"

1

தவறான எண்ணங்கள் (myths)

யுரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் சமீபத்தில் உருவான அமைப்பு.

LHC பற்றிய செய்திகள் சமீபத்தில் அதிகம் வெளிவருவதால் ஏற்பட்ட தவறான கருத்து இது. 1954 –இல் உருவான அமைப்பு CERN. உதாரணத்திற்கு, 1965 –இல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க விஞ்ஞானி ஃபைன்மேன், (Richard Feynman) உடனே ஜெனீவா சென்று, CERN –ல் விஞ்ஞான உரையாற்றிவிட்டுத் தான் அமெரிக்கா திரும்பினார். CERN பற்றிய சரித்திர விடியோ இங்கே…

http://www.youtube.com/watch?v=Wk5mdMSvjvY

ஜெனீவாவில் உள்ள LHC ஒரு புத்தம் புதிய கண்டுபிடிப்பு.

மார்க்கெடிங் உலகில் ‘புத்தம் புதிது’ எல்லாம், எதுக்கெடுத்தாலும் சகஜம். விஞ்ஞான உலகில் எப்பொழுதும் படிப்படியான முன்னேற்றம்தான். LHC எந்திரத்தில் பல உத்திகள் புதியவை. இந்த அமைப்பின் அளவும் முன்னைவிட மிகப் பெரியது. ஆனால், புத்தம் புதிய கண்டுபிடிப்பு எல்லாம் கொஞ்சம் ஓவர்.

CERN இதுவரை என்ன சாதித்துள்ளது என்று சரியாக யாருக்கும் தெரியவில்லை

அணு ஆராய்ச்சியின் மிக முக்கிய அமைப்புகளில் CERN –ம் ஒன்று. இது ஒரு பன்னாட்டு அமைப்பாக இருப்பதால், உலக அணு விஞ்ஞானிகளை ஈர்க்கும் ஒரு காந்தமாய் திகழ்கிறது. பல நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் வேலை செய்த/செய்யும் அமைப்பு இது. அணு ஆராய்ச்சியின் சரித்திரத்தில், 1950 –க்கு பிறகு CERN –னின் பங்கைக் குறிப்பிடாமல் யாராலும் பதிவு செய்ய முடியாது. இன்றைய அணு அமைப்பைப் பற்றிய அறிவில் CERN –க்கு பெரும் பங்கு உண்டு.

இந்த ஆராய்ச்சியிலிருந்து சமுதாயத்திற்கு உருப்படியாக எதுவும் கிடைத்த்தாகத் தெரியவில்லை.

பொதுவாக, அடிப்படை விஞ்ஞானம் (fundamental science) சாதாரண மனிதர்களின் பார்வையில், தொலை தூரத்தில் இருக்கும் விஷயம். இதனால் பலர் விஞ்ஞான ஆராய்ச்சியின் செலவைக் கண்டு அலுப்பாகச் சொல்லும் கமெண்ட் இது. எல்லா அடிப்படை விஞ்ஞான ஆராய்ச்சிகளும் சமுதாயத்திற்கு உடனே பயன் தருவதில்லைதான். இக்கட்டுரையை நீங்கள் படிப்பதற்குக் காரணமே CERN –ன் 1990 முயற்சி தான். விஞ்ஞானிகள் இடையே கருத்துப் பரிமாற்றத்தை எளிதாக்க உருவாக்கப்பட்ட உத்திதான் இணைய அமைப்பு. இன்று இதுவே உலகெங்கும் ராட்சச உருவெடுத்து, அடுத்த ரஜினி படத்தைப் பற்றிய நிமிடத்திற்கு நிமிட கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்கிறோம். ஃபேஸ்புக்கில் மொட்டையடித்துக் கொண்டது போன்ற உப்பு சப்பில்லாத சமாச்சாரத்தை உலகிற்குப் பறை சாற்றுகிறோம். சொல்வனத்தில் ‘விஞ்ஞான கணினி’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில், எப்படி CERN ஏராளமான டேடாவை கையாளுகிறது என்று எழுதியிருந்தேன். இது போன்ற உத்திகளை, ஒளிவு மறைவின்றி உலகில் யார் வேண்டுமானாலும் தெரிந்து கொள்ள வழி செய்கிறார்கள்.

சரி, இப்படி ஒன்றிரண்டு கண்டுபிடிப்புக்காக இப்படி ஏராளமாக செலவழிக்க என்ன தேவை?

நியாயமான கேள்விதான். ஆனால், சில பெரிய கண்டுபிடிப்புகள், சின்ன முதலீட்டினால் உருவாக்க முடிந்தவை அல்ல. உதாரணத்திற்கு, தொலைப்பேசி ஆராய்ச்சியில் எத்தனை முதலீடு செய்திருந்தாலும் இணையத்தைக் கண்டுபிடித்திருக்க முடியாது. CERN –இல் உள்ள ஒரு விஞ்ஞானப் பிரச்சனையின் தீர்வு, இணையமானது. அதே போல, மிக அதிக தகவல் கையாளுதல் (big data handling) என்பதும் ஒரு CERN பிரச்சனைதான். இதன் தீர்வு உலகின் பல்வேறு வியாபார அமைப்புகளுக்கு இன்று உதவியாக உள்ளது. சிறு கணினி நிறுவனங்கள் எவ்வளவு முதலீடு செய்திருந்தாலும் இவ்வகைத் தீர்வுகளை உருவாக்கியிருக்க முடியாது. பெரிய தீர்வுகளுக்குப் பெரிய முதலீடுகள் தேவை. இன்று, நாம் மடிக்கணினி, செல்பேசி போன்ற கருவிகளை உபயோகப் படுத்த முக்கிய காரணம் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சியில் முதலீடு என்றால் மிகையாகாது. உயரே செல்லும் ராக்கெட்டில் உள்ள ஒவ்வொரு விஷயமும் எடை குறைவானதாக இருக்க வேண்டும் என்ற உந்துதலில் உருவானதுதான் இன்றைய மின்னணுவியல்.

சரி, குவாண்டம் பெளதிகத்தினால் இன்னும் சமுதாயம் முழுவதும் பயன் பெற்றதாகத் தெரியவில்லை. அதற்குள், ஏன் இது போன்ற வீண் ஆராய்ச்சிகள்?

குவாண்டம் பெளதிகம் என்பது ஒரு நூறாண்டுக்கு மேல் விஞ்ஞானிகளின் உழைப்பினால் உருவாக்கப்பட்டத் துறை. இதனால், நம் நுண் அளவு புரிதல் (understanding of the small) வளர்ந்துள்ளது. மின்னணுவியல் துறையின் வளர்ச்சியால் இன்று கணினி, செல்பேசி, தட்டை திரை டிவி, டிஜிட்டல் காமிரா, தொலைத்தொடர்பியல் யாவும் வளர்ந்து சமுதாயத்திற்கு உதவியுள்ளன. 20 –ஆம் நூற்றாண்டின் பெரும் மனித வளர்ச்சிக்கு உதவியது குவாண்டம் பெளதிக துறையை அடிப்படையாய் கொண்ட பல துறைகள் என்றால் மிகையாகாது. இந்த ஆய்வுகள், கண்டுபிடிப்புகளிலிருந்து நமக்குக் கிட்டக் கூடிய பயன்கள் ஏதோ தீர்ந்து போய்விடவில்லை. அதே நேரம் இத்தகைய ஆய்வுத் துறைகளில் செலவழிக்கப்படும் அனைத்தும் நமக்குப் பலன்களை அளிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் எதார்த்தமாகாது, நியாயமும் இல்லை. மனித முயற்சியில் எதிர்காலத்துக்கான முன்னெடுப்புகள் அனைத்தும் பூரண நல்விளைவுகளையே தர வேண்டும் என்பது ஒரு முன் நிபந்தனையாக இருந்தால் மனித குலம் இத்தனை தூரம் முன்னேறிய வாழ்வைப் பெற்றிருக்குமா என்பது ஐயம்தான். மேலும், முழுவதும் நாம் பயனுற்றதாக நாம் சொல்ல முடியாது. கணினிகளுக்கு இன்னும் அதிக சக்தியும், புதிய செயல்முறைகளும் இன்றும் தேவை. இதற்கென்று உலகில் பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளன. உதாரணத்திற்கு, கனடாவில் உள்ள குவாண்டம் கணினியியல் கழகம் (http://iqc.uwaterloo.ca/) அடுத்த கட்ட கணினி தேவைகளை குவாண்டம் முறைகளை கொண்டு எப்படி உபயோகிப்பது என்று ஆராய்ச்சி செய்து வருகிறது. இதனால், இன்றைய கணினிகளைவிட மிக சக்தி வாய்ந்த, பாதுகாப்பான, மற்றும் சிறிய கருவிகளை எதிர்காலத்தில் சமூகம் உபயோகிக்க உதவும் என்பதில் சந்தேகமில்லை. பொதுவாக, பயன்பாட்டு அறிவியல் (applied science) வளர, அடிப்படை அறிவியல் வளர்ச்சி (fundamental science) அவசியம். ஓரளவிற்கு மேல், அடிப்படை அறிவியல் வளரவில்லையெனில். பயன் எதுவும் யாருக்கும் இருக்காது.

CERNல் நடக்கும் ஆய்வுகள் நம் பூமியை அழித்துவிடும். இவர்களை உடனே தடுக்க வேண்டும்.

1932-ல் ஜான் காக்கிராஃப்ட் (John Cockcroft) மற்றும் எர்னஸ்ட் வால்டன் (Ernest Walton) முதன் முறையாக அணுவை பிளந்து காட்டிய பொழுது, இங்கிலாந்து செய்திதாள்கள், இதே பல்லவியைத்தான் பாடின. ”உலகையே அழித்துவிடும் சக்தி, இதோ லண்டனில்” என்று சர்ச்சையைக் கிளப்பினார்கள். அதன் பின், பல மடங்கு சக்தி வாய்ந்த அணுதுகள் பிளவு சாதனங்கள் (atomic particle accelerators) உருவாக்கப்பட்டுள்ளன. இடைப்பட்ட காலத்தில் குவாண்டம் பெளதிகத்துறை பெரிதும் முன்னேறி சமுதாயத்திற்கு நல்ல முன்னேற்றத்தைத் தந்துள்ளதே தவிர உலகை அழித்துவிடவில்லை. மேலும், CERN அமைப்பு, அருமையான பாதுகாப்பு முறைகளை கட்டுமான முறைகள் மற்றும் இயக்க முறைகளில் (structural and operational measures) பின்பற்றி வருகிறது. பல அரசாங்கங்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளதால், இந்த கேள்விகள் முதலீடு செய்யும் அரசாங்கங்கள் கேட்டு சரியான பதில் கிடைத்ததாலேயே தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றன.

CERNல் விஞ்ஞானிகள், கருந்துளைகளை (black holes) உருவாக்க முடியுமாம். வானியல் ஆராய்ச்சியில் கருந்துளைகள் எல்லாவற்றையும் (அதாவது எல்லா பொருட்களையும்)விழுங்கிவிடும் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்களே. ஏன், இந்த விஷப்பரிட்ச்சை?

கருந்துளைகளை LHC –ல் உருவாக்க முடியும் என்பது உண்மைதான். ஆனால், இவை மிகச் சிறிய அணு அளவு சமாச்சாரம். விண்வெளியில் உருவாகும் ராட்சச கருந்துளையுடன் இவற்றைக் குழப்பிக் கொள்ளக் கூடாது. அத்துடன், அணு அளவு கருந்துளைகள் தாற்காலிகமானவை.

இவ்வகை ஆராய்ச்சியில் மிக அதிக அளவு சக்தியுடன் அணுத் துகள்கள் மோதுவதால், கதிரியக்க அபாயம் உள்ளது. கதிரியக்க அபாயத்தால், மனிதர்களுக்கு புற்றுநோய் போன்ற சமாச்சாரங்கள் வர பெரும் வாய்ப்பு உள்ளது.

முதலில், இவ்வகை மோதல்கள் பூமிக்கு அடியில் 100 மீட்டர் ஆழத்தில் நடக்கின்றன. மேலும் ஏராளமான கான்கிரீட் இதன் கட்டுமானத்தில் உள்ளது. மேலும் முழு அமைப்பிலும் பல வகை பாதுகாப்புகள் உள்ளன. கடைசியாக, அணுத்துகள் மோதல் நடக்கும் சமயத்தில் யாரும் சுரங்கத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை. எல்லா சோதனை அளவுகளையும் கணினிகள் பார்த்துக் கொள்கின்றன.

இந்த வித அணுப் பரிசோதனைகள் மிகப் பெரிய அழிவு ஆராய்ச்சியின் ஒரு அழகான வெளிப்பூச்சு. ஏதாவது புதிய அணு ஆயுதத்தை மேற்குலகம் தயாரிப்பதற்கான ஏற்பாடு இது.

அணு ஆராய்ச்சி என்றவுடன் வழக்கமாக ஏற்படும் சந்தேகம்தான் இது. CERN ஒன்றும் ஈரான்/வட கொரியா போன்ற மூடுமந்திர அணு ஆராய்ச்சியல்ல. 1954 முதல் அணு ஆராய்ச்சியில் வெற்றிகள் பல கண்டுள்ள அமைப்பு இது. அத்துடன், மிக முக்கியமாக எந்த ஒரு நாட்டிற்கும் சொந்தமான அமைப்பில்லை இது. UNESCO -வினால் 2-ஆம் உலகப் போருக்குப் பிறகு ஏற்படுத்தப்பட்ட அமைப்பு, CERN. 20 ஐரோப்பிய நாடுகள் CERN –ன் வருடாந்திர ஆராய்ச்சி செலவை ஏற்கின்றன (http://dg-rpc.web.cern.ch/dg-rpc/Scale/Scale11.pdf). இவை முதல் தட்டு நாடுகள். அடுத்தபடியாக, பார்வையாளர் தகுதி பெற்ற நாடுகளில், அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ரஷ்யா மற்றும் டுருக்கி அடங்கும். உறுப்பினர் அல்லாத பல நாடுகள் அடுத்தபடியாக உள்ளன. ஒரு CERN வெளியீடுபடி உலகின் அணுத்துகள் ஆராய்ச்சியாளர்களில் பாதி விஞ்ஞானிகள் (ஒரு 10,000 விஞ்ஞானிகள்) ஆராய்ச்சி சம்பந்தமாக வருகை தருகிறார்கள் (visiting scientists) . இவர்கள் 608 பல்கலைக்கழகங்களிலிருந்து, வருகிறார்கள். – ஏறக்குறைய 113 நாட்டவர்கள். இதைப்போன்ற ஒரு பன்னாட்டுக் கூட்டு முயற்சி இன்றைய விஞ்ஞான உலகில் இருப்பதாகத் தெரியவில்லை. இத்தனை அமைப்புகளையும் மீறி, ரகசிய அணு ஆயுதம் என்பது மிகவும் தொலைவான விஷயம்.

ஏதோ “கடவுள் அணுத்துகளாமே எதற்காக இதை விஞ்ஞானிகள் விடாப்பிடியாக தேடுகிறார்கள்?

1962 –ல் பீட்டர் ஹிக்ஸ் என்ற விஞ்ஞானி, ஹிக்ஸ் மண்டலம் (Higgs field) என்ற ஒன்றை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். இந்த மண்டலம் பிரபஞ்சம் முழுவதும் உள்ளதாம். இந்த மண்டலத்தின் அடிப்படை பண்பு என்னவென்றால், பொருட்களுக்கு திணிவைக் (Mass) கொடுக்கினறது. அதாவது, ஹிக்ஸ் போஸான் என்ற அணுத்துகள் மிக முக்கியமான மனித கேள்விக்கு பதிலளிக்கும் என்று நம்பப்படுகிறது – அதாவது, பொருட்களுக்கு எப்படி திணிவு உண்டாகிறது? லியான் லெடர்மேன் (Leon Lederman) என்ற நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி, தன்னுடைய உரையில், ”விஞ்ஞான உலகின் மிகப் பெரிய சவால் இந்த ஹிக்ஸ் போஸானைக் கண்டுபிடிப்பது. பிரபஞ்சத்தின் அடிப்படை வடிவமைப்பு பற்றிய நம்முடைய அறிவு இந்த கடவுள் அணுத்துகளை கண்டு பிடிப்பதில் அடங்கியுள்ளது. கடவுளைப் போல விஞ்ஞானிகளும் இதை பல வருடங்களாக தேடித்தேடி பிரமித்து போயுள்ளார்கள். உண்மையில் இதை சாத்தான் அணுத்துகள் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால், விடாமல் விஞ்ஞானிகளுக்கு கையில் கிட்டாமல் நழுவிவிடும் வில்லன் இது” என்றார். இவர் சொன்ன மற்ற விஷயங்கள் எல்லாம் மறக்கப்பட்டு, ஊடகங்களில் ’கடவுள் அணுத்துகள்’ பெயர் மட்டும் நிலைத்து விட்டது. விஞ்ஞானிகளைப் பொறுத்த வரையில் அது, இன்னொரு அணுத்துகள் – அவ்வளவுதான்! ஜூலை 2012 –ல் விஞ்ஞானிகள் LHC – யில் இதை முதன் முதலாக உணர்விகளில் (particle detectors) கண்டுபிடித்துள்ளதாக CERN அறிவித்துள்ளது. இன்னும் இதன் முழு இயல்புகளும் கண்டறியப்பட வேண்டும்.

http://www.youtube.com/watch?v=649iUqrOKuE

 

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

விஞ்ஞான முட்டி மோதல் Copyright © 2015 by ரவி நடராஜன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.