14
ஏம்மா! ஒருவேளை காப்பித்தண்ணி கூட கொடுக்கமாட்டேங்கறே!
நான் நாளைக்கு செத்தா என் சொத்தெல்லாம் உனக்குத்தானே ஆத்தா!
இருக்கும்போதே புடவை,நகைன்னு கேட்டே! சரி பொண்ணு ஆசைப்படுதுன்னு அத்தனையும் உனக்குக் கொடுத்து அழகு பாத்தேன்!
கல்லுடைச்சுதாம்மா இந்த வீடு கட்டினேன்! அத்தனையும் என் வியர்வைம்மா! என அழுதபடி படுக்கையில் படுத்தபடி இருந்த 80 வயது கோமளாவை உற்றுப் பார்த்தாள் மீரா.
சாப்பிட்டா உனக்கு இங்க அள்ளிப்போடவும், நனைச்ச துணியை மாத்தறதுக்கும் யார் இருக்கான்னு பார்த்தே!
நானே ஆஃபிசுக்கு போயிட்டு அப்பாடான்னு வரேன்! சோறு சமைச்சு வைன்னு சொன்னேன்.செய்யல…..இதுல வாய்வேறயா!………..
பத்து நாளா உடம்புக்கே முடியல! டாக்டர்கிட்ட கூட்டிட்டுபோன்னு சொன்னேனே!
உன்னைக் கூட்டிக்கிட்டு போறதுக்கு எனக்கு நேரமில்ல! வேணும்னா பக்கத்துவீட்டு அன்னம் கிட்ட சொல்லி போய்க்கோ!
காசு கொடம்மா! போறேன்………கவர்மெண்ட் ஆஸ்பத்திரின்னாலும் ஆட்டோல இங்கேயிருந்து போறதுக்கு 100 ரூபாயாவது வேணும்ல………..பழைய காலத்து காசெல்லாம் சேத்து வச்சிருந்தேன்.அதெல்லாம் வேணும்னு கேட்டே……நீ மாத்திரை செலவுக்கே பணம் இல்லன்னு சொன்னதாலே எல்லாத்தையும் செலவழிச்சுட்டேன். இப்ப புது ரூபாய்க்கட்டும் காலி……….வீடு ஒண்ணுதான் மீதி……நீ இருக்கறதுன்னா இரு…இல்லைன்னா காலி பண்ணிக்கோன்னு உன்னை என்னால சொல்ல முடியாது…ஒரு பாதியை ஒதுக்கிக்கொடு..வாடகைக்கு விட்டுக்கறேன். உன்கிட்டயும் காசு கேக்கவேண்டாம்பாரு! …….எனக்கும் தன்மானம் இருக்குல்ல………..
புருசனுக்கேத்த இடி கொழுக்கட்டை……எங்க அப்பா…அதான் உம் புருசன் இருக்கறவரைக்கும் இருக்கற வீட்டுக்கு காசு கேட்டான். இப்ப நீ வந்துட்டியா! எதுக்கு நீங்கள்லாம் புள்ள பெத்தீங்க! உங்க வசதிக்கு பெத்துக்கவேண்டியது! அப்புறம் ரோடெல்லாம் பசங்க கஞ்சித்தண்ணி ஊத்தறதில்லன்னு புலம்ப வேண்டியது! கோடிக்கடை குப்புசாமி வேலைக்குப் போய்க்கிட்டிருக்கேன்….நிக்கவைச்சு கேக்கறான்….அசிங்கப்படுத்தறியா!
டொக்!டொக்! என கதவு தட்டிய சத்தம் கேட்ட மீரா, டீவியின் வால்யூமைக் குறைத்தாள்.
‘லொடக்‘ என எண்ணெயிடாத தாழ்ப்பாள் துருவுடன் கோமளாவின் தலையில் ஈறும்,பேனும் இருப்பதைப்போல, கோமளாவைப் பார்க்கமுடியாமல் தரையில் உடைந்து விழுந்தது.
இது புண்ணியமூர்த்தி-கோமளா வீடுதானே!
டாக்டர் கோட்டுடன் 22 வயதுக்குரிய அழகுடன் ஸ்டெதஸ்கோப்புடன் நின்ற பெண்ணை வெறித்தாள் மீரா.
ஆமா! எங்கிட்ட சொல்லாம டாக்டரை வரச் சொன்னியாம்மா! எனத் திரும்பி கோமளாவைப் பார்த்தாள் மீரா.
நெஞ்சுக்கூடு ஏறி ஏறி இறங்குவதைப் பார்த்தும்,பேச்சில்லாமல் இருக்கும் கோமளாவைப் பெற்ற தாய் என்ற உணர்வின்றி கெழவி இன்னைக்கோ நாளைக்கோ போய்டும்! இருந்து யாருக்கு என்ன பிரயோசனம்! அதான் நாலு நாளா கஞ்சித்தண்ணிகூட கண்ணுல காட்டல…இருந்தா யாருக்காகவாவது யூஸ்ஃபுல்லா இருக்கணும்…பழுத்த இலை, மட்டை உதிரத்தானே செய்யும்………. அவுங்கதான் சொன்னாங்களா!
வந்து பாத்துட்டு போங்க! வெறுப்புடன் சொன்னாள் மீரா. ஃபீஸ் எவ்ளோன்னு சொல்லுங்க.?..எம் புருசன் வர்ற நேரம்தான்…தர்றேன்…..
எனக்கு யாரும் சொல்லி வரலைம்மா!…………………………பழுத்த மட்டையா நம்ம நிக்கறப்பதாம்மா நாம என்ன செஞ்சோம்னு தெரியும். புள்ளைய பெத்துக்கறது அவுங்க சுகத்துக்காகவும், ஊருக்காகவும் இல்லம்மா! நம்ம வாழ்ந்துட்டு இந்த பூமில போனதுக்கப்புறம் நம்ம செஞ்ச நல்ல செயல்களை புள்ளைங்க செய்யணும்னுதாம்மா புள்ளைகளைப் பெத்து வளக்கறது…அசிங்கமா பேசிட்டிங்களேம்மா…………….. வாழை மரம், ஆலமரம் பாத்ததில்லையாம்மா நீங்க!
அவங்க என்னைப் படிக்க வைக்க உதவி பண்ணாங்கம்மா……இன்னைக்கு ஒரு நல்ல வேலைல இருக்கேன். அவங்கபேர்ல ஒரு ஆஸ்பத்திரி திறக்கிறேன். டிரஸ்ட்ல அவங்களுக்கு மாதாமாதம் பணம் போடுறதுக்கு ஏற்பாடு செஞ்சுருக்கேன். நான் நடத்துற முதியோர் ஆஸ்ரமத்துல அவங்கள வேணும்னா கூட்டிட்டு போய்டுறேன். அட்ரஸ் இப்பதான் எனக்கு கிடைச்சுது……கடவுள்தான் இங்க என்னை அனுப்பினார்னு நினைக்கிறேன்………..
கொஞ்சம் தள்ளுங்க….முதுமைங்கறது எல்லாருக்கும் வரும்…நமக்கு எப்படி இருக்கும்னு யாராலேயும் சொல்ல முடியாதும்மா…
எனக்கு நீங்க ஃபீஸ் ஒண்ணும் தர வேண்டாம்.
முடிஞ்சா அவங்களுக்கு வெந்நீர் வச்சுட்டு வாங்க! தினமும் அவங்களை குளிக்க வைக்கிறீங்களா வெந்நீர்ல?
வேகமாக கோமளாவைத் தொட்ட டாக்டர் நிலா கையை சட்டென மூக்கிற்கருகில் கொண்டு சென்றாள். ஸ்டெத்தை வேகமாக வைத்துப் பார்த்தாள். படுத்திருந்த பாயைச் சுற்றி ஓடிக்கொண்டிருந்த கட்டெறும்புகளை வெறித்தாள். தலையணையில் ஏதோ பூச்சி நெளிவதைக் கண்டு வேகமாகத் துக்கி எறிந்தாள்.
அம்மா நீங்க வெந்நீர் வைக்க வேண்டிய அவசியம் இல்ல……நானும் அவங்கள கூட்டிட்டு போகவும் வேணாம்………………
உங்கம்மாவுக்கு சில்லுன்னு பச்சைத்தண்ணியே போதும்…சொல்றவங்களுக்கு சொல்லியனுப்புங்க……அவங்க ஆசைப்படியே செத்தப்பவாவது வந்தேன்னு நினைச்சுக்கறேன்.
மீராவின் பையன் பாலு ‘பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்‘ என உரக்கப் படித்துக்கொண்டிருந்ததை அவள் பெருமூச்சுடன் பார்த்தபடி வீட்டை விட்டு வெளியேறினாள்.