக்கும் பொண்ணுக்கு அன்பா, அனுசரணையா ,இருக்க இடம் கிடைக்கிறதில்லை பாட்டி.

எல்லாத்தையும் யோசிச்சு ஒரு முடிவோடதான் இங்கே வந்திருக்கேன்.

ஊருக்கு வெளியே ஒரு பெரிய பில்டிங் அது யாருடையதுன்னு விசாரிச்சுட்டேன். நான் படிச்ச படிப்புக்கு ஏற்ற இடம் அது. அதில சின்னதா ஒரு தொழில் தொடங்கப்போறேன். அதில் என்னைமாதிரி இருக்கற பெண்களுக்கு உதவப்போறேன்.

உன்னைமாதிரின்னா…..புரியலையே!

புரியலையா! பாட்டியம்மா! தடம் மாறிய பண்டிகை இந்த பொங்கல் மட்டுமல்ல! எனது திருமண வாழ்க்கையும்தான். மிலிடரில என் கணவர் திடீர்னு ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டார். அவர் இவ்வளவுதூரம் கைகொடுத்ததுனாலதான் என்னால் இவ்வளவுதூரம் வேலை பார்க்க முடிந்தது. இப்ப என் பெண்ணிற்கும் இந்த ஊரு பிடிச்சுப்போச்சு.

தாயி…..சொல்றேன்னு கோபிச்சுக்காதே…! இந்த ஊரு இன்னமும் மாறலை….புருசன் செத்துட்டான்னு தெரிஞ்சாலே இந்த கிராமத்துல முன்னேற விடமாட்டாங்க….சாதிவேற பார்ப்பாங்க.. இதையெல்லாம் மீறி என்னம்மா செய்வே! கூட துணைக்கு என் பிள்ளையைக் கொண்டுவந்து வச்சுடுவேன். இந்த ஊரு அதுக்கும் சம்பந்தமில்லாம பேசும்.

ஊரு பேசுறதுக்கு என்னம்மா! சும்மா இரு கொஞ்சநேரம்………!

முதலாளியம்மா! நீங்க அந்த இடத்தை வாங்க ஏற்பாடு செய்ங்க…..என்னால வாழ்க்கையில எத்தனையோ பெண்களுக்கு வாழ்வு கிடைக்குதுன்னா அதைத் தெய்வ செயலா நினைக்கிறேன் எனச் சொல்லியபடி வந்த சரவணனைப் புன்சிரிப்புடன் வீணா பார்த்தாள்.

கொன்றைப்பூக்கள் வெளியே அடித்த காற்றில் பறந்து சன்னல் வழியே இரண்டொரு பூக்களை வீணா தலையில் உதிர்த்தன.

License

Share This Book