5
அன்று ஏனோ அவள் மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. காலையில் நடந்ததை நினைத்து அவள் ஒருகணம் நினைத்துப் பார்த்தாள். சூ! விட்டுத் தள்ளு! என உள்மனம் அவளுக்கு ஆணையிட்டாலும் அவள் படித்த படிப்பு அவளை நினைத்துப் பார்க்க வைத்தது. இதற்குத்தானா பிள்ளையைப் பெத்து வளர்க்கறது! என ஆழ்ந்து யோசித்தாள். டிரெயின் 8.45 மணிக்கு வந்து விடுமே! இன்று பள்ளியில் ஆண்டுவிழா வேறு! அலங்காரம் செய்ய பூக்கள் வேறு வாங்கவேண்டும்! வழக்கமா இருக்கற பூக்காரம்மாவை வேறு இன்று காணோம்! சே! ஊருக்குப் போனதே தவறு! அதனால் தான் இவ்வளவு லேட்! வந்துட்டு கோடம்பாக்கம் இறங்கி காலேஜூக்கு ஓடணும். ஆனாலும் ஆனந்திக்கு இவ்வளவு கொழுப்பு ஆகாதம்மா! நினைக்க நினைக்க தன் மகளை நினைத்து நெஞ்சம் அழுதது. ஊருக்கெல்லாம் பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் பெண்ணா இப்படி என ஊர் என்னைக் கேட்டு விட்டால்!
நெஞ்சம் படித்த படிப்பை எண்ணி அழுதது. சைதாப்பேட்டைக்கு டிக்கட் வாங்கிக் கொண்டு பத்திரிகைக் கடையில் என்ன இருக்கிறது எனப் பார்த்துக் கொண்டிருந்தாள். கையில் ஏதோ கசகசவெனத் தெரிவதைக் கண்டு வேகமாகக் கையைப் பிரித்தாள். நேற்றைய டிக்கட்டைக் கிழித்துப் போடாமல் உள்ளே பேகில் வைத்திருந்தது எப்போது தன் கைக்கு மாறியது என விழித்தாள். குப்பையைக் கீழே போடும் பழக்கம் நமக்கு இல்லை! குப்பைத் தொட்டியையும் காணோம்! என்னசெய்வது எனச் சுற்று முற்றும் பார்த்தாள். குப்பை கீழே நிறையக் கிடப்பதைப் பார்த்து வேதனை அடைந்தாள். என்று தான் இந்த சமூகம் மாறுமோ! என நினைத்துக் குப்பையைப் பைக்குள்ளேயா எடுத்துப் போடமுடியும்? எடுத்துக் குப்பைத்தொட்டியில் போடலாம் என நினைத்தால் நம்மைப் பைத்தியக்காரன் என நினைக்க மாட்டார்களா? என சுமாலினி மனதிற்குள் நினைத்தபடி வேகமாக நடந்தாள். அவள் நடையே அப்படித்தான்! பலரும் அவளிடம் இது குறித்துக் கேட்டதற்கு அவளிடமிருந்து புன்னகை மட்டுமே பதிலாகக் கிடைத்தது.
தன் கால்வலியை மறைக்கக் காலாட்டியபடி கால் மேல் காலைப் போட்டு அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்திருந்தாள். இலேசாகத் திரும்பியபோது சற்றே அதிர்ந்தாள். அங்கே நிசமாகவே ஒரு கால் மேலே ஏறியபடி சாக்ஸ், அங்கங்கு கடித்துக் குதறிய செருப்புடன் பரண்ட எண்ணெய் காணாத சிக்குப் பிடித்த சடைமுடியுடன் 35 வயது மதிக்கத்தக்க பெண் தனக்குத் தானே பேசியபடி குப்பையைப் பொறுக்கிப் பத்திரமாகக் குப்பைக் கூடையில் கொண்டுபோய்ப் போட்டதைப் பார்த்தாள். தனது சேலை முறுக்கிச் சாயம் போயிருப்பதும், சட்டை கிழிந்திருப்பது கூடத் தெரியாமல் உள்ளிருக்கும் பாவாடையெல்லாம் தெரிகிறது என்ற உணர்வில்லாமல் கீழே கிடக்கும் குப்பையைப் பொறுக்கித் தரையைச் சுத்தமாக்கும் வினோத பிறவியை அங்கிருந்த அனைவரும் வியப்புடன் பார்த்தனர். அங்கிருந்த டிடிஆர் இதைப் பார்த்தும் பார்க்காதவர் போல் சென்று கொண்டிருந்தார். ஹூம்! எனப் பெருமூச்சு விட்டபடி தூரத்தில் தெரிந்த மரத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். கூக்கூ வென எங்கோ ஒற்றைக் குயில் கூவுவதைக் கேட்டு முறுவலித்தாள். இந்தக் குயிலுக்கு மட்டும் இந்தக் குரலா! கடவுளிடம் ஒருநாள் கேட்க வேண்டும் என மனதிற்குள் குழந்தையைப் போல் இரகசியமாகத் தனக்குத்தானே கேட்டுக் கொண்டாள். சே! எத்தனை வயசானாலும் இந்தக் குழந்தை குணம் போக மாட்டேங்குதப்பா! என்றபடி அருகில் இருந்த கிட்ஸ் ஸ்கூல் விளம்பரப் பலகையைப் பார்த்தாள். அதில் ஊஞ்சல் படம் இருந்ததை உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தாள். அதில் ஆடும் சிறுமியாகத் தன்னை நினைத்துக் கொண்டாளோ! என்னவோ! தெரியவில்லை. தூரத்தில் டிரெயின் வரும் சப்தம் கேட்டவுடன் எழுந்து சென்றாள்.
அருகில் ஒரு குழந்தையுடன் நின்றிருந்த பெண் உட்கார இடம் கேட்க சரி! என எழுந்து இடம் கொடுத்து நின்று கொண்டே வந்தாள் சுமாலினி. அந்த பைத்தியத்தின் காலில் இருந்த செருப்பும், தனது மகளின் செருப்பும் ஒன்றாக இருக்கிறதே! ஆனால் இவள் காலில் போட்டிருக்கிறாளே!
நாய் கடித்த செருப்பாக இருந்தால் என்ன? அவசரத்துக்குக் காலில் செருப்பை மாற்றிப்போட்டு அதை வெளிப்படையாகப் பேசும் மனிதர்களும் இருக்கிறார்களே என்பது கூட ஆனந்திக்கு ஏன் தெரியவில்லை? அடுத்தவர் பொருளைக் கேட்கிறோம் என்ற கூச்சமில்லாமல் வளர்ந்திருக்கிறாளே!
நான் வளர்த்ததில் கோளாறா! என எண்ணியபடி இருந்தபோது அருகில் ”ஹலோ! என்ன இந்த உலகத்தில் இல்ல போலிருக்கு!” குரல் கேட்டு நிமிர்ந்தாள்.
ஆஷாவா! கவனிக்கவில்லையம்மா! சாரி! என்றாள் வேகமாக.
எனக்கெதுக்கு சாரி! எங்களுக்கு மேலே இருக்கற பாஸ் நீங்க!
அதெல்லாம் மனசளவில தான் தப்பு செஞ்சா யாராயிருந்தாலும் சாரி சொல்லணும்! உங்களக் கவனிக்கல! அதான் சாரி சொன்னேன்.
சொல்லியுமே சில பேருக்குத் தெரியமாட்டேங்குது! அது தான் வருத்தமா இருக்கு! அதெல்லாம் விடுங்க! என்னவோ பலத்த சிந்தனைல இருந்தீங்களே என்னாச்சு!
ஒண்ணுமில்ல! காலைல எங்க எல்லார் செருப்பையும் நாய் கடிச்சுடுச்சு! நான் இருக்கட்டும்னு உள்ள ஒண்ணு இருந்தது போட்டுட்டு வந்துட்டேன்! ஆனா எம்பொண்ணு வீட்டு வேலைக்கு எங்க வீட்டுல சின்னவயசுலருந்து வந்த பொண்ணு அவங்க! ரொம்ப வருஷமா இருக்காங்க அவங்ககிட்டபோய் அவங்க பொண்ணு ஃபாரின்லருந்து அவங்களுக்குன்னு ஆசையா வாங்கிட்டு வந்த செருப்பைக் கேட்டு வாங்கிப் போட்டுட்டு வர்றா! பின்னாடியே வந்தா! பிடிக்கல! அதான் விட்டுட்டு வந்துட்டேன்.
இதோ பார் மம்மி! நாய் கடிச்ச செருப்போடதான் வந்துருக்கேன்! ஆஷா ஆண்ட்டி…… அம்மா திட்டுவாங்கன்னு தெரியும்! அதான் செருப்பு புதுசு அப்பாவோட போய் வாங்கிட்டுப் பழையதையும் தூக்கிட்டு ஓடி வர்றேன். வியர்த்து வழிந்ததால் குழி விழுந்த கன்னத்தில் லேசாகக் காலையில் அப்பிய பவுடர் திட்டு திட்டாகத் துடைத்து விட்டபடி சின்ன உதடைச் சுழித்தபடி, நான் உன்னை மாதிரித் தான் மம்மி! யார் பொருளுக்கும் ஆசைப்படமாட்டேன் இனிமே! போதுமா! சாரி! சாரி! சாரி! எனச் சொல்லியவளை டிரெயின் என்பதையும் மறந்து மகளை முத்தமிட்டாள் சுமாலினி .
டேக் இட் ஈசி பாலிசி…………..என எங்கோ மொபைலில் பாடுதோ! என்றாள் ஆஷா. நடந்ததை மறந்த சுமாலினி சிரித்தாள்.