"

அறை 1

கடந்த ஒரு வாரமாகவே மகள் பூரணியின் அழுகையும் தொந்தரவும் தாங்காமல் தான் முத்துராசு வேறு வழியில்லாமல் அவளை சென்னிமலை கூட்டி வந்திருந்தான்.

பூரணி பனியம்பள்ளி நடுநிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கிறாள். முத்துராசுவின் ஒரே செல்லக்குட்டி வேறு. தினமும் முத்துராசு கட்டிட வேலைக்குத்தான் சென்றுவந்து கொண்டிருந்தான். உடல் அசதிக்காக டாஸ்மார்க் சென்றுவருவது அவனது அன்றாட கடமைகளில் ஒன்றாகவும் ஆகிப்போய் நான்கைந்து வருடங்களுமாகி விட்டது.

மனைவி ரம்யா உள்ளூர்ப் பெண்தான். அதும் சொந்த மாமன் மகள். அவள் தான் ஒருவாரமாக வீட்டில் இல்லை. அம்மா எங்கே? என்று கேட்ட்கும் பூரணியிடம், அம்மா ஊருக்கு போய்விட்டதாய் சொல்லி சமாளித்தான் முத்துராசு.

ஆனால் பூரணிக்கு அம்மாவை பார்க்காமல் காய்ச்சலே வந்து விட்டது. விசாரித்த போது சென்னிமலையில் அவளும், அவன் என்கிற முத்துவும் காமராஜ் நகரில் அறை எடுத்து தங்கியிருப்பதாக தகவல் தெரிந்து பூரணியை கூட்டி வந்திருந்தான் முத்துராசு.

அந்த 27ம் நம்பர் அறையில உங்கம்மா இருப்பா போயி பாருஎன்று சொல்லிவிட்டு முத்துராசு சாலையோரத்தில் நின்றிருந்த தந்திக்கம்பத்தினடியில் சாய்ந்து அமர்ந்தான். காலை ஒன்பது மணிக்கே வெய்யில் சுள்ளென அடித்தது.

27ம் எண் அறைக்குள் நுழைந்த பூரணி மெத்தை மீது திடகாத்திரமாய் ஒருவன் பாட்டிலும் கையுமாய் சிவந்த விழிகளோடு அமர்ந்திருப்பதை பார்த்து மிரண்டாள். “உன் புள்ள தேடி வந்துட்டாடி! பாக்காம சங்கடமா இருக்குன்னியே, இதா பாரு. ஏய் பிள்ள, உங்கொப்பன்கிட்ட இனி போவாதடி! அவன் முட்டாப்பயல். இங்கயே இருந்துக்க, உன்னை கான்வெண்ட்டுல சேர்த்தி படிக்க வைக்கிறேன்என்றான் முத்து.

வாடி செல்லம், உங்கொப்பனும் வந்திருக்கானா? அவனை போகச் சொல்லிடு. இனிமேல் இதா இவருதான் உன் அப்பா. சரியா செல்லம்?” என்று சமையல்கட்டிலிருந்து ரம்யா வந்தாள்.

சரிம்மா, நான் போயி பழைய அப்பாவை போவச் சொல்லிட்டு வந்துடறேன்என்று அறையை விட்டு வெளிவந்த பூரணி தந்திகம்பத்தினருகில் வந்து, “போலாம்ப்பாஎன்று முத்துராசுவை கூட்டிக் கொண்டு பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்தாள்.

()()()()

அறை -2

ஒரு மணி நேரம் முன்பாக செல்வதற்கு அனுமதி கேட்பதற்காக ரம்யா மேனேஜர் அறைக்குள் நுழைந்தாள். செல்போனில் பார்ட்டியுடன் பேசிக்கொண்டிருந்த மேனேஜர் முத்து அதை கட் செய்து விட்டு, வா செல்லம்! என்றார்.

வீட்டில் என் மாமியாருக்கு உடம்புக்கு சுகமில்லையாம் சார், என் வீட்டுக்காரர் என்னை கூட்டிப்போக வந்திருக்கார் சார். அதனால பர்மிசன்..” என்று இழுத்தாள்.

நீ கிளம்பு செல்லம். எவ்ளோ நாளா நான் கேட்டுட்டு இருக்கேன் ஆனா நீ கண்டுக்கவே மாட்டிங்கறே! இந்த ஞாயிறு நாம ஊட்டி போய் பூகண்காட்சி பார்த்துட்டு ரூம் போட்டு தங்கி கொண்டாடிட்டு வர்றோம்..என்ன?” என்று கேட்ட முத்துவுக்கு புன்னகையை பரிசளித்துவிட்டு கிளம்பினாள்.

வேலை முடித்து காரில் வீடு வந்த முத்து தன் வீட்டின் முகப்பில் ஒரு தாயும் குழந்தையும் நிற்பதை பார்த்தபடி உள்ளே வரும்படி கூறிவிட்டு சென்று காரை செட்டில் போட்டுவிட்டு கையில் சூட்கேசோடு வந்தான். அந்த அம்மாள் இவனுக்கு வணக்கம் வைத்துவிட்டு பேச ஆரம்பித்தது.

ஐயா, உங்க பொண்ணு பூரணி என் மகளோட ஜாமிண்டரி பாக்ஸை தூக்கிடுச்சுங்களாம். உங்க பொண்ணு இல்லைன்னே சொல்லுதுங்க. நீங்க கேளுங்க ஐயா

வீட்டில் சற்று முன்பு முடிந்து போன பஞ்சாயத்தை இவன் மீண்டும் துவங்கி, பூரணியின் புத்தக பேக்கை கொட்டிப் பார்க்கையில் அந்த ஜாமிண்டரி பாக்ஸ் கீழே விழுந்தது. கோபத்தில் குழந்தை என்றும் பாராமல் பூரணியின் கன்னத்திலும், முதுகிலும் அறைந்து தள்ளி விட்டான் முத்து.

அழுதபடி பூரணி சொன்னாள். ‘ நீங்கதானப்பா சொல்வீங்க, எதிலும் ஒரு த்ரில்லிங் வேணுமுன்னு.. இப்ப என்னடான்னா அடுத்தவங்க பொருளுக்கு ஆசைப்பட கூடாதுன்னு சொல்றீங்க?”.

இவன் கன்னத்தில் பூரணி அறைந்து விட்டது போலிருந்தது. ஊட்டி புரோகிராமை மனதில் அப்போதே கேன்சல் செய்தான் முத்து.

()()()()()

 

அறை -3

முத்துராசு இப்போதெல்லாம் என்னவோ போலாகி விட்டான். எல்லாம் இந்த ஒருமாத காலமாகத்தான். அவன் மனைவியிடமோ, குழந்தை பூரணியிடமோ அப்படி கல கலவென்று பேசினவனுக்கு என்னவாயிற்று?

இதைத்தான் அவன் மனைவி ரம்யா தன் சித்தி, சித்தப்பாவிடம் இப்போது புலம்பித் தள்ளிக் கொண்டிருந்தாள்.

ஆமாம் சித்தி, எல்.. சி ஏஜண்ட் வேலையை இவர் இனி விட்டுடப் போறாராம். எதுவுமே நிரந்தரமில்லைடி, இன்னிக்கி செத்தா நாளைக்கி பாலுன்னு தத்துவமா பேசுறார். மாமியார் செத்து ஒரு மாசம் ஆச்சு சித்தப்பா. அம்மா ரூம்ல, அம்மா கட்டல்ல, நான் தான் இருப்பேன்னு எப்பவும் அங்கயே வெறிச்சு பார்த்துட்டு உட்கார்ந்துக்குறார்என்று வந்தவர்களிடம் புலம்பிணாள்.

அந்த அறையில என்ன என்னம்மா இருக்கு?” என்றார் சித்தப்பா.

அங்க ஒன்னும் இல்ல சித்தப்பா. ஒரு குண்டு பல்பு. ஒரு சின்ன ஜன்னலு, கட்டிலு ஒன்னு, அவ்ளோதான்

மாத்திடும்மா எல்லாத்தையும், டியூப்லைட் போடு, டிவியை கொண்டு போயி அந்த ரூம்ல வச்சிடு ஷோபா, ரெண்டு சேர்னு கொண்டு போயி போடு. எந்த அறை துக்கமா வீட்டுல தெரியுதோ அதை வெளிச்சமாக்கிடும்மாசித்தப்பா இவ்வளவு தான் சொன்னார்.

ஒருவாரம் ஓடிவிட்டது. ஊட்டியில் மலர் கண்காட்சியில் இருந்தார்கள் இவர்கள். முத்துராசு பூரணியை தலைமீது தூக்கி வைத்து பூக்களைப்பற்றி அவளுக்கு போதித்துக் கொண்டிருந்தான். ரம்யாவின் அலைபேசி சிணுங்கியது. சித்தப்பாதான்.

என்னம்மா, எப்பிடி இருக்கான் உன் புருசன்?”

ரொம்ப தேங்க்ஸ் சித்தப்பா, அடுத்த நாளே அந்த அறைக்கு வெள்ளையடிச்சு டிவியை கொண்டு போயி வச்சுட்டேன்.. இப்ப நாங்க ஊட்டில இருக்கோம் சித்தப்பா. நாளைக்கு தான் வர்றோம்என்றாள் ரம்யா.

()()()()()()

 

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

வா.மு.கோமுவின் பத்துக் கதைகள் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book